Skip to content
Post Views: 6,666
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3.1
வேலுவின் வண்டி சத்தத்தில் வெளியே எட்டி பார்த்த பவித்ரா , அவன் கையில் சிறு தூக்கு இருப்பதை பார்த்தவள் வேகமாக சென்று அதை வாங்கி திறந்து பார்த்து ,
“பெரியம்மா குடுத்து விட்டாங்களப்பா…” என கேட்க
“ ம்ம் உன் பெரியம்மா தான் உனக்குனு குடுத்தாங்க, அப்பத்தா என்க ஆயி?…”
Advertisement
தூக்கை திறந்து மனம் பிடித்தவள் ,
“உள்ளரா டி.வி.ல நாடகம் பாக்குறாங்க…” என தகப்பனின் கேள்விக்கு பதில் அளித்து உண்பதில் கவனம் செலுத்த , மகளை சிறு புன்னகையோடு பார்த்தவன் தன் பெரியம்மா சரசுவை தேடி சென்றான் , கூடத்தில் அமர்ந்து மும்மரமாக நாடகம் பார்த்து கொண்டிருந்தவர் , அவனை பார்த்ததும்
“வாய்யா வேலு ! போன சோலி என்னாச்சு, என்ன சொன்னா அந்த சக்காளத்தி இனிமேட்டு ஒழுங்கா வேலைக்கு போவளா, இல்ல ஊர் வம்பு வாங்கி திரிவாளா, அரசாங்க வேலை வாங்கி குடுத்துருக்க உம் பேரா கெடுக்காமலே…”
Advertisement
பெரியம்மா சொன்ன அரசாங்க வேலையில் சிரிப்பு வெடித்து கிளம்ப மனம் விட்டு சிரித்தவன் , “பெரியத்தா நான் அரசாங்கம் நடத்துரனாக்கும் வேலை போட்டு குடுக்க யார் வேன்னாலும் கண்மாய் வேலைக்கு போலாம்… உம்ம பவுசு பேச்ச அவகிட்ட வைக்காதிக என் சிண்ட புடிச்சு ஆஞ்சுருவ , இப்பத்தான் வாங்கிட்டு வந்தேன்…” என்று சொல்ல,
Advertisement
“அந்த சிரிக்கிக்கு நீ தான் மகனே இடம் குடுக்குற , ஊரே மரியாதையா பாக்குற என்ற மகன என்னா போடு போடுற.. நீங்களும் அவ சொல்லுக்கு பம்மிகிட்டு நிக்குதிக , ஒருத்தன் வாயில் இருந்து வருமா காட்டு ராசானு இந்த சிமிட்டி என்னனா பயமில்லாமல் காட்டு ராசா மவன்னு கூப்டுற… நீங்க ஏத்து ஒரு வர்த்தக பேசமாட்டிக, செவுட்டு சேர்ந்து நாலு அப்பு விட்ட அடுத்து பேச வாய் வருமாங்குறேன்…”
வேலுவின் தந்தை நெல்லையப்பன் பெரிய சம்சாரி காடு கரை, தோட்டம்,தோப்பு என்றே அவர் எண்ணம்,செயல் எல்லாம் விவசாயம் தான் ரொம்ப சிறு வயதிலே பல மாற்றம் கொண்டு வந்தவர். வானம் பார்த்த பூமியாக இருந்த காட்டு பகுதி இவர் போராடி கொண்டு வந்த ஆறு நீர் பாசன வழிமுறை தான் தரிசாக கிடந்த நிலம் முப்போகம் விளையும் பூமியாக மாறியது. அதன் பின் தான் காய்கறி விவசாயத்தோடு வாழ தோப்பு , தென்னை என்று நீண்ட கால வெள்ளாமை வளரத் தொடங்கியது , அதனால் தான் அந்த பகுதி மக்கள் நெல்லையப்பணை விவசாயத்தின் மீது கொண்ட அன்பால் “காட்டு ராசா” என்று சொல்ல தொடங்கி பின் அதுவே பெயரானது. அதுவம் இப்ப இருக்கும் தலைமுறை அவர் பெயரை கூட சொல்லாமல் பஞ்சாயத்தார் என மரியாதையாக அழைக்க, சம்மு மட்டுமே அப்பெயர் கொண்டு வேலுவை அழைப்பாள். அவ்வளவு கோபம் வரும் சரசு ஆத்தாக்கு , இருவரும் எப்போதும் எலியும் பூனையும் தான். ஆனால் இருவருக்குள்ளும் தாய் , மகள் உறவுக்கான பாசம் இருக்கும்…இவர்கள் சண்டை போடுவதை வேலு காதிலே வாங்கமாட்டான், பவி குட்டிக்கு ஒரு நல்ல பொழுது போக்கு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்ப்பாள். சம்முவை எவ்வளவு சாடினலும் அவளுக்கு நல்ல வழி காட்ட சொல்லி ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வேண்டுதல் வைப்பார்.
வேலுக்கு சம்மு தனி தான் அவள் சொல்லுக்கு எப்போதும் மரியாதை இருக்கும்… சிறு வயதில் விளையாட்டு கூட்டாளியாக சேர்ந்த ஜோடி அவள் பெரிய பெண்ணாகி, வேலு இளந்தாரி வட்டத்தில் சேர்ந்த போதும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள உரிமை, அன்பு மாறாமல் தான் இருந்தது. மாமன் மகள் மீது விருப்பம் கொண்டு அவள் பின் சுற்ற ஏற்பட்ட சிறு இடைவெளி ஒதுக்கமாகி, திருமணத்தின் பின் அவளை சுத்தமாக மறந்து விட்டான். முழுக்க அவன் தவறு தான், தாமரை உடனான அவன் திருமணத்தின் பின் தன் மனைவி , குடும்பம் , பிள்ளையென ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டான். ஆனால் அந்த வட்டத்திற்குள் ஆண் நண்பர்களுக்கு இருந்த அனுமதி பெண் அவளுக்கு இல்லை. சம்மு மீது அவன் காட்டும் அக்கறை தாமரைக்கு பிடிக்காமல் போக குறைத்து கொண்டான் சம்மு உடனான நட்பை.
Advertisement
ஆண் பெண் நட்பு என்பது ஒரு வரையறைக்குள் வந்துவிடும் போல, பவித்ரா பிறக்கும் போது தான் சம்மு கல்யாணம். கேள்விப்பட்ட போதும் திருமணத்திற்கு செல்லும் அளவிற்கு நேரம் இல்லை அல்லது நேரம் ஒதுக்கவில்லை.
இப்போது நினைத்து வருந்ததா நாள் இல்லை, கோபம் அளவு கடந்த கோபம் அவன் மீதே , தான் கொஞ்சம் சுதாரிச்சு இருக்கணும், என்ன ஏது என்று வள்ளி அத்தையிடமாது கேட்டிருக்கனும்… தன் குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் அவ்வாறு தான் கண்டு கொள்ளாமல் இருப்போமா ? தன் நண்பனின் தங்கைகளுக்கு கூட வரன் பார்த்தானே , சம்முவை விட்டு விட்டானே, தான் அவ்வளவு சுயநலமாக நடந்து விட்டு இப்போது வந்து அக்கறையாக கேட்டால் கோபப்படாமல் என்ன செய்வாள். தான் ஒதுக்கியது போல் தன்னை ஒதுக்காமல் நட்பு பராட்டுவதே பெரிது.
எல்லா பெண்களுக்கும் இருப்பது போலத்தான் தாமரைக்கும் தன் கணவன் தனக்கு மட்டுமே உரிமையானவன் என்ற எண்ணமும், சம்மு சொல்லுக்கு வேலு அடிபணிவதும் பிடிக்கமல் போக அதையும் மீறி சம்முவின் துடுக்கு பேச்சும் , உரிமை சாடலும் அவளை நேரடியாகவே ஒதுக்கி வைக்க போதுமானதாக இருந்தது. தாமரை செயல் புரிந்தாலும் வேலு மீது கொண்ட அன்பே அவளை அனுசரித்து போக வைத்தது. ஆனால், தாமரைக்கு தன் தோட்டத்தில் கூலி வேலைக்கு வரும் பெண் தன் புருஷனை பேர் சொல்லி அதட்டுவதா? அப்படி என்ன பெரிய நட்பு… அதை உடைத்தே ஆகவேண்டும் என்ற வெறி உண்டாக, தாமரைக்கு சிரமம் இல்லாமலே சம்முவை ஒதிக்கு விட்டான் வேலு. அவன் எண்ணம் எல்லாம் தாய்க்கும் பிடிக்கவில்லை, மனைவிக்கும் பிடிக்கவில்லை அப்புறம் எதுக்கு அவளுடன் நட்பு. தன் குடும்ப அமைதி முக்கியம் வீணாக வீட்டில் ஏன் சண்டை சச்சரவு என அவன் ஒதுங்க.. புரிந்த சம்மு தானாகவே தள்ளி போய் விட்டாள். வேலு ஒதுக்கம் அவள் எதிர்பாரதது , வேதனையாக இருந்தும் நிதர்சனம் புரிய ஏற்றுக் கொண்டாள். தன் கல்யாணத்திற்கு மட்டுமே அவனை அழைத்தாள். பவி பிறந்த சமயம் என்பதால் அவன் கவனத்தில் இல்லை சம்மு.
