Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 9

புது மஞ்சள் புது தாலி

அத்தியாயம் 9

            வேலுவின் சொந்த தாய் மாமன் மகள் தான் தாமரைச்செல்வி. கொடியரசிக்கு சொந்த தம்பி மகள், கூட பிறந்த பிறப்பில் சரஸ்வதி பெரியாத்தா மூத்தவராகவும் , அடுத்து கொடியரசியும், அதற்கு பின் பிறந்தவர் தான் நல்லசிவம்.

          சொந்தத்தில் திருமணம் நடப்பதே வழக்கத்தில் இருக்க, நெல்லையப்பனும் அவரது அண்ணன் தங்கதுரையும் தமது அயித்த மகள்களான சரஸ்வதி , கொடியரசியை மணம் முடிக்க. நல்ல சிவதிற்க்கு தேனியில் பெண் எடுத்தனர். குடும்பத்தில் மூத்த வாரிசாக சரஸ்வதிக்கு கலைவாணி பிறக்க, கொடிக்கு பிள்ளை பேறு தள்ளி போனது.



Advertisement

                  கலைவாணியின் ஐந்து வயதில் ஒரு விபத்து ஒன்றில் தங்கதுரை காலமாக, குடும்பத்தை தாங்கி கொண்டார் நெல்லையப்பன். கணவனின் இழப்பை தாங்க முடியாமல் முழுதாக மூலையில் முடங்கி விட்டார் பெரியாத்தா. வாணியின் பொறுப்போடு குடும்ப பொறுப்பும் அரசியின் கையில் வர முழுதாக ஆண்டு கொண்டார் அரசி.

            வாணியின் பதினொரு வயதில் அரசி கர்ப்பம் தரிக்க, குடும்பத்தில் சந்தோசம் மீண்டது. பெரியாத்தாவும் தன் இழப்பை ஒதுக்கி நடமாட்டம் கொண்டார், தங்கையை கவனிக்கும் பொருட்டு. ஆனால் அரசிக்கு அதில் விருப்பம் இல்லை. தன்னை தாண்டி தன் அக்கா எடுத்து செய்வதை விரும்ப வில்லை, அதிகாரமும், ஆளுமையும் தன்னை விட்டு நீங்குவது போல உணர்ந்த அரசி குடும்பத்தில் உரசலை கொண்டு வர. தங்கை குணம் அறிந்த சரஸ்வதியும் குடும்ப ஒற்றுமை காக்க ஒதுங்கி கொண்டார்.

              நெல்லையப்பனும் ஊர் தலைவராக, அடுத்து அரசி தன்னை அரசியாகவே உணர தொடங்கினார். குடும்பத்தில் , சொந்தத்தில் தன்னை நிலை படுத்தி, தன் சொல்லை முதன்மையாக கொண்டு வந்தார்.

Advertisement

               குறித்த நேரத்தில் ஆண் மகவை பெற்றெடுக்க அரசியை கையில் பிடிக்க முடியவில்லை. குடும்பத்தின் ஆண் வாரிசு என்ற பெருமை அவரை சூழ்ந்து கொண்டது. நெல்லையப்பன் தன் அண்ணன் நினைவாக தங்கவேலு என்ற பெயரையே தன் மகனுக்கு சூட்டினார். அரசிக்கு அதில் குறை ஒன்றும் இல்லை. எப்போதும் தன்னை முன்னிலை படுத்தி, தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என்று நினப்பாரே தவிர தன் அக்காவை ஒதுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. வாணியை தன் சொந்த மகளாகவே வளர்த்து சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்தார்.

Advertisement

                     நல்ல சிவம், பூமணி தம்பதிக்கு மூத்தவள் தாமரைச்செல்வியும், அடுத்து ஆண் மகவு கண்ணனும் பிறக்க. குடும்ப ஆளுமை எப்பவும் போல அரசி வசமே. சிறு வயதிலேயே தங்கவேலுக்கு, தாமரை தான் என்று கொடி பேசி முடித்திருக்க. நெல்லையப்பனுக்கும் சம்மதம் தான். சொந்தமே உறவு காக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர், அரசி முடிவை ஆதரித்தார்.

