Skip to content
Post Views: 10,651
நீங்காத உறவே!…
அத்தியாயம் 2
ராகவன் திருமணத்திற்கு திலகாவும், தெய்வமும் மட்டுமே வந்து இருந்தார்கள். அதுவும் நேராக மண்டபத்திற்கே வந்தார்கள். உடன் பிறந்த சொந்தம் என்று கோவிலுக்கு எல்லாம் வரவில்லை. அவர்களை எதிர்கொள்ள முடியாமல் கல்யாணி தான் கூனிக்குறுகி போனார். வார்த்தைக்கு வார்த்தை என் மருமகள், என் மகனின் மனைவி என்று காணும் போதெல்லாம் சொல்லிவிட்டு… இன்று வேறொருத்தியை மருமகளாக்கிக் கொண்டார்களே!.. அவர்களின் மனநிலை புரியத்தான் செய்தது.
வீரணன் தான் சமாளிக்கும் விதமாக ஆர்ப்பாட்டமாக பேசிக் கொண்டிருந்தார்.
Advertisement
“வா திலகா உரிமையா கோயிலுக்கே வர வேணாமா? என்ன இருந்தாலும் நீ தூக்கி வளர்த்த உன் மருமகன்” என்ற வார்த்தையை கேட்டதும், அழுத்தமாக அண்ணனை பார்த்த திலகா, வேற ஒன்றும் பேசாமல் மண மக்களை நோக்கி நகர்ந்தார்.
ராகவனும் தன் அத்தையை எதிர்கொள்ள தடுமாறினான் இயல்பாக வரவேற்று மனைவியை அறிமுகப்படுத்தி வைக்க அவனால் முடியவில்லை. எப்படி முடியும்? என்னதான் அண்ணன் மக்கள் மூன்று பேர் இருந்தாலும் திலகா, ராகவனை எப்பொழுதும் தனியாக கவனிப்பார். தன் வீட்டுக்கு மருமகனாக வரப் போகிறானே என்றுதான். ஒரு தாய் வயிற்றில் பிறந்து தனக்கு மூத்தவனையே கேள்வி கேட்காத திலகா, அவரின் பிள்ளையையா கேட்க போகிறாள்.
“நல்லா இருங்க” என்ற வார்த்தையோடு மணமக்கள் இருவர் கையிலும் பணத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்து ஒதுங்கிக்கொண்டார். பேருக்கு என்று கொஞ்ச நேரம் அமர்ந்தவர், கல்யாணி எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு வாய் உணவு வாயில் வைக்கவில்லை. என்னவோ மனதில் அழுத்தம் இறுகி போய் அமர்ந்து கொண்டார்.
Advertisement
தெய்வம் எப்பவும் போல தன் வாய் காட்டியதை காட்டிக் கொண்டிருந்தார், “ஈரோடு சிதம்பரம் இதுக்காக தானே.. ரைஸ் மில் ஓனர். அவங்க பையனுக்கு தான் எங்க நிறையை கேட்டு இருக்காங்க. அதனால தான் எங்க மச்சான வெளியே பாத்துக்கோ சொல்லிட்டேன். என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தான் வெளியே பொண்ணு பார்த்தாங்க எங்க மச்சான். பொண்ணு நம்ம பங்காளி தானே, சரி நல்லா இருந்துட்டு போகட்டும். நான் எப்பவும் பெருந்தன்மையா தான் நடந்துக்குவேன் சுந்தரம்” என்று அருகில் இருப்பவரிடம் வெத்து பந்தா காட்டிக் கொண்டிருந்தார்.
Advertisement
அவர் தலை மறைந்ததும் “பத்து பவுன் போட்டுக் கூட கட்டிக் கொடுக்க வக்கில்லை. பொம்பள பிள்ளையை வேலைக்கு அனுப்பி குடும்பத்தை ஓட்டுறான். இதுல ஈரோடு ரைஸ் மில் ஓனர் பொண்ணு கேட்டாராம்!… ஒன்னுக்கும் வழி இல்லாத குடும்பம்ன்னு சொந்த அண்ணன் கூட பொண்ணு எடுக்கல” என்று ஒரு பெண் சொல்ல,
“அட, ராகவனை விடுங்க அவன் கூட கவர்மெண்ட் வேலை பார்க்கிறவன். ஒரு சாதாரண வேலை பார்க்கிறவன் கிட்ட கூட கல்யாணம் பண்ணி கொடுக்கலையே? நம்ம சொந்தத்திலேயே வயசு முத்தி போய் நிற்கிறது திருநிறை செல்வி தானே” என்று வேறொரு பெண் பேச, இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாமல் எழுந்து கொண்டார் திலகா.