மற்றவர்கள் என்ன சொன்னாலும் தனக்கு எங்கே போனது புத்தி , தாய்க்கு எப்போதும் சம்முவை பிடிக்காது அவர் சொல்லிய போதும் கேட்காதவன் மனைவி வந்து சொல்லிய போது தங்களுக்கான உறவை சொல்லி புரிய வைக்காமல், மகுடிக்கு மயங்கும் பாம்பாக அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவளின் தூய அன்பை தள்ளி வைத்ததுக்கு நல்ல பரிசு அல்லவா வாழ்க்கை கொடுத்து இருக்கிறது.
இராத்திரி துங்காமல் இருந்ததன் விளைவாக கண்களில் எரிச்சலோடு தன் தெக்கு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே பார்வையை கண்மாய் கரையில் வைத்தான் வேலு. நேத்து அவள் போட்ட போடில் பார்வை கூட அவள் பக்கம் திருப்ப கூடாது தான். ஆனால் தன் பிழை அவளை நோக்கி திசை திருப்பியது இல்லாவிட்டால் தென்னந்தோப்பில் இருக்க வேண்டியவன் லோடு ஏற்றிய பின்னும் ஏன் தெக்கு தோட்டத்தில் மண்ணை கொத்த போறான். மணி பார்க்க ஒன்பதை தாண்டியது இப்போதுதான் ஒருவர் ஒருவராக வருகின்றனர். கூலி வேலைக்கு சரியான நேரத்திற்கு போயிருவாங்க, பெரியத்தா சொன்ன அரசாங்க வேலை இதுதான் போலும்.
வேலு , வயலுக்கு பாத்தி கட்ட அவனருகே ஒரு சத்தம் இல்லை இது ஒரு பாட்டு, அவள் தான் சண்டி ராணி அவனை பார்த்துக் கொண்டே கரையில் நின்று பாடினாள்
“போட போட புண்ணாக்கு போடத தப்பு கணக்கு, கிறுக்கு உனக்கு இருக்கு , இப்ப எண்ணாத மனக்கணக்கு” என்று பாடல் மூலம் அவனை வெறுப்பு ஏத்த, அவன் முறைத்த முறைப்பில் கொஞ்சம் அடங்கினாலும் அசரவில்லை. கரை தாண்டி அவனருகே வந்தவள் அவன் சட்டை வைத்த இடத்தில் ஒரு தூக்கு சட்டியை வைத்தவள் வேறேதும் பேசாமல் கண்மாய் உள்ளே சென்று விட்டாள்.
அவளுக்கு தெரியும் நேத்து பேசிய பேச்சில் அவன் மனம் புண்படும் என்று, எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்பதாய் இல்லை வேறென்ன செய்வது ஒதிக்கி வைத்து பேசினானும் இந்த பாழா போன மனசு தாங்காது, அதான் சமாதான படுத்தவே இந்த தூக்கு , சம்மு எப்போதும் முட்டி நிற்கும் குணம் தான். சிறு வயதிலேயே வேலுக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டி கொள்ளும் , பின் ஏதேனும் உணவு பண்டம் செய்து அவனை சரிக்கட்டி சமாதானம் செய்து விட்டுவாள். ஆனால் குணத்தை மட்டும் மாற்றவே மாட்டாள்.
செல்லும் அவளை திரும்பி பார்த்தவன் , சிறு புன்னகையோடு தூக்கு சட்டி நோக்கி நடந்தான். ஒரு வேப்ப மர நிழலில் அமர்ந்தவன், தூக்கை திறக்க நெல் குத்தல் சோறும் ( அரிசி அவித்து அறைக்காமல் , பச்சையாக உரலில் இடித்து சமைப்பது), நாட்டு கோழி குழம்பும், ரசமும் இருக்க மனம் நிறைய ஒரு பிடி பிடித்தான் . வேலு எப்பவுமே வயிறு புடைக்க உண்பவன் அதை அறிந்தே கொடியரசி மகன் மறுசோறு கேட்கதவாரு வட்டி நிறைய பரிமாறுவார் , அவருக்கு பின் அவ்வாறு செய்வது சம்மு மட்டுமே… அவன் மனைவி தாமரைக்கு இதெல்லாம் பிடிக்காது , அளவு சாப்பாடு தான் ஆரோக்கியம் என்று பேசுவாள். தோட்ட வேலை செய்பவனின் பசி உணராமல் போனில் பார்க்கும் அட்டவணை சாப்பாடு தான் அவன் வீட்டில், தென்னை தோப்புக்கு அறுபது உர மூட்டை துக்குபவனுக்கு நாலு சப்பாத்தி எந்த மூலைக்கு காணும்… ஆனாலும் ஒரு குறை சொல்ல மாட்டான் மனைவி என்றால் அவ்வளவு பிரியம் .
