Skip to content
Post Views: 121
ஓம் ஸ்ரீ சாய்ராம்
மாப்பிள்ளை மகளுடன் இணைந்து சோமவார பூஜை செய்யப்போகிறார் என அறியவந்த சாருலதாவிற்குத் தலைகால் புரியவில்லை.
சிவப்பெருமானின் ஆசியில் மகள் கருத்தரிக்க வேண்டுமென அவர் வாய்விட்டுக்கூற, குழப்பம் கப்பிய விழிகளுடன் கணவனை ஏறிட்டாள் ரம்யா.
‘சமாளிக்கலாம்’ என்று அவன் கண்ணசைக்க, நிம்மதியாக இருந்தது அவனுக்கு.
Advertisement
புதியதொரு க்ரிப்டிக் குறுக்கெழுத்துப் புத்தகத்துடன் காத்திருந்தவள், குளித்து முடித்து வந்த கணவனின் லிரில் சோப் வாசத்தில் சற்று மிரண்டவளாக அவன் பார்வையைத் தவிர்த்தாள்.
மங்கையின் தடுமாற்றத்திற்குத் தூபம் போடுவதுபோல புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி மூடிவைத்தவன், அவள் முகவாயைத் தாங்கிப்பிடித்து,
“உன்னோட கொஞ்ச நேரம் பேசணும் ரம்யா,” என்றான் யாசிக்கும் குரலில்.
“என்…எ… என்ன பேசணும்,” உதடுகள் தந்தியடித்த விதத்திலேயே அவள் பதற்றத்தை உணர்ந்தவன்,
Advertisement
“அதான் குணமாகுற வரைக்கும் புருஷன்ற உரிமை எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிருக்கேன்ல,” நமுட்டுச் சிரிப்புடன் நினைவூட்டினான்.
Advertisement
“பயம் உங்கள நெனச்சில்ல… என்ன நெனச்சு…” அவள் முகத்தைச் சுருக்கவும், வெடித்துச் சிரித்தான்.
“சரி எழுந்திரு! பால்கனிக்குப் போகலாம்,” என அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றான்.
மிதமான பனிக்காற்றில் அசைந்தாடிய முல்லைக்கொடியும் லிரில் வாசமும் பின்னிப்பிணைந்து அவளை இன்னும் அதிகமாக உசுப்பேற்றியதுதான் மிச்சம்.
Advertisement
பெருமூச்சுடன் மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்தவள், “க்ராஸ்வர்ட் போடமுடியாத அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என அதிகாரம் செய்தாள்.
மதில் சுவற்றில் சாய்ந்துகொண்டவன், “சன்டே மீட் பண்ணலமான்னு நான் ஒண்ணும் அவசியமில்லாம சொல்லல ரம்யா,” கூற, கேள்வியாக ஏறிட்டாள்.
“வீட்டுல எல்லாரும் அன்பாதான் பழகுறாங்க. குறைன்னு சொல்ல ஒண்ணுமில்ல. நான்தான்… மே பி என்னோட மைன்ட்செட்…” அவன் கசந்த குரலில் தொடங்கியதும்,
பதறியடித்து ஓடிவந்தவள், “என்னாச்சு ஷ்ரவன்? யாரு என்ன சொன்னாங்க,” கவலையுடன் அவன் கன்னத்தை வருடினாள்.
“யாரும் எதுவும் சொல்லல. ஆனால் எல்லாரும் என்கிட்ட சிம்பதில பழகுறாங்களோன்னு தோணும்,” தலைகுனிய,
“எதுவாயிருந்தாலும் புரியும்படி சொல்லுங்க ஷ்ரவன்,” பொறுமை இழந்தாள் பெண்.
“வீக்டேஸ்ல ஆளுக்கொரு பக்கமா ஓடிட்டு இருக்குறதுனால பெருசா எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் சன்டே ஒரு நாள தள்ளுறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும்,” மறுபடியும் அவன் சுற்றி வளைக்க,
“சன்டேல என்ன?” அப்போதும் அவளுக்கு விளங்கவில்லை.
“எல்லாரும் வீட்டுல இருப்போம். மூணு வேளையும் சேர்ந்து சாப்பிடுவோம் தானே. அப்போ அம்மா, அப்பாக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்வாங்க; உத்ராவும் தருணும் ஒருத்தர ஒருத்தர் வம்பிழுத்துக்கிட்டே சாப்பிடுவாங்க.
எனக்கும் பரிமாறி என்னோடையும் பேச்சுக்கொடுத்துட்டே தான் சாப்பிடுவாங்கனாலும், எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது; இன்னொரு தோசை வேணும், இல்ல அஞ்சு இட்லிக்கு மேல வேண்டாம்னு இப்படி ஒவ்வொண்ணுத்தையும் வாய்விட்டுச் சொல்ல சங்கடமா இருக்கும்.
