Skip to content
Post Views: 48
ஓம் ஸ்ரீ சாய்ராம்
தொடர்ந்து வந்த திங்கட்கிழமையே உத்ராவும் ஷ்ரவனும் அலுலகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். முதல் இரண்டு நாட்களுக்கு அம்மாவைத் தேடி வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாளே தவிர, குழந்தைக்கும் அந்த அன்றாட பழக்கங்கள் பழகிப்போய் பாட்டியுடன் ஐக்கியமானாள்.
“அண்ணா! இந்த மான்டசரி ஸ்கூல் பிராஜக்ட்லேந்து புது கேடட் கம்யூனிடியோட ப்ளே ஏரியாக்கான டிசைன்ஸ் எடுத்துக்கலாமான்னு சொல்லுங்க,” என புகைப்படங்களின் ஆல்பம் ஒன்றை அவன் மேஜைமேல் வைத்தாள் உத்ரா.
“மான்டஸரி ஸ்கூல்ன்னா அது அவங்களோட பிரத்யேகமான டிஸின்ஸ்ஸா இருக்கும் உத்ரா,” என்றவன் காப்புரிமை மற்றும் இதர சட்டரீதியான ஆவணங்களைச் சோதித்த பிறகே முடிவெடுக்க முடியும் எனக் கூறியபடி அந்த ஆல்பத்தின் பக்கங்களைத் திருப்பினான்.
Advertisement
பதினோராவது பக்கத்திற்கு வந்தவனின் விரல்கள், அதிலிருந்த ஊஞ்சல் வடிவத்தைக் கண்டதும் அப்படியே உறைந்தது.
“இது அவங்க தந்த டிசைனா இல்ல நான் டிசைன் பண்ணதா,” யோசனையில் புருவங்களை வளைத்தான்.
தன்னிச்சையாக அவன் எழுப்பிய வினாவில் சிலிர்த்துப்போனவள், “ஆமாம் அண்ணா! ஒன் ஆர் டூ இயர்ஸ் முன்னாடிதான் வரைஞ்சீங்க? உங்களுக்கு இது ஞாபகத்துல இருக்குதா?” ஆர்வமாய் அவனை நோக்கினாள்.
Advertisement
அவனுக்கும் அந்த வரைப்படத்தைப் பார்த்ததுமே ஏதோ இனம்புரியாத உணர்வுகள் இதயத்தில் மலரவே செய்திருந்தது.
Advertisement
“வரைஞ்சேன்னு புரியுது உத்ரா. ஆனால் ப்ளாக் அவுட் ஆனா மாதிரி இருக்கு. மனசுல நினைக்கிறத சொல்ல சரியான வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குதே,” வலது கை விரல்களில் சொடுக்கிட்டபடி யோசனையில் தோய்ந்தான்.
தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டிருக்கும் வார்த்தைகளை உரக்கச் சொல்ல மெனக்கெடும் அவன் போராட்டத்தைக் கண்டுகொண்டவள்,
“சரி! இதுல நீங்க அவங்களுக்கு வரைஞ்சு கொடுத்த இன்னும் நாலு டிசைன்ஸ் இருக்கு. எதுஎதுன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்,” அவன் நினைவாற்றலுக்குப் பரிட்சை வைத்தாள்.
Advertisement
பக்கங்களை வேகவேகமாகப் புரட்டியவன், “மடித்துவைக்கக் கூடிய ப்ளே பென், அந்தரத்திலிருந்து தொங்கும் இன்னிசை பொருந்திய விளையாட்டுப் பொம்மை, குழந்தைகள் எளிதில் திறந்து மூடகூடிய அலமாரி, கன்வர்டபில் க்ரிப் என நான்கையும் துல்லியமாகக் கண்டுபிடித்தான்.
“பர்ஃபெக்ட் அண்ணா!” பலத்த கை தட்டல்களுடன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதித்தாள்.