மரநிழலில் சாய்ந்து கொஞ்சம் இளைப்பாற , வேகாத வெயிலில் தலையில் மண் சுமந்து மறுகரை செல்லும் சம்முவை பார்த்தான். பதினாலு வயதில் வறுமைக்கு கூலி வேலைக்கு போனாள். இன்றும் அவள் பாடு தீர வில்லை. தன் வாழ்வின் இன்றியமையாத பெண்களில் சம்முவும் ஒருவள் , அவளை வேறாக ஒரு நாளும் பார்த்ததில்லை , தன் குடும்ப பெண்களில் ஒருவர் இப்படி வெயிலில் வெந்து சாக விடுவோமா…
தாமரை கர்ப்பமாக இருக்கும் போது ஏ.சி மாட்டுனதும் , பவி பிறந்த பின் அடிக்கடி கரண்ட் போவதால் ஜெனரேட்டர் வசதி செய்ததும் நினைவில் வந்தது, மெதுவா எழுந்து காட்டை சுற்றி நடப்பது போல் அவர்கள் வேலை செய்யும் மரத்தடி வர , அங்கு தன் நண்பன் மணியுடன் பேசுவதற்கு அமர்ந்தான் , இல்லை அவளை நோட்டம் இட்டான்.
சம்மு அவனை கண்டு கொள்ள வில்லை. தன்னை நோக்கி வரும் சமாதான பேச்சை கேட்பதாயிம் இல்லை. தன் போக்கில் வேலை முடித்து உண்ண மரநிழலில் அமர்ந்தாள். அவள் பார்வை திரும்பாது கண்டு பெருமூச்சுடன் எழுந்து அவளை தாண்டி செல்லும் போது கவனித்தான் தூக்கு சட்டியில் வெறும் ரசமும் தொகையில் வைத்து சாப்பிடுவதை , அவனுக்கு புரிந்தது ஒரு பங்கு தன் வீட்டிற்கும் சென்று உள்ளது என்று பின் அவள் தாய்க்கு மூன்று வேளைக்கும் வேண்டும். சம்மு எப்போதும் சொல்வாள் அன்னமிடும் போது ஒருவருக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என்று… தொண்டை அடைக்க நடந்தான் வேலு! என் மேல் ஏன் இவ்வளவு அன்பு பெண்ணே! தான் ஒரு சுயநலவாதி என்று எண்ணியவன் மகளை விட்டு தான் மட்டும் உண்ண மாட்டேன் என்று அறிந்து அன்னமிட்ட அவளுக்கு அவன் தாய் செய்தவை நினைவு வந்து துடிக்க செய்தது .
பதினாலு வயது தொடக்கத்தில் இருந்த இருவரும் தொட்டு விளையாடும் போது அவள் சோர்வு கண்டு என்னவென வினவிய வேலுவிடம் ,
“அம்மாக்கு காச்சல்லே வேலு… நேத்து இருந்து கஞ்சி குடிக்கல, வீட்டுல ஒண்ணுமே இல்லவே… அம்மாவும் எதுவும் குடிக்கல, காசும் இல்ல முக்கு கடைல கடனா ரெண்டு இட்லி கேட்டேன் தரமாட்டேன் சொல்லிடகலே , வவுறு பசிக்கி, பசி மறக்க தான் உன்கூட விளையாட வந்தேன்…”
வேலு அவளிடம், “எங்க வீட்டுக்கு வாலே அம்மா இன்னிக்கு விசேசமாக செஞ்சாங்க… கோழி குழம்பு , மீன் வறுவல் நான் பார்த்து தான் வந்தேன்…”
ஆனால், சம்முக்கு தயக்கம் கொடியரசிக்கு தான் தன்னை பிடிக்காதே டி.வி பார்க்க போனாலும் உட்கார சொல்லாமல் நிக்க வைத்தே பத்து நிமிடத்தில் அனைத்து வெளி அனுப்பி விடுவார், சோறு இல்லை என்று அடுத்த வீட்டில் நிற்பதா அவள் மறுக்க… ஆனால் வேலு விடவில்லை அவன் தந்தையிடம் சொல்லி அழைத்து கொண்டு வந்துவிட்டான்.