அதுக்கூடப் பரவாயில்ல; நான் தனியா இருக்கேன்னு, உத்ராவும் தருணும் ஜோடியா போகுற இடத்துக்கு எல்லாம் என்னையும் அழைச்சிட்டுப் போகணும்னு நினைப்பாங்க. அப்படியே வீட்டுல இருந்தாலும் சினிமா பார்க்கும்போது, போர்ட் கேம்ஸ் விளையாடும்போது, புதுசா சமைக்கும்போதுன்னு எல்லா நேரத்துலையும் என்னை இழுத்துப் பிடிச்சு உட்கார வச்சிடுவா இந்த உத்ரா.
அவங்க ப்ரைவசிக்கு இடைஞ்சலா இருக்கேன்னு சில சமயம் தூக்கம் வருது, வெளில வேலை இருக்குன்னு ஏதோவொரு சாக்குச் சொல்லிட்டு நழுவிடுவேன். ஆனால் வாரவாரம் தப்பிக்கிறது கஷ்டமா இருந்துது. அதான்,” அவன் நீண்ட விளக்கம் தர,
எதைப்பற்றியும் யோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மறுத்துவிட்டேனே என நொந்துகொண்டவள் மௌனத்தில் கரைந்தாள்.
“நீ வீட்டுல இருந்திருந்தா நாம நாலு பேருமாத்தான் சந்தோஷமா டைம் ஸ்பென்ட் பண்ணிருப்போம்ன்னு புரியுது. ஆனால் நீ இல்லாம நான் மட்டும்ன்னு வரும்போது… ரொம்ப லோன்லியா…. லெஃப்ட் அவுட்டா… எனக்குச் சரியா சொல்லத் தெரியல ரம்யா… இதெல்லாம் என் மனோபாவமா கூட இருந்திருக்கலாம்,” என்றவனின் வாயைப் பொத்தியவள்,
“இந்தளவுக்கு மனப்பாரத்தோட நீங்க கேக்குறிங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஷ்ரவன். பிரிவு நல்லதுன்னு சொல்லிட்டு உங்கள எந்தளவுக்கு டிப்ரெஷன்ல தள்ளிருக்கேன்,” வருத்தத்தில் தோய்ந்தவள்,
“அவசியமிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே,” என நொந்து கேட்டாள்.
“சொல்லணும்னுதான் நெனச்சேன். ஆனால் எதுக்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் விளக்கம் தந்து நியாயப்படுத்தணும்; அன்யோன்னியமா பழகுறவ இதைக் கூடப் புரிஞ்சுக்க மாட்டியான்னு ஒரு சின்ன ஈகோ,” மனம்திறந்து பேசினான்.
“சத்தியமா நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்ல ஷ்ரவன். மண்டைக்கு உரைச்சிருந்தா நீங்க ஃபீல் பண்ணற அளவுக்கு விட்டிருக்கமாட்டேன்,” மன்னிப்பை யாசித்தாள்.
“புரிஞ்சுது. அதான் நீ ஓகே சொன்னதும் அத்தனை சந்தோஷமா இருந்துது. தாங்க்ஸ் ரம்யா,” அவன் அழகாய் மென்னகைக்க,
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள தாங்க்ஸ் ஆன்ட் ஸாரிக்கு இடமில்லன்னு யாரோ சொன்ன ஞாபகம்,” அவள் நாக்கை உள்புறமாய் சுழற்றினாள்.
“ஐ லவ் யூ சொல்லணும்னுதான் ஆசை. ஆனால் ஆஃப்ட்ரால், லிரில் சோப்பு வாசத்துக்கே தடுமாறுறவகிட்ட காதலா பேசி ரிஸ்க் எடுக்க நான் விரும்புல,” விஷமப்புன்னகையுடன் கண்சிமிட்டினான்.
“உங்கள…” செல்லமாக மார்பில் அடித்தவள்,
“உங்கள நம்பி க்ரிப்டிக் க்ராஸ்வர்ட் புக் வாங்கி வச்சிருக்கேன். உங்க ஹெல்ப் இல்லாம ஒரு க்ளூ கூடக் கண்டுபிடிக்கத் தெரியாது. வாங்க ஒரு க்ராஸ்வர்டாவது சால்வ் பண்ணிட்டுத் தூங்கலாம்,” என உள்ளே இழுத்துச் சென்றாள்.
