Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேயனின் நேசமினிது

நேயனின் நேசமினிது..3

இனிய நேசம் – 3

 

தோழிகள் இருவரும் ப்ராஜெக்ட்டுடன் போராடி ஒரு வழியாக அதில் ஏற்பட்டிருந்த பழுதை திருத்தி முடித்து புரொடக்ஷன் குழுவிற்கு அதனை கை மாற்றி விட்டு அலுவலகத்தை விட்டு கிளம்பும் போது ஆறு மணி ஆகியிருந்தது. 

 



Advertisement

“சீக்கிரம் இனி.. லேட் ஆச்சு. அந்த வழுக்க மண்டை T.L. சீக்கிரம் விட மாட்டேன்னுட்டான். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள டிராஃபிக்ல நீந்தி துரைப்பாக்கம் போகணும் நாம” என்று தோழியிடம் புலம்பியபடி, மின்தூக்கியின் பொத்தானை அழுத்தினாள் வெண்ணிலா. 

 

“போயிடலாம் வெண்ணிலா” என்ற இனியவர்ஷினி 

Advertisement

“நாம காமெடி ஷோக்கு போகப் போறதை பத்தி சுரேந்தர் அண்ணாக்கு சொல்லிட்டியா?” என்று கேட்க, “சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்..” என்று கடுப்புடன் முணுமுணுத்தாள் வெண்ணிலா. 

Advertisement

 

இருவரும் லிஃப்டினுள் நுழைய தோழியின் கடுப்பான பதிலைக் கண்டு “ஏன் கேர்ள்? அண்ணா எதுவும் திட்டிட்டாங்களா?” என்று கேட்டாள் இனியவர்ஷினி.  

 

Advertisement

“திட்டவெல்லாம் இல்லன்னு சொல்ல ஆசையாதான் இருக்கு. ஆனா, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லையே இனி. ஶ்ரீ மதியம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி இருப்பான் போல. இப்ப ஈவ்னிங் அப்பார்மெண்ட் கீழ இருக்க பார்க்குக்கு அவனை கூட்டிட்டு போய் இருக்காராம். நான் காமெடி ஷோக்கு போய்ட்டு வர லேட் ஆகும்னு சொன்னதும் டென்ஷன் ஆகிட்டார். ‘காலைல இருந்து நான் தான் அவனை கவனிக்கிறேன். நீ காமெடி ஷோ போறதா சொல்றேன்’னு கத்தினார்” என்றாள் வெண்ணிலா. 

 

“போச்சுடா. அண்ணா இப்படி பேசினதுக்கு நீ சும்மா இருக்க மாட்டியே? பதிலுக்கு திருப்பிக் கொடுத்து இருப்பியே?” என்றாள் இனியவர்ஷினி தோழியைப் பற்றி அறிந்தவளாக. 

 

“பின்ன.. காலைல இருந்து நான் தான் பாத்துக்குறேன்னு சொல்லி கத்தினா சும்மாவா விட முடியும்? நான் இல்லாத சமயம் பையனை அப்பாவா இவரு பாத்துக்காம பக்கத்து வீட்டுக்காரனா பாத்துப்பான். இத்தனைக்கும் இவரு இன்னைக்கு லீவ் எடுத்திருந்தார். அப்புறம் என்ன? எல்லாம் கொழுப்பு. குழந்தை பெத்துக்க மட்டும் வேணும். ஆனா பாத்துக்க மாட்டாராமா…? ஒரு நாளாவது பாக்கட்டும். அப்ப தான் என் கஷ்டம் தெரியும்” என்று வெண்ணிலா பொரிந்து தள்ளினாள். 

 

“சரி சரி. டென்ஷன் ஆகாத நிலா. வா போகலாம்” என்று அவளை சாந்தப்படுத்திய வர்ஷினி, தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் துரைப்பாக்கம் நோக்கி பயணத்தை தொடர்ந்தாள். 

 

போக்கு வரத்து நெரிசலை மீறி அவர்கள் துரைப்பாக்கம் வந்தடையவே மணி ஆறு ஐம்பதாகி இருந்தது. பின்னர் அகநேயனின் நிகழ்ச்சி அரங்கேறும் ஆர்ட்ஸ் தியேட்டர் இருக்கும் ஏரியாவை வந்தடைய மணி ஏழு பதினைந்தே ஆகி இருந்தது. 

