Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 2 1

அத்தியாயம் 2

                        உந்தன் பார்வையில் கூட

காந்த விசை உண்டு

என்று உணர்ந்தேன் நான்!!!



Advertisement

“இன்னைக்கு என்ன புது கேஸ்?”, என்று மணிமாறன் கேட்டதும் எல்லாவற்றையும் ஒப்பித்த வாஜித் “அப்புறம் இவன் பேர் முகேஷ் சார். பக்கத்து வீட்ல இருக்குறவனை கொன்னுட்டு தன்னோட வீட்ல வந்து படுத்துக்கிட்டான். அந்த வீட்ல இருந்து ஒரு லட்சம் பணம் திருடிருக்கான். காலடித் தடத்தை வச்சு இவன் தான் கொலைக்காரன்னு கண்டு பிடிச்சிட்டாங்க. இவனைப் பிடிச்சு கோர்ட்ல ஆஜர் படுத்திருக்காங்க. ஆனா கோர்ட்ல வச்சு நான் எப்பவும் அந்த வீட்டுக்கு போறது வரது உண்மை தான். ஆனா நான் கொலை செய்யலை. போலீசால உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாததால என்னை வேணும்னு இந்த கேஸ்ல இழுத்து விடப் பாக்குறாங்க. இந்த பணம் என்னோடது. அதை நான் தான் டொனேஷன் கொடுக்குறதுக்காக பேங்க்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்னு ஜட்ஜ் கிட்ட சொல்லிருக்கான். அவன் சொன்ன மாதிரி அது அவன் பணம் தான். ஜட்ஜ் உடனே மூணு நாள் விசாரணை பண்ணச் சொல்லிருக்கார். கேஸ் நம்ம கிட்ட வந்துருக்கு. காலடித் தடம் தவிர வேற எந்த எவிடன்ஸும் இல்லாததுனால இந்த கேஸ் ஒண்ணும் இல்லாம போயிரும். இவனே உண்மையை ஒத்துக்கிட்டா தான் உண்டு. நான் எவ்வளவோ விசாரிச்சிட்டேன். வாயைத் திறக்க மாட்டிக்கான்”, என்றான்.

Advertisement

“இதுக்கு எதுக்கு மூணு நாள்? அரை மணி நேரம் போதும். டார்க் ரூம் ரெடி பண்ணுங்க”, என்று மணிமாறன் சொல்ல “எதுக்கு சார்? என் காலுல விழுந்து கெஞ்சவா?”, என்று கேட்டான் அந்த கைதி.

Advertisement

“இவனுக்கு இன்னைக்கு நாக்குல சனி போல?”, என்று வாஜித் எண்ண “நீ சொன்ன மாதிரி கூட இருக்கலாம். நீ ரொம்ப அறிவாளி தான்”, என்றான் மணிமாறன்.

Advertisement

அடுத்த அரை மணி நேரத்தில் உண்மை எல்லாம் கக்கி விட்டான் அந்த கைதி. தன்னுடைய பொண்டாட்டிக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்ததால் தான் அவனைக் கொன்றதாக ஒத்துக் கொண்டான். அவனைக் கொள்ள ஏற்கனவே திட்டம் போட்டு தான் பேங்கில் இருந்து பணம் எடுத்து வந்ததாகவும் தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக தான் அந்த வீட்டில் இருந்து பணத்தை எடுத்து திருடு நடந்தது போல செட்டப் செய்ததாகவும் சொன்னான்.

அந்த பணத்தையும் அவனுடைய வீட்டிலே அடுப்படியில் ஒளித்து வைத்து விட்டு வந்ததாகவும் சொன்னான். அவன் சொன்னதை எல்லாம் தன்னுடைய போனில் அப்படியே வீடியோ எடுத்தான் மணிமாறன்.

மணிமாறன் அடித்த அடியில் ஒரு நாள் முழுக்க சுருண்டு படுத்திருந்தான் அவன். அடுத்த நாள் அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மூன்றாவது நாள் அவனிடம் மீண்டும் ஒரு முறை ஒப்புதல் வாக்குமூலம் வாங்க வேண்டும் என்றும் வாஜித்திடம் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

கதிரவன் மற்றும் வனஜாவின் ஒரே மகன் தான் மணிமாறன். சிறு வயதிலே தாயை இழந்தவன். கதிரவனையே ரோல் மாடலாக எண்ணி வளர்ந்தான்.

