Skip to content
Post Views: 2,706
“ராஜு..” என்று அழைத்துக் கொண்டே அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்தவளைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சியுற்றான் ராஜு.
இதுக்கு எப்படி நம்ம வீடு தெரியும்?
அது சரி. அதுக்கா கண்டுப் பிடிக்க தெரியாது!
இதெல்லாம் அண்ணனுக்கும் அக்காவுக்கும் ஒரு விசயமே இல்ல என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன்,
Advertisement
வீடு தேடி வந்தவளை மறுக்க இயலாது,
“வாக்கா.. எங்க இவ்வளவு தூரம்?” என்றான்.
“உன்னைப் பார்க்க தான் வந்தேன். ஏன். உன்னைப் பார்க்க கூட நான் வரக் கூடாதா?
Advertisement
அவ்வளவு விட்டுப் போச்சா எங்கிட்ட?” என்று மூக்கை உறிஞ்சினாள் ப்ரியா.
Advertisement
ராஜுவிற்கு, இந்த நாடகத்தைக் காண பொறுமை இல்லை!
“சரீ.. சொல்லுக்கா என்ன விஷயம்?”
“ஏண்டா? விஷயம் இருந்தா தான் என் கிட்ட பேசக் கூட செய்வியா?” என்று அவள் மேலும் கேட்க, ராஜு நிஜமாலுமே பொறுமை இழந்தான்.
Advertisement
அவனுக்கு வெளியில் வேலை இருந்தது.
அவன் கார் ஸ்பா நடத்த பொல்யூசன் சர்டிபிகேட் வாங்குவதற்கு சம்மந்தப் பட்ட அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.
நேரத்துக்கு போக விட்டால், பின் அலைய வேண்டியிருக்கும்.
சந்துரு வேறு அங்கு காத்துக் கொண்டிருப்பான்.
“சும்மா தாண்டா வந்தேன். இங்க அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போகலாம்னு வந்தேன். ஆடி வெள்ளி இல்ல இன்னிக்கு!
அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று சொன்னவள்,
அக்கம் பக்கம் போர்சன் ஆட்கள் அவர்களை கவனித்து செல்வதைப் பார்த்து விட்டு முகம் சுளித்தாள்.
“ஏண்டா, உனக்கு குடி போக வேற வீடே கிடைக்கலியா? இங்க போய் வந்து இருக்க?” என்றாள்.
“எங்க.. மகி சொன்னா கேக்கவே மாட்டேங்கிறா! நான் என்ன பண்ண?” என்றான் ராஜு வேண்டுமென்றே!
“அவ என்னடா சொல்றது? நீ தானே குடும்ப தலைவன், புருஷன்! நீ சொன்னா அவ கேக்க வேண்டியது தானே!”
“புருஷன் சொன்னா கேக்க வேண்டியதுதான்! ஆனா அக்கா.. இத நீ போய் அண்ணி கிட்ட சொல்லுவியா? அப்புறம் ஒரு வாய் காப்பி கூட அந்த வீட்டில் கிடைக்காது” என்று கிண்டலாக சொன்னான் ராஜு.
ராஜு இப்படி எல்லாம் பேசுவாள் என்று எதிர்பார்க்காத ப்ரியா, அதிர்ச்சியுடன்,
“இல்ல.. நான் பொதுவா சொன்னேன்” என்று சொல்லியபடி கையில் இருந்த கூடையில் இருந்த பலகார கவரை நீட்டினாள்.
அதில் தெரு முனை டீக்கடையில் வாங்கிய வாழைக்காய் பஜ்ஜியும் ஆட்டுக்கால் கேக்கும் தலா இரண்டு!
கூடவே கூடையில் அவள் வீட்டில் காய்த்த கொய்யா பழங்கள்!
ராஜுவுக்கு ச்சே என்று ஆகிவிட்டது!
பெட்டி பெட்டியாக காஜுகத்லியும், டின் டின்னாக பெங்காலி இனிப்புகளும் கார வகைகளுமாக கட்டைப் பை நிறைய அவள் வீட்டுக்கு தான் பலகாரங்கள் வாங்கி சென்ற நாட்கள் அவன் நினைவில் வந்து போயின!
எண்ணையில் ஊறிப் போய் இருந்த அந்த பஜ்ஜியைப் பார்க்கும் போதே அவனுக்கு வயிற்றைப் பிரட்டுவது போல இருந்தது!
அப்புறம் அந்த கொய்யா காய்கள்!
