Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 17

ஓம் ஸ்ரீ சாய்ராம்

மாப்பிள்ளையும் தங்குகிறார் என அறிந்த சாருலதாவுக்குத் தலைகால் புரியவில்லை. வரவேற்பு விழாவில் வயிறுமுட்ட சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறேன் எனச் சொல்லியும் லோட்டா நிறைய மசாலா பால் பரிமாறி உபசரித்தார்.

மாமியாரின் அன்புத்தொல்லைகளைச் சிரித்த முகமாக ஏற்றவனின் சிந்தனையும் பார்வையும் மட்டும் மனையாளையே தழுவி இருந்தது.

“உண்மையிலேயே பவர் கட்டுக்காக மட்டும்தானா என்னை இங்க தங்கச் சொல்லிருக்கா?” ரம்யாவின் வீட்டை வந்தடையும் தருவாயில் உத்ரா அழைத்துப்பேசியதை அசைபோட்டான்.



Advertisement

அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது என்றும், மின்வெட்டு இரவுவரை நீடிக்குமென அறிவித்திருப்பதாகவும் தெரியப்படுத்திய உத்ரா, அவனை அங்கேயே தங்குமாறு யோசனை சொன்னாள். ஷ்ரவன் மறுத்துக்கொண்டிருக்க, தன்னுடனே தங்கச்சொல்லி அவர்கள் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் ரம்யா.

பாவையின் உள்நோக்கம் அறிய, மசாலா பால் உறியும் சாக்கில் அவளையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

உணவு மேஜையில் அமர்ந்தபடி யாருடனோ அலைபேசியில் பேசிமுடித்தவள் அமைதியாக மாடி ஏறினாள். மாடிப்படிகளுடன் சேர்ந்து அவள் உருவமும் மெல்ல மறைந்தது. எந்தப் பக்கம் திரும்பினாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.

Advertisement

விபத்துக்குப் பின் மாமியார் வீட்டிற்கு வந்த சமயங்களில் எல்லாம் வரவேற்பறையில் அமர்ந்தபடி அளவளாவிவிட்டு கிளம்பிவிடுவான். பாத்ரூம் எங்கே இருக்கிறது என்பதை கூட அறிந்திருக்கவில்லை. இந்த லட்சணத்தில் இரவு முழுவதையும் ஓட்டவேண்டும் என்று நினைக்கும்போதே விழிபிதுங்கியது.

Advertisement

அவள் வரும்வரை நேரத்தைக் கடத்தவேண்டுமே என்ற தவிப்பில், எவ்வளவுக்கு எவ்வளவு மெல்லமாக முடியுமோ, அந்த மசாலா பாலை சொட்டுச் சொட்டாக உறிஞ்சுக்கொண்டிருந்தான்.

இருபது நிமிடங்களில் கீழே வந்த அவன் சரிபாதி, “குடிச்சு முடிச்சுட்டிங்களா,” டம்ளருக்காக கையை நீட்ட, ஒரேமூச்சில் மிச்சத்தை விழுங்கி டம்ளரை அவளிடம் தந்தான்.

“நீங்களும் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ஷ்ரவன். ரெண்டு பேரும் சேர்ந்து மேட்ச் பார்க்கலாம்,” ரவிச்சந்திரன் சொல்லத்தான்,

Advertisement

எதைப்பற்றியும் யோசிக்காமல் தங்குவதற்கு ஜம்பமாகத் தலையசைத்து விட்டோமே என உணர்ந்தான்.

கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது என்றால் கொள்ளைப் ப்ரியம் அவனுக்கு. ஆனால் மாற்று உடைக்கு எங்கே போவது என யோசித்தவன், “இல்லப்பா. எனக்குக் கண்ணு சொக்குது,” என மழுப்பினான்.

சாக்குச் சொன்னவனுக்கு, எங்கே உறங்குவது எனத் தெரியவில்லை. வீட்டைச் சுற்றிமுற்றி பார்த்தான்.

“பத்து நிமிஷம் ஷ்ரவன். மெடிகல் ஷாப்லேந்து மருந்து எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன்,” என்றவளின் அக்கறையில் நெக்குருகிப் போனான்.