விடியற் காலையில் கணவனுடன் இணைந்து பூஜை செய்தவளின் மனம் பரவசத்தில் நிறைந்தது. விரதம் பூர்த்தியாவதற்குள் தன்னவன் முழுவதுமாகக் குணமாகி அவனுடன் புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் ருத்ரா ஸ்லோகங்களை உச்சரித்தாள் பாவை.
அலுவலகம் செல்ல உடை மாற்றிக் கொண்டிருந்தவன், “இன்னைக்கு ஒருநாள் நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்ணட்டுமா?” என்றான் சட்டைக் காலரை சரிசெய்தபடி.
‘கணவனுடன் சொகுசாய் காரில் சென்று இறங்கிக்கொள்ளலாம் தான். ஆனால் மாலையில் ஆட்டோ கிடைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுமே!’ எனப் புத்தி எச்சரித்தாலும்,
‘இனி எந்தச் சூழ்நிலையிலும் அவன் மனம் கோணுமாறு மறுப்புச் சொல்லக்கூடாது,’ என மனம் தெளிந்தவள், உடனே சம்மதம் என்றாள்.
கல்லூரி வரை வந்தவளுக்கு இறங்க மனமில்லை.
“நானும் அன்னைக்கு உங்கள அவசியமில்லாம கேக்கல ஷ்ரவன்,” மெல்லப் பேச்சுக்கொடுத்தாள்.
“என்னைக்கு… என்ன அவசியமில்லாம…” புருவங்களைச் சுருக்கினான்.
“இந்த காலேஜ் பிராஜக்ட் நம்ம கம்பனிக்குக் கிடைக்கிற அங்கீகாரம் ஷ்ரவன். பர்சனல் லைஃபையும் ப்ரொஃபெஷனல் லைஃபையும் மிக்ஸ் பண்ணாதீங்க ப்ளிஸ்…” அவன் வலது கரத்தில் அழுந்த பிடித்து மன்றாடினாள்.
மறுகணமே தலையைச் சிலுப்பிக்கொண்டு சிரித்தவன், “இந்த டாபிக்க ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எடுத்திருக்கலாம்ல,” என்றான்.
“ஏன்?” அவள் புரியாமல் விழிக்க,
“இறங்கி வா! சொல்றேன்,” எனக் கதவைத் திறந்தான்.
இறங்கியவன், கட்டிடம் எழுப்ப வேண்டிய இடத்தை நோக்கி முன்னே நகர,
“குட் மார்னிங்க் சார். மெடிரியல் எல்லாம் வந்தாச்சு. அவங்க பூமி பூஜை முடிச்சதும் வேலையைத் தொடங்கிடலாம்,” அறிவித்த நிறுவனத்தின் ஊழியரைக் கண்டதும் இன்பதிர்ச்சி கொண்டாள் ரம்யா.
அவருடன் நடந்து சென்று மூலப்பொருட்களை ஆராய்ந்து, அப்படியே களத்தில் இறங்கி வேலைச் செய்யவிருக்கும் சூப்பர்வைஸர் முதல் தொழிலாளிகள் வரை அனைவரிடமும் கலந்துரையாடும் கணவனைக் கண்கொட்டாமல் பார்த்து நின்றாள் ரம்யா.
ஊழியர்களுடன் பேசி முடித்துவிட்டு வந்தவனின் முகத்தில் வெற்றிப்புன்னகை தாண்டவமாடியது.
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு முறுக்கிக்கொள்ள, வேண்டுமென்றே அவள் எதிரில் முகம் சாய்த்து வெறுப்பேற்றியவன்,
“அப்பாகிட்ட கலந்துபேசிட்டு டேட் சொல்றேன்னு வெளியே வந்தால், மேடம் பர்சனல் லைஃபயும் ப்ரொஃபஷனல் லைஃபயும் கலந்துகட்டி குழப்பிட்டிருக்கீங்கன்னு உங்க பேச்சுல புரிஞ்சுது…” அவள் பாணியிலேயே பதில்கூறி சீண்டினான்.
“அதான் வேலை தொடங்குற அன்னைக்கு உன்னோடவே காலேஜ்க்கு வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன். ஆனால் நீ என்னடான்னா லாஸ்ட் மினிட்ல, மொத்த பிளானையுமே சொதப்பிட்ட,” என அவள் தலையில் செல்லமாகக் குட்டி உதட்டைப் பிதுக்கினான்.
வெற்றிப்புன்னகை அவள் உதடுகளுக்கு இடம் மாறியது.
