Skip to content
Post Views: 6,903
நிறம் பாராத காதல்
__________________________
அத்தியாயம் 3
மஞ்சள் நிற சேலையில். பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையைப் போல இவர்கள் முன் தோன்றிய பெண்ணவள், அஞ்சனம் பூசிய விழிகள் இரவின் அடர்ந்த இருளில் மின்னும் நட்சத்திரங்களைப் போல் பிரகாசித்தாள்.
சிறு ஒப்பனை கூட இல்லாமல் ஒப்பிட முடியாத அழகுடன் அவள் நிற்க, கார்மேகக் கூந்தல் நீர்சாரல் போல உருண்டோடி அவளது தோள்களில் பரவியிருக்க,
“இவளா!?” என்று வைதேகியை பார்த்த ரணதீரனின் இமைகள் அசைய மறந்தது. முதலில் அவளைக் கண்டு அதிர்ச்சியுற்றவன் அடுத்த நொடியே அவளைக் கண்டு கோவத்தில் முகம் மாறினான்.
“மாயா பொண்ணு தேவதை மாதிரி இருக்காளே!!” என வேதநாயகி பெண்ணவளை அதிசயமாகப் பார்க்க.
“வலது காலை எடுத்து வச்சி உள்ள வாப்பாப்பா.” என்ற மாறன் வைதேகியை ரணதீரனின் பங்காளவிற்குள் அழைத்து வந்தான்.
Advertisement
அழகான எழில் மிகு பங்களா! வீட்டின் மத்தியில் ஆள் உயரத்துக்கு ரணதீரனின் தந்தை திரு.நெல்சனின் புகைப்படத்திற்குச் சந்தன மாலை அணிவித்து இருப்பதைப் பார்த்துக்கொண்டே வைதேகி பயத்தில் வீட்டுக்குள் நுழைந்தாள்.
வைதேகியின் அழகில் வேதநாயகி ஒரு கணம் அசையாமல் நின்றிருந்தவர்
ஒளி வீசும் முழுமதி போல, மெதுவாக, மரியாதையோடு உள்ளே வந்தவளை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்த வைதேகியின் முகத்தைப் பார்த்த மாயாவுக்கு மண்டை குழம்பியது.
Advertisement
வைதேகியின் விழிகளில் பசுமை நீர்த்த நம்பிக்கை, முகத்தில் அழகிய கட்டுப்பாடு!
கடமை தெரிந்த கண்ணியம், வார்த்தை சொல்லாமலே நம் மனதை கொள்ளையடிக்கும் மென்மை! என
இவள்தான் நம் வீட்டுக்கு வரவேண்டிய தேவதை என்று வேதநாயகி நினைக்கும் தருணம்,”பெரியம்மா கோமாதா கண்ணு போட்டு இருக்கு. அதுவும் மகாலக்ஷ்மிங்க.” எனத் தோட்டத்திலிருந்து பணியாளர் தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்த,
“எல்லாம் நல்ல சகுனமா இருக்கே. அப்போ இவ தான் நம்ம வீட்டு மருமகள்.” என்று உறுதியாக எண்ணிய வேதநாயகி,
“வா மா.வந்து உக்காரு.”எனத் தன் அருகே இருந்த இருக்கையைச் சுடிக்காட்ட வைதேகி சிறு அச்சதுடன் மாறனை பார்த்ததும்.”ம் உக்காரு பாப்பா?”என்ற மாறனை கண்ணால் ஜாடைக் காட்டி தன் அருகே அழைத்தாள் மாயா.
Advertisement
“இரு மாயா அத்தைகிட்ட பேசிட்டு வரேன்.” என்ற மாறன் வைதேகி அருகே சென்று நின்றுக்கொண்டதும், “அக்கா.. இங்க என்ன நடக்குது? இந்தப் பொண்ணு நேத்து யாரையோ கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்தேன்னு சொன்ன பொண்ணு தானே, இந்தப் பொண்ணு எப்படி நம்ப பங்களாக்குள்ள?அதுவும் மாமா ஏன் இவள அழைச்சிட்டு வந்து இருக்காரு?”என ரணதீரன் தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,”டேய் எனக்கு மட்டும் என்னடா தெரியும்? எனக்கும் ஒன்னும் புரியல” என்றாள் மாயா.
