Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 9

அத்தியாயம்-9

 

மல்லிக்கு ஒரு வாரத்தில் உடல்நிலை தேறியது என்றால் அதற்கு முக்கிய காரணம் சாவித்திரி தான். பார்த்து பார்த்து செய்து மல்லியின் உடலையும் மனதையும் தேற்ற அவளால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தாள். ஆனால் அவளால் மல்லியின் உடலைத் தேற்ற முடிந்ததே தவிர அவள் மனதை தேற்ற முடியவில்லை.

மனதில் நிம்மதி இல்லாத போது எதிர்காலத்தை பற்றிய பயம் இருக்கும் போது தான் இல்லாமல் மகள் என்ன செய்கிறாளோ என்ற கவலை இருக்கும் போது மல்லியின்  மனம் எப்படி தேற முடியும்?



Advertisement

கண் விழித்த நொடியில் இருந்து அவள் மனம் மகளை நினைத்து தான் தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் சாவித்திரி அவள் கண் விழிக்க பத்து நாட்கள் ஆனதை சொன்னதும் ஜாக்கிரதையாக அவள் வீட்டினரைப் பற்றி பேச்சை தவிர்த்ததும் அவளுக்கு நிதர்சனம் புரிந்து போனது.

சுந்தருக்கு இனி அவள் வேண்டாம். கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய பிறகுமா அவளுக்கு அது புரியாது? அதனால் அவன் அவளை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை என்பது பெரிதாக ஏமாற்றம் தரவில்லை. அவன் அடித்த அடிகளில் இது கடைசி அடி அவ்வளவு தான்.

ஆம் கடைசி என்று அவள் முடிவு செய்து விட்டாள். ஆனால் அவள் மகளுக்கு அவள் வேண்டுமே?  அதுவும் எப்போது அவன் சுஷ்மிதாவிடம் குழந்தை இல்லை என்று சொல்லி விட்டானோ? அவனிடம் தன் மகளை விட்டு வைக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

Advertisement

மல்லி சாவித்திரி வேலைக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் சிந்தித்தபடியே தான் இருந்தாள்.

Advertisement

இப்போதைக்கு இந்த உலகத்தில் அவளுக்கு உதவ சாவித்திரி மட்டும் தான் இருக்கிறாள். அதற்காக அவள் முதுகில் ஏறி உட்கார்ந்து அவளுக்கு சுமையாக இருக்க மல்லிக்கு பிடிக்கவில்லை. அதோடு இனி யாரையும் எதற்கும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற பாடத்தை வலிக்க வலிக்க சுந்தர் சொல்லிக் கொடுத்த பிறகும் அவள் கற்றுக்கொள்ள வேண்டாமா?

அதனால் தன் மகளை அழைத்துக்கொண்டு மறுபடி அம்மா அப்பாவிடமே போக முடிவு செய்தாள். இப்போதைக்கு அவளுக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

அப்பா நிச்சயம் அவளை திட்டுவார். ஏளனமாக கூட பேசலாம். ஆனால் அம்மா அவளை கைவிட மாட்டார். அந்த நம்பிக்கை அவளுக்கு உறுதியாக இருந்தது. தன் சோகத்தை சாவித்திரியிடம் சொல்லி அவள் மனதையும் கஷ்டப்படுத்துவானேன் என்று அவளிடம் எதுவும் சொல்லாமலே கிளம்ப முடிவு செய்தாள்.

Advertisement

அதற்கு நேர்மாறாக சாவித்திரியின் மனநிலையோ மல்லி வந்ததில் இருந்து உற்சாகமாக இருந்தாள்.

திரும்ப அவள் வீட்டுக்கு விரைவில் போய் விடுவாள் என்பதால் மல்லி இருந்த நேரம் முழுக்க அவளோடு பழைய கதைகளை பேசி மகிழ்ந்தாள்.

அன்று மாலை சாவித்திரி வேலை முடித்து வர மல்லி அவளை எதிர்பார்த்து காத்திருந்தாள். இரண்டு நாட்களாக அவளிடம் இருந்த கலக்கம் போய் தெளிவு இருந்தது.

