‘தலையிடாதே!’ என இதயத்தைத் துளைத்தபோதும், தன் பின்னாலே வந்து வீட்டிற்கும் அழைத்துவந்த தருணின் அன்பில் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் ரம்யா.
இரவு உணவுக்கு இட்லி செய்து அவளை உண்ணவைத்தவன், மருந்துகளை எடுத்துத்தந்து, பால் காய்ச்சி ஃப்லாஸ்கில் ஊற்றி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, என அவளுக்குத் தேவையான அத்தனை பணிவிடைகளையும் செய்தானே தவிர, மௌன விரதத்தை மட்டும் கைவிடவில்லை.
மருந்தின் வீரியத்தில் கண்கள் சொருக, படுக்கை அறையை நோக்கி மாடிப்படிகளை ஏறினாள் ரம்யா. கால்களை ஊன்றி ஏற முயன்றவளுக்கு அடிவயிற்றின் தையல்கள் சுருக்கென்று குத்தியது.
Advertisement
கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு மெல்ல அடிமேல் அடிவைத்து ஏறும் தோழியின் சிரமத்தைக் காண சகிக்காமல், ஓடிவந்து கைதாங்கலாக உடன் நடந்தான் தருண்.
‘கடவுளே கைவிட்டாலும், உனக்காக நிற்கும் ஜீவன் இவனை நீ விட்டுக்கொடுத்திருக்கலாமா ரம்யா?’ மனசாட்சி ஏச,
“அவளோட காதலும் புரிதலும் எத்தனை உன்னதமானது உனக்குத் தெரியுமா?” குரலை உயர்த்தினாள்.
வெடுக்கென்று திரும்பி தோழியைப் பார்வையால் சுட்டெரித்தவன், “என்ன பெரிய காதல். ப்ரேகப் ஆனதும் அவங்க ஜாதியிலேயே ஒருத்தர கல்யாணம் செஞ்சுகிட்டு, மூணு குழந்தைகளை பெத்துகிட்டா. இவன்தான் நாலு வருஷமா தேவதாஸ் கணக்கா சுத்திட்டு இருந்தான்,” இடித்துக்காட்டினான்.
பதில்கூறாமல் தன் அலமாரியிலிருந்து ஒரு பழைய நோட்டுப்புத்தகத்தை எடுத்தவள், மடமடவெனப் பக்கங்களைத் திருப்பினாள். ஒரு சில பக்கங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை பேப்பர் கிளிப் கொண்டு மறைத்து எடுத்துவந்து,
“இது உன் தேவதாஸ் அண்ணணோட காதல் காவியம்,” அவன் பாணியிலேயே பதில் சொன்னாள்.
“இது உனக்கும் உன் கணவருக்கும், அவர் முன்னாள் காதலிக்குமான அந்தரங்கம். இதைப் படிக்க நான் யார்!” தருணும் அவளைப் போலவே இடித்துக்காட்ட,
“அதான் சாரி சொல்லிட்டேன்லடா,” முகம் சுருக்கியவள், “ப்ளீஸ் எனக்காகப் படிச்சுப்பாரு தருண்,” அவன் கையில் திணித்தாள்.
பேப்பர் க்ளிப் கொண்டு அவள் மறைத்திருக்கும் பெரும்பாலான பக்கங்களை இருவிரல்களில் பிடித்துக் காட்டி, “என்ன செஞ்சிருக்க?” எனப் புருவங்களை உயர்த்தி மிரட்டினான்.
“அதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ். நீ படிச்சு தெரிஞ்சுக்க வேண்டியதை மட்டும் குறிச்சு கொடுத்திருக்கேன்,” அவள் சொல்லவும்,
வெகு நாட்களுக்குப் பிறகு, இயல்பாகப் பேசி வம்பு செய்யும் தோழியின் குறும்பில் நெகிழ்ந்து புன்னகைத்தான் தருண்.
“குட் நைட் ரம்யா,” நோட்டுப் புத்தகத்துடன் அவன் நகர,
நண்பனின் முகத்தில் சிரிப்பைக் கண்டவள், “இமோஷனலாகி அழுதீனா, நோட்டை மூடிவச்சிட்டு அழு. அந்தக் காதல் காவியத்தை உன் கண்ணீரால் அழுச்சிடாதே,” மனம் மாறுவான் என்ற பெரும் நம்பிக்கையுடன் எச்சரித்தாள்.
