Skip to content
Post Views: 2,616
கல்யாணம் நன்றாகவே நடந்தது, எந்த ஒரு குறையும் இல்லாமல்!
யார் குறை சொல்ல முடியும்? அது தான் ஓடும்பிள்ளை ராஜு இருக்கிறானே!
மண்டபத்தில் வைத்துக் கூட திடீர் திடீரென்று ப்ரியாவின் நாத்தனார், மணமகனின் அம்மா, அது எங்க பழக்கம், இது எங்க பக்க சாங்கியம், சம்பிரதாயம் என்று கேட்பதை எல்லாம், சொல்லுவதை எல்லாம் செய்வதற்கும் செலவழிப்பதற்கும் ஒரு இளிச்சவாயன் இருக்கும் போது யாருக்கு என்ன கவலை!
ஆனால் ராஜுவுக்கு தான், தன் அம்மா இல்லாதது ஒரே குறையாக இருந்தது.
Advertisement
ஆனால் அவனைத் தவிர அவன் அண்ணன் அக்கா உட்பட யாருமே அவரைப் பற்றி கேட்க கூட இல்லை!
வழக்கமாக இந்த மாதிரி கல்யாணத்தில் வம்பு பேசும் சில உறவுப் பெண்கள் கூட, ப்ரியாவின் வாயிற்கு பயந்து வாயைத் திறக்கவில்லை!
இல்லையென்றால், இன்னும் பொண்ணோட தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான், அதுக்குள்ள மருமகளுக்கு கல்யாணம் என்றோ, அப்படி என்ன பேத்தி கல்யாணத்துல கூட கலந்துக்காம டூர் வேண்டிக் கிடக்கு இந்த கமலாவுக்கு என்றோ வம்பு பேசாமல் இருப்பார்களா?
Advertisement
ஆனால் ஒருத்தர் கூட கமலா எப்படி இருக்கிறார் என்றோ, இல்லை ஏன் வரவில்லை என்றோ கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கூடவே கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது!
Advertisement
அதுவும் எல்லோரும் குடும்பம் குடும்பமாக நின்று மணமக்களோடு போட்டோ எடுத்துக் கொள்ளும் போது ராஜு மட்டும் தனியே நின்றான்!
முதலில் ப்ரியா, வேல்முருகன், சின்னவள் சினேகா ஒரு குடும்பமாக, அப்புறம் மணமகனின் பெற்றோர்,
அவனின் சகோதரி குடும்பம் அப்புறம் எல்லோருமே சேர்ந்து நின்று நடுவில் வேல்முருகன் பெற்றோர் மற்றும்
Advertisement
மணமகனின் தாத்தா பாட்டியுடன் சேர்ந்து நின்று பெரிய க்ரூப் போட்டோ,
அப்புறம் வனிதாவின் அப்பா அம்மா தங்கை தம்பி ஒரு குடும்பமாகவும் கடைசியாக வனிதா, யாழினியுடன் ராமு நிற்கும் போது, கூட அவர்களுடன் சேர்ந்து நின்ற ராஜுவை
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், அவங்க பேமிலியை முதலில் கவர் பண்ணி விடுகிறேன்” என்று போட்டோக்ராபர் சொல்ல, ராஜு அதிர்ந்தான்!
“இல்ல.. நானும்..” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன், ராமு ஒன்றுமே சொல்லாமல் கேமராவைப் பார்த்து புன்னகைத்து போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு இன்னமும் அதிர்ந்தான்!
அவன் மனம் அவன் அன்னையை மிகவும் தேடியது!
இதற்கு தான் அவன் அம்மா அத்தனை தூரம் அவன் கல்யாணத்திற்கு ஆசைப்பட்டார்.
இவன் இப்படி தனி மரமாக நின்று விடக் கூடாது என்பதற்காக!
கூடவே மகியின் நினைவும்! இந்நேரம் அவளுக்கும் தனக்கும் கல்யாணம் ஆகியிருந்தால், தானும் அவளோடு ஜோடியாக குடும்பமாக நின்று பேமிலி போட்டோ எடுத்து இருக்கலாம்!
அவன் மனம் தனிமையை உணர்ந்து வருத்தப்பட்டது!
அம்மா நீ ஏன்மா, இப்படி டூர்க்கு போனீங்க? நீங்க இருந்திருந்தா, நான் இப்படி தனியே நிற்க வேண்டியிருந்துருக்காதுல்ல?
அவன் மனம் அன்னைக்காக ஏங்கியது.
யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் தனியே ஒதுங்கி நின்றான்.
அதே போல அவனை சாப்பிடவும் ப்ரியா உட்பட யாருமே அழைக்க வில்லை!
மண மகனின் தாய் மாமன் என்று ராமுவிற்கு அவ்வளவு மரியாதை!
அந்த கல்யாண வீட்டில் மட்டுமில்லாமல், இரண்டு நாட்கள் முன்பு நடந்த ப்ரியாவின் இரண்டு பெண்களின் சடங்கிலும் கூட!
வீட்டுக்குப் பெரியவன் என்ற முறையில் எல்லாவற்றுக்கும் ராமுவே முன்னிலைப் படுத்தப்பட்டான், அவன் கையிலிருந்து ஒற்றை ரூபாய் கூட செலவழிக்காத நிலையிலும்!
ஒட்ட ஒட்ட காசு பணத்தைப் பறித்துக் கொண்டும், ராஜுவை யாரும் மதிக்கவே இல்லை!
அவர்களைப் பொறுத்தவரை அவன் ஒரு ஏடிஎம் மெசின் அவ்வளவே!
ஒரு வழியாக கல்யாணம் முடிந்து, அதன் பின் அவர்கள் வீட்டில் ஒரு நாள் விருந்தும் முடிந்து விட்டிருக்க,
ராஜு பொழுது போகாமல் அவன் வீட்டின் எதிரே எப்போதும் தன் அயர்ன் வண்டியை நிறுத்தி பல வருடங்களாக அயர்ன் செய்து வரும் ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டு இருக்கலாம் என்று அவரிடம் சென்றான்.
ஆறுமுகத்தின் மகன் சுந்தரும் ராஜுவும் பள்ளித் தோழர்கள்.
ஆறுமுகத்தை ராஜு ஆறுப்பா என்று தான் அழைப்பான்.
சுந்தர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து மேற்கொண்டு எஞ்சினியரிங்கும் படித்து ஒரு ஐடி வேலையில் அமர்ந்திருக்க, ராஜு பத்தாம் வகுப்பில் பெயிலானதால் அவன் கெரியர் மாறி விட்டிருந்தது.
ஆனால் அவனுக்கு சுந்தரை விட ஆறுமுகத்திடம் தான் நட்பு!
அவருடன் பேசிக் கொண்டிருப்பான் ஓய்வு நேரங்களில்.
அப்படி அவரிடம் கற்றுக் கொண்டது புடவை அயர்ன் பண்ண!
அவர், “கொஞ்சம் பார்த்துக்கப்பா” என்று சொல்லி தம்மடிக்க செல்வார். அப்போது அயர்ன் செய்ய கற்றுக் கொண்டான் ராஜு.
இதை கல்யாணம் ஆகி வந்த போதே தெரிந்து கொண்டு விட்டாள் வனிதா. எனவே அவன் வருகிறான் என்றாலே அயர்ன் பண்ண புடவைகளை சேர்த்து வைத்திருப்பாள்.
கூடவே அவள் வேலைக்கு செல்லும் போது உடுத்தும் புடவைகளையுமே அயர்ன் செய்து கொடுப்பான் ராஜு லீவில் ஊருக்கு வரும்போது கமலா அம்மா முறைப்பதையும் பொருட்படுத்தாமல்!
“வாப்பா. ராஜு.. என்ன கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று அவன் விசாரித்தார் ஆறுமுகம்.
“ம்ம். நல்லா நடந்துச்சுப்பா.. என்ன அம்மா இல்லாதது தான் ஒரு குறை!” என்றான் ராஜு!
இவனுக்கு நடந்தது எவ்வளவு தூரம் தெரியும் என்று தெரியவில்லையே!
