Skip to content
Post Views: 2,581
அந்த பழைய தையல் மெசினில், நைட்டியின் ஓரங்களை மடித்து அடித்து கொண்டிருந்தாள் மகி.
அது அவள் அத்தை அன்னம் தன் திருமணத்திற்கு முன்பு, அவரின் சிறுவாட்டு காசில் வாங்கியது.
இப்போது அவர் அதில் எதுவும் தைப்பதில்லை என்றாலும் ஒரு ஞாபகமாக அதை இன்னமும் விற்காமல் வைத்து இருந்தார்.
அதில், மகி அத்தை வீட்டுக்கு வந்த கொஞ்ச நாட்களில் அடிப்படை தையல் கற்றுக் கொண்டாள்.
Advertisement
ஜாக்கெட் மாதிரி எதுவும் தைக்க பழகவில்லை என்றாலும், இப்படி, நைட்டி, புடவைகள் ஓரம் அடிப்பது, லுங்கிகளை இணைத்து தைப்பது போன்றவற்றை அவளே தைத்துக் கொள்ள துவங்கினாள்.
நேற்று தான் அவளும் புவனாவும் டவுனுக்குப் போய் புவனாவிற்கு புதியதாக நைட்டிகள் வாங்கி வந்தார்கள்.
இப்போது புவனாவால் அவளது பழைய நைட்டிகளை அணிய முடிவதில்லை. வயிறு பெரிதாகி கொண்டிருப்பதால்.
Advertisement
“மகி, அப்படியே மாமாவோட கைலியையும் மூட்டிக் கொடுத்துடு” என்றபடி அவளிடம் வந்தார் அன்னம்.
Advertisement
“இது யாரோட நைட்டிடி, இவ்வளவு பெரிய சைஸ் வாங்கி வந்திருக்க?”
“இது புவனவோடது அத்தை. ட்ரிப்பில் எக்சல் சைஸ் வாங்கி வந்துருக்கோம். பழய நைட்டியெல்லாம் இப்ப போட்டுகிட்டா, அவளுக்கு மூச்சு முட்டுதாம்!
அத்தை, இந்தா, இத பக்கத்து வீட்டு பாப்பா, அந்த தர்ஷினி கூப்பிட்டு கொடுத்துடு. அவளோட ஸ்கூல் யூனிஃபோர்ம் இது. கை கிட்ட தையல் விட்டுருந்துது. நான் தான் தச்சு தரேன்னு வாங்கிட்டு வந்தேன்”.
Advertisement
ம்ம். எல்லோருக்கும் வலிய போய் உதவி செய்யுது இந்த பொண்ணு, இதுக்கு ஒரு நல்ல நேரம் கூடி வர மாட்டேங்குதே! என்று மனதுள் புலம்பியவர், “புவனா புருஷன் சந்துரு உன் கிட்ட எதாச்சும் பேசுனுச்சாடி?” என்றார்.
“ஏன் கேக்குற அத்தை?’ என்றாள் மகி தைத்துக் கொண்டே அவர் முகம் பார்க்காமல்.
“ம்ம்.. ஒண்ணுமில்ல..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் குரல் கேட்டது.
“அன்னம்..” என்று கமலா அம்மாவின் குரல்!
“அய்யோ.. சந்துரு பையன் சொன்ன மாதிரியே அவங்க வீட்டுக்கே வந்துட்டாங்களா?
நான் மகி கிட்ட எப்படி சொல்லுவேன்! என்னன்னு சொல்வேன்? அது எப்படி எடுத்துக்கும்னு வேற தெரியலையே” என்று மனதுள் நினைத்தவாறே வாசலை நோக்கி போனார்.
சந்துரு அவரிடம் கடை வீதியில் பார்த்து ஏற்கனவே சொல்லியிருந்தான்.
ராஜ் மோகன் இப்போது ஊரிலிருந்து வந்து விட்டான்.
அவன் அண்ணன் அக்காவோடு சண்டையாகி விட்டது. இப்போ அவங்களோட பேசுறதில்லை.