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே வெளியே வந்த மனைவியை பார்த்து தெய்வம், “என்ன திலகா?” என்று கேட்க.
Advertisement
“ஒன்னும் இல்ல, என்னமோ மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.. செத்த பிள்ளைய பாத்துட்டு போயிடுவோமா?” என்றதும் சரி என்று, நிறை வேலை செய்யும் கடைக்கு சென்றார்கள்.
காலை நேரம் என்பதால் பொருள்களை அடுக்கி வைக்கும் ரேக்கை முட்டி போட்டு துடைத்து கொண்டு இருந்தாள் நிறை. மகளைப் பார்த்ததும் நின்ற கண்ணீர் திரும்ப வரும் போல இருந்தது திலகாவுக்கு…
“நல்லா படிக்கிற பிள்ளை, நம்ம கஷ்டத்துக்கு வேலைக்கு அனுப்பி, அது வாழ்க்கையை கெடுத்துட்டோம் போல… பணம் காசு சேர்த்து வைக்காட்டியும் போராடி படிப்பு மட்டுமாவது கொடுத்திருக்கணும். புத்திசாலி பொண்ணு தலை நிமிர்ந்து நின்னு இருக்கும்” வேதனையோடு சொன்னார் திலகா.
பெற்றவர்களை பார்த்தவள் “என்னமா மண்டபத்திலிருந்து நேரா இங்க வந்துட்டீங்களா?” என்றது,
“ஆமா, நிறை உன்னை பாக்கணும் போல இருந்துச்சு. இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டு வீட்டுக்கு வாரியா?” என்று தாய் கேட்க.
அங்கு வந்து எதற்கு ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து அழுக வா என்று மனதோடு நினைத்துக் கொண்டவள், “வேணாம்மா லீவு போட்டா ஒருநாள் சம்பளத்தை பிடிப்பாங்க, அது எதுக்கு?” என்றவள்,
“நீங்க பார்த்து வீட்டுக்கு போங்க” என்றாள் மகள்.
தயக்கமாக மகளைப் பார்த்தவாறு நகரத் தொடங்க,
“அம்மா, ஒரு நிமிஷம் இருங்க ரெண்டு பேரும்” என்றவள்,
“திவ்யா, ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என்று பக்கத்து கடைக்கு ஓடினாள்.
“அண்ணே, சாப்பாடு ரெடி ஆகிடுச்சா இல்லை நேரம் ஆகுமா அண்ணே” என்று அந்த ஹோட்டல் கடைக்காரரிடம் கேட்க.
“சாப்பாடு இருக்குமா” என்றார் ஓனர்.
“ரெண்டு சாப்பாடு, ஒரு தக்காளி சோறு வேகமா கட்டி குடுங்க அண்ணே”
“தக்காளி சோறுக்கு முட்டை வைக்கலாமா?” என்று கேட்க.
“ஒரு பெருமூச்சு விட்டு வேணாம் ஊறுகாய் மட்டும் வைங்க” என்றவள் பார்சலை வாங்கிக் கொண்டு தன் தாயிடம் வந்தாள்.
காலையில் இருந்த மனநிலையில் வீட்டில் சமைக்கவில்லை. நிச்சயம் கல்யாண வீட்டிலும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். சாப்பாட்டை அவர்கள் கையில் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள். என்னவோ தந்தைக்கு மனம் ஒரு மாதிரி அழுத்தியது.
நிறைக்கு பெற்றவர்கள் தனக்கு சரியாக செய்யவில்லை என்ற குறை எல்லாம் மனதில் கிடையாது. தன்னிடத்தில் ஒரு ஆண் பிள்ளை இருந்தால் தைரியமாக குடும்ப பொறுப்பை தூக்கி சுமக்க மாட்டானா?… பெண் பிள்ளையாக இருந்தால் என்ன? என்னால் முடிந்த அளவு சுமக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள்.
இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து நடந்து வரும் பொழுது உடலே பாரமாக இருந்தது. என்னடா வாழ்க்கை இது என்று பெரிதாக சலிப்பு தட்டியது. கைக்கும் வாய்க்கும் பத்தாமல் ஓடும் இந்த கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள் தான். தன் மாமனை திருமணம் செய்து கொண்ட பின் வாழ்க்கையை மாறிவிடும் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள். இன்று எல்லாம் வெறும் கனவாகவே போனது. வலித்த நெஞ்சை தடவி கொடுத்தாள். ஒரு பெருமூச்சு விட்டு ஏக்கத்தை அடக்கியவள், இன்று அவனுக்கு முதல் ராத்திரி என்ற நினைவும், தற்போது தன் நிலையும் கண்டு தொண்டை அடைத்தது.
உடலில் காயமே இல்லாமல் இதயத்தில் வலியை கொடுக்க முடியுமா என்ன!… உண்மையில் அந்த வலி எப்படி இருக்கும் என்று அனுபவித்தாள் திருநிறைச்செல்வி.
பத்து நாட்கள் கடந்தது, இப்பொழுதெல்லாம் நிறைக்கு முனுக்கென்று கண்ணீர் வருவதில்லை. ஓரளவு தன்னை சமாளிக்க கற்றுக் கொண்டாள். வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஒன்று கடவுளாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் பெரிய படிப்பாவது படித்திருக்க வேண்டும். இது எதுவும் இல்லாத திருநிறைச்செல்வி, விதியின் போக்குக்கு வளைந்து கொடுத்து செல்லத் தொடங்கினாள்.
சில மாதங்கள் கடந்து போகத் தொடங்க திலகா மகளுக்கு வரன் பார்க்கத் தொடங்கி விட்டார். நிறையிடமும் பெரிதாக எதிர்ப்பு இல்லை. என்ன சொல்ல முடியும். நடுத்தர வர்க்கத்து குடும்பம் இவளுக்கு பின் ஒரு தங்கையும் இருக்கிறாள். என் காதல் என்றெல்லாம் சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், காதலில் தோற்று போன வலி இருந்தது. விதியின் போக்கு என்று மனதை சமன் செய்தாளே ஒழிய, நம்பிக்கையான எதிர்காலத்தை நினைக்கவில்லை.
திருநிறைச்செல்வி சாதாரண மளிகை கடையில் வேலை பார்ப்பவள். அவளுக்கு எப்படியான மாப்பிள்ளை வரும்? அப்படி இருந்தும் நகை இல்லை, வசதி இல்லை என்று தட்டிப் போய்க் கொண்டு இருந்தது.
அன்று வேலை விட்டு சீக்கிரமாகவே வீடு வந்தாள் நிறை. என்னவோ தலைவலியாக இருக்க, மாலை ஐந்து மணிக்கு எல்லாம் வீடு வந்து விட்டாள். அவள் வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசனையோடு வீட்டின் உள் செல்ல பூ, பழம் தட்டுகளோடு இருவது ஆட்கள் இருந்தார்கள். பார்த்ததும் புரிந்து போனது நிறைக்கு… தாய் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற கேள்வியோடு திலகாவை பார்க்க,
“வாம்மா, இப்பதான் வேலை விட்டு வந்தியா?” என்றார் ஒரு பெண்.
“ஆமாங்க” என்றாள்.
“இது தான் மாப்பிள்ளை. கிராம அலுவலகத்தில் வேலை” என்றதும் ஆச்சர்யமாக பார்த்தவள், மெல்ல தாயிடம், “எனக்கு ஏன் சொல்லலை?” என்று கேட்டவள்,
“நான் முகம் கழுவி வேற டிரஸ் மாத்துறேன்” என்று உள்ளே சென்றாள்.
“அக்கா மாப்பிள்ளைய பாத்தியா?” என்ற தங்கையின் கேள்விக்கு, “ஆமாம் வளர்” என்று திரும்பியவள் தங்கையின் அலங்காரத்தில் அதிர்ந்து போனாள்.
தாமரை வண்ண தன்னுடைய பட்டுச்சேலையும், தனக்கெடுத்த நகைகளையும் போட்டு முழு அலங்காரத்தில் நின்று இருந்தாள் திருவளர்ச்செல்வி. மூச்சடைத்துப் போக எதுவும் பேசத் தோன்றாமல் நிமிர்ந்து தாயைப் பார்த்தாள். அப்பார்வையில் அப்பட்டமான ஏமாற்றம் தெரிந்தது. யாரும் விளக்கம் சொல்லாமலே நடப்பது என்னவென்று புரிந்து கொண்டாள் நிறை.