“கோபம் வந்தால் கிழிச்சு போட்டுடுவேன். சம்மதமா!” அவனிடமும் அதே உறுதி.
“என் ஃப்ரெண்டுக்குக் கண்டிப்பா கோபம் வராது!” பெருமிதத்துடன் சவால்விட்டாள்.
மார்ச் 03, 2000
காதல் பல பேரதிசயங்களை நிகழ்த்தும்னு இன்னைக்குக் கண்கூடா பார்த்துட்டேன்.
குலம், கோத்திரம்னு சாக்குச்சொல்லி எங்க காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போகும் பானு வீட்டாளுங்களுக்குத் திடமா பதில்சொல்ல, ஒரு வக்கீல் கணக்கா ஒத்திகை பார்த்துட்டுப் போனேன். ஆனால் அவங்களோ, உங்களை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தம்பின்னு சம்மதம் சொன்னதோடு மட்டுமில்லாம என்னையும் பானுவையும் உடனே மோதிரம் மாத்திக்க சொல்லி, கல்யாணத்தை என் குடும்ப வழக்கப்படி செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க.
‘இத்தனை சுலபமா சம்மதம் கிடைக்கும்னு தெரிஞ்சியிருந்தா, நீ ப்ரபோஸ் பண்ண அன்னைக்கே வீட்டுல சொல்லிட்டு, உன்னைத் திகட்டத் திகட்டக் காதலிச்சிருப்பேன்டான்னு காலையிலேயே என்னைத் தேடி வந்துட்டா என் பானு.
அதுக்கு மேல ட்ரெயினிங்குக்கு சைட் பக்கம் போக மனசு வருமா! அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் லவ் ஃபீவர்ன்னு, லீவு போட்டுட்டு என் கண்மணியை சைட் அடிக்க கிளம்பிட்டேன் . நாலு வருஷத்து காதலை நாலு மணி நேர பைக் பயணத்துல ஆசைத்தீர வாழ்ந்தோம்.
அண்ணனின் எதுகை மோனையில் பிரமித்தவனாய், ஆர்வம் மேலோங்க, அடுத்த பக்கத்தைத் திருப்பினான். அவன் விரல்களுக்கு, ரம்யா குத்தியிருந்த க்ளிப் வேகத்தடையிட்டது.
‘சதிகாரி! முக்கியமான சீன்ல சீல் வச்சுட்டீயே,’ சிரித்துக்கொண்டே சுமார் இருபது பக்கங்களைக் கடந்துவந்தான்.
மார்ச் 18, 2000
இன்றும் கானல் நீரானது!
பிஸினஸ் பொறுப்பை ஏற்கச்சொல்லி அப்பா இன்னைக்குப் புது பிராஜக்ட்டுக்கான சைட் பிளான் காட்டி விளக்கிட்டு இருந்தார்.
சரி சரின்னு தலையாட்டிட்டிருந்த எனக்கு பானு நினைப்பாவே இருந்துது.
டாக்டருக்குப் படிச்சிட்டு இருக்குற அவளுக்கு என் கையாலேயே ஒரு ஹாஸ்பிடல் கட்டித்தந்தால் எப்படி இருக்கும்னு யோகிச்சிட்டு இருந்தேன்.
அதே நினைப்பில், “அப்பா! இங்க அம்பூலேன்ஸ் பார்க்கிங்க்கு இடம் ஒதுக்கினால் நல்லா இருக்கும்னு சொன்னேன்,”
“ஷாப்பிங்க் மாலுக்கு எதுக்குடா ஆம்புலன்ஸ் பார்க்கிங்க்னு,” அப்பா என்னைப் பார்த்தாரே ஒரு பார்வை…
எமெர்ஜென்சி சிடுவேஷன்; சேஃப்டி; அது இதுன்னு சமாளிச்சுட்டு எஸ்கேப் ஆனதுதான்.
சென்னைக்கு வந்து ஒருவாரம் ஆகப்போகுது. நாளைக்காவது அப்பாகிட்ட எங்க காதலைப்பற்றி சொல்லணும்.