“சரி! இனிமேல் உங்களுக்கும் சேர்த்து லன்ச் எடுத்துட்டு வந்துடறேன்; எனக்கு லன்ச் டைம் மதியம் ஒண்ணுலேந்து ரெண்டு மணி வரை. உங்களால அதே நேரத்துக்கு வரமுடியுமா… இல்ல… ” அவள் திட்டங்களை அடுக்க,
“இரு! இரு! இரு!” எனக் கையசைத்துத் தடுத்தவன்,
“பால்கோவா ரொம்ப ரொம்ப பிடிக்கும்தான்; அதுக்காக அதையேவா சாப்பிடமுடியும்,” மனையாளின் உயரத்திற்குத் தலைதாழ்த்தி பெண்ணின் கருவிழிகளைத் தன் பார்வையில் சிறைசெய்துகொண்டு நமுட்டாகச் சிரித்தான்.
“பழிவாங்குறீங்கல,” கோபம் கொண்ட பெண்மான் விலகிச்செல்ல, அவள் மணிக்கட்டைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
அவள் திமிற, “லிரில் சோப் வாசத்துல உன் மூளை மொத்தம் மழுங்கிப்போச்சு,” என்றவன்,
“இது நம்ம கம்பனிக்கு ஒன் ஆஃப் தி பிராஜக்ட்ஸ் ரம்யா. அளவுலையும் ரொம்பச் சின்னது. சூப்பர்வைஸ் பண்ணனும்னு கூட அவசியமில்ல….” கூறி முடிப்பதற்குள்,
“சரி! சன்டே மீட் பண்ணலாம். எனக்கு க்ளாஸ்க்கு டைமாச்சு,” குனிந்த தலை நிமிராமல் விலக முயன்றாள்.
“நம்புடி. சத்தியமா பழிவாங்கணும்னு நினைக்கல,” அவன் கெஞ்ச,
வெகுநாட்களுக்குப் பின் ‘டி’ போட்டு அழைக்கும் அவன் தோரணையில் உடல் சிலிர்த்து அடங்கியது அவளுக்கு.
“சரி நம்புறேன். கையை விடுங்க. நிஜமாவே டைமாச்சு,” என்றாள்.
அதேசமயம் கல்லூரியின் மணியடிக்க, “சரி! புதன்கிழமை மறுபடியும் வருவேன். லன்ச்க்கு புளியோதரை எடுத்துட்டு வா…. அவியலோட,” எனக் கண்சிமிட்டினான்.
பேசிவைத்துக் கொண்டிருந்த ஞாயிறு-திங்கள் சந்திப்புப்கள் போக, தொடர்ந்து வந்த இரண்டு வாரங்களில் ஒருநாள்விட்டு ஒரு நாள், அதன் பின் தினமும் மதியம் ஒன்றிலிருந்து இரண்டரை மணிவரை அவளுக்காகவே ஒதுக்கிவைத்து என மனையாளுடன் மதிய உணவு உண்டுமுடித்து, கட்டிட வேலையை மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டான். வாரங்கள், கண்மூடித் திறக்கும் முன் மாதங்களாக நகர்ந்திருந்தது.
தன் கணவனான ‘அந்த ஷ்ரவனை’ மீட்டெடுக்க வேண்டுமென்ற தன் தீர்மானத்தையும் மறந்தவளாக, புது ஜென்மம் எடுத்துவந்திருக்கும் ‘இந்த ஷர்வனின்’ காதல் பரிணாமங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையவே செய்தாள் பெண். நாற்பது வயதிலும் இப்படியெல்லாம் காதலிக்க முடியுமா என மெய்சிலிர்த்தது இருவருக்கும்.
வளைந்து கொடுக்கும் பெண்ணவளின் சுபாவத்தில் போதை தலைக்கேறியவன், குணமாகாவிட்டாலும் அவளைத் தன் பக்கம் எளிதில் ஈர்த்துவிடலாம் என்ற அனுமானத்தில் மிதந்துதான் அவன் போட்ட மிகப்பெரிய தப்புக்கணக்கு.
அந்த ஞாயிற்றுக்கிழமை, வீடே சின்னதொரு பல்பொருள் அங்காடியாக உருமாறியிருந்தது.
வகைவகையான புத்தாடைகள், இரண்டு டசன் அட்டைப்பெட்டிகள் நிறைய பரிசுப் பொருட்கள் எனக் கால் வைக்கமுடியாத அளவிற்கு வசிப்பறையில் கடை பரப்பி வைத்திருந்தார்கள் மாமியாரும் மருமகளும். பெரியவர்கள் செய்யும் அலப்பறைகள் போதாதென்று விரூபாவும் அவர்களுக்கு இணையாக, திறந்திருந்த அட்டைப் பெட்டியிலிருந்த டப்பர் வேர் வாட்டர் பாட்டிலை உருட்டிக்கொண்டிருந்தாள்.
