திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குறிஞ்சி ஆண்டவர் கோவில் இப்போது குழப்பமாக மாறியிருந்தது.பெண்களின் அழுகுரல்…ஆண்களின் பதற்றமான பேச்சு…நாதஸ்வரம் நின்றுவிட்ட அமைதி…எல்லாமே சேர்ந்து அந்த இடத்தின் சூழலையே மாற்றியிருந்தது.
பூபதி மெதுவாக கோவிலின் உள்ளே செல்ல…சுந்தரம் மணமகனிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஒல்லியான தேகம்…மீசையை முறுக்கி விட்டிருந்தான்.முகத்தில் கொஞ்சமும் இரக்கமில்லாத இறுக்கம்.
மணமகனின் வீட்டார் “நீங்க பேசுன வரதட்சணையே பாதிதான் கொடுத்து இருக்கீங்க…எப்படி உங்கள நம்பி நாங்க உங்க பொண்ணை கட்டிட்டு போறது?” என அவரிடம் கேள்விகளை தொடுத்தனர்
ஆனால் மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்லியும் கேட்கவில்லை.”இப்போ எல்லாம் நல்லாதான் பேசுவீங்க. நாளைக்கும் இதே மாதிரி கையே பிசைஞ்சிட்டு நின்னா நாங்க என்ன பண்றது.இப்போவே ஒரு லட்சம் ரொக்கமும்,காரும் கொடுத்தா உடனே கல்யாணம் நடக்கும்.இல்லையா நாங்க இப்போவே கிளம்பறோம்.”என விடாப்பிடியாக நின்றனர்.
பூபதியின் பார்வை மணமேடையில் அமைதியாக அமர்ந்திருந்த மணப்பெணை நோக்கிச் சென்றது.
ஒல்லியாகவும் இல்லை பருமனாகவும் இல்லை.நல்ல நிறமும் இல்லை. கருப்பும் இல்லை. அவளது உதடுகளை விட கண்கள் அதிகம் பேசியது.சில நொடிகளில் பேச்சு தீவிரமடையவே மணப்பெண் மணமேடையை விட்டு எழ முயல.சுற்றி இருந்த பெண்கள்,இப்போ எதுக்கு எழுந்திருக்கறே? “வேணாம்! மணமேடையில உட்கார்ந்துட்டு எழறது நல்லதல்ல.கொஞ்சம் பொறுமையா இரு!”என அவளைத் தடுத்து மீண்டும் அமர வைத்தனர்.
Advertisement
அந்தச் சூழ்நிலையைப் பார்த்த பூபதியால் அமைதியாக இருக்க முடியவில்லை.முன்னால் சென்று மணமகனைப் பார்த்து, “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க.பெண் வீட்டார் உங்களுக்குத் தர வேண்டிய பணத்துக்கு நான் பொறுப்பு. இப்போ வந்து மணமேடையில உட்காருங்க.” என்றான்.
Advertisement
மணமகன் அவனை பார்த்து ஏளனமாக சிரித்தபடி,”இப்படி ஒன்னும் இல்லாதவங்க வீட்டுல பொண்ணு எடுக்க நாங்க ஒன்னும் அவ்வளவு நல்லவங்க இல்ல.”என்றான்.
பூபதிக்கு கோபம் தலைக்கேறியது.
“என்னப்பா பேசுறே? கொஞ்சம் யோசிச்சுப் பேசு. பணம் காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். ஒரு பொண்ணை மணமேடை வரைக்கும் கூட்டிட்டு வந்து இப்படி அவமானப்படுத்துறது நல்லாவா இருக்கு?”
“யோவ்! எனக்கு பணம் காசு தான்யா முக்கியம்.”என்றான் மாப்பிள்ளை.
Advertisement
அந்த வார்த்தைகள் பூபதியின் காதில் விழுந்த அடுத்த நொடி, அவனுடைய முகம் இறுகியது.
“ஒரு பொண்ணோட வாழ்க்கையை உன்னோட பணத்தாசைக்காக விளையாட்டா நினைக்கிறியா? இவ்வளவு நேரம் உன்னைக் கெஞ்சிக்கிட்டிருக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்தாவது உனக்குக் கொஞ்சம் இரக்கம் வர வேண்டாமா?”
“எனக்கு இரக்கமெல்லாம் வரல. எனக்குக் கொடுக்க வேண்டிய பணம் வந்தாதான் கல்யாணம். இல்லன்னா நான் கிளம்புறேன். இனிமே இந்தப் பொண்ணை யாரு கட்டிக்க வராங்கனு நானும் பாக்கிறே!”
அந்தக் கடைசி வார்த்தை பூபதியின் பொறுமையை முற்றிலுமாகச் சோதித்தது.