இவன் பேசுவதைப் பார்த்தால், இங்கு நடந்தது எதுவும் தெரியாது போல என்று எண்ணிக் கொண்டவர்,
அவனிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தவர், தூரத்தில் இருந்து ஜன்னல் வழியே இவர்களைப் பார்த்து விட்ட வனிதாவைப் பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டார்.
“உன் கல்யாணம் நல்லபடி நடந்துருந்தா அவங்களுக்கும் இன்னமும் சந்தோசமா இருந்திருக்கும்! என்ன பண்ண?
நீங்க பார்த்துட்டு உறுதி பண்ணிருந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரியாமே!
உங்கம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அவங்க பட்டுப்புடவை எடுத்துட்டு வந்து தேச்சு எல்லாம் வாங்கிட்டு போனாங்க ஆசை ஆசையா!
இந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க , அவங்களோட புருஷன் மட்டும் போதும்,
அவனை சேர்ந்தவங்க எல்லாம், அவன் அம்மா அப்பாவை கூட வேண்டாம்னு நினைக்கிற காலத்துல உன் அம்மா மேலயும் பிரியமா இருக்கிற பொண்ணு ஒரு வரம்!
இதோ என்னோட வீட்டையே எடுத்துக்கோ. என்னை வீட்டில் சேர்க்க என் மருமகளுக்கு அவ்வளவு அவமானம்!
போங்கடான்னு நான் வெளியே வந்து, இதோ என் கையை கொண்டு பிழைச்சுக்கிட்டு இருக்கேன்!
ஆனா உங்க அம்மா உன் விசயத்துல நல்லா யோகக்காரின்னு நினைச்சு நான் கூட சந்தோசப்பட்டேன்!
ம்ம். எல்லாம் காலம் நேரம்! கூடி வந்தது தட்டிப் போய்டுச்சு!” அவர் பெருமூச்சு விட்டு வருத்தப்பட்டார் உளமாற!
அதற்குள், “ஏங்க ராஜு அந்த அயர்ன் வண்டிக்காரர்கிட்ட போய் பேசிட்டு இருக்கான்! அந்த ஆள் ஏதாச்சும் சொல்லி விட்டுடப் போறாரு!
அன்னிக்கு அவரும் தானே நம் வீட்டில் நடந்தத பார்த்துட்டு இருந்தாரு!” வனிதா சொல்ல, ராமு, ராஜுவை உள்ளே அழைத்துக் கொண்டான்.
..
அடுத்த நாள் ராஜுவிற்கு அரியமங்கலம் வரை ஒரு வேலை இருந்தது!
அவனுடன் வேலைப் பார்க்கும் ஒரு நண்பன் கொடுத்து விட்ட பார்சலை அவன் பெற்றோரிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டியிருந்தது.
போய் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு, விடைப் பெற்றான்.
“வா.. ராஜு உன்னை நான் பால் பண்ணை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுகிறேன்” என்று அவன் நண்பனின் தந்தை அவனை பழைய பால் பண்ணை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்று இருந்தார்.
அவன் பஸ்க்காக காத்திருந்த வேளையில் ஒரு ஸ்ப்லெண்டர் வண்டி அவனை கடந்து செல்ல, அது வசந்த்.
வனிதாவின் தம்பி.
அவன் ஓட்டிக் கொண்டு வந்தது ராஜு முதன் முதலில் வாங்கிய அவனின் பழைய பைக்!
“வீட்டில் சும்மா தானே இருக்கிறது என் தம்பி கிட்ட கொடுக்கட்டுமா? அவன் காலேஜ் போய் வர” என்று வனிதா கேட்டதால் அவன் எடுத்துக் கொள்ள சொன்ன வண்டி!
“வசந்த் தஞ்சாவூரில் படிக்கிறான்னு சொன்னீங்களே” என்றதற்கு,
“ஆமா.. பால் பண்ணை வரை வண்டியில போய்ட்டு, அங்கிருந்து தஞ்சாவூர் பஸ் ஏறி போய்க்குவான்” என்றும் சொல்லியிருந்தாள்.