இப்போது அவனும் அவன் அம்மாவும் தனியே ஒரு வீட்டில் இருக்கிறார்கள்.
ராஜு இன்னமும் மகியை தான் நினைத்து கொண்டிருக்கிறான். வேறு எந்த பெண்ணையும் அவனுக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லை!
அவன் அம்மாவுக்கும் தான்!
அவன் அறிந்த வரை மகியும் ராஜுவைத் தான் இன்னமும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இப்போது இரு வீட்டிலும் குட்டி கலாட்டா பண்ணி கல்யாணத்தில் பிரச்சனை பண்ண ஆட்கள் யாருமில்லை.
நாம் தான் இதை மீண்டும் தொடங்கி வைத்து, அப்போது நின்று போன கல்யாணத்தை இப்போதாவது இன்னமும் லேட் பண்ணாமல் நடத்தி விட வேண்டும் என்று அவரிடம் வெகு நேரம் பேசியவன்,
அடுத்து மகிக்கு என்றைக்கு வீக் ஆஃப் என்று சொல்லுங்கள். அன்றைக்கு ராஜுவையும் அவன் அம்மாவையும் நேரில் பார்க்க உங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தான்.
இதை எப்படி மகியிடம் சொல்லுவது என்று அவர் முழித்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த நாளே, அவளுக்கு வார விடுமுறை வந்து விட்டது!
சந்துருவே வேறு யார் மூலமோ அவள் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டு இதோ அவர்கள் மகியைக் காண வீட்டுக்கு வந்து விட்டார்கள்!
“வாங்க.. வாங்க” என்று கமலா அம்மாவையும் ராஜுவையும் உள்ளே அழைத்தார் அன்னம்.
யாரென்று வெளியே பார்த்த மகி இவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தாள்.
பின் சமாளித்துக் கொண்டு,
“வாங்க அம்மாச்சி”, என்று கமலா அம்மாவை வரவேற்றவள், “வாங்க” என்று மெல்லிய குரலில் ராஜுவையும் வரவேற்றாள்.
அதற்குள் உள்ளே போய், தூங்கி கொண்டிருந்த அவர் கணவரை எழுப்பினார் அன்னம்.
“இந்தா.. எந்திருச்சு வா.. அவங்க.. அதான் மகி கல்யாணம் பேச வந்தாங்கள்ள.. அவங்க வந்திருக்காங்க..” என்று சொல்லி அவரை எழுப்பினார்.
“யாருடி?” என்றவாறு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு, தலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்தார் மகியின் மாமா.
அதற்குள் ஒரு லோட்டாவில் குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள் மகி.
அவளையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜு.
“நல்லாயிருக்கியாம்மா?’’ என்றார் கமலா மகியிடம்.
“ம்ம். நல்லா இருக்கேன் அம்மாச்சி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் மகியும்.
எத்தனை தன்மையா குணமாக பேசுது இந்த பிள்ளை, இந்நேரம் இந்த இடத்தில் பிரியாவாக இருந்தால் வீட்டு வாசப்படி கூட ஏற விட்டிருக்க மாட்டாள். வாசலிலேயே வைத்து கண்டபடி திட்டி விட்டிருப்பாள்!
பெரிதாக படிக்க வில்லை, வசதி குறைவு என்றாலும் இந்த வயதில் இந்த பெண்ணிடம் இருக்கும் , இந்த குடும்பத்திடம் இருக்கும் இந்த பெருந்தன்மை நம்ம வீட்டுல இருக்குமா என்று யோசிக்க தவற வில்லை அவர்!
எப்படி பட்ட பொண்ணு இவ, இவளை ராஜு இந்நேரம் கல்யாணம் பண்ணியிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!
கெடுத்து விட்டுடுச்சுங்க அந்த சனியன்கள்!
ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்! இல்லன்னா இந்த மடப்பயல் ராஜுவுக்கு அவங்க குணம் எப்படி இப்ப மாதிரி தெரிஞ்சிருக்க போவுது?