என்னய்யா சொல்றே?கல்யாணம்கறது வெறும் பணம் நகை மட்டுமா?அன்பு பாசம் நேசம் எல்லாம் கலந்தது.
“ஒரு பெண்ணைப் பெத்து வளத்தி, அவளைப் படிக்க வெச்சு, அவளுக்குன்னு ஒரு துணையைத் தேடிக் கொடுக்கும்போது… அவள பெத்தவங்க எதுக்குய்யா வரதட்சணை கொடுக்கணும்?
காலம் பூரா உன் துணிமணியைத் துவைச்சு, உனக்கு மட்டுமில்லாம உன் வீட்டுல இருக்கிற அத்தனை பேருக்கும் சமைச்சுப் போட்டு, உன் குடும்பத்தையும் பாத்துக்கப் போறவளுக்கு… நீதான்யா அவள பெத்தவங்களுக்கு வரதட்சணை கொடுத்து உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும்!”
பின் சுந்தரத்தை நோக்கி,”வேண்டாம்! இப்படி ஒரு மாப்பிள்ளை உங்க பொண்ணுக்கு வேண்டாம்.பணம் பதவி எது மேலையும் ஆசை இல்லாத ஒருத்தனை உங்க பொண்ணுக்கு பாருங்க.இவனுக்கு உங்க பொண்ணு மேல இருக்கற பிரியத்தை விட பணம் மேலதான் அதிக பிரியம்.அந்த பணம் முடிஞ்சா உங்க பொண்ணு வாழ்க்கையே யோசிச்சு பாருங்க” என்றான்.
சுந்தரம் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து,”ஒரு தடவை மணமேடை வரை வந்துட்டு கல்யாணம் நின்னு போனா அவளே யாரு தம்பி கட்டிக்குவா?”எனக் கேட்டார்.
ஒரு அப்பாவா உங்களோட பயத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. இருந்தாலும் எந்த காலத்துல நாம்ம இருக்கோம்.இன்னமும் அதே பழைய பஞ்சாங்கம் வேண்டாம்.உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல பையன் அமைவான்.கவலையே விடுங்க.இந்த கல்யாணத்தை நீங்களே நிறுத்துங்க.
அதைக் கேட்ட மணமகன் சிரித்தபடி, “அடடா! என்ன ஒரு நியாயமான பேச்சு!உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” எனக் கேட்டான்.
இல்ல…
அப்போ அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல பையன் கிடைக்கிற வரைக்கும் நீயே பொறுப்பேத்துக்க வேண்டியதுதானே?”
பூபதி அவனைத் திரும்பி பார்த்து,
“என்ன சொல்றே?”எனக் கேட்டான்.
அவ்வளவு நல்லவனா இருந்தா நீ அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க!
இவ்வளவு நேரம் பொண்ணுக்காக எவ்வளோ பேசுனே.ஆனா இப்போ கல்யாணம் பண்ணுனு சொன்னா மட்டும் ஏன் இந்த தயக்கம்?எல்லா ஆம்பளைகளும் ஒரே மாதிரிதான்.நீதி, நேர்மை, தானம், தர்மம் எல்லாம் மத்தவங்களுக்குதான் தனக்குனு வரும்போது ஆயிரம் கணக்கு பார்பாங்க.
அங்கிருந்தவர்கள் சிலர் அவனைப் பார்த்து முணுமுணுத்தனர்.
அவர்களைப் பார்த்து,என்ன என்னை பாத்து பேசறீங்க.இதோ இவ்வளோ நேரம் பெரிய மனுஷன் மாதிரி பேசுனாறே..இப்போ தனக்குனு வரும் போது எப்படி தயங்கி நிக்கறாருனு பாருங்க.நல்ல மனுஷனா இருந்தா… காசு பணம் எதிர் பார்க்காத மனுஷனா இருந்தா…ஏன் இன்னொரு நல்ல பையனா பாக்கணும்.இவரே அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கலாமே.
இதோ பாரு வார்த்தையே அளந்து பேசு.
“ஏன்? உண்மை கசக்குதா? உனக்கு காசு பணம் இல்லாத வீட்டுல பொண்ணு எடுக்கப் பிடிக்கலன்னா பேசாம இங்கிருந்து கிளம்பிடு. பெரிய மனுஷன் மாதிரி வேஷம் போடாதே!”
“நான் யாருக்கும் வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணோட வாழ்க்கையைப் பணத்துக்காக அவமானப்படுத்துற கீழ்த்தரமான ஆள் நான் இல்ல.”
“அப்படியா? அப்போ அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ!”
பூபதி ஒரு நொடி அமைதியானான்.
