Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 9

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம்..9

இரண்டு பொம்மையில் ஒரு பொம்மையின் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிய,
“இது எப்படி சாத்தியம்!!” என்று வைதேகி குழப்பதுடன் பார்த்து இருந்தாள்.

“அக்கா…” என்று மிக அருகே கேட்ட குரலில் வைதேகி சட்டென்று திரும்பிப் பார்க்க அங்கே பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவன் நின்று இருந்தான்.



Advertisement

“அக்கா…நீங்கத் தான் ரணதீரன் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று வைதேகியிடம் பேசும் அந்தச் சிறுவனிடம் அவள் பதில் பேசும் முன்னே,
“ஜீவா இங்கே என்ன பண்ற? நீ ஸ்கூலுக்கு போகலையா? ” என்ற ரணதீரனின் குரலில் வைதேகி தயக்கத்துடன் சற்றுத் தள்ளி நின்று கொண்டவளின் கண்கள் ஜன்னல் வழியே கண்ணீருடன் நின்று இருக்கும் பொம்மையைத் தான் பார்த்து இருந்தது.

“அம்மா தான் மாமா கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு பீஸ் கட்ட பணம் தரேன்னு சொன்னாங்க, அதுக்காகத் தான் வந்தேன்” எனச் சிறுவன் ஜீவா சொன்னதும்,
“கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு பீஸா?” என்று ரணதீரன் கேட்க,
“ஆமா மாமா நாங்க பக்கத்து ஊர்ல கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு வரோம். அங்கு ஃபீஸ் கட்டினால் தான் எங்கள இனி உள்ள விடுவாங்க” என்று பதில் சொன்னான் ஜீவா.

சில நொடிகள் யோசித்த ரணதீரன்,
“இந்த மாசம் மட்டும் நீ பக்கத்து ஊர்க்கு கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு வா, அடுத்த மாசத்துல இருந்து நம்ம ஸ்கூல்லையே உங்களுக்குக் கம்ப்யூட்டர் கிளாஸ் நடக்கும்” என்ற ரணதீரன் வைதேகியை பார்த்தவன் சட்டென்று அவள் பார்த்துக்கொண்டு இருந்த ஜன்னல் துணியை மூடினான்.

Advertisement

“சார் அங்க ஒரு பொம்மை கண்ணுல” என்று வைதேகி அருகே இருந்த ஜன்னலைச் சுட்டிக்காட்டியதும்,
“டீ எஸ்டேட் போகணும் சீக்கிரம் கீழே இறங்கி வாங்க மேடம்” என்று சொன்னவன், அவள் பேசும் முன்னே வேகமாக அங்கிருந்து வெளியேறியவன், மீண்டும் அவளை நோக்கித் திரும்பி வந்தான்.

Advertisement

“சார் அந்தப் பொம்மை கண்ணுல!!” என்று வைதேகி மேலும் சொல்ல வருவதற்குள், “வரும்போது காருல இருந்து எடுத்த கொலுசு எங்க? என்று கேட்டவனின் கண்கள் வைதேகியை அழுத்தமாகப் பார்த்தது.

“அந்தக் கொலுசு என்கிட்ட தான் இருக்கு” என்று வைதேகி சொன்னதும், அவள் முன்னே கையை நீட்டியவன் கண்களால் ஜாடைக்காட்டி அதைத் தரும்படி சொன்னதும் வைதேகியும் தயக்கத்துடனே அவள் கைக்குள் பத்திரப்படுத்தி இருந்த கொலுசை ரணதீரனிடம் நீட்டினாள்.

“சீக்கிரமா கீழே வாங்க” என்ற ரணதீரன் சிறுவன் ஜீவாவின் தோளில் தட்டிக்கொடுத்தபடி கீழே சென்றான்.

Advertisement

“அம்மா ஜாலி ஜாலி…இனி நாங்க படிப்பைப் போலவே கம்ப்யூட்டரும் ரணதீரன் மாமா ஸ்கூல்ல ஃப்ரீயாவே படிக்கப் போகிறோம், ஜாலி”என்றபடி அந்தச் சிறுவன் சிரித்த முகத்துடன் தன் அம்மாவிடம் பேசியதை பார்த்து வைதேகியின் கண்களுக்குப் பொம்மையின் உருவம் மறந்து சிறுவனின் மகிழ்ச்சி மட்டுமே பதிந்து இருக்க, அவளும் வேகமாக ரணதீரனை நோக்கி நடந்தாள்.

“அத்தை போகலாமா” என்று ரணதீரன் கீதாவை அழைக்க, “மாப்பிள்ளை… என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது. நான் கம்பெனியிலேயே இருக்கேன்.நீங்க வைதேகியை அழைச்சிட்டு போய் டீ எஸ்ட்டை சுத்தி பார்த்துட்டு வந்துடுங்களேன்” என்று கெஞ்சும் குரலில் கேட்ட கீதாவை ஒரு கணம் முறைத்து பார்த்தவன், “மேடம் வாங்க போகலாம்” என்றபடி ரணதீரன் முன்னே செல்ல, வைதேகி தயக்கத்துடனே அவனைப் பின் தொடர்ந்தாள்.

நெல்சன் கம்பெனியிலிருந்து கால்நடையாகவே டி எஸ்டேட்டை நோக்கி இவர்கள் இருவரும் நடந்து செல்ல,
வழியெல்லாம் ரணதீரன் அமைதியாகவே நடந்து வந்தவனிடம் வைதேகி கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருந்தது.

பார்த்த நொடியில் இருந்தே தன்னை தவறாக நினைத்து இருக்கும் ரணதீரனிடம் சகஜமாக எப்படி பேசுவது என்று தயக்கத்திலிருந்த வைதேகி தைரியத்தை வரவழைத்து, “ஆமா…உங்க கம்பெனில ஏன் எல்லா பொம்மையும் கருப்பாகவே இருக்கு” என அவள் சந்தேகத்தைச் சுற்றி வளைத்துக் கேட்டு விட்டாள்.

அவளுடனே நடந்து வந்த ரணதீரன் அவள் கேட்ட கேள்வியில் அவளை முறைத்துப் பார்த்தவன், “ஏன்? பொம்மை கூடக் கருப்பா இருந்தா உங்கள மாதிரி வெள்ளையா இருக்கிற ஆளுங்களுக்கு பிடிக்காதா?” என்று கேட்டான்.

“ஏன் அப்படி கேக்குறீங்க? எனக்குக் கருப்பு நிறம் பிடிக்கும் தான், ஆனா என் சந்தேகம் அது இல்ல” என்று வைதேகி மேற்கொண்டு பேசும் முன்னே இவர்களைக் கடந்து நான்கைந்து நபர்கள் வேகமாக ஒரு வீட்டை நோக்கி ஓடினார்கள்.

“என்னாச்சு? இவங்க எல்லாம் எங்க போறாங்க” என்று வைதேகிக் கேட்க,
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்”என்ற ரணதீரன் எதையும் கண்டுகொள்ளாமல் டிஎஸ்டேட்டை நோக்கி நடந்தான்.

பதற்றத்துடன் அனைவரும் ஓடுவதை பார்த்து, அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று வைதேகி கேட்க எண்ணினாலும், அங்கே இவளை எவரேனும் அடையாளம் கண்டுகொள்ள போகிறார்கள் என்று எண்ணியவள் தயக்கத்துடனே ரணதீரனை பின்தொடர, அதே சமயம் இன்ஸ்பெக்டர் விக்ரம் பைக்கில் இவர்கள் எதிரே வந்தவன் வைதேகியின் அருகில் வண்டியை நிறுத்தினான்.

விக்ரமை பார்த்தும் பார்க்காததை போல ரணதீரன் மேலும் தன் நடையை டீ எஸ்டேட்டை நோக்கி வேகமாக எடுத்து வைக்க,”என்னாச்சு சார். இங்க ஏதாவது பிரச்சனையா?” என்று வைதேகி விக்ரமை பார்த்துக் கேட்டாள்.

“ஆமா.பூட்டி இருக்குற வீட்டுல ஒரு பொண்ணோட டெட் பாடி இருக்குனு தகவல் வந்து இருக்கு, அதான் விசாரிக்கப் போறேன்” என்று விக்ரம் சொல்ல,” என்ன பொண்ணோட டெட் பாடியா!? ” என்று அதிர்ச்சி கலந்த பயத்துடன் கேட்டாள் வைதேகி.

“ஆமா டெட் பாடி தான்.” என்று விக்ரம் சொல்ல, “நானும் உங்கக்கூட வரலாமா?” என்று வைதேகி கேட்டதும், “ஏன் நீங்க என்ன போலீஸ் ஆஃபீஸரா?” என்று இவர்களைத் திரும்பிப் பார்க்காமலேயே ரணதீரன் கேட்டதும் வைதேகி என்ன சொல்வது என்று தெரியாமல் அவனைப் பார்த்து இருந்தாள்.

“என்ன மேடம்… சடலத்தைப் பார்க்க ரொம்ப ஆசையா? சரி வாங்க நானும் உங்ககூட வரேன்” என்ற ரணதீரன் டெட் பாடி இருக்கும் வீட்டை நோக்கி நடக்க, அவனை வைதேகி பின் தொடர, இவர்களுக்கு முன்னே விக்ரம் தன் பைக்கீல் வேகமாகச் சென்றவன் கூட்டத்தை அப்புறப்படுத்தி வீட்டுக்குள் நுழைந்தவன் எதிரே இருபத்தைந்து வயதுடைய பெண் சடலமாகக் கிடந்தாள்.

மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டு உதவி காவலர் அந்தப் பெண் சடலத்தின் மீது இருந்த துணியை விளக்கிப் பார்க்க, அந்தப் பெண் தான் விக்ரம் தேடிக்கொண்டு இருந்த ரம்யா.

“சார்… இந்தப் பொண்ணை தானே காணோம்னு இவங்க அப்பா கம்பளைண்ட் கொடுத்துட்டு போனாரு?” என்ற உதவி காவலரைப் பார்த்து விக்ரம் “ஆமாம்” என்ற ரீதியில் தலையசைத்தான்.

தன் கண் முன்னே சடலமாக இருக்கும் பெண்ணை அதிர்ச்சியாக வைதேகி பார்த்து இருக்க, ரணதீரனுக்கும் இறந்த பெண்ணின் உடலைப் பார்த்துப் புருவம் இடுங்கியது.

“பாடியை போஸ்ட்மோர்டெம் பண்ண அனுப்பி வையுங்க, இந்தப் பொண்ணோட குடும்பத்துக்குத் தகவல் சொல்லிடுங்க” என்று உதவி காவலரிடம் சொன்ன விக்ரம் ரணதீரனை பார்த்து, “இந்தப் பொண்ணு உங்க கம்பெனில தான் வேலை பார்த்தங்களா?” என்று கேட்டான்.

“இவங்க என் கம்பெனில வேலை பார்க்கல” என்ற ரணதீரன் அந்த வீட்டிலிருந்து வெளியே வர, அந்தச் சடலத்தை உற்று பார்த்த வைதேகி எதேர்ச்சியாகப் பிணத்தின் காலைப் பார்த்ததும் அந்தப் பெண் சடலத்தின் ஒரு காலில் கொலுசு இல்லாமல் இருக்க, வைதேகி வேகமாகச் சடலத்தின் அருகே முட்டிப் போட்டு அமர்ந்தவள் பிணத்தின் இன்னோரு காலில் உள்ள கொலுசைத் தொட்டு பார்த்தாள்.

“வைதேகி என்ன பண்றீங்க? பாடியை நீங்கத் தொட்டால் உங்க கைரேகை சடலத்தில் படும்” என்று விக்ரம் சொல்ல,
“இல்ல…இந்தக் கொலுசு.கொலுசு” என்று வைதேகி எதையோ சொல்ல வரும் முன்னே, “மேடம் நேரம் ஆகுது வரீங்களா இல்ல என் அம்மாகிட்ட நீங்கப் போலீஸ் ஆஃபீஸ்ர் விக்ரம் கூட வருவீங்கன்னு சொல்லனுமா?” என்று வாசலில் நின்றபடி ரணதீரன் கேட்டான்.

“நீங்கக் கிளம்புங்க வைதேகி. நான் முடிஞ்சா நாளைக்கு வந்து பெரியம்மா வீட்ல உங்கள மீட் பண்றேன்” என்ற விக்ரம் வாசல்வரை வந்தவன்,” இந்தப் பொண்ணு உங்க கம்பெனில வேலை செய்கிறதா மாறன் மாமா சொன்னாரு! ஆனா நீங்கவில்லைன்னு சொல்றீங்களே? ” என்று ரணதிரனை பார்த்து விக்ரம் சந்தேகமாகக் கேட்டான்.

“இப்பவும் சொல்றேன் இந்தப் பொண்ணு என் கம்பெனில வேலை செய்யல, ஒரு வேள உங்ககிட்ட மாறன் மாமா சொன்ன மாதிரி அவருடைய கம்பெனில வேலை செய்து இருக்கலாம்! அதனால நீங்க அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. வைதேகி மேடம் இப்ப நம்ம கிளம்பலாமா?” என்ற ரணதீரன் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றவனை வைதேகியும் அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து பின் தொடர்ந்தாள்.

வழியெல்லாம் குழப்பத்துடன் சென்ற வைதேகி, “ஏங்க ஒரு நிமிஷம் உங்ககிட்ட ஒரு கொலுசு கார்ல கிடைச்சதுன்னு கொடுத்தேனே அந்தக் கொலுச கொடுக்க முடியுமா?” என்று வைதேகி கேட்க,
“எந்தக் கொலுசைப் பத்தி பேசுறீங்க மேடம்?” என்று எதுவும் தெரியாததை போலக் கேட்டான் ரணதீரன்

” சார் காலைல உங்க ஜிப் ரிப்பேர் ஆனதும் நம்ம ஒரு கார்ல வந்தோமே, அந்தக் கார்ல எனக்கு ஒரு கொலுசு கிடைச்சுதுன்னு உங்க கம்பெனில வச்சு உங்க கையில அந்தக் கொலுசைக் கொடுத்தேனே, மறந்துட்டீங்களா? ” என்று வைதேகி அவன் முன்னே நின்று தைரியமாகக் கேட்டாள்.

“எந்தக் கொலுசு மேடம், எனக்கு எதுவும் தெரியாது, சும்மா நடுரோட்டுல நின்னு உளறிக்கிட்டு இல்லாம வாங்க டீ எஸ்டேட்க்கு போகலாம். எனக்கு உங்களுக்குச் சேவை செய்றதை தாண்டியே வேற வேலை இருக்கு”என்றவன் வேகமாகத் தன் டீ எஸ்டேட்டை நோக்கி நடந்தான்.

வைதேகி இங்கு வந்ததிலிருந்து ரணதீரன் அவளிடம் பேசாமல் கோபமாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு சில மர்ம செயல்களும், இன்று அவள் கண்டெடுத்த கொலுசை ரணதீரனிடம் கொடுத்தும் அவன் இல்லை என்று சமாளிப்பதும், ரணதீரனுக்கு தெரிந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் ஒரு வீட்டில் இறந்து கிடப்பதும் வைதேகிக்கு மேலும் மேலும் குழப்பத்தை உண்டாக்கியது.

வைதேகி பல யோசனையில் ரணதீரனை பின் தொடர, இவர்கள் சில நிமிடங்களிலேயே எஸ்டேட்டை அடைந்தார்கள்.
ரணதீரன் தன் அம்மாவின் வார்த்தைக்கு இணங்கி அங்குள்ளவர்களை எல்லாம் வைதேகிக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அவளும் கடமைக்கென்று அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழக ஆரம்பித்திருந்தாள்

“ராஜா…மேடமை அழைச்சுட்டு போயி என்ன குடிக்கிறாங்கன்னு கேட்டுக் கவனிச்சுக்கோங்க நான் கொஞ்ச நேரத்துல வரேன்” என்ற ரணதீரன் வேகமாக வைதேகியை விட்டுத் தூரம் தள்ளிச் சென்றவன் சற்றும் தாமதிக்காமல் வேலுவை கைபேசியில் அழைத்தான்.

வேலுவிடம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்கு மேலாகக் கோபமான முகத்துடன் ரணதீரன் பேச, “ராணா… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று மறுமுனையில் பேசும் டிரைவர் வேலு கேட்டான்.

“என்னை நம்புற அளவுக்கு நான் உன்னையும் நம்புறேன் தான் வேலு. ஆனா இப்போ அது கேள்வி இல்லை,
அந்த ரம்யா செத்து கிடக்குறா, போதாக்குறைக்கு அவளோட கொலுசு நம்ம காருல இருந்ததை நம்ம வீட்டுக்குப் புதுசா வந்து இருக்குற அழகி கண்டெடுத்து கையில வச்சிருந்தா, நல்ல வேளை நான் அந்தக் கொலுசை வாங்கிட்டேன், இருந்தாலும் ரம்யா விஷயத்துல அவளுக்கும் அந்த விக்ரமுக்கும் என் மேல சந்தேகம் வந்த மாதிரி இருக்கு, எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ.நம்ம நைட் என் பங்களால மீதி விஷயத்தைப் பேசலாம்” என்ற ரணதீரன்
கைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

“வாங்க மேடம் டீக்குடிக்கிறிங்களா”என்று அங்கே பணியாற்றும் ராஜா கேக்க,
“எனக்கு வேண்டாம்” என்ற வைதேகி அந்த இடத்தைச் சுற்றி பார்த்தவள் மனநிலை குழப்பத்தில் தான் இருந்தது.

“நம்ம ஏன் இவ்ளோ யோசிக்கணும், நம்மளே நம்ம குடும்பத்துக்குப் பயந்து ஊரை விட்டு ஊர் வந்து இருக்கோம், இங்க இருந்து முதல்ல நம்ம எப்படியாவது கனடாவுக்கு பறந்து போறது எப்படின்னு யோசிக்கிறத விட்டுட்டு நமக்குத் தேவையில்லாத வேலையெல்லாம் இனி பார்க்கக் கூடாது” என்று தனக்குள் எண்ணிய வைதேகி டீ எஸ்டேட்டை சுற்றி பார்த்தாள்.

பருத்தியை கொண்டு நைய்யப்பட்ட வெள்ளை நிற ஆடையில் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையைப் போல இயற்கை அழகை ரசித்தபடி நின்று இருந்த வைதேகியை அங்குப் பணி புரியும் ஊழியர்கள் ஆச்சிரியமாகப் பார்த்து இருந்தார்கள்.

அவள் அழகை கண்டு அவர்கள் ஆச்சிரியப்படுவதை காட்டிலும் ரணதீரனுக்கு இப்படியொரு அழகி வருங்கால மனைவியாக அமைய போகிறாளா என்ற எண்ணம் தான் அவர்கள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தூரத்தில் இருந்தப்படியே ரணதீரனும் வைதேகியை பார்த்துக்கொண்டு தான் அவளை நெருங்கி வந்தான்.
அவன் கண்களுக்கு அவள் அழகோ அவள் நிறமோ அவனை ஈர்க்க வில்லை.
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த சிலர் ரணதீரன் அங்கு வந்ததும் மட மட வென அவர்கள் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

“மேடம் டீ எஸ்டேட்டை பார்த்துட்டிங்களா? போகலாமா?” என்று ரணதீரன் கேக்க,
“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு சார், இந்த இயற்கை அழகை பார்க்கும்போது ஏதோ ஒரு வித நிம்மதி மனசுக்குள் தோணுது” என்றவள் கைகளை மார்புக்கு நடுவே கட்டிக்கொண்டு இதமான தென்றல் காற்றை உள்ளுற ரசித்துக்கொண்டு இருந்தாள்.

அவள் பேசும் எந்த வார்த்தையும் ரணதீரன் காதில் வாங்கியப்பாடு இல்லை,
“மாலை நேரத்துல இந்த மலை பகுதியில சூடான தேநீர், மெல்லிய இசை, ஓரமா தீப்பந்தம், கையில நமக்குப் பிடித்த தமிழ் புத்தகம் அப்படியே இந்த இயற்கையோடு கலந்து அந்த நாளை அனுபவிக்கணும்” என்று வைதேகி கண்கள் மூடிப் பேசிக்கொண்டே போனாள்.

“அழகா இருக்குற எல்லாவற்றையும் எல்லா நேரமும் ரசிக்க முடியாது மேடம்.நீங்க ரசிக்கிற தென்றல் ஒருநாள் புயலாக மாறும்போது நீங்க ரசிப்பிங்களா என்ன? நீங்க ரசிக்கிற இசை ஒருநாள் ஒப்பாரியாகக் கேக்கும்போது உங்கனால ரசிக்க முடியுமா என்ன?
உங்களுக்கு இதமான சூட்டை தர அதே தீப்பந்தம் ஒரு வீட்டையே கொழுத்த பயன்படும்போது அதை உங்களால ரசனையோட பார்க்க முடியுமா சொல்லுங்க?” என்ற ரணதீரனின் வார்த்தையில் உள்ள வலியை அவன் கண்ணில் கண்டு கொண்டாள் வைதேகி.

“சும்மா எதாவது வாய்க்கு வந்ததை உளராமல் வாங்க போகலாம்” என்ற ரணதீரனை தொடர்ந்து வைதேகி மீண்டும் பொம்மைகள் செய்யும் கம்பெனிக்குள் நுழைந்தாள்.

இவர்கள் வரும் வரை காத்து இருந்த மாறனின் அம்மா கீதாவுக்கு அசதியாக இருந்த காரணத்தால் அங்குள்ள ஓய்வெடுக்கும் அறையில் அமர்ந்தப்படியே உறங்கிக் கொண்டு இருந்தார்.

“அத்த தூங்குறாங்க. இப்போ அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நீங்க இங்க வெயிட் பண்ணுங்க, அவங்க எழுந்ததும் நம்ம மதிய சாப்பாடுக்கு வீட்டுக்குப் போகலாம்” என்ற ரணதீரன் கீதாவின் அருகே வைதேகியை இருக்க செய்தவன் அந்த அறையிலிருந்து வெளியேறும் சமயம் அவனின் கைபேசி சிணுங்கியது.

ரணதீரன் போனை தன் கால் சட்டை பையிலிருந்து எடுக்கும் சமயம், காரில் வைதேகி கண்டெடுத்த ஒற்றை கால் கொலுசு கீழே வந்து விழுந்தது.

“சார் இதோ இந்தக் கொலுசைத் தான் சொன்னேன். இந்த மாதிரிக் கொலுசு தான் அங்க பார்த்த டெட் பாடி காலுல இருந்துச்சு” என்ற வைதேகி வேகமாக ரணதீரன் அருகே நெருங்கி வந்தவள் அவன் கையிலிருந்து அந்தக் கொலுசை வாங்க முயற்சித்ததும் அவன் உள்ளங்கையில் அந்தக் கொலுசை இறுக்கிப்பிடித்தபடி தன் தலைக்கு மேல் தூக்கிகொண்டான்.

“சார்… அந்தக் கொலுசைத் தாங்க” என்று வைதேகி கேக்க,
“இது கொலுசு இல்லை மேடம், இது என்னோட கைசங்கிலி”என்றவன் அவளை முறைத்து பார்த்தபடி மீண்டும் அதைப் பத்திரமாகத் தன் கால் சட்டையில் வைத்துக்கொண்டான்.

“சார் நீங்கப் பொய் சொல்றீங்க, அது உங்க கைச்சங்கிலி இல்லை, நான் கார்ல கண்டெடுத்த ஒற்றைக்கால் கொலுசு தான் அது” என்றவள் மேலும் ரணதீரனை நெருங்கிச் சென்று,

“இந்தக் கொலுசுக்கும் இறந்து போன ரம்யாக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா என்னுடைய உள் உணர்வு சொல்லுது” என்றபடி ரணதீரன் கால் சட்டை பையில் இருந்த கொலுசை எடுக்க முயன்ற வைதேகியின் கரங்களை ரணதீரன் இறுக பற்றியதும், அவன்மேல் கால் தடுக்கி வைதேகி விழப் போனவள், மேலும் தடுமாறி ரணதீரன் மார்பில் வைதேகி மொத்தமாகச் சாயந்த தருணம்,
“என்ன நடக்குது இங்க!?” என்று வாசலில் ஒலித்த குரலைக் கேட்டு ரணதீரனும் வைதேகியும் ஒருவரை பிரிந்து ஒருவர் விலகி நின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!