                   அரசி முடிவை மீறும் தைரியம் யாருக்கும் இல்லை. அத்தோடு வேலுக்கும் நிரம்ப பிடித்தது தாமரையை… சிறு வயது முதற்கொண்டு தன் இணையாக மனதில்வாரி காதல் கொண்டான். ஒவ்வொன்றையும் அவளிற்கு பார்த்து பார்த்து செய்தான். அவளின் அகர்ஷிக்கும் அழகு அப்படி ஈர்த்தது அவனை.

                   மஞ்சள் நிறம், இடை தாண்டிய கூந்தல், வட்ட முகம் என்று பார்ப்போரை திரும்பி பார்க்கச்செய்யும் அழகி தான். அந்த கர்வமும் அவளுக்கு இருந்தது. தாமரையின் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் விடுதி வாசம் தான். அதனால் தான் என்னவோ வேலுவோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்தோடு வேலு மீது அவளுக்கு எந்த ஆர்வமும் இல்லை. திருமண பேச்சு தெரியும் தான். ஆனால் அதை பெரிதாக எண்ணவில்லை.

Advertisement

               வேலுக்கு காலம் நன்றாக சென்றது. கலைவாணிக்கு திருமணம் முடிந்திருக்க, வீட்டின் ஒரே வாரிசு என்ற சலுகையோடு, தாயின் தனி கவனிப்பும் சேர வாலிப வயதிற்க்குறிய துள்ளலோடு, சேட்டையும் அதிகம் இருந்தது. அவர்களின் பிரதான தொழில் விவசாயம் தான், வேலுக்கும் அதுவே விருப்பம். அதனால் பெயருக்கு கல்லூரி சென்று நண்பர்களோடு ஊர சுற்றுவது, மாலையில் பூர்ணாவோடு அரட்டை, இரவில் தாமரை நினைவோடு இளையராஜா துணைக்கு என்று வாழ்க்கை அமர்க்களமாக சென்றது.

                வேலுவின் ஜாதகத்தில் இருபத்தி ஐந்து வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று இருக்க, சந்தோசமாக திருமண வேலைகளை ஆரம்பித்தார் கொடி. ஆனால் அதற்கு முழு எதிர்ப்பு தெரிவித்தது தாமரை தான். அவளுக்கும் கல்யாண கனவுகளும், எதிர்பார்ப்பும் ஆயிரம் இருக்க அதில் ஒன்றில் கூட வேலு இல்லை.

                 நல்ல சிவம் தான் ஏதேதோ சொல்லி மகளை சரிகட்டினார். அவருக்கு தெரியும் அக்கா மகன் என்றில்லாமல் தனிப்பட்ட ஒரு மனிதனாகவே வேலு மிகவும் நல்லவன். ஒற்றை வாரிசு, சொத்தும் நிறைய, நல்ல குணமும் இருக்க, ஒரு பெண்ணின் தந்தையாக மாப்பிள்ளை பட்டியலில் வேலு இடம் சிறப்பு. அது தெரிந்து தான் அக்கா கேட்டவுடன் சிவம் சம்மதித்து விட்டார். அவர் இல்லையென்றால் சொந்தத்தில் பெண் கொடுக்க பலர் தயாராக நிக்க கெட்டியாக பிடித்து கொண்டார் மாப்பிள்ளையை…

                தன் மீது தாமரைக்கு விருப்பம் இல்லை பெற்றோர் வலியுறுத்தலால் சம்மதம் சொன்னாள் என்று அறிந்த வேலு மனம் தவித்து போனான். தாமரை மீது வேலு பித்தாகி நிற்க. அவளை விட்டுவிடும் எண்ணம் துளியும் இல்லை. எவ்வாறு அவளை ஈர்ப்பது என்று யோசித்து கண்ணன் மூலம் அவள் விருப்பம் அறிந்து தாமரையை தன் பக்கம் திருப்ப முயற்சிதான்.

