Skip to content
Post Views: 37
விடியல் வழக்கம் போல் அதன் கடமையை செய்ய, மெல்ல வீசும் தென்றல் காற்று எங்கிருந்தோ இரவு மல்லியின் வாசத்தை கொண்டு வந்தது.
ரதியும், மாறனும் கிளம்பி வெளியே வர, மாதவன் அவனது காரை கிளப்பிக் கொண்டு வந்தான்.
Advertisement
“என்னடா. காலைல எங்க கிளம்பிட்ட. நிலத்துக்கு போகலையா?”
“இல்லடா. அண்ணன் அன்பு மாமாவோட சென்னைக்கு கிளம்பிருச்சு. நான் தான் திருச்சிக்கு கிளம்பறேன். நீங்களும் ஏறுங்க. திருச்சில என்னை விட்டுட்டு அங்க இருந்து நீங்க சின்னாளப்பட்டிக்கு கார்ல போயிடுங்க.” அவன் சொன்னபோதே மாறனுக்கு புரிந்தது.
Advertisement
Advertisement
ரதியை பார்த்தான். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
மூவரும் திருச்சியை நோக்கி செல்ல, ரேணு மூலம் விஷயம் அறிந்த காஞ்சனா, அதை ராமச்சந்திரனிடம் சொல்ல அவர் மீசையை நீவி விட்டுக் கொண்டு தன் அறையில் போய் கதவடைத்துக் கொண்டார்.
Advertisement
மாதவியின் திருமணத்தை வெகு விரைவில் நடத்த வேண்டும் என்பதே அவரது தற்போதைய லட்சியமாக இருந்தது. அதுவும் ஆண் பிள்ளைகளின் தயவின்றி நடத்த வேண்டும் என்பதற்காக, வந்தவாசியின் மிகப்பெரிய தொழிலதிபரின் மகனுக்கு, மாதவியை பேச முடிவு செய்தார்.
காஞ்சனாவிடமும், கற்பகத்திடம் கூட சொல்லாமல் அவர்களை பெண் பார்க்க வர வைக்க நினைத்தவர், அதை செயல்படுத்த தனியாகவே கிளம்பி சென்றார்.
“அத்தை, நான் வேண்டாதவளா ஆயிட்டேனா. உங்கப்பிள்ளை மாமாவோட சண்டை போட்டா என்னை ஒதுக்கி வைப்பீங்களா?”
ரேணு பஞ்சாயத்தை ஆரம்பித்தாள். அவளுக்கு எல்லாமே குறைந்தபட்ச நேர்மையோடாவது நடக்க வேண்டும் என்று தான் ஆசை. அது மீறப்படும்போது அந்த நிமிடமே அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் அவளுக்கு தலை வெடித்து விடும்.
“ஏன் ரேணு. நாங்க என்ன பண்ணிட்டோம்.? உங்க மாமா கோச்சுக்கிட்டு பேசாம இருக்கறது வழக்கம் தானே.”
“என்னோட நீங்க யாருமே ரெண்டு நாளா சரியா பேசலை.”
“நீ கூடத்தான் நடக்கற எதையும் எங்க கிட்ட முன்கூட்டியே சொல்லல. எங்களுக்கும் மனசு கஷ்டம் இருக்கும் தானே. மருதன், உங்கப்பாவோட கிளம்பறான்னு கூட சொல்லல. அவன் போனதும் சொல்றியே. எங்க பையன் விஷயத்துல நாங்க எதையும் தெரிஞ்சுக்க கூடாதா.?” காஞ்சனா சொல்ல, ரேணுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதே சமயம் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.
நேரே சென்று காஞ்சனாவின் கைகளை பிடித்தாள்.
“ஒரு வாரமா நம்ம வீட்டில நடக்கறது எதுவும் சரியா இல்லத்த. அவரும் பிஸ்னஸ் சரியா போகலைன்னு கவலைல இருக்கார். அப்பா அடுத்து நம்ம தொகுதிக்கு இவரை நிக்க வைக்கலாம்னு உங்க எல்லார் முன்னாடியும் தானே சொன்னார் அத்தை.?”