அன்றைய பொழுதுக்கு அவன் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை மட்டும் தந்துவிட்டு, பையை மடக்கியவள், பெற்றவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லி, “வாங்க தூங்கப்போகலாம்,” என அழைத்தாள்.

பாவையின் பன்மை மொழியில் உச்சிகுளிர்ந்தவனாகப் பின்தொடர்ந்தவன் நேராகப் படுக்கையில் சரிய,

“ப்ரெஷ் பண்ணல; குளிக்கல; அப்படியே போய் படுக்குறிங்களே,” கண்களை உருட்டினாள்.

பெருமூச்சுடன் எழுந்தவன், “மறதி எனக்கா உனக்கா?” என்றான்.

அவள் புரியாமல் விழிக்க, “வெறுங்கையுடன் வந்திருக்கேன் ரம்யா,” கையை விரித்தான்.

எதிர் பக்கத்துச் சுவற்றோரம் இருக்கும் தேக்குமர அலமாரி அருகில் வேகநடையிட்டவள், அதைச் சடாரென்று திறந்து அவனை வரச்சொல்லி கண்ணசைத்தாள்.

புருவச் சுளிப்புடன் அடியெடுத்து வைத்தவன், அலமாரியில் நிரம்பியிருந்த தன் துணிமணிகளைக் கண்டு மலைத்து நின்றான்.

என்ன இல்லை என்று கேட்கும் அளவிற்கு, தினப்படிகள் முதல் அலுவகத்திற்கு அணியக்கூடிய கோட்டு சூட்டு வரை அனைத்தும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

வியப்பு குறையாமல் நின்றிருந்தவனிடம், “இதுவும் நம்ம வீடுதான் ஷ்ரவன்,” என்றாள் யாசிக்கும் குரலில்.

“ஆனால் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட அம்மா அப்பா கனடால செட்டில் ஆயிட்டதா சொன்னாங்களே,” நெற்றி சுருக்கினான்.

“ஆமாம்! ஏழு வருஷமாச்சு.  நமக்கு இப்படி ஆனதுனால மாசக்கணக்கா இங்கேயே இருக்காங்க. மற்றபடி அவங்களுக்கு இது வெகேஷன் ஹோம்; நமக்கு இது ஹனிமூன் ரிசார்ட்,” ஒரு வேகத்தில் சொல்லிவிட்டுப் பற்களைக் கடித்துக் கொண்டாள்.

உதடு பிரிக்காத புன்னகையுடன் அவள் முகபாவனைகளை ரசித்தவன், அலமாரியிலிருந்து உடைகள் எடுத்துக்கொள்ள,

கடை பையில் வைத்திருந்த ப்ரெஷ், சோப் இரண்டையும் எடுத்து அவன் கையில் திணித்தாள்.

தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறாளே என்ற சிந்தனையுடன், சோப்புக் கட்டியைப் பந்தாடியவன், “இத்தனை தூரம் விதிமுறைகளைத் தளர்த்திக்குறதுக்குப் பதிலா, ஆட்டத்தையே மொத்தமா நிறுத்திடலாமே ரம்யா,” ஏக்கம் வழியக் கேட்டான்.

“அவசியமிருக்குறதுனால விதிமுறைகளை தளர்த்திட்டிருக்கேன் ஷ்ரவன். நீங்க மறுபடியும் ஆரம்பிக்காதீங்க,” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“எது அவசியம்! ஒருநாள் பவர்கட்ல நான் என்ன செத்தாபோயிடுவேன்,” கோபம் சுள்ளென்று ஏறியது அவனுக்கு.

“ஷ்ரவன்!!!” துடிதுடித்தாள் பாவை.

“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு ரம்யா,” கடிந்தவன் விருட்டென குளியலறைக்குள் புகுந்தான்.

குளிர் நீரில் குளித்தும் அவன் கோபம் தணியவில்லை. கடமைக்காக பழகுபவளிடம் காதலைத் தேடித் தேடி அவமானப்படுகிறேனே என எரிச்சலுடன் குளித்துமுடித்தவன், அறைக்கதவருகே நடந்தான்.

“சண்டை வேண்டாமே ப்ளீஸ்,” கெஞ்சினாள் பாவை.

அவளை முறைத்துவிட்டு வசிப்பறைக்குப் பறந்தான்.

“தூக்கம் வருதுன்னு சொன்னீங்களே…” ரவிச்சந்திரன் புன்னகை முகமாய் வினவ,

“குளிச்சதும் தூக்கம் கலைஞ்சிடுத்து ‘ப்பா,” என்றவன், “டாஸ் போட்டுட்டாங்களா? யாரு முதல்ல பேட்டிங்க்,” உற்சாகம் பொங்க அமர்ந்துகொண்டான்.

அவன் அதிர்ஷ்டம், ஒருமணி நேரத்தில் மழை பெய்ய, கிரிக்கெட் மேட்ச் பின்னொரு நாளுக்கு ஒத்திப்போடப்பட்டது. உறங்கச்சென்ற ரவிச்சந்திரன், மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஷ்ரவனை அவர்கள் படுக்கை அறைவரை வந்து விட, வேறு வழியில்லாமல் பெண்மான் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டியதாயிற்று அவனுக்கு.

தினசரியின் குறுக்கெழுத்துப் புதிரும் கையுமாகக் கொட்டை கொட்டை என முழித்துக்கொண்டிருப்பவளைக் கண்டதும் திடுக்கிட்டான்.

வலையில் சிக்கிக்கொள்ளாதே எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் அவளைக் கடந்து செல்லக்கூட இல்லை.

“உங்களால ஏசி இல்லாம தூங்கமுடியாது. ராத்திரி சரியா தூங்கலேன்னா தலைவலியில் அவஸ்தைப்படுவீங்க. அப்படியே அசந்து தூங்கினாலும், கொஞ்சம் வியர்த்துக் கொட்டினாலும் சட்டுன்னு ஜலதோஷம் பிடிச்சு சைனஸ் இன்ஃபெக்ஷன் வந்துடும். இப்போ உங்களுக்கு இருக்குற நிலைமையில் ஜுரம் தலைவலின்னு அநாவசியமா எந்த மாத்திரையும் போட்டுக்கக் கூடாதுன்னு டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு,” படபடவென ஒப்பித்தாள்.

அவள் பேசி முடிக்க காத்திருந்தவன் எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாகப் படுக்க,

“ஏதாவது பேசுங்க ஷ்ரவன்,” பனித்த கண்களுடன் அவனருகே தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“எல்லாத்தையும் காதலோட செஞ்சிட்டு, கடமைக்காக செஞ்சேன்னு பொய்சொல்ற உன்கிட்ட பேச எதுவுமில்ல,” எனக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

மனம்திறந்து பேசவில்லை என்றால் தன்னை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிவிடுவான் என அஞ்சியவள்,

“ஆமாம் ஷ்ரவன். மலையளவு காதலோடத்தான் செய்யறேன். ஆனால் கூடவே, அந்தக் காதல் காலத்துக்கும் நிலைச்சு நிக்குமான்னு உள்ளுக்குள்ள பதறுது,” எனக் கண்களைச் சுருக்கினாள்.

மறுகணமே கண்களைத் திறந்துகொண்டவன், “மறந்திருந்தாலும் நீதான் வேணும்னு உன் பின்னாடியே சுத்தி சுத்தி வரேன்னே ரம்யா. இன்னுமா உனக்கு என்மேல நம்பிக்கை வரல,” ஆற்றாமையுடன் கேட்டான்.

அவனது கருவிழிகளை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறினாள் பெண்.

எழுந்து அமர்ந்து அவள் முகவாயைக் கண்பார்க்க நிமிர்த்தியவன், “என்ன செஞ்சா நீ என்னை நம்புவன்னு வாய்திறந்து சொல்லு,” என்றான்.

“….”

“மனசு வலிக்குதுடி!” அவன் நொந்துபோகவும், மங்கை தேக்கிவைத்த துக்கம் எல்லாம் விழிநீராய் பொழிந்தது.