ரம்யாவின் வீட்டிற்குச் செல்ல தயாராகி வந்த பெரியப்பாவைக் கண்டதும், குதூகலமான குழந்தை, இரண்டு கைகளிலும் வாட்டர் பாட்டில்ளை எடுத்துக்கொண்டு அவனருகில் தத்தித்தாவி நடந்து சென்று தூக்கிக்கொள்ளுமாறு செல்லம் கொஞ்சினாள்.
தூக்கிக்கொண்டவனுக்கு வெகுமதியாக அவள் பாட்டிலால் இரண்டு அடிகள் தர, “என்ன பழக்கமிது விரூகுட்டி?” மெல்லமாக அதட்டி அவளிடமிருந்து பாட்டிலை லாவகமாய் வாங்கியவன்,
“ரெண்டுபேரும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” பெண்களிடம் வினவினான்.
“தீபாவளி பர்சேஸ் அண்ணா,” கணக்கெடுத்துக் கொண்டிருந்த உத்ரா, வேலையிலிருந்து கவனம் சிதறாதபடி பதிலளிக்க, மறுகணமே அவனுக்கு ரம்யாவின் நினைவு வந்தது.
தீபாவளி ஷாப்பிங்க் செய்யும் அவள் உற்சாகம்; தன்னால் இன்று பிறந்த வீட்டிலிருப்பது; எல்லாம் மனத்தை வருட கனத்த மனத்துடன் குழந்தையை சோஃபாவில் விட்டுக்கொண்டு சோகமே உருவாய் அமர்ந்தான்.
அவன் முகபாவனைகளைக் கவனிக்க மறந்த திலகா குடும்பத்தினருக்கு வாங்கியிருக்கும் புத்தாடைகளை காட்டத் தொடங்க,
“அது என்னம்மா உங்க ரெண்டுபேருக்கும் பட்டுப்புடைவை; ரம்யாக்கு மட்டும் சடிதார் செட்,” உள்ளத்தில் தோன்றியதை அப்படியே கேட்டான்.
“விட்டால், மாமியார் கொடுமை பண்றியான்னு, என் ஸ்வீட் மாமியார்கிட்ட சண்டைக்கு வந்துடுவீங்க போலயே அண்ணா,” கேலி செய்தாள் உத்ரா.
“சும்மா இருடி,” மருமகளை அதட்டியவர், ” ஏன்டா அப்படிக் கேக்குற, இதுவும் உனக்கு மறந்துபோச்சா,” கவலையில் தோய்ந்தார்.
தங்களுக்குள் ஏதோ காதல் பரிபாஷை இருக்கிறது என உணர்ந்தவன், ‘காப்பாத்தேன்!’ என்ற ரீதியில் உத்ராவைப் பார்த்தான்.
அதை நொடியில் உணர்ந்தவள், “என்ன மிஸ்டர்.அண்ணா. மறந்தா மாதிரி நடிச்சு என் மாமியாரை போட்டுவாங்குறீங்களா,” சமாளித்த உத்ரா,
“நாங்க காஞ்சீவரத்தையே கொண்டுவந்து இறக்கினாலும், உங்க பொண்டாட்டிக்கு நீங்க அழைச்சிட்டுப் போகுற மொக்கைக் கடையில் செலக்ட் பண்ணற மொக்கை புடைவைதானே பிடிக்கும்,” வாருவது போலத் துப்புக்கொடுத்தாள்.
‘தீபாவளி ஷாப்பிங்கை ரீக்ரியேட் செய்த கள்ளி இதைமட்டும் சொல்லலையே!’ மனதுக்குள் திட்டிக்கொண்டவன்,
“இன்னைக்கே அழைச்சிட்டுப் போகுறேன்,” கூறி புறப்பட, குழந்தையும் அவனைப் பின்தொடர்ந்தாள்.
பெரியப்பா வெளியில் கிளம்பும் போதெல்லாம் அவருடன் காரில் தெருவை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவது விரூபாவின் வழக்கம். குழந்தையை வாங்கிக்கொள்ள உத்ராவும் வழக்கம்போல அவனை வாசலுக்குப் பின்தொடர,
அவள் காதுகளை அழுந்த திருகியவன், “நான் செல்கட் பண்ணறது மொக்கை புடைவையா. மறந்துட்டேன்னு ஹெல்ப் கேட்டா என்னையே ஓட்டுற,” பொய்கோபம் கொண்டான்.
“ஆஆஆ அண்ணா வலிக்குது,” அவனுக்கு இணையாக நடித்தவள், “மறந்தவருக்கு இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லலாம்னு வெளியே வந்தா என்னையே திட்டுறீங்களே,” எனச் சீண்டினாள்.