“அப்போ மருதனை நீ உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு ஐடியா பண்ணிட்ட. ரம்பா அப்பா மாதவனை கூட்டிட்டு போய்ருவார். ஏற்கனவே மாறன் வெளிய போய்ட்டான். இதையெல்லாம் பாத்தும் நாங்க கண்டுக்காம இருக்கனும் இல்ல ரேணு..” படபடவென வார்த்தைகள் பொரிந்து வந்தது கற்பகத்திடமிருந்து.. தனக்கு மட்டும் தான் ஆற்றாமை இருக்கும் என்று நினைத்தவளுக்கு அவர்களிருவரும் எவ்வளவு மனதுக்குள் குமைந்து போயிருக்கின்றனர் என்று புரிந்தது.
ரேணு வாய் திறப்பதற்குள் ரம்பா அங்கு வந்தாள்.
“ஏன் அத்தை மருமகளுங்கனாலே உங்க பிளைங்களை பிரிச்சு கூட்டிட்டு போய்டுவாங்கன்னு தான் நினைப்பீங்களா எல்லா மாமியாரும்?”
“இப்ப நீங்க எல்லாரும் அப்படித்தானே பண்றீங்க. கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைங்களை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வச்சிடனுமா என்ன?” காஞ்சனா வெறுப்பாக கேட்டதும்,
“யாரத்தே அப்படி கூட்டிட்டு போகப்போறாங்க.”
“உங்கப்பாங்களுக்கு பையன் இல்லன்னா மாப்பிள்ளையை பிள்ளையா ஆக்கிக்கலாம்னு எண்ணம் வந்துருச்சே, அதுக்கு அர்த்தம் என்ன?”
ரம்பாவுக்கும் ரேணுவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ரேணுவுக்கு சொல்ல முடியாத துக்கம் மனதை அழுத்தியது.
“அத்தை. எட்டு வருஷமா நான் இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா தான் நடந்துக்கிட்டேன். இத்தனை வருஷத்துல உங்க பிள்ளையை எத்தனை தடவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கேன் சொல்லுங்க. அப்போ எப்படி வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு போய்டுவேன்னு சொல்வீங்க”
“அப்போ நிலமை அப்படியில்லை ரேணு. இப்போ உங்க மாமா உடம்பு சரியில்லன்னு படுத்ததும் எல்லாருக்கும் மனசுக்குள்ள சுயநலம் வந்திடுச்சு, அதுக்காக எங்க பிள்ளைங்களை தாரை வாத்து தரணும்னு எதிர்ப்பாரக்கறது நியாயமா, சொல்லு”
“அத்தே. உங்களுக்கு மாமா மேலயும், உங்க பிள்ளை மேலயும் இருக்கற அக்கறை மாதிரி தானே எங்களுக்கும் எங்க புருஷன் மேலேயும் எங்க பிள்ளைங்க மேலேயும் அக்கறை இருக்கும். அவரோட எதிர்காலத்துக்கு எது நல்லதுன்னு நான் யோசிக்க கூட எனக்கு உரிமை இல்லையா.?”
“யோசிக்கலாம் ரேணு. எப்போ அதை நீங்க தனியா யோசிச்சு முடிவெடுத்திட்டீங்களோ எங்க மேல அப்போ எந்த மரியாதையும் இல்லன்னு தானே அர்த்தம்மா. மாமா எவ்வளவு உடைஞ்சு போய் இருக்கார் தெரியுமா..?”
“அத்தே. மாமா பண்றதுலாம் அப்போ சரியா. இவரை அவருக்கு ஒரு அஸிஸ்டெண்ட் மாதிரி தானே நடத்தினார். நாங்களே தானே கடை நடத்தினோம். அப்பக்கூட பாவம் பாத்து இவரை தனியா விடலையே. மாடு மாதிரி உழைச்சவரு கம்பீரமா ஒரு பதவியில் உட்காரனும்னு நான் நினைக்கறது எப்படி தப்பாகும்?”