மாப்பிள்ளை தொடர்ந்து செய்த அவமானம், சவால் எல்லாமே பூபதியின் கோபத்தை எல்லை மீறச் செய்திருந்தது.
என்னப்பா, அடுத்தவன் பொண்ணோட வாழ்க்கைகாக பேசுற அளவுக்கு தைரியம் இருக்கு. ஆனா அந்தப் பொண்ணை உன் வாழ்க்கையில ஏத்துக்குற தைரியம் இல்லையா?
அடுத்த நொடி பூபதி மணமேடையை நோக்கித் திரும்பினான்.அங்கு இருந்த தாலியை எடுத்தவன், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மணப்பெண்ணின் கழுத்தில் கட்டினான்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சற்றுமுன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் முகமும் வெளிறியது.
பூபதி அவனைப் பார்த்து,
“இப்போ புரியுதா? ஒரு பெண்ணோட வாழ்க்கை உனக்கு வேணா பணத்தைவிட மலிவானதா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படியில்லை.
மாப்பிள்ளை வீட்டார் அவமானத்தோடு வெளியேற,அதன் பின் மணமக்கள் இருவருக்கும் சில சடங்குகளைச் செய்தனர்.
மூர்த்தி,”என்னப்பா இப்படி அவசரப் பட்டுடே?கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.உன்னோட இந்த முடிவுல எனக்கு விருப்பமில்ல.அம்மா அப்பாவே யோசிச்சு இருக்கலாம்.பிருந்தாவை ஒரு நிமிஷம் நினைச்சு இருக்கலாம்.” என்றார்.
பிருந்தா….அந்தப் பெயரை கேட்டதும் தற்போது ஏதோ அந்நியமாக தோன்றியது.இவ்வளவு நாட்களாக தன்னில் பாதி என்று நினைத்தவள் இந்த நிமிடம் முதல் வேறு ஒருவளாகி விட்டாள் என்றே தோன்றியது அவனுக்கு…
என்னப்பா ஏதோ யோசனையா நிக்கறே. அடுத்து ஆக வேண்டியதே பாக்கலாம். அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?உன் மேல விருப்பமா?எதுவுமே கேட்காம இப்படி பண்ணிட்டே..ஒரு மனுஷன் எப்பவும் சரியான பாதையிலதான் போவானு எல்லா நேரமும் நினைக்கறது தப்புன்னு உன் விஷயத்துல தெரிஞ்சுக்கிட்டே – மூர்த்தி.
“சார்,நான் செஞ்சது தப்புதான். அதுக்கான தண்டனை எதுனாலும் நான் ஏத்துக்கறே.இனிமே அந்தப் பொண்ணு என்னோட பொறுப்பு.அப்பா புரிஞ்சிப்பார்.அம்மாவை நினைச்சாதான்…. என இடைவெளி விட்டவன் ஒரு பெரும் மூச்சை விட்டு பாத்துக்கலாம்” என்றான்.
இவர்கள் இருவரும் கோவில் சுற்றுப்பாதையில் நின்று பேசிக் கொண்டிருக்க சுந்தரம் தயங்கி தயங்கி இவர்கள் அருகில் வந்து நின்றார்.
தம்பி,உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?என் பொண்ணை பிடிச்சுருக்கா?
“……”பூபதியிடம் மெளனம் மட்டுமே…. “இதெல்லாம் நான் உங்க கிட்டையும் உங்க பொண்ணு கிட்டேயும் கேட்க வேண்டிய கேள்வி ஆனா நீங்க என்கிட்ட கேட்கறீங்க” என நினைத்தபடி தலை குனிந்தான்.
எனக்கு தெரியும் தம்பி உங்களுக்கு இன்னமும் அஞ்சு மாசத்துல கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்கும் போது…. இதுல விருப்பம் இருக்காதுனு…அது மட்டுமில்லாம உங்க அந்தஸ்து வேற… எங்க அந்தஸ்து வேற….இங்க நடந்ததே இதோட மறந்திடலாம்.நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க தம்பி என திரும்ப முயல…
என்ன பேசறீங்க?நீங்க சொல்ற மாதிரி செஞ்சா.அந்த மாப்பிள்ளைக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்.இந்த கல்யாணத்துனால பிரச்சனை வராம இருக்காது.ஆனா எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.இனிமே உங்க பொண்ணை பத்தின கவலையே விடுங்க…சார் அவர் கிட்ட பேசுங்க… இனி என்ன செய்யனும்… சீக்கிரம் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பலாம் என மூர்த்தியிடம் சொல்லி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான்.
சிறிது நேரத்தில் பிரியா விடை பெற்று மணமகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் பூபதி.
