Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேயனின் நேசமினிது

நேயனின் நேசமினிது..6

இனிய நேசம் – 6

“பதில் சொல்லுடி.. அப்படி எதுவும் இருக்கா? அதை எங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமதான் இப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்காம பிடிவாதம் பிடிக்கிறியா? அந்தப் பையன் வீட்ல ஒத்துக்கலயா? பையன் யாருன்னு சொல்லு! நம்ம இளாவை விசாரிக்க சொல்லலாம். நல்ல பையனா இருந்தா போதும். அவனுக்கே கூட உன்னை கட்டி வச்சிடுறோம். எங்களுக்கு நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்” என்று சந்திரா அவரது எண்ணத்திற்கேற்ப கேள்விகளாக கேட்டு வைக்க, இனியவர்ஷினிக்கு தலை வெடித்து விடும் போலானது!



Advertisement

“அம்மா..” என பல்லைக் கடித்தவள் “அநியாயத்துக்கு உன் கற்பனை குதிரையை ஓட விடாதமா” என்று கத்தினாள்.

அன்னையிடம் கத்தினாலும் உள்ளத்தில் அகநேயனின் முகம் மின்னி மறைந்ததை எண்ணி அவளுக்கே விசித்திரமாகவும், திகைப்பாகவும் இருந்தது.

Advertisement

Advertisement

இன்று மாலை அவனது நிகழ்ச்சியில் காதல் விஷயத்தைப் பற்றி அவன் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதில் முற்றிலும் உண்மையே!

அப்படி இருக்கும் போது அன்னை தன்னிடம், யாரையாவது விரும்புகிறியா? என்று கேட்டது தொடர்ந்து அடுத்தடுத்து கேட்ட கேள்விகளில் அவளுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

Advertisement

மகளிடம் தென்பட்ட கோபம் அப்படி எல்லாம் எதுவுமில்லை என்று உணர்த்தினாலும் சந்திராவிற்கு மனமே இல்லை!

ஏன் மகள் இவ்வளவு பிடிவாதமாக திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் என்று நொந்து போனார்.

“அப்புறம் என்னதான்டி உன் பிரச்சனை?”

சட்டென்று இனியவர்ஷினி மௌனமாகிப் போனாள். மகளின் மௌனம் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தினாலும் சந்திராவால் அக்கோபத்தை காட்ட இயலவில்லை. மிகவும் சோர்ந்து போனார்.

அவரும் அமைதியாக மகளை பார்த்துக் கொண்டு நிற்க, திடீரென்று பட்பட்டென்று கதவு தட்டப்படும் சப்தத்தில், உடல் தூக்கி வாரிப் போட்டது இனியவர்ஷினிக்கு.

அனிச்சை செயலாக இரு கரங்களாலும் காதுகளை மூடிக் கொண்டவள் பின்னெட்டுக்கள் வைத்து சுவரில் மோதி நிற்க, மகளின் அதிர்வை வினோதமாக பார்த்த சந்திரா “உன் அண்ணனா தான்டி இருக்கும். எதுக்கு இப்படி காதை மூடி, சுவத்துல போய் மோதிட்டு நிக்கிற!” என்றபடி கதவினை நோக்கி நகர்ந்தார்.

சந்திரா கதவினைத் திறக்க, வாசலில் இளமாறன் நின்றிருந்தான்.

அண்ணனைக் கண்டதும்தான் இனியா இழுத்துப் பிடித்திருந்த மூச்சினை ஆசுவாசத்துடன் வெளியேற்றினாள்.

“இன்னைக்கு ரொம்ப நேரமாகிடிச்சா இளா..? போய் குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அடுக்களைக்குள் நகர்ந்தார் சந்திரா.

வீட்டிற்குள் வந்த இளமாறன் தங்கை சுவரோடு ஒன்றியபடி வெளிறிய முகத்துடன் நிற்பதை கண்டு புருவம் சுருக்கி, பின் எதனால் அப்படி நிற்கிறாள் என்று புரிந்ததும் தன் நெற்றியில் பலமாக அறைந்து கொண்டான்.

அவள் முகத்தின் ஆங்காங்கே தென்பட்ட வியர்வைத் துளிகள் அவள் பயந்த அளவினைக் கூற, வேகமாக ஆஃபிஸ் பேகினை சோஃபாவில் கழற்றி போட்டவன், அதை விட வேகமாக தங்கையை நெருங்கி அவள் முகத்தினை துடைத்து விட்டு “வர்ஷாம்மா.. சாரிடா. அது..

