நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 16
16.
தாலி – 16
விடிய விடிய அவளை தேடி தேடி பித்து பிடித்தது போல அலைந்தான்.
அவனால் மூச்சு விடவே முடியாத நிலை. உயிரை உறைக்குள் அடைத்த அவனிலை அவனுக்கு. மூச்சு குழாய் அடைத்து கொண்டு தவித்தான்.
Advertisement
“இன்னொரு முறை என்னால உன்னை இழக்க முடியாது. சத்தியமா முடியாது டி. ப்ளீஸ் டி வந்துடு. நான் என்ன பண்ணுவ? எங்க இருக்க? அதுக்குள்ள எங்க போயிட்ட?” பைத்தியம் பிடித்தது போல் தெரு முழுவதும் கதறிக் கொண்டே தேடினான்.
அந்த காரிருள் கூட இவனுக்கு உதவியது நிலவு மகள் வடிவில் வெளிச்சம் கொடுக்க, அவளோ இவன் கண்களுக்கு சிக்கவில்லை. அந்த ஊரிலேயே அவள் இல்லாத போது எப்படி சிக்குவாள்? மனம் வெறுத்து வாழ்வை வெறுத்து இருந்த கொஞ்ச நெஞ்ச உயிரும் மறித்து தன் கருவில் இருக்கும் குழந்தைக்காக வாழ வேண்டிய வைராக்கியத்தோடு ‘இனி யாரும் வேண்டாம். இவர்கள் யாரும் இல்லாத ஊருக்கு செல்ல வேண்டும். தனியே வாழ வேண்டும். என் குழந்தைக்காக மட்டும் வாழ வேண்டும். என் குழந்தை மட்டும் எனக்காக போதும். வேறு யாரும் வேண்டாம். காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம். அம்மா மாமா தங்கை எந்த உறவும் வேண்டாம்.’ என்று ஊரை விட்டே சென்று விட்டாளே. இனி இவன் இங்கேயே சுற்றி சுற்றி வட்டமிட்டு அலசி ஆராய்ந்தால் அவள் வாசனையை கூட இவனால் கண்டறிய முடியாது.
அவனோ சுற்றம் உணராமல் பித்தனாக அவளை தேடி கொண்டிருந்தான். அவன் வண்டியும் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல் நின்று விட்டது.
Advertisement
உயிர் இல்லாத பொருளுக்கே ஓய்வு தேவைப்படும் போது உயிர் உள்ள இவனோ ஓய்வா அப்படி என்றால் என்ன? என்பது போல் அவளை தேடி ஓட தொடங்கினான்.
Advertisement
செருப்பனியா காலில் இருந்து ரத்தம் வழிந்தது. அதையும் பொருட்படுத்தவில்லை. வலியும் அவன் கருத்தில் பதியவில்லை.
“ஒருவேளை அவங்க வீட்டுக்கு போய் இருப்பாளா?” புத்திக்கு உரைத்த நொடியே அவன் கால்கள் அவள் வீடு இருந்த பகுதிக்கு ஓடியது தானாக.
மின்னலாக அவள் வீட்டு முன்பு வந்து நின்றான். அவனுக்கு அவள் அங்கு இருப்பாளோ என்ற கடைசி நம்பிக்கை.
Advertisement
வீடு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஆதி வெளியே அமர்ந்து அழுது கொண்டிருக்க,
அவனுக்குள் படபடப்பு மூச்சு இழுத்து பிடித்துக் கொண்டு அந்த வீட்டு வாசலில் ஏறினான்.
எந்த வீட்டு வாசலில் கால் பதிக்கவே கூடாது.. உயிர் போகும் நிலையிலும் எந்த வாசலில் நிற்க கூடாது என்று இத்தனை வருடங்கள் ஒதுக்கி வாழ்ந்தானோ இன்று அதே வீட்டு வாசலை தன் மனைவியை தேடி மிதித்தான்.
அவளுக்கு முன்பு அவன் வீம்புகள், வைராக்கியம் எதுவும் பெரிதாக தெரியவில்லை. அனைத்தும் சுக்குநூறாக தகர்ந்து போனது. தகர்த்து விட்டாள் அவள். வேறு எதுவும் வேண்டாம். அவள் மற்றும் போதும். அவள் இங்கு இருந்தால் மட்டும் போதும் என உயிரை இழுத்து பிடித்து நின்றான்.
“நிவி…..!!” உயிரை உருக்கும் குரலில் அழைத்தான்.
சத்தமாக கூட அழைக்கவில்லை. நடுக்கத்தில் வார்த்தைகளில் கூட அழுத்தம் இல்லை.
சத்தம் கேட்டு தான் ஆதி நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் சிவந்து அழுது வீங்கிய முகத்துடன் நிமிர்ந்தவள் வாசலில் நிற்பவணை கண்டு கண்கள் சிவக்க எழுந்து நின்றாள்.
அடி எடுத்து வைக்க முடியவில்லை அக்காவை ஓடி, ஓடி தேடி கால்கள் வீங்கி போனது. கால்களில் இரத்தம் வரவே தாங்கி தடுமாறி அவன் அருகில் வந்து நின்றவள்,
“இப்போ உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சந்தோஷமா? இதுக்கு தானே இத்தனை வருஷம் காத்திருந்தீங்க? நீங்க எல்லாரும் ஆசைப்பட்டது நடந்துச்சா? உங்க எல்லாருக்கும் சந்தோஷமா? உங்க அம்மா ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்காங்களா?” என்றவளாள் அழாமல் இருக்க முடியவில்லை.
அவள் வார்த்தைகளில் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அவனுக்குள் ஒரே மந்திரம் தான் ‘என் நிவி இங்கே இருக்க வேண்டும். அவள் இருக்கிறாள் என்ற பதில் போதும்.’
“உங்க கிட்ட கோபப்பட்டு என்ன பண்ண முடியும்? உங்களையும் உங்க அம்மாவை பத்தி தெரிஞ்சு தான் என் அக்கா வாழ்க்கை நாசமாகிட கூடாதுன்னு அந்த வீணா போன நாய்க்கு கட்டி கொடுத்தாங்க. அவன் நல்லவன் மாதிரி நடிச்சு சாக்கடையா இருந்துட்டான். அப்படியே விட்டிருந்து இருக்கலாம். திரும்ப உனக்கே கல்யாணம் பண்ணி கொடுத்து எது நடக்க கூடாதுன்னு நினைத்தார்களோ அதுவே நடந்து போச்சு. எல்லா தப்பும் என் அம்மா மேல தான். அவங்க மட்டும் தான் இது எல்லாத்தும் காரணம்.
இனியாவது உங்க அம்மாவை நிம்மதியா தூங்க சொல்லு. ஆனா ஒன்னு மட்டும் உண்மை என் அம்மாவை மட்டும் குறை சொல்ல உன் அம்மாவுக்கும், உன் குடும்பத்துக்கும் தகுதி கிடையாது. அவங்க ஒன்னும் அவ்வளவு நல்லவங்க கிடையாது.” என வேதனையாக கூறியவளாள் கோபம் கூட பட முடியவில்லை. வேதனை நெஞ்சை அழுத்தியது.
இனி யாரையும் குறை கூறி எதுவும் ஆக போவதில்லை.
அக்னி நெஞ்சம் நடுங்க, “நிவியை கூப்பிடு.” என்றான்.
“கூப்பிடவா? நான் ஏதாவது அசிங்கமா கேட்டுட போறேன். மரியாதையே போய்டு. என் அக்காவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டு இப்போ வந்து கூப்பிடுவா? கொஞ்சம் கூட உங்களுக்கு மனசாட்சி இல்லையா? அவளை தேடி, தேடி மயங்கி விழுந்து இங்க வாசலில் கிடக்கேன். எங்க போனாள் தெரியல. போய் சொல்லு உன்னை பெத்தவ கிட்ட என் அக்கா ஊரை விட்டு போய்ட்டா. காணாமல் போயிட்டா. மொத்த தெருவே தெரு தெருவாக தேடுது. இதுவரைக் எந்த தகவலும் இல்லை. என் அக்காவை காணும்.
என் அக்கா பண்ண தப்பு உன்னை காதலிச்சது மட்டும் தான். அந்த காதல் மட்டும் இல்லனா அவள் வாழ்க்கை ரொம்பவே நல்லா இருந்து இருக்கும். நல்லா வாழ்ந்து இருப்பா. உன்னை மாதிரி ஒரு அம்மா பிள்ளையை காதலிக்காதன்னு பல முறை அவள் கிட்ட சொல்லிருக்கேன்.
எனக்கு என் கருவாயா மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லி, சொல்லி அவளும் ஏமாந்து என்னையும் ஏமாத்திட்டாள்.
இன்னைக்கு மொத்த குடும்பத்தையும் தெரு தெருவாக சுத்த விட்டுட்டாள். போ என் கண்ணு முன்னாடி நிக்காத.” என அழுகையும் ஆத்திரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவள் அப்படியே மடங்கி சுவருடன் அமர்ந்து கதறி அழ தொடங்கி விட்டாள்.
பெண் அவள் அழுது தன் வேதனையை தீர்த்து கொள்கிறாள். இவனோ ஆண் மகன் அழ முடியாமல் மூச்சு நின்ற சடலமாக நின்றான்.
அவன் இறுதி நம்பிக்கை அறுந்து போனதே. ‘என்னவள் இங்கேயும் இல்லையா? எங்கே சென்றாள்?’ பொம்மை போல் திரும்பி நடந்தான்.