ஆனா, இவ்வளவுக்கும் பின்னே இவங்க மறுபடியும் கல்யாண பேச்சுக்கு சம்மதிப்பாங்களா?
பாபா.. நீங்க தான் எப்படியாச்சும் இந்த பொண்ணோட என் மகனுக்கு கல்யாணம் நடக்கும்படி அருள வேண்டும்! என்று மனதில் நினைத்தபடி,
“எனக்கு என்னம்மா குறை? நல்லா இருக்கேன்! தங்கமா தாங்குற என் மகன் ராஜு இருக்கிறப்போ.
என்னா.. என் பேத்தி நீயும் என் வீட்டுக்கு விளக்கேற்ற வந்துட்டா, நான் நிம்மதியா உன் தாத்தா கிட்ட போய் சேர்ந்துடுவேன்!” என்றார் கமலா அம்மா.
“அம்மா.. என்ன இது? இப்படி எல்லாம் பேசாதீங்க..” என்று அம்மாவை மெல்லிய குரலில் அதட்டியவன், ப்ளீஸ்.. மகி.. சம்மதம் சொல்லிடேன் என்பதாய் மகியைப் பார்த்தான் ராஜு.
அப்போதும் கூட ஒரு உணர்ச்சியும் காட்டிக் கொள்ள வில்லை மகி.
ஸ்ஸ்.. அப்பா.. நம்ம அண்ணன் பயந்தது சரி தான் போல!
எப்படி கல்லாட்டம் நிக்கிறா, எதையும் காண்பிச்சுக்காம!
நான் தான் அவளை இப்படி உணர்ச்சி பொங்க பாக்குறேன்.
கடங்காரி.. திருடி.. கொள்ளைக்காரி.. என்னை ஒரேடியா திருடி சுருட்டி வச்சுக்கிட்டு, ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறதை பாரு..
உள்ளுக்குள் செல்லமாக அவளை திட்டவும் செய்தான் மகியின் மனதையும் திருடிக் கொண்டு கடல் தாண்டி போய்விட்டவன்!
“அன்னம்.. உன் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா..
இவனோட அண்ணனும் அண்ணி, அக்கா காரி மூனு பேரும் சேர்ந்து தான் அன்னிக்கு ப்ளான் பண்ணி தான் பேசி அன்னிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்ததை கெடுத்து விட்டுடுச்சுங்க!
அதுக்கப்புறம் எனக்கும் அவங்களும் பயங்கர சண்டை, நானும் ராஜுவும் இப்ப தனியா வந்துட்டோம். அவங்க கூட பேச்சு வார்த்தை இல்லை!
ராஜுவும் திரும்ப துபாய் போகப் போறதில்லை! இங்கியே தான் டாக்ஸி ஓட்டப் போறான்.
இது வரை இவன் சம்பாரிச்ச காசை எல்லாம் அதுங்க ஒட்ட ஒட்ட பிடுங்கிடுச்சுங்க.
சண்டை போட்டு திரும்ப வாங்கலாம்டான்னு சொன்னா, இவன் வேண்டாம்மா, அத்தோட போகட்டும் விட்டுடுங்கன்னு சொல்லிட்டான்!
இப்ப அவன் கிட்ட எதுவும் பெரிசா சொத்து இல்ல.. ஆனா..” என்று மேலும் பேச போன கமலா அம்மாவை இடையில் குறுக்கிட்டு,
“நான் ஒண்ணும் உங்க பையன் சொத்துக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லல அப்போ. அவர பிடிச்சு போனதால தான் சம்மதம் சொன்னேன்” என்றாள் மகி.
கேட்டுக் கொண்டிருந்த ராஜு அப்படியே மேலே பறந்து கொண்டிருந்தான் சந்தோஷத்தில்!
ஆனால் அப்பவும் மகியின் முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை அவனால்!
அவள் முன் மாதிரியே தான் இருந்தாள்!
“அப்போ.. இப்பவும் உனக்கு சம்மதம் தானேம்மா.. ராஜு கொஞ்சம் ஏமாளியா தான் இருந்திட்டான்.
