Skip to content
Post Views: 16,071
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 2
நிரஞ்சன் மெதுவாக எழுந்து வந்தான். மனைவியை கண்டு கொள்ளவே இல்லை. தாய், தந்தை அருகே வந்து அமர்ந்து கொண்டான்.
நர்மதா டீ, காபி ரெண்டும் கலந்தாள். முகம் லேசாக நகைத்தது, அவளுக்கு தெரியும். இப்போது ஹாலில் ஓடும் பேச்சு அவளை பற்றி தான் என்று… தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தும் காதில் விழாதது போல கடந்து, அவர்களுக்கு காலை ஆகாரமும் கொடுக்க வேணும்.
Advertisement
சுசீலா ஆரம்பித்தார், “ஏண்டா நிரஞ்சா, கல்யாணம் ஆன புதுசுல தான் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவாங்க. வருசம் ஏழு ஆகி போச்சு, இப்பவும் என்ன அம்மா வீடு. நம்ம குடும்பம் என்ன, பிள்ளை என்னன்னு பார்க்க மாட்டாளா?…”
“ விடு சுசீ. எல்லாருக்கும் அம்மா வீடுன்னா ஒரு ஆசை தான். அதுவும் உடனே போய் பாக்குற தூரம் கிடையாது. மருமகளும் வீடு, பிள்ளைக, வேலைன்னு தான் ஓடுது. லீவு தானே போயிட்டு வரட்டும். நம்ம பேத்திகளும் லீவுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்..” என்று தாமோதரன் புரிய வைக்க,
“ஏன் சொல்ல மாட்டீங்க. என் மகன் ஒன்னும் வாங்கி போடாம, எங்கேயும் கூட்டிட்டு போகாம காய போட்டு வச்சு இருக்கான். அதான் அம்மா வீட்டுக்கு பறக்குறா…” நக்கலாக சