Skip to content
Post Views: 1,944
விஷ்ணு வீட்டில் இருந்தவேளை தான் வசந்த் பற்றிய தகவல் கைக்கு வந்தது. சினத்தோடு பதட்டமாய் இருந்தது, நண்பன் நம்புவானா என்கிற அச்சம் சிறிதாய் இருந்தாலும் ஒரு பக்கம் தைரியமும் வர வீட்டில் உணவை கூட உண்ணாமல் அவசரமாக கிளம்பியிருந்தான் விஷ்ணு.
“இவன் ஒருத்தன் ஏதாவது பேசணும்னு நாம நினைக்கிறப்போ தான் எங்கையாவது ஓடுவான்” விஷ்ணுவின் அன்னை சலிப்பாக கூறி எடுத்து வந்த உணவினை உள்ளே அடுக்கி வைத்துவிட்டார்.
வந்தான் விஷ்ணு பத்து மணிக்கு சோர்ந்த முகமாய். இவனுக்காக பெற்றோர் இருவருமே காத்திருந்தனர்.
“என்ன விஷ்ணு முகமே சரியில்லை” தந்தை கேட்க பார்த்திபன் வீட்டில் நடந்தவற்றை கூறினான்.
Advertisement
“நம்பவே முடியலடா” மகன் அருகே வந்து அமர்ந்துக்கொண்டார் அன்னை.
“நானும் அவனா இருக்க கூடாதுனு பயந்துட்டே தான்ம்மா போனேன். அவனை நீங்க பாக்கணும், அவ்ளோ தைரியமா ‘ஆமா இப்ப அதுக்கு என்ன’னு கேக்குற மாதிரி நிக்கிறான். பார்த்திய நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு”
“ஆமாடா அனாதைனு சொல்றதை யாரால தான் தாங்கிக்க முடியும். எவ்ளோ பெரிய வார்த்தை அது” – விஷ்ணு அன்னை.
Advertisement
“எதுக்கு அவனுக்கு இவன் மேல இவ்ளோ வஞ்சகம்?” – விஷ்ணு தந்தை.
Advertisement
“தனக்கு உரிமைப்பட்டதை எல்லாம் பார்த்திபன்எடுத்துட்ட மாதிரி நினைக்கிறான். ஆனா பார்த்தி அவனுக்கு செஞ்சதை கிரி அண்ணா கூட செஞ்சிருக்க மாட்டார்”
“உண்மைகள் சில நேரம் முகத்துல அடிச்ச மாதிரி தான்டா நிதர்சனத்தை நமக்கு புரிய வைக்கும். இதுவும் ஒரு முன்னேற்றத்துக்கு ஆரம்பம்னு நினைச்சுக்க வேண்டியது தான்”
தந்தை கூறுவது சரி தான் ஆனால் மனத்தால் அடி வாங்கி அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு கடினமான காரியம்.
Advertisement
“சரி தான்பா, நான் அவன்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வர்றேன்” செல்ல போன மகனை பிடித்து நிறுத்தினார் அன்னை. “அவனை விடும்மா. ரொம்ப டயர்டா இருக்கான்”
“இல்லங்க நாள் தள்ளி போன வரை போதும். மாசமும் முடிய போகுது. கார்த்திகைல நாம நல்லது கெட்டது பண்ண மாட்டோம். இப்போவே பேசி முடிக்கலாம்”
கணவன் என்ன கூறியும் கேட்கும் நிலையில் அந்த தாய் இல்லை. அவனது எதிர்காலம் பற்றிய கவலை தான் அவருக்கு பெரிதாக நின்றது. பார்த்திபன் நல்ல மனிதன் தான், ஏன் இவரை கூட மிக மரியாதையாய் ஒரு அன்னை போல் தான் பாவித்து பேசுவான்.
அவனது நிலை கேட்டு மனமது மிகவும் துடிக்க தான் செய்தது. வருத்தப்படுவதை தாண்டி வேறு தன்னால் என்ன செய்திட முடியும் என்பது அவர் எண்ணம். எதை எல்லாம் பார்த்தால் மகன் வாழ்க்கை செயற்படுவது என்று?
“என்னமா?” நெற்றியை நீவி சலிப்பாக பார்த்தவனுக்கு இப்பொழுது எதுவும் பேசவே தோன்றவில்லை.
“இது பொண்ணோட போட்டோ. இது பயோ டாட்டா. இது அவங்க பேமிலி போட்டோ. குடும்பத்தை பாருடா, நல்ல சாந்தமான குடும்பம்”
ஒவ்வொன்றாக மகனின் கையில் வைத்தவர், “ஜாதகம் எல்லாம் அருமையா பொருந்திருக்கு. பொண்ணோட அம்மா அப்பா நம்ம வீட்டை பாத்தா அவங்களால எப்படி முடியாதுனு சொல்ல முடியும்னு தான் அப்பாவை அவங்கள சும்மா பேச வர சொல்ற மாதிரி சொன்னேன்.
வந்தவங்களுக்கு இனிமேலும் புடிக்காம போகுமா? முழு சந்தோஷத்தோட வீட்டுக்கு வர சொல்லிட்டாங்க. நாம போய் உறுதி பண்றது தான் மிச்சம்” “பொண்ணுக்கு புடிக்கணும் ம்மா”
“என் புள்ளைய எப்படிடா புடிக்காம போகும்? ராஜா மாதிரி இருக்க உன்ன புடிக்காம போகுமா? நாளைக்கு நல்ல நாள் தான். நீயே போய் பேசி அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கோ” என்றார் ஆர்வம் குறையாத குரலில்.
மகன் தந்தையை பார்க்க, “கேக்க மாட்டிக்கிறா விஷ்ணு உன் அம்மா. இனி நீயாச்சு அவளாச்சு”
மனைவியை கை காட்டிவிட்டு அமைதியாகிப்போனார். அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்க்க கூட விஷ்ணுவுக்கு மனம் வரவில்லை. எதுவும் பேசவில்லை சில நிமிடங்கள்.
கையிலிருந்த புகைப்படங்கள், காகிதங்கள் யாவையும் டீபாயில் வைத்தவன் பார்வை அதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. அவனுக்கு தேவையான நேரத்தை தாராளமாக கொடுத்த அன்னை எந்த காரணம் கொண்டும் அவ்விடத்தை விட்டு மட்டும் அசையவில்லை.
பெருமூச்சோடு எழுந்த விஷ்ணு அன்னை முன் மண்டியிட்டு அவள் கைகள் இரண்டையும் மென்மையாக பிடித்தான். மகனின் இந்த நடவடிக்கை வித்யாசமாக பட புரியாமல் கணவனை பார்க்க அவருக்கும் இவன் செயல் அதிசயம் தான்.
“நான் உங்ககிட்ட என் மனசுல இருக்கறதை மொத்தமா சொல்லிடுறேன், அப்றம் என் மனசை நீங்களே சொல்லுங்க” பீடிகை போட்டு பேசும் மகனை விசித்திர பிறவு போல் பார்த்தனர் பெற்றவர் இருவரும்.
“ஒரு நாள் ஆபீஸ்ல வேலை பாத்துட்டு இருந்தப்போ என்னை யாரோ பாத்துட்டே இருந்த மாதிரி பீல். கவனிச்சா ஒரு பொண்ணு. நான் பாக்கவும் சட்டுனு திரும்பிட்டா. எதேச்சையா பாத்தானு போனா, அப்றம் அடிக்கடி மாச கணக்கா அதே பார்வை, அதே பொண்ணு.
ஆனா அந்த பார்வைல மட்டும் ஆழம் கூடிட்டே போச்சு. ஆறு மாச குழந்தை முன்னாடி நாம சாப்பிடுறப்போ ஒரு ஆசை ஏக்கத்தோட நமக்கு அது கிடைச்சிடாதான்னு பாக்கும்ல, அதே ஆசை அந்த கண்ணுல.
நம்மளையே சுத்தி சுத்தி வர்ற ஒரு ஜீவன் மேல நம்மையும் மீறி நம்ம கவனம் போகும். என் கவனமும் போச்சு. போனதோடு நின்னுருந்தா கூட பரவால்லம்மா.
மனசுல சின்னதா ஒரு சலனம். பாத்து பாத்தே என் மனசை கரைச்சிட்டா. பணம், சொத்து, வீடு, கார் எதையும் பாக்காம எனக்கே எனக்காக மட்டுமே உருவான அன்பு அது. அதை முழுசா நான் ஏத்துக்க இருந்த நேரம் அந்த பொண்ணோட குடும்பம் பத்தி தெரிய வந்துச்சு.
என்ன பாத்தாலே அந்த கண்ணுல ஒரு மின்மினி பூச்சி வந்து ஒக்காந்துக்கும்ம்மா. அப்படிப்பட்ட கண்ண பாத்து என் ஆசைய மறைச்சு, அந்த பொண்ணோட மனசையும் உடைச்சு அவளோட லவ்வ தூக்கி எரிஞ்சிட்டேன்” பெற்றவர்களுக்கு மகன் கூறிய கதையின் பின் பாதியில் புரிந்துவிட்டது அவன் யாரை பற்றி பேசுகிறான் என்று.
“எல்லாத்தையும் மறந்துடலாம் என்ன ஒரு அட்ராக்ஷன் தானேனு மனசை மாத்தி, வீட்டுல நீங்க சொன்ன பொண்ணை பாக்க வந்து ஓகேவும் சொன்னேன். முழு மனசோட தான் சொன்னேன் இல்லனு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.
சரினு சொன்னாலும் ஏதோ பாரம் ஒரு ஓரத்துல. பார்த்திய கானம்னு அவனை தேடி போனேன். அங்க இருந்தா அவ. என்ன முழுசா இழந்துட்டதா நினைச்சு அந்த கோவில்ல ரெண்டு மணி நேரமா அப்டி தேம்பி தேம்பி அழுதாப்பா. பாத்து மனசே விட்டு போச்சு.
ஒரு அன்பை புரிஞ்சுக்காம குடும்பம், கெளரவம், பழிவாங்குறதுன்னு எனக்கே என்ன நினைச்சு அருவருப்பு. நீங்க சொல்லுங்கபா, தாத்தா என்னைக்குமே பாட்டிக்கு உண்மையா இருந்தது இல்ல. அதுக்காக நீங்க அம்மாக்கு துரோகம் பண்ணது இல்லையே”
மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் மகனிடம் இல்லை என தலையை ஆட்டினார், “என்ன விஷ்ணு?” மகனின் வேதனை நிறைந்த கண்கள் பார்க்க அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.
“முடியல ப்பா. நான் எதை நினைச்சு ஒதுங்கி வந்தேனோ அதுவும் நடந்துச்சு. பசிக்கிதுன்னு வந்து நின்னவளை அசிங்கப்படுத்தி அன்னைக்கு நாள் முழுசும் சாப்பிடாம, வீட்டுக்கு பஸ் புடிச்சு போக கூட காசு இல்லாம தாலாட்டிடு நடந்தா ப்பா. முழுசா உடஞ்சிட்டேன். அவ கடைசியா எப்போ சிரிச்சானு கூட தெரியல”
அன்னையிடம் திரும்பியவன், “நீங்க சொன்னிங்களேம்மா வீடு, கடை, என்னை எல்லாம் பாத்து எப்படி ஓகே சொல்ல மாட்டாங்கனு. ஓகே தான். அது தானே ரியாலிட்டி.
அரேஞ்ட் மேரேஜ்னா அழகு வசதி பாக்குறது தான் இல்லங்கல. இருந்தாலும் ஏன்ம்மா என் மனசு எதையுமே எதிர்பாக்காம என்ன எனக்காகவே லவ் பண்ண பொண்ண தேடி போகுது?”
“விஷ்ணு…” அன்னைக்கு மகனின் வாழ்க்கையை தான் பாழாக்கி விட்டோமோ என்கிற பயம்.
“மனசே சரியில்லம்மா. நினைக்க கூடாதுனு தான் கஷ்டப்பட்டு நிக்கிறேன். ஆனா இன்னைக்கு பார்த்திக்கு பக்கபலமா ஆரோஹி துடிச்சிட்டு நிக்கிறப்போ, ஃபயர் ஆக்சிடென்ட் நடந்தப்போ என்னையே தவிப்பா பாத்துட்டு இருந்த அந்த கண்ண எதுக்கும்மா மனசு நினைக்கிது?
பணம், அழகெல்லாம் பாத்து வர்ற பொண்ணு வேணாம், என்ன எனக்காக நேசிக்கிற ஒரு பொண்ணு மட்டும் தான் வேணும்னு உங்ககிட்ட கத்தி சண்டை போட தோணுதும்மா.
ஆனா முடியல. ஒரே ஒரு நாள் அவளை பாத்தே வெறுப்பை காட்டுன இந்த குடும்பத்துல வந்து ஒவ்வொரு நாளும் அவ துடிக்கிறத பாக்க வேணாம்னு அமைதியா நிக்கிறேன்”
மகன் பேசியதில் நெஞ்சே அடைத்தது அவருக்கு. தான் செய்த செயலின் வீரியம் அன்று விஷ்ணு உணவை உண்ணாமல் தவறை குத்திக்காட்டியதிலே புரிந்து போனது.
ஆனாலும் இவன் கூறியது போல் தான் அனாயாவின் பார்வையை உணர்ந்தே மகனுக்கு பெண் தேடும் படலத்தை தீவிரமாக்கினார். அதுவும் மகன் மேல் உள்ள அதீத நம்பிக்கையில். இன்று இவன் பேசவும் தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது.
“சரி இப்போ சொல்லுங்க இந்த கல்யாணத்துக்கு நான் ஓகே சொல்லவா வேணாமா?”
“விஷ்ணு…”
கண்ணெல்லாம் கலங்கியது அன்னைக்கு, “என்னப்பா இது, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா. நல்ல குடும்பம்”
“சரிம்மா கல்யாணம் தானே பண்ணனும், பண்ணிக்கிறேன்” என்றான் பெரிதாக தலையை ஆட்டி சிரித்த முகத்தோடு.
அவன் தலையசைப்பில் மகிழ முடியவில்லை. பெரிதாக பேசினானே, அவளை பிடித்தது, மனம் தேடுகிறது என என்னென்னவோ.
“அந்த பொண்ணு குடும்பம்…”
அவர் பேசுவதை தடுத்தவன், “எந்த விளக்கமும் வேணாம். இதெல்லாம் யோசிச்சு தான் நானே வேணாம் சொல்றேன். என்ன இப்டியே விட்டா ஒரு வருஷம் ரெண்டு வருஷம் பீல் பண்ணுவா. இதுவே இங்க வந்தா காலத்துக்கும் அழுகணும்”
அவன் உதிர்க்கும் சிரிப்பில் ஒளிந்திருக்கும் வருத்தத்தை அன்னை உணராமல் போவாரா? மகன் மேல் கோவம், “உன் அம்மா என்ன அவ்ளோ கொடுமைக்காரியாடா?”
“அப்டி சொல்ல வரலம்மா…”
“நீ எப்டியும் சொல்ல வேணாம். ரொம்ப கஷ்டம்டா அப்போ நமக்கு. உனக்கு ஸ்கூல்க்கு பீஸ் கட்டணும், வீட்டுல சாப்பாடு அரிசி கூட இல்ல. இதெல்லாம் ரொம்ப கம்மி. வறுமை ஒரு பக்கம் வாட்டுச்சுனா அவமானம் இன்னொரு பக்கம். அதெல்லாம் சேர்த்து அந்த பொண்ணுகிட்ட காட்டிட்டேன்”
“பட்டுனு அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துட்டா ஆனா, அரை மணி நேரம் அதை சொல்லி அழுதாடா உன் அம்மா” கணவன் கூற இப்பொழுதும் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தது அவருக்கு.
உடனே துடைத்த மகனின் கையை பற்றியவர், “ஒருத்தர் பண்ண தப்புக்கு இன்னொருத்தர் தண்டிக்கிறது ரொம்ப பெரிய தப்பு விஷ்ணு. போ. அந்த பொண்ணு தானே வேணும். கூட்டிட்டுவா”
“ம்மா…”
“தவிக்காத தம்பி. எக்காரணம் கொண்டும் சொல்லி காட்ட மாட்டேன். முழு மனசோட தான் சொல்றேன்” கணவனை பார்த்தார், “ஏங்க…”
“வீட்டுக்காகவே ஓடுனவன், அவன் சந்தோசத்தை வாய திறந்து முதல் தடவ கேக்குறான். சந்தோசமா முன்ன நின்னு நடத்தி வைக்கலாம்” வேகமாக எழுந்து வந்து தந்தையை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் விஷ்ணு.
இப்பொழுதே சென்று அனாயாவை பார்த்து அந்த முகத்தில் சிரிப்பை வரவைக்க வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டான்.
முதலில் நண்பனிடம் பேச வேண்டும். மறுப்பு கூறுபவன் இல்லை பார்த்திபன். ஆனாலும் தாமோதரன் பேத்தி என்பதை தாண்டி நண்பனிடம் இவ்விடயத்தை கூறி எவ்வழியில் அனாயாவை அணுகலாம் என யோசிக்க வேண்டும்.
*****
வீட்டின் வரவேற்பறையில் பார்த்திபன் ஏதோ முக்கியமான வேலையை வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருக்க ஆரபி கணவன் அருகில். ஸ்ரீனி மருமகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.
தாத்தா வீட்டிற்கு வந்த பூர்விக்கு மகிழ்ச்சியோடு தெம்பும் கூடி விட்டது போல. வழக்கத்தை விட இன்று அதிக ஆட்டம். ஸ்ரீனியே ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் ஓய்ந்து அமர்ந்துவிட்டான்.
“மாமா வா… வா” மாமனின் கை புடித்து குட்டி பெண் இழுக்க, “இந்த பூரி ஓடிரு. போ உன் அப்பா அங்க தானே இருக்கார்” எழுந்து வந்துவிடுவான் ஆனாலும் பார்த்திபனை சற்று மீட்க வேண்டும்.
அது அவன் மகளால் மட்டுமே முடியும் என்பதால் மட்டுமே குழந்தையை திசை திருப்பி விட்டான். அதுவும் சரியாக வேலை செய்ய பார்த்திபனை இழுத்து விளையாட, கேள்வி கேட்க என பொழுது ஓடியது.
இடையே பார்த்திபனுக்கு அழைப்பு வர, வெளியே பேச சென்றான். அந்நேரம் வீட்டையே தன்னுடைய பிஞ்சு பாதங்கள் பதித்து சுற்றி வந்தவள் ஆரபி அசந்த நேரம் பார்த்திபன் பார்த்துக்கொண்டிருந்த காகிதங்களில் ஒன்றை எடுத்து கிழித்துவிட்டாள்.
இதை எதிர்பார்க்காத ஆரபி, கணவனுக்கு முக்கியமான கோப்போ என பயத்தில் மகளை காலில் ஓங்கி அடித்துவிட்டாள். அன்னை அடிப்பது புதிதில்லை என்றாலும் எப்பொழுதும் நடக்கும் நாடகம் துவங்கியது.
வீலென தன்னுடைய குட்டி தொண்டையை திறந்து அவ்வீடே கேட்கும் வண்ணம் அழத் துவங்கினாள்.
மகளின் நாடகம் புரிந்த ஆரபி மகளின் உதட்டில் பட்டும் படாமல் ஒரு அடி போட்டு, “ஷ்ஷ். என்ன சத்தம் வாய மூடு” அதட்டினாள்.
வாயை ஒரு நொடி மூடியவள் கண்ணிலிருந்து கண்ணீர் நிற்க மாட்டாமல் பெருகி வந்தது. “என்னடிம்மா இது பழக்கம்? எத்தனை தடவை சொல்லிருக்கேன் எதையும் கிழிக்க கூடாதுனு”
“எதுக்குடி புள்ளைய மிரட்டிண்டு இருக்க?” பேத்தியை அழுகை சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்தவர் எழுந்து வந்துவிட்டார் க்ரிஷ்ணாம்பாள்.
“ம்மா நீர் குறுக்க உம்ம பேத்திக்கு சப்போர்ட் பண்ண வராதேள்”
அன்னையை அதட்டி மகளிடம் திரும்ப அதற்குள் பூர்வி, “ம்மா பாத்திய திட்ட கூதாது” அழுகையோடு அன்னை செய்யும் தவிறினை சுட்டிக்காட்டும் மகளின் அழகில் ஆரபியே சொக்கி தான் போனாள்.