“உங்கமேல எந்தத் தப்புமில்ல ஷ்ரவன். தப்பெல்லாம் என்னுடையது; நிலையில்லாத என் எதிர்பார்ப்புகளால்,” என விசும்பினாள்.

“புரியலையே,” அவன் புருவங்கள் சுழிக்க,

“இந்த நாலுமணி நேரம் நடந்த விஷயங்களை மட்டும் யோசிச்சாலே உங்களுக்கு என் நிலைமை புரியும் ஷ்ரவன்.

சந்திக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு உங்களை நேருல பார்த்ததும் மனசுக்குள்ள அத்தனை சந்தோஷப்டுறேன். நானே வலிய உங்க கைகோத்துட்டு நடக்குறேன். அதே நீங்க தோளுல கைப்போடும் போது பதறி விலகுறேன். பத்து நிமிஷம் சிரிச்சுப் பேசினால் இருபது நிமிஷம் சண்டைபோடுறேன்.

விதிமுறைகளைப் போட்ட நானே அதை உடைக்கிறேன். அதை நம்பி நீங்க ஆசையா நெருங்கும்போது உங்க மனசு நோகும்படி வெறுத்துப்பேசுறேன். இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மனச மாத்திக்குற என்மேலதான் எல்லா தப்பும் ஷ்ரவன்,” தன் தவிப்புகளை விளக்கினாள்.

“அதான் ஏன்னு கேக்குறேன் ரம்யா?”

“ஏன்னா அடிமனசுல என்னுடைய ஷ்ரவனை மீட்டெடுக்கணும் எதிர்பார்க்கிறேன். ஆனால் மறுபிறவி எடுத்திருக்கும் இந்த ஷ்ரவனோட வசீகரப் பேச்சிலும் சிரிப்பிலும் நெருக்கத்திலும் என்னை நானே பறிக்கொடுத்துடுறேன்.

வெளித்தோற்றம் மட்டும் போதும்னு மயங்குற அளவுக்கு இத்தனை சபலமா உனக்குன்னு மனசாட்சி குத்துது. ஆயிரம்தான் இருந்தாலும் இது நான் நேசிச்ச ஷ்ரவன் இல்லையேன்ற ரியாலிடி கண்முன்ன வர, என் மனக்குமுறலை மறைக்க உங்கள கத்திடுறேன் ஷ்ரவன்,” தன் மனப்போராட்டத்தை வெளிப்படையாக உரைத்தாள்.

அனைத்தையும் ஆழமாக உள்வாங்கி பெருமூச்சுவிட்டவன், “சரி! ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்து ரம்யா. உனக்கு உன் ஷ்ரவன்தான் வேணுமா; இல்ல இந்த ஷ்ரவனைப் பெரியமனசு பண்ணி ஏத்துப்பீயா?” என்றான்.

“எனக்கு என் ஷ்ரவன்தான் வேணும்,” அவள் கொஞ்சிப்பேச,

தலையணை ஒன்றோடு கதவை நோக்கி நடந்தான்.

“என்ன செய்யறிங்க ஷ்ரவன்,”

“இந்த புது ஷ்ரவன் இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டான்,” என்றான்.

“புது ஷ்ரவன ஏத்துக்க முடியாதுன்னு தானே சொன்னேன். தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சொல்லலையே,” உதட்டைப் பிதுக்கினாள் பாவை.

நெருங்கியும் வராமல் விலகவும் விடாமல் பாடாய்ப்படுத்துகிறாளே என உதட்டுக்குள் சிரித்தபடி தலையைச் சிலுப்பிக்கொண்டவன், “உனக்கு என்னதான் வேணும் ரம்யா,” என்றான்.

“எனக்கே தெரியல ஷ்ரவன்,” சொல்லும்போதே கண்களில் நீர் கோத்துக்கொண்டது அவளுக்கு.

என்ன செய்வதென்று சுற்றிமுற்றி கண்களைச் சுழலவிட்டவனுக்கு அவள் மேஜைமேல் வைத்திருந்த தினசரி தென்பட்டது.