ரம்பா, ரேணுவையே பார்த்தாள். காஞ்சனாவுக்கும், கற்பகத்திற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
மனதுக்குள் ஒரு மாயச் சதுரங்கத்தையே உருவாக்கி விடக் கூடியது இந்த பாச வலை. அதில் விழுந்தவர்கள் தோற்றுப்போனவர்களாகவே இருக்கிறார்கள்.
“அத்தே. என்ன இருந்தாலும் இந்த குடும்பத்தை பிரிக்கற எண்ணம் எங்களுக்கு இல்ல.. ஆனா நீங்களா வெளிய அனுப்பினா நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒரு இடம் வேணாமா. அதுக்கு ஒரு அஸ்திவாரம் தான் இப்போ நாங்க பண்றது. ”
“ரம்பா. நல்லா கால் ஊனி நில்லுங்க மா. அதுல யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனா எங்க அஸ்திவாரத்தை ஆட்டம் காண வச்சிடாதீங்க தான் சொல்றோம். அதுவுமில்லாம உங்களை வீட்ட விட்டு அனுப்பனும்னு யாருமே நினைக்கலையே. அப்படி மாமா கோபத்துல சொன்னாலும் நாங்க விட்டிருவோமா.?”
“விட்டுட்டீங்களே அத்தை. ரதியையும் மாறனையும் அம்போன்னு தானே விட்டுட்டீங்க. மாமா கோபத்துல சொன்னா நீங்க ரெண்டு பேரும் அவரை தடுக்கலையே. அவரை மீறி பேச வராத வாய் இப்போ அவருக்கு சப்போர்ட் பண்ணி வாதாடற அளவுக்கு வருதே.”
காஞ்சனாவுக்கும், கற்பகத்திற்கும் முகத்தில் அடித்தால் போன்று இருந்தது.
“ரேணு. நாங்க அவர்ட்ட எவ்வளவோ கொஞ்சினோமே.”
“கெஞ்சினா போதாது அத்தை. ஒரு கட்டத்துக்கு அப்புறமா புருஷனை விட புள்ளைங்க மேல்தான் பாசம் அதிகமாகும். ஆனா உங்க ரெண்டு பேருக்கும் மாமா தான் இப்பவும் முக்கியம்.. பிள்ளைங்க எப்டி போனாலும் கவலை இல்லை. அவர் என்ன தப்பு பண்ணாலும் நீங்க ரெண்டு பேரும் அவர் கூடத்தான் நிக்கறீங்க”
“ரேணு. பிள்ளைங்களுக்கும் அவருக்கும் இடையில் நாங்க படற கஷ்டம் ஆண்டாண்டு காலமா இருக்கு. இன்னிக்கு நேத்தா நாங்க இப்படி இருக்கோம். எதிர்த்து பேசினாலும் அதுல பிரயோஜனம் இல்லையே. உங்களை மாதிரி புருஷனை கைக்குள்ள வைக்க தெரியல. ஏன்னா எங்ககிட்ட உங்க அளவுக்கு பணம் இல்ல.”
“பணத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அத்தை.. மனசு தான் காரணம்.”
“மனசில்லாம தான் இவ்வளவு உங்க கூட போராடறோமா.. ஆனா அப்பவும் நீங்க உங்க முடிவுல மாறப்போறது இல்லையே.”
“இது சும்மா சாக்கு தான் அத்தை. என்னிக்கு மாமா உங்களை விட்டுட்டு உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ண நினைச்சாரோ அன்னிக்கே நீங்க எதிர்த்து நின்னிருக்கனும். எப்போ அக்கா வாழ்க்கையை பங்கு போட உங்களை கல்யாணம் பண்ண நினைச்சாரோ அப்போ நீங்க எதிர்த்து நின்னிருக்கனும். ஆனா உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை அவர் நாசமாக்கனதுக்கு துணையா நின்னிருக்கீங்க. அதுல ஆரம்பிச்சது அவரோட ஆணாத்திக்கத்தனம். அதுக்கு நாங்க பயப்பட மாட்டோம் அத்தை.” ரம்பா கேட்டதும் காஞ்சனா அப்படியே நாற்காலியில் அமர்ந்தார். கற்பகம் பதில் சொல்ல முடியாது அவளையே பார்த்தார்.
ரேணு அதிர்ந்து ரம்பாவின் கையை பிடித்து அமைதி படுத்தினாள்.
“நீங்க விடுங்கக்கா. தவளைங்க கிணத்துல விழுந்தா ஒன்னு மேலே ஏறினாலும் இன்னொன்னு இழுத்து விடுமாம். அப்புறமா அந்த கிணறுதான் எல்லா தவளைங்களுக்கும் சமாதியாகற இடமாம். அப்படித்தான் இருக்கு இவங்க அடிமையா இருக்கறதும் இல்லாம நம்மளையும் அதே குழில தள்ளப்பாக்கறாங்க”
“போதும் ரம்பா. விடு. நாங்கதான் அந்த காலத்து ஆளுங்க. நீங்க நல்லா இருங்க. அது போதும்.”
“அத்தை கோபப்படாம நியாயத்தை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..நீங்க ஒரீ கட்டத்துல மாறித்தான் ஆகணும். இன்னமும் நாங்க என்ன பண்ண முடியும்னு இருக்காதீங்க.” ரேணு சொன்னாலும், அவர்கள் இருவரும் இவர்களை குற்றம் சொல்வது போலத்தான் எடுத்துக் கொண்டார்கள். இருவர் கண்ணிலும் வழியும் கண்ணீரே அதற்கு சாட்சியாக நின்றது.
“அத்தை எதாவது பேசுங்க. நாங்க ஒன்னும் உங்க பிள்ளைங்களை..”
“போதும் ரேணு. உன் பாட்டுக்கு பேசிட்டு போகாத. நாங்க ஒன்னும் உங்க எதிர்காலத்தை பாழாக்க விரும்பல. தாராளமா அவங்கவங்க அவங்க புருஷனை கூப்பிட்டு கிளம்புங்க.நாங்க தனியா இருந்துக்கறோம்.” சட்டென்று காஞ்சனா சொல்லிவிட ரம்பாவுக்கு சுரீரென்று கோபம் ஏறியது.
“பாத்தீங்களா. நீங்களே எங்களை வீட்டை விட்டு போக சொல்றீங்க. அப்போ மாமா எண்ணமும் அதுதானே. நீங்க ரெண்டு பேரும் தான் அத்தை சுயநலமா இருந்திருக்கீங்க. எங்க உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை வீணா போய்டும்னு அசிங்கமா மாமா உங்களை யூஸ் பண்ணிக்க விட்டுட்டீங்க. அதை நியாயப்படுத்த வேற செய்யறீங்க. உங்களை எங்க வீட்டு ஆளுங்க கேவலமா பேசினப்ப கூட நான் சப்போர்ட் பண்ணேன்.. ஆனா நீங்க எங்களை வெளிய போக சொல்லிட்டீங்க இல்ல.. நாங்க போக இடம் இல்லாம இல்ல.. அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க.” என்று விறுவிறுவென்று மாடி ஏறி போனாள். சகோதரிகள் இருவரும் மருமகளின் வார்த்தை அடியில் கதிகலங்கி போனார்கள். அவசரப்பட்டு வார்த்தை விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி அவர்களுக்குள் வர, காஞ்சனா உதட்டை அழுத்தி கடித்து கண்ணீரோடு உள்ளே செல்ல, கற்பகமும் அவர் பின்னே சென்றார்.
ரேணு தான் தான் அவசரப்பட்டு பேசி இப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு எல்லாரையும் கொண்டு வந்து விட்டோமோ என்று கவலைப்பட தொடங்கினாள். ஆனாலும் அவள் மனமும் தங்களை வெளியே போக சொல்லி விட்டார்களே என்று தடுமாறியது.
மனம் எப்போதும் தாறுமாறாக தடுமாறக்கூடியது. அதிலும் நீண்ட நாள் பகிராத அழுத்தங்கள் அதை ஒரு குரங்காக மாற்றி விடுகிறது.
பனிப்போர் ஒன்று நேருக்கு நேர் அனைவரையும் பகையாளிகளாக நிறுத்தி வைத்தது.
error: Content is protected !!