வீட்டில் இருக்கும் புல்லட்டில் ராமு எங்கோ வெளியே சென்றிருக்க, கார் இருப்பதோ ப்ரியா வீட்டில்!
அதனால் ராஜு வரும் போது ஒரு பழைய நண்பன் ஒருவனின் ஆட்டோவில் வந்து விட்டான்!
இப்போது பஸ்சிற்கு நின்று அலுத்துப் போய் இருந்த சமயம் தான் வசந்த் வந்ததே!
“வசந்த்..” என்று கூவி அழைத்தான் ராஜு.
அந்த வசந்த் கொஞ்சம் திரும்பி பார்த்து விட்டு, ராஜுவை கண்டு விட்டும் காணாதது போல விரைந்து சென்று விட்டான்.
காரணம் அவனுக்காக அவனுடைய ஆள் ரோட்டிற்கு அந்த பக்கம் காத்திருந்ததால்!
ராஜுவும் அதிர்ச்சி!
அதற்குள் அவன் லிப்ட் கேட்டு கை காட்டியதால் ஒருவர் பைக்கை நிறுத்தி ஏற்றிக் கொண்டு போனார்.
போகும் வழியில் ராஜு வசந்த்தை ஒரு பெண்ணோடு கண்டு இன்னமும் அதிர்ச்சியாகி, வீட்டில் போய் வனிதாவிடம் சொல்லி கண்டிக்க சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் வீட்டிற்கு சென்றால், விஷயம் வேறு வடிவம் எடுத்து இருந்தது!
வசந்தை வழி மறித்து நண்பர்கள் முன்னிலையில் ராஜு பைக்கை கேட்டு அவமானப்படுத்தி விட்டதாக வனிதாவிடம் சொல்லியிருந்தான் அவள் அன்பு தம்பி.
அவன் ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டு இருப்பதை ராஜு பார்த்து விட்டதால் அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ராஜுவின் மேல் வீண் பழி சுமத்தியிருந்தான் அவன்!
தாம் தூமென்று கத்த ஆரம்பித்து விட்டாள்.
“படித்து இருந்தால் தானே நாகரிகம் தெரியும். படிச்சவங்க கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியும்” என்றும் பலவாறு சொல்லி சொல்லி கேவலமாக பேசிக் கொண்டே போக,
ஏற்கனவே அந்த வசந்த் பிளேட்டை மாற்றி போட்டு விட்டதில் கோபமாகி விட்ட ராஜுவும், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,
“அப்படி ரொம்ப டீசன்சி பார்க்கிறவங்களுக்கு, இந்த காட்டான் காசில வாங்கின பைக் எதுக்கு? கொண்டு வந்து விட சொல்லுங்க” என்று கத்தி விட்டான்!
“என்ன உன் வண்டியா? அது என் புருசன் வண்டி! என் தம்பி அவனோட மாமாவோட வண்டிய தானே ஓட்டிட்டு இருக்கான்! போய் வண்டியோட ஆர்சி புக்கை வாங்கிப் பாரு! வண்டி யாரு பேரில் இருக்குன்னு!”
சரியாக அப்போது பார்த்து காரை கொண்டு வந்து விட, வேல்முருகனும் ப்ரியாவும் வந்திருக்க,
“மாமா, வண்டிய உள்ளே நிறுத்த வேண்டாம், அப்படியே விடுங்க. நான் வெளியே போகணும்! எதுவா இருந்தாலும் அண்ணன் வரட்டும். நான் பேசிக்கறேன்!” என்றான் கோபமாக!
வேல்முருகனும் ப்ரியாவும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, “கார் மேல கைய வச்ச, நான் மனுசியா இருக்க மாட்டேன்! ஒழுங்கா காரை உள்ள விட்டுட்டு சாவிய கொடுங்க” என்றாள் வனிதா ஆங்காரமாக!
“அது என் பேர்ல இருக்கிற கார்! என் பேர்ல தான் லோன் ஈஎம்ஐ போயிட்டு இருக்கு!”
அடுத்த அம்பு!
ராஜு அதிர்ந்தான்.
