Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 24

“மணி..  ஸ்வீட்டி வந்திருக்காளா, வெளியே சென்னை நம்பர்ல கார் நிக்குதே?” என்றபடி உள்ளே வந்தார் ரேவந்த்தின் பெரிய தாய் மாமன் செல்வமணி.

கேட்டை திறந்து கொண்டு அவர்கள் அருகில் வந்து விட்டவர்,

“ஸ்வீட்டி.. வாடாம்மா.. நல்லா இருக்கியா? எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து.. நாங்க இங்க இருக்கும் போது, நீ வர்றதில்ல. நீ இருக்கும் போது நாங்க வர்றதில்ல. யாரு இது சின்ன பாப்பாவா? எப்படி வளர்ந்துட்டா..

என்ன படிக்கிறம்மா?” லக்கியை நோக்கி கேட்டார்.



Advertisement

“பி.காம்” என்றாள் லக்கி.

“நல்லா இருக்கோம் செல்வம்ப்பா.. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க. சிவாப்பா எப்படி இருக்காங்க?” மதுரா நலம் விசாரிக்க, அவரின் கண்கள் யதேச்சையாக அருகில் நின்று இருந்த ரேஷ்மாவை யார் என்று பார்த்தார்.

பார்த்தவர் கண்களில் ஆச்சர்யம்!  பரவசம்!

Advertisement

டேய். .பாப்பு.. ரேஷ்மா பாப்பா.. ரேஷ்மா பாப்பா தானே நீ?

Advertisement

ம்ம்.. நான் ஒருத்தன் இத எல்லாம் போய் கேட்டுக்கிட்டு, அதான் மதியை அப்படியே உரிச்சு வச்சுருக்கியே!

சின்ன பிள்ளையா இருக்கும் போது கூட அவ்வளவா தெரியல!

இப்ப பெரிய பொண்ணா ஆனப்பிறகு அப்படியே அவளை மாதிரியே இருக்க!

Advertisement

என்ன..  அவளை  கொஞ்சம் நிறமா, உசரமா இருக்கே!

நீ எப்படி ஸ்வீட்டி கூட? உன் அண்ணன் எங்க?  அவனும் வந்திருக்கானா? எங்க இருக்கான் அந்த பெரிய மனுஷன்? டேய்..” என்று சத்தமாக ரேவந்த்தை அழைத்தார்.

“மாமா..”  என்று தழுதழுத்த குரலில் அவரை அழைத்தாள் ரேஷ்மா. அவளுக்கும் அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது!

மதியின் சாயல் அவரிடமும் தான் இருந்ததே!

“மாமா..” என்று மீண்டும் அழைத்து, அவர் அருகில் போய் நின்றாள் ரேஷ்மா!

ரத்த பந்தம் அவளை அப்படி இழுத்தது!

அவளுக்கு என்னமோ அவள் அம்மா ஸ்ரீமதியே, இப்போது மாமா உருவில் வந்தது போல தோன்றியது!

கலங்கிய கண்களுடன் அருகில் வந்த அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு,

“டேய்.. ஏண்டா அழற? உன் அம்மா நினைப்பு வந்துடுச்சா? உன் அம்மா எங்கேயும் போகல. நம்ம கூட தான் இருப்பா! அம்மா இடத்தில் உனக்கு நாங்க மாமன்கள் இருக்கோம்!” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவர், உடனே தன் செல் போனை எடுத்து,

“டேய்.. சிவா  எங்கேடா இருக்க?” என்று தம்பியை அழைத்தார்.

“உத்தர வீதியில ஒரு பிரண்டை பார்க்க வந்திருக்கேன் ஏண்டா?”

“நீ முதல்ல உடனே கிளம்பி வீட்டுக்கு வா! உனக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கு! நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கா பாரு!” என்று உற்சாகமாய் பேசி அவரை வீட்டுக்கு வர சொன்னார்.

சின்ன மாமா வந்தவர், அவரும் ரேஷ்மாவைக் கண்டு கண் கலங்கினார்.

பின் மதுரா அவர்களிடம் இது வரை நடந்ததை சொல்லி, ஜெயந்தின் தொல்லை தாங்காமல் இங்கு வந்து விட்டதையும் சொல்லி விட்டாள்.

“யார்? அவன்? எங்க இங்க வர சொல்லு பார்ப்போம். கைய காலை உடைச்சு அனுப்பி வச்சுடுவோம்! யார் வீட்டு பொண்ணைடா பயமுறுத்தி கல்யாணம் பண்ண பார்க்கிறீங்க?