அவரைப் போலவே போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் அவனது கனவு. போலீஸ் தேர்வு அனைத்தையும் எழுதினான். முதலில் அவனுக்கு கிடைத்தது சப் இன்ஸ்பெக்டர் பதவி தான். அது போக ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணியிருக்கிறான். அதற்கான போஸ்டிங் எப்போது வரும் என்று தான் காத்திருக்கிறான். அந்த வேலை கிடைத்ததும் இதை விட்டு விடுவான்.

அவர்களுடைய வீட்டில் அவனது அத்தை தேவகியும் இருக்கிறாள். கதிரவனின் தங்கை தான் தேவகி. ஊர் மெச்ச தான் அவளுக்கு திருமணம் செய்து கொடுத்தார் கதிரவன்.

யார் கண் பட்டதோ, சில வருடங்களிலே தேவகியின் கணவர் இறந்து விட தங்கையை தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அண்ணன் மகனை வளர்க்க இவர்கள் வீட்டிலே தேவகியும் இருந்து விட்டார். கதிரவனின் அக்கா வீட்டுக்கும் அடிக்கடி தேவகி சென்று வருவார்.

மணிமாறனை தன்னுடைய மகனைப் போலவே எண்ணி தான் தேவகி அவனை வளர்த்தார். அவனும் அவரை ‘அத்தை’ என்று அழைத்தாலும் மனதில் அவனுக்கு தேவகி அன்னை தான்.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவனுக்கு டீ கொடுத்தார் தேவகி. “தேங்க்ஸ் அத்தை. ரொம்ப சோர்வா இருந்துச்சு. உங்க டீ குடிச்சா தான் எல்லாம் சரியாகும்”, என்றான்.

“எனக்கு ஐஸ் வச்சது எல்லாம் போதும். அண்ணன் உன் கிட்ட பேசணும்னு சொல்லுச்சு”

“பெருசு பேசணும்னு சொல்லுச்சா? என்னவாம்?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டான் மணிமாறன்.

“நீ மத்தவங்களுக்கு கைல காப்பு போடுறல்ல? உனக்கு கால்ல காப்பு போடுறதுக்கு தான் அண்ணன் உன்னை வரச் சொன்னார்”

“என்னது எனக்கு கல்யாணமா? அதுக்குள்ளயா? ஐ.பி.எஸ் ஆபிசர் ஆகிட்டு பண்ணிக்கிறேன் அத்தை. நீங்க அப்பா கிட்ட சொல்லுங்க”

“அது அது அந்த அந்த நேரத்துல நடக்கணும் டா கண்ணு. நீ கல்யாணம் முடிச்சா உனக்கு ஐ.பி.எஸ் வேலை கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்களா என்ன? கல்யாணம் முடிஞ்ச பிறகு வேலை கிடைச்சா எல்லாருக்கும் சந்தோஷம் தான் டா. வேலை வேலைன்னு சொல்லி கிடைச்சிருக்க நல்ல பொண்ணை எப்படி விட முடியும்?”

“முடிவு பண்ணிட்டீங்க. இனி நான் என்ன சொல்ல? சரி சரி எனக்கும் சம்மதம். பொண்ணு யாராம்?”

“எல்லாத்தையும் என் வாயில இருந்தே வர வைக்கிற? போய் அப்பா கிட்ட கேளு டா”, என்று சொல்லி அவனை விரட்டி விட்டாள்.

டீ குடித்து முடித்து விட்டு தந்தையைத் தேடிப் போனவன். “அப்பா கூப்பிட்டீங்களா?”, என்று கேட்டான்.

“ஆமா டா, இங்க வந்து உக்காரு. தேவகி நீயும் இங்க வா மா”, என்றார் கதிரவன்.

தேவகியும் அவர்கள் அருகே சென்று அமர்ந்ததும் “மணிமாறா, உன் கல்யாண விஷயம் பேசணும் டா. அத்தை சொன்னாளா?”, என்று கேட்டார்.