 

“போச்சு போச்சு. பதினஞ்சு நிமிஷம் லேட் ஆகிப் போச்சு. ஷோ ஸ்டார்ட் ஆகி இருக்கும்” என இனியவர்ஷினி புலம்ப, “சீக்கிரம் வா. உள்ள போகலாம்” என்று வெண்ணிலாவும் அவசரமாக கூறியபடி அந்த ஆர்ட்ஸ் தியேட்டரின் முன் இருந்த காப்பாளரிடம் தாங்கள் இணைய வழியாக பதிவு செய்த டிக்கெட் விவரத்தை அலைபேசியில் காட்டினாள்.

 

அங்கே இடது புறமாக இருந்த அரங்கத்தின் பெரிய கதவினை சுட்டிக் காட்டிய காப்பாளர் “ஷோ ஆரம்பிச்சு இருபது நிமிஷம் ஆகிப் போச்சுமா. சீக்கிரம் போங்க” என்று கூறவும், இருவரும் அந்த அரங்கத்தின் கதவை நோக்கி ஓடினார்கள். 

 

உள்ளே அகன் மக்களை சிரித்து வைத்துக் கொண்டிருந்ததின் அடையாளமாக கதவைத் தாண்டி சிரிப்பலை வெளியே கேட்டது! 

 

வெண்ணிலா மெல்ல கதவினைத் திறந்து உள்ளே நுழைய, எல்லோரின் தலையும் ஸ்லோ மோஷனில் திரும்பி வாயிலை நோக்கியது! 

 

அகனுமே பேசுவதை நிறுத்தி விட்டு வாயிலைப் பார்த்தவன், திரும்பி வலது கையில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தை பார்த்தான். 

 

வெண்ணிலாவின் பின்னே வந்த இனியவர்ஷினி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் எட்டிப் பார்க்க, அகநேயன் ஒரு கையால் மைக்கினை பற்றிக் கொண்டு, மறு கையை இடையில் வைத்து அவர்களை பார்த்தபடி நின்றான். 

 

எல்லோரும் தங்களைப் பார்த்ததில் வெண்ணிலா சற்று சங்கடத்துடன் உள்ளே நுழைய, இனியவர்ஷினியோ தோழியை விட தர்ம சங்கடத்துடன் அதே நிலையில் தலையை மட்டும் நீட்டியபடி நின்றிருந்தாள். 

 

வெண்ணிலா தாங்கள் பதிவு செய்த இருக்கையில் சென்று அமர்ந்த பின்னர்தான் தோழி உடன் வரவில்லை என்பதை உணர்ந்து வாயிலைப் பார்த்தவள், இனியா எட்டிப் பார்த்து நிற்கும் கோலத்தை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள். 

 

அகன் இனியவர்ஷினியின் தலையிடம் “மேடம்…. வந்ததே லேட்! இதுல சினேக் பாபு மாதிரி தலையை மட்டும் நீட்டிட்டு நிக்குறீங்க. கொஞ்சம் உள்ள வந்தா ஷோ’வை கன்ட்டினியூ பண்ணலாம்..” என்றதும் அனைவரும் சிரிக்க, அசடு வழிந்தபடி உள்ளே நுழைந்தாள் இனியவர்ஷினி. 

 

கிட்டத்தட்ட நானூறு பேர் அமர்ந்திருக்கக் கூடிய அரங்கம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கலந்திருந்தனர். 

அந்த அரங்கத்தின் மேடையில் அகநேயன்! 

 

வெண்ணிலாவின் அருகே இனியவர்ஷினி சென்று அமர்ந்ததும் அவர்களிடம் இருந்தே நகைச்சுவையை தொடர்ந்தான் அகநேயன்! 

 

“ஏன் மேடம் இருபது நிமிஷம் லேட்?” என்று பொதுவாக இருவரிடமும் கேட்க, பெண்களிடம் மைக் கொண்டு வந்து நீட்டப் பட்டது! 

 

சட்டென்று தங்களிடம் கேள்வி கேட்பான் என்று எதிர்பாராத இருவரும் சற்று திகைத்து முழிக்க, இனியவர்ஷினி மைக்கினை கையில் வாங்கவே இல்லை. 