சாவித்திரி வந்ததும் தான் செய்து வைத்திருந்த சிறு தானிய கிச்சடியையும் மல்லி சட்னியையும் காபியையும் சுடச்சுட கொண்டு போய் கொடுத்தாள்.

“சூப்பர் வல்லி..! கொலைப்பசில வந்தேன். என் சமையலை எனக்கே சகிக்கல. இது வாசனையே தூக்குது…” என்று அவள் கொடுத்ததை ஆர்வமாக வாங்கி சந்தோஷமாக சாப்பிட்டாள்.

“நான் நாளைக்கு கிளம்பறேன் சாவி…!”

அவள் சொல்ல வந்தது புரியாமல் “ஏண்டி என் சமையல் அவ்வளவு கொடுமையா இருக்கா? அதான் உன் வீட்டுக்கு கிளம்பறியா? அம்மா இருந்திருந்தா அருமையா செஞ்சி போட்டு உன்னை நல்லா பார்த்துட்டு இருந்திருப்பாங்க….” என்று சாவித்திரி வாயில் அடுத்த வாய் கிச்சடியை போட்டு சுவைத்து சாப்பிட்டபடி பேசினாள்.

“எனக்கு உப்புமாவே பிடிக்காது. உனக்கே தெரியும் இல்ல? ஸ்கூல்ல சத்துணவுக்கு உப்புமா போடும் போது கூட அதை நீ எடுத்து வச்சுக்கிட்டு எனக்கு உன் சாப்பாடு தருவியே? ஞாபகம் இருக்கா? ஆனா இந்த கிச்சடி அருமையா இருக்குடி. பூண்டு இஞ்சி தக்காளி போட்டு கூட முட்டைஉடைச்சு  ஊத்தி செமையா இருக்குடி! அண்ணா ரொம்ப லக்கி…“

அவள் சொன்னதைக்கேட்டு மல்லி கசப்புடன்  சிரித்துக்கொண்டாள்.

புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டாலும் மல்லி அவள் வீட்டுக்கு போகத்தானே விரும்புவாள்? அதை விட்டால் வேறு வழி? அதனால் சாவித்திரி தன் மனதில் சுந்தரின் மேல் இருந்த  வெறுப்பை சொல்லாமல் மல்லிக்காக உற்சாகமாகவே கேட்டாள்.

“நாளைக்கு எப்படி உங்க வீட்டுக்கு போகணும்? சொல்லு! நானே உன்னைக் கொண்டு போய் விடறேன்….”

“நாளைக்கு விடிகாலையிலேயே கிளம்பி போய் என் பொண்ணை அவ ஸ்கூலுக்கு கிளம்பு முன்ன பார்த்து கூட்டிட்டு நம்ம ஊருக்கு போகணும். நீ ஒரு ஆட்டோ பிடிச்சு குடுடி. நானே போய் ப்ரியாவை கூட்டிட்டு ஊருக்கு  பஸ் பிடிச்சு போய்க்கறேன். கொஞ்சம் ப…பணம் மட்டும் தரியா… ப..பஸ் டிக்கேட் எடுக்க…?”

மல்லிக்கே அவள் நிலை நினைத்து தன்னிரக்கமாக இருந்தது. அவள் இப்படி கேட்கவும் சாவித்திரிக்கு அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.

“வல்லி! உங்க வீட்டு நிலைமை உனக்கு தெரியாதா? நீ அண்ணாவோட போன பிறகு உங்கம்மா உன்னை நினைச்சு நினைச்சு படுக்கையில் விழுந்தவங்க மூணு மாசத்துலயே போய்ட்டாங்க. உங்கப்பாவும் அதுக்கு பிறகு எதுலயும் ஆர்வம் இல்லாம வீட்டுலயே முடங்கிட்டாரு.  உன் தம்பி சின்ன பையன் இல்லையா? இதையெல்லாம் சமாளிக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டான். இருந்த சொத்து எல்லாம் கையை விட்டு போய்டுச்சு. இப்ப அவன் தான் கூலி வேலக்கி போய் உங்க அப்பாவை பாத்துக்கறான்…”

மல்லிக்கு இதை கேட்டதும் ஒரு புறம் தன் வீட்டின் நிலையை அறிந்து அதிர்ச்சி என்றால் இதுவரை அத்தை அவளிடம் அதைப்பற்றி மூச்சு கூட விடாதது அதிக அதிர்ச்சி தந்தது.

