Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 6.1

எண்ணெய் கத்திரிக்காய் கறி செய்ய, சிறிய சிறிய கத்திரிக்காய்களை நான்காக வகுந்து,

புழுக்கள் இருக்கிறதா, பூச்சி இருக்கிறதா என்று நறுக்கி ஆராய்ந்து பார்த்து

அருகில் இருந்த தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தாள் மதுரா.

இரவு சமையல்!



Advertisement

என்ன தான் நகர வாழ்க்கைக்கு வந்து விட்டாலும், இன்னும் சில விசயங்கள் அவர்களிடம் மிச்சம் இருந்ததன!

அது இரவில் சோறு உண்ணும் பழக்கம்! அவர்கள் அப்பாயி பழக்கி விட்டது.

எனவே இப்போதும் மாலை,  வேலை முடிந்து வந்து, இரவு உணவுக்கு குக்கர் வைத்து விடுவாள் மதுரா.

Advertisement

“ஐய்.. அக்கா.. என்ன இது சர்ப்ரைஸ்! இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே!

Advertisement

உன் தத்து தங்கச்சி ரேஷ்மா மேடம் எப்படி இவ்வளவு சீக்கிரம் விட்டாங்க உன்னை?

முதல்ல நீ எப்படி உன் ஆபிசிலிருந்து கிளம்பின இவ்வளவு சீக்கிரம்?” என்றபடி உள்ளே நுழைந்தாள் லக்கி.

“இன்னிக்கு ரேஷ்மா மேம் அவங்க அண்ணா வோட ஸ்ரீபெரும்புதூர் பக்கமா  இருக்கிற கார்மென்ட் ஃபேக்டரிக்கு போய் இருக்காங்க.

Advertisement

ரொம்ப நாளைக்கு அப்புறம், இப்ப தான் அவங்க பிரதர் கூட போய் இருக்காங்க!

மகளிர் தினத்துக்கு புது டிசைன் கார்மெண்ட்ஸ் லாஞ்ச் பண்ணப் போறாங்க.

அதுக்கான ப்ரடக்சன் போயிட்டு இருக்கு! அத பார்க்க போய் இருக்காங்க.

என்னை கேக்குறது இருக்கட்டும். நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? உன் ட்ரைன் டைம் இது இல்லையே?”

“நான் ட்ரைன்ல வரல. ரேவ் என்னை காரில் டிராப் பண்ணினார்!”

“இது என்ன புது பழக்கம் லக்கி?

 இப்படி யார் கூடவோ காரில் வந்து இறங்குற பழக்கம்!

இப்படியெல்லாம் ஓஸி கம்ஃபோர்ட்க்கு பழக்கம் பண்ணிக்காதே!

ஏதோ அன்னிக்கு ஒரு நாள் ரொம்ப லேட் ஆகிடுச்சுன்னு வந்தே சரி.

ஆனா அதையே கண்டினியு பண்ணிட்டு இருக்க?

லக்கி நீ சின்ன பொண்ணு!

உனக்கு இன்னும் மனுசங்களைப் பத்தி நல்லா தெரியல! அதனால இது எல்லாம் வேண்டாம்! சரியா?”

“அக்கா.. நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல! இப்பவே நான் மேஜர் தான்! காலேஜ் செக்கன்ட் இயர் படிக்கிறேன்!

மனுசங்களை இவாலுவேட் பண்ண எனக்கும் தெரியும்! நீ நினைக்கிற மாதிரி ரேவ் ஒண்ணும் கெட்டவர் இல்ல!

ஜெம் அவர்! என்னை ஒரு பார்வை கூட தப்பா பார்க்க மாட்டார்!

நான் முதல்ல உனக்கு பயந்துட்டு தான் அவர் காரில் வர மாட்டேன்னு சொன்னேன்.