 

வெண்ணிலா தான் சுதாரித்து முதலில் மைக்கை கையில் வாங்கிக் கொண்டாள். 

 

இனியவர்ஷினி சற்று தயக்கத்துடன் மைக்கை வாங்கிக் கொள்ள, அதனைக் கண்ட அகன் “இவுங்க மைக் வாங்கவே இவ்வளவு யோசிக்கிறாங்களே.. என்னன்னு இவங்களை கேள்வி கேட்டு பதில் வாங்கி உங்களை சிரிக்க வச்சு…” என்று அலுத்துக் கொண்டவன், “ரொம்ப கஷ்டம் சினேக் பாபு மேடம்…” என்றதும் கூட்டம் சிரித்தது. 

 

“சரி ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் பதில் சொல்லுங்க. ஏன் லேட்..? இந்தக் குழந்தைங்க எல்லாம் ஸ்கூல் வேன் மிஸ் பண்ண மாதிரி நீங்க பஸ் எதுவும் மிஸ் பண்ணிட்டீங்களா?” என்று அகன் கேட்க, இனியவர்ஷினி மைக்கை வாயருகில் வைத்துக் கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு இல்லை எனும் விதமாக தலையசைதாள். 

 

“சினேக் மேடம்.. நீங்க இப்படி மண்டையை ஆட்டுறதுக்கு மைக்கே தேவையில்லை. முதல்ல மைக்க கீழ போடுங்க” கிண்டலும் சிரிப்புமாக அகன் சொல்லியதும் இனியவர்ஷினி மைக்கை கீழிறக்கி விட்டாள்! 

அவளுக்கு ஒரே கூச்சமாக இருந்தது.

 

அதைப் புரிந்து கொண்ட அகநேயன் “மேடம்.. ஃபீல் ஃப்ரீ டூ டாக். வந்ததும் வராததுமா உங்க கிட்ட கேள்வி கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா, பாருங்க. இது Crowd work Comedy! சோ, உங்களை வச்சு தான் ஷோ போகும். நீங்களும் ஆடியன்ஸ்ஸா போய்டீங்க. சோ, ப்ளீஸ் ஃபீல் ஃப்ரீ டூ ஆன்சர்!” என்றான் அகநேயன்.

 

தன்னிலையை உணர்ந்து அவன் அப்படிப் பேசியது இனியவர்ஷினிக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க, கூச்சத்தை கை விட்டு “ஆஃபிஸ்ல இருந்து வர்ற லேட் ஆகிடுச்சு..” என்றாள் பதிலாக. 

 

“ஓ.. ஐ.டி.யா…” என்று அகன் கேட்க, “ஹ்ம்ம்..” என்று ஆமோதித்தாள் இனியவர்ஷினி. 

 

“சரி.. சொல்லுங்க. நீங்க சிங்கிளா.. மிங்கிளா.. இல்ல இதோ இங்க குழந்தைங்களோட போராடிட்டு உக்காந்திருக்காங்களே அவுங்களை மாதிரி ஜிங்கிலா…” என்று அகநேயன் கேட்க, 

மெல்லிய தயக்கத்துடன் “சிங்கிள்..” என்றாள் இனியவர்ஷினி.

 

“சிங்கிளா..?” என ஆச்சர்யமாக வினவிய அகன், “ஏன் மேடம் சிங்கிள்? ப்ரேக் அப் ஆகிடுச்சா?” என்று கேட்டான். 

 

“இல்ல.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்று இனியவர்ஷினி வேக வேகமாக மறுத்தாள். 

 

“அப்படி எல்லாம் இல்லேன்னா… லவ்வே இல்லையா?” என்று திகைப்புடன் கேட்டான் அகன். 

 

இனியவர்ஷினி ஆமோதிப்பாக தலையசைக்க, “ஹவ் மேடம்? இது வரைக்கும் யாரையுமே லவ்வே பண்ணது இல்லையா?” என்று கேட்க, அதற்கும் ஆமோதிப்பாக தலையசைத்தாள் இனியவர்ஷினி. 