“இதை நான் இவங்களுக்காக மட்டும் டிசைன் பண்ணல தானே! என் பெயருலதானே பேடன்ட் வாங்கிக்கிட்டேன்,” அவன் கேள்விகளை எழுப்ப,
“வாவ் அண்ணா! உங்களுக்கு எல்லாம் நியாபகம் வரமாதிரி இருக்கு. இருங்க நான் இப்பவே தருணைக் கூப்பிடுறேன்,” உற்சாகத்தில் மிதந்தவள் இன்டர்காமில் அழைக்க பரபரக்க,
“இல்ல! இல்ல! அவசரப்படாத உத்ரா,” தடுத்தான் ஷ்ரவன்.
“எனக்கு இன்னும் எதுவும் க்ளியரா புரியல. இன்னும் கொஞ்சம் க்ளாரிடி கிடைச்சதுக்கு அப்புறம் சொல்லலாம். அதுவரைக்கு ‘யார்கிட்டயும்’ இதைப்பற்றி சொல்லாதே ப்லீஸ்,” யார்கிடயும் என்ற வார்த்தையை அழுத்திக் கூறினான்.
அதன் அர்த்தம் உணர்ந்தவள், “சரி ‘ண்ணா. இது சம்பந்தமா ஒரு க்ளூ தரட்டுமா? அது உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்னு தோணுது,” என ஆசையாகக் கேட்டாள்.
“ம்ம்… சொல்லும்மா,” என்றவனின் செவிகள் ஆர்வத்தில் வளைந்தன.
“இதை நீங்க டிசைன் பண்ண எக்ஸாட் டைம் சொல்லணும்னா, அக்கா கன்சீவானது கன்ஃபர்ம் ஆன அதே நாள்தான் நமக்கு இந்த பிராஜக்ட் வந்துது. நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு உதவும்னு சொல்லிக்கிட்டே தான் இதெல்லாம் செஞ்சீங்க. டிசைன்ஸ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த க்ளையின்ட், அவங்க எக்ஸ்க்ளூசிவ் கலெக்ஷன்னோட சேர்த்துக்க டீல் பேசினாங்க. ஆனால் நம்ம வீட்டுக் குழந்தைகள மனசுல வச்சு முதல் முதலா வரைஞ்சிருக்க டிசைன்ஸ் நம்மகிட்ட தான் இருக்கணும்னு சொல்லி அவங்க ஆஃப்ஃபர மறுத்துட்டீங்க,” விவரித்தாள்.
உத்ரா சொல்ல சொல்ல மகப்பேறு மருத்துவமனையின் நிழல் மங்கலாய் கண்முன் நிழலாடியது அவனுக்கு. ஆழ்ந்து சிந்தித்தவனுக்குத் தலைபாரம் கூடியதே தவிர, ஊமைப்படம் பார்ப்பது போல உணர்ந்தான்.
நினைவூட்டிக்கொள்ள பிரயத்தனப்படும் அவன் முகச்சுளிப்புகளில் கவலைக்கொண்டவளாய்,
“ரிலாக்ஸ் அண்ணா! டைம் எடுத்து யோசிங்க. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க,” என அவன் பின்முதுகில் வருடி ஆசுவாசப்படுத்தினாள்.
பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தவன், “உங்கக்கிட்ட கேட்காம யார்கிட்ட மா கேட்கப்போறேன்,” என மென்னகைத்தான்.
அன்று முழுவதும் மருத்துவமனையின் மங்கலான வடிவம் கண்முன் நிழலாடி அவனை வாட்டியெடுத்தது.
‘அந்தக் கட்டிடம் எழுப்ப உதவினேனா; ரம்யாவின் சிகிச்சைக்கு மட்டும் சென்றோமா; ஷர்மிலாவை அழைத்துக் கேட்கலாமா; ரம்யாவிடமே நேரடியாக கேட்கலாமா?’ எனப் பலக் கோணங்களின் யோசித்தான். ஊட்டச்சத்து மருந்து வாங்கும் ரசீத்தைக் கூடப் பத்திரப்படுத்தும் மனைவியின் சுபாவத்தை அறிந்திருந்தவனின் விழிகள் அலமாரியைத் தழுவியது.
“அங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க ஷ்ரவன்?” அவனை உலுக்கிய ரம்யா, “இங்க பாருங்க! எல்லாத்துக்கும் நானே ஆன்சர் கண்டுபிடிச்சிட்டேன்,” பெருமிதம் பொங்க குறுக்கெழுத்து புதிர் புத்தகத்தை நீட்டினாள்.
அவள் குரல் மட்டும் செவிகளில் ரீங்கரமிட, பிறர் சொல்லிக் கேட்டோ, அறிக்கைகளைப் பார்த்தோ மகப்பேறு மருத்துவமனையின் பெயரைக் கண்டுபிடிக்க இது ஒன்றும் துப்பறியும் பயிற்சி இல்லையே எனத் தெளிந்தவன்,
“ம்ம்ம்…. எல்லாத்துக்கும் நானே தான் ஆன்சர் கண்டுபிடிக்கணும்,” தன் போக்கில் முணுமுணுத்தான்.
“அதான் நானே கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்றேனே,” அவள் புத்தகத்தை அவன் முகமருகே நீட்ட,
சுயத்திற்கு வந்தவன், தன் மனவோட்டத்தை எண்ணி சிரித்தபடி, புத்தகத்தை மடித்து, “நானும் சீக்கிரமே எல்லாத்தையும் கண்டுபிடிப்பேன் பாரு,” எனக் கண்சிமிட்டி, “குட் நைட்!” என்றான்.
ஆழ்மனத்தில் சுழன்று கொண்டிருந்த எண்ணங்கள் யாவும் சம்பந்தமே இல்லாத கனவுகளாக உருமாறியது. நெரிசலான சாலை, கடைத் தெருக்கள், மக்கள் நடமாட்டம் என மனக்கண்ணில் தோன்றிய சித்திரங்களின் விளைவால், சரியான தூக்கம் இல்லாமல் தலைபாரத்துடனே விழித்தான்.
அன்று மேற்பார்வையிட வேண்டிய மூன்று பணிகள் இருந்ததால் விடுப்பு எடுக்கவும் இயலவில்லை.
“அடையார், தாம்பரம், செங்கல்பட்டுன்னு மூணு இடத்துக்குப் போகணும் ரம்யா. எத்தனை மணிக்குச் சாப்பிடுவேன்னு தெரியாது. லன்ச் கட்டாத. பசிக்கும்போது ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்,” எனக் கூறி, காலை உணவுக்கு இடியாப்பம் மட்டும் உண்டுவிட்டு புறப்பட்டான்.
அடையார் பணிகளை மேற்பார்வையிட்டவன் வண்டியை தாம்பரத்தை நோக்கி இயக்க, சாலை நெரிசலில் வண்டிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து நகர்ந்தன.
ஏனோ முந்தைய தினம் கண்ட கனவு மறு ஒளிப்பரப்பாவது போலத் தோன்றியது அவனுக்கு.
கடைத்தெருக்களின் பக்கம் குறிக்கோள் இல்லாமல் சுழன்று கொண்டிருந்த அவன் பார்வை அந்த நிழற்பட நிலையத்தின் மேல் படர்ந்தது.
மிகவும் பரிச்சயமாக இருந்தது. அங்கு முன்னமே சென்றிருந்த உணர்வு. அப்படியே வந்திருந்தாலும், வீட்டுப் பக்கத்திலும் அலுவலகம் பக்கத்திலும் ஏராளமான நிழற்பட நிலையங்கள் இருக்க, இத்தனை தூரம் வரவேண்டிய அவசிய என்ன என்ற கேள்வி அவன் மண்டையை வண்டாய்க் குடைந்தது.
சாலை நெரிசலில் அவதிப்படுவதற்குப் பதிலாக, கடைக்குள் சென்று பார்த்தால்தான் என்ன என்று தோன்ற, வண்டியை ஓரங்கட்டி கடைக்குள் நுழைந்தான்.
வெளியிலிருந்து பார்த்ததைக் காட்டிலும் உள்ளே பிரம்மாண்டமாகவே இருந்தது. மூன்று ஊழியர்களைத் தாண்டி வேறு யாருமில்லை. அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரங்களைப் பார்வையிட்டபடி உள்ளே நுழைந்தவனை வரவேற்றார் கடையின் உரிமையாளர்,
“ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சார்,” அவர் மிடுக்காக ஆங்கிலத்தில் கேட்க,
“இதுக்கு முன்னாடி நான் இங்க வந்திருக்கேனா?” எனப் பதிலுக்குக் கேட்டு அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தினான் ஷ்ரவன்.