அவள் பாங்கில் வேலை செய்வதால், ஈசி ப்ராசஸ் இருக்கும் என்று சொல்லி அவள் பெயரில் காரை எடுத்தது அப்போது தான் நினைவு வந்தது!
“ஏய்.. என்ன பேசுற? ராமு எங்க போனான், ஏங்க ராமுவுக்கு போன் பண்ணுங்க” என்று ப்ரியா கத்தினாள்.
வேல்முருகன் அவனுக்கு போன் பண்ண முயலும் போதே ராமு வெளியில் இருந்து வந்து விட்டான்.
“என்ன இங்க பிரச்சினை?” என்றதற்கு ராஜு நடந்ததை சொன்னான்!
ச்சே. பொம்பள புத்திய காண்பிச்சுட்டா.. அவசரப்பட்டு வாயை விட்டுட்டா!
இவ உத்தம தம்பிய ஒரு வார்த்தை சொன்னா தான் என்ன?
வாயை மூடிட்டு இருக்காம, இவளே வாக்கு மூலம் கொடுத்து இருக்கா!
நல்ல வேளையா நான் வந்திட்டேன்!
என்று மனதுள் நினைத்துக் கொண்டவன், கோபமாக,
“என்ன நடந்து இருந்தாலும், நான் வீட்டில் இல்லாத நேரம் நீ எப்படி என் தம்பிய பேசலாம்?
நான் வரும் வரை பொறுமையா தானே இருந்திருக்கணும்?” என்று கோபமாக சொல்லி வனிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
ராஜு அதிர்ந்து பார்க்க, ப்ரியா புரிந்து கொண்டு விட்டாள், அவன் நாடகத்தை!
வழக்கமாக அவளும் அவள் கணவனும் நடத்துவது தானே இது!
பஞ்சாயத்தைக் கலைப்பதற்கு தம்பி எடுத்துக் கொண்ட ஆயுதம் இந்த அறை என்று புரிந்து கொண்டவள்,
எத்தனை நாளுக்கு தான் இவங்களே இவன் கிட்ட எல்லாத்தையும் பிடுங்கி கிட்டு, நமக்கு கொஞ்சமா கிள்ளி மட்டும் கொடுப்பாங்க!
இவங்க கிட்ட இருந்து ராஜுவைப் பிரித்து நம் வீட்டுக்கு தள்ளிக் கொண்டு போய் விட வேண்டும்!
இனி அவன் சம்பாத்தியம் முழுவதுமே நமக்கு மட்டும் வரணும் என்று உள்ளுக்குள் வேக கணக்கு போட்டு விட்டாள்!
உடனே, “டேய்.. டேய்.. நடிக்காதீங்கடா, எங்க வனிதா கோபத்தில இன்னும் உங்க ரெண்டு பேர்ல வாங்கிப் போட்டுருக்க பிளாட் பத்தியெல்லாம் உளறி விடுவான்னு தானே நீ அவ வாயை அடக்க, அவளை இப்போ அடிக்கிற? எல்லாம் எனக்கு தெரியும்டா!”
“என்ன உனக்கு தெரியும்? சும்மா எரியிற வீட்டுல புடுங்கினது ஆதாயம்னு வராதே!” என்றான் ராமு.
“நான் ஒண்ணும் இல்லாதத சொல்லல! எங்க உனக்கு தைரியம் இருந்தா நீ இது வரை ராஜு சம்பாரிச்சு அனுப்பினதுக்கு கணக்கு காட்டுடா பார்க்கலாம்!
நான் சொல்லட்டா, நீ, உன் பேர்ல எங்க எங்க பிளாட் வாங்கிப் போட்டுருக்கன்னு!
இந்த வீட்டுல கூட ராஜு தன் உரிமையை உனக்கு விட்டுக் கொடுத்ததா விடுதலைப் பத்திரத்தில் கூட கையெழுத்து வாங்கி ரிஜிஸ்தர் பண்ணி வச்சுருக்கிறத?
டேய்..உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் எனக்கும் தெரியும்டா!”