ஆனால் விட மனம்வரவில்லை, சேட்டை அதிகமாகிவிட்டது இந்த குட்டி மகளுக்கு.
அதட்டி வைத்தே தீர வேண்டும் என, “சாரிம்மா” அன்னையிடம் மன்னிப்பு கேட்டு மகளை ஆரபி பார்க்க இப்பொழுதும் அழுகையோடு தலையை ஆட்டி அன்னை செய்தது சரி என அங்கீகரித்துவிட்டாள் பார்த்திபன் மகள்.
“சமத்து” க்ரிஷ்ணாம்பாள் பேத்தியை தூக்க வர தடுத்துவிட்டாள் ஆரபி.
“அவா தப்பு பண்ணிண்டா ம்மா. நீ சொல்லு பூர்வி. உன் தோப்பனார் இப்போ வந்து இந்த பேப்பர் எதுக்கு கிழிச்சனு கேப்பார். நான் என்ன சொல்லட்டும்?”
“நானு சும்மா…”
“என்னடிமா சும்மா, அது இம்பார்ட்டண்ட் பேப்பரா இருந்தா என்ன பண்றது?”
ஆரபி குரலை உயர்த்த மீண்டும் சத்தமிட்டு அழுத குழந்தை, “இரு, அப்பாட்ட சொத்துவேன்”
“என்ன சொல்லுவ?”
“நீ அதிச்சல”
“சொல்லு. நானும் சொல்றேன். பாருங்கோ உங்க மக உங்க பேப்பர கிழிச்சு போட்டுண்டானு”
“வேதா…” வேகமாக இரு பக்கமும் தலையை ஆட்டி.
“அப்போ நீ கிழிக்கலாமா?”
“ம்ம்ம் கிழிக்கலாம்” என்றாள் குழந்தை அடங்காமல். அவள் பேசுவதை கேட்டு ஸ்ரீனி க்ரிஷ்ணாம்பாள் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி சிரித்தனர் குழந்தைக்கு தெரியாமல்.
மீண்டும் அடி வைத்தாள், “மாமா…” மாமனிடம் அழுகையோடு குழந்தை தாவ பார்க்க, விடவே இல்லை ஆரபி.
“தப்பு பண்ணிண்டு இது என்ன பிடிவாதம் பூர்வி? நீ குட் கேர்ளா இல்ல பேட் கேர்ளா?”
“குத் கேர்ள்”
“ம்ம்ம் குட் கேர்ள்ஸ் யாரும் இப்டி பண்ண மாட்டா. அம்மா சொல்றதை கேட்டுண்டு சமத்தா இருப்பா. சொல்லு இனிமேல் கிழிப்பியா, இதைனு இல்ல. எதையும் கிழிக்க கூடாது”
ஆரபி கூறியதற்கு உடனே சம்மதம் கூறாமல் முரண்டு பிடித்து செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று மட்டும் கூறவில்லை, வேகமாக, “தாரி” என்றாள்.
“சாரி ஓகேடி. இனி செய்ய மாட்டேன்னு சொல்லு”
ஆரபி கேட்க மீண்டும் மகளிடமிருந்து, “தாரி” வர இதை எல்லாம் தூரம் நின்று கேட்டுக்கொண்டிருந்த பார்த்திபன் வாய் விட்டு சத்தமாக சிரித்துவிட்டான்.
சிறியவளும் தந்தை குரல் கேட்டு எழுந்து வேகமாக அவனிடம் ஓடி அவன் காலைக்கட்டி அழ, மனமுருகி மகளை கைகளில் ஏந்திக்கொண்டான்.
“நீங்க சிரிக்காதேள், இது தான் அவளை கெடுக்குறதே”
கண் மூடி மகளின் குட்டி தலை மேல் பார்த்திபன் சில நொடிகள் சாய, தந்தைக்கு அன்னையாய் அவன் தலையில் தட்டிக்கொடுத்தாள் மகள். மனம் நிறைந்த சிரிப்பு பல மணி நேரங்கள் பிறகு.
error: Content is protected !!