Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 2

புது மஞ்சள் புது தாலி

 அத்தியாயம் 2

      வாசலில் அமர்ந்து அரிசி புடைத்து கொண்டிருந்த வள்ளி , தன் மகள் பூர்ணா வேகமாக வருவதை பார்த்து “என்னாலே வேலைக்கு போனவ இன்னாரமே வந்துட்டா சுளுவ முடிஞ்சத…” என்று கேட்க , வெறும் தலையசைத்து உள்ளே சென்றுவிட்டாள்.

    தாயிடம் நடந்ததை சொன்னால் , ஒரு பாடு ஒப்பாரி வைக்கும் இருக்கும் மனநிலையில் இந்த புலம்பலையெல்லாம் கேட்க முடியாது , ரொம்ப முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்தது. இப்போது தான் எந்திருச்சு உட்கார்ந்திருக்கு, எந்த வேலையும் செய்யாமல் இருக்க சொன்னால் கேட்பதில்லை , ஆண் துணை இல்லாமல் மகள் சம்பாத்தியத்தில் ஓடும் குடும்பம். இதில் தன் மருத்துவ செலவு என மகள் படும் கஷ்டம் அறிந்தவர் , வயசான காலத்துல தன்னால் கூலி வேலை செய்ய முடியாது , வீட்டு வேலையும் பெருசா செய்ய முடியாது , குனிந்து நிமிர்ந்து மற்ற வேலை எதுவும் செய்ய இயலாது.



Advertisement

     நடக்கவே சிரமப்படும் வள்ளி அமர்ந்தே தன்னால் ஆன வேலைகளை எல்லாம் செய்து விடுவார். ஏதோ தன்னால் ஆன உதவி துணி மடிப்பது , அரிசியில் கல் பொருக்குவது , உரலில் கம்பு, சோளம் ஆட்டுவது என்று பொதுவான வேலைகளை செய்வார்.

    தன்னை சுத்த படுத்தி கொண்டு அடுப்படி வந்த பூர்ணா பார்த்தது கோதுமை மாவு உரலில் ஆட்டி கும்பா (ஒரு வகை சிறிய பானை) நிறைய இருக்க , சத்தமாக தாயை அழைத்த பூர்ணா,

 “எம்மோ! எதுக்கு உனக்கு வேண்டாத வேலை நான் வந்து பார்த்துக்க மாட்டேனா, நீ வேலை செய்றேன் சொல்லி வேற ஏதும் இழுத்து விட்டுக்காத , நம்ம ரெண்டு பேரு தான.. வயித்துக்கு ஏதோ ஒன்னு எவ்ளோ நேரம் ஆகிப்போகும். இப்பத்தான் நடமாடுற என்னிய நாதியத்தவள ஆக்கிபிடாத…” என்று கலங்கும் குரலில் சொல்ல,

Advertisement

    “ஏத்தா , மயிலு உன்ன ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்காம நான் தெக்க போகமாட்டேன் தாயி…” என சொல்லி வள்ளி முடிக்க கூட இல்லை,

Advertisement

  பூர்ணா, “க்கூம், ஆசை இருக்கு ஆணை மேல அம்பாரி ஏற , வக்கு இருக்கு வாத்து மேக்க.. இந்த நெனைப்ப மனசுல வச்சுத்தான் உசுர கைல புடிச்சு கெடைக்கையோ , உம்ம மக ஒன்னும் பதினாறு வயசு பருவ சிட்டு கெடையாது. அது ஆச்சு முப்பத்தி அஞ்சு வாழ வெட்டிய நிக்கேனு மறந்திடிகளோ…”

     அவள் பேச்சில் தாய் கண்களில் நீர் நிறைந்த போதும் பரிதாபம் இன்றி சொல் அம்புகளை நிதர்சனமாக எறிந்தால்,

 “தேடி கட்டி வைக்க அப்பனும் இல்ல. போட்டு கட்டி போக பொருளும் இல்ல. பார்த்து கட்டி போக இங்க அழகும் இல்ல. ஏதோ இருக்கேன் உம்மட மகளா உமக்கு துணைக்கு, என்ன வளர்த்திய , முடிஞ்சது நல்லதா ஆக்கி போடுறேன் திண்டுபிட்டு ஊர் போயி சேருங்க.. நியி போன பின்னாடி எமக்கு என்ன சோலி பின்னாடியே வாரேன்…”

Advertisement

   வள்ளி சீலை சுருட்டி வாயில் வைத்து அழ, “எம்மா ! உமக்காது தெக்க கொண்டு போய் சேர்க்க மகன்னு நானு நிக்கென், எமக்கு கொடுப்பனைய பாரும்…” என்று சொன்னவள் யாரும் இல்ல என்பதை வாய் வார்த்தையில் சொல்லாமல் இரு கைகளையும் கண்ணீரோடு விரிக்க, பெற்றவளின் அடி வயிறு காந்தியது மகளின் நிலை கண்டு.

     ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து மூக்கை சிந்துவதால் என்ன ஆகப்போது, வயிற்றுப்பாட்டை யாரு பார்ப்பது பெருமூச்சோடு உள்ள போய் கோதுமை மாவில் உப்பு விட்டு கரைத்து, ஈரங்காய் (வெங்காயம் ),மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு கொஞ்சம் புளி சேர்த்து அரைத்து தாளிக்க, வந்தான் வேலு , சொம்பு என அழைத்துக் கொண்டு…

   “வாலே சட்டிச்சோறு…”

என பூர்ணா வரவேற்க.

    “ஏட்டி , கொழுப்பு கூடி போச்சா ,பத்து வயசு புள்ளைக்கு தகப்பன் ஒரு மருவாதி இல்லாம செல்ல பேரு சொல்லி கூப்டுறவ…” என்க.

    அதற்கு அதிசயம் போல வாயில் கை வைத்த பூர்ணா

  “ஏதே ! செல்ல பேரா.. ஏலே அது உன் பட்ட பேரு மறந்திடியோ..” என நக்கலாக கேட்க அவளை முறைத்தான் வேலு .

   ஆம் , சிறு வயதிலிருந்தே சாப்பாடு என்றால் கொள்ளை பிரியம் வேலுக்கு… காலை எழுந்ததும் சோறு தான் வேண்டும். மூன்று வேளையும் சோறு தான் மற்ற பண்டங்களை விட சோறு தன் வேலுக்கு அதிலும் கறி, கோழி , கருவாடு , மீனு , பூண்டு , பயர் போட்ட புளிக்குழம்பு என்று சொன்னால் சோத்து சட்டியோடு சாப்பிடும் ஆளுதான் நம்ம வேலு . அதனாலேயே பூர்ணா அவனை சட்டிச் சோறு என கிண்டல் செய்ய,அவன் அவள் பெயர் சுருக்கி சொம்பு என கிண்டல் செய்வான்.

          சிறு வயது நினப்பில் இருவர் முகமும் மலர்ந்து இருந்தது , வறுமையில் வாழும் பூரணிக்கு வேலு நல்ல தோழன் , முக்கியமாக சாப்பாடு போடும் தோழன் , ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது உண்டான நட்பு, வசதியில் குறைவில்லாத வேலு மூலமே நல்ல பண்டம் கிடைக்கும் பூர்ணாக்கு… அத்தோடு மதியம் பள்ளியில் வாங்கும் சோத்தில் வேலு வீட்டு காரக் குழம்பு அம்சமாக இருக்கும். எல்லோரிடமும் தள்ளியே நிக்கும் பூர்ணாக்கு வேலு மட்டுமே விதி விளக்கு , எட்டாம் வகுப்போடு நின்று விட்டாள் பூர்ணா. ஆனால் வேலு கிட்ட மட்டும் அதே நட்போடு பழகி வந்தாள். வேலும் எல்லாவற்றிற்கும் பூர்ணவிடமே நிர்ப்பான் , ஊரே இவர்கள் பழகுவதை அதிசயமாக பார்க்கும். வேலு தாய் கொடியரசிக்கு பூர்ணவை சுத்தமாக பிடிக்காது ஆம்பிளை பிள்ளை மாதிரி சுத்துற பேசாதே என்றாலும் கேட்க மாட்டான். யார் சொல்லியும் நில்லாத நட்பு. எல்லாம் நன்றாக தான் போனது வேலுக்கு தன் மாமன் மகள் தாமரை மீது காதல் வரும் வரை.

வேலு மீது வள்ளிக்கு ஒரு எண்ணம் இருந்தது தான் முன்னாடி அதெல்லாம் , எப்போது வேலு விருப்பம் தெரிந்ததோ அப்போதே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். நட்புக்கு தடையேது… ஆனால் கல்யாணம் செய்யும் போது நாலும் பார்க்கத்தான் செய்வார்கள் போல சம்மு குணத்தில் தங்கம் தான். ஆனால் , கண்ணை கவரும் அழகு , படிப்பு , அந்தஸ்து , சீர் வரிசை , ஜனக்கட்டு என்று ஏதுவுமில்லை. ஏன் சம்முக்கு பார்க்கும் போதும் அப்பா இல்ல, பெரிய படிப்பு கிடையாது , சொத்தும் பெருசா எதுவுமில்லை நாளைக்கு உங்கள மகதானே பார்க்கணும் , சீர் செய்ய அண்ணன் ,தம்பி யாரும் இல்லா இப்படி ஆயிரம் காரணம் சொல்லி தட்டி களித்தனர்.