“மாப்புள்ள.. உங்க சித்தி பொண்ணுன்னு சொன்னீங்களே இந்தப் பொண்ணு தானா?” என்ற வேதநாயகி, வைதேகியை உச்சி முதல் பாதம்வரை கண்களால் அளவெடுத்து அவள் அழகிய உருவத்தை இதயத்தில் தன் மருமகள் என்று எழுதி வைத்துக்கொண்டார்.
“ஆமா அத்த பாப்பா தான் நான் சொன்ன பொண்ணு. பாப்பா இவங்கதான் என் மாமியார். ” என மாறன் சொன்னதும், வைதேகி மரியாதையுடன் வேதநாயகியை பார்த்துக் கைகள் கூப்பி வணக்கம் தெரிவித்தாள்.
Advertisement
“வணக்கம் வணக்கம்…ஆமா உன் பேர் என்ன?” என்று வேதநாயகி கேட்க, ரணதீரனோ அதே இடத்தில் வைதேகியை மீண்டும் ஒரு அரை விடும் எண்ணத்தோடு முறைத்துக் கொண்டு இருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்த பெண்ணவளுக்கு கைக்கால்கள் நடுக்கம் எடுத்தது.
“அத்த பாப்பா பேரு..” என்று மாறன் சொல்லும் முன்னே,”நீங்க இருங்க மாப்பிள்ளை.நீ சொல்லுமா உன் பெயர் என்ன?” என வைதேகியின் குரலைக் கேட்கும் ஆவலோடு வேதநாயகி பேச்சு கொடுத்தார்.
“நான்….என் பெயர் வைதேகி.” எனத் தன் பெயரை மறைக்காமல் சொன்ன பெண்ணவளின் பெயரை ஒருமுறை அழுத்தத் திருத்தமாக வேதநாயகி உச்சரித்தவர்,”அருமையான பெயர். உனக்கு ஏத்த பெயரைத் தான் உன் அம்மா அப்பா வச்சிருக்காங்க.ஏன் மாப்பிள்ள? உங்க சித்தியும் சித்தப்பாவும் வரலையா? பொண்ண மட்டும் அழைச்சிட்டு வந்து இருக்கீங்க?” என்று பெண்ணின் குடும்பத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் விதமாக வேதநாயகி கேட்டார்.
“அது வந்து அத்த..சித்தி இறந்துட்டாங்க, சித்தப்பா வேற சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதனால பாப்பா ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கு, சித்தி உயிரோடு இருக்கும்போதே நான் வைதேகியை நம்ம ராணாக்கு சித்திக் கிட்ட பொண்ணு கேட்டேன்.ஆனா அப்போ அவங்க குடும்ப பிரச்சினையால இந்தச் சம்மந்தத்தை மேற்கொண்டு என்னால பேச முடியல. இப்போ சித்தியும் தவறிட்டாங்க, சித்தப்பாவும் வேற ஊருக்குப் போயிட்டாரு. வைதேகி அனாதையா நின்றவளை என்னாலையும் அடிக்கடி போயி பாத்துக்க முடியல.ஆனா இப்போ மச்சானுக்கு கல்யாணம் தடைப்பட்டதும் வைதேகியை நம்ம வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வந்தா நீங்கச் சந்தோஷப் படுவிங்களேன்னு தான் உங்க அனுமதியை கேட்டுப் பாப்பாவ இங்க அழைச்சிட்டு வந்து இருக்கேன்.” என்று மாறன் பவ்யமாகச் சொன்னான்.