சிறிது சிறிதாக பார்க்க மேலூர் கொய்யா போல தெரிந்தாலும் அவை சுத்தமாக நன்றாகவே இருக்காது!
கடிக்கவும் கல்லு போல இருக்கும். பழுக்கவும் பழுக்காது. டேஸ்டும் மண்ணு மாதிரி இருக்கும்!
அவள் வீட்டின் அருகில் இருப்பவர்கள் யாரும் அதை சீந்த கூட மாட்டார்கள்.
வண்டி நிறுத்த நிழலாக இருக்கிறது என்று அதை இன்னமும் வெட்டாமல் இருந்தார்கள்!
அதை தான் ஆசை தம்பிக்கு கொண்டு வந்திருக்கிறாள் பாச மலர்!
இவ்வளவு சீப்பா என்னை நினைச்சுக் கிட்டு தான் என்னைப் பார்க்க வந்தியா?
நீ ஒண்ணுமே வாங்காம வந்திருந்தா கூட நான் ஒண்ணும் நினைச்சுருக்க மாட்டேன்!
ஆனா இத கொண்டு வந்து உன் மனசுல எனக்கு என்ன இடம்னு நீயே சொல்லாம சொல்லிட்ட அக்கா!
இவனுக்கு இது போதும்னு உன் நினைப்பு இல்ல!
இதையே அண்ணன் வீட்டுக்கு வாங்கிட்டு போக உனக்கு தைர்யம் உண்டா என்று மனதுக்குள் புழுங்கினான் ராஜு.
கூடையைக் கொடுத்த ப்ரியா, வந்த வேலையை ஆரம்பித்தாள்.
“நான் கேள்விப்பட்டேன். புதுசா ஏதோ தொழில் ஆரம்பிக்கிற போல! நல்லா பண்ணுடா.
இந்த அக்காவோட ஆசிர்வாதம் உனக்கு உண்டு” என்று நாடகம் போட ஆரம்பிக்க, அதை நிறுத்த எண்ணியவன், பேச்சை மாற்ற எண்ணி,
“அப்புறம் அக்கா, ஐஸ்வர்யா எப்படி இருக்கு? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? என் டார்லிங் எப்படி இருக்கா?’ என்று நலம் விசாரித்தான்.
“ஐஸு நல்லா இருக்காடா. நீ கூட அவளை இங்க அழைச்சுட்டு வந்தன்னு சொன்னா!
நானும் வரலாம்னு வீடு எங்கன்னு கேட்டா, அவளுக்கு சொல்ல தெரியல! அப்புறம் நானே விசாரிச்சுக் கிட்டு தான் வந்தேன்.
சீக்கிரம் வேற வீடு பாருடா” என்றாள் மீண்டும்.
“இல்லக்கா.. இங்க தான் அக்கம் பக்கம் ஆளுங்க இருக்காங்க.
நானும் மகியும் வெளியே போய்ட்டா கூட அம்மாவை அவங்க பார்த்துக்கிறாங்க.
நேத்து கூட அம்மாவுக்கு பிபி ஏறிப் போய் இருந்திருக்காங்க.
முன்னாடி வீட்டு ஆட்டோக்காரர் தான் அம்மாவை உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போய், அங்க இருந்து எனக்கு போன் பண்ணினார்.
அதனால சின்ன சின்ன அசவுகர்யம் எல்லாம் இருந்தாலும், இந்த வீடு தான் எங்களுக்கு நல்லது”
“உனக்கு சவுரியமா இருந்தா சரி தான்” என்றவள்,
“அவ்வளவு ஒண்ணும் மோசம் இல்ல தான்!
அப்ப ஒண்ணு பண்றியா, நான் சினேகாவை இங்க கொண்டு வந்து விடட்டுமா?
அவ இந்த வருஷம் நைன்த். அடுத்த வருஷம் டென்த்.
பப்ளிக் எக்ஸாம் வேற. ஆனா அங்க இருக்கிற வீட்டு சூழ்நிலை அவள் படிப்புக்கு தடையா இருக்கு!
உன் மாமா ஒரு நாளைப் போல குடிச்சுட்டு வந்து சண்டைப் போடுறார்!
கெட்ட கெட்ட வார்த்தை பேசுறார்.
சினேகா திட்டறா ரொம்ப.
அம்மா படிச்சது எல்லாம் மறந்து போய். அப்பா உளறிட்டு இருக்கிற கெட்ட வார்த்தை தான்மா பரீட்சை எழுதும் போது நெனப்புல வருதுன்னு பொலம்பறா!