“ஆமா பா”

“உன் அபிப்பிராயம் என்ன டா?”

“எனக்கு ஐ.ஏ.எஸ் போஸ்டிங் கிடைச்ச அப்புறம் பண்ணிக்கலாம்னு தோணுச்சு. ஆனா உங்க விருப்பம் தான். நீங்க சொன்னா பண்ணிக்கிறேன் பா. கல்யாணம் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு எனக்கு எந்த ரீசனும் இல்லை பா”

“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா டா. ஒரு கல்யாண வீட்ல வச்சு பாத்தேன். உனக்கு பேசலாம்னு அப்பவே தோணுச்சு. சரி அவ கொஞ்சம் பெரிய பொண்ணாகட்டும்னு வெயிட் பண்ணேன். ஆனா இப்ப அந்த பொண்ணுக்கு தீவிரமா மாப்பிள்ளை பாக்குறாங்க போல? எனக்கு அவளை வேற வீட்டுக்கு விட்டுக் கொடுக்கவே மனசு இல்லை டா”

“உங்களுக்கு இவ்வளவு பிடிச்சிருந்தா பேசுங்க பா”

“பொண்ணைப் பத்தி சொல்றேன் கேட்டுக்கோ டா. பொண்ணு பேர் பூங்கொடி. காலேஜ் படிச்சிட்டு இருக்கா. அவளுக்கு நாலு அண்ணன்கள். இப்ப வரைக்கும் எல்லாரும் ஒத்துமையா ஒரே குடும்பமா இருக்காங்க”, என்று ஆரம்பித்து அவளைப் பற்றிய விஷயத்தைச் சொன்னார்.

“படிக்கிற பொண்ணுன்னா வயசு கம்மியா இருக்குமே பா”

“வயசு சரியா வரும் டா. நீ மேல படிக்க வச்சிக்கோ”

“சரிப்பா, மேற்கொண்டு பேசுங்க”

“முதல்ல அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு உன்னைப் பிடிக்கணும்ல? உன்னோட போட்டோ நான் அனுப்பலை. நாளைக்கு நேர்ல வறோம்னு சொல்லிருக்கேன். நாளைக்கு போயிட்டு வந்துறலாமா?”

“சரிப்பா”, என்று அவன் சொல்ல “தேவகி நீ என்ன மா சொல்ற?”, என்று கேட்டார் கதிரவன்.

“நல்ல காரியத்தை தள்ளிப் போட வேண்டாம் அண்ணா. நாளைக்கே போகலாம்”, என்றார் தேவகி.

மணிமாறன் தந்தை என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வான். அவரிடம் எதையுமே மறுத்துப் பேச மாட்டான். அவர் அவனுக்கு எப்போதுமே ஹீரோ தான். அதே போல அவரும் அவனை எதிலும் கட்டாயப் படுத்த மாட்டார். அவன் விருப்பம் கேட்டே அனைத்தையும் சொல்வார்.  அதே நேரம் அவனுக்கு எது நல்லதோ அதை அவனிடம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு உண்டு. அப்பா மகன் இடையே இருக்கும் இந்த பிணைப்பு தேவகிக்கு எப்போதும் அதிசயமாக தான் இருக்கும்.

பெண் பார்க்கும் தினம் வரவே கூடாது என்று பூங்கொடி வேண்டிக் கொண்டிருக்க அவளைக் காண ஆவலாகவே மனதளவில் தயாரானான் மணிமாறன்.

இது வரை திருமணத்தைப் பற்றியோ, பெண்களைப் பற்றியோ இது வரை எண்ணியதே இல்லை. ஆனால் அதைப் பற்றிய பேச்சு வார்த்தை வந்ததும் ஏதோ இனம் புரியாத உணர்வு அவனுக்கு வந்தது. தன்னுடைய அன்னையின் புகைப்படம் முன்பு வந்து நின்றவன் “அம்மா என்னால பல பெண்களை எல்லாம் பாக்க முடியாது. இந்த பொண்ணையே எனக்கு பிடிச்சிறனும். நீ தான் என் கூட இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!