“எத்தன பாப்பா!!ஆனா இந்தப் பாப்பா யாரு தான்பா?” என்று மாறனின் அம்மா கீதா புரியாமல் புலம்புவதை காதில் வாங்கிய மாயா, “அத்த என்ன சொல்றீங்க?அப்போ அந்தப் பாப்பா உங்க சொந்தக்கார பாப்பா இல்லையா?” என்ற மாயா தன் அத்தையை பார்த்துக் கேள்வி எழுப்பியதும்,
“ஐயோ இந்தப் பொண்ண நான் முன்ன பின்னப் பார்த்ததே இல்ல மருமகளே. அதுவும் இல்லாம என் மவன் சொன்ன சாந்தி சித்திக்குப் பொண்ணே இல்லம்மா. ஒரே ஒரு பையன் மட்டும்தான்.” எனக் கீதா அதே இடத்தில் தன் மருமகள் மாயாவிடம் மட்டும் உண்மையைப் போட்டு உடைத்தார்.
“அய்யய்யோ என்ன அத்த சொல்றீங்க? அப்போ மாறன் மாமா பொய் சொல்றாரா? இந்த உண்மை மட்டும் அம்மாக்கு தெரிஞ்சா என்னாகும் ?”என்று மாயா தன் மாமியாரிடம் ரகசியமாக பேசுவதை ஓரக்கண்ணில் பார்த்த மாறன், தன் அருகே இருந்த ரணதீரனை கண்டுக் கொள்ளவே இல்லை.
“மாமா…” என்று கோவமாக ரணதீரன் மாறனை அழைக்க, “இருங்க மச்சான்.அத்த..பொண்ண உங்களுக்குப் பிடிச்சிருந்தா சொல்லுங்க, இல்லையா நான் மறுபடியும் வைதேகியை ஹாஸ்டலுக்கே அழைச்சிட்டு போயி விட்டுர்றேன்.” என்று மாறன் சொல்ல,
“இருங்க மாப்ள இருங்க இருங்க. பொண்ண நமக்குப் பிடிக்கிறதா முக்கியம்? முதல்ல பொண்ணுக்கு என் பையன..” என்று ஒரு கணம் ரணதீரனை பார்த்த வேதநாயகி, “அம்மாடி..உனக்கு என் பையனைப் பிடிச்சிருக்கா?” எனத் தேங்காய் உடைத்ததை போல வேதநாயகி கேட்டதும்.வைதேகி ரணதீரனை பாராமல் மாறனை பார்க்க, மாறன் கண்களால் ஜாடை காட்டினான்.
மாறனை பார்த்த வைதேகி,
“எ… எனக்குப் பிடிச்சிருக்கு.” என்ற பதிலில் வேதநாயகியின் தேகத்தில் புது ரத்தம் பாய்ந்ததை போல உணர்ந்து இருக்க, மாயாவும் கீதாவும் எதுவும் புரியாமல் குழம்பி இருக்க, ரணதீரனோ அருகே இருந்த பூஜாடியை தூக்கி கீழே எறிந்தவன்,
“என்ன ட்ராமா இதெல்லாம்?யோவ் மாமா.யாரு இந்தப் பொண்ணு? முதல்ல இவள இங்க இருந்து கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளுங்க.” என்ற ரணதீரன் சொன்னதோடு நில்லாமல் வைதேகியின் கையைப் பிடித்து வாசல்வரை இழுத்துச் சென்றவனை, “ராணா….” என்று அதீத கோவத்தில் முதல் முறை தன் மகனைக் கர்ஜனையோடு அழைத்த வேதநாயகியின் ஆத்திரத்தை கண்டு அங்குள்ள அனைவரின் முகத்திலும் கலவரம் கூடிப்போனது.
“அவ மேல இருந்து கையை எடு ராணா.. என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?