அதான் அவளை இங்க கொண்டு வந்து விட்டு, இங்கேருந்து ஸ்கூலுக்கு அனுப்பலாமான்னு பார்க்கிறேன்” என்றாள்.
ராஜு அசந்து தான் போனான் அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு!
ஐஸ்வர்யாவை அனுப்பி பார்த்தாள்.
இப்போது சினேகாவை முதலில் அனுப்பி, பின்னாடியே வால் பிடித்துக் கொண்டு இவளும் வர முயற்சிக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு!
ஏனென்றால் அவள் வேல்முருகனைப் பற்றி சொன்னதெல்லாம், அப்படியே அவள் வீட்டு வேலைக்காரியின் கணவன் செய்வது.
அவள் வீட்டில் வேலை செய்யும் பெண் இரண்டு நாட்கள் முன்னர் தான் ராஜுவை உழவர் சந்தையில் வைத்துப் பார்த்து இதை சொல்லி அழுதாள்.
ராஜு அவளுக்கு ஆறுதல் சொல்லி, அவள் பெண்ணின் படிப்புக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாகவும் சொல்லி இருந்தான்.
அட்சரம் மாறாமல் அவள் பேசிய அதே டயலாக்கை கடன் வாங்கி வந்து இந்த ப்ரியா நம்மிடம் பேசுது!
அம்மா சொன்னது நிஜம் தான்! இதுங்கள மறுபடி நம்ம வாழ்க்கையில விட்டோம், அப்புறம் அந்த ஆண்டவனால கூட நம்மள காப்பாத்த முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
“நீ. சொல்றது எனக்குப் புரியுதுக்கா.. ஆனா பாரு சினேகா வயசுக்கு வந்த பொண்ணு.
அவளை இங்க கூட்டிட்டு வந்து வச்சுகிட்டா மகி சந்தேகப் படுவா!
அக்கம் பக்கமும் நீ சொன்ன மாதிரி லோ கிளாஸ் மக்கள்! எங்க ரெண்டு பேத்தையும் தப்பா பேசிடுவாங்க அக்கா.
அதனால வேண்டாம். நீ மாமாவை திருத்துற வழிய பாரு!” என்றான் ராஜு,
ப்ரியா அதிர்ந்து போய் தான் விட்டாள்!
இதுக்கு பேர் தான் பூமராங் என்பதா!
“டேய்.. டேய்.. என்ன சொல்ற? சினேகா குழந்தைடா. நீ தூக்கி வளர்த்த பொண்ணு! உனக்கும் மக மாதிரி.. அவளைப் போய்..”
“என்னக்கா பண்றது? அன்னிக்கு நீ இருந்த அதே சிச்சுவேசன்ல தான் நானும் இப்ப இருக்கேன்!
எனக்குப் புரியுது. ஆனா சுத்தி இருக்கிறவங்களுக்கு தெரியாதே!
அன்னிக்கு நானே அதனால தானே உன் வீட்டில் இருக்க முடியாம, மேன்சனுக்கு போக வேண்டியதாகிடுச்சு!” என்றான் ராஜு அன்றைய நாளின் நினைவில்!
அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி என்று மனதுள் நினைத்தவாறே, வீட்டுக்குள் நுழைந்தார் கமலா அம்மா, இத்தனை நேரமாக இருவர் பேச்சையும் ஓசையின்றி நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவர்!
“வாங்கம்மா.. என்ன அதுக்குள்ள வந்திட்டிங்க?” என்றான் ராஜு.
ஆடி வெள்ளி கூட்டத்தில் அவர் கோவில் சென்று திரும்ப இன்னமும் ஒரு மணி நேரமாவது ஆகி இருக்க வேண்டும்!
“எனக்கு ஒருத்தர் என்ட்ரி பாஸ் கொடுத்தார்டா. அதுல போய் சீக்கிரம் பார்த்துட்டு வந்திட்டேன்” என்ற கமலா.
“நீ எங்கடி இங்க?” என்றார் ப்ரியாவிடம்.
“..ம்ம்.. அது .. வந்து ஆடி வெள்ளிக்கு கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னையும் ராஜுவையும் பார்த்து விட்டுப் போகலாம்னு..” ப்ரியா இழுக்க,
ஆடி வெள்ளிக்கு கோவிலுக்கு வர்ற மூஞ்சியைப் பாரு. ஒரு நாளு பொழுது கூட பக்கத்தில இருக்கிற வெக்காளி அம்மன் கோவிலுக்கோ இல்ல நாச்சியார் கோவிலுக்கோ போனதில்ல.
