Skip to content
Post Views: 1,348
நாம் கேட்ட காலங்கள் – 9
பல வருடங்கள் கழித்து, அன்பழகன் அமராவதியைப் பார்க்கிறார். அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இத்தனை வருடங்கள் அவர்கள் பார்வையில் வரவே இல்லை.
Advertisement
ஆனாலும் திலக் பற்றி அவ்வப்போது விசாரித்து அறிந்துகொள்வார்.
அந்த நிலையிலும் அமராவதி அன்பழகனைப் பார்க்கவும்,
Advertisement
“எப்படி இருக்கீங்கண்ணா?” என்று கேட்டார்.
Advertisement
முகத்தில் கொஞ்சமும் மலர்ச்சி இல்லை. கண்களுக்குக் கீழ் உறக்கம் தொலைத்த அடையாளமாக கருவளையங்கள். உதட்டில் ஒட்ட வைத்த மென்சிரிப்பு.
Advertisement
கொஞ்சமும் கோபமின்றி, துவேஷமின்றி தன்னைப் பார்த்தவளைக் கண்டதும் அன்பழகன் மனத்தில் இதுதான் தோன்றியது.
‘கார்வண்ணன் அவனுக்கு சரியானவளைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்’ என்ற எண்ணம் வந்த அதே நேரம் அவளோடு சேராமல் போனானே என்று நண்பனை நினைத்து உள்ளம் குமுறியது. அதுவும் தன் தந்தையே நண்பனின் மரணத்தின் காரணம் என்பதால் உண்டான குற்றவுணர்ச்சி அவர் உதிரத்தில் கலந்த ஒன்றாகிபோனது.
“இருக்கேன் மா” என்ற அன்பழகன்,
“திலக் எப்படி இருக்கான்? டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க? நம்ம அவனை ஏன் வெளிநாட்ல வச்சு பார்க்க கூடாது?” என்று பரபரப்பாகக் கேட்டார்.
பெருமூச்சு விட்ட அமராவதி, “ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் வந்து பார்த்துட்டாங்கண்ணா, அவன் சீக்கிரம் எங்கிட்ட வந்துடுவான். எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் அழுத்தமாக.
“இல்லம்மா..” என்று நண்பனின் மகன் மீதான அக்கறையில் அன்பழகன் பேச வர ஜீவா அவரை நிறுத்தினான்.
“ப்பா, அத்தை சொல்றாங்க தானே? நீங்க திலக்கைப் பார்த்துட்டு வாங்க. எனக்கு ஒரு கால் பேசணும்” என்றவன் அந்த தளத்தின் காரிடாரில் நின்று பேசியவன் கவனம் எல்லாம் பேசிக்கொண்டிருந்த அழைப்பில்தான்.
உள்ளே சென்று திலக்கை பார்க்க அமராவதியைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. அவரே ஒரு முறை மட்டுமே பார்க்கலாம், கோமாவில் இருப்பவனுக்கு எந்த தொற்றும் வந்துவிடக் கூடாதென்பதில் மருத்துவர்கள் அத்தனை கவனம். வெங்கட கிருஷ்ணன் பெயரனுக்குத் தரப்படும் சிகிச்சையில் சிறு பிசகு வந்தாலும் மன்னிக்க மாட்டார் என்று தெரியும்.
கண்ணாடி வழியே திலக்கின் உருவத்தைக் கண்களில் நிரப்பினார் அன்பழகன். கார்வண்ணனின் நிழல் போல இருந்தான். இவனை சிறு வயதிலிருந்து தூக்கி வளர்த்திட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக எழ, மனத்தை அழுத்தியது.
அந்த அறையின் கதவைப் பிடித்தபடி கண்கள் கலங்க அன்பழகன் திலக்கைப் பார்க்க, அமராவதிக்கு அவரின் வேதனைப் புரிய அமைதியாக இருந்தார்.
கார்வண்ணன் அமராவதியோடு வாழ்ந்த நாட்களை விடவும் அன்பழகனோடு இருந்த நாட்கள் அதிகம். சிறு வயது முதலே நெருங்கிய நட்பு. நண்பனைக் கொன்றது அமராவதி என முதலில் தவறாக நினைத்து அவரையே கொல்லப்பார்த்தார் அன்பழகன். அந்தளவிற்குக் கார்வண்ணன் என்றால் அவருக்கு உயிர்.
அப்படி உயிருக்குயிரான நண்பனை தன் தந்தையே சதி செய்து கொன்றதில் தினமும் குற்றவுணர்வில் அவர் தவிப்பது அவர் வீட்டினரைத் தவிர யாருக்கும் தெரியாது.
