காஞ்சிபுரத்தில் நல்ல மழை. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் சாலையில் அந்த மகேந்திரா தார் மிதமான வேகத்தில் வந்தது. காஞ்சிக்குச் செல்லும் வழியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் அமைந்திருந்தது சிவன்தாங்கல்.
சிவன்தாங்கலில் இருந்த அந்த வீட்டின் பெரியவர் அவரது கைகடிகாரத்தையே விடாது பார்த்துக் கொண்டிருந்தார். இன்னமும் அவர் பெயரன் வந்து சேரவில்லை. மழையும் விடாது பெய்ய, அவர் அழைத்தாலும் அவன் எடுக்கவில்லை. அவரைத் தவிர அந்த வீட்டில் அவனைப் பற்றிக் கவலைக்கொள்ள யாருமில்லை. அப்படியே கவலைப்பட்டாலும் அதில் கடுகளவும் பயனில்லை. கார் சத்தம் கேட்க அவசரமாக தனது சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தார் தேசிகன்.
வீட்டினுள் நுழையும்போதே அவர் எழுந்த வேகம் பார்த்த அவர் மகன் வித்யாதரன் அப்பாவை முறைத்தார்.
Advertisement
“வயசான காலத்துல பொசுக்குனு எழாதீங்க, உட்காராதீங்க சொன்னா கேட்க மாட்டீங்களாப்பா?” என்று அதட்டினார்.
“ப்ச்” என்று அவரின் இன்னொரு பக்கம் உச்சுக்கொட்டுவது கேட்டது. உண்மையில் அது அதட்டல். அவரின் மனைவி வைதேகி.
“வீட்டுக்குள்ள வந்ததும் கத்தணுமாங்க?” என்று கத்தாமல் அவர் கேட்க, வித்யாதரனும் அமைதியாக மனைவியோடு அறைக்குள் போக கால் எடுத்து முன்னே வைத்தார்.
Advertisement
“கொஞ்சமாச்சும் உங்க ரெண்டு பேருக்கும் என் பேரன் மேல அக்கறை இருக்கா?” என்று கோபமாகக் கேட்டார் தேசிகன்.
Advertisement
“ஏன்ப்பா நானும் வைதேகியும் ஹாஸ்பிட்டல்ல இருந்து வர இவ்வளவு நேரமாச்சேனு உங்களுக்குக் கவலை இல்லை. அவனைக் காணும்னு மட்டும் மழையில வாசலைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கீங்க?” என்று கொஞ்சம் தாங்கலாகவே கேட்டார் வித்யாதரன்.
“ஏண்டா அவனும் நீயும் ஒன்னா? நீ ட்ரைவர் வச்சிருக்க, ராஜா ட்ரைவர் இல்லாம போயிருக்கான். அதுவும் அவன் இருக்க டென்ஷன்ல..” என்ற தேசிகனுக்குத்தான் அதிக டென்ஷன் இருப்பது போலத் தெரிந்தது.
“மாமா! அவனை நினைச்சுக் கவலைப்பட்டாலும் அவன் நாங்க சொல்றதைக் கேட்க போறது இல்ல. நீங்க சொல்றதையே அவன் கேட்குறமாதிரி எங்களுக்குத் தெரியல. அப்புறம் உங்க பேரனுக்கு மழையில பத்திரமா வண்டியோட்டிட்டு வான்னு மெசேஜ்ல சொல்லியிருக்கேன். சார் பார்த்துட்டு ரிப்ளை கூட பண்ணல” என்று வைதேகி மகனை பற்றிக் கடுப்போடு சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார்.