ஆனா, அவரோ உனக்கு போன் போட்டு தர சொல்லி உன் கிட்டயே பேசறேன்னு சொன்னார். நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

அவர் யாரு தெரியுமா? பெரிய இண்டஸ்ட்ரியஸ்ட். சும்மா ரோட்டில் போற யாரோ ஒருத்தன் இல்ல!”

“அது தாண்டி எனக்கும் பயமா இருக்கு! அவ்வளவு பெரிய பணக்காரங்க சகவாசம் நமக்கு வேண்டாம்!”

“ஏன்க்கா. பணக்காரங்க எல்லாம் கெட்டவங்களா என்ன? நீயே சொல்லு.

உன் ரேஷ்மா மேம் கூட பணக்காரங்க தான்!

அவங்க அண்ணா கூட பணக்காரங்க தான்!

நீயே அவங்கள பத்தி நல்ல இமேஜ் வச்சுருக்க!

ஏன் ரேஷ்மா மேம் அண்ணா அந்த ரேவந்த் சாரைக் கூட நீ எவ்வளவு பெருமையா தானே சொன்ன!

சின்ன வயசுலேயே கம்பெனி நிர்வாகத்துக்கு வந்திட்டார். சூப்பரா கொண்டு போயிட்டு இருக்கார் பிசினசை

அப்படின்னு எல்லாம்!

இப்ப என்னோட ஃபிரண்டை மட்டும் தப்பா பேசாதேக்கா!

நேரில் பார்க்காத அவர் மேலேயே உனக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் போது, தினம் பார்த்து பழகுற எனக்கு தெரியாதா?

சும்மா என்னை சின்ன பிள்ளையாவே ட்ரீட் பண்ணாதே!

போ.. பேசாம, எனக்கு பிடிச்ச எண்ணைக் கத்திரிக்காயை ரெடி பண்ணு.

ஒரு கட்டு கட்டப் போறேன்” என்றாள் தண்ணீரில் இருக்கும் கத்திரிக்காய் கிண்ணத்தில் கையை விட்டு அலசியபடி!

“என்னக்கா .. பத்து பன்னண்டு காய் தான் இருக்கும் போல. இது எனக்கே பத்தாதே! நீ எதை சாப்பிடுவே?”

“ம்ம். இத  நான் கடையில வாங்கல. எதிர் வீட்டு ஆண்டி கொடுத்தாங்க. அவங்க அம்மா ஊரான திருக்காட்டுப்பள்ளிக்கு போயிட்டு வந்தாங்களாம்.

அங்கே இருந்து சுக்காம்பார் கத்திரிக்காய் கொண்டு வந்திருந்தாங்க.

நீயும் கொஞ்சம் எடுத்துக்கோ மதுரான்னாங்க. சொன்ன மரியாதைக்கு கொஞ்சமா எடுத்துட்டு வந்திட்டேன்!

இந்தா நீ காப்பிய குடி முதல்ல!”

“கொண்டா..” என்று காபி டம்ளரை வாங்கியவள்,

“அக்கா உனக்கு தெரியுமா நேத்து, ரேவ், நல்லதொரு ஃபில்டர் காபி வாங்கி தரேன்னு ஒரு காபி ஷாப் கூட்டிட்டு போனார்.

நான் அங்க போய் காப்பிய நல்லா குடிச்சுட்டு,

நல்லாருக்கு.. ஆனா எங்க அக்கா போடுற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டேன்” என்று சொல்லி சிரித்தாள் லக்கி!

“அதுக்கு என்ன சொன்னார் உன்னோட அந்த ரேவ்?”

“யூ.. நாட்டி..  என்று நம்ம அப்பா மாதிரியே காதை திருகினார்!”

காதை திருகினானா? அப்பா மாதிரியா? என்ன மாதிரி நினைக்கிறான் அவன் இவளை!

இவள் வேண்டுமென்றால் அப்பா மாதிரி நினைக்கலாம்!

ஆனால் அவன் அப்படி நினைக்கிறானா?

மதுரா மனதில் கொஞ்சம் பயம்! சந்தேகம்!