காலிங் பெல் வேலை செய்யல. அதான் கதவை தட்டிட்டேன். சாரிடா. பயந்துட்டயா?” பதகளிப்புடன் விசாரித்தவனின் குரலில் அளவு கடந்த அன்பும் அக்கறையும் தென்பட, இனியவர்ஷினியின் கண்களில் கண்ணீர்.

“ஒன்னுமில்ல ண்ணா. சட்டுன்னு க..தவு.. தட்டுற சத்தம் கேட்டதும்.. ஒரு மாதிரி..” என்றவள் முடிக்காமல் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

முகம் கசங்க தங்கையின் முகம் பார்த்தவனின் நெஞ்சில் ரத்தமே வடியும் போலிருந்தது. திருமண விஷயம் குறித்து இந்த ஒரு வாரமாக அவள் மேல் ஏற்பட்ட வருத்தம் கூட மாயமாக மறைந்துவிட அரவணைப்புடன் தங்கையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

வர்ஷினிக்கும் பழைய ஞாபகங்களில் மேலும் கண்ணீர் பெருக, அண்ணனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

இரவு நேரத்தில் வெளியுலகம் அமைதியாகி இருக்க, அவளது அக உலகில் மட்டும் அடக்க முடியாத பேரிரைச்சல்!

செவிகளில் இடியின் முழங்கங்களும், பலமான மழையின் சத்தமும் கேட்பது போலிருக்க, இன்னும் அண்ணனின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் பெண்.

இடி மழையின் சப்தத்தோடு அவளது தந்தையின் போதைக் குரலும் அகத்தில் உலா போனது.

“ஏய்… சந்….ரா… வந்..து கத..வெத் தொ..ற..டி.. அடியே.. வா..டி..! உ..ள்ள எ..ன்ன எழவ..டி ப..ண்..ற..” நாராசமாக கேட்ட தந்தையின் குரலும், அவர் கேட்ட அனர்த்தனமான கேள்விகளையும் நினைக்க நினைக்க இன்றளவும் இனியவர்ஷினியின் அகக்கரை பற்றி எரிந்தது!

அதற்கடுத்த நிகழ்வுகளை நினைத்துக் கூட பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடிக் கொண்டவளின் உடல் மெல்ல நடுங்கியது.

தங்கையின் பயத்தை துயரத்துடன் பார்த்தவன் அவளின் தலையை வருடிக் கொடுத்து “ஒன்னுமில்ல வர்ஷா! அண்ணா இருக்கேன் தானே. ஏன் பயப்படுற” என்று ஆதூரமாக கேட்டவன், அடுக்களையில் அன்னை பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்கவும்,

“அம்மா வந்திடப் போறாங்கடா வர்ஷா. கண்ணைத் துடை! போய் முகம் கழுவிட்டு வா. நானும் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று கூறியதும் தான் அன்னையின் நினைவே வந்தது அவளுக்கு.

சட்டென்று அவன் தோளில் இருந்து முகத்தினை நிமிர்த்தியவள், கண்கள் அலைபாய அண்ணனைப் பார்த்தாள்.

“அம்மா பாக்கல. சீக்கிரம் போ” என்றவன், அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு “அண்ணா எப்பவும் கூடவேதான் இருப்பேன் வர்ஷா. பயப்படக் கூடாது” என்றவன் குரலில் மெல்லிய அழுத்தம் வெளிப்பட்டது.

அந்த அழுத்தத்தில் ‘இத்தனை ஆண்டுகள் ஓடிய பின்னும், இந்த விஷயத்திற்காக உன்னிடம் தென்படும் இந்த பயம் நல்லதிற்கல்ல’ என்பதை உணர்த்த, கசப்பான மௌனத்தைடன் தலை தாழ்த்தினாள் இனியவர்ஷினி.

தங்கையை அப்படிப் பார்க்க முடியாதவனாக “சரி. நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா. சாப்பிட்டதும் நாம பேசலாம்” என்றதும், “நான் சாப்பிட்டேன் ண்ணா. நீ குளிச்சிட்டு வந்து சாப்பிடு” என்றதும் பெரு மூச்சுடன் இளமாறன் தனதறைக்கு செல்ல, வர்ஷினியும் முகம் கழுவி வந்தாள்.

உண்ணும் நேரம் சந்திராவின் புலம்பல்களும், தொலைக்காட்சியில் ‘இசையருவி’ சேனலில் ஒலி எழுப்பிய இளையராஜாவின் பாடல்களின் சத்தமும் ஒருங்கே ஒலித்தது.

“உள் மனசுல ஆயிரம் பாரம்…

அது பாட்டுல ஓடிடும் தூரம்…

இது யாருக்கும் புரியாது…” என்று இளையராஜா பாடிக் கொண்டிருக்க, “இவ ஏன் டா இளா இப்படி பிடிவாதமா இருக்கா?” என சந்திரா புலம்பலைத் தொடர்ந்திருந்தார்.