“மேடம் இன்னைக்கு எத்தனை க்ளூஸ் சால்வ பண்ணிருக்கீங்கன்னு பார்க்கலாம்,” கூறிக்கொண்டே அதைத் திறந்தான்.

வழக்கம்போல நாலு விடைகளை நிரப்பாமல் விட்டிருந்தாள்.

“இத்தனை தூரம் கண்டுபிடிக்கிறவளுக்கு இந்த நாலு கண்டுபிடிக்க என்ன கஷ்டமோ தெரியல,” திட்டிக்கொண்டே அவளருகில் வந்தமர்ந்தவன்,

“இந்த க்ளூவ நல்லா கவனி. பாஸ்ட் டென்ஸ்ல முடியுது. அப்போ ஆன்ஸர் எதுல முடியும்,” என வினவினான்.

“அதுவும் பாஸ்ட் டென்ஸ்ல தான்…” அவள் சொல்லவும்,

“அவ்வளவுதான்!” என நிரப்பியவன், அதை ஒட்டியிருந்த அடுத்த புதிரைச் சுட்டிக்காட்டி கேள்விகளைத் தொடுக்க, ஒருநிமிடத்தில் மற்ற மூன்று வார்த்தைகளையும் கண்டுபிடித்திருந்தாள் அவன் சரிபாதி.

முந்தைய தினங்களின் குறுக்கெழுத்து புதிர்களையும் பாதியில் விட்டிருப்பாள் என யூகித்தவன், அவற்றைத் தேடி மேஜையில் துழாவ,

“இன்னைக்கு இதுபோதும்,” என்றாள்.

“தூக்கம் வருதா?”

“தூக்கம் வரல! ஆனால் உங்கமேல வரும் லிரில் சோப் வாசத்துல எனக்கு என்னென்னமோ பண்ணுது,” சிணுங்கி மெத்தையின் நடுவில் இரண்டு பெரிய தலையணைகளை வைத்தவளின் வெகுளித்தனத்தில் பக்கென்று சிரித்துவிட்டான்.

வேண்டுமென்றே தலையணைகளை அகற்றி பாதி மெத்தையை ஆக்கிரமித்துக்கொண்டு மல்லாந்து படுத்து வம்பிழுத்தான்.

“என்ன ஷ்ரவன் இது! ஓபனா பேசினால் சீண்டுறீங்களே,” நெளிந்தாள்.

“உருளுவதுபோல பாவலா செய்து, தலையில் கைவூன்றி ஒருக்களித்தவன்,

“இன்னைக்கு ரிசப்ஷ்னல மேடம் மல்லிகையும் ஜவ்வாதுமா உரசி உரசி நடக்கும்போது இந்த ஜீவன் எவ்வளவு டிஸ்டர்ப் ஆனேன் தெரியுமா?” உச்சுக்கொட்டினான்.

இத்தனை தூரம் ரசித்திருக்கிறானா எனச் சிலிர்க்கவே செய்தது அவளுக்கு.

“அதுக்கு இப்போ பழிக்குப் பழி வாங்குறீங்களா,” என முறைத்தாள்.

“செல்ஃப் கன்ட்ரோல் சொல்லித்தரேன் செல்லப் பொண்டாட்டி,” என அவள் தலையில் வாஞ்சையாகக் குட்டி, மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டான்.


மறுநாள் காலை உணவு மேஜைக்கு வந்தும் அவர்கள் செல்லச் சண்டைகள் ஓயவில்லை.

“உனக்காகவே ரெண்டுமுறை சோப் போட்டுக் குளிச்சிட்டு வந்திருக்கேன்,” பக்கவாட்டில் அமர்ந்துகொண்ட சரிபாதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

“பாதி சோப்பு கரைஞ்சிருக்கும் போதே நெனச்சேன், இப்படி ஏதாவது செஞ்சிருப்பீங்கன்னு,” அவள் கண்களை உருட்ட,

“மீதியும் காலி பண்ணிருப்பேன். நான் கிளம்பினதுக்கு அப்புறமும் நீ தவியா தவிக்கணும்னுதான் விட்டு வச்சிருக்கேன்,” அவனும் விடாமல் சீண்ட,

“உங்கள…” என காலி டம்ளரினாலேயே நறுக்கென்று அவன் உச்சி மண்டையில் கொட்டினாள்.

