Skip to content
Post Views: 859
மருதனுக்கு எல்லாமே ஏதோ அவசரகதியில் ஆனால் தவறாக நடப்பதாகவே பட்டது. அங்கிருந்தே ரேணுவை பார்த்தான். அவள் கண்களில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றன. ஆனாலும் அவசரப்படாதே என்று ஜாடை காட்டினாள். மருதனும் சரியென்று இரு கண்களையும் மூடித்திறந்தான்.
Advertisement
“அப்பா.. இருங்கப்பா.. முதல்ல எல்லாத்தையும் தீவிரமா விசாரிச்சிட்டு முடிவு பண்ணலாம். இது மூணு பேரோட வாழ்க்கை. சும்மா இருந்த ரதியையும் இழுத்துட்டு வந்து இங்க நிறுத்திட்டு இப்போ அப்படியே அவளை அனுப்புன்னா என்ன பண்ணுவா அவ?”
மருதன் கேட்டதும், மாதவன் அனிச்சையாக தலையை ஆட்டினான். விஸ்வத்தின் முகத்தில் இருந்த பயம், பதற்றம் பாதியாக குறைந்தது.
Advertisement
Advertisement
ரதி, ‘இது என்னடா திரும்பவும் நம்மளை மாட்டி விட பார்க்கிறாங்க.’ என்பதை போல் பார்த்தாள் மருதனை.
“அட ஊர் பெரியவங்கலாம் எதுக்கு இருக்கீங்க.? இப்போ ஒரு முடிவு எடுத்தாகனும், என்ன பண்ணலாம்னு சொல்லுங்க?” அன்புச்செல்வன் கேட்டதும்,
Advertisement
“ஆமா நாங்க முன்ன நின்னு ரதியை மாதவனுக்கு பேசி முடிச்சிருக்கோம். மணவறை வரைக்கும் வந்து ஒரு பொண்ணு கல்யாணம் நின்னா, அப்புறம் அவளை யார் கட்டுவாங்க.? ராமச்சந்திரன் ஐயாவும், அவரா விருப்பப்பட்டு கடனை கூட வேண்டாம்னு எல்லா பத்திரத்தையும் கிழிச்சு போட்டுட்டாரு.. ரதி அவருக்கு மருமகளா வந்தா தானே அந்த தியாகத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கும்?” ஊர் பெரியவர் சொல்ல,
‘இந்த பொறுப்பத்தவன் பேச்சை கேட்டு இருபத்தெட்டு லட்சத்த வேணாம்னு சொல்லிட்டேனே. இப்ப அதை எப்படி வசூல் பண்றது? ஹ்ம்ம் முப்பது கோடி வரப்ப லட்சமெல்லாம் சாதாரணம் தான். போனா போகுதுன்னு விட்டாத்தான் இந்த ரம்பாவை மாதவனுக்கு கல்யாணம் பண்ண முடியும்… நாமளா வேணாம்னு எதுக்கு சொல்லனும்.. வீசிப்பாப்போம்.. வந்தா மலை.போனா….’ என அவசரமாக யோசித்த ராமச்சந்திரன்,
“அட என்ன பெரிய பணம். அந்த பொண்ணு எங்களுக்காக மாதவனை கல்யாணம் பண்ண வந்துச்சு. அதுக்காக நான் பண்ணதை தியாகம்னுலாம் சொல்லாதீங்க. அவங்களால எப்போ திரும்ப குடுக்க முடியமோ அப்போ அதை கொடுக்கட்டும். இப்போ ஒன்னும் அவசரமில்ல. முதல்ல பாதிக்கப்பட்ட பொண்ணுக்காக தான் நாம பாக்கனும்” ராமச்சந்திரன் சொல்ல சொல்ல, விஸ்வத்திற்கு மயக்கம் வராத குறைதான்.