 

“ஓ மை காட்…. கலி காலத்தில காதல் பண்ணாத காரிகையா?” என்று ஆச்சர்ய முக மெய்ப்பாடுடன் (முக மெய்ப்பாடு – முக பாவனை) அகன் கேட்க, இனியவர்ஷினி மௌனமாக மென்னகை புரிந்தாள். 

 

“ஏன் மேடம்.. லவ்ல இன்ட்ரெஸ்ட் இல்லையா?”

 

“அப்படி எல்லாம் இல்ல. அந்த ஃபீல் யாரு மேலயும் வரல”  

 

“யாரு மேலையுமேவா..? ஹவ் மேடம்? நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல பசங்க சிங்கிள் பசங்களா சுத்திக்கிட்டு இருக்காங்க மேடம். என்னை மாதிரின்னு கூட சொல்லலாம்…” என்றவன் தன்னையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள, எல்லோரும் சிரித்தனர்.

 

“ஏன் சிரிக்கிறீங்க எல்லாரும். நான் நல்ல பையன் தான…” என்றதும் கூட்டம் ஆர்ப்பரிக்க, “ரைட்டு.. நாம மிஸ்.சிங்கிள் கிட்ட கன்ட்டினியூ பண்ணுவோம்..” என்றவன் இனியவர்ஷினியிடம் பார்வையை பதித்து கேள்வியைத் தொடர்ந்தான்.

 

“நீங்க வேற ஐடி பீல்ட்ன்னு சொல்றீங்க. ஒரு ஆள் மேல கூடவா உங்களுக்கு அந்த லவ் ஃபீல் வரல…” 

 

உதடு பிதுக்கி இல்லை எனும் விதமாக தலையசைத்தாள் இனியவர்ஷினி. 

 

“சரி உங்களுக்கு யாரு மேலையும் அந்த ஃபீல் வரல. உங்க மேல யாருக்காவது லவ் ஃபீல் வந்திருக்கும் இல்ல. எத்தனை லவ் ப்ரொபோஸல் வந்திருக்கு? அதுல நீங்க எத்தனை ரிஜெக்ட் பண்ணுனீங்க. அதை பத்தி சொல்லுங்க” அகநேயன் அதிகளவு ஆர்வத்துடன் கேட்க, அவள் கூறிய பதிலோ அவனது ஆர்வத்தை உடைப்பதாக இருந்தது! 

 

“சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல சார். எனக்கு ப்ரொபோஸல் இதுவரைக்கும் வந்ததும் இல்லை. அதனால நான் எதையும் ரிஜெக்ட் பண்ணுறதுக்கான அவசியமும் ஏற்படல…” என்றதும் அகநேயன் நெஞ்சில் கை வைத்து மேடையிலேயே மடிந்து அமர்ந்து விட, மக்கள் கூட்டம் கொல்லென்று சிரித்து விட்டது. 

 

இனியவர்ஷினி சொல்வது உண்மையே! இதுவரை அவளுக்கு யார் மீதும் காதல் என்ற உணர்வு வந்ததில்லை. அந்த உணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அவள் யாரையும் சந்திக்கவில்லை. அதே சமயம் அவளிடமும் யாரும் காதல் வயப்பட்டதில்லை! 

 

காதலெனும் காற்று இதுவரை அவளது வாழ்வில் எந்த வகையிலும் வீசி இருக்கவில்லை! 

 

தோழி கூறுவது முற்றிலும் உண்மை என்பதை அறிந்த வெண்ணிலா, தன்னிடமிருந்த மைக்கை உயர்த்தி “அவ சொல்றது நிஜம் தான் சார். இதுவரைக்கும் அவளும் யாரையும் லவ் பண்ணதில்ல. அவகிட்டயும் யாரும் வந்து லவ் சொன்னது இல்ல” என்றாள் புன்னகையுடன். 

 

நெஞ்சில் வைத்த கையை எடுக்காமல் அவர்களைப் பார்த்த அகநேயன், “இது உண்மையாவே கலி காலம் தானா??? காதல் வயப்படாத ஒரு பொண்ணு. இதுவரை யாராலயும் காதல் சொல்லப் படாத பொண்ணு” என்றவன், ஒரு முடிவோடு எழுந்து நின்றான். 