மாப்பிள்ளைக்குப் பரிமாற மொறுமொறு தோசையுடன் வந்த சாருலதா, மகளின் செய்கையைக் கண்டதும், “அவர் என்ன உன் புருஷனா ஸ்டுடென்டா. கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம தலையில் கொட்டுற,” அதட்டினார்.

“இதெல்லாம் பழகிப்போச்சு சாரும்மா,” அவனும் அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு நடிக்க,

“தனியா சிக்குவீங்கல. அப்போ கவனிச்சுக்கிறேன்,” வாயசைத்தாள்.

வசுமதியின் திருமணத்திற்குப் புறப்பட தயாராகி வந்த ரவிச்சந்திரன், நேரமாகிறது என மனையாளுக்குக் கண்ணசைக்க,

“நீ கிளம்பும்மா. நான் இவரை கவனிச்சிக்குறேன்,” என அழுத்திச் சொன்னாள் ரம்யா.

இருவரின் பரிபாஷைகளைக் கண்ட சாருலதாவிற்குத் தன் மனத்தில் இருப்பதை சொல்லிவிட வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட,

“நடந்ததையே நெனச்சு வருத்தப்படாம, அதே குழந்தையே அவ வயிற்றுல ஜனிக்கும்னு நம்பிக்கையோட முயற்சி எடுங்க ஷ்ரவன்,” மென்று விழுங்கினார்.

“அம்மாஆஆ” ரம்யா அதட்ட,

“அவங்களுக்குத் தெரியாததா!” ரவிச்சந்திரன் குறுக்கிட, சாருலதாவின் முகம் சுருங்கியது.

“கவலைப்படாதீங்க சாரும்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும்,” ஷ்ரவன் தேற்றவும் உச்சிகுளிர்ந்தார்.

“இன்னைக்கே நாள் நல்லா இருக்கு. அவளை அழைச்சிட்டுப் போகுறீங்களா,” உற்சாகமாய் கேட்டார்.

“சீதைதான் ராமரைத் தேடி அயோத்திக்குப் போகணும்னு இல்ல; ராமரும் அப்பப்போ ஜனக்பூரிக்கு வரலாமே,” உவமை சொல்ல, ரம்யா அவனைப் பார்வையாலேயே சுட்டெரித்தாள்.

மாப்பிள்ளையின் ஜாடை பேச்சு புரிந்தும் புரியாதவருமாக சாருலதா முழிக்க, உரக்கச் சிரித்த ரவிச்சந்திரன்,

“ரம்யா இங்கேயே இருக்கட்டும். நான் அப்பப்போ வந்து தங்கிட்டுப் போகுறேன்னு சொல்றாரு,” புதிரை விடுவித்தார்.

இது நிரந்தர தீர்வாகுமா எனத் தயங்கினார் சாருலதா.

“இங்க இருந்தால்தான் என் பொண்டாட்டிக்கு கம்லீட் ரெஸ்ட் கிடைக்கும்,” தீர்க்கமாகச் சொல்லி அவர்களைப் புறப்படச் சொன்னான்.

“இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாத ஹோப்பெல்லாம் தந்து அம்மாவைக் குழப்புறீங்க ஷ்ரவன்,” வண்டி வாயிலைக் கடந்ததும் ருத்திரதாண்டவம் ஆடினாள் அவன் சரிபாதி.

“மேற்கொண்டு படிச்சிட்டு இருக்கேன்; திரும்பி வரேன்னு நீ மட்டும் நம்ம கம்பனி ஸ்டாஃப்க்குத் தேவையில்லாத ஹோப் தரலாம். அதையே நான் செஞ்சா குற்றமா,” முந்தைய தினம் அவள் சொன்னதை இடித்துக்காட்டினான்.