இவ கோவிலுக்கு வந்தாளாம். அப்படியே பொறந்தவனையும் பார்த்துட்டு போக நினைச்சாளாம்!
உன் பொறந்தவன் என்ன பொழுதுக்கும் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறானா?
என்னமோ திட்டம் போட்டு அவன் மனசைக் கலைக்க அவன் பொண்டாட்டியும் நானும் இல்லாத நேரமா பார்த்து வந்திட்டு, பேச்சைப் பாரு! புளுகு மூட்டை! என்று மனதுக்குள் கண்டபடி திட்டியவர்,
“ஓ.. தம்பியைப் பார்க்க வந்தியா? பார்த்துட்டுப் போ. பார்த்துட்டுப் போ” என்று நக்கலாக சொன்னவர், கையில் கொண்டு வந்த விபூதி குங்கமத்தை இருவருக்கும் இட்டு விட்டார்.
“டேய்.. நீ எங்கியோ, வெளியே போகணும்னு சொல்லிட்டு இருந்த? போகலியா?”
“ம்ம். இதோ கிளம்பிட்டேன்”. என்று ராஜு கிளம்ப,
“இருடா. அப்படியே என்னையும் பஸ் ஸ்டாப்பில் விட்டுட்டு போ” என்று கிளம்பிய ப்ரியாவை தடுத்தார் கமலா.
“ஏய்.. இருடி.. என்னைப் பார்க்கவும் தானே வந்தே?
அப்புறம் என்ன காலில் சுடுதண்ணீய ஊத்திட்டு கிளம்புற?
இரு. சாப்பிட்டுட்டு போகலாம்!” என்றவர், உள்ளே போய் கூடையில் இருந்து வெங்காயம் பூண்டை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து
“இத எல்லாம் உரிச்சு கொடு. இன்னிக்கு பூண்டு குழம்பு தான் வைக்க போறேன்” என்றார்.
ப்ரியா பல்லைக் கடித்துக் கொண்டு வெங்காயம் உரிக்க தொடங்கினாள்.
இருவரும் சேர்ந்து சமையல் முடித்த பின்,
“ப்ரியா. அப்படியே அந்த பாத்திரத்தை எல்லாம் கழுவிப் போட்டுட்டு போடி.. எனக்கு இடுப்பு வலிக்குது.
மகி இருந்தா என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டா!
எப்படா அவ வருவான்னு இருக்கு.. முடியல” என்றவர்,
காலை நீட்டி உட்கார்ந்து, “கொஞ்சம் காலைப் பிடிச்சு விடுடி.. ரொம்ப நேரம் கோவிலில் நின்னிகிட்டு இருந்தது, கால் கடுக்குது” என்றார்.
“ம்ம்.. மகி. இருந்தா..” என்று அவர் ஆரம்பிக்குமுன்,
“உன் காலை பிடிச்சு விட்டுருப்பா அத தானே சொல்ல வந்த? பிடிச்சு விடறேன். நானே பிடிச்சு விடறேன்” என்று அம்மாவின் காலைப் பிடித்து விட்டாள் ப்ரியா.
பின் அவள் பாத்திரங்களை கழுவ ஆரம்பிக்க, மூலை முடுக்கில் இருந்து எல்லாம் பாத்திரங்களை கொண்டு வந்து போட்டுக் கொண்டே இருந்தார் கமலா!
“மகி இல்லாம, உன் தம்பி, காபி குடிச்ச டம்ளரைக் கூட மூல மூலைக்கு போட்டு வச்சுருக்கான் பாரு” என்று சொல்லியபடி.
“என்னம்மா நீ. கழுவ கழுவ கொண்டு வந்து போட்டுட்டே இருக்க?
எனக்கும் இடுப்பு வலிக்குது!” என்று ப்ரியா நிஜமாலுமே முடியாமல் கத்த ஆரம்பித்தாள்.
“ஏய்.. ஏண்டி கத்துற? உன் பொறந்தவன் வீட்டுக்கு தானே செய்யுற?
ஏன் இங்க வாங்கிக்க மட்டும் தான் உனக்கு உரிமை இருக்கா?
வேலை செய்ய இல்லியா?” என்று கேட்டு அதற்கும் ஒரு கொட்டு வைத்தார் கமலா.
ப்ரியா.. இனி.. இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டாள்!
அடுத்த சோதனை ராஜுவுக்கு ஒரு டீக்கடையில்!
ராஜு ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருக்க, அங்கு வந்து நின்றது ராமுவின் புல்லட்!
error: Content is protected !!