              தினமும் தாமரையை பார்க்க வீட்டிற்கு சென்று வருவான். அவ்வாறு செல்லும் போது அவளுக்கு பிடித்த விலை மதிப்பு மிக்க ஒன்று அவன் கையில் இருக்கும். அது நகை, புடவை, சுடிதார் என்று அவள் விருப்பம் அறிந்து வாங்கி செல்வான்.

                 நிச்சயதார்த்தம் பெரிதாக மண்டபம் பிடித்து தான் நடந்தது. தாமரை விருப்பம் தான் முழுக்க முழுக்க, வேலு பணத்தை தண்ணீராக செலவு செய்தான். அரசிக்கு மாற்று கருத்து எதுவுமில்லை. ஒற்றை மகன் சீரும் சிறப்புமாகவே செய்தனர்.

              தாமரை ஊருக்கு வந்த பின் வேலுவை காண்பதே அரிதாகி போனது பூர்ணாக்கு… வேலுவின் விருப்பம் முன்பே தெரியும் என்பதால் தன்னை சமாதான படுத்தி கொண்டாள். ஆனாலும் மனம் அவனிற்க்கு ஏங்கவே செய்தது, வயதுக்கு மீறிய பொறுப்பு, அதிக உடல் உழைப்பு, நோய்வாய் பட்ட தாய் என்று வாழ்க்கையில் போராடியே சலிப்படைந்தவளுக்கு வேலுவோடு செலவிடும் நேரமே உற்சாக பானம். தற்போது அதுவும் காணாமல் போக ஏதோ விரக்தி மனப்பான்மை.

                வேலு தன் நிச்சயதிற்க்கு வள்ளி அத்தையும், பூர்ணாவையும் அழைக்க வந்திருந்தான். அவர்கள் உறவாக இருந்த போதும் விசேஷதிற்க்கு பெரியவர்கள் யாரும் வந்து ஒரு வார்த்தை அழைக்க வில்லை. பணத்தின் மதிப்பு வேற தானே, அது புரிந்த வள்ளி அமைதியாகவே வரவேற்றார்.

                பூர்ணாக்கும் குறை தான். ஒரு வார்த்தை முன்பே தன்னிடம் சொல்ல வில்லை என்று. நெருங்கிய சொந்தங்களை அழைத்து நாள் குறித்து, புடவை எடுத்து ஊரவே அழைத்து. அதன் பின் விடுபடவர்கள் யார் எனும் போது வந்தவர்கள் தான் வள்ளியும், பூர்ணாவும். அவ்வளவு தான பழக்க வழக்கம் என்ற கேள்வி உதித்த போதும் , வெளியில் ஒன்றையும் காட்டாமல் சிரித்த முகமாகவே வரவேற்றாள். வேலுக்கு இருந்த நிச்சய அலைச்சல், தாமரையுடனான நேரம் என்று பூர்ணாவை சுத்தமாக மறந்து விட்டான். ஏதேதோ பேசி சிரித்து சமாளித்து தன் தப்பை மறைத்து, விசேஷத்திற்க்கு வருமாறு அழைத்து சென்றான்.

              பெயரளவில் வரும் அழைப்பிற்கு ஏன் செல்ல வேண்டும் என்று வள்ளி செல்லாமல் இருக்க, பூர்ணா துள்ளி குதித்து கிளம்பினாள். தன் நண்பன் வேலுக்கு அல்லவா விசேஷம். பண்டப அலங்காரம், பூ மேடை என எல்லாவற்றையும் ஆச்சர்யமாக பார்த்து கொண்டே வேலு இருக்கும் அறைக்கு சென்றாள். அங்கு வேலு உடன் நண்பன் மணிமாறன் இருக்க, மூவருமே சிறு வயது நண்பர்கள். பின் என்ன நண்பர்கள் மூவரும் சேர்ந்து கேலி, கிண்டல் என்று பொழுது சென்றது.

            அடுத்து பூர்ணா சென்றது என்னவோ மணமகள் அறைக்கு தான். தன்னை வேலுவின் தோழி என்று கெத்தாக அறிமுக படுத்தி, அவளையும் கேலி செய்து, சிரித்து விளையாடி, இருவர் மட்டும் இருந்த வட்டத்தை மூவராக பெருக்க எண்ணி அவள் அறைக்கு செல்ல.