பேதையும் கணப்பொழுதில் சரணாகதியாக, அவனுக்கு வேறொரு சந்தேகம் உறுத்தியது.

“ஒரு விஷயம் கேட்டால், ஹர்ட் ஆக மாட்டீயே,” மெல்லத் தொடங்கினான்.

“ம்ஹூம். கேளுங்க.”

“இத்தனை எதிர்பார்ப்போட இருக்குறவங்கள இந்த எட்டு வருஷமா எப்படிச் சமாளிச்ச ரம்யா? என்னோட அம்மாவும் இப்படித்தானே பேசியிருப்பாங்க. அதுவும் உத்ரா தானே முதல்ல கன்சீவ் ஆனா. இவங்கள தாண்டி நம்ம சொந்தக்காரங்க.. நம்ம கம்பனி ஸ்டாஃப்..”

ஒரு கேள்வி என்று சொல்லிவிட்டு அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பும் அவன் கவலையை உணரவே செய்தாள் பெண்.

“உங்க மாமியார சமாளிக்குறது தான்கொஞ்சம் சவாலா இருந்துது. அதுவும் நமக்கு கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குத்தான். சம்பந்திக்கிட்ட புலம்பினா தீர்வு கிடைக்கும்னு அவங்க என் மாமியாரை அப்ரோச் பண்ண,

இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரியாததே எதுவுமில்ல. அவங்க பார்த்துப்பாங்க சாரு; நாம தலையிடாம இருக்குறது தான் நமக்கு அழகுன்னு ஆஃப் பண்ணிட்டாங்க.

என் அம்மாகிட்டயே நிமிர்வா பேசினவங்க, சொந்தக்காரங்க ஸ்டாஃப் பேச்சுக்கு எல்லாம் கவலைப்படுவாங்களா என்ன.

அப்படி இருந்தும், ஒருநாள் அவங்ககிட்டயே நேரடியாவே  கேட்டேன். உண்மையிலேயே உங்களுக்கு வருத்தமா இல்லையான்னு.

அதுக்கு அவங்க, எதுக்கு வருந்தணும் ரம்யா; நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் இத்தனை அன்யோன்யமா இருக்கும்போது முயற்சி செய்யாமலா இருப்பீங்க. ஏதோ வேளை வரல. அவ்வளவுதான், அப்படின்னு ரொம்ப நம்பிக்கையோட பதில்சொன்னாங்க.

அது நமக்கு குழந்தை பிறக்கும்னு தெரியாத சமயம். ஒருவேளை பிரச்சனை இருந்தான்னு ஜாடைமாடையா கேட்டேன்.

வாரிசு பெற்றுத்தந்துதான் நீ இந்தக் குலத்தைத் தழைக்க வைக்கணும்னு இல்ல ரம்யா. நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுலேயே பெண் பிள்ளை வந்த திருப்தி எனக்குன்னு விட்டுக்கொடுக்காம பேசினாங்க.

நமக்கு குழந்தை பிறக்கும்னு தெரிஞ்சதும் அத்தனை சந்தோஷம் ஷ்ரவன் எனக்கு. ஆனால் நாம முயற்சி செஞ்சியும், என்னால கன்சீவ் ஆகவே முடியல. நான் எடுத்துக்கிட்ட பர்த் கன்ட்ரோல் பில்ஸோட பின்விளைவுன்னு தெரிஞ்சுது,” இடை நிறுத்தியவளின் முகம் குற்றவுணர்ச்சியில் தோய,

“தப்பு உன்னோடது இல்ல ரம்யா. என்னோட முட்டாள்தனத்துனால தான்,” தலைகுனிந்தவனுக்கு மேலும் சொல்லச்சொல்லிக் கேட்க திராணி இல்லை.

அவன் மனநிலை உணர்ந்து அவளே மீதியையும் பகிர்ந்தாள்.

“ஷர்மிலாதான் ட்ரீட்மென்ட் எடுத்துக்குச் சொல்லி அவ ஃப்ரெண்ட் கிட்ட அறிமுகம் செஞ்சுவச்சா. அப்படியும் எந்த முன்னேற்றமும் இல்லாம மாசங்கள் வருஷங்காளாச்சு.