“அது அப்படி இல்லை ராமச்சந்திரா. இந்த பொண்ணு பாதிக்கப்பட்டதுன்னா, ரதியும் தானே பாதிக்கப்பட்டவ. அவ வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்ல. சரி, நடந்தது நடந்து போச்சு. மாதவனுக்கு இந்த ரம்பாவை கல்யாணம் பண்றது தான் சரி. ஆனா அதுக்கு முன்னாடி ரதி கல்யாணம் நின்னதா இருக்க கூடாது. இதே முகூர்த்தத்தில கல்யாணம் நடக்கனும். யாராவது இங்க வந்திருக்கவங்களே ரதிய கல்யாணம் பண்ண முன்வந்தா அவங்களுக்கு முதல்ல அவளை கட்டி கொடுப்போம்.” அன்புச் செல்வன் சொல்ல அத்தனை பேரும் சரியென்று தலையாட்டினர்.
ரதி கூட்டத்தின் முன் பேச தயங்கினாள். மருதனிடம் மெதுவாக, “இல்ல எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் இப்படியே எங்க வீட்டுக்கு போறேன். அவர் கல்யாணத்தை முதல்ல முடிங்க” அவள் சொல்ல, மருதனுக்கு பாவமாக இருந்தது. மாதவனை ஒரு முறை முறைத்தான். அவனோ ரம்பாவை திரும்பி முறைக்க, அவள் பதிலுக்கு அவனை கேவலமாக பார்த்தாள்.
“அண்ணா, எனக்கு ரதி தான் வேணும்ணா. இவளுக்கு எதாவது குடுத்து அனுப்பிடலாம்ணா” மாதவன், மருதனிடம் சொல்ல,
“செருப்பை வெளிய விட்டிருக்கேன்னு பாக்கிறேன். இத்தனை நாள் ஏதோ அடிதடி, பொண்ணுங்க கிட்ட தகராறு பண்றேன்னு சகிச்சிட்டு இருந்தா, இப்போ ஒரு பொண்ணை ஏமாத்திருக்க. அந்த குற்ற உணர்ச்சியே இல்லாம அடுத்த பொண்ணை கட்டனும்னு சொல்ற, மரியாதையா ரம்பாவை கல்யாணம் பண்ற வழியை பாரு. இல்ல, அப்பா சொத்துல ஒரு பைசா கூட உனக்கு வராது. ரதியும் இனி உன்னை கல்யாணம் பண்ண மாட்டா.. எப்படி வசதின்னு பாத்துக்க”
மாதவனுக்கு பகீரென்றது. இத்தனை நாள் இருந்த வசதி வாய்ப்புகள் இல்லையன்றால் தான் ஒரு மனிதனாக மதிக்கப்பட மாட்டோம் என்று தெளிவாக தெரிந்தது. பெருமூச்சோடு ரதியை பார்த்தான்.
“என்னப்பா படிச்ச பொண்ணு, கண்ணுக்கு லட்சணமா இருக்கு, அது போட்டிருக்க நகையெல்லாம் கூட அதுக்கு தான். வேணும்னா சீர் கூட நாங்களே வாங்கி தரோம். அப்படியிருந்தும் ஒருத்தரும் முன் வர மாட்டேங்கறீங்க” அன்புச்செல்வன் கேட்க கூட்டம் அமைதியாகவே இருந்தது.
ராமச்சந்திரன் வேறு, ‘அட நகைகளை கழட்டாம விட்டது தப்பாச்சே, இந்த வீட்டு பொம்பளைங்களுக்கு அறிவு இருக்கா, கல்யாணத்தை நிறுத்தறோம்னு பேசறப்பவே ரதிட்ட இருந்து நகைகளை வாங்கியிருக்க வேணாமா, துப்புக் கெட்டதுங்க..’ என்று மனைவிகளை பார்த்தார்.
ரதிக்கு தான் ஏதோ ஏலத்தில் நிற்க வைக்கப்பட்ட பொருள் போல இருந்தது. மருதனை பார்த்தாள். அவன் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தான்.
மெளனங்கள் நிமிடங்களாக கரைய, இதற்கு மேல் எப்படி பேசாமலிருப்பது என்று,
“எனக்கு இப்போ கல்யாணம்..” ரதி சொல்லும்போதே,
“நான் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்று சத்தம் வர,
‘யார்ரா அந்த தியாகி’ என்று ராமச்சந்திரன் திரும்பினார். கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. வார்த்தைகள் தடித்து வர விரும்பின. ஆனால் எல்லா ‘ன’க்களும் ஊர்ப்பெரியவர்கள் அன்புச்செல்வனோடு சேர்ந்து கைத்தட்டியதால் அப்படியே நின்றன.