நெல்லையப்பர் ரொம்ப நல்ல மனிதர் , சம்மு தந்தையோடு நல்ல பழக்கம் அதனால் அன்பகாவே வரவேற்றார். வீட்டின் முன் வந்து விட்டாலும் உள்ளே செல்லவே கால் கூசியது வேலு கை பிடித்து செல்ல, கொடியாரசிக்கு வெறுப்பு தான். பணம், பகட்டில் வாழ்பவர்க்கு அந்தஸ்து பேதம் அதிகம், கணவரும் சொல்லி செல்ல மகனிடம்,
“ அப்பு போய் குளிங்க. உடம்பு முழுக்க மண்ணு இவள நான் பர்த்துகிடுதேன்…” என்று சொல்லி அவனை அனுப்பினார்.
ஒரு புன்னகையோடு உள்ளே சென்ற வேலுவை பார்த்தவர், வீட்டையே பிரமிப்பு போகாமல் பார்த்தவளிடம் , “ஏண்டி , என்ன வேணும் உனக்கு ? …”
திகைப்பாக பார்த்த சம்மு, வேலு தந்தை உணவு தர சொல்லியும் இப்படி கேட்பவரிடம் எப்படி சொல்ல சோறு வேண்டும் என்று தயக்கமாக பார்க்க
கொடி போட்டார் ஒரு அரட்டல் , கண்ணில் நீர் பெறுக “ சோறு வாங்க வந்தேன் அத்த” கண்ணீரோடு உரைக்க
அவள் கண்ணிரில் திருப்தி பெற்றவராக “வெறும் கைய வீசி வந்த உன் பாவடையில சோற புடிச்சு போவ, போ போயி பத்திரம் எதுன எடுத்து வா போ போ .., என்று விரட்ட ,
அழுது கொண்டே வீடு வந்தவள் சாப்பாடு இல்லாமல் காய்ச்சலில் சுருண்டு படுத்திருக்கும் தாயை பார்த்து மனம் பொறுக்காமல் பாத்திரம் எடுத்து வேலு வீடு வந்தாள். அவளை பார்த்து உள்ளே அழைத்த கொடி அடுப்படி செல்ல பின்னாடி சென்ற சாம்முவை முறைத்தவர் ,
“ஏண்டி! உன் பவுசுக்கு என் வீட்டு அடுப்படி வர வருவியோ போடி வெளிய… அங்கேயே நில் நான் எடுத்தாரென்…” சொல்லி செல்ல, அவமானமாக இருந்த போதும் பசி மறக்கச் செய்தது தன்மனத்தை.
வெளியே வந்த கொடி , அவள் பாத்திரத்தை உயர்த்தி பிடிக்கவும் நிச்சயமாக பிச்சை எடுக்கும் உணர்வு தான் தோன்றியது. கலையில் வடித்த சோறும் , ரசமும் ஊற்றி அவள் முகம் பார்க்க , பெருத்த ஏமாற்றமாக உணர்ந்தாள். உள்ளே மேசையில் கறியும், மீனும் இருக்க வெறும் ரசம் சாதத்தொடு வெளியே அனுப்பும் கொடியை ஏக்கமாக பார்க்க,
கொடியோ அவளிடம்
“வாங்குவது ஓசி சோறு இதுல ஒன்பது வகை கேட்குதோ…” என கிண்டலாக கேட்க , சிறு பெண் அல்லவா உணவு வகை பார்த்து ஆசை வந்தது. கொடி எப்போதும் அப்படித்தான் சம அந்தஸ்து உள்ளவர்களிடம் மட்டுமே கலப்பார்.
தன் தாயிடம் வந்து சாப்பாட்டை கொடுக்க, வள்ளிக்கு உணவு தானம் பெற்று வந்த தம் செல்ல மகளை கண்டு நெஞ்சம் தீ பிடித்தது , சோறும் பழையது, அடி ரசம் போல மீந்த சக்கையோடு புளிச்ச வாசனை அடித்தது. மகளை அனைத்து வள்ளி ஒரு பாடு ஒப்பாரி வைக்க , மறுநாள் தன் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டு கூலி வேலைக்கு சென்று விட்டாள். உணவுக்காக இனி யாரிடமும் கையேந்த கூடாது என்று, ஒரு ஆள் சம்பளம் இல்லாமல் பதி கூலியாவது கிடைக்குமே… அது போதும் இருவர் வயிற்று பாட்டிற்கு , இனி யாரிடமும் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏழை என்றாலும் வகை வகையாக இல்லாமல் வயிறார உண்டவள் தான் , போதும் படிப்பு என்ற முடிவோடு.
error: Content is protected !!