வேகமான நடையோடு சத்தம் கேட்க பார்த்தால் பிரபஞ்சன்.
புதிதாக ஒரு நபர் அண்ணனின் அறை வாசலில் நிற்கவும் வேகவேகமாக வந்தவன்,
“பெரியம்மா இவர் யாரு?” என்று கேட்க,
“ஜீவாவோட அப்பா” என்றதும் ரஞ்சன் கொதித்தான்.
“என்ன பெரியம்மா நீங்க? தாத்தா வேற வழியில்லாம அந்த ஜீவாவை கேஸை விசாரிக்க விட்டுட்டார். அதுக்காக இந்தாளை நீங்க அண்ணாவைப் பார்க்க விடுவீங்களா?” என்றவன்
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? எந்த முகத்த வச்சுட்டு இங்க வந்திருக்கீங்க? எங்க பெரியப்பாவைக் கொன்னுட்டு என் அண்ணாவை என்ன செய்யலாம் வந்தீங்க?” என்ற ரஞ்சன் ஆத்திரத்தோடு அன்பழகனின் தோளில் கைவைத்துத் தள்ள பார்க்க,
“ரஞ்சன்” என்று அமராவதி கத்த,
“அப்பா” என்ற குரலில் பிரபஞ்சனும் அமராவதியும் திரும்பினால் அங்கே அர்த்தனா நின்றிருந்தாள்.
அர்த்தனா அன்பழகன்.
“மாமா மேல இருந்து கையை எடு” என்று அமராவதி அதட்ட, ரஞ்சனின் கண்களில் அவ்வளவு ஆவேசம். தன் தலையைக் கோதியவன் முகம் திருப்பிட,
“என்ன தைரியமிருந்தா எங்கப்பா மேல கை வைப்பீங்க?” என்று அர்த்தனா அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
அன்பழகன் ரஞ்சனின் சொற்களில் வெந்து நிற்க, அப்பாவின் அந்த தோற்றம் அர்த்தனாவிடம் தீப்பற்ற வைத்தது.
“பின்ன உங்கப்பா வந்தா ரெட் கார்பெட் வெல்கம் கொடுக்கணுமா?”
ரஞ்சன் எரிச்சல் மண்ட அர்த்தனாவிடம் கேட்க,
“அம்மாடி! பேசாத” என்று அன்பழகன் மகளை அடக்கப்பார்த்து அவளின் கைகளைப் பிடிக்க,
“விடுங்கப்பா, இவன் என்ன செய்றான் நானும் பார்க்கிறேன். உங்களை இப்படி டீரிட் பண்ண யார் ரைட்ஸ் கொடுத்தா?” என்று அர்த்தனா பொரிந்தாள்.
“பார்த்தீங்களா பெரியம்மா, இவ பேச்சை?” என்று ரஞ்சன் அமராவதியிடம் கேட்க,
“ரஞ்சன், அமைதியா இருடா” என்றவர்
“அவன் பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன் மா” அமராவதி சொல்ல, அன்பழகன் மகளை கண்டிப்பாக பார்த்தார்.
“நீ ஏன் அமரா சாரி கேட்குற? இவன் கோவம் எனக்குப் புரியுது” என்ற அன்பழகன் ரஞ்சனிடம் திரும்பி நிமிர்ந்த பார்வையோடு,
“நீ திலக்குக்கு எப்படியோ அப்படித்தான் உன் பெரியப்பா எனக்கு” என்றார்.
“நாங்க கிளம்புறோம் அமரா” என்றபோதுதான் ஜீவா வந்தான்.
‘வரான் பாரு போலிஸ் வழக்கம்போல லேட்டா’ என்று மனத்தினுள் அண்ணனைத் திட்டிய அர்த்தனாவிடம் ஆச்சரியப்பார்வை செலுத்தினான் ஜீவா.
“என்ன நீ இங்க?” என்று தங்கையிடம் விசாரித்தான்.
“இதான் நீ அப்பாவைப் பார்த்துக்கிற லட்சணமா?” அடிக்குரலில் அர்த்தனா அண்ணனிடம் சீறினாள்.
“என்னடி ஆச்சு?” என்று அவன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் விருட்டென்று அங்கிருந்து செருப்பு சத்தம் எழுப்பிட தடதடவென நடந்து சென்றாள். அன்பழகன் முகமும் கலக்கமாக இருக்க, ஜீவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அமராவின் பக்கம் நின்ற ரஞ்சனைப் பார்க்கவும் அவன் நிச்சயம் ஏதோ சொல்லியிருப்பான் என்று ஊகித்தான்.
