Skip to content
Post Views: 2,828
மகளை திருமணம் செய்து தருமாறு மாமனிடம் உரிமையாக துணிவுடன் கேட்டவனை பார்த்த சீனிவாசன் முகத்தில் அவ்வளவு வெறுப்பு. காமாட்சி கேட்டவற்றில் எல்லாம் இவன் பங்கு இருக்கிறதே?
இவன் அன்பு மட்டும் நிஜமாக இருக்குமா என்ன?
அவனிடம் பேசக்கூட பிடிக்காமல் மகளிடம் தன் முடிவை சொல்லி விட்டார்.
“நீ அவன் தான் வேணும் என்று நினைச்சா இந்த வீட்டை மறந்துட வேண்டியது தான். இனி நான் செத்தால் கூட இங்க வரக்கூடாது….அப்படி அவன் தான் வேணும்னு போனியினா என் சொத்தில் ஒரு பைசா கூட உனக்கு கிடையாது…” என்று வழக்கமான வசனத்தை பேசினாலும் இருவருமே அதை பொருட்படுத்தவில்லை.
Advertisement
சுந்தர் மல்லியை யோசிக்கவே விடவில்லை. அப்போதே அவனோடு வரும்படி அழைக்க மல்லியும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு போட்டிருந்த பாவாடை தாவணி உடையில் அவன் கையைப்பிடித்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்.
சீனிவாசன் வெளியில் இருந்த அண்டா தண்ணீரை தன் தலையிலும் விக்கித்துப் போய் நின்ற மனைவி மகன் மேலும் ஊற்றியவர் திரும்பிக் கூட பார்க்காமல் வீட்டுக்குள் போய் விட்டார்.
அவரைப் பொறுத்தவரை அவரின் மரகதவல்லி இனி இல்லை. மீனாட்சி இல்லாத மதுரையாக அவர் வீடு மாறிப்போனது. படிக்கக் கூட மகளை பிரிய மனமில்லாமல் ஆறு வயது வரை வீட்டில் வைத்திருந்த சீனிவாசன் தன் பேச்சை மீறியதற்காக ஒரு நொடியில் அந்த பாசத்தை கொன்று புதைத்தார்.
Advertisement
சுந்தரின் வீட்டிலும் அவர்களை ஏற்கவில்லை. அதாவது ஒரு பைசா கூட சீராக கொண்டு வராத மருமகளை காமாட்சிக்கும் இப்போது பிடிக்கவில்லை.
Advertisement
அவளை துரத்தி விடும்படி மகனிடம் சொல்ல அவன் கேட்டால் தானே? ஆக அங்கும் அவர்களுக்கு இடமில்லாமல் போக இருவரும் சென்னைக்கு வந்தனர்.
அதற்கு மாமா வாங்கிக் கொடுத்த பைக்கை விற்று தான் சுந்தர் ஏற்பாடு செய்தான்.
சென்னை வந்து மேடவாக்கத்தில் ஒரு சிறு அம்மன் கோவிலில் மஞ்சளை கயிறில் கோர்த்து தாலியாக கட்டினான். அங்கேயே சிறிய வீடாக பார்த்து குடியேறினார்கள்.
Advertisement
சுந்தர் காதல் உண்மையாக தான் இருந்தது. கட்டி வந்த மனைவியை அப்படிப் பார்த்துக் கொண்டான். முதல் திருமண நாளன்று மல்லி அவனுக்கு அவன் ஜாடையில் ஒரு மகளை பரிசாக கொடுக்க அவனோ சிறுக சிறுக சேமித்த காசில் இரண்டு கிராமில் தோடு வாங்கியிருந்தான்.
சுந்தருமே கடும் உழைப்பாளி தான். அவனுக்கு மளிகை பொருட்கள் வாங்கி மொத்த வியாபாரம் செய்ய வேண்டும் என்று விருப்பம். அதற்கு வழியில்லாமல் அதாவது முதலீடு இல்லாமல் ஒரு மொத்த மளிகை விற்பனைக் கடையில் வேலை செய்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக கமிஷன் அடிப்படையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தான். மதுரை மாவட்டத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல விரிந்து விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து அதை சென்னை ஹைதராபாத் என்று பெரிய நகரங்களில் கை மாற்றி விட்டான்.