Advertisement
வித்யாதரனும் வைதேகியும் மருத்துவர்கள். தேசிகன் முன்னாள் அமைச்சர். இப்போதும் கட்சியில் அவருக்குச் செல்வாக்கு உண்டு. வைதேகியின் தந்தையும் அரசியல்வாதியே, அவர்கள் வேறு கட்சி. வித்யாதரனுக்கும் வைதேகிக்கும் இந்த அரசியல், பொதுக்கூட்டம், கட்சி என்று எதுவும் பிடிக்காது. தங்களது அப்பாக்களின் நேரம் பெரும்பாலும் அரசியலில் கழிந்துவிட அது அவர்களுக்கு ஒவ்வாமையைக் கொடுத்தது. அந்த ஒவ்வாமைக் கொடுத்த ஒற்றுமையினால் இருவருமே அரசியல் தவிர்த்து வேறு துறையில் சேர்ந்தனர். வெவ்வேறு மருத்துவக்கல்லூரியில் பயின்றாலும் முதுகலைப் படிப்பை வேறு பிரிவுகளில் ஒரே சமயத்தில், ஒரே கல்லூரியில் படிக்கும்போது கூடவே காதலையும் பயின்றனர்.
கட்சிகள் வேறாக இருந்தாலும் பிள்ளைகளுக்காக தேசிகனும் வைதேகியின் அப்பாவும் சம்மதித்தனர். அதில் அரசியல் ஆதாயம் எதாவது கிட்டும் என்று நினைத்திருந்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. இருவருமே அப்பாக்களின் நிழலை விரும்பாது, தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டனர். இருந்தாலும் அந்த அரசியல் நிழல் அவர்கள் வாழ்க்கையை எந்த தொந்தரவுமின்றி வாழ வழி செய்தது.
அவர்களின் மூத்த மகன் ராஜமகேந்திரன். அவன் பிறந்ததிலிருந்து இருவழி தாத்தா வீட்டிலும் அதீத செல்லம். அவன் ராஜாதான்! அப்பாவும் அம்மாவும் தங்களது கனவை நனவாக்க மருத்துவத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பணமிருக்கிறது என்று உடனே மருத்துவமனை தொடங்கிடவில்லை.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் முழுமையாக வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி, வெளிநாடு சென்று மருத்துவ மேலாண்மை குறித்த படிப்புகளைப் பயின்று அதன்பின் சொந்தமாக மருத்துவமனை அமைத்தனர். சொந்த இடத்தில், அவர்களுக்கு உரிய இன்னொரு இடத்தை விற்று அந்த பணத்தில் மருத்துவமனை கட்டினார்கள், அதற்கு இருவர் வீட்டிலும் செய்த உதவிகளை மறுக்கவில்லை. ஆனால் மகனுடனான நேரம் என்பது சொற்பமாகிப்போனது. முடிந்தவரையில் அவனுடன் இருக்க நினைத்து மருத்துவமனை அழைத்துச் செல்ல, அவனுக்கு அந்த மருத்துவமனை வாசமும் வாசனையும் பிடிக்கவில்லை.
ஊசி, மருந்து, இரத்தம், அழுகை என்று பார்க்க பார்க்க பயம், பிடித்தமின்மை உருவாகி உடல் நலமின்றி போக வீட்டில் பாட்டியோடும், அரசியல் கூட்டங்களுக்குச் செல்லும் தாத்தாவோடும் போகும் பழக்கமுண்டானது. தேசிகனும், அவர் நண்பர் இரத்னவேலும் தீவிர அரசியலில் இருந்தனர். பெயரனை கட்சி அலுவலகம், கட்சி கூட்டங்கள், பிரச்சாரம் என்று அவனது விடுமுறை தினங்களில் அழைத்துச் சென்று பழக்கிவிட்டிருந்தார் தேசிகன்.
ராஜமகேந்திரனுக்கு அந்த கரகோஷங்களும், தாத்தாவோடு செல்லும் அவனிடம் எல்லாரும் மரியாதையோடு பழகுவதும் சிறுவனான அவனுக்கும் வணக்கம் வைப்பதும் கண்டு அரசியல் மீது ஈர்ப்பு உருவானது. ஈர்ப்பு என்பதெல்லாம் சிறு சொல், அவனுக்கு அரசியல் மீது காதல்! அதுவும் வளர வளர, வயதோடு அரசியல் மீதான அவன் காதலும் வளர்ந்தது. இன்று ராஜமகேந்திரன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்.