              தாமரை சின்ன சிரிப்போடு, வெறும் தலையாசைப்புடன் தள்ளி நிறுத்தி விட்டாள். பூர்ணாவால் அவளை நெருங்கவே முடியவில்ல. தள்ளியே நிற்க வேண்டியதாகி போனது.

                 தாமரை சாமர்த்தியசாலி தான்.. பூர்ணா, வேலு உறவு பற்றி முன்பே அரசி கூறி இருக்க, விவரமாக தன்னை விட்டு தள்ளி நிறுத்தினாள் தாமரை. பெண் அழைப்பின் போதும், மேடையில் விழாவின் போதும் துணைக்கு உடன் நின்ற பூர்ணாவை கவனியாது போலவே ஒதுக்கி விட்டாள். மேடையில் ஒரு மூலையில் எவ்வளவு நேரம் நிற்பது, இறங்கி வந்து ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள் பூர்ணா.

             விழா நல்ல படியாக முடிய, அனைவரும் சாப்பிட செல்ல கடைசியாக செல்வோம் என்று அமர்ந்திருந்த பூர்ணாவை அவசரமாக அழைத்தான் வேலு.

                என்ன? என்று கேட்டவளிடம், “ஏட்டி சொம்பு? கூட்டம் அதிகம்லே, பெரியத்தா தனியா அல்லாடுறாக, கூட ஒத்தாசைக்கு இருவே.. நீயி என்ன வேத்தாளா தள்ளி நிக்க.. முன்ன நின்னு பாருவே, எனக்கு செய்ய மாட்டியா”… என்று ஒரு வார்த்தை வேலு சொன்ன பின் பூர்ணா நிர்ப்பாளா என்ன?…..

             பந்தி பரிமாற, இழை எடுக்க, சாப்பிட வருபவர்களை உபசரிக்க, வந்த பெரியவர்களுக்கு கலர் குடுக்க, சீர் வரிசை தட்டு அடுக்க, தண்ணி புடிக்க என்று வேலை நிமிர்ந்து எடுத்தது.. சிறு முக சுளிப்பும் இல்லாமல் கடைசி வரை உடன் இருந்து வேலை செய்தவளை பார்த்த பூமணி, பூர்ணா அருகில் வந்தார்.

                வேலை முடித்து கை கால் கழுவி சாப்பிட செல்ல மேலே ஏறிய பூர்ணாவை வழி மறித்தார் பூமணி, “ரொம்ப நல்ல வேலை செஞ்சமா.. நீயி வராலனா கொஞ்சம் கஷ்டமாக போய்ருக்கும். நல்ல ஒத்தாசையாக இருந்த” என்று பாராட்ட ,

            அவரின் வெளிப்படையான பாராட்டில் கூச்சம் கொண்ட பூர்ணா, “இருக்கட்டும் சின்னம்மா, நம்ம வீட்டு விசேஷம் தானே. நான் செய்யாமவ?”… என்று கேட்டவளிடம் ,

          பூமணி, “ ரொம்ப நல்ல பொண்ணுமா நீயி.. நல்ல இருக்கணும்” என்று சொன்னவர், அத்தோடு நிறுத்தாமல் “ இந்தா இதை எடுத்துட்டு போ, உனக்காக எடுத்து வந்தேன்” என்று ஒரு பெரிய பாலித்தீன் கவரில் இழையில் மடித்து சோறு, குழம்பு, காய் போன்ற பதார்த்தங்களை கவரில் அடைதது பூர்ணாவிடம் நீட்டினார் பூமணி.

            சாப்பிட்ட இழை எடுப்பவர்களுக்கு மீதம் இருந்ததை கவரில் அடைத்து கட்டி வைத்திருக்க, அதில் ஒன்றை எடுத்து தன்னிடம் தருபவரை அதிர்ந்து விழிகள் கலங்க பார்த்தாள் பூர்ணா.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!