ஒரே வரியில் சொல்லி விட்டாலும் அதற்கு அவன் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே மல்லியும் பல தியாகங்களை செய்ய வேண்டி இருந்தது.
குறிப்பாக சுந்தர் இல்லாமல் வீட்டில் எல்லாமே அவளே பார்த்துக் கொள்ளும் நிலைமை. தங்களுக்காக தான் அவன் ஓடுகிறான் என்று மல்லி அவனிடம் எந்த கஷ்டங்களையும் சொன்னதில்லை.
பதினெட்டு வயதில் தான் அவளுக்கு திருமணம் ஆனது என்றாலும் தனியாக பிள்ளை சுமக்கும் போது அத்தனை கவலைகள். பயங்கள். சுந்தரோ விடிகாலை செல்பவன் நள்ளிரவு தான் வருவான்.
அவனிடம் சொன்னால் அவளோடு இருந்திருப்பான் தான். ஆனால் அது எத்தனை நாட்களுக்கு சாத்தியம்?
அப்போதெல்லாம் அவளுக்கு துணை அந்த மாரியம்மன் தான். அந்த கோயிலில் ஓரமாக அமர்ந்து அவள் பயங்கள், கவலைகள் எல்லாம் அம்மனிடம் தான் சொல்லுவாள்.அவள் அழுகையும் ஆனந்தமும் பெற்றவர்களை நினைத்து ஏக்கமும் பயமும் எல்லாம் அந்த அம்மன் அறிவாள்.
இந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் வாழ்க்கைத் திறன் படிப்படியாக வளர இப்போது சுந்தர் அவன் ஆசைப்பட்ட படியே மளிகை பொருட்களை பக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
மகள் ப்ரியாவின் பெயரில் ஆரம்பித்து இருந்தான். மல்லி கூட அவளை மறந்து விட்டதாக செல்லமாக கோபித்துக் கொள்ள “பேரு மட்டும் தாண்டி நம்ம மக மேல..அதுக்கு முதலாளியே நீ தான்….” என்று சமாதானம் அவனுக்கே ஊரிய விதத்தில் செய்தான்.
அந்த அளவு அவள் மேல் ஆசை. விரும்பி கல்யாணம் செய்து கொண்டவனுக்கு இப்போது ஏன் அவளை பிடிக்கவில்லை? மனக்கண் முன்னே கடந்து போன பத்து வருடங்கள் ஓட பெருமூச்சோடு நிகழ்காலத்துக்கு வந்தாள் மல்லி.
அப்போதெல்லாம் தன்னை உயிராக பிடித்தவனுக்கு இப்போது ஏன் பிடிக்கவில்லை என்று கண்ணாடியில் முன்னும் பின்னும் தன்னை திரும்பிப் பார்த்துக் கொண்ட மல்லிக்கு தன்னிடம் என்ன குறை என்று கண்டுபிடிக்க,முடியவில்லை.
சின்ன வயதில் அவள் தந்தை அடிக்கடி மகளைப் பார்த்து சொல்லும் வார்த்தை “என் மக அப்படியே அந்த மதுரை மீனாச்சி தேன்!” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வது நினைவுக்கு வந்தது.
அதனாலேயே அவளுக்கு மரகதவல்லி என்று பெயர் வைத்தார். அதை மல்லி என்று சுருக்கி மயக்கத்தோடு அழைத்தது சுந்தர் தான்.
அந்த சந்தோஷ கணங்கள் எல்லாம் கனவோ என்று நினைக்கும் வண்ணம் தான் இப்போது சில மாதங்களாக அவள் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இனி அவை வரவே வராதோ என்ற பயம் இப்போது சில நாட்களாகவே அவளுக்குள் வந்திருந்தது.
இன்று அது உண்மை தான் என்று ஆழமாக அவள் உள்ளுணர்வு சொல்ல அத்தையின் வார்த்தைகள் அவளைத் தொடவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் சுந்தர் அவளைத் திட்டி விட்டால் கூட தேவலாம். ஒரு அறை வைத்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு சுந்தர் அவளிடம் இருந்து விலகி விட்ட உணர்வு.