பெரியவள் பார்வை பெற்றவளுக்கு வலியை கொடுத்தாலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
“வளர் வா… உன்னை பாக்க தான் காத்து இருக்காங்க” என்று சின்ன மகளை கையோடு அழைத்து சென்று விட்டார்.
நிறைக்கும் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது தன்னை நிதானப்படுத்திக் கொள்ள… தற்போது தான் இருவது வயது நிறைவடைந்த தங்கை முகம் முழுக்க பூரிப்பும் கண்களில் கனவுமாக, வருங்கால துணையை காண சென்றாள். ஒரு நொடியில் என்னவெல்லாம் நினைத்து விட்டாள். நல்ல வேலை தாயை தவிர யாரிடமும் வாய் திறக்கவில்லை. முகத்தில் நீரை அடித்து கழுவி லேசாக வந்த அழுகையை அடக்கி கொண்டாள்.
பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து வந்திருந்த ஆட்கள் கிளம்பி செல்ல, நிறை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திலகாவுக்கு மிகுந்த குற்ற உணர்வாகி போனது.
“நிறை சின்னவளுக்கு நாங்க மாப்பிள்ளை பாக்கல. எங்கேயோ பார்த்திருப்பாங்க போல, தன்னால வந்து கேட்டாங்க. பொண்ணு அழகா இருந்தா போதும் சீர், நகைன்னு பெருசா எதிர்பார்க்கலன்னு சொல்லிட்டாங்க” தயக்கமாக பெரிய மகளை பார்த்து சொல்ல,
“சரி ம்மா, பெத்தவங்க நீங்க முடிவு செய்யுங்க”
“என்ன நிறை இப்படி சொல்ற, வளரும் உன் கூட பிறந்தவ தானே” திலகாவுக்கும் இயலாமை என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“நான் சொல்றதுக்கு என்னம்மா இருக்கு. நீங்க பார்த்து முடிவெடுத்தா சரிதான்” என்றவள் உள்ளே செல்ல, திலகா பெரிய மகளிடம் என்னவோ எதிர்பார்த்தார்.
நிறைய அறிவாள். பெரிதாக என்ன நினைக்கப் போகிறார். எனக்கு திருமணம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை. கையில் இருப்பதை வைத்து தங்கையை கரையேற்றுங்கள் என்று தானாக முன்வந்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் தாய். ஆனாலும், நிறை மனம் என்னவோ ஏமாற்றமாக உணர்ந்தது. இருவது வயது தங்கைக்கு இருக்கும் கல்யாண கனவுகள், இருவத்தியாரு வயதில் இருக்கும் அக்காவுக்கு இருக்காதா?…
ஆனாலும், தலை மகளாக விட்டுக் கொடுத்து கஷ்ட நஷ்டங்களை தாங்கி, உடன் பிறப்புகளை அனுசரித்து, பெற்றவர்களை பாதுகாத்து, குடும்ப சுமையை தன் தோளில் சுமக்கத்தான் வேண்டும். இது மூத்த பிள்ளைகளுக்கே வரும் சாபம் போல…
திலகாவுக்கு, மகள் காரியத்தை நன்றாக நடத்துங்கள் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா என்று நினைப்பிருந்த போதும், எப்படி எதிர்பார்க்கலாம் என்று மனம் குத்த தான் செய்தது. வளருக்குத் திருமணம் என்று நினைப்பெல்லாம் திலகாவுக்கு கிடையாது. ஆனாலும், தன்னால் வரன் கைகூடி வந்து விட்டது.
ஆரம்பத்தில் சொந்தத்தில் இவ்வாறு சொல்லி வர, “மூத்த பிள்ளை இருக்கும் போது, இளைய பிள்ளையை எப்படி அண்ணே கட்டிக் கொடுக்க முடியும். இந்த பேச்சு ஆகாது விட்டுடுங்க” என்று தான் சொன்னார்.
“புரிஞ்சுக்காம பேசாத திலகா. உன் புருஷன் எப்படின்னு தெரிஞ்சும் உன் மகளுக்கு வந்த நல்ல வாழ்க்கையை தட்டி கழிக்க பார்க்காத…” என்றார் திலகா அண்ணன் முறையில் உள்ளவர்.