ஆனா கடும் உழைப்பாளிம்மா. உன்னை நல்லா வச்சு காப்பாத்துவான்!” என்றார் கமலா அம்மா கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல்!
மகி ஒன்றும் சொல்லாமல் அத்தையின் முகத்தைப் பார்க்க,
“அதெல்லாம் எங்க பொண்ணும் இருக்கிறத கொண்டு நல்ல படியா குடும்பம் நடத்துவா.
அதே மாதிரி உங்க பையனையும் நல்லா கொண்டு வந்திடுவா. நல்ல சூட்டிகையான பொண்ணு அவ” என்றார் அன்னமும்.
“அப்போ என்ன, சீக்கிரம் நல்ல நாள் பாருங்க.. நாம் இனியும் லேட் பண்ண வேண்டாம்!”
“அதுக்கு இல்லீங்க.. என்ன இருந்தாலும் நான் அவளுக்கு அத்தை தான்! அவ அம்மாவும் அண்ணனும் சம்மதம் சொல்லாம, நானா உங்களுக்கு வாக்கு கொடுக்க முடியாது!
நான் அவங்க கிட்ட கேட்டுகிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்” என்றார் அன்னம்.
“நம்பிக்கையா போங்கம்மா.. நான் பரமேஸ்வரி கிட்ட பேசுறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் மகியின் மாமா.
ப்ளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத என்னும் பார்வையோடு விடைப் பெற்றான் ராஜு மகியிடம்.
அடுத்து இரண்டு நாட்களில் பரமேஸ்வரியிடம் பேசினார் அன்னம்.
கமலா அம்மா ரொம்பவும் வெளிப்படையாக பேசியதையும், இப்போது அவர்கள் தனியே வந்து விட்டதையும் சொல்லி, கூடவே நம்ம மகியும் இன்னும் அந்த பையனை மனசுல வச்சுகிட்டு தான் வேற மாப்பிள்ள பார்க்க ஒத்துக்க மாட்டேங்குது என்றும் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார்.
பரமேஸ்வரி மகேந்திரனிடமும் சம்மதம் கேட்டார்.
என்ன இருந்தாலும் நாளைக்கு அவர் காலத்துக்குப் பின் கூடப் பிறந்தவன் துணை கட்டாயம் மகிக்கும் தேவை என்று நினைத்து.
“ஏற்கனவே ஒரு வாட்டி தட்டிப் போன சம்பந்தம் ஆச்சேம்மா.. அதான்..” என்று அவன் இழுக்கையில்..
“ஒரு வாட்டி தட்டிப் போச்சுன்னா அத அப்படியே விட்டுடனும். மேற்கொண்டு போனா சரியா வராது” என்று சொல்லி இடையிட்ட கங்காவை முறைத்தான் அவன்.
“போடி..அங்கிட்டு..உன் கருத்த இப்ப யார் கேட்டா. உன்னையே என் பொண்ணுக்காக தான் மன்னிச்சு வீட்டுக்குள் விட்டுருக்கேன். மொதல்ல உன் வாழ்க்கையை நீ காப்பாத்திக்கோ.. அப்புறம் அடுத்தவங்க வாழ்க்கையைப் பத்தி கவலைப்படுவ!”
“டேய்.. உங்க சண்டைய அப்புறம் வச்சுக்கோங்க..இப்ப நான் என்ன பதில் சொல்லட்டும் அவங்களுக்கு!”
“ம்ம். இவ்வளவு நாள் கழிச்சு திரும்பவும் அவங்க வந்து பொண்ணு கேட்டு நிக்கிறாங்கன்னா.. ஒரு வேளை அந்த பையனுக்கும் மகிக்கும் தான்னு கடவுள் முடிச்சு போட்டுருப்பார் போல!
மகிக்கும் வேற பிடிச்சுருக்கு. அப்ப சரின்னு சொல்லிடுங்கம்மா” என்று அவனும் சம்மதம் சொல்லி விட, அன்னம் அதை கமலா அம்மாவிடம் தெரிவித்து விட்டார்.