“வரோம் அத்த” என்று அன்பழகனோடு ஜீவா சென்றுவிட, ரஞ்சனைப் பேசினார் அமராவதி.
“நீ செஞ்ச கலாட்டாவுல அந்த பொண்ணு பெயரைக் கூட நான் கேட்கல, உன் பெரியப்பாவுக்குப் பெண் குழந்தைங்கன்னா எவ்வளவு இஷ்டம் தெரியுமா? அதுவும் அன்பண்ணா பொண்ணை இப்படி அவ இவன்னு நீ பேசுவியா? திலக்கே உன்னை பேசுவான்” என்று திட்டிய அமராவதி உணர்ச்சி மிகுதியில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.
வாட்டத்தின் வடிவமாக பிரபஞ்சனின் முகம் இருந்தது. சொல்ல முடியாத இறுக்கங்கள் அவனை இறுகப்பற்றிய நிலை.
காரில் அப்பாவோடு ஏறி அமர்ந்த அர்த்தனாவுக்கு அவ்வளவு கோபம். ஜீவபிரகாஷ் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த தங்கையிடம் வந்தவன்,
“ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டுப் போ. அந்த பிரபஞ்சன் அப்படித்தான், ராமனுக்கு லஷ்மணன் மாதிரி அவங்க அண்ணனுக்கு அவன். திலக் இப்படியானதுல அவங்க வீட்ல எல்லாருமே இப்படித்தான் நடப்பாங்க தனா” என்று சொல்ல,
“நம்ம அப்பா எவ்வளவு கஷ்டப்படுறார் நமக்குத்தானே டா தெரியும்?” என்ற அர்த்தனாவின் உள்ளம் ஆறவே இல்லை.
தாத்தா செய்த பாவத்தின் பலனை தன் அப்பா நித்தமும் அனுபவிக்கிறார். சந்தோஷம் என்ற ஒன்றே இல்லாத ஒரு வாழ்க்கை.
“ப்ச், விடு. அப்பாவை அழைச்சிட்டுக் கிளம்பு. எனக்குக் கேஸ் வர்க் இருக்கு” என்று ஜீவா தங்கையை அங்கிருந்து கிளப்பியவன் வேகமாக ரமேஷை சந்தித்தான்.
“என்ன ரமேஷ் நீங்க? திலக் கொல்கத்தா போக ப்ளைட் டிக்கெட் புக் பண்ணின விஷயத்தை எப்படி கவனிக்காம வீட்டீங்க?” என்று கோபமாகக் கேட்க,
“இல்ல சார், திலக் எப்பவும் அவரோட ப்ளைட் புக்கிங்ஸ் எல்லாம் அவர் பி.ஏ கபீர்ட்ட கொடுத்துதான் பண்ணுவார். எப்பவும் முன் கூட்டியே ப்ளான் பண்ணின ட்ரிப்ஸ்தான். அவர் சொன்னதால நாங்க செக் பண்ணல. இப்போ நீங்க சொல்லவும் பேங்க் ட்ரான்ஸாக்ஷன்ஸ் பார்த்தா ஏர்லைன் டிக்கெட்டுக்கு அமவுண்ட் டெபிட் ஆகியிருக்கு” என்றதும் ஜீவா யோசிக்க, சேத்தனின் வருகையால் அவன் கவனம் கலைந்தது.
“நைஸ் டூ மீட் யூ ஸர்” என்று சேத்தனிடம் தன்னை அறிமுகம் செய்தான் ஜீவா.
சேத்தனும் ஜீவாவிடம் கைகுலுக்கியவர்,
“என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கேட்க,
“உங்களோட கேஸஸ் நிறைய ஃபாலோ பண்ணிருக்கேன் ஸர்” என்றதும் சேத்தனிடம் அளவான புன்னகை. சேத்தன் வீ.ஆர்.எஸ் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி, எஸ்.பியாக இருந்தவர்.
“சொல்லுங்க ஜீவா, மகேந்திரன் நீங்க என்னை மீட் பண்ணனும் நினைக்கிறதா சொன்னார்” என்று வேலையைப் பற்றி கேட்க,
“திலக் சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் முதல்ல இருந்து விசாரிக்கலாம்னு டீடெய்ல்ஸ் எல்லாம் ட்ராக் பண்ணியிருக்கோம் ஸர். அவரை ஆக்சிடெண்ட் பண்ணின லாரியோட நம்பர் ப்ளேட் போலியானது. அதை வச்சு ட்ராக் பண்ண முடியல. திலக்கை எப்போதுமே கண்காணிச்சிருந்தா மட்டும்தான் இப்படி அவர் போன நேரம் சரியா ஆக்சிடெண்ட் பண்ண முடியும். ஸோ நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“எனக்குத் தெரிஞ்சு யாரும் திலக்கை ஃபாலோ பண்ணல. திலக்கோட ஃபோன் ரெகார்ட்ஸ் பாத்தீங்களா?” என்றபடி மேஜையில் இருந்த கோப்பினை புரட்டினார் சேத்தன்.