       வேலுக்கு தான் முதலில் திருமணம் நடந்தது. சம்முக்கு சரியாக வரன் அமையாமல் கல்யாணம் தள்ளி போன போது தான் வள்ளிக்கு நிதர்சனம் புரிய துவங்கியது சரியான மாப்பிளை வேணும்னா தாங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று… கூடவே சுத்துன ஆம்பிளை பிள்ளைக்கு திருமணம் ஆகிருச்சு. தன் மகள் இன்னும் வீட்டோடு இருக்க கொஞ்சம் மூப்பாக தெரிந்தாள் தாய் கண்களுக்கு, இனி எப்பாடு பட்டாவது மகளுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடும் எண்ணத்தில் தீவிரமாக இறங்க , அத்தோடு போச்சு அவளோட கொஞ்ச நஞ்ச சந்தோசமும்.

      தன் நினைவில் இருந்த வள்ளி நிமிர்ந்து சுயம் உணரும் போது , வேலு ஏதோ ஒரு காகிதத்தை சம்மு கையில் கொடுக்க என்னவென பார்த்தார் வள்ளி. அதேதான் சம்முவும் கேட்டாள் வேலுவிடம் ,

“என்னாலே இது நோட்டு மாதிரி..” என வாங்கி பார்க்க.

   வேலு அவளிடம் “இது கம்மா வேலைக்கு அட்டடி (நுறு நாள் வேலைத் திட்டம்) எப்படியும் மாசத்துல இருவது நாள் வேலை இருக்கும், நல்ல காசு தருவாங்க , இப்படி முதுகு ஓடிய கட்டட வேலைக்கு போவத , நான் பார்க்க சிமெண்ட் மூட்டையா தூக்கிடு போரவ உன் சத்துக்கு தக்க வேலை செய் இல்லைனா, அத்தைக்கு துணைக்கு நீயும் விழுந்துகுவ.. அப்புறம் யாரு உன்ன பார்க்க, இந்த வேலைக்கு போ மூணு மணி வர தான். வேலையும் சுளுவ இருக்கும் எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்…”

        சம்மு, அவனிடம் சந்தோசமாக “சரிலே சட்டிசோறு இனி நான் பர்த்துகிடுதென். அந்த மாரியப்பன் பொண்டாட்டி கவிதா தான் அட்ட போடுறவ, என் பேரா சேர்த்துக சொன்ன ஆள் சேர்ந்தாச்சு அடுத்து பர்க்கலாங்க… முன்னாடி நடந்த நல்ல தண்ணி குழாய் சண்டையா மனசுல வச்சு என்ன வேலைக்கு சேக்கல. அதான் மனசு ஆறமா நாலு நறுக்குனு கேட்டேன் உன்கிட்ட ஏதும் சடவு சொன்னாள?…” என்று முன்னறிவிப்பாக தன் சண்டையில் பேசிய நல்ல வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாள்.

   சம்முக்கு தெரியும், தகாத வார்ததைகளால் பேசுவது , கத்தி சண்டை போடுவது , அடிதடி எல்லாம் வேலு எப்போதும் விரும்பமாட்டான். அவனின் அதிக பட்ச கோபமே அடியோடு வெறுத்து ஒதுக்கி விடுவான், இல்லையா அவன் ஒதுங்கி விடுவான் திரும்பி கூட பார்க்க மாட்டான். ஆனால் சம்மு அப்படி இல்ல மன ஆதங்கம் ஓய்யும் வரை அவர்களை நார்நாரை கிழித்து, சுத்த தமிழில் வண்ண வண்ணமாய் தன் மனம் திருப்திபடும் வரை விடமாட்டாள். கவிதா தன்னை பற்றி என்ன சொல்லிருப்பாள் என்று தெரிந்தே விளக்கம் கொடுத்தாள் பெண் , வேற யாரும் என்றால் இவள் பேசும் விதமே வேற , வேலு மட்டுமே இவள் மரியாதைக்கு உரிய ஆண்மகன் அதனால் தான் இந்த விளக்கம் .