“ஒன்னில்லாம ரெண்டும் இல்லே…

ஆணில்லாம பெண்ணும் இல்லே…

பெண்ணில்லாம யாரும் இல்லே…

துன்பம் இல்லா பேரும் இல்லே…” இளையராஜாவின் குரலில் பாடல் தொடர,

“எனக்கு எங்க இவ இப்படியே கல்யாணம் பண்ணிக்காம தனியா இருந்திடுவாளோன்னு பயமா இருக்குடா..” சந்திரா புலம்புவதை நிறுத்தாமல்,

“நீ எப்படியாவது பேசி இவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைடா இளா..” சோகமாக மகனிடம் கூற, அன்னையின் பேச்சை தாங்க முடியாமல், பாட்டின் அளவை அதிகரித்தாள் இனியவர்ஷினி.

“வாசலில்லா வீடும்.. 

ஒரு தாளமில்லா கூத்தும்..

தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்….!!” என்று ஹை பிட்ச்சில் இளையராஜா பாட, சந்திரா மகளை முறைத்தார்.

“பேசிட்டு இருக்கேன்ல. முதல்ல பாட்டை ஆஃப் பண்ணுடி..!”

இனியவர்ஷினி காது கேளாதவள் போல் அமர்ந்திருந்தாள்.

“நீங்க போய் படுங்கம்மா. நான் வர்ஷா கிட்ட பேசிக்கிறேன்” என்று இளமாறன் கூறியதும், சந்திரா அடுத்துப் பேசாமல் அமைதியாக எழுந்து அறைக்குள் சென்று விட்டார்.

உண்ட தட்டினை கழுவி வைத்து விட்டு, இதர பாத்திரங்களையும் கழுவி வைத்ததும் தங்கையுடன் மொட்டை மாடிக்கு வந்தான் இளமாறன்.

இரவு நேர ஈரக் காற்று மேனி தழுவிச் செல்ல, அண்ணனும் தங்கையும் அங்கிருந்த நீண்ட கல் திண்டில் அமர்ந்தனர்.

“சொல்லு வர்ஷா! அண்ணா இப்ப பொறுமையா கேக்குறேன். ஏன் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்..” என்று நிதானமாக கேள்வியைத் தொடங்கினான் இளமாறன்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த இனியவர்ஷினி, அடுத்த நொடி, பதிலாகக் கேட்ட ஒவ்வொரு எதிர் கேள்வியும், இளமாறனின் இதயத்தில் பாரமேற்றி இருந்தன!

**********************

அகநேயனுக்கு கொஞ்சம் மது வாசம் உண்டு! தினம் குடிக்கும் பழக்கம் உடையவன் அல்ல! அதே சமயம் குடித்தான் என்றால் தினசரி குடித்து விட்டு அராஜகம் செய்யும் குடிமகன்களின் ரகமுமல்ல!

அவன் ஒரு Social Drinker! (சமூக நிகழ்வுகளில் மட்டுமே மது அருந்துபவர். குறிப்பிட்ட நிகழ்வுகள், ஒன்று கூடுதல் அல்லது தவிர்க்க முடியாத கொண்டாட்டத்தின் போது அவர்கள் மது அருந்தக்கூடும்.)

இந்தப் பழக்கம் அவனது நட்பு வட்டம் விரிவடைந்த பின்னால் ஏற்பட்ட ஒன்று! தவிர்க்க முடியாத பட்சத்தில் பழகிய ஒன்று! அதுவும் இரண்டே இரண்டு கோப்பை மது குடிக்கும் பழக்கம் கொண்டவன்!

கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அவனுக்கு இப்பழக்கம் இருக்கிறது.

மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை, கண்டிப்பாக ஏதாவது ஒரு பார்ட்டி, செலிப்ரேஷன், கெட் டுகெதெர், வலையொளி நண்பர்களின் ஒன்று கூடல் என ஒரு கூட்டத்தை கூட்டி அழைப்பை விடுத்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் முற்றிலும் மறுத்து வந்தவன், ஒரு கட்டத்தில் மறுக்க முடியாத நிலமைக்கு வந்து நின்றான்.

வருடங்கள் செல்லச் செல்ல, அவனது வலையொளி நட்பு வட்டாரமும் பெருகி இருக்க, இவனால் இது போன்ற சமூக நிகழ்வுகளையும், பார்ட்டிகளையும் தவிர்க்க முடியாமல் போனது. அதனுடன் மது அருந்துவதையும்!