முழுவதுமாக விடிந்து வெளிச்சம் பரவி விட்டது.
அமர் அண்ணனை தேடி சுற்றிக் கொண்டிருந்தான்.
அக்னி உறைந்த விழிகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன் எதிரே வந்தார் தென்பாண்டி.
மகனை கண்டதும் அவருக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. ஆனாலும் அவனிடம் அவளுக்காக பேசி இந்த திருமணத்தை நடத்தியது இவர் தானே? அவனிடம் கோபப்பட்டு என்ன செய்வது? கோபப்பட வேண்டும் என்றால் என் மீதே தான் கோபப்பட வேண்டும்.
அவனை கண்டும் காணாதது போல் அவனை தாண்டி வந்து விட்டார்.
அக்னி அவர் சென்றதை கூட உணரவில்லை.
தென்பாண்டி வீட்டுக்கு வர வைதேகி ஆதி முன்பு கூனி குறுகி போய் நின்று இருந்தார்.
“இப்போ சந்தோஷமா? சொல்லு இப்போ சந்தோஷமா? இதுக்கு தானே அந்த பிள்ளையை உருட்டி, உருட்டி உன் விருப்பத்துக்கு விளையாடிட்டு இருந்த? இன்னைக்கு மொத்தமா காணாமல் போய்விட்டாள். ரொம்ப பெருமையா இருக்கும் உனக்கு. உன் கிட்ட ஒன்பது கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என் அக்கா கேட்டாளா? அவள் பாட்டுக்கு தனியா வாழ்ந்துகிறன்னு சொன்னாள். அவள் பிள்ளைக்காக வாழ்ந்துகிறேன்னு சொன்னாள். ஒவ்வொரு முறையும் அவளை கட்டாயபடுத்தி நாசம் பண்ணிட்டியே. நீ எல்லாம் ஒரு அம்மாவா? இப்போ எதுக்கு அவளை தேடுற? தேடி கண்டு பிடிச்சு மூன்றாவதாக ஒரு கல்யாணம் பண்ண போறியா?” என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருக்க, அனைவரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
வைதேகி வாயை பொத்தி அழுத்தி கொண்டிருந்தார்.
அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
“ஆதி நீ வேற ஏன்மா?” என தென்பாண்டி வலி நிறைந்த குரலில் தடுத்தார் அவளை.
“என்ன என்னம்மா? என் கிட்ட கேக்குறது தப்பு நான் தான் உங்க கிட்ட கேட்கணும்.
என் அக்கா எங்க? சொல்லுங்க ரெண்டு பேரும். என் அக்கா எங்க? எங்க தொலைச்சீங்க? அவள் தனி ஆளா? இரட்டை உசிரா இருக்கா. கொடுங்க. என் அக்காவை கொண்டு வந்து என் கண்ணு
முன்னாடி நிறுத்துங்க.” என தன் முழு பலத்தை பயன்படுத்தி கத்தினாள்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அண்ணன் தங்கை இருவரும் தடுமாறி கண்ணீர் மல்க தலை குனிந்து நின்று இருக்க,
வைதேகி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார்.
“வைதேகி…” என கத்தியபடி தென்பாண்டி தன் தங்கை தலையை தாங்கி பிடிக்க, “அம்மா.” என ஆதி கதறியபடி அன்னையை தங்கி கொண்டாள்.
அவருக்கு கண்கள் மேல் நோக்கி சொருகியது.
“அம்மா.. சாரி நான் எதுவும் பேசல.” என அவளோ அழுதாள்.
அவள் பேசியதால் தான் அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்ததாக அவள் உணர்ந்தாள்.
“அண்ணா…” என வைதேகி திக்கி திணறி அழைக்க,
அதற்குள் பக்கத்து வீட்டு காரர் ஆட்டோ எடுத்து வந்தவர், “தென்பாண்டி தூக்கிட்டு வா. ஹாஸ்பிடல் போகலாம்.” என அவர் கத்த,
தென்பாண்டி தங்கையை தூக்கி கொண்டு ஓடினர். ஆட்டோவில் கிடத்தி தங்கை மகளை பார்க்க அவளோ காலை இழுத்துக் கொண்டு ஓடி வர,
“ஆதி நீ இங்கேயே இரு. நான் அம்மாவை பாத்துக்கிறேன்.” என அவசரமாக கூறி “ஆட்டோவை எடு.” என்றார்.
ஆதி அப்படியே விழுந்து அழ.. வைதேகி தன் இறுதி மூச்சு இழுத்து பிடித்தபடி இறுதியாக மகளை விழிகளில் நிரப்பி கொண்டு ஆட்டோவில் கிளம்பினார்.
தொடரும்…..