அவளுக்கு என்ன நாதி இல்லன்னு நினச்சுட்டாங்களா? ஏதோ ஆடிட்டர் சார் விவரமானவர், நாணயஸ்தர், எல்லாம் அவர் பார்த்துக்கிறார். நமக்கும் இந்த ஃபேக்டரி போக்குவரத்து பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு தான் நாங்க ஒதுங்கி வந்தோம்!

அது கூட உங்கள தொல்லைப் பண்ணக் கூடாதுன்னு தான்!

அதுக்காக உன்னை அப்படியே விட்டுடுவோமா?

இங்க பாரு பாப்பு.. உனக்கு யாரும் இல்லன்னு மட்டும் நினைச்சுடாதே! உன் பின்னால உன் மாமன்க நாங்க இருக்கோம். நம்ம குடும்பம் இருக்கு! நீ எதை நினைச்சும் கவலைப்படாதே!

நாங்க பார்க்கிறோம் உனக்கு சூப்பர் மாப்பிள்ளையா!

உனக்கு மட்டும் என்ன? உன் அண்ணனுக்கும் சேர்த்தே பார்க்கிறேன்! இல்ல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிற சம்பந்தம் கூட பார்க்கலாம் என்ன சொல்றே?”

மதுராவுக்கு தூக்கி வாரிப் போட்டது!

ரேஷ்மாவுக்கும் தான்! இருவரும் ஒருவர் பார்த்துக் கொள்ள, நல்ல வேளையாக லக்கி இடையிட்டாள்!

“அங்கிள்.. அங்கிள்.. கொஞ்சம் இருங்க.. ரேஷ்மா அக்காவுக்கு ஏற்கனவே ரேவந்த் அத்தான் மாப்பிள்ளை பார்த்து பிக்ஸ் பண்ணி வச்சுருக்காரு”. என்று சொல்லி விட்டாள்.

“ஓ..அப்படியா.. அப்ப அந்த பையனுக்கே முடிச்சுடுவோம்” என்றார் பெரிய மாமா!

“ஆனால் சின்னவரோ, அண்ணே கொஞ்சம் இரு.. இந்த பொண்ணு இன்னொரு விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம சொல்லுற மாதிரி இருக்கு! நீ என்ன சொன்ன? ரேவந்த் அத்தானா? ரேவந்த் ஸ்வீட்டியை தான் கல்யாணம் பண்ணிக்க போறானா?”

“ஆமா மாமா” என்றாள் ரேஷ்மா

“அப்படியா.. சூப்பர்.. ஏன்னா மதிக்கும் அப்பவே அந்த ஆசை உண்டு தான்!

எங்க மதி ஆசைப்பட்ட பொண்ணே அவளுக்கு மருமகளா காலம் கொண்டு வந்து சேர்த்துடுச்சு! ரொம்ப சந்தோசம்!

அவன் எப்போ வர்றான் இங்க?

அங்க ராம் அங்கிள்க்கு கான்சியஸ் வந்த வுடன் அவரிடம் பேசிட்டு முடிஞ்சா அவரையும் இங்க கூட்டிட்டு வருவான்” என்றாள் ரேஷ்மா!

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் மனைவிமார்கள் கோவிலுக்கு சென்றவர்கள் திரும்பி வந்து விட்டனர்!

வந்தவர்களும் ரேஷ்மாவைக் கண்டு சந்தோசமானார்கள்!

பெரிய அத்தை அவள் அருகே வந்து தன் கையில் இருந்த தாயார் சந்நிதியில் கொடுக்கப்பட்ட மஞ்சளை எடுத்து அவள் நெற்றியில், அருகில் இருந்த மதுரா மற்றும் லக்கி நெற்றியில் வைத்து விட்டு, வீட்டுக்குள்ள வாம்மா என்று அவளை அழைத்து சென்றார்கள்!

தன் வீட்டிலேயே நின்று விட்ட, மதுராவை

“ஏய்.. ஸ்வீட்டி உனக்கு என்ன தனியா சொல்லணுமா?அது உன் வீடு! வாடி உள்ளாற” என்று செல்லமாக கடிந்த பின்னே அவளும் லக்கியும் வீட்டுக்குள் சென்றார்கள்!

வீட்டுக்குள் போனவுடன் அவளுக்கு மதியின் அறையைக் காட்டினார்கள்!

மதி இருந்த போது பயன்படுத்திய பல பொருட்களை அப்புறப் படுத்தாமல் அப்படியே பாதுகாத்து வந்திருந்தார்கள்!