     வேலுக்கு தெரியும் இவள் சொன்னது கால்வாசி தான் என்று அடிதடி வரை சண்டை பெருசு . சம்மு பேரை சேர்த்திக்க சொல்லி மாரியப்பன் வீடு போகும் போது தான் தெரிந்தது இவள் வண்டவாளம். கவிதா ஒரு பாடு ஒப்பாரி வைத்து தான் அனுப்பினாள். பெருமூச்சு தான் வந்தது வேலுக்கு… சிறு வயதிலிருந்தே சம்மு இப்படித்தான் சொல் பொருக்கவே மாட்டாள் . எதுக்க யார் நிண்டாலும் பார்க்க மாட்டாள் கை ஓங்கி விடுவாள். அவ்வளவு ஏன் வேலே அவளிடம் நிறைய வாங்கிருக்கான். என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் என்று தெரிந்து பேச்சை மாற்றும் விதமாக

 “ஏட்டி ! வேலை வாங்கி தந்துருக்கேன் உண்க ஒன்னும் தரமாட்டிய…” என்க.

   “என்னாலே… செத்த பொறு இந்த வந்துரேன்…” சொல்லி சிட்டாக உள்ளே சென்றவள். வரும் போது தட்டில் கோதுமை தோசை இருக்க கையில் சுக்கு காபி மணத்தது. தட்டை வாங்கியவன் மூக்கருகே கொண்டு சென்று

  “நல்லெண்ண வாசனை தெருவே தூக்குது போ…” என்று உண்ணுவதில் கவனம் செலுத்த,

  “நம்ம சுப்பையா தோட்டத்தில் கருப்பு எள்ளு அரிக்க போனேன். காசு வாங்காம கூலிக்கு எள்ளு அரை சாக்கு வாங்கி செக்குல குடுத்து ஆட்டி வாங்கினேன். எண்ணெய் விக்குற விலைக்கு நமக்கு கட்டுபடியகுமா…” இன்னும் ரெண்டு தோசை வைத்து உள்ளே சென்றவள்,கையில் சிறு தூக்கு கொண்டு வந்து அவனருகில் வைக்க…

    வேலுக்கு தெரியும் தூக்கு தன் மகள் பவிக்கு என்று.. அதை திறந்து பார்க்க நல்லெண்ணை வாசனையோடு கருப்பட்டி , ஏலக்காய் போட்ட தோசை ரெண்டும், முட்டை ஊத்தி முறுகல தோசை ரெண்டும் இருக்க நிமிர்ந்து பார்த்த அவன் பார்வையில் , “வெங்காய தொகையில் காரம் அதிகம் நமக்கு ஆவும் புள்ளைக்கு ஆவாது “ என விளக்கம் சொன்னவளை மனம் நிறைய பார்த்தவன் , தன் தாய்க்கு பின் தன்னை தாங்கும் உறவு , தோள் கொடுக்கும் நட்புக்கு ஏற்ப தன் எல்லா சூழ்நிலையிலும் தாங்கி கூட நின்றவள்.

      புன்னகையோடு வழியனுப்ப நின்றவளை பார்த்தவன் இது தான் சமயம் என்று ,

  “ஏட்டி எம்புட்டு நாள் நீ தனியா நிப்ப.. ஆயித்த முடியாம கிடக்க உன் நினப்பு தான்…”

 சிறிது தயங்கி மேலும் பேச முயன்றவனை தடுத்தவள்

  “இங்காரு வேலு எனக்கு யோசனை நீ சொல்லாத அது உனக்கும் பொருந்தும்” என்றவள் சொல்லில் அடி பட்டு போனவன் அமைதியாக, சம்முவே மேலும் பேசினால்,

   “உனக்கு பேர் சொல்ல வாரிசு இருக்கு நான் பருக்கு மகளா (அநாதை) போவேன்னு கவலை உமக்கு வேணாம். இரத்தம் சுண்டி போற வர உழைக்கிறேன். இருக்க ஓட்டு வீடு ஆன சொந்த வீடு ஒருத்தன் ஒரு சொல்லு சொல்லுவான, தள்ளாத காலத்திலும் ஓசியா ரேசன் அரிசி கிடைக்கும். யாரு வீட்டு வாசலுக்கும் போய் நிக்க மாட்டேன் கல்ல கரச்சு குடிச்சு கூட என் வீட்டுல நான் படுத்துப்பேன். செத்தா பழகுன தோஷத்துக்கு துக்கி போது இல்லையா புழு அரிச்சு போறேன் எம்ம வீட்டுல… மூணு வேலை காஞ்சிக்கு பொண்டட்டின்ற பேருல யாருக்கும் முந்தி விரிக்க மாட்டேன். போலே உன் சோழிய பார்த்து…” என்று அவனிடம் கத்தி விட்டு வேகமா உள்ளே போய் கதவடைத்து விட்டாள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!