 

“ஏன் மேடம். யூ லுக் வெரி ப்ரிட்டி (Pretty). அழகா இருக்கீங்க. அறிவா இருப்பீங்கன்னும் நினைக்கிறேன். ஏன்னா மேடம் ‘ஐ.டி. டூட்’ வேற! அப்புறம் ஏன் உங்களுக்கு ப்ரொபோஸல் எதுவும் வரல?” என்று ஆச்சரியம் விலகாமல் அகநேயன் கேட்க, 

 

“அதை நீங்க ப்ரொபோஸ் பண்ணாதவங்க கிட்டதான் சார் போய் கேக்கணும்..” பட்டென்று இனியவர்ஷினி பதில் கூறியதும் பல்ப் வாங்கிய தோரணையுடன் அகநேயன் நிற்க, பலத்த சிரிப்பலை அங்கே! 

 

“சீரியஸா கேட்கிறேன். ஒரு ப்ரொபோஸல் கூட உங்களுக்கு வரலைன்னு சொல்றது என்னால நம்ப முடியல மேடம்” என நம்பவியலாத குரலில் அவன் கூற, “நீங்க நம்பலைன்னாலும் அது தான் நெசம்…” என்றாள் இனியவர்ஷினியும் சிரிப்புடன்! 

 

எல்லோரும் சிரிக்க, “சரி ரைட்! இது வரைக்கும் யாரும் ப்ரொபோஸ் பண்ணல. அப்படி பண்ணி இருந்தா நீங்களும் எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பீங்கன்னு உங்களுக்கே தெரியாது இல்லையா? நீங்க வொர்ரி பண்ணாதீங்க மேடம்! நான் இருக்கேன். நான் ப்ரொபோஸ் பண்றேன்” என்றவன், “சோ இப்ப ஒரு ப்ரொபோஸல் சீன் வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க?” என்று மக்களைப் பார்த்துக் கேட்க, எல்லோரும் ஆரவாரத்துடன் கை தட்டி உற்சாகமாக சரி என்றனர்.  

 

சட்டென்று அவன் அப்படிக் கூறுவான் என்று எதிர்பாராத இனியவர்ஷினி கண்கள் அகல அவனைப் பார்க்க, “மேடம்.. ஒன்னும் பயப்படாதீங்க. ஜஸ்ட் சீன்… வெறும் ஆக்ஷன்.. ஓகே..” என்றவன் அவளை மேடைக்கு அழைத்தான். 

 

இனியவர்ஷினி மலங்க மலங்க விழித்தபடி வெண்ணிலாவை பார்க்க, “ஜஸ்ட் ஃபார் ஃபன் தானே கேர்ள். வேணாம்னா வேணாம்னு சொல்லிடு” என்று கூற, “நீ சொன்ன மாதிரி ஃபன் தானே..” என்றவள் எழுந்து கொண்டதும் கூட்டம் ஆர்ப்பரித்தது! 

 

மெதுவான நடையுடன் அவள் மேடையின் படிகளில் ஏற, “மக்களே..Give a big applause for சினேக் பாபு மேடம்..” என்றவன், அவள் மேடையேறி வந்ததும், “ப்ரொபோஸ் பண்றதுக்கு இதே மாதிரி சினேக் பாபு மேடம் ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னா நல்லா இருக்காது. சோ, மே ஐ க்னோ யுவர் குட் நேம் ப்ளீஸ்..” என்று கேட்டான் அகநேயன். 

 

“இனியவர்ஷினி” என்றவள் கூறியதும் “வாவ்…… வாட் அ ஸ்வீட் நேம். இந்தப் பேருக்காகவே உங்களுக்கு ப்ரொபோஸல் வந்திருக்கணும் மேடம்!” என்றவன், “டோண்ட் வொர்ரி இனியவர்ஷினி. நான் பண்றேன்” என அங்கிருந்த உதவியாளரிடம் “ஒரு ரோஸ் ஏற்பாடு பண்ணுங்க” என்றதும், இப்போது ரோஜா பூவிற்கு எங்கே செல்வது என்பது போல் அவர்கள் விழித்தனர். 