மருதனும், மாதவனும் புருவங்கள் உயர பார்த்தனர். ரம்பாவும், ரேணுவும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால் மகிழ்ச்சியடைந்தனர். ரம்பாவுக்கு அவனை யாரென்று தெரியவில்லை என்றாலும் யாரோ ஒருவர் அவளுக்கு வாழ்வளிக்க முன் வந்தாரே என்று மகிழ்ந்தாள்.
ரேணுவுக்கு அத்தனை மகிழ்ச்சி.
ஆம்.. எதிரில் முன் வந்தவன் மாறன்.
“அட சின்ன மாப்பிள்ளை. நியாயப்படி நாங்களே இந்த முடிவை தான் எடுத்திருக்கனும். பரவால்ல, நீயே முன்வந்திருக்க.. நல்ல முடிவு மாப்பிள்ளை.” என்று அன்புச்செல்வன் தட்டிக் கொடுக்க,
“அப்புறம் என்னப்பா, ரதி ஐயா வீட்டு மருமகளா தான் ஆகப்போறா. விஸ்வம் கவலையை விடு. உன் பொண்ணுக்கு பெரிய நாயகி துணையா நின்னுட்டே இருக்காப்பா” ஊர்ப்பெரியவர் ஒருவர் சொல்ல, விஸ்வத்திற்கு பரம நிம்மதி.
ரதிக்கோ, ‘இதென்னடா, இத்தனை விஷயங்கள் தாறுமாறாக நடக்கிறதே.. இது அற்புதமா? இல்லை ஆப்பா..மாதவனை பற்றியாவது ஓரளவுக்கு தெரியும். இவன் யாரென்றே தெரியாதே’ என்று யோசித்தாள்.
‘எப்படியாவது இதை நிறுத்தி விட்டு வீட்டுக்கு ஓடி விடவேண்டும்’ என்று நினைத்து மீண்டும் வாயை திறக்க போனவளை, அவள் இருபக்கமும் கைகளை பிடித்துக் கொண்டனர் அவளின் தோழிகள்.
“ரதி, எப்படியோ அந்த மாதவன்ட்ட இருந்து தப்பிச்சிட்ட. இந்த மாறனை கல்யாணம் பண்ணிக்க, இவர் இன்ஜினியரிங் படிச்சவர். அதோட ரொம்ப நல்ல பையன்னு கேள்வி பட்டிருக்கோம். மருதன் அண்ணன் மாதிரி நல்லவருன்னு ஊர்ல பேசிக்கறாங்க. எதுவும் சொல்லாம கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. அப்பாவே எத்தனையோ வருஷம் கழிச்சு இப்போதான் சந்தோஷமா இருக்கார். அதை கெடுத்துக்காத.” அவர்கள் அவள் கையை அழுத்தி சொல்லவும் தந்தையை பார்த்தாள். அவர் முகம் தெளிவாக இருந்தது. ‘சரின்னு சொல்லும்மா’ என்று இறைஞ்சும் அவர் பார்வையை பார்த்தாள். ‘என்ன சொல்லி இதற்கு மேல் இந்த திருமணத்தை நிறுத்துவது’ என்று அமைதியாக நின்றாள்.
“அதெப்படி அண்ணனுக்கு பார்த்த பொண்ணை இவன் கல்யாணம் பண்ணிப்பான். இதுக்கு எல்லாரும் வேற சரின்னு சொல்றீங்க. நாம வேற பையனை பார்த்து பொறுமையா கல்யாணம் பண்ணலாம். இப்போ மாதவன் கல்யாணம் நடக்கட்டும்.” ராமச்சந்திரன் சொல்ல,
“அப்பா.. அண்ணன் தான் அவங்களை வேணும்னு சொல்லுச்சு. அவங்களுக்கு விருப்பமில்லை இல்ல. நிச்சயம் கூட பண்ணல. ஒரு நிமிஷம் அண்ணன் பக்கத்துல உட்கார்ந்தாங்க. அவ்ளோ தானே.. எனக்கு இவங்களை பிடிச்சிருக்கு. நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்று மாறன் சொல்ல ராமச்சந்திரன் பற்களை நறநறத்தது மருதனுக்கு கேட்டது.