யோசித்துப் பார்த்தால் அவன் தான் இப்போதெல்லாம் அவளிடம் பேசுவதே இல்லையே? பேசினால் கூட ஓரிரு வார்த்தைகள் தான். அதுவும் அத்தியாவசியத்துக்கு தான். குடும்பத்தேவைக்கு பணம் சரியாக கொடுத்து விடுகிறான் தான். மற்றபடி அவள் கணவனாகவோ மகளுக்கு பொறுப்பான தந்தையாகவோ அந்த குடும்பத்தளைவனாகவோ எதுவும் செய்வதில்லை. ஆறு மாதங்களாகவே இப்படித் தான்.
இரவிலும் நீயும் மகளும் தூங்க இடைஞ்சலா இருக்கும் என்று பக்கத்து அறையில் படுக்க ஆரம்பித்தவன் பிறகு அதையே பழக்கமாக்கிக் கொண்டான்.
வீட்டுக்கு வரும் நேரமும் தாமதம் ஆனது. நேற்று வரை ஒன்பது மணிக்கு வந்து கொண்டிருந்தவன் இதோ இன்று பதினோரு மணி ஆகியும் இன்னும் வரவில்லை.
சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு உள்ளே இருந்து ஒரு போர்வை கொண்டு வந்து போர்த்தி விட்டாள்.
ஒன்பது வயதில் அவள் தோற்றத்தில் மட்டும் அல்ல பிடிவாததிலும் கூட சுந்தரைக் கொண்டிருந்தாள்.
பாட்டி வரும்வரை ஓரளவு அடங்கி இருந்தவள் கண்டிக்கும் அம்மாவை அதட்டும் பாட்டி இருக்கவும் அடம் அதிகமானது. மல்லி செய்வது எது பிடிக்கவில்லை என்றாலும் பாட்டியிடம் சிபாரிசுக்கு ஒரு பெருத்த அழுகையோடு போக ஆரம்பித்தாள்.
இருக்கும் கவலையில் மல்லிக்கு இதன் பாதிப்பு புரிந்து அவளை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் இப்போது கை மீறிப் போய் கொண்டிருந்தது.
இதெல்லாம் யோசிக்க முடியாமல் சுந்தரின் கவலையே மல்லிக்கு பெரிதாக இருக்க கையறு நிலை.
அப்பா வரட்டும் என்று ஆசையோடு காத்திருந்த பிரியாவுக்கு அப்பா வராத கோபம் அம்மாவின் மேல் திரும்ப அவளிடம் அப்படி ஒரு அடம். அழுகை. தானும் அழகாக புதிதாக வாங்கியிருந்த சராராவை அணிந்து கொண்டு வெளியே போக வேண்டும் என்று பல திட்டங்களும் போட்டு வைத்திருந்தவளுக்கு எல்லாமே பணாலானதும் அப்படி ஒரு படுத்தல்.
அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்து முடிப்பதற்குள் மல்லிக்கு களைத்துப் போனது.
காத்திருந்து காத்திருந்து மகளும் தூங்கி விட நேரம் நகராமல் நின்று கொண்டிருந்தது.
இன்று எப்படியும் சுந்தரோடு மனம் விட்டு பேசி தன் வாழ்வை மீட்டு விட வேண்டும் என்று மல்லி காத்திருக்க சுந்தர் தான் வந்தபாடில்லை.
அவள் பார்வை மேஜை மேல் இருந்த அவள் செல்போன் மேல் பதிய அதைக் கையில் எடுத்தாள்.
அனிச்சையாக அவள் கை முகநூலை எடுக்க அதில் அவளுக்கு வெடிகுண்டு காத்திருந்தது.
மனம் எதிலும் லயிக்காமல் முகநூலில் வலம் வர பரிச்சயமற்ற நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“ஹலோ மேம்! மிஸ்டர் சுந்தர் உங்க கணவரா…..?
error: Content is protected !!