மகேந்திரனுக்கு அடுத்து இரட்டையர்கள் அயன், வியன். இருவருமே அப்பா, அம்மாவின் செல்லப்பிள்ளைகள். அப்பா, அம்மாவைப் போல மருத்துவம் பயில்கிறார்கள். அவர்களையும் சிறுவயது முதலே மருத்துவமனை அழைத்துச் செல்ல, அவர்களுக்கு அந்த வெண்மையும், தண்மையுமான பேச்சுகள் பிடித்தன. பயத்தோடு அறைவாசலில் காத்திருப்பவர்கள் மருத்துவர் சொல்லும் செய்தியில் விடுகின்ற ஆனந்த கண்ணீர் அவர்களுக்குப் பிடித்தது. அப்பாவையும், அம்மாவையும் எல்லாரும் மதிப்பது பார்த்து பெருமை.
இரவு எட்டு மணியாகிவிட மழை வெளுத்து வாங்கியது. இருளும் மழையும் சூழ மகேந்திரா ஜீப்பிலிருந்து இறங்கினான் ராஜமகேந்திரன்.
“மழையில சீக்கிரம் வர வேண்டிதானே ராஜா? தாத்தா உன்னால எவ்வளவு டென்சன் ஆனார் தெரியுமா?” என்று வித்யாதரன் மகனைக் கண்டிக்க,
“தாத்தா டென்ஷனாயிருந்தா அவர் என்னைக் கேட்பார்ப்பா, உங்களுக்கு எதாவது கேள்வி இருந்தா சொல்லுங்க” என்றான் நக்கலாக.
“முதல்ல போய் டிரஸ் மாத்து” வைதேகி சொல்லவும் அம்மாவின் பேச்சைக் கேட்டு அமைதியாக அறைக்குள் சென்றான். டிராக் பேண்ட், டீஷர்ட் அணிந்தவன் படிகளில் டக் டக் என்று சத்தம் கேட்குமளவு வேக நடையோடு வந்து உணவு மேஜை முன் அமர்ந்தான்.
அவன் கைகள் சட்டமன்ற மேஜையில் தட்டுவது போல் அந்த மேஜையிலும் தாளம் போட, “இருடா, அம்மா சாப்பாடு எடுத்துட்டு வருவா. அதுக்குள்ள ஏன் தட்டுற” என்று வித்யாதரன் மகனைக் கடிந்தார்.
“தாத்தா! சாப்பிட வாங்க” என்று தன் நண்பன் இரத்னவேலிடம் பேசிக்கொண்டிருந்த தேசிகனை அழைத்தான் ராஜா. தினமும் ஒருமுறையாவது இருவரும் பேசிவிடுவார்கள், முடிந்தபோது நேரிலும் பார்த்துக்கொள்வார்கள்.
காஞ்சியிலும் அவர்களுக்கு வீடு இருக்கிறது. அங்கேயும் இங்கேயும் தோதுக்கேற்ப மாறி இருந்துகொள்வார்கள். தேசிகனும், ராஜமகேந்திரனும் பெரும்பாலும் காஞ்சியில் இருப்பார்கள். இப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்.பியாக இருப்பதால், அலுவலக வேலையிருந்தால் சிவன்தாங்கல் வீட்டில் இருப்பான். வித்யாதரன் வைதேகியின் மருத்துவமனை ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.
“தாத்தாவுக்கு இன்னொரு இட்லி வைங்கம்மா” என்றான் ராஜமகேந்திரன்.