என்ன மாதிரியான மனுஷி இவர்?

               “இது எதுவுமே எனக்கு தெரியாதே சாவி! அ…அத்தை இதெல்லாம் எதுவும் சொல்லவே இல்லையே? தெரிஞ்சிருந்தா..?”

தெரிந்திருந்தாலும் அவளால் என்ன செய்திருக்க முடியும்?

மல்லி அப்படியே தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள்.பத்து வருடங்களுக்கு முன்னே இறந்து போன அம்மாவை நினைத்து அழுவதா? அல்லது அப்பா தம்பியின் நிலையை நினைத்து அழுவதா ? தன்னை நினைத்து அழுவதா? மகளை நினைத்து அழுவதா?

சாவித்திரி அவளின் கசங்கிய முகத்தை பார்த்து பக்கத்தில் அமர்ந்தவள் “வல்லி! இதுவரை உன் கிட்ட உன்னை ஏன் அண்ணா அடிச்சாங்க? ஏன் வீட்டை விட்டு வெளிய தள்ளி கதவைத் தாழ்ப்பா போட்டாங்க? உனக்கும் அண்ணாவுக்கும் என்ன சண்டை என்று இதுவரை கேக்கல.

எதோ உங்களுக்குள்ள கருத்து வேறுபாடு சண்டையா முத்திடுச்சு என்று நினைச்சேன். ஆனா நீ பத்து நாளா ஆஸ்பிட்டல்ல படுத்திருக்கும் போது கூட அண்ணா வரலன்னா என்னடி காரணம்? என்னடி நடந்துச்சு உங்களுக்குள்ள? நீயோ இப்ப ஊருக்கு போகணும்னு சொல்றே! இப்பயாவது சொல்லுடி…!” என்று சாவித்திரி கேட்க மல்லியால் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நடந்ததை எல்லாம் சொல்லி குமுறிக்குமுறி அழுதவளை சாவித்திரியால் தேற்றவே முடியவில்லை. இப்போது தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவளுக்கு இப்படி அழுது மறுபடி எதுவும் ஆகி விடப்போகிறதே என்று சாவித்திரி பயந்து விடும் அளவுக்கு மல்லியின் அழுகை நிற்கவே இல்லை.

அதே நேரம் சுந்தரின் மேல் கொலைவெறியாக கோபம் வந்தது.

மல்லி முயன்று கொண்டு வந்த தைரியம் எல்லாம் சாவித்திரி சொன்ன பிறந்த வீட்டு நிலைமை கேட்டு கரைந்து போனது. கூடவே குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது.

சாவித்திரி மடியில் படுத்துக் கொண்டவள் வெகு நேரம் அசையவே இல்லை.அழுது அழுது சோர்ந்துபோய் அப்படியே இருந்தாள். இரவெல்லாம் பொட்டு உறக்கம் இல்லை.

அழுது அழுது கண்கள் வறண்டு எரிய கலங்கியிருந்த மனதில் இருந்து தெளிவு பிறந்தது. தன் எதிர்காலத்தை யோசித்து திட்டமிட்டவளுக்கு அதன் பிறகே உறக்கம் வந்தது.

மறுநாள் காலை மல்லி எழுந்த போது சாவித்திரி பக்கத்தில் தான் உட்கார்ந்து இருந்தாள்.

மல்லி மெல்ல எழுந்து உட்கார சாவித்திரி  “வல்லி! எதையும் யோசிக்காதேடி! நா இருக்கேன் உனக்கு! வா போய் உன் பொண்ண கூட்டிட்டு வந்திருவோம்.எது வந்தாலும் பாத்துக்கலாம்..” என்று ஆறுதலாக பேசி அவளை தேற்ற முயன்றாள்.