“ஆனாலும், மூத்த பிள்ளை நிக்குதே. அதுக்கு ஒரு வழி பண்ணாம, நான் எப்படி அண்ணே? பெத்தவ எப்படி பிரித்து பார்க்க முடியும்” என்றார் ஆதங்கமாக.
“அதுக்கு என்னம்மா பண்ண முடியும். அவங்கவங்க தலையெழுத்து படி தான் நடக்கும். வாங்கி வந்த வாரம் அப்படி… இப்ப எல்லாம் கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு எம்புட்டு மாவுசு தெரியுமில்ல. பார்க்க அழகா இருக்கணும். நகை, காசு இல்லாட்டியும் படிப்பாவது இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. இதுக்கு மேல உன் விருப்பம் இத விட்டா திரும்ப ஒரு நல்ல வரன் அமையாது, பார்த்துக்க…” என்று பெரியவர் சொல்ல, ஆனாலும், மனம் ஒப்பவில்லை திலகாவுக்கு…
அடுத்தடுத்து விடாமல் பேச்சு வார்த்தை நடக்க தடுமாறிப் போனார் திலகா. ஒரு மகளாவது நன்றாக வாழட்டுமே என்ற எண்ணமும் தலை தூக்கியது. ஆனால், கையில் இருக்கும் நகை எல்லாம் போட்டு சின்ன பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால், தங்களுக்காகவே உழைத்துக் கொட்டும் பெரிய மகளுக்கு என்ன கைவசம் இருக்கும்.
பெரிய மகள் தங்களை தவறாக நினைத்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் சரி கட்டி விட்டார் தெய்வம். அவருக்கு அரசு உத்தியோகத்தில் இருக்கும் ஒருவன் தன் வீட்டு மருமகனாக வருவதில் அவ்வளவு பெருமை. தானாக வந்த அருமையான சம்மந்தம் விட்டுவிட மனசே இல்லை. மனசை கல்லாக்கி கொண்டு தான் பெரிய மகளுக்கு என்று எடுத்த சேலையையும், நகையையும் சின்ன மகளுக்கு கொடுத்தார். இதுவரை வளருக்கு என்று சேலை, நகை எல்லாம் எதுவும் எடுக்கவில்லை.
சின்ன மகளிடம் போட்டுக்கொள்ள சொல்லி நகையை கொடுக்கும் போது கைகூசி போனது. இந்த நகை எல்லாம் திருநிறை செல்வியின் வருமானத்தில் வந்ததல்லவா!…
அரைகுறை மனதோடு இருந்த திலகாவுக்கும் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்ததும் மனம் மாறிவிட்டது. உண்மையில் அம்சமாக இருந்தான் மணமகன். குடும்பமும் நன்றாக இருக்க, சின்ன மகளை கட்டிக் கொடுத்தால் தான் என்ன என்ற எண்ணமும் வந்துவிட்டது. ஆனால் பெரிய மகள் ஆதரவாக ஒரு வார்த்தை பேசவில்லையே என்ற ஆதங்கமும் இருந்தது.
எப்போதுமே விட்டுக் கொடுத்து, ஆதரவளித்து, பொறுப்பெடுத்து செல்லும் மகள், தங்கை கல்யாணத்திலும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? ஆனாலும், கல்யாண ஆசை பெண்களுக்கு பொதுவானது அல்லவா!…
பெரிய மகளின் அமைதியான தோற்றம் தெய்வத்திற்கும் சங்கடத்தை கொடுத்தது. தாங்கள் அநியாயம் செய்து விட்டோம் என்று எண்ணி விடுவாளோ மகள் என்ற பயம் வேற…
“சின்னவ கல்யாணத்துக்குள்ள எப்படியாவது பெரியவளுக்கு பேசி முடிக்கணும்?” என்றார் திலகா.
“எங்க திலகா ஒன்னும் அமைய மாட்டேங்குது. ஓரளவு நகை போடுறோம்னு சொல்லியுமே கூட வரன் சரியா அமையல. இப்ப இருக்கறதெல்லாம் வச்சு வளர கட்டி கொடுத்தா… எப்படி நிறைக்கு மாப்பிள்ளை பார்க்க முடியும்” நிதர்சனத்தை சொன்னார் தந்தை.
திலகாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. முகம் கொடுத்து கூட பேசாத மகளை நினைத்து கவலையானது. இருவத்தியாயாறு வயதிற்கு மேலும் நீ காத்திரு என்று மகளிடம் சொல்ல முடியுமா? அது நியாயமாகுமா?
மகளுக்கும் அதே நிலைதான். பெரியவள் நான் இருக்க எப்படி தங்கைக்கு பேசி முடிக்கலாம் என்று வெட்கத்தை விட்டு கேட்க தெரியவில்லை.
வீட்டில் எல்லோரும் ஒரு அமைதியிலே இருக்க, விஷயம் தெரிந்த சொந்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டது.
“என்ன இருந்தாலும் நீ பண்றது தப்பு திலகா. வத்தலோ, ஆகததோ ஏதாவது ஒன்னை பார்த்து முதல்ல பெரிய பிள்ளைக்கு பேசி முடி. அவ வேலைக்கு போய் தான் உங்க குடும்பத்தை காப்பாத்துறா, பார்த்துக்க. ஊர் சிரிக்கும்” என்ற ஆளாளுக்கு பேச என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார் திலகா.
திருவளர் செல்வி முகத்தில் கல்யாண கலை கட்டியது. நல்லா அழகி தான் பெண். சொந்த தங்கையே என்றாலும் லேசான பொறாமை எட்டிப் பார்க்காமல் இல்லை நிறைக்கு… ஏதாவது ஒரு வரன் வந்தால் போதும் என்று தான் இருக்க… நல்ல மாப்பிள்ளை, அவர்களே வலிய வந்து கட்டிக் கொள்ள கேட்பது அதிர்ஷ்டம் தான்.
நிறையும் ஒரு காலத்தில் அழகியாக தான் இருந்தாள். என்று வேலைக்கு சென்றாலோ அன்றே பணத்தின் அருமை புரிந்து போனது. வீட்டில் இருக்கும் கடன் தனக்கென்று செலவு செய்ய விடவில்லை. சினிமாவிலும், கதைகளிலும் தான் வீட்டு வேலை, கடை வேலை பார்க்கும் பெண்கள் பேரழகியாக தெரிவார்கள்.
நிஜத்தில் உழைத்து உரம் ஏறிய உடல் இறுகி போய் தான் இருக்கும். இளமை ததும்பி நிற்காமல், மெச்சுடான முகத்தில் இருக்கும் நிறை பெரிதாக யாரையும் கவரவில்லை.
வளருக்கான திருமண பேச்சு வார்த்தை கேள்விப்பட்டு வந்துவிட்டார் வீரணன்.
“தாய்மாமன் நான் இருக்க. எப்படி நீ பேசி முடிக்கலாம்” என்றார்.
“மூத்த பிள்ளையை எப்படி விட மனசு வந்தது திலகா உனக்கு” என்றார் கல்யாணி.
அவர்களைப் பார்த்ததும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டார் திலகா. இவர்கள் மட்டும் சரியாக இருந்திருந்தால் பெரிய மகளுக்கு திருமணமே முடிந்திருக்கும். சின்ன மகளும் நன்றாக வாழ்ந்திருப்பாள். இப்போது எல்லோருக்கும் நான் குற்றவாளியாய் போனேனா!…
எம் பிள்ளைகளுக்கு எப்படியோ நான் கல்யாணம் பண்றேன் நீங்க ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வேணாம் குருவி போன மனச வச்சுக்கிட்டு எப்படி என் வீட்டு படியேறி வந்தீங்க” காட்டமாக கேட்டார் திலகா.
“குறுகிய மனசு எனக்கு இல்லை திலகா உனக்குத்தான். என் வீட்டில் மூன்று ஆம்பள பிள்ளைகள் இருக்கு. கொடுக்கிறதுக்கு உனக்கு தான் மனசு இல்லை” என்று கல்யாணி சொன்னதும், அதிர்ந்து போனார் திலகா.
“என்ன வீர பிரபாகரனுக்கா… அவன் எட்டு மாதத்திற்கு இளையவன் என்பதை விட பிரபாகரன் கொஞ்சம் நோஞ்சான். சின்னது தொட்டே அப்படித்தான். பூஞ்சை உடம்போடு பெற்றவள் சேலைக்குள்ளே இருக்கும் இவனா எனக்கு மருமகன்” கோபம் பொங்கி வந்தது திலகாவுக்கு…
error: Content is protected !!