அந்த அறையில் இருந்த ஒரு மர பீரோவில் சின்ன வயதில் ரேவந்த் ஒட்டி இருந்த சச்சின், சிறு வயது தோனி போஸ்டர்களும் கூட அப்படியே இருந்தன!

அவளுக்கு மதியின் பழைய போட்டோக்களை எல்லாம் எடுத்து காண்பித்து மகிழ்ந்தனர்!

ரேவந்தின் போன் நம்பரைப் பெற்று அவனிடமும் பேசி விட்டு, அவன் வருகைக்காக காத்திருந்தார்கள் மாமன் குடும்பத்தினர்!

தூங்குவதற்கு போடப்பட்டிருந்த ஊசி மருந்தின் வீரியம் குறைந்து , ஒரு வழியாக கண் விழித்தார் ராமநாதன்!

“அங்கிள்.. அங்கிள்.. இப்ப எப்படி இருக்குது அங்கிள்?” என்றான் ரேவந்த் அவர் அருகில் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன்!

அவன் குரல் கேட்டு சற்று தள்ளி நின்று போன் பேசிக் கொண்டிருந்த யுவியும், கிச்சனில் இருந்து பார்வதியும் வந்து விட்டனர்.

கண்களை மெல்ல திறந்தவர், ரேவந்தின் முகம் பார்த்தவரின் வாய், உடனே “ரேஷ்மா.. ரேஷ்மா எங்க?” என்று தான் கேட்டது!

“வெளியே போய் இருக்கா. அங்கிள். கூட மதுராவும் போய் இருக்கா” என்றான் ரேவந்த்.

வெளியே போய் இருக்கா என்று கேட்டவுடன் சுருங்கிய அவர் முகம், மதுராவும் கூட போய் இருக்கான்ற என்ற வார்த்தையை கேட்டவுடன் சரியானது!

“சேஃப் தானே இருக்கா! இதுங்க ஏதும் அவ கிட்ட ப்ராமிஸ் வாங்கிடலையே!” ரொம்ப சரியாக மனைவியை கணித்து இருந்தவர் கேட்டார்.

“எங்க.. அதுக்குள்ள தான் அந்த சனியன் வந்து ரேஷ்மாவை கூட்டிட்டு போய்டுச்சே! இப்ப எங்க இருக்குங்கன்னு கேளுங்க” என்று நொடித்தார் பார்வதி.

“அவங்க எங்க இருந்தா உனக்கு என்ன? முதல்ல உன் மகன் எங்க ஓடிப் போனான்னு போய் தேடு.

சொத்துக்காக பெத்த அப்பனையே அடிச்சு போட்டு நாடகம் ஆடுற அளவு போய்ட்டான் இல்ல? அதுக்கு நீயும் சப்போர்ட் வேற? ச்சீ வெக்கமா இல்லை உங்களுக்கு!

உன் பையனை இனிமே யாச்சும் சும்மா இருக்க சொல்லு. இல்ல  நானே அவனை போலீசில் அட்டெம்ட் டு மர்டர் கேஸ் கொடுத்து உள்ள வச்சுடுவேன்!

ஒழுங்கா நான் சொல்றத கேட்டு நடந்தா, என் சொத்தை தருவேன்! இல்ல ஏதாச்சும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சுட்டு போய்டுவேன்!

அப்புறம் நீயும் உன் உதவாக்கர பையனும் சோத்துக்கு பிச்சை தான் எடுக்கணும்! பார்த்துக்கோ!” என்று ராமநாதன் சொல்வதைக் கேட்ட பார்வதி அதிர்ந்து தான் போனார்.

யாரிடமோ போய் தெரிந்து கொண்டு வந்து ரொம்ப நம்பிக்கையாக பேசியிருந்தான் ஜெயந்த்!

“டேய்,, நாம இப்படி ரேஷ்மாவை தொல்லைப் பண்றோம்னு தெரிஞ்சா

உன் அப்பா அவ்வளவு தான்! நம்ம ரெண்டு பேத்தையும் வீட்ட விட்டே தொரத்தி விடுவாரு!

ஏன்னா நம்ம சொத்து எல்லாம் பரம்பரை சொத்து இல்ல! உங்கப்பா சம்பாரிச்சது!”

“அதெல்லாம் எனக்கும் தெரியும்மா.. அவர் சுய சம்பாத்திய சொத்துன்னாலும் அவர் சொத்து எல்லாம் சட்டபடி உனக்கும் எனக்கும் ஆட்டோமேட்டிக்காக வந்திடும்! அதனால பயப்படாத!” என்றும் சொல்லி இருந்தான் அவரிடம்.

இப்போது இவர் என்ன உயில் அது இதுன்னு சொல்லிட்டு இருக்காரு என்று உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்!