அவன் கண்கள் ஆவலில் விரிந்தன.
“என் பொண்ணை ரவுண்ட் கூட்டிட்டுப் போயிட்டு வாங்க. அப்புறம் சொல்றேன்,” எனக் கண்சிமிட்டினாள்.
கடையின் விலாசம்; ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என மறுநொடியே வந்த குறுஞ்செய்தியைப் படித்தவன், “குறும்புக்காரி! வந்து கவனிச்சிக்கிறேன்,” எனத் துள்ளலாய்க் கிளம்பினான்.
திங்கட்கிழமை அன்று காலை உணவு அருந்த வந்தவனுக்கு ஒரு தலைவாழை விருந்தே சமைத்துவைத்திருந்தாள் அவன் தர்மபத்தினி.
வெண்பொங்கல், மெதுவடை, சாம்பார் சட்னி போதாதென்று, பால்பாயசம், பால்கோவா, சர்க்கரைப் பொங்கல், ரவா லட்டு, அதிரசம் எனப் பார்த்தாலே வயிறு நிரம்பும் அளவுக்கு இனிப்புப் பதார்த்தங்களை அடுக்கியிருந்தாள்.
“என்ன இதெல்லாம்?” அவன் மிரட்ட, பெண்ணவளின் விழிகள் அன்னையை ஏறிட்டது.
“இன்னையோட சோம வார பூஜை பூர்த்தியாச்சு ஷ்ரவன். அதான் மகா பிரசாதம் பண்ணிருக்கா,” சாருலதா கூற, தன் நிலையை எண்ணி கவலையில் தோய்ந்தான்.
விரதத்தைப்பற்றி வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும், அவள் யாருக்காக எதற்காக விரதம் இருக்கிறாள் எனப் புரியாத அளவிற்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே. மனையாளின் நிறைவேறாத வேண்டுதலுக்கு ஈடுசெய்ய வேண்டுமென யோசித்தவனுக்கு, தீபாவளி புடைவை எடுத்துக்கொடுக்கும் எண்ணம் நினைவுக்கு வர,
“உனக்கு இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் ரம்யா,” என மென்னகைத்தான்.
நற்செய்திக்காகக் காத்திருந்தவளின் கண்களோ அந்த நொடியே குளமானது.
வேண்டுதல் நிறைவேறப்போகிறது என்ற கிளர்ச்சியுடன், “சரி! முதல்ல சாப்பிடுங்க,” எனப் பரிமாறத் தொடங்கினாள்.
“இவ்வளவையும் சாப்பிட்டேனா ஆபீஸுக்குப்போய் தூங்க வேண்டியதுதான்,” பின்வாங்கியவன் பொங்கல், வடை, சாம்பார் மட்டும் போதுமெனச் சொல்ல,
“பிரசாதம் ஷ்ரவன். உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு ஸ்வீட் மட்டும் இப்போ சாப்பிடுங்க,” கெஞ்சினாள் கண்களைச் சுருக்கி.
“எனக்கு எப்பவுமே பால்பாயசம்தான்,” என்றவன், “சர்க்கரை பொங்கலை லன்ச்க்கு பேக் பண்ணிக்க. ரவா லட்டும், அதிரசமும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகுறேன். தருணும் உத்ராவும் வெளுத்துக்கட்டுவாங்க,” குட்டி ஆர்டரே தந்தான்.
“அப்போ பால்கோவா?” முகம் சுருக்கினாள்.
“அது இங்கேயே இருக்கட்டும். எத்தனை நாளானாலும் தாங்கும். ஸ்வீட் க்ரேவிங்க் வரும்போது சாப்பிட வசதியா இருக்கும்,” என்றதும், வருத்தம் தோய்ந்தது பெண்முகத்தில்.
பக்தர்களை ஆசை தீர சோதித்து விளையாடிய பின்பு வரம் தருவதுதானே ஈஸ்வரின் வழக்கமென மனத்தைத் தேற்றிக்கொண்டு, கல்லூரிக்குப் புறப்பட தயாரானாள் ரம்யா.
மதியம் இரண்டு மணியளவில் வண்டி பிரதான சாலையை நோக்கி நகர,
“ரூட் பார்த்தாலே நாம எங்க போகுறோம்னு கண்டுபிடிச்சுடுவ. அதனால ரீச் ஆகுற வரைக்கும் ஒரு குட்டித் தூக்கம் போடுவீயாம்,” கண்சிமிட்டினான் ஷ்ரவன்.