‘அப்போ அப்பாதான் வில்லனா,’ ஆர்வமாகப் பக்கத்தைத் திருப்பியவனை மீண்டும் பேப்பர் க்ளிப் தாக்க,
‘அடியேய்!’ தோழியைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே படிக்கக்கூடிய அடுத்த பக்கத்திற்கு வந்தவனின் முகம், முதல் வரியை படித்ததும் யோசனையில் சுருங்கியது.
மார்ச் 23, 2000
எதிரிக்கும் இப்படியொரு சோதனை வரக்கூடாது!
என்னை வாசலில் பார்த்ததும் ஓடிவந்து என் மார்பில் சாய்ஞ்சு, “என் அக்காவுக்கு நானே எமனாகிட்டேன் ஷ்ரவன்,” கதறி அழுதாள் என் பானு.
“பிரசவமாகி ஒரு மாசத்துக்கு அப்புறம் அவங்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாகி போஸ்ட்பார்டம் ஹெம்மரேஜ் ஆகும்ன்னு யாருமே எதிர்பார்க்கல, பானு. இதுல உன் தப்பு ஒண்ணுமே இல்லம்மா,” ஆறுதல் சொன்னேன். என் ஆறுதல் வார்த்தை எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையா போச்சு.
அப்போ அந்த ட்வின்ஸ் அவங்க அக்காவோட குழந்தைகளா! பதறிய தருணுக்கு, அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அண்ணன் ஏன் குழந்தைகளை வளர்த்து உதவ முன்வரவில்லை என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அதிருப்தியுடன் மறுபக்கம் திருப்பினான்.
ஏப்ரல் 01, 2000
மில்லினியத்தின் தலைசிறந்த முட்டாள்ன்னு பட்டம் வாங்குற பத்துப் பொருத்தமும் எனக்கு இருக்கு.
வழிச்சொல்லப் போய் என்னையே வம்பில் மாட்டிவிட்டுட்டாரே பானுவோட மாமா. நல்லதுக்கே காலம் இல்லை.
தங்கியிருந்த ஒரு வாரமும் என்ன ஒத்தாசி செய்யறதுன்னு தெரியாமல் குழந்தைகளுக்குப் பால் ஊட்டுறது, தூங்க வைக்கிறது, டயாப்பர் மாத்துறதுன்னு குழந்தைகளையே சுத்தி சுத்தி வந்தேன்.
பானுவோட கவனத்தைத் திசைதிருப்ப அதுவே நல்ல மருந்தாவும் இருந்துது. இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தைகளைப் பார்த்துக்கிட்டதுல, எனக்குள்ள ஒரு இனம் புரியா உணர்வு.
கல்யாணமானதும் குழந்தைகள் நம்மளோடவே வளரட்டும்ன்னு பானுகிட்ட சொன்னேன். கட்டியணைச்சு கதறியவளின் இறுகிய பிடியில், எத்தனை நாளா இதை நான் சொல்லுவேன்னு காத்துட்டு இருந்தான்னு புரிஞ்சுது. வந்தவுடனே சொல்லிருக்கணுமோ!
ஏதோ கடவுளைப் பாக்குற மாதிரி அவ அம்மாவும் அப்பாவும் எனக்கு மாறி மாறி நன்றி சொல்ல, என் முடிவுக்குச் சம்மதம் சொன்ன என் சகலை,
“ஆனால் நீங்களும் ஷர்மியும் இந்த ஊரில் தங்கி குழந்தைகளை வளர்க்கணும் ஷ்ரவன். என் குழந்தைகளுக்கு அப்பா நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்றத மறந்துடாதீங்க. என் குழந்தைகள் எங்க மத வழக்கப்படி வளர்க்கணும்னு விரும்புறே”ன்னு சென்டிமென்ட்டா மடக்கினாரு.
“அதுக்குன்னு சென்னையில் என் அப்பா பிஸினஸ் கவனிக்காம உங்களோட திருச்சியில் தங்க முடியுமா”ன்னு கேட்டதுக்கு, பானுக் கூட எனக்காகப் பேசாம அமைதியா இருந்துட்டா. அதை நினைக்கும் போதுதான் மனசு ரொம்ப வலிச்சுது எனக்கு.