 

“ஏங்க ரோஸ்னா நிஜ ரோஸ் தானா… வேற ஏதாவது பண்ணுங்க” என்றவன், அவரை அருகே வரச் சொல்லி அவர் சட்டைப் பாக்கெட்டில் இருந்த பேனாவை உருவி நான்கைந்து காகிதங்களை எடுத்து வரப் பணித்து, அந்த காகிதங்களை கசக்கி பந்தாக மாற்றி பேனாவின் முனையில் குத்தி ஒரு இன்ஸ்டன்ட்’ பேனா ரோஜாவினை தயார் செய்திருந்தான். 

 

அதை மக்கள் கூட்டத்திடம் வேறு உயர்த்திக் காட்டி “எப்பிடிங்க இருக்கு.. My pen rose?” என்று கேட்டதும், எல்லோரும் சிரிக்க, எங்கிருந்தோ ஒரு ஜீவராசி “கேவலமா இருக்கு” என்றதும், “கேவலமா இருந்தா இருந்துட்டு போகுது மேன். நடிப்புக்கு இது போதும்” என்றவன், 

“இனியா.. ஆர் யூ ஓகே வித் திஸ் ரோஸ்..” என அவளிடம் கேட்டான். 

 

பொங்கி வந்த சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டு மையமாக தலையசைத்து வைத்தாள் இனியவர்ஷினி. 

 

“ஓகே.. ஆக்ஷன்..” என்றவன், இனியவர்ஷினியின் முன்பு, அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டுடன் கடினப்பட்டு முழங்காலிட்டு அமர்ந்தான். 

 

“இனியா….” என்றவன் ஆரம்பித்த மறுநொடியே அவனாகவே மீண்டும் எழுந்து “அய்யயோ…….” என்று தலையில் கை வைத்தபடி நின்று விட, 

“என்னாச்சு..” என்று கூட்டம் சலசலத்தது. 

 

மீண்டும் ஒரு ஜீவராசி “முட்டி போட்டதுல ஜீன்ஸ் கிழஞ்சிடுச்சா ப்ரோ???” என்று கேட்டு வைக்க, “எனக்கும் அந்த டவுட் இருக்கு மேன்” என்ற அகன் தன்னை சரி பார்த்துக் கொள்ள ஆரம்பித்ததும் எல்லோரும் குபீரென்று விழுந்து விழுந்து சிரித்தனர். 

 

மேடையில் நின்ற இனியவர்ஷினிக்கோ சிரிப்பு ஒரு புறம்! அவன் ஏன் திடீரென்று எழுந்து நின்று விட்டான் எனும் யோசனை மறு புறம்! 

 

“நல்ல வேள.. கிழியல”” என்ற அகன், “ஒரு விஷயத்தை மறந்தே போயிட்டேன்” என்றான் நெற்றியில் அறைந்து கொண்டான். 

 

எல்லோரும் என்ன.. என்ன.. எனக் கேட்க, “இந்த ப்ரொபோஸ் சீன்லாம் ரோஸ் கொடுத்து சொல்லனும்னு பயங்கரமா யோசிச்ச எனக்கு… எங்க அம்மாவும் இங்க தான் இருக்காங்கன்னு மறந்து போச்சு பாருங்களேன்..” என அகநேயன் கூறியதும் எல்லோரும் “ஹோ…..” வென ஆர்ப்பரிக்க, இனியவர்ஷினி அதிர்வில் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். 

 

அன்னையின் முன்பே முன் பின் தெரியாத ஓர் பெண்ணிடம் காதல் சொல்லும் அளவிற்கு துணிந்து விட்டானா? 

 

நடிப்பு தான்!

‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ தான்! 

 

ஆனாலும்… 

 

இனியவர்ஷினியை சட்டென்று ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொண்டது. 

 

விளையாட்டுக்காக, நடிப்பிற்காக தான் என்றாலும் அவன் அழைத்ததும் தான் எழுந்து வந்தது அதிகப்படியோ என்று நொடியில் ‘ஓவர்திங்க்’ செய்யத் தொடங்கி விட்டாள் இனியவர்ஷினி.

 

மெல்லிய படபடப்புடன் அவள் அகநேயனை ஏறிட, “அட நீங்க ஏங்க இவ்ளோ பயப்படுறீங்க. பயப்பட வேண்டியது நானுங்க” என்றதும் எல்லோரும் சிரிக்க, “மை டியர் அம்மா…” என்று அகநேயன் கீழே வலது பக்கமாக இருந்த இருக்கைப் பகுதியில் பார்வையை செலுத்தினான். 