“டேய்! நான் உன்னைக் கேட்டேனா?” என்று தேசிகன் கேட்க,
“அப்போ உங்க தட்டைப் பார்த்துச் சாப்பிடுங்க தாத்தா. என்னை பார்க்காதீங்க” என்றவன் கவனம் முழுவதும் உணவில் இருந்தது. முழு கவனத்தோடு சாப்பிட்டாலும், ரசித்து சாப்பிட்டானா என்ற கவலை வைதேகிக்கு. அதீத கவனமும், அதிக செல்லமும் மகனை தங்களிடமிருந்து தூர நிறுத்திவிட்டதை அவர் உணர்ந்தாலும் அதனை சரிசெய்யவே முடியவில்லை.
அதற்காக அப்பா, அம்மாவிடம் பேசாதவன் இல்லை. நன்றாகவே பேசுவான். ஆனாலும், இளைய மகன்கள் போல் ஒரு செல்லம் கொஞ்சுதல், எதாவது வேண்டும் என்றால் கெஞ்சி கேட்பது எதுவும் இருக்காது. அவனுக்கு வேண்டும் என்றால் நடத்திக் கொள்வான். அவனுக்கு வேண்டும் என்று யாரிடமும் கேட்கக் கூட மாட்டான். அதுவும் இப்போது எம்.பி வேறு, என்ன வேண்டுமானாலும் அவனே செய்துகொள்வான்.
உணவு என்றால் கூட அப்படியே. இரண்டு நாட்கள் கேட்பான்.
“அம்மா எனக்குப் பூரி சாப்பிடணும் போல இருக்கு” என்று. வைதேகிக்கு மருத்துவமனை வேலை, இரட்டை மகன்களை சமாளிக்கும் வேலையிருக்கும். மகனுக்குச் செய்துத் தர ஆசையிருந்தாலும் அசதி விடாது. ராஜா நச்சரிக்க மாட்டான், அவனே செய்துவிடுவான்.
அந்த சுயசார்பு சிறிய விஷயங்களில் தொடங்கி பெரிய விஷயங்கள் வரை அப்படியே இருப்பதுதான் வைதேகியின் கவலை. சுயசார்பு என்பது மற்றவர்களைச் சாராத ஒரு நிலையை மகனுக்கு உருவாக்கி விட்டதோ என்ற எண்ணம் அவரை ஆட்டுவிக்கும். அதுவும் அவருக்குப் பிடிக்காத அரசியலில் மகன் இருப்பது மிகுதியான கோபம். அவன் அரசியலைத் தேர்ந்தெடுத்த சில வருடங்கள் பேசுவதைக் கூட நிறுத்திப்பார்த்தார் வைதேகி. ராஜாவிடம் வேலைக்காகவில்லை, பின் அவராகவே இறங்கி மகனிடம் பேசினார்.
உணவு முடியவும் எழுந்த ராஜமகேந்திரன் தேசிகன் குரலில் நின்றான்.
“ராஜா உங்கிட்ட பேசணும்” என்றிட,
“சொல்லுங்க தாத்தா” என்றான். அவர் மகனையும், மருமகளையும் பார்த்தார்.
“எங்க இரண்டு பேர் முன்னாடி பேச முடியாதளவு என்ன ரகசியம்? எதாவது பிரச்சனையாப்பா? மறுபடியும் ஸ்டேஷன் போகணுமா?” என்று வித்யாதரனுக்குப் பதட்டமானது. வைதேகி கணவரை அடக்கினார்.
“அப்படியெல்லாம் இருக்காது. மாமா, என்ன விஷயம் சொல்லுங்க” என்று கேட்டார். பெயரனைக் கேட்காமல் சொல்வதா, வேண்டாமா என்று யோசித்தார். அதற்குள் தாத்தா என்று ராஜா அழைக்க, தேசிகன் இவர்களுக்குப் பதில் சொல்லாமல் அறைக்குள் போனார்.