என் கடமைகளை உதறி தள்ளிட்டு வரச்சொல்றியான்னு பானுகிட்ட வாய்விட்டுக் கேட்டேன்.
பிஞ்சுக் குழந்தைகளை வளர்க்க நினைக்கிற என் கடமையை விட உனக்கு உன் பிஸினஸ் தான் முக்கியமா. எனக்காக இதைக் கூடச் செய்யமாட்டியாடான்னு அவ அழுததும் என் மனசு உடைஞ்சிடுத்து.
ரெண்டுபேரோட கடமையும் முக்கியம்தானே. முதலில் ரெண்டு பேரும் அவரவர் கடமைகளில் கவனம் செலுத்திட்டு, ஐந்தாறு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் செஞ்சுக்கலாம்; அதுக்குள்ள குழந்தைகளும் வளர்ந்துடுவாங்க; இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருக்கட்டும்னு மறுயோசனை சொன்னேன்.
குழந்தைகளை எங்கேயும் அனுப்பமாட்டேன்னு அவள் மாமா தீர்மானமா சொல்ல, நம்மளே வளர்க்கலாம்னு சொன்னது எல்லாம் வெளிவேஷமான்னு என் அருமை காதலி என்னைக் குற்றவாளி கூண்டில் நிறுத்த, எல்லார் கண்ணுக்கும் வில்லனாகத் தெரிஞ்சேன் நான்.
‘எல்லாருக்காகவும் யோசிச்சு யோசிச்சு பேசின நீ என் கண்ணுக்கு ஹீரோவா தெரியுறடா அண்ணா,’ நெக்குருகிய தருண், அடுத்த படிக்கக்கூடிய பக்கத்தைத் திருப்பினான்.
ஏப்ரல் 14, 2000
நான் பிடிப்பது பிடிவாதம் என்றால், பிடிக்கொடுக்காமல் பேசும் அவள் வாதம் எதில் சேரும்?
எங்களுக்குன்னு குழந்தைகள் வேண்டாம்னு முடிவெடுத்தெடுட்டேன்னு அவகிட்ட சொன்னேன்.
சொன்னதை செய்யாமல் பெரிய அதிகப்பிரசங்கி மாதிரி முடிவெடுக்கிற உன்னை யாரும் தியாகின்னு தலையில் தூக்கி வச்சு கொண்டாடமாட்டாங்க ஷ்ரவன்னு அவ என் காதலை கொச்சைப்படுத்திட்டா.
விளக்கம் சொல்ல நான் வாய்திறக்கும் முன், “நான் கேட்டதை செய். இல்லேன்னா என்னை மறந்துடு ஷ்ரவன்னு,” தீர்க்கமா சொல்லிட்டு ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா.
என்னால தாங்கவே முடியல.
இருவரின் தர்மசங்கடமான நிலையைப் படித்த தருணின் விழியோரம் மழைச்சாரல் எட்டிப்பார்த்தது. இத்தனை நடந்தும், வீட்டில் எதையும் சொல்லாமல், அண்ணன் இந்தத் துயர் நிலையிலிருந்து எப்படி மீண்டு வந்தான் என அறிய முடியாத அளவிற்கு மீதியிருந்த பக்கங்கள் பேப்பர் கிள்ப்க்குள் அகப்பட்டுக்கிடந்தன.
அடுத்தென்ன நடந்தது எனத் தெரியாமல் மண்டையே வெடித்தது அவனுக்கு.
“கொஞ்ச நாளைக்கு கீழேயே கெஸ்ட் ரூமில் படுத்துக்குறேன்டா. மாடி ஏறி இறங்கினால் அடிவயிறு ரொம்ப வலிக்குது,” என்றாள் காபியை அருந்தியபடி.
தலையசைத்தவனுக்கு ‘இதெல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாமே!’ என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“தருண்ண்ண்ண்,” அவள் உலுக்கியதில் சுயத்திற்கு வந்தவன், அவளுக்குத் தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துவருவதாகச் சொல்லி நழுவப் பார்த்தான்.