“எஸ் ஸார். அந்த நேரம் எந்த கால்ஸும் வரல”
“போனை நான் பார்க்கலாமா?” என்றதும் ரமேஷுக்குக் கண்காட்ட எவிடன்ஸ் வைக்கும் பெட்டியிலிருந்து திலக்கின் அலைப்பேசியை எடுத்துக் கொடுத்தான்.
அதனை ஏற்கெனவே அன்லாக் செய்து ஆராய்ந்திருக்க ஒன்றும் சிக்கவில்லை என்று ரமேஷ் சொல்ல, சேத்தன் ஒரு முறை பார்த்தார்.
“திலக்கோட பேங்க் ஸ்டேட்மெண்ட்ல ஃப்ளைட் டிக்கெட் புக் ஆகியிருக்கு அதுவும் ஆக்சிடெண்ட் ஆகிறதுக்கு ஒன் ஹவர் முன்னாடி” ஜீவா சொல்ல,
“ஸார், அன்னிக்கு எர்லி மார்னிங் ஃப்ளைட் பிடிக்க ட்ரை பண்ணிருக்கலாம். சென்னை டூ கொல்கத்தா அப்போ ஒரு ஃப்ளைட் இருக்கு” என்றான் ரமேஷ்.
சேத்தன் யோசித்தவர் மீண்டும் திலக்கின் போனை ஆராய்ந்தார். இருபது நிமிடங்கள் அவர் அமைதியாக போனைப் பார்த்தார். காஃபி, டீ கொண்டு வர கேட்க, அதனை மறுத்தார்.
“ஜீவா, இந்த ராய்’ன்ற நம்பர் யாரோடது?” என்று ஜீவாவைக் கேள்வியாக பார்க்க, அவன் ரமேஷைப் பார்த்தான்.
இருவருக்குமே தெரியவில்லை. அவர்கள் முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட சேத்தன்,
“இல்லை,கொல்கத்தா ரிலேட்டடா திலக் மொபைல்ல ஒன்னுமில்ல, ஒன்லி திஸ் நம்பர். ராய் இஸ் எ பெங்காலி சர்நேம். ரைட்? பெங்காலி, மஹாராஸ்ட்ரா இன்னும் சில இடங்கள். ஆனா கொல்கத்தாவோட இன்னும் கனெக்ட் ஆகுதே?” என்றதும் ஜீவா உடனே ரமேஷிடம் சொல்லி அந்த எண்ணை விசாரிக்க சொன்னான். மீண்டும் ஒரு இருபது நிமிடங்கள் கழிய, அந்த எண் சுதேந்து ராய் பெயரில் இருந்தது. அந்த பெயரை ரமேஷ் சொல்லவுமே சேத்தன் உடனே,
“சுதேந்துவும் திலக் மாதிரி முதல்முறை எம்.பியானவன். சுதேந்து வெஸ்ட் பெங்கால்’ல” என்று யோசிக்க,
“எஸ், ஜாதவ்பூர் எம்.பி. திலக் மாதிரி இல்லாம ரெண்டு முறையும் அவனுக்கு எம்.பி சீட் கிடைச்சது, ஆனால் சுதேந்து ராய் திலக் கூட்டணி வச்சிருக்க நேஷனல் அப்போஷிசன் பார்ட்டி இல்லையே, மத்திய அரசோட கூட்டணி வச்சிருக்க கொல்கத்தாவை சேர்ந்த கட்சியாச்சே?” என்றான் ஜீவபிரகாஷ்.
“பரவாயில்லையே, உங்க ப்ளட்ல பாலிடிக்ஸ் இன்னும் ஓடுதுனு ப்ரூவ் பண்றீங்க ஜீவா” என்றதும் ஜீவாவின் முகம் மாறியது.
அரசியல் அவன் உதிரத்தில் ஓடுவதை அறவே வெறுப்பவன் அவன். அதற்காகவே படித்து நேர்மையான அதிகாரியாக இருக்கிறான். அதுவும் அரசியலால் அவர்களின் உதிரம் பாவப்பட்டதாக இருக்க, அதற்கு பிராயச்சித்தம் தேட நினைப்பவனுக்கு இந்த பேச்சு கசந்தது.