ஆனால் சொல்ல முடியவில்லை!

அப்புறம் அதுக்கு வேறே ஆரம்பித்து விடுவாள்!

பூமர் அது இதுவென்று.

பேசாமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்!

 ஒரு நாள் அவனையே நேரில் சந்தித்து பேச வேண்டும்!

ஆளை நேரில் பார்த்தால் ஓரளவு கணித்து விடலாம்!

அவன் பெயர் என்ன சொன்னாள்?

ஏதோ ரேவ் என்றாளே!

ரேவ் என்றால் ஒரு வேளை ரேவந்த் ஆக இருக்குமோ?

ஆனால் எத்தனை ரேவந்த்கள் அவள் வாழ்வில் வருகிறார்கள்?

ரேஷ்மா மேமின் அண்ணா பெயரும் ரேவந்த் தான்! ரேவந்த் சித்தார்த்!

அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிட்ட வில்லை, இங்கு வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியும்!

அவர்கள்  கம்பெனி வெப்சைட்டில் அவனின் போட்டோக்கள் இருக்கிறது தான்!

எல்லாமே ஒரு சில நிகழ்ச்சிகளில் எடுக்கப் பட்ட க்ரூப் போட்டோக்கள்!

ஆனால் முகத்தை ஜூம் செய்யாமல் எடுக்கப்பட்டவை!

போட்டோவில் அவன் ப்ளேசர் அணிந்து, ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் இருப்பான்!

மதுராவுக்கு அவன் முகம் மனதில் பதியவில்லை!

இப்போது மூன்றாவது ரேவந்த்!

மூன்றாவது  ரேவந்த்?

ஆமாம் அவள் “ஊட்டி”யின்  பெயரும் ரேவந்த் தான்!

ஒரு வேளை லக்கியின் டுயூட் ஊட்டியாக இருக்குமோ?

ச்சே ச்சே இருக்காது! ஊரில் எத்தனையோ ரேவந்த்கள் இருக்கலாம்!

அவர்களின் அப்பாவும் சித்தார்த் ஆகவும் இருக்கலாம்!

கூகிள் பண்ணி பார்த்தால் பெரிய லிஸ்ட்டே வரும்!

ஓவர் கற்பனை தான் உனக்கு என்று தனக்குள் கடிந்து கொண்டவளை லக்கியின் குரல் கலைத்தது!

“அக்கா.. நீ என்ன செக் பண்ணி இருக்க? இங்க பாரு இந்த காயில் இருந்து எப்படி வெளியே வருது பாரு புழு! அய்யே..” என்றாள்.

“புழுவா அதிலா.. நல்லா தானே செக் பண்ணினேன். வெளியே பார்க்க அப்படி க்ளீனா இருந்துச்சு. ஆனா உள்ளே புழு இருக்கு!”

“சரிக்கா.. நீ பாரு.. நான் குளிக்க போறேன்” என்று லக்கி அங்கிருந்து அகல,

மதுரா மீண்டும் கத்திரிக்காயை ஆராய்ந்தாள்.

அவள் மனதில் பழைய நினைவுகள்! அவள் அன்னையின் நினைவுகள்!

—–

“இந்த கத்திரிக்கா மாதிரி தான்மா.. மனுசங்களும்! வெளியே சில பேர் நல்லா பேசுவாங்க.

இனிக்க இனிக்க பேசுவாங்க.

ஆனால் உள்ளுக்குள்ள அவ்வளவு வினை இருக்கும்!

சில பேர் வெளியே பார்க்க நல்லா இருக்க மாட்டாங்க.

இதோ இந்த கத்தரிக்கா மாதிரி!” என்று கொஞ்சம் பழுப்பும் வயலட்டும் கலந்த நிறத்தில் இருந்த காயை எடுத்து காட்டினார் வானதி!

“ஆனா பாரு உள்ளே அப்படியே வெண்ணை கணக்கா இருக்கு! இப்படி சில மனுசங்க வெளியே கரடு முரடா தெரிஞ்சாலும் உள்ளே நல்ல குணம் இருக்கும்!