“அட வெக்கமில்ல உனக்கு. அவளை என்னிக்கு உன் அண்ணனுக்கு பேசினோமோ அப்பவே அவ அண்ணி முறைதான். இந்த கல்யாணம் சரி வராது.”
ராமச்சந்திரன் கோபமாக சொல்ல, ரதிக்கு அவமானமாக இருந்தது. அவளின் தோழிகள் அவளை தோளை அழுத்தி பிடித்துக் கொண்டதால் அப்படியே நின்றாள்.
‘திருமண சந்தையில் விற்பனை பண்டமாக தான் பெண்ணை பார்க்கிறார்கள். இது என்றென்றும் மாறப்போவதில்லை.’ ரதிக்கு அத்தனை பேரும் தன்னையே பாவமாக பார்ப்பதை போல் இருந்தது.
“அப்பா, இதெல்லாம் இப்போ பேசற பேச்சா? மாறன், ரதியை கல்யாணம் பண்ணிக்கறது சரி தான். மாதவா, மாறா ரெண்டு பேரும் போய் மேடையில் உட்காருங்க. இன்னொரு தாலிக்கு தான் ஏற்பாடு பண்ணனும். இதோ வந்திடறேன்.” என்று மருதன் யாரையும் பொருட்படுத்தாமல் கிளம்ப, ராமச்சந்திரன் தன் இரு மனைவிகளிடமும் போய் நின்றார்.
“அறிவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும். இந்த பொண்ணோட கல்யாணம் நடக்க கூடாதுன்னு கடவுளா பாத்து தடுத்திட்டான்னு நான் நினைச்சிட்டு இருந்தா, இந்த மாறன் பய அவன் இஷ்டத்துக்கு பண்றான். மருதனும் அவன் பேச்சுக்கு ஆடறான். நீங்க ரெண்டு பேரும் வாயை பாத்துட்டு நிக்கறீங்க. ஒழுங்கு மரியாதையா மாறனை கூப்பிட்டுட்டு போய் இந்த கல்யாணம் வேணாம்னு புரிய வைங்க. அப்படியே அந்த நகைகளைலாம் கழட்டி வாங்குங்க”
“அது இல்லங்க. அந்த பொண்ணு நம்ம மருமகளா வரணும்னு தான் கடவுள் இப்படி நடத்தறாரோ என்னமோ?” கற்பகம் சொல்ல,
“ஓஹோ.. என்னையே எதிர்த்துப் பேசற அளவுக்கு வந்திட்டியா.? நான் சொல்றதை மட்டும் நீ செய்” கண்ணை உருட்டி அவர் சொன்னதும், கற்பகத்திற்கும், காஞ்சனாவிற்கும் வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை.
அவர் சொன்னபடியே மாறனை கூப்பிட்டு அவர்கள் சொன்னதும், அவன் நேராக ராமச்சந்திரனிடம் சென்றான்.
“அப்பா. நான் ரதியை கல்யாணம் பண்ணிக்கறதுல உறுதியா இருக்கேன். இந்த விஷயத்தில் ஊரே இதுக்கு சரின்னு சொல்றப்ப நீங்க ஏன்ப்பா மறுப்பு சொல்றீங்க.?”
“உங்க அண்ணனுக்கு எவ்வளவு வசதியான வீட்டில் பொண்ணு எடுத்திருக்கேன். மாதவனுக்கு கடவுளா பாத்து பெரிய இடத்தை காமிச்சிருக்கார். உனக்கு மட்டும் ஏன்டா பிச்சைக்கார வீட்டு பொண்ணு. நாளைக்கு உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்னா அதுவும் நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி தான பாக்கனும். அப்போ இந்த பொண்ணை பத்தி தெரிஞ்சா எப்படி நம்ம வீட்டுல பொண்ணெடுப்பாங்க.?”
“ மாதவனுக்கு ரதியை கல்யாணம் பண்ணியிருந்தா அப்போ என்ன பண்ணியிருப்பீங்க?”
“ஹ்ம்ம். அதான் நடக்கலையே. நீ போய் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு அவங்களை கிளம்பி போக சொல்லு. சரியா?”