ஆனால் மகி இன்னமும் வாயை திறந்து ஒன்றும் சொல்ல வில்லை என்பதையும் சொல்லி விட்டார் அன்னம்.
அடுத்த நாளே மகியிடம் அவளின் உணவு இடைவேளையில் வைத்து அவளை தனியே சந்தித்து பேசினான் ராஜு.
“மகி.. உனக்கு என் மேல கோபம் வருத்தம் எல்லாம் இன்னும் இருக்கும்! அன்னிக்கு நான் ஒண்ணுமே சொல்லாமல் கிளம்பி போயிட்டேன்னு!
ஆனா நான் அன்னிக்கு உனக்கு ஆதரவா என்ன பேசியிருந்தாலும் உன்னை, உன் கேரக்டரை, உன் குடும்பத்தை படு அசிங்கமா பேசியிருக்கும் என்னோட அக்கா!
அதான் அன்னிக்கு என்னால ஒண்ணும் பேச முடியாம போய்ட்டுது!
நான் வீட்டுக்கு போய் உனக்கு திரும்ப திரும்ப போனில் பேச ட்ரை பண்ணினேன்! நீ எடுக்கவே இல்லை!
சந்துரு போனில் இருந்து பேசலாம்னு கேட்டா, அவன் உன் அண்ணனை எதிர்த்துட்டு மகி கழுத்துல தாலி கட்டுறதா இருந்தா போன் போட்டு தரேன்னு பிடிவாதம் பிடிச்சான்.
வீட்டிலும் தொடர்ந்து ஒரே சண்டை! அதான் நான் லீவ கேன்சல் பண்ணிட்டே ஊருக்கு போயிட்டேன்.
அங்க போய் போன் பண்ணினா, நீ என் நம்பரையே ப்ளாக் பண்ணிட்ட!
சரி.. மகி நமக்கு தான்னு அந்த ஆண்டவன் எழுதி இருந்தா, நமக்காக அவ காத்திருப்பான்னு நினைச்சுட்டு இருந்தேன்.
நீயும் கேள்விப்பட்டு இருப்ப. என் வீட்டில் நடந்தத பத்தி..
என்னடா.. இப்படியும் ஒருத்தன் இவ்வளவு டிபெண்டண்ட் ஆக இருப்பானான்னு உனக்கு சந்தேகம் வரலாம்!
ஆனா.. உனக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம். நான் கொஞ்சம் அப்படி தான்!
எனக்கு, இன்னமும் தானா சுயமா முடிவெடுத்து ஒரு விஷயத்தை நடத்திக்க தெரியாது.
எது செஞ்சாலும் அப்பா அம்மாவை கேட்டு தான் செய்வேன்.
அம்மாவுக்கு அப்புறம் அண்ணன் அக்காகிட்ட. முக்கியமா அண்ணன் கிட்ட..
அங்க துபாய்க்கு போயும், அங்கயும் என்னோட ஜிஎம் கோபால் அண்ணா, அவருடைய வீட்டம்மா மாயா சேச்சி ரெண்டு பேரும் தான் எனக்கு அங்கயும் கைடன்ஸ்!
எது ஒன்னுன்னாலும் அவங்க சொல்லி தான் முடிவெடுப்பேன்.
ஆனா அவங்க ரெண்டு பேரும் அவங்க சுயநலத்துக்காக ஒரு நாளும் என்னை, என்னோட இந்த குணத்தை யூஸ் பண்ணிட்டது கிடையாது!
அவங்க இல்லன்னா நான் ஒரு மாசம் கூட அங்க தாக்குப் பிடிச்சு இருந்திருக்க மாட்டேன்! பயங்கர ஹோம் சிக்கில் இருந்தேன் அப்போ!
நான் இப்படி தான் மகி! ரொம்ப டிபன்டன்ட்!
சின்ன வயசுல அம்மாகிட்ட, வளர்ந்தது அப்புறம் அண்ணன் அக்கா.