 

அங்கே நான்காவது வரிசையில் கீதாராணி அஞ்சலிஶ்ரீயுடன் அமர்ந்திருந்தார். அதுவும் சிரிப்புடன் மகனை முறைத்துக் கொண்டு! 

 

உதவியாளர் வேக வேகமாக இறங்கி அவரிடம் மைக்கினை கொண்டு போய் நீட்டி விட, “டேய்… நான் சொன்னேனா எங்கம்மா கிட்ட மைக் கொடுக்க சொல்லி? சொல்றதை எல்லாம் செஞ்சிடாத. சொல்லாததை எல்லாம் செய்!” என்றதும் மீண்டும் மெல்லிய சிரிப்பலை அங்கே! 

 

“மாட்டி விடுறதுல என்ன ஒரு ஆனந்தம்?” என்ற அகன், தாயைப் பார்க்க, மைக்கை உயர்த்திய கீதாராணி “ரியல் லைஃப்ல இப்படி கஷ்டப் பட்டு முட்டி போட்டு யாருக்காவது ப்ரொபோஸ் பண்ணி வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வருவேன்னு பார்த்தா… நீ ஷோ’க்காக ஆக்ஷன் பண்ணிட்டு இருக்கியேடா அகா!” என்றதும் கூட்டம் “ஹே”வெனும் ஆர்ப்பரிப்புடன் கை தட்டத் துவங்கியது. 

 

கூட்டத்தில் ஒரு வாலிபன் “எனக்கெல்லாம் இப்படி ஒரு அம்மா இல்லாம போச்சே. இருந்திருந்தா நானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்” என்றான் அருகே இருந்த மனைவியை பார்த்து கவலையுடன். அவனது மனைவி அவனை ஏகத்திற்கும் முறைக்க, எல்லோரும் சிரித்து விட்டனர். 

 

அன்னையின் பேச்சில் அகநேயன் அதிர்ந்துதான் போனான். 

 

தற்காலிகமாக அந்த நகைச்சுவை சூழலை மறந்து போனவன், கீதாராணியின் மகனாக மட்டுமே தன்னை நிலை நிறுத்தி அந்த கேள்வியை கிரகித்து அன்னையை ஆச்சரியமாகப் பார்த்தான். 

 

இதுவரையிலும் மகனது திருமண விஷயம் குறித்தெல்லாம் கீதாராணி எதுவுமே பேசியதில்லை. இன்னும் மூன்று மாதங்களில் முப்பது வயதை தொடவிருந்தவனுக்கு காதலோ, திருமணமோ எதிலுமே நாட்டமில்லை! 

 

தற்போதைக்கு அவனது கவனம் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியின் மீதும் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய புதுத் தொழிலின் மீதும் தான் சிக்குண்டு கிடக்கிறது. 

 

அன்னை திடீரென்று எல்லோர் முன்பும் அவரது மனதை வெளியிட்டதும், அவரது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டவன், தன்னை சமன் படுத்திக் கொண்டு மைக்கினை உயர்த்தி சிரிப்புடன் அன்னையை பார்த்து பேசத் தொடங்கினான். 

 

“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க!!! நமக்கு இந்த ப்ரொபோஸல் எல்லாம் இதோ இந்த மாதிரி ஆக்ஷனோட முடிச்சுக்கணும். ரியல் லைஃப்ல நீங்க பார்த்து கட்டி வைக்கிற பொண்ணுதான் எனக்கு பொண்டாட்டி” என்றான் கர்வமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு! 

 

“நான் எப்போடா உனக்கு பொண்ணு பாக்குறதா சொன்னேன்?” என்று கீதாராணி மகனை வார, கொல்லென்று சிரித்தனர் அனைவரும். 

 

“அம்மா…” என்று அகன் பாவமாக அழைக்க, “உன்னால காதலிச்சு உனக்கொரு வாழ்க்கைத் துணையை கூட தேடிக்க முடியாதா? உனக்கேத்த மாதிரி ஒரு பொண்ண உன்னால தானடா பார்க்க முடியும்” கீதாராணி கூறியதும் கூட்டம் கூச்சலிட்டது.