“அக்கா.. நீ என்ன சொல்ற?” ராஜு அதிர்ந்து போய் கேட்க,
“ஆமாண்டா தம்பி.. நான் சொன்னது அத்தனையும் நிஜம்! எங்க யாழினி தலையி அடிச்சு சொல்ல சொல்லு பார்க்கலாம்?” என்றாள் ப்ரியா.
“ஆமா.. எல்லாமே எங்க பேர்ல தான் இருக்கு! இப்ப என்ன பண்ண போறீங்க?
உங்களால ஆனத பார்த்துக்கங்க” என்று கத்தி விட்டாள் வனிதா!
அவளுக்கு ராமு எல்லோர் முன்னிலையில் அடித்து விட்ட கோபம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சொல்லியே விட்டாள்!
நாம் இத்தனை நாளா செஞ்சு வைச்சிருந்த எல்லாத்தையும் இப்படி கலைச்சு விட்டு மண்ணை அள்ளிப் போட்டுட்டாளே என்று கடுப்பில் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்து இருந்தான் ராமு!
வனிதா ஒன்றும் கோபத்தில் உளற வில்லை!
அவளும் காரியமாக தான் சொன்னாள்.
அன்று காலை ராஜு விசாவை கேன்சல் பண்ணி விட்டு ஊரோடு வந்து விட்டதாக யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்டு விட்டாள்!
ஆம். ராஜு அப்படி தான் செய்து விட்டு வந்திருந்தான்.
முதன் முறையாக அவன் அண்ணனிடம் கேளாமல்!
ஒரு வேளை அண்ணன் கட்டாயம் போக வேண்டும் என்றே சொல்லி விட்டால் கூட மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்து விட்டே!
அவன் அம்மாவோடு அவங்க கடைசி காலத்தில் கழிக்க வேண்டும்.
கல்யாணம் பண்ணின பிறகு இங்கேயே ஒரு பிசினெஸ் ஆரம்பித்து செட்டிலாக வேண்டும் என்ற ப்ளானில் தான் வந்திருந்தான்!
மகியைப் பார்த்து பேச வேண்டும் என்ற பிளானிலும்!
இனி அவன் திரும்பி போய் சம்பாரித்துக் கொடுக்க போவதில்லை!
எப்படியும் அவன் அம்மாவைப் பற்றின விஷயம் தெரிய வரும்போது நடக்கப் போவது தானே! எப்போது நடந்தால் என்ன? என்ற நினைப்பில் தான் வாயை விட்டாள்!
“தம்பி… தம்பி… நீ ஒண்ணும் கவலைப் படாதேடா.. உன் அக்கா நான் இருக்கேன்.
என் அக்கா இன்னொரு அம்மா மாதிரின்னு சொல்வியேடா. அக்கா சொல்றேன். நான் இருக்கேன் உனக்கு!
நீ வாடா.. நம்ம வீட்டுக்கு.. வா..” அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டிருந்த ராஜுவை தோளோடு அணைத்து, வெளியே கூட்டி வந்தாள்.
“ஏங்க.. சொல்லுங்க.. நம்ம வீட்டுக்கு கூப்பிடுங்க.. முதல்ல போய் ஒரு ஆட்டோவை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி அவனை அவன் வீட்டுக்கு அழைத்து சென்றாள்.
இத்தனை நாட்கள் அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து பார்த்திருந்த அண்ணனின் சுயரூபம் கண்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றவனை எப்படியோ வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள் ப்ரியா.
அவனைப் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள்.
சாதம் பிசைந்து ஊட்டி தான் விடவில்லை!
அப்படி தாங்கினார்கள் புருசனும் பொண்டாட்டியும்!
ஆனால் அதுவும் ரொம்ப காலம் நீடிக்க வில்லை!
காரணம் வனிதாவின் வேல்முருகனிடம் பேசிய எகத்தாள போன் பேச்சு!
“உங்க வீட்டம்மாவுக்கு ரொம்ப புத்திசாலின்னு நெனப்பு இல்ல! ராஜு இனி உங்களுக்கு சம்பாரிச்சு அனுப்ப போறான்னு மனக்கோட்டை கட்டிக்கிட்டு இருக்கு!