**********
அந்த கல்லூரி வண்ண விளக்குகளால் மின்னியது. முப்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒரு வார காலமாக நித்தமும் ஒரு விழா, விருந்தினர் என்று அமர்க்களம். இன்று நிறைவு நாள் என்பதால் முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்குபவர்களை அழைத்திருந்தனர். முதல்வரிசையில் வயதில் பெரிய முன்னாள் மாணவர்கள் அமர்ந்திருக்க, இரண்டாம் வரிசையில் எம்.பி என்ற முறையில் முதலில் உட்கார வைக்கப்பட்டிருந்தான் ராஜமகேந்திரன், அவனுக்கடுத்து அவனது அரசியல் ஆலோசகரும் நண்பனுமான ஸ்ரீதரன் இருந்தான்.
அடுத்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, எஸ்.பி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று நீண்ட வரிசையில் அவனுக்குப் பின்னால், மூன்றாம் வரிசையில் மகேந்திரனின் பார்வை பதிந்தது. மெரூன் நிற SUTA BOMBAY புடவையும் அதற்கேற்ப ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட ஜிமிக்கி, கழுத்தையொட்டிய சோக்கர் என்று கச்சிதமாக இருந்தாள் ஒரு பெண்.
“மச்சி பிரசன்னாவோட பிரசன்னத்துக்காகக் காத்திருக்கியோ?” என்று மெல்லிய குரலில் ஸ்ரீதரன் கேட்க, மகேந்திரனோ அமைதியாக ஸ்ரீதரனின் தொடையைக் கிள்ளினான்.
பாவம் ஸ்ரீ, கத்த முடியாமல் கடினப்பட்டான். நண்பனை முறைக்க, “பக்கத்துல ஆளுங்களை வச்சுட்டுப் பேசாதனு உனக்குச் சொல்லியிருக்கேன்.” என்று வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினான்.
ஸ்ரீயும் அதற்குப் பதிலாக குத்துவதுப் போல உள்ள ஸ்மைலியை அனுப்பினான். பிரசன்னாவின் பார்வை இவன் பக்கமாக நகரவே இல்லை. அடுத்துப் பேச மகேந்திரனை அழைத்தனர். எம்.பி’க்குப் பேச சொல்லியா தர வேண்டும். அதுவும் அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிக்காரனுக்கு? அவன் பேச பேச எத்தனை பிரயர்த்தனப்பட்டும் பிரசன்னாவின் கவனம் மெல்ல மெல்ல அவன் பக்கம் சென்றது. தினமும் சவரம் செய்துவிடுவான், அத்தனை சுத்தம். அவன் பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தவளுக்கு ரசிக்க மனமில்லை. மாறாக பயம் அதிகமானது. பேச்சின் இடையில் மகேந்திரன்,
“நம்ம காலேஜ் அவ்வளவு ஸ்டீரிக்ட் இல்லை, நம்மளோட கனவுகளுக்கு நல்லாவே இடம் கொடுப்பாங்க. டியர் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் காலேஜ் லைஃப் முடிஞ்சளவு எஞ்சாய் பண்ணுங்க. அதுக்காக அரியர்ஸ் வச்சிருக்கவன் அறிஞன்னு எல்லாம் அளக்கக் கூடாது. அரியர்ஸ் வரது தப்பில்லை, ஆனா படிக்காம அரியர்ஸ் வந்தா தப்பு. இதே காலேஜ்ல படிச்ச நான் இன்னிக்கு உங்கள்ல ஒருத்தனா நம்மை ரெப்ரஸண்ட் பண்ற ஒருத்தனா பார்லிமண்ட்ல இருக்கேன்.”