நீ கொஞ்ச நேரம் வெளியே இரு. நான் இவங்க கிட்ட பேசணும் என்று மனைவிய வெளியே அனுப்பினார்.

ஆனால் சின்ன புத்திக் கொண்ட பார்வதி வெளியே கதவு அருகே நின்று ஒட்டுக் கேப்பது தெரிந்தே விட்டது ராமநாதனுக்கு!

எனவே ஏதோ சொல்ல வந்த ரேவந்திடம், ஹிந்தியில் பேசி தடுத்தார்.

அதைப் புரிந்து கொண்டு அவனும் ஹிந்தியிலேயே பேசினான்.

“ஸோ.. இவங்க ரெண்டு பேரும் என்னை வச்சு ரேஷ்மா கிட்ட ப்ளாக் மெயில் பண்ணி இருக்காங்க. ஆனா மதுரா டயத்துக்கு வந்து அவளைக் காப்பாத்திட்டா! நல்லா ஸ்மார்ட் அவ!“

ஸ்மார்ட் தான்! இல்லையா பின்னே! ராமநாதனின் மெசேஜை சரியாக புரிந்து கொண்டு, போகும் அவசரத்தில் ரேவந்த் சொல்லி சென்ற ,

“வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க” என்ற அந்த செய்தியைப் பிடித்துக் கொண்டு

நெட்டில் ராமநாதன் வீடு இருக்கும் ஏரியாவில் இருந்த மருத்துவமனைகளின் பெயர்களை  எல்லாம் எடுத்து,

அவற்றில் இருந்த பிரசவ, ஈ.என்.டி., ஆயுர்வேத மருத்துவ மனைகளின் பெயர்களை நீக்கி விட்டு

மீதி இருந்த ஹாஸ்பிட்டல்கள் பெயரை கூகிள் இமேஜ், மேப் மூலம் பார்த்து

இருப்பதிலேயே சிறிய மருத்துவமனையை சரியாக கணித்து விட்டு, சரியான நேரத்தில் சென்று ரேஷ்மாவை சத்தியம் செய்யுமுன் அழைத்து வந்து விட்டாள்!

“இவர் தான் நீ ரேஷ்மாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இல்லையா? பேர் யுவ நிலவன்! உன்னோட நீண்ட கால நண்பன்!”

“அங்கிள் உங்களுக்கு எப்படி? ரேவந்த் ஆச்சரியப்பட, இத கூட தெரிஞ்சு வச்சுக்கலன்னா, உன் அப்பன் சொந்தக்கரங்கள எல்லாம் நான் சமாளிச்சு வந்திருக்க முடியுமா?“

“நீ உன் தங்கச்சி கூட இவனை சிங்கப்பூர் அனுப்பி வச்சுருக்கன்னு கேள்விப்பட்ட உடன், நான் விசாரிச்சு தெரிஞ்சு கிட்டேன் இதெல்லாம்!

சரியான சாய்ஸ் தான் ரேவந்த்! ரேஷ்மாவை இவங்க வீட்டில் நல்லபடியா வச்சுப்பாங்க!”

கேட்ட ரேவந்தின் மனம் சந்தோசம் அடைந்தாலும், கூடவே சிறிய துக்கமும்!

இவ்வளவு ஸ்மார்ட் ஆன அங்கிள், தன் மகனை இப்படி விட்டுட்டாரே என்று!

“டேய்.. நீ என்ன நினக்கிறன்னு எனக்கு புரியுது! ஜெயந்த் பத்தி தானே!

நல்ல பிள்ளைங்கள பெத்துக்கவும் ஒரு கொடுப்பினை வேணும்! எனக்கு இந்த ஜென்மத்துல அது இல்ல! அவன் பேச்சை விடு!

இப்ப என்ன ஏற்பாடு பண்ணிருக்க?

ரேஷ்மாவும் மதுராவும் இப்ப ஸ்ரீரங்கத்தில் இருக்காங்க.

என் மாமா பாமிலி அவங்கள வந்து பார்த்துட்டாங்களாம்! மாமா கல்யாண ஏற்பாடு எல்லாம் நல்லபடியா அவங்களே முன்ன நின்னு நடத்தி தரேன்னு சொல்லிட்டாங்க!

தட்ஸ் குட். அப்புறம் என்ன? கிளம்ப வேண்டியது தானே!”

“அங்கிள் நீங்க இல்லாம எப்படி?”