இவர்கள் வீட்டிற்கு செல்லும் முன்பே விஷயம் சென்றது.விசாலாட்சி கண்ணீரோடு அமர்ந்திருந்தார். விஸ்வநாதன் முகமும் அவ்வளவு தெளிவாக இல்லை.மகனின் முடிவு சற்று அதிர்ச்சியையே கொடுத்திருந்தது.இருந்தும் எதையும் முகத்தில் காட்டாது மகனின் வருகையை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்.
பூபதி பெண்ணுடன் உள்ளே வர… விசாலாட்சி எழுந்து அவனின் சட்டையை உலுக்கி “எதுக்கு இப்படி பண்ணுனே?” என அழ ஆரம்பித்தார்.
பூபதி வேளையாளை அழைத்து மணப்பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து செல்லும்படி கூறினான்.
பூபதியின் அறையில் பெண்ணை விட்டு வேலையாள் விடைபெற ரூம்மை சுற்றி அவளது பார்வை சென்றது.அது ஒரு பேச்சுலர் அறை போல அல்லாமல் நேர்த்தியாக பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே அடுக்கப்பட்டு இருந்தது.
தேக்கு கட்டில் அதன் அருகே பெரிய ட்ரெஸிங் டேபிள் அதில் தன் உருவத்தைப் பார்த்து விழி அகல நின்றாள் அவள். எதிரே ஒரு சிறிய அலமாரியில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அதன் அருகே போடப்பட்டிருந்த டேபிள் மீது பூபதி பிருந்தா புகைப்படம். அதை எடுத்துப் பார்க்க…இருவர் கண்களிலும் நிறைவான சந்தோசம்,காதல் தென்பட்டது.
திடீரென கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பூபதி நேரே பாத்ரூமினுள் சென்று விட்டான்.அவன் கண்களை நோக்க ரத்த நிறத்தில் சிவந்திருந்தன.
கையில் இருந்த புகைப்படமும் அவனின் சிவந்த கண்களும் யாரும் சொல்லாமலே நிறைய அர்த்தத்தை அவளுக்கு விளங்க வைத்தது.
சிறிது நேரத்தில் பாத்ரூமை விட்டு வெளியே வந்தவன்,கட்டிலின் மீது அமர்ந்து,ஒரு சேரை எடுத்து அருகில் போட்டு அவளையும் அமர சொன்னான்.
உன் பேரு என்னம்மா?
அவனது கண்களைப் பார்க்க…சிவந்த நிறம் மாறி வெண்மையாக இருந்தது.
சங்கீதா…
அதற்கு மேல் அவள் முகத்தை பார்க்க அவனால் முடியவில்லை.நான் கொஞ்சம் யோசிச்சு இருக்கனும். உன்னோட விருப்பம் எதையும் கேட்காம இப்படி பண்ணிட்டே…என அவன் கூறி கொண்டு போக…
தான் கேட்ட வாக்கியம் உண்மைதானா என உறுதிப்படுத்திக் கொள்ள அவளை நிமிர்ந்து பார்த்தான்.
இதோ பாரு…உன் பேரு பூபதி..நீ நல்லவன் வல்லவன்னு எங்க அப்பா நிறைய சொல்லிதான் இங்க அனுப்பிருக்காரு.அதுனால உன்னப்பத்தி எதுவும் எனக்கு வேண்டா என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்க…
எனக்கு ஐஏஎஸ் ஆகனும்…அதுதான் என்னோட ஆசை,கனவு,லட்சியம் எல்லாம்… அதுக்கு அப்பறோம் என்னோட சர்மா…
திடீரெனு எங்க அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு.இந்த சர்மாக்கு வேற லைன்னே போகல…சரின்னு மாப்பிள்ளைக்கு கொஞ்சம் காசை கொடுத்து நடிடானா அவன் வாங்குன காசை விட அதிகமா கூவிட்டு இருந்தான்… சரி எந்திருச்சு சீனை மாத்தலானு பாத்தா..மணமேடையில உட்கார்ந்தா எந்திரிக்க கூடாதாமே… நானே கடுப்புல உட்கார்ந்துட்டு இருந்தே…நடுவுல நீ வேற… அன்பு, பாசம்,நேசம்னு…
எழுந்து இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு வலது கையை கேள்வி கேட்கும் தோணியில் வைத்து, “என் மேல உனக்கு என்ன மேன் அவ்ளோ அக்கறை?”எனக் கேட்டாள்.
பூபதிக்கு நடப்பது எதுவும் புரியாமல் விழித்தான்.கூடவே ஃபோன் அடிக்கும் சத்தம்.லவ்பக் என சிவப்புநிற ஹார்டின் உடன் திரை ஒளிர்ந்தது.