நாம தான் மனுசங்களை நல்லா எடைப் போட கத்துக்கணும்!” என்றார் வானதி!

“நல்லா தத்துவம் பேசறேம்மா” என்றாள் பதினைந்து வயது மதுரா!

“என்ன பேசி என்ன பயன்? என்னோட சிந்தனை எல்லாம் இந்த அடுப்படி தாண்டி வர முடியாது!

எனக்கு விதித்திருக்கும் எல்லை அவ்வளவு தான்!” என்றார் வானதி கொஞ்சம் விரக்தியாக!

“ஏன்மா? நீ தாண்டி வர வேண்டியது தானே?”

“வந்தா நம்மளோட குடும்பம் ஏத்துக்காது. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள்!

அவர்களின் எதிர்காலம், இந்த குடும்ப அமைதி எனக்கு ரொம்ப முக்கியம்!

அதனால் தான் நானும் உன் அப்பாவும் எங்களுடைய ஆசைகளை உள்ளுக்குள் வைத்து பூட்டி விட்டோம்!”

“எல்லாம் இந்த அப்பாயி பண்ற வேலை!” என்று பல்லைக்கடித்தாள் மதுரா.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் குடும்பம் அது!

வீட்டிற்கு யாராவது விருந்து வந்து கொண்டே தான் இருப்பார்கள்!

அடுப்பு எரிந்து கொண்டே தான் இருக்கும்!

சமைத்துப் போட வானதியும், பொருட்கள் வாங்க உழைத்துப் போட அருளும் இருக்க வேறு என்ன கவலை உறவுகளுக்கு?

வந்த வண்ணம் இருந்தார்கள்!

அதுவும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி என்றால் கேட்கவே வேண்டாம்!

பகல் பத்து ஆரம்பித்து ராப்பத்து முடியும் வரை வந்த வண்ணம் இருப்பார்கள்!

வானதியும் கை வலிக்க, இடுப்பு நோக சமைத்துப் போடுவார்!

அதுவும் விறகு அடுப்பு சமையல் தான்!

அப்பாயியின் ஆணை!

ஆணை இடுவது எல்லாம் வானதியிடமும் அருளிடமும் மட்டும் தான்! மற்ற மகன்களிடமோ மருமகள்களிடமோ இல்லை!

ஆனால் மூத்த மருமகளின் அருமை, கடுமையான நுரையீரல் தொற்றால் அவள் உயிரையே பறித்து விட்ட பின் தான் அவருக்கு தெரிந்தது!

மிகவும் வருந்தினார்!

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்!

கூடவே மகனுக்கும் வாயில் புற்று நோய்  இருப்பதாக தெரிய வந்த பிறகு மிகவும் மனம் உடைந்தார்!

மதுரா பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி இருந்தாள் வானதி இறக்கும் போது!

ஏற்கனவே நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அம்மா வானதிக்கு உதவிகள் செய்து கொண்டிருந்து விட்டு

பத்தாம் வகுப்பில் மிகவும் சராசரியான மதிப்பெண்களையே பெற்று காமர்ஸ் க்ருப்பில் தான் சேர்ந்து இருந்தாள் அவள்!

அவள் திருச்சியில்  ஒரு பெண்கள் கல்லூரியில் பி காம் சேர்ந்து இருந்த நேரம், இனியா பெரிய மனுசியானாள்.

நல்ல ஊட்டம் கொடுக்க வேண்டிய நேரத்தில், நேரத்திற்கு சரியான சாப்பாடு கூட அவளுக்கு நேரத்துக்கு போட முடியவில்லை மதுராம்பாள் பாட்டியால்!

முதுமைக் காரணமாக முடியவில்லை! பல வருடங்களாக அடுப்படி பக்கமே போகாததும் ஒரு காரணம்!