 

“சீக்கிரம் உனக்கேத்த பொண்ணா பாத்து லவ் பண்ணுடா. அப்போதான நீயும் மிங்கிள் ஆகி, இதோ இங்க இருக்கவங்க மாதிரி

ஜிங்கிலாக முடியும்” என்றார் கீதாராணி புன்னகையுடன். 

 

அகனோ அன்னையை பார்த்து “மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா.. ஆனா, டாவடிச்ச பொண்ண கட்டினா டவுசர் அவுறும்டானு சும்மாவாம்மா லிரிக்ஸ் எழுதுறாங்க” என்று பாட்டாகவே பாடி கூறியதும் கூட்டம் மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது. 

 

கீதாராணி மகனை முறைக்க “ஓகேம்மா. ஐ திங்க்.. இதை நாம வீட்ல போய் டிஸ்கஸ் பண்ணுவோம். இப்ப.. வித் யுவர் பெர்மிஷன் நான் இனியவர்ஷினிக்கு ப்ரொபோஸ் பண்ணலாமா? ஒன்லி ஆக்ஷன் தான்மா. நோ ரியல்!” மகன் கேட்ட தோரணையில் மற்றதை விடுத்து சிரிப்புடன் ஆமோதிப்பாக தலையசைத்தார் கீதாராணி. 

 

மீண்டும் இனியவர்ஷினி முன்பு மண்டியிட்டு அமர்ந்து பேனா ரோஜாவினை அவள் முன்பு நீட்டி விளையாட்டை கை விட்டவனாக மென்மையான, தீவிரமான முக மெய்ப்பாடுடன் பேசத் தொடங்கினான் அகநேயன்! 

 

“இனியா… ஐயம் அகன். அகநேயன் கிருபாகரன்! இன்னும் மூணு மாசத்துக்குள்ள என்னோட தர்ட்டீஸ்’குள்ள என்ட்ரி ஆகிடுவேன். ஆனா, இந்த இருபத்தி ஒன்பது வருஷமா உன்னை மாதிரி ஒரு ப்யூர் ஹார்ட்டட் பெர்சனை நான் மீட் பண்ணவே இல்ல. அந்த ப்யூர் ஹார்ட்ல நான் மட்டும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். லெட்ஸ் லவ் எண்ட்லெஸ்லி இனியா.. ஐ லவ் யூ…” 

 

முழங்காலிட்டிருந்தவன் தன் முகத்தை உயர்த்தி அவளின் முகத்தை பார்த்தபடி கண்கள் சிரிக்க, முகம் விகசிக்க, மென்மையான புன்னகையுடன் ஒரு பக்கமாக தலை சாய்த்து தத்ரூபமாக காதல் சொல்லிய விதமும், சொல்லிய வார்த்தைகளும் இனியவர்ஷினியை ஓர் நொடி இன்பத்தில் ஆழ்த்தி தன்னிலை இழக்கச் செய்திருந்தது! 

 

அகநேயன் நேசம் சொல்லிய அழகில் வந்திருந்த மக்கள் மெய்யாகவே ஆர்ப்பரிக்க, கீதாராணி கூட மகனையே விழி விரிய பார்த்திருந்தார்.

 

அண்ணனின் அவதாரத்தை கண்ட அஞ்சலியோ “ம்மா… அண்ணா பெர்ஃபார்ம் பண்ற மாதிரியே இல்லமா. நிஜமா உருகி லவ் சொல்ற மாதிரி அவ்வளோ ரியலா நடிக்கிறான்” என்றாள் சிரிப்புடன். 

 

இனியவர்ஷினியோ தன் வசத்தில் இல்லை! அவளது கைகள் தாமாக நீண்டு அகநேயன் நீட்டிய போலி ரோஜாவினை வாங்கிக் கொள்ள, இதழ்கள் அவளையும் அறியாமல் “எஸ்!!!” என்று முணுமுணுத்திருந்தது. 

 

நடிப்பின் நிழலில் உணர்வுகளின் மாயை கட்டுண்டு கிடக்க, நிழலை நிஜமாக்கும் சாத்தியங்கள் காலத்தின் கைகளில் கொட்டிக் கிடந்தன! 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!