‘கஸ்டமர் ஃப்ர்ஸ்ட்!’ என்ற தொழில் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ரகம் அவர்.
“வந்திருக்கலாம் சார். ஆர்டர் ஏதாவது கொடுத்திருந்தீங்களா? ரசீத்து வச்சிருக்கீங்களா?” கண்டறிய வழிகளைச் சொன்னார்.
எதுவுமே இல்லை என்றவனின் கண்களிலிருந்த தவிப்பை உள்வாங்கியவர்,
“நாங்க டிஜிடல் ரெக்கார்ட்ஸும் மெயின்டெயின் பண்ணறொம்; அரைமணி நேரம் காத்திருக்க முடியும்ன்னா, உங்க நேம் ஆண்ட் ஃபோன் நம்பர் கொடுங்க சார். எதை என்னைக்கு ஆர்டர் பண்ணீங்கன்னு பார்த்துச் சொல்றேன்,” உதவ முன்வந்தார்.
விவரங்களை எழுதிகொடுத்து காத்திருப்பவர்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டான். மீண்டும் அவன் விழிகள் நினைவை மீட்டெடுக்கும் துப்பு தேடித் தவியாய்த் தவித்தது.
நிழற்படங்களைத் தாண்டி வாழ்வின் முக்கிய தருணங்களின் நியாபகார்த்தமாய் வைத்துக்கொள்ளும் ‘கீப் சேக்’பொருட்களைக் கண்டு பிரமித்தான். மனத்திற்கு இனியவர்களின் உருவங்களைக் கொண்ட காபி மக்ஸ், தோள் பைகள், ஃப்ரிட்ஜ் மேக்னட்ஸ், க்ரிஸ்டல் க்லோப், சிற்பங்கள் என ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கு முன்னர் வந்த காரணம் பளிச்சிட, மூச்சுமுட்டியது.
அதிவேகமாக கடையின் உரிமையாளரைத் தேடி ஓடினான்.
“சார்! சார்! அந்த கிரிஸ்டல் க்ளோப் நான் ஆர்டர் தந்தது. அது என்னுடைய குழந்தைகளின் அல்ட்ரா சவுண்ட் இமேஜஸ்,” பொம்மையை எடுக்க, பூட்டப்பட்டிருந்த கண்ணாடி அலமாரியைத் திறக்க முயன்றான்.
அவனது வியர்த்துக் கொட்டும் முகமும், நடுங்கும் விரல்களும், அலைபாயும் கண்களுமே அவன் பதபதப்பை எடுத்துகாட்டியது.
அவன் உபயோகிக்கிம் அழுத்தத்தில் கண்ணாடி அலமாரியும் அதிலிருக்கும் மெல்லிய பொருட்களும் சுக்குநூறாய் உடைந்துவிடும் என அஞ்சியவர்,
“ப்ளீஸ் ரிலாக்ஸ் சார். ஆர்டர் ரெக்கார்ட் பார்த்து, அது உங்களுதுன்னா நானே எடுத்துத்தரேன்,” அவனை வலிய பின்னுக்கு இழுத்தார்.
“நவம்பர் 17, 2012 அன்னைக்கு ரெண்டு செட் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோஸ் ஆண்ட் ஒரு பர்சனலைஸ்ட் கிரிஸ்டல் குளோப் ஆர்டர் கொடுத்திருக்கேனா பாருங்க!” படபடவென்று ஒப்பித்தான்.
சற்றுமுன் எதுவுமே நினைவில் இல்லை என உரைத்தவன், கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னான தேதியைக் குறிப்பிடுகிறானே என்று அவனைக் கேள்வியாகப் பார்த்தார் உரிமையாளர்.
அந்த கிரிஸ்டல் பொம்மையை வெறித்துப் பார்த்துப் பேதலித்து நிற்கும் ஷ்ரவனிடம் மேலும் கேள்விகளை அடுக்க துணிவில்லாதவர், ஊழியரிடம் அவன் சொன்ன தேதியின் ஆர்டர்களை சோதிக்கச் சொல்லி கண்ணசைத்தார்.