முன்ன பின்னத் தெரியாத ஒரு பொண்ணுக் கிட்ட இப்படி தான் இங்கிதம் இல்லாம நடந்துப்பியா? எப்படி நீ அந்தப் பொண்ணு மேல கை வைப்ப? முதல்ல அவக்கிட்ட மன்னிப்பு கேள்.” என வேதநாயகி அதீத கோபத்துடன் சொல்ல,
“என்ன மன்னிப்பு கேட்கணுமா?அதுவும் இவக்கிட்டயா?அம்மா.. இவ யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?இவயெல்லாம் பொண்ணே இல்ல. நம்ம வீட்ல நிக்கறதுக்கு இவளுக்கு எந்தத் தகுதியும் இல்ல.” என்ற ரணதீரனோ மீண்டும் வைதேகி கையைப் பிடித்து வாசல்வரை அழைத்துச் செல்ல,
“ராணா…” எனக் கட்டிடமே அதிரும் படி குரலை ஒசத்திய வேதநாயகி கண் இமைக்கும் நொடியில் ரணதீரன் கைப்பிடியிலிருந்து வைதேகியை தன்வசம் இழுத்துக் கொண்டதும், அதீத
கோபத்துடன் மாறனை முறைத்தான் ரணதீரன்.
“மச்சான் என்ன பண்ற நீ.. நானும் அத்தையும் பேசிக்கிட்டு தானே இருக்கோம். அதுக்குள்ள நீ ஏன் அவசரப்படுற. முதல்ல நீ கம்பெனிக்குக் கிளம்பு. நானும் அத்தையும் பேசி ஒரு நல்ல முடிவா எடுத்துப்போம்.” என்ற மாறனோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த வைதேகி அருகில் சென்றான்.
“மாப்புள.. இவனுக்குப் பைத்தியம் பிடிச்சு போச்சு. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.அம்மாடி வைதேகி, உனக்கு என் பையனைப் பிடிச்சிருக்குன்னு தானே சொன்ன? உனக்கு உண்மையில் என் பையனைப் பிடிச்சிருக்கு தானே?” என்று மீண்டும் வேதநாயகி சந்தேகம் கலந்த எதிர்பார்ப்புடன் வைதேகி பதிலுக்காக எதிர்பார்த்து காத்திருந்தார்.
“இல்ல.. என்னால..என்னால இங்கே பிரச்சனை வேண்டாம். அண்ணா நான் போறேன்.” என்ற வைதேகி வாசலை நோக்கி நடந்ததும்.”போ..அப்படியே போயிடு..நீ யாரு என்னன்னு தெரியாம உன்ன நடுவூட்டுல அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்காரு பாரு எங்க வீட்டு மாப்பிள்ளை.எல்லாம் இவரைச் சொல்லணும். இங்க பாருங்க, நான் மறுபடியும் சொல்றேன்.கல்யாணம் காட்சின்னு ரோட்ல போற யாரையாவது வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து டிராமா பண்ணிக்கிட்டு இருந்தீங்கனா நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்.” என்று ரணதீரன் சொல்லி முடிப்பதற்குள் வேதநாயகி மீண்டும் நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் சரிய பார்த்தவரை தாங்கிப் பிடித்து, “அம்மா…” என்று மாயா அலற,”அத்த அத்த..”என்று பதறிய மாறன் வேதநாயகியை கைத்தாங்கலாக அருகே இருந்த இருக்கையில் அமர வைத்தான்.
“அம்மா..”என்ற ரணதீரன் தன் அன்னையை நெருங்கும் முன்னே,”வராதே, என்கிட்ட வராதே.நான் உனக்கு அம்மாவும் இல்ல நீ எனக்குப் புள்ளையும் இல்ல.உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு வயசான காலத்துல நான் ஏறி இறங்காத கோவில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல. ஆனா உனக்கு என்னைப் பற்றிய கவலையே இல்ல. உனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். இப்படியொரு பிள்ளையைப் பெத்ததுக்கு முதல் முறையா நான் கவலைப்படுகிறேன். இங்க பாரு ராணா.. நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ. அடுத்த முகூர்த்தத்தில் உனக்குக் கல்யாணம் நடந்தே ஆகணும். அதுவும் மாப்பிள்ளையோட சித்தி பொண்ணு வைதேகி கூடத் தான் உனக்குக் கல்யாணம் நடக்கும். இது என்னுடைய ஆசையில்ல, என் உத்தரவு. என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறதா இருந்தா என்னை நீ இனி அம்மானு கூப்பிடு. இல்லையா சொல்லிடு, காசி ராமேஸ்வரம்னு நான் கண்காணாத இடத்துக்குப் போயிடுறேன். நான் செத்தா கூட உன் கையால நீ எனக்குக் கொள்ளி வைக்கக் கூடாது.” என ஒட்டு மொத்த நாடக வசனத்தையும் பேசும் தன் அன்னையைப் பார்த்து ரணதீரனுக்கு கோபம் எழுந்ததோ இல்லையோ, இதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்த மாறனின் கழுத்தை பிடிக்கும் அளவுக்கு ரணதீரன் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்தான்.
“அம்மம்மா அம்மம்மா…அத்தை வெளியே போறாங்க. எனக்கு அந்த அத்தையை ரொம்ப பிடிச்சிருக்கு. மாமா மாமா அத்தையை உள்ள கூப்பிடுங்க. அத்தையை உள்ள கூப்பிடுங்க.”என்று மாறன் மாயாவின் ஒரே மகள் மயிழினி மழலை குரலில் வைதேகியை உள்ளே அழைத்தாள்.
“பாருடா..குழந்தை தெய்வத்துக்குச் சமம். நம்ம மயில் பாப்பாவுக்கே வைதேகியை ரொம்ப பிடிச்சுருக்கு. நம்ம மாப்பிள்ளையுடைய தங்கச்சி தானே வைதேகி. அதுவும் வைதேகிக்கும் உன்னைப் பிடிச்சி தானே இருக்கு. இந்தக் கல்யாணம் ஏன் வேண்டாம்னு சொல்ற ?” என வேதநாயகி பாவமாகக் கேட்டதும்,
“அம்மா…முன்ன பின்னத் தெரியாத பொண்ண இவர்தான் தங்கச்சின்னு சொல்றாருன்னா! நீங்களும் இத நம்புவீங்களா?” என ரணதீரன் கோபம் கொண்டவனாய் மாறனை முறைத்தான்.
“மச்சான்..என்ன நீங்க?வைதேகி என் சித்தி பொண்ணு மச்சான். ஏன் நீங்க என்னை நம்ப மாட்டீங்களா? அப்படியா இந்தக் குடும்பத்துக்கு நான் கெடுதல் செய்யப் போறேன். சரி.. இப்ப என்ன? உங்களுக்கு என் தங்கச்சியை பிடிக்கல அவ்வளவு தானே. ரைட்டு.. ஆளை விடுங்க உங்களுக்கு வேற பொண்ண பாத்துக்கலாம். அதுக்காக அத்தை மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாதீங்க.
அத்த…நான் வைதேகியை அழைச்சிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நம்ம வேற ஒரு பொண்ண பார்த்து மச்சானுக்கு திருமணம் பேசி முடிக்கலாம். மாயா…அத்தையை பாத்துக்கோ.” என்ற மாறன் வைதேகியை தேடி வாசலை நோக்கி நடந்தான்.
“நில்லுங்க மாப்பிள்ளை. இப்போ நான் முடிவா சொல்றேன், வைதேகியை நீங்க எங்கேயும் அழைச்சிட்டு போக வேண்டாம். இந்த வீட்டுக்கு மருமகன்னு ஒரு பொண்ணு வந்தா அது வைதேகியா தான் இருக்கணும். கண்டிப்பா வைதேகி கழுத்துல என் மகன் ரணதீரன் தாலி கட்டுவான்.
இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு ராணாக்கு நல்லாவே தெரியும். மாயா.. நீ போய் வைதேகியை உள்ள அழைச்சிட்டு வா.” என்ற வேதநாயகியின் கட்டளைக்கு அடிபணிந்து மாயா எஸ்டேட்டிலிருந்து கண்களில் கண்ணீருடன் நடந்து வெளியே சென்ற பெண்ணவளை, ” வைதேகி… வைதேகி நில்லுமா.. “என்று அவள் பெயரை அழைத்துக்கொண்டே மாயா வாசலை நோக்கி ஓடினாள்.
“அட நில்லு வைதேகி. அம்மா உன்னையுள்ள அழைச்சிட்டு வரச் சொல்லுறாங்க.
வீட்டுக்கு வா.” என்ற மாயாவின் மனதில் வைதேகியை பற்றி ஆயிரம் கேள்விகள் தோன்றினாலும் தன் காதல் கணவன் மாறன் என்றுமே நல்லதை மட்டுமே செய்பவன் என்று நம்பியவள் வைதேகியின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
மீண்டும் வீட்டுக்குள் வந்த பாவையவளை கண்டு ரணதீரன் தன் கோவத்தை கடுப்பாடுத்திக் கொண்டு ஓரமாகச் சென்று நின்று விட்டான்.
“அம்மாடி வைதேகி. என் பையன் கோவக்காரனா இருந்தாலும் ரொம்ப பாசக்காரன். நீ அவனைத் தப்பா நினைக்காத. அப்புறம் உனக்கு அம்மா இல்லைனு கவலைப்படாத. எங்க உன் பெரியம்மா?” என்ற வேதநாயகி ஓரத்தில் பம்பிக்கொண்டு நின்று இருந்த மாறனின் அம்மா கீதாவை பார்த்தார்.
“ஐயையோ பாக்குறாளே பாக்குறாளே.. அங்கங்க அங்கங்க பொம்பள புள்ளைய கட்டி கொடுத்துட்டு தான் பெத்தவங்க வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க. ஆனா நான் ஒத்த மகன் என் மாறனை இந்த குடும்பத்துக்குத் தத்து கொடுத்துட்டு ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பொழைக்கிறேனே. ஐயோ..ஒரு பக்கம் இந்த வேதநாயகி என்னன்னா பெண் சிங்கம் போலக் கோவத்துல கர்ஜிக்கிறாங்கன்னா, மறுபக்கம் இவங்க பெத்து வச்சிருக்கற ரணதீரனோ பார்வையாலேயே நம்ப உயிரை எடுத்துடுறான். இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல என் பையன் மாட்டிக்கிட்டது பத்தாதுன்னு என்னையும் வீட்டோட சம்மந்தியாக அழைச்சிட்டு வந்து இந்த ராணா கையால என் சங்குல சைன் வாங்காம இவன் விடமாட்டான் போலையே!” எனத் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார் மாறனின் அம்மா கீதா.
“என்ன சம்மந்தி.. ஏன் அங்கேயே நிற்கிறீங்க. உங்க தங்கச்சி பொண்ணு தானே வைதேகி. இவ வந்ததும் நீங்க ஆசையா கட்டி அணைச்சு நலம் விசாரிப்பீங்கன்னு பார்த்தா, நீங்க என்ன மூணாவது மனுஷி மாதிரி தள்ளி நிக்கிறீங்களே!! வாங்க சம்மந்தி, வந்து வைதேகிக்கிட்ட பேசுங்க.”என்று வேதநாயகி மாறன் அம்மா கீதாவை தன் அருகே அழைத்தார்.
“அம்மாடி தேவகி நல்லா இருக்கியா?” என்ற கீதாவை கேள்வியாகப் பார்த்த வேதநாயகி, “என்ன? தேவகியா? இவ பெயர் வைதேகி தானே?” என்று கேட்டதும். மாறன் தலையில் அடித்துக்கொண்டவன் கீதாவை முறைக்க,
“தேவகியா? அது யாரு தேவகி? நான் வைதேகின்னு தானே சொன்னேன்.” என்ற கீதா, “வைதேகி நல்லா இருக்கியா? சாப்பிட்டியா? உனக்கு இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்கு. கம்மல் ஜிமிக்கி கூட ரொம்பவே நல்லா இருக்கு.”என்று சம்மந்தம் இல்லாமல் உளறியதும் வேதநாயகியின் முகம் மாறியது.
“அத்த.. அம்மா அடிக்கடி வைதேகிக்கிட்ட போன்ல பேசிகிட்டு தான் இருப்பாங்க.
நீங்க வைதேகியை பார்க்கணும்னு தான் நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்குப் பாப்பாவை அழைச்சிட்டு வந்தேன். உங்களுக்குப் பொண்ணை பிடிச்சிருந்தா சொல்லுங்க ஜாதக பொருத்தம் பார்த்து ரணதீரன் வைதேகி கல்யாணத்தை சீரும் சிறப்புமாகப் பண்ணி வச்சிடலாம்.”
என்ற மாறனின் வார்த்தையைக் கேட்டு வேதநாயகியின் உள்ளத்தில் எல்லை இல்லாத மகிழ்ச்சி பெருக,
ரணதீரனுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியாத மனநிலையில் வைதேகியை மட்டும் ரணக் கொடூரமாக முறைத்துக் கொண்டிருந்தான்.
“மாப்பிள நீங்கச் சொல்லும்போதே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கு. இனி ரணதீரன் கல்யாணம் உங்களோட பொறுப்பு. நீங்க என்ன பண்ணாலும் எனக்குச் சம்மதம்தான். கூடிய சீக்கிரம் வைதேகிக்கும் ரணதீரனுக்கும் திருமணத்தைப் பண்ணி வச்சிடலாம். அப்புறம் இனி வைதேகி வெளியே ஹாஸ்டல் எல்லாம் தங்க வேணாம்.
நம்ம வீடு கடல் மாதிரி இருக்க,
இனி என் மருமக நம்ம எஸ்டேட்டிலேயே தங்கட்டும்.” என்று வேதநாயகியின் வார்த்தையைக் கேட்டு வைதேகி நிம்மதி பெருமூச்சு எடுத்தவளுக்கு ரணதீரனின் கோபமான முகம் மட்டுமே அச்சத்தை கொடுத்தது.
“மாப்பிள்ளை..நான் வைதேகிக் கிட்ட பத்து நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்.” என்று வேதநாயகி தன் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிற பெண் வைதேகியென நம்பி அவள் கையைப் பிடித்துத் தன் அறைக்கு அழைத்துச் செல்ல,
வைதேகி அச்சத்துடன் மாறனை பார்த்தாள்.
“போமா அத்தை உன் அம்மா மாதிரி உன்னைப் பார்த்துப்பாங்க.” என்று மாறன் சொன்னதும்.
“என்னம்மா? ஏன் என்னைப் பார்த்தா கொடுமை பண்ற மாமியார் மாதிரி தெரியுறேனா? அப்படி எல்லாம் தப்பா நினைக்காத, நான் உனக்கு அம்மா மாதிரி. இல்ல இல்ல.. மாதிரி எல்லாம் இல்ல, அம்மாவே தான். உள்ள வா.”
என்று தன் நோயை மறந்து வைதேகியை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்ற வேதநாயகியின் தலை மறைந்ததும் ரணதீரன் மாறனை தன் உயரத்திற்கு தூக்கி நிறுத்தியவனை பார்த்துக் கீதாவுக்கு மூச்சே நின்று போனது.
“யோவ் மாமா.. என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” என்று ரணதீரன் கோபமாகக் கேட்டதும், “மச்சான் இரு இரு. நீ என்னை மாமான்னு சொல்ற தானே! அப்போ அதுக்கு உண்டான வேலையை நான் பார்க்க வேண்டாமா?” என்ற மாறனை சட்டென்று கீழே போட்ட ரணதீரனுக்கு தெரியவில்லை மாறனை தவிர்த்து ரணதீரனின் மனதிற்கு ஏற்ற மங்கையை யாராலும் அவன் முன் கொண்டு வந்து நிறுத்த முடியாது என்று.
error: Content is protected !!