அருள் உதவ வந்த போதும், ஆண் பிள்ளையை சமைக்க விட அவரின் பழமைவாத புத்தி அனுமதிக்கவில்லை!

ஆனால் மனதுள் மிகவும் நொந்து போனார்.

இதே வீட்டுக்கு வந்து, வந்து, வகை சொல்லி, வகை சொல்லி விதம் விதமாக நன்றாக உண்டு விட்டு கையிலும் வேறு எடுத்துப் போன உறவுகள் யாரும் திரும்பி கூட பார்க்க வில்லை!

“அது.. வந்து அத்தாச்சி.. எனக்கு இந்த மாதிரி தீட்டு ஒத்துக்காது.. கண்ணு எல்லாம் சிவந்திடும்!

என் மேல சாமி வரும்ல அதான்” என்பது மாதிரியான நொண்டி சாக்குகள் சொல்லிக் கொண்டு யாருமே வர வில்லை!

அவர்கள் தான் அப்படி என்றால் அவரின் சின்ன மருமகள்களை கூட

“ஒரு பத்து நாள் வந்து இருந்துட்டு போங்கடி” என்றதுக்கு ஆள் ஆளுக்கு ஒரு நோவு சொல்லி விட்டு வர மறுத்தார்கள்!

இதே மருமகள்கள் மாசமாக இருந்த போதும் பிள்ளைப் பெற்ற போதும் எப்படியெல்லாம் வானதியை பத்திய சமையல்கள் செய்ய சொல்லி பணித்திருப்பார் அவர்!

அவளுக்கு உடம்பு முடியலைன்னா கூட முகம் சுளிக்காமல் எவ்வளவு செய்து இருப்பா!

இன்னிக்கு அவ பெத்த பிள்ளைக்கு வழியா சோறு போட ஆள் இல்லாம போச்சே என்று வருந்தியே அவருக்கும் மன அழுத்தத்தில் எல்லா வியாதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.

ஒரு நாள் கொல்லைப் புற கழிப்பறைக்கு சென்றவர் வழுக்கி கீழே விழுந்தவர் அதன் பின் எழுந்து நடக்கவே முடியவில்லை!

எல்லாமே படுக்கையில் தான்!

விளைவு மதுராவின் கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது!

படிப்பை விட்டு விட்டு தங்கைகளை, தந்தையை, பாட்டியைக் கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள் மதுரா!

ஒரு நாள் பாட்டியைப் பார்க்க வந்த அருளின் பால்ய நண்பன் ஆடிட்டர் ஆத்மநாதன், மதுராவைக் கண்டு வருத்தமுற்று,

“வீட்டைப் பார்த்துக்கணும் தான்! அதுக்காக உன் படிப்பை விட்டது தப்பும்மா.

பாட்டியை பார்த்துக்க உன் அப்பாவிடம் சொல்லி நான் வேற ஏற்பாடு பண்றேன்.

நீ அடுத்த வருஷம் கண்டிப்பா காலேஜ் சேருற. நான் சேர்த்து விடுறேன்.

இப்போதைக்கு என் ஆபிஸுக்கு வா.

டெய்லி ஒரு நாலு மணி நேரம் அங்க வேலை பாரு.

அக்கவுண்ட்ஸ் பார்க்க கத்துக்கோ.

அது அடுத்த வருஷம் உன்னோட படிப்புக்கும் உதவியா இருக்கும்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவளை வேலைக்கு சேர்த்துக் கொண்டு விட்டார்!

பகுதி நேர சம்பளமும் போட்டுக் கொடுத்தார்.

“உன் அப்பனும் நானும் ஒண்ணா தான் பிகாம் சேர்ந்தோம். அவன் முதல் செமஸ்டர் கூட எழுதல!

உன் அப்பாவை மட்டும் உன் பாட்டி படிக்க வைச்சுருந்தா அவனும் இன்னிக்கு ஒரு நல்ல வேலைக்குப் போய் இருப்பான்!