என் அண்ணனுக்கு என் குணம் ரொம்ப நல்லா தெரியும்!
அதனால தான் எனக்கு கல்யாணம் ஆகிட்டா, என்னோட இந்த டிப்பண்டன்சி அப்படியே எனக்கு வரப் போகிற பொண்டாட்டி கிட்ட மாறிடும்!
அப்புறம் நான் அவ சொல்றத தான் கேட்டு நடப்பேன். அவங்களுக்கு எல்லாம் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு நினைச்சு தான் எனக்கு கல்யாணம்னு ஒண்ணு ஆகுறத தட்டி விட்டுட்டு இருந்துருக்காங்க!
அதுவும் என் அண்ணன், உன்னை நீ வேலை செய்யுற இடத்தில் வச்சு உன்னைப் பார்த்திருக்கான் போல!
நீ வேற பயங்கர ஸ்மார்ட்டா தெரிஞ்சுருக்க அவன் கண்ணுக்கு அப்பவே!
எங்க உன்னை மாதிரி ஒரு தெளிவான பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து, நீ என்னை உன் கன்ரோல்ல எடுத்துக்கிட்டு அவங்க இது வரை அனுபவிச்ச வாழ்க்கைய பிடுங்கிட்டு போய்டுவியோன்னு அவங்களுக்கு ஒரே பயம்!
அதான் நம்ம கல்யாணத்தை கெடுத்து விட்டுடுச்சுங்க!
நடந்தத எல்லாத்தையும் விடு மகி!
இப்ப சொல்லு. என்னை உனக்கு இப்பவும் பிடிச்சுருக்கா?
நான் உனக்கு ஒரு ஆளுமையான புருஷனா இருக்க மாட்டேன் தான்!
ஆனா கொள்ளை கொள்ளையா அன்பை கொட்ட தெரிஞ்ச புருசனா இருப்பேன்!
நீ முடியெல்லாம் நரைச்சுப் போய் கிழவியானாலும் என்னோட அன்பு மட்டும் இன்னிக்கு இருப்பதை போல, ஏன் இன்னமும் அதிகமாகி கூட இருக்கும்!
ஐ ப்ராமிஸ்!
வெறும் அன்பு மட்டும் இல்ல.. காலம் முழுக்க உன்னை கண் கலங்காம வச்சு காப்பாத்துவேன்.
உன்னையும் நமக்கு பிறக்க போற குழந்தைகளையும் எந்த ஒரு குறையும் இல்லாம காப்பாத்துவேன்!
ஆனா என்னை நீ தான் பார்த்துக்கணும்!
என் அம்மா கடைக்குட்டி செல்லமா, அவங்க கைக்குள்ளவே என்னை வளர்த்துட்டாங்க!
நானும் அப்படியே அவங்க முந்தானைய பிடிச்சிக்கிட்டே வளர்ந்து வந்துட்டேன்.
அவங்க காலத்துக்கு அப்புறம் என்னோட மிச்ச காலம் என் பொண்டாட்டியோட முந்தானையை பிடிச்சுக்கிட்டு நடக்கவே நான் ஆசைப் படுறேன்!
இனி அம்மா காலத்துக்கு அப்புறம் பொண்டாட்டி தான் அப்படி என்னை வைச்சு பார்த்துக்கணும்!
செய்வியா மகி? உனக்கு சம்மதமா?” என்றான் கண்களில் கொள்ளைக் காதலை தேக்கி வைத்துக் கொண்டு இறைஞ்சுதலாக!
“சாரி… அது முடியாது!” என்றாள் மகி!
“என்ன சொல்ற மகி?” அதிர்ச்சியுடன் கேட்டான் ராஜு.
“நான் பேன்ட் சட்டையில்ல போட்டுருக்கேன். உங்களுக்கு பிடிச்சுக்கிட்டு நடக்க முந்தானை இதில எங்க இருக்கு? அதான்!”” என்று சொல்லி ரொம்ப நாட்களுக்குப் பின் மனம் விட்டு சிரித்தாள் மகி.
error: Content is protected !!