“ஹேய் ஜீவா! இட்ஸ் ஜஸ்ட் எ காம்ப்ளிமெண்ட்” என்று சேத்தன் அவன் நிலை உணர்ந்து சொல்ல,
“சுதேந்து திலக் எல்லாம் ரொம்ப இளம்வயது எம்.பி’க்கள் சர். ஜாதவ்பூர் யுனிவர்சிட்டி நியூஸ் இப்போ ரிசண்ட்டா படிச்சேன், அதனால ஞாபகமிருக்கு”
“ஓகே, சுதேந்து ராய் கூட அடிக்கடியெல்லாம் திலக் பேசல, நாலு மாசத்துல ஒரே கால். வாட்ஸப்ல நார்ம்லா வாழ்த்து சொல்ற மெசெஜஸ்” என்ற சேத்தனின் பேச்சுக்கு,
“சுதேந்துவை சந்தேகப்பட நமக்கு என்ன காரணமிருக்கு சர்? அவரோட திலக் பேசினது ஆக்சிடெண்ட் ஆகுறதுக்கு மூணு வாரம் முன்னாடி. அதுக்கு அப்புறம் வந்த மெசெஜஸ் கூட நார்மல்” என்று கேட்டான் ஜீவா.
“ப்ளைட் டிக்கெட், போன் கால் எல்லாம் வச்சுப் பார்த்தா திலக் கொல்கத்தா போக நினைச்சிருக்கான்” சேத்தன் சொல்ல,
“பட், வை?” என்ற கேள்வி ஜீவாவிடம்.
ஏன் அங்கு செல்ல நினைத்தான் என்று தெரிந்தால்? யாரால் இது நடந்தது என்று தெரியும். இப்படியாக இவர்கள் யோசிக்க, அங்கே திலக்கை மொத்தமாக முடிக்க சதி நடந்தது.
*****************
அறைக்கு வந்த பிரசன்னா அமைதியாக இருக்க, மகேந்திரன் அவளருகில் பெருமூச்சுடன் உட்கார்ந்தான்.
“எனக்கு ரூம்குள்ள இருந்து ஒரு மாதிரி இருக்கு, வெளியே ட்ரைவ் போகலாம் வரியா?” என்று பிரசன்னாவிடம் கேட்க, அவளுக்கும் மூச்சு முட்டியது.
தலையசைத்தவள்,
“ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்று சொல்லி தயாராகி வர, மகேந்திரன் டீஷர்ட், ட்ராக் பேண்ட்டில் இருந்தான்.
இருவரும் கீழே இறங்க வரும்போது ஹாலில் யாருமில்லை.
“அம்மா, அப்பா தூங்கிட்டாங்க போல. நம்ம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். வெளியே லாக் பண்ணிட்டு வாட்ச் மேன்ட்ட சொல்லிடுவோம்” என்ற மகேந்திரன் மனைவியோடு வெளியே வந்தான்.
கார் பக்கம் சென்றதும் அவளிடம் சாவியை நீட்ட, வெகு நாட்களாகிவிட்டது இப்படி அவனோடு பயணித்து. அதைவிட அவன் காரை ஓட்டி மாதங்களானது.
திலக், பிரபஞ்சன், அவள் அப்பா கவியரசன் மூவருமே பிரசன்னாவிடம் காரைத் தர மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் அறிவுறுத்திக்கொண்டே இருக்க அவளுக்கு அவர்களை வைத்து ஓட்ட வேண்டும் என்ற எண்ணமே போய்விடும்.
கணவன் நீட்டவும் அந்த நொடி அத்தனையும் மறந்து அவனோடு பயணிக்க நினைத்தவள், உற்சாகமாக காரை எடுத்தாள். அவள் கைகள் மஹிந்திரா தார் சீராக சாலையில் செல்ல,
“உடம்பு சரியில்லாத உங்களை இப்படி நைட் ட்ரைவ் அழைச்சிட்டு வந்தது தெரிஞ்சா அத்தை என்னைத் திட்டுவாங்க” பிரசன்னா மெல்ல பேச்செடுக்க,
“நான் பார்த்துக்கிறேன்” என்றான் சிறு புன்னகையோடு.
அந்த புன்னகை அவளை வெகுவாக பாதித்தது. பேசாமல் வண்டியை செலுத்தினாள்.
“என்னடி ஒரு மாதிரி இருக்க?” என்று மகேந்திரன் அவள் அமைதி கண்டு கேட்க,
“ஐ வாண்ட் டூ ஹேட் யூ” என்று பிரசன்னா தீவிரமான குரலில் சொல்ல, ராஜமகேந்திரன் திகைத்தான்.
error: Content is protected !!