வயலையும் பார்த்துகிட்டு படிக்கவும் செய்யலாம்னு எவ்வளவோ சொன்னேன் அவன்கிட்ட! கேக்கவே இல்லை அவன்!

நீயாச்சும் சொன்னத கேளு.” என்று பலதும் சொல்லியே அவளை வேலைக்கு சேர்த்து இருந்தார்!

ஆனால் அவர்களுக்கு அதிக சிரமம் கொடுக்காமல், மதுராம்பாள் அடுத்து வந்த சில மாதங்களில் இறந்து விட,

ஆடிட்டர் ஆபிசில் வேலைப் பார்த்த அனுபவம்,

பாட்டி இறக்கும் தருவாயில் அப்பாவின் உடன்பிறப்புக்கள் செய்த சொத்துப் பிரிப்பின் போது

மதுராவை ஏமாறாமல் காத்தது!

மிகவும் சண்டையிட்டு போராடி தான் அவர்களுக்கு நியாயமான பாகப்பிரிவினை கிடைத்திருந்தது!

அப்படி கிடைத்த சொத்தான,

 ஸ்ரீரங்கத்திற்கும் திருவானைக் கோவிலுக்கும் நடுவில் இருந்த ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு,

 கிராமத்து வீட்டைக் காலி செய்து விட்டு வந்து குடிபெயர்ந்தாள் மதுரா.

காரணம் அருளிற்கு சரியான நேரத்தில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள்!

வீட்டிற்கு அருகிலேயே இருந்த அந்த கலைக் கல்லூரியில் மீண்டும் பிகாம் சேர்ந்தாள் அவள்.

கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடிப் போர்சனில் குடியிருந்தார்கள்.

அதுவரை கூட அத்தனைக் கடுமையான சுபாவம் இல்லை மதுராவிடம்!

ஆனால் சொத்துப் பிரிப்பின் போதும், அதற்கு பிறகான காலத்திலும் சொந்தம் மட்டுமில்லாமல்,

மற்றவர்களும் கூட சின்னப் பெண் தானே நாம் சொல்வதைக் கேட்டு தானே ஆக வேண்டும் என்ற நினைப்பிலும்

அவள் அப்பா அருளும் ஒரு வாயில்லா பூச்சியாக இருந்ததாலும் அவரவர் அதிகாரம் பண்ணி ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைய நினைத்தார்கள்!

அதனால் பேச்சிலும் பார்வையிலும் கடுமையை வரவழைத்துக் கொண்டு விட்டாள் மதுரா!

எல்லோரிடமும் நல்லவள் என்றும் குணவதி என்றும் பெயர் எடுக்க முனைந்து நடந்து கொண்டிருந்தால் தான்,

 ஒவ்வொரு செயலும் விமரிசனத்து உள்ளாக்கப்படும்!

 ஆனால் கோவக்காரி என்று பெயர் எடுத்து விட்டால், அந்த ஒரே ஒரு பெயரோடு போய் விடும் என்பதாக உணர்ந்தாள் மதுரா!

அது முதல் அதையே தன் சுபாவம் ஆக்கிக் கொண்டு விட்டாள்!

அது அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்து விட்டது!

யாரும் தன்னை சின்னப் பெண் என்று நினைத்து பேசி விடக் கூடாது என்பதற்காகவே அவள் புடவை அணியத் தொடங்கினாள் தன் பதினெட்டு வயதிலேயே!

அதுவும் காட்டன் புடவைகள்!

கூடவே கண்களில் எந்த குறையுமில்லாமலே ஒரு கண்ணாடியும் போட்டுக் கொள்ள தொடங்கி விட்டாள்!

அந்தக் கால பெண்மணிகள் போல நடு நெற்றியில் ஒரு திலகம் வேறு!

முற்றிலும் மாறி தான் போயிருந்தாள் மதுரா!

ஆனால் இன்று வரை மாறாதது அவளின் ஊட்டியின் நினைவுகள் மட்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!