“என் ப்ரண்ட் ஸ்ரீதர் நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் என்.என். திவாரிகிட்ட LAMP fellowship’ல செலெக்ட் ஆகி வர்க் பண்ணினார். கடந்த அஞ்சு வருஷமா நம்ம கவர்மெண்ட்டோட முக்கியமான திட்டங்கள்ல, பாலிசிகள்ல அவரோட பங்கும் உண்டு. இப்போ எனக்கு அட்வைஸரா இருக்கார். நான் இன்னிக்கு ஒரு பொலிடிசியனா இருக்கக் காரணம் என் ஃபேமிலி பேக்ரவுண்ட் மட்டும் இல்லை, நம்ம காலேஜ் எலெக்ஷன்ல கூட நான் நின்னுருக்கேன். தோத்துட்டேன், அது வேற விஷயம். ஆனால், என்னோட முதல் தேர்தல் அது! இப்படி எனக்குத் தேர்தல் அனுபவம், நண்பன் மட்டுமில்லாமல் காதல் அனுபவமும் கொடுத்தது நம்ம காலேஜ்” என்று அவன் நிறுத்த மாணவர்கள் அதுவரை சோம்பலாகக் கேட்டவர்கள் உற்சாகமாகக் கைத் தட்டினார்கள்.
“உங்கள்ல சிலருக்குத் தெரிஞ்சிருக்கலாம். என்னோட மிசஸ். பிரசன்னவர்தினியும் நம்ம காலேஜ்தான். அவங்க லா முடிச்சிட்டு, சுப்ரீம் கோர்ட்ல ப்ராக்டீஸ் பண்ணினவங்க. இப்போ பார்ட்டி’ல இருக்காங்க. ஸோ எல்லாமே எனக்கு இங்கதான் கிடைச்சது. உங்களையும் நீங்க மேம்படுத்திக்கணும், லவ் பண்ணினதை சொன்னது எப்படியும் உங்கள்ல சிலருக்குத் தெரிஞ்சிருக்கும்ன்றதால, அண்ட் அது தப்பும் கிடையாது. பட் காலேஜுக்குனு சில ரூல்ஸ் இருக்கு, அதை எப்பவும் மதிச்சு நடக்கணும்! நல்லா படிங்க, நிறைய கத்துக்கோங்க.”
“எங்களைத் தவிர இங்க வந்திருக்க எல்லாரும் ஒவ்வொரு வேலையில சிறப்பான இடத்துல இருக்கவங்க, வராதவங்களும் நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கவங்க. நாங்க எல்லாம் உதாரணங்களா இருக்க மாதிரி நாளைக்கு நீங்களும் இருக்கணும். ஏன்னா இந்தியா இளைஞர்கள் கையில்! நீங்களே கைதட்டி என்னை போன்னு சொல்றதுக்கு முன்னாடி என் ஸ்பிச்சை முடிச்சிக்கிறேன். எல்லாருக்கும் நன்றி” என்று சொல்ல உண்மையில் சீக்கிரம் பேசி முடித்த புண்ணியவான் அவன் என்பதால் மாணவர்களின் கரகோஷம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
மகேந்திரன் பேசி முடிக்கவும் ஸ்ரீதரனும் பிரசன்னாவும் அவனை அதிர்வோடு பார்த்தனர்.
“ரூல்ஸ் எல்லாம் எனக்கில்லை” என்று அராஜகம் செய்ததென்ன? இப்போது அப்படியே மாற்றிப் பேசுவது என்ன என்று பார்த்தான் ஸ்ரீ.
பிரசன்னாவோ, இவனைக் கேட்டார்களா நான் யார் என்று? என் அடையாளம் இவன் மனைவி என்பதுதானா? என்று ஏகத்திற்கும் எரிச்சலானாள். அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததுக்கு வேண்டுமென்றே செய்தான் என்று அவளுக்குப் புரிந்தது. மகேந்திரனோ மயக்கும் புன்னகையோடும் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அவன் இருக்கையில் ஜம்மென்று உட்கார்ந்தான்.
பிரசன்னா அவனை முறைக்க, மகேந்திரனோ ஒற்றைப் புருவம் உயர்த்திப் புன்னகைத்தான்.