ஆனா அவன் இனி துபாய் திரும்பி போகப் போறதில்லை! இங்கயே தான் இருக்க போறானாம்.
கையில் கொண்டு வந்த காசையும் அதையும் இதையும் சொல்லி கல்யாணத்தை சாக்கா வச்சு ஆல்ரெடி பிடுங்கி கிட்டீங்க!
இனி அவன் வேலைக்கு போய் சம்பாரிச்சா தான் உண்டு!
அவனுக்கு என்ன கலெக்டர் வேலையையா சீட்டை துடைச்சு ரெடியா வச்சுருக்காங்க?
அவன் படிச்ச படிப்புக்கு?
இனி நீங்க தான் அவனுக்கு தண்ட சோறு போட்டு வளர்த்து விடணும்! ஆல் த பெஸ்ட்” என்று கிண்டல் பண்ணியிருந்தாள்!
கேட்ட வேல்முருகனுக்கு ப்ரியாவின் மேல் ஆத்திரமாக வந்தது!
இப்போது அவளை நிஜமாகவே கோபப்பட்டு அடித்தே விட்டான்!
லூஸு சிறுக்கி! அவன் நல்லா சம்பாரிக்கும் போதெல்லாம் விட்டுட்டு, இப்ப சோத்துக்கு இல்லாத போது போய் கூட்டிட்டு வந்து வச்சுருக்கா! என்ற கடுப்பில் அறைந்து தள்ளி விட்டான் தனிமையில்!
பிரியாவுக்கும் அதிர்ச்சி தான்!
அதன் பின் அவள் ராஜுவிடம் வித்தியாசம் காண்பித்தாள்.
ஒரு நாள் தயங்கி தயங்கி சொல்லியே விட்டாள்.
“ராஜு. வீட்டில் வயசுக்கு வந்த பொண்ணை வச்சுகிட்டு, நீயும் இங்கயே இருந்தா, சுத்தி இருக்கிறவங்க தப்பா பேசுவாங்கப்பா” என்றாள்.
“நீ யாரை சொல்ற? சினேகா குட்டியவா?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா.”
“அக்கா, அவ குழந்தைக்கா.. யாழினி எப்படியோ இவளும் எனக்கு அப்படி தான்! என்ன பேசுற நீ?”
‘எல்லாம் சரி தாண்டா. ஆனா இந்த ஊரு அப்படி நினைக்காது இல்ல.. அதான்”
“சரிக்கா. நான் வேற இடம் பார்த்துக்கிறேன். நீ ஒண்ணும் கவலைப் படாதே” என்றவன் அவன் நண்பர்கள் சிலரை அழைத்து, அம்மா வரும் வரை தங்க மேன்சனில் இடம் பார்த்தான்.
ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கையில் அவன் போன் அடித்தது.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. அவனின் ரிங் டோன் பாட்டைக் கேட்டு விட்டு,
அருகில் திரும்பி நின்று டீ குடித்துக் கொண்டிருந்தவன் கடுப்பில் சொன்னான்.
“குறைச்ச ம..** இல்லை!”
சட்டென திரும்பிப் பார்த்தால், சந்துரு.
“டேய்.. என்னடா.. ஏண்டா.. இப்படி திட்டுற?
நீயும் என் போனை எடுக்கிறதே இல்ல? ஆமா அம்மாவை எந்த டூர் க்ருப்பில் அனுப்பி வச்ச? நம்பர் கொடு” என்றான் ராஜு.
“டூரா, நானா? அம்மாவையா? நான் எங்க அனுப்பினேன்?” என்றான் சந்துரு.
“அப்ப நீ அவங்கள நார்த் இண்டியா டூர் அனுப்பி வைக்கலையா?”
“நார்த் இண்டியா டூரா? போடா. ஏதாச்சும் சொல்லிட போறேன்!
அவங்க ஒண்ணும் நார்த் இண்டியா டூர் போகல! நாதியத்து போய் முதியோர் இல்லத்தில் இருக்காங்க” என்றான் சந்துரு!
error: Content is protected !!