இரண்டு ஆண்டுகளாக எப்படியோ இதனை அன்னையிடமிருந்தும் தங்கையிடமிருந்தும் ரகசியமாக காத்து வருகிறான்.

அன்னைக்கு மட்டும் அவனின் மதுப்பழக்கம் தெரிந்தால் அவனது கன்னம் வீங்கி செவுள் கிழிவது உறுதி!

இன்று வரை இப்பழக்கத்தை ரகசியமாக காத்து வருவதற்கு பெரிதும் உதவுவது இரண்டாண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் அவன் வாங்கி இருந்த மற்றொரு ஃப்ளாட் வீடு!

அவ்வீடு அவனது சொந்த வருமானத்தில் வாங்கியது. தனியாக ஃப்ளாட் வீடு வாங்கி விட்டாலும், அகநேயன் நிரந்தரமாக அங்கே தங்குவதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அவனது தந்தை பல்லாவரத்தில் வாங்கிய வீட்டில்தான் அன்னை தங்கையுடன் வசிப்பான்.

புது ஃப்ளாட் வாங்கிய சமயம் “நாம அண்ணாவோட புது வீட்டுக்கே குடி வந்தரலாமா அம்மா?” என்று அஞ்சலிஶ்ரீ கேட்டதற்கு,

“இல்ல ஸ்ரீ. வேண்டாம். என்னதான் உங்க அண்ணன் புது வீடு வாங்கி இருந்தாலும், இது உங்க அப்பாவும் நானும் ஒன்னா வாழ்ந்த வீடு. உங்க தாத்தா பாட்டிங்க கூட இங்கதான் கடைசி காலம் வரைக்கும் இருந்தாங்க. அதனால எனக்கு இந்த வீட்டை விட்டு வர இஷ்டமில்ல. அகன் தனியா வீடு வாங்கிட்டான்தான். அதுக்காக, அவனும் நம்மள விட்டு போக வேண்டாம்” என்றவர்,

மகனிடம் “உனக்கு கல்யாணம் ஆன பின்ன இந்த வீட்டுக்கு வந்திடுவியாம். அது வரைக்கும், தனியா போய் தங்குறதுக்கான அவசியம் வராத வரைக்கும் எங்க கூடவே இரு அகா” என்று மனதிலுள்ளதை மறையாமல் கூறி இருந்தார் கீதாராணி.

அகநேயனுக்கும் புது வீட்டில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணம் இல்லைதான். அன்னை சொன்ன பின்பு இன்னும் அந்த எண்ணத்தை ஸ்திரமாக்கிக் கொண்டான்.

ஆனால்.. தனிமை வேண்டும் பொழுதுகளில், அவனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சியின் ‘Scripted Show’விற்கு ஸ்கிரிப்ட் எழுதும் பொழுதுகளில், வெளியூர் மற்றும் வெளி நாடுகள் சென்று தாமதமாக வரும் பொழுதுகளில், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் பொழுதுகளில், வெளியே பார்ட்டி என கொண்டாடி விட்டு வரும் பொழுதுகளில் என இப்படி சில குறிப்பிட்ட பொழுதுகளில் மட்டும் அவனது வீட்டில் சென்று தஞ்சமடைந்து விடுவான்.

கீதாராணியும் மகனின் அலுவல்களை புரிந்து கொண்டு அவன் தனியே சென்று தங்கும் நேரங்களில் பெரிதாக எதுவும் கேட்டுக் கொண்டதில்லை.

ஆனால், மகன் குடித்தான் என்றால் இரவு முழுவதும் அங்கேயே உறங்கி எழுந்த பின்னர்தான், தங்கள் வீட்டிற்கு வருவான் என்று இந்த நொடி வரை அவருக்கு தெரியாது!

கீதாராணியின் மனதில் நம்பிக்கையின் அஸ்திவாரம், சந்தேகம் எனும் மேற்கூரையை எழும்பச் செய்திருக்கவில்லை!

ஆயினும்.. அன்னைக்குத் தெரிய வரும் போது..?

பெருமூச்சுடன் ஜன்னல் புறம் பார்வையை திருப்பிக் கொண்டவன், ‘இதை அவாய்ட் பண்ணவும் முடியல. அதே சமயம் முழுசா ஏத்துக்கவும் முடியல. முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, செலிப்ரேஷன் இதை எல்லாம் அவாய்ட் பண்ணனும். அம்மாவுக்குத் தெரிய வந்தா ரொம்ப கஷ்டப்படுவாங்க.’ என்று நிச்சயமற்ற ஒரு முடிவினை எடுத்துக் கொண்டான் அகநேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!