தருணும் உத்ராவுமாவது வீட்டுக்கு வாரிசை கொடுக்கட்டுமேன்னு ஆசையா காத்துட்டிருந்தோம். அவங்க நமக்காகத்தான் தள்ளிப்போடுறாங்கன்னு தெரிஞ்சதும் மனசு பதறிப்போச்சு.

நாம அவங்கள லெஃப்ட் ஆண்ட் ரைட் திட்டி, மிரட்டி சம்மதிக்க வச்சோம். கடவுள் புண்ணியத்தில் உத்ரா கன்சீவான அஞ்சு மாசத்துல நானும்…..”

அதற்குமேல் பேச முடியாதவளாகத் தேம்பி அழத்தொடங்கினாள்.

“இதுலயும் உன் தப்பு எதுவுமில்ல ரம்யா. எல்லாம் என்னாலதான்,” என்றவன் அவள் தோளினை அரவணைத்து தேற்ற,

“இல்ல ஷ்ரவன். நானும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்,” மறுப்பாய்த் தலையசைத்து விசும்பினாள்.

அச்சமயம் ஷ்ரவனை அழைத்த தருண், அண்ணன் இன்னும் அலுவலகத்திற்குப் புறப்படவில்லை என அறிந்துகொண்டதும்,

“ஆபீஸுக்கு வர உத்தேசம் இருக்கா இல்லையா,” என நக்கல் செய்தான்.

“வரேன்டா. ஃபோன வை,” கடுகடுத்தவன் அழைப்பைத் துண்டிக்க, மின்வெட்டு வேலை செய்கிறது எனக் குதூகலமானான் தருண்.

ரம்யா ஓயாமல் விசும்பிக்கொண்டிருக்க, “நீ இப்படி அழுதிட்டே இருந்தேனா நான் எப்படி கிளம்புறது ரம்யா,” வாஞ்சையாக அவள் விரல்களை வருடினான்.

“ஐ வில் பி ஆல்ரைட் ஷ்ரவன்,” எனக் கண்களைத் துடைத்துக்கொண்டு,

“எனக்கு ஒரேவொரு ஹெல்ப் மட்டும் பண்ணுவீங்களா,” என்றாள் கசந்த குரலில்.

“ம்ம்..”

“காலேஜ் போனால் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன் ஷ்ரவன். நீங்கதான் அம்மாகிட்ட எடுத்துச்சொல்லி பர்மீஷன் வாங்கித்தரணும்,” எனக் கேட்டாள்.

“அதுக்கு நீ எனக்கொரு சத்தியம் செஞ்சு தரணும்,” அவன் மடக்க,

புரியாமல் விழித்தாள் பேதை.

“மறுபடியும் சொல்றேன். அன்னைக்கும் சரி; இன்னைக்கும் சரி; இதுல உன் தப்பு எதுவுமே இல்ல ரம்யா. உன்னையே நீ குற்றவாளியா நெனச்சு வருத்திக்கிறத இந்த நிமிஷத்தோட நிறுத்திக்கணும். உன் ஷ்ரவனா வந்ததும், அடுத்தென்ன செய்யலாம்னு மனசவிட்டுப் பேசி முடிவெடுக்கலாம், சரியா?” எனக் கை நீட்டிக் காத்திருந்தான்.

நம்பிக்கையுடன் பாவை சத்தியம் செய்தபோதும், தான் செய்த பாவங்களின் கர்மவினைகளை அவள் மொத்தமாய் அனுபவிக்கிறாளே என்ற கனத்த மனத்துடன் புறப்பட்டான் ஷ்ரவன்.

நின் முகம் கண்டதும் நிபந்தனைகளை மறக்கிறேன்;
நின் கரம் பற்றியதும் நிதானம் தவறுகிறேன்;
நின் சுவாசக் காற்றில் நிலைதடுமாறி போகிறேன்;
நிலைகுலைந்த நெஞ்சத்தின் தேவை அறிய – விடை தேடுகிறேன்
நல்லுயிரானே! நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!