“பகல்ல மலைபாம்பு மாதிரி குறட்டை விட்டுட்டுத் தூங்குறது உங்க பழக்கம்,” அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளியவள், “ஃப்.எம் ஆன் பண்ணுங்க. பாட்டு கேட்டுட்டே வரேன்,” எனக் கண்களை மூடிக்கொண்டாள்.
“…காதலுக்கு உண்டு கல்யாண ராசி,
சேர்த்துவைக்கும் அந்த அல்லாவின் ஆசி…” பெண்குரலில் ஒலித்த வரிகளில் திடுக்கிட்டு விழித்தவள்,
“…பாடுவதோ இந்த மும்தாசின் தேகம்
தேடிவந்தேன் இனி நீதானே வேண்டும்,” என உன்னிகிருஷ்ணனுடன் இணைந்து தன்போக்கில் பாடிக்கொண்டிருந்த கணவனின் ரசனையில் பேரதிர்ச்சி கொண்டாள்.
அகல விழித்திருப்பவளைக் கண்டவன், “கண்ணை மூடு,” என அதட்ட,
“எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கல ஷ்ரவன்,” கடுகடுத்தவள் எஸ்.பி.பி ஹிட்ஸ் சி.டி தேர்வு செய்தாள்.
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே காதல்…
சித்ராவின் குரலில் ஒலிக்கவும், பக்கத்தில் கண்மூடி சயனித்திருக்கும் மனையாளின் பளிங்கு முகத்தை காதலுடன் நோக்கினான் ஷ்ரவன்.
பாட்டுடன் மெட்டிட்டுக்கொண்டவன், திடீரெனெ
“…எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சில பேர்க்குத்தான்..”
காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை…”
சரணத்தின் வரிகளைத் தன்போக்கில் மனமுருகிப் பாட,
மறுபடியும் முன்னாள் காதலின் நினைவுகளில் தானே பாடுகிறான் எனத் துக்கம் தொண்டையை அடைத்தது.
‘இதுதான் என் வேண்டுதலுக்கான பதிலா ஈஸ்வரா,’ குமுறியவளின் துக்கம்,
“இன்னும் எத்தனை நேரம் நான் இப்படியே கண்ணை மூடிட்டு வரணும்,” சிடுசிடுப்பாய் உருமாறியது.
பெண்மான் கோபம் கொண்டால், போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகிப்போய்விடுமே என அஞ்சியவன்,
“நீ கண்ண திறந்துட்டே வா. எங்க அழைச்சிட்டுப் போகுறேன்னு கெஸ் பண்ணு,” தழைந்துபோனான்.
விழித்துக்கொண்டவள், வண்டி திருவல்லிக்கேணியின் வாலாஜா பெரிய மசூதியை நெருங்குவதைக் கண்டதும், “எனக்குத் தலை வின்னுவின்னுன்னு வலிக்கிது ஷ்ரவன். நீங்க தரப்போகும் சர்ப்ரைஸ்ஸ ரசிக்குற அளவுக்கு எனக்குத் தெம்பில்ல. வீட்டுல கொண்டுபோய் விடுங்க,” மனப்போராட்டங்களை விழுங்கியவளாய் படபடத்தாள்.
“பத்து நிமிஷத்துல ரீச் ஆயிடுவோம் ரம்யா,” அவனுடைய கெஞ்சல்கள் அவளை இழுக்கவில்லை.
“சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்,” என ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள், அழுதுவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன்.
விரதம் என்ற பெயரில் காலையிலிருந்து நீராகரங்களை மட்டுமே பருகிக்கொண்டிருப்பவளுக்குப் பசித் தலைவலியாக இருக்குமோ என யூகித்தவன், கண்ணுக்குத் தென்பட்ட உணவகத்திற்கு வண்டியைத் திருப்பினான்.
வண்டி நின்ற இடத்தைக் கவனித்து அவள் முறைக்க, “சூடா மசாலா டீ குடி. அப்படியும் தலைவலி குறையலேன்னா, வீட்டுக்குப் போகலாம்,” கசந்த குரலில் உரைத்தான்.
உணவகத்திற்கு வந்தவன், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றில் அன்றைய பங்குச் சந்தை முடிந்த நிலவரம் பற்றிய முக்கியச் செய்திகள் ஒளிப்பரப்பாவதைக் கண்டதும், அதைப் பார்க்க ஏதுவான உணவு மேஜையைத் தேர்ந்தெடுத்தான்.
கடனே என்று தேநீர் பருகிக்கொண்டிருந்தவளின் கவனத்தை ஈர்த்தது தொலைக்காட்சியில் ஓடிய,
“உயிரே உயிரே வந்து என்னோட கலந்துவிடு,
நினைவே நினவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு,” என அரவிந்த்ஸ்வாமி ஏக்கமாய் பாடுவதும், மனிஷா கொய்ராலா அவனைத் தேடி ஓடி வருவதும்.