விழிகள் அகல கணினியை ஏறிடும் ஊழியரின் முகபானையிலேயே அது உண்மை எனப் புரிந்தது உரிமையாளருக்கு.
அவர் புரிந்துகொண்ட நேரரத்தில் ஷ்ரவன் மீண்டும் அந்த அலமாரியை நோக்கி ஓடியிருந்தான்.
“பலவந்தமா திறக்க முயற்சிக்காதீங்க. அது லாக் ஆகிருக்கு,” அலறியபடி அவன் பின்னால் ஓடியவர், மீண்டும் அவனை கட்டுக்குள் வைக்க பெரும்பாடுப்பட்டபடி, ஊழியரை எடுத்துப் பார்த்துச் சோதிக்கச் சொன்னார்.
கணினியிலும் கிரிஸ்டல் குளோபிலும் ஒரே ஆர்டர் எண் இருப்பதை உறுதி செய்துகொண்டவர், அதை ஷ்ரவனிடம் எடுத்துத் தர,
தன் இரு செல்வங்களும் பின்னிப் பிணைந்து அசைநாடும் அந்த கிரிஸ்டல் குளோப்பை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு தரையில் மண்டியிட்டபடி ஓ என்று கதறி அழுதான்.
எட்டு வருட ரம்மியமான இல்வாழ்க்கை கண்முன் விரிய, என்னவளை எப்படி மறந்தேன் என்ற மனவுளைச்சலில் புழுவாய்த் துடிதுடித்தான்.
எதற்காக வந்தோம் என்பதே தெரியாமல் கடைக்குள் நுழைந்தவர், திடீரென ஒரு பொருளைத் தன்னுடையது எனச் சாதித்தது, துல்லியமாக ஒன்றரை வருடத்துக்கும் முன் ஆர்டர் செய்த தேதியை நினைவுகூர்ந்தது, எல்லாவற்றிருக்கும் மேலாக அனைத்தும் அப்பட்டமான உண்மையாக இருப்பது என்று அனைத்தையும் அசைபோட்ட உரிமையாளர், ஷ்ரவன் ஏதோ அதீத மனவுளைச்சலில் இருப்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தார்.
விக்கித்து அழும் அவனை கைத்தாங்கலாய்ப் பிடித்து எழுப்பி இருக்கையில் அமரவைத்துப் பருக தண்ணீர் கொடுத்தார்.
இருக்குமிடம் உணர்ந்து சுதாரித்துக்கொண்டவன், “என் குழந்தைகள் இப்போ உயிரோட இல்லை சார்,” சொல்லும்போதே துக்கம் மீண்டும் தொண்டையை அடைத்தது.
என்ன ஆறுதல் சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை.
“ஐ ஆம் சாரி ஃபொர் யுர் லாஸ் சார்,” என அழுந்த அவன் தோள்பற்றி வருந்தியவர், “நம்பிக்கையை இழக்காதீங்க சார். நாம ஆத்மார்த்தமா நேசிக்குறவங்களோட ஆத்மா நம்மள சுத்தியே இருக்கும்னு சொல்லுவாங்க. ஒன்றரை வருஷத்துக்கும் அப்புறம் பொம்மையா உங்க கைக்குத் திரும்பி வந்திருக்கும் குழந்தைகள் மறுஜென்மம் எடுத்து வரட்டும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்,” எனத் தேற்றினார்.
‘மறுஜென்மம்!’ என அவர் சொன்னதும்தான், தானே மறுஜென்மம் எடுத்திருப்பதை உணர்ந்தான். ஓடிச்சென்று தன்னவளின் தவத்திற்குப் பதில் சொல்லவேண்டும் என மனம் துடிதுடித்தது.ஆனால் அவன் இருந்த மனநிலையில் எழுந்து நடக்கக் கூட நிதானம் இல்லை.
கனிவுடன் பேசிய கடைக்காரருக்கு நன்றி சொல்லி ஆட்டோவில் புறப்பட்டான்.
ஆட்டோவில் பயணித்தவனின் சிந்தனையில் மேலும் சில காட்சிகள் விரிய, அவற்றை உறுதி செய்துகொள்ள, நேராக அலுவலகத்திற்குச் செல்ல தீர்மானித்தான்.