“நான் இதுங்களால உங்களுக்கு தொந்திரவு ஏற்படாம பார்த்துக்கணும்! நான் வரலன்னாலும் என் ஆசீர்வாதம் ரேஷ்மாவுக்கு எப்பவும் உண்டு. அப்பா புது மாப்பிள்ளை, வா.. நீ இப்பவே என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்று யுவியை அழைக்க, அவன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான்!

அவனை மனதார வாழ்த்தினார் அந்த பெரியவர்!

“யுவி, சார்.. அப்படியே இவனையும் ப்ளஸ் பண்ணுங்க! இவனும் சீக்கிரம் மாப்பிள்ள ஆக போறவன் தான்!”

“ஓ.. அப்படியா? பொண்ணு யாருப்பா? மதுராவா?”

“அங்கிள்..” என்று அதிர்ந்தான் ரேவந்த்!

“மதுராவை விட வேற எந்த பொண்ணுடா உன்னையும் ரேஷ்மாவையும் நல்லா பார்த்துக்கிற பொண்ணு? நல்லா இருங்கப்பா” என்று மீண்டும் மனதார வாழ்த்தினார் அவர்!

வெளியே இருந்து ஒட்டுக் கேட்ட பார்வதிக்கு ஸ்ரீரங்கம் என்பது மட்டுமே புரிய, அவர் உடனே ரேஷ்மாவை தேடிக் கொண்டு திருச்சியில் சுற்றிக் கொண்டு இருந்த ஜெயந்தை அழைத்து சொல்ல,

“எங்கேம்மா..  அவ அங்க இல்லம்மா..”

“அவ ஸ்ரீரங்கத்தில் நம்ம அத்தை ஹாஸ்பிட்டலில்  தானே அவ முதல்ல வேலைப் பார்த்தா! அது பக்கத்தில் தானே அவளோட வீடும் இருக்கு!

அதனால நான் முதல்ல அங்க போய் தான் பார்த்தேன்!

அவ வீட்டை ஒரு தனியார் பேங்க்க்கும் மாடியில ஒரு ஷேர் ட்ரேடிங்  ப்ரோக்கர் கம்பெனிக்கும் வாடகைக்கு விட்டுருக்காம்மா. சுத்திலும் செக்யூரிட்டி, சிசிடிவி கேமிரா வேற! கிட்ட போய் கேட்டாலே விரட்டி விடுறாங்க!” என்றான் சலிப்புடன்!

“நீ.. நல்லா தேடுடா” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரிடம் இருந்து போனை பிடுங்கிக் கொண்ட ராமநாதன்,

“ஒழுங்கு மரியாதயா வீடு வந்து சேர்ந்திட்டன்னா, உனக்கு என்னோட சொத்து கிடைக்கும்!

இல்ல எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு தான்! ஆல்ரெடி உயில் டிராஃப்ட் பண்ணி டெபொசிட் பண்ணி வச்சுருக்கேன்! நீ வந்தேன்னா அத கேன்சல் பண்ணுவேன்! இல்லைனா இல்ல! நீயே முடிவு பண்ணிக்கோ!” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

—-

ரேஷ்மா யுவியின் திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன!

மாமன்களும் அத்தைகளும் பம்பரமாக சுழன்றனர்!

யுவியின் அப்பா தனசேகர் அம்மா பத்மா இருவரும் ஸ்ரீரங்கத்தில் ஒரு சர்வீஸ்டு அப்பார்ட்மென்டில் தங்க வைக்கப்பட்டனர்!

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப ரோட்டில் இருந்த அந்த ஏசி மண்டபம் புக் செய்யப்பட்டு இருந்தது!

முஹூர்த்த புடவைகள் எல்லாம் ஒரு நாள் காஞ்சிபுரம் சென்று எடுத்து வந்து விட்டார்கள்!

கிராமம் முழுக்க மணமக்கள் மற்றும் ரேவந்த் மதுரா இடம்பெற்று இருந்த பேனர்கள்!

எப்போதும் போல இல்லாமல் கழுத்து நிறைய நகைகளுடன், காதில் வைரத்தோடு மின்ன, கண்களில் காதலுடன் ரேவந்த்தை பார்த்து சிரித்தபடியே மதுரா இருக்க, அந்த காதலுக்கு கொஞ்சமும் சளைக்காத காதல் பார்வை பார்த்தபடி ரேவந்தும் அவள் அருகில்!

தன் அம்மா மூலம் தன் போனுக்கு அனுப்பப் பட்ட அந்த பேனரின் போட்டோவை, அது அவளின்  பொறாமைத் தீயில் பொசுங்கி போய் விடும் அளவு தீப்பார்வை பார்த்தபடி இருந்தாள் சூர்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!