மறுகணமே கணவனை கூர்ந்து கவனித்தாள் பெண்.
உலகம் மறந்தவனாக, அடிப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் பங்குச் சந்தை நிலவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பருகும் தேநீர் காலியானது கூடத் தெரியவில்லை. இதில் மங்கையின் சிவந்த கண்களை எங்கே கவனித்திருப்பான்.
“போதும் ஷ்ரவன். இதுக்குமேலயும் நீங்க கொடுக்கிற சர்ப்ரைஸ் பார்த்துத்தான் புரிஞ்சுக்கணும்ன்ற அளவுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்ல,” உறுமியவளின் கைவண்ணத்தில், பீங்கான் கப் சுக்குநுறாய் உடைந்து தெறித்தது.
“ஏன் இப்படி செய்யற? எல்லாரும் பாக்குறாங்க பாரு. இட் இஸ் வெரி எம்பாரெஸிங்க்,” உள்வாங்கிய குரலில் அமைதிபடுத்தினான்.
குழப்பங்களின் குவியலாய் கொதித்துக்கொண்டிருந்தவளின் செவிகளை எதுவும் எட்டவில்லை.
“நீங்க செய்யற அசிங்கத்த விட நான் கத்துறது ஒண்ணும் அந்தளவுக்கு எம்பாரெஸிங்கா இல்ல ஷ்ரவன்,” கர்ஜித்தாள்.
“எதுவா இருந்தாலும் புரியும்படி சொல்லு ரம்யா,” அவன் குரல் இறுகியது.
“புரியும்படி சொல்லணுமா?” அவன் சட்டைக் காலரைக் கொத்தாய்ப் பிடித்துக்கொண்டு கண்களை உருட்டியவள்,
“உங்களால உங்க முன்னாள் காதலை மறக்கமுடியாதுன்னு ஓபெனா சொல்லிடுங்க. ஐ வில் ஹாப்பிலி கிவ் யூ டைவர்ஸ். அதைவிட்டுட்டு சர்ப்ரைஸ் அது இதுன்னு ஏன் இந்த ட்ராமா,” இயலாமை ஆட்கொள்ள, கண்ணீருடன் அவள் பிடியும் வலுவிழந்தது.
கேவி அழும் அவள் தோற்றத்தில் அவனுக்குக் கரிசனம் வரவில்லை. அர்த்தமற்ற அவள் பேச்சிலும் செயலிலும் வாழ்க்கையே வெறுத்துப்போனான்.
அனுசரணை, ஆத்திரம், அழுகை, ஆதுரம் என மாறிமாறி உணர்வுகளை வெளிப்படுத்தும் அவள் நிலையில்லாத போக்கில் சலிப்புத்தட்டியது அவனுக்கு. இதே நிலை நீடித்தால், தற்காலிக மறதி குணமாவதற்குள் முழு பைத்தியமாக மாறிவிடுவேன் என வெறுப்பின் உச்சத்தில் இருந்தவனுக்கு அவளைப் புறப்படச் சொல்லிக் கேட்கக் கூட மனம்வரவில்லை.
பணம் செலுத்த அமைதியாக கவுன்டருக்கு நடந்தான்.
“உடைஞ்ச பொருட்களுக்கும் சேர்த்து சார்ஜ் பண்ணிக்கங்க,” என க்ரெட்டி கார்டை நீட்டினான்.
“இருக்கட்டும் சார்!” எனத் தேனீருக்கு மட்டும் பணம் எடுத்துக்கொண்டு அட்டையைத் திருப்பித்தந்த உரிமையாளர்,
“சார்! படிச்சவர் மாதிரி இருக்கீங்க. சபலத்துக்கு அடிமையாகி இப்படிக் கட்டின பொண்டாட்டிக்குத் துரோகம் செய்யறது நல்லாவா இருக்கு…” முடிக்கும் முன்,
“மைண்ட் யுர் ஓன் பிஸினஸ்!” கண்கள் சிவக்க கர்ஜித்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினான் ஷ்ரவன்.
உள்ளப்பூர்வமாக நேசிக்கிறேன்; உவந்து உன்னை நாடுகிறேன்;
உக்கிரக்காளியாக மாறியது ஏனடி பெண்ணே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று ஏசினாயோ – பூட்டிவைத்த
உண்மை உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தாயோ?
ஊசலாடும் உன் உள்ளத்தின் விருப்பம்தான் என்ன – விடை தேடுகிறேன்
ஊனுயிரே! நிழலாடும் நின் நினைவில்…
error: Content is protected !!