“அப்பா. ஒரு பொண்ணோட சாபத்தில மாதவன் வாழ்க்கை தொடங்க வேணாம்பா. நான் ரதியை கல்யாணம் பண்ணிக்கறேன். மாதவி வாழ்க்கையை இது எந்த விதத்திலும் பாதிக்காது.”
“ஓ.. அப்ப முடிவு பண்ணிட்ட. ஆனா ஒன்னு ஞாபகம் வச்சிக்க, நீ அவளை கல்யாணம் பண்ணா என் சொத்துல இருந்து ஒரு பைசாக்கூட உனக்கு கிடைக்காது. அந்த தரித்திரத்தோட சேர்ந்து நீயும் பிச்சை எடு. அப்போ தெரியும் பணத்தோட அருமை.” அவர் சொன்னதும் மாறன் முகம் மாறியது.
“பணத்தின் அருமை தெரிஞ்சதால்தான் இந்த முடிவை எடுத்திருக்கேம்பா. ரதியை இப்போ திருப்பி அனுப்பினா நாளைக்கே ஒரு காரணம் சொல்லி அவங்க கிட்ட குடுத்த பணத்தை வட்டி போட்டு வாங்குவீங்க. இல்ல அவங்க சொத்தை வாங்குவீங்க. உங்க பிடிவாதத்துக்காக மணமேடை ஏறி அசிங்கப்பட்டு அதுக்கு பின்னாடி சொத்தையும் இழந்திட்டு அவ என்ன பண்ணுவா? என்னை படிக்க வச்சிருக்கீங்க. அது போதும் பா. அதுவே பெரிய சொத்து. ரதியோட என் வாழ்க்கையை அதை நம்பி ஆரம்பிக்கிறேன்.”
மாறன் படபடவென்று பேசியதும் ராமச்சந்திரனுக்கு வியர்த்துக் கொட்டியது.
அதற்குள் மருதன் வந்து விட, ஒரு பக்கம் மாதவன், ரம்பா மறுபக்கம் மாறன், ரதி திருமணங்கள் நடந்து முடிந்தன.
ராமச்சந்திரனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், ஒரு பக்கம் வெறுப்பும் ஒரு சேர வந்தது.
வந்திருந்தவர்கள் வாயார வாழ்த்தி, வயிறார சாப்பிட்டு கிளம்பினர்.
அனைவரும் வீட்டிற்கு வர, ஆர்த்தி தட்டுகள் மணமக்களை வரவேற்றன.
அன்புச்செல்வம், திருத்தாண்டவம் இருவரும் அதற்குள் நண்பர்களாக ஆக, அவர்களுக்கு இடையில் மாதவனும், மாறனும் மாட்டிக் கொண்டனர். இருவரையும் கலாய்த்து தள்ளினர் புது நண்பர்கள்.
“மாதவா உனக்கு ரெண்டு பாட்டை டெடிக்கேட் பண்ணனும். என்னன்னு கேளு..” அன்புச்செல்வம் சொன்னதும் மாதவன் தர்மச்சங்கடத்துடன் அவரை பார்த்தான்.
“கங்கை கரை தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே.. அது அப்போ.. இப்போ நந்தவனத்தில் ஒரு ஆண்டி.அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி.. அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி.. “ ரெண்டும் உனக்கு அப்பிடி பொருந்தும். ஆனா உண்மையை உணர்ந்துட்டு இனிமேலாவது உங்க மாமனாரை பிடிச்சிட்டு நல்ல நிலைக்கு வரப்பாரு.” அன்புச்செல்வம் சொல்லியதும்,
“அட என்ன ஒரே மருமகனை இப்பிடியே விட்டிருவனா.. நீங்க வேணா பாருங்க. இன்னியிலருந்து இவரோட தலையெழுத்தை என் பொண்ணு கையால மாத்தி எழுதிருக்கேன். எப்பிடி வரப்போறாரு பாருங்க..” திருத்தாண்டவம் சொல்லி சிரித்தார்.