மல்லி “இந்த அன்பு போதும் சாவி! எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமாடி? எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல…சமைக்கிற வேலையா இருந்தாலும் வாங்கித் தர முடியுமா? முடிஞ்சா இன்னிக்கே என்றாலும் கூட நல்லது…” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டபோது சாவித்திரிக்கு தாங்கவே முடியவில்லை.

எப்படி ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்? எப்படி செல்வமாக வளர்ந்தவள்? அவளுக்கு இப்படி ஒரு நிலையா?

“ஏன் வல்லி உனக்கு தலைவிதியாடி? அந்த சுந்தரை..” என்று பல்லைக் கடித்தாள்.

“நல்லா வாயில வருது எனக்கு .. கோர்ட்டுக்கு இழுத்து அவன் கிட்ட இருக்கிற காசை  எல்லாம் புடுங்கி நடுத்தெருவில் நிக்க வைக்கலாம்டி. நீ ஏன் கஷ்டப்படணும்..?”

தோழியின் நிலையை பார்த்து சாவித்திரிக்கு ஆத்திரமும் ஆதங்கமும் பொங்கியது.

“இல்ல சாவி! என்னை வேண்டாம்னு சொன்னவங்க கிட்ட இருந்து எனக்கும் எதுவும் வேண்டாம்…நீ எனக்கு நான் கேட்ட மாதிரி வேலை மட்டும் வாங்கித்தாடி..! இனி அழவோ கோபப்படவோ எனக்கு நேரம் இல்லை. நான் வேலைக்கு போகணும். சம்பாதிக்கணும். அதுக்கு பிறகு தான் போய் ப்ரியாவை கூட்டிட்டு வரப் போறேன்…”

என்னதான் மல்லி சமையல் வேலைக்கு போகிறேன் என்று சொன்னாலும் சாவித்திரியால் அதை ஏற்கவே முடியவில்லை.

 “ஏண்டி நீ வேளைக்கு போகணும்னு நினைக்கிறது எல்லாம் சரி. ஆனா ஏண்டி சமையல்காரியா போகணும்? வேற வேலையா கிடைக்காது?”

அவள் இப்படி கேட்டதும் மல்லி கசப்பாக புன்னகை செய்தாள்.

“பன்னண்டாவது கூட முடிக்காம வேற எந்த தகுதியும் இல்லாம இருக்கிற எனக்கு கலெக்டர் வேலையா கிடைக்கும்? எந்த வேலையா இருந்தா என்னடி? நேர்மையா உழைச்சா பலன் உண்டு…”

அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமலே சாவித்திரி வேலைக்கு கிளம்பினாள்.

அங்கும் அவள் வாட்டமாகவே இருக்க ராஜன் என்னவென்று விசாரித்தான். இருவருமாக ஆலோசனை நடத்த அந்த நாள் மல்லியின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

மூன்று மாதங்கள் கழித்து சாவித்திரி அன்று மல்லிஸ் கிச்சனுக்கு வந்த ஆர்டர்களை படித்து சொன்னாள்.

“வல்லி ! இன்னிக்கி லஞ்சுக்கு நூறு சிக்கன் பிரியாணி, அம்பது மட்டன் பிரியாணி, எழுபது சிக்கன் 65 ஆர்டர் வந்திருக்கு. ராத்திரிக்கு இருநூறு இட்லி, ஐம்பது தோசை, நூறு செட் சப்பாத்திக்கு ஆர்டர் வந்திருக்கு..”

டியர் பிரெண்ட்ஸ் இந்த எபி இன்னும் முடியல. இதுக்கு மேல் டைப் பண்ண முடியல. கண் களைச்சு போச்சு. நேத்தே உங்க கிட்ட சொன்னபடிஎபி தர முடியலன்னு இது வரைக்கும் டைப் பண்ணி இருக்கேன். இதோட அடுத்த பார்ட் உடன் நாளை சந்திக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!