கட்டிட வேலை நடக்கும் இடத்திற்குப் போகாமல் அலுவலகம் வந்திருக்கும் அண்ணனை கேள்வியாகப் பார்த்தனர் தருணும் உத்ராவும்.
“என் ஆக்சிடென்ட்க்கு அப்புறம் இந்த ரூம க்ளீன் பண்ணது யாருடா? டெஸ்க்ல வச்சிருந்த ஃபைல்ஸ் பேப்பர்ஸ் எல்லாத்தையும் என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா?” ஷ்ரவன் கேள்வி எழுப்பியதுமே,
“அண்ணா! உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுத்தா?” அவனருகே ஓடிவந்தாள் உத்ரா.
“அப்படித்தான் நினைக்குறேன் உத்ரா” தலைகுனிந்த ஷ்ரவனின் எதிரில் மண்டியிட்ட தருண், “நிஜமவா டா? எப்போ? எப்படி?” இருப்புக்கொள்ளாமல் கேள்விகளை அடுக்கினான்.
வாயைத்திறந்தாலே அழுது விடும் நிலையில் இருந்தவன், “ப்ளீஸ்! என்னை எதுவும் கேட்காத. அந்த ஃபைல்ஸ் எல்லாம் இருக்குதா இல்லையா?” கெஞ்சிக் கேட்டான்.
“ரமேஷத்தான் உன் ரூமைக் க்ளீன் பண்ணச் சொன்னேன். கேட்டா தெரியும்,” தருண் அவன்போக்கில் விட்டான்.
மறுகணமே ரமேஷை அழைத்துப் பேசிய உத்ரா, அனைத்தும் ஷ்ரவனின் அலுவலக அறையின் அலமாரியில் மேல் தட்டில் இருப்பதாகக் கூற, தன் அறையை நோக்கி விரைந்தான் ஷ்ரவன்.
என்ன நடக்கிறது எனப் புரியாமல் நின்ற கணவன் அருகே வந்த உத்ரா, முன்தினம் அவன் மான்டசரி பள்ளிக்கூடத்தின் புகைப்படங்களைப் பார்த்ததும் தன்னிச்சையாக நினைவூட்டிக்கொண்ட விஷயங்களையும் பகிர்ந்தாள்.
கேட்டவனுக்குப் பேரானந்தம். அண்ணனைத் தேடி ஓடினான். அவன் சரிபாதியும் அவனை நிழலாய்த் தொடர்ந்தாள்.
இதற்கிடையில் தான் தேடி வந்த அனைத்தும் பத்திரமாக இருப்பதைக் கண்ட நெகிழ்சியில் அந்தக் கோப்பினைக் கட்டியணத்து, கண்மூடி இருக்கையில் சாய்ந்துகிடந்தான் ஷ்ரவன்.
தருணும் உத்ராவும் உள்ளே நுழைய, தன் கண்ணீரையும் கோப்பினையும் மறைக்க முன்னும் பின்னுமாக நெளிந்தான்.
“உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுத்துன்னும் புரியுது. அதை நீ உன் பொண்டாட்டிக்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு நினைக்கிறன்னும் புரியுது,” அண்ணனின் உடல்மொழியிலேயே அவன் உள்ளத்தைப் படித்தான் தம்பி.
படித்த வேகத்திலேயே தோழிக்கும் அழைக்க அலைபேசியை எடுத்தான்.
“அவகிட்டதான் முதல்ல சொல்லணும். ஆனால் இப்ப வேண்டாம்,” தடுத்தான் ஷ்ரவன்.
எதிரில் வந்து நின்று விழிகளில் தூதுவிடவா?
தலைசாய்த்து உன் காதோரம் ரகசியம் சொல்லவா?
மறுகும் உன் மடிசாய்ந்து மன்னிப்பை யாசிக்கவா?
பாய்ந்தோடி வந்து உன்னைக் கட்டி அணைக்கவா?
வலிகளை மறைத்து உறவாடும் காரிகையே,
வந்துவிட்டேன் உன்னவனாக என எடுத்துச்சொல்ல – விடை தேடுகிறேன்
வேரூன்றி நிழலாடும் நின் நினைவில்…
error: Content is protected !!