“மாறா.. நீ இன்னிக்கு பண்ணது உண்மையிலேயே பெரிய விஷயம் பா. உனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்ட்ட கேளு. நான் எப்பவும் உனக்காக நிப்பேன்..” அன்புச் செல்வம் அவனை அருகில் அமர்த்தி சொன்னதும்,
“ஆமா தம்பி. எங்க என் பொண்ணு கல்யாணத்துக்கு ஊர்க்காரங்க தடை சொல்லிருவாங்களோன்னு நினைச்சேன். ஆனா அந்த சமயத்தில் நீங்க வந்து நின்னீங்க பாருங்க. அந்த நன்றிக்கடனுக்கு நான் உங்களுக்கு எதுவும் செய்ய தயாரா இருக்கேன். எப்ப வேணா என்கிட்ட நீங்க கேட்கலாம்.” திருத்தாண்டவமும் அவர் பங்குக்கு சொல்ல, இருவரையும் பார்த்து தலையசைத்து வைத்தான்.
அதற்குள் வீட்டில் இருந்த அறைகள் மும்முரமாக இரவு சடங்கிற்காக அலங்கரிக்கப்பட, ராமச்சந்திரன் ஒரு வித எரிச்சலோடே அனைவரிடமும் பேசினார். அன்புச் செல்வனும், திருத்தாண்டவமும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.
மாதவனையும் மாறனையும் அவரவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தான் மருதன். ரம்பாவையும், ரதியையும் அலங்கரித்து அனுப்பி விட்டு தங்கள் அறைக்கு வந்தாள் ரேணுகா.
“அம்மாடி இன்னிக்கு என்னலாம் கடகடன்னு நடந்து முடிஞ்சிருச்சு. நம்பவே முடியல..இல்லங்க..ஆனா மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு, நிம்மதியாவும் இருக்கு” என்று மருதன் அருகில் வந்து அமர்ந்தாள் ரேணு.
“ஆமாடி.. பொண்டாட்டி. எப்படி நடக்கனுமோ அப்படி நடந்துச்சு. இனி நடக்க வேண்டியது நல்லதா நடக்கட்டும்..” என்று அவளை அணைத்தபடி, அவளது கன்னங்களில் தன் கன்னங்களை இழைத்த படி சொன்னான் மருதன்.
“உங்கப்பா எப்படி ரதியை மாறன் கட்டிக்க சம்மதிச்சார்னு தான் புரியாத புதிர். ஆனா நீங்க சமயத்தில் அப்பாவை எதிர்த்து பேசினீங்க இல்ல.. அதான் அவர் பேச்சு எடுபடாம போனதுக்கு காரணம்..”
“உன் பேச்சை நான் கேட்கல கேட்கலன்னு சொல்லுவ இல்ல.. இப்போ பாத்தியா அந்த ரதி பொண்ணுக்கு நீ நல்லது நடக்கனும்னு நினைச்சதை நான் நடத்தி வச்சிட்டேன்.”என்று அவளின் கண்களில் இதழ்களை பதித்துக் கொண்டே சொன்னான்.
“அதெல்லாம் சரி தான். என்னமோ நமக்கு தான் ஃப்ர்ஸ்ட் நைட் மாதிரி இப்போ வந்து எழையறீங்க..பசங்க வந்திட போறாங்க”
“நமக்கெல்லாம் நினைச்சா ஃபர்ஸ்ட் நைட் தான். பசங்க தூங்கி ரெண்டு மணி நேரமாச்சு ரேணு…” என்று அவளின் இதழ்களை நெருங்கி அதில் அவனது இதழ்களால் அவளது ஒவ்வொரு இதழ் வரியையும் படித்தான்.
“உன்பேரை ரேணுன்னு வைக்கறதுக்கு பதில் தேனுன்னு வச்சிருக்கலாம்..” என்று சொன்னபடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் மருதன்.
“ஓ ஏனாம்..”
“ம்ம். இந்த இதழ் தேனூறுது. அதனால் தான் சொன்னேன்”
“ஊரும்.. ஊரும்.” என்று அவள் நகர, எட்டிப்பிடித்து அவளை தன் பிடிக்குள் கொண்டு வந்தான்.
“பயங்கர டயர்டா இருக்கேன், நீங்க என்னடான்னா” என்று அவனின் கைகளை எடுத்து விட, அவள் தாடையை பிடித்து திருப்பி, அவன் முகத்தின் அருகில் அவள் முகத்தை கொண்டு வந்தான்.
“என்ன”
“டயர்டா இருக்க மாதிரி தான் இருக்கு.. ஆனா இந்த மருதனை வேணாம்னு சொல்லலையே இந்த கண்கள்..”
“ம்ம் ஹ்ம்ம்…இல்லையே”
“காட்டிக் கொடுக்கிறதே… கண்ணே காட்டிக் கொடுக்கிறதே..” என்று அவளின் கண்களை சுற்றி ஒற்றை விரலால் சுற்றிய படியே அவன் பாட,
“இத்தனை நாளா பாக்கற முகம் தானே.. என்னவோ புதுசா பாக்கற மாதிரி பாத்துட்டே இருக்கீங்க
..”
“கண் கொட்ட முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்” என்று அவனின் விரல்களால் அவள் மேனி அளந்தான்.
“எப்படா நேரம் கிடைக்கும்னு காத்துட்டு இருந்து இந்த வேலையை தான் ஆரம்பிப்பீங்க.. உங்களை எல்லாரும் நல்லவன், வல்லவன்னு சொல்றாங்க..”
“உண்மையில் நானும் யோக்கியன் தானடி உன்னை பார்க்கும் வரை”
“ம்ம்.. அயோக்கியன் தான் நீங்க இந்த விஷயத்திலன்னு தெரியுமே..” என்றவளின் இதழ்களை வருடி அவனுள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
கடலின் அலைகள் போல் அவனது தழுவல்கள் இருந்தன. ஆர்ப்பரித்து வரும் அவனின் அன்பை நிலமகள் போல அவள் ஏற்றுக்கொண்டாள்.
இருவரின் அன்னியோன்யத்தில் இறுகித்தளர்ந்தனர்.
தளர்ந்திருந்த அவனை நகர்த்தி, அவளது ஆடைகளையும் சரிசெய்து, எழுந்து ஜன்னலின் திரைச்சீலைகளை நகர்த்தினாள்.
அவள் பின்னே எழுந்து வந்து அவளது இடுப்பில் தனது இருகைகளையும் சுற்றிப் பிடித்து, கழுத்தில் வாசம் பிடித்தான்.
தூரத்தில் நிலாவும், அதன் அருகில் ஏழு நட்சத்திரங்களும் இருந்தன.
“அங்க பாத்தீங்களா, நிலாவும் செவன் ஸிஸ்டர்ஸூம். ரொம்ப ரேராதான் இப்படி நம்ம கண்களுக்கு தெரியும்..” ரேணு சொல்ல சொல்ல,
“அது நீயும்…”
“நானும்..”
“என் முத்தங்களும்.. உன்னை சுத்திட்டே இருப்பேன். எப்பவும் இப்படி கொடுத்திட்டே இருப்பேன்.” என்று அவளின் முகத்தை கையிலேந்தி இதழ்களை எண்ணிக்கையில்லாமல் பதித்துக் கொண்டே இருந்தான்.
“செவன் ஸ்டார்ஸூன்னா ஏழு முத்தங்கள் தானே..”
“அது ரொம்ப தூரத்தில் இருக்கு இல்ல. கிட்டப் போய் பார்த்தா நிலாவை சுத்தி லட்சக்கணக்கான ஸ்டார்ஸ் இருக்கும். அதனால் தான் கணக்கில் அடங்காத முத்தங்கள் கொடுக்கறேன். என் ஆயுள் முழுசும் கொடுத்துட்டே இருந்தாலும் அந்த எண்ணிக்கையை என்னால் எட்ட முடியாது ரேணு..”
அவனது கைகளை தனது இடுப்பில் இருந்து எடுத்து அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து, அவனது இதழில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.
சில நொடிகளுக்கு பின் இருவரும் ஆசுவாசமாக,
“என்னோட அத்தனை முத்தங்களுக்கும் ஈடு இணை இந்த ஒரே முத்தம் டி.”
“ஏன்னா நிலா ஒன்னு தானே.. அதான்..”
“அப்படியா..” என்று அவளை இரு கரங்களில் ஏந்தி, தட்டாமலை சுற்றினான். அந்த இரவு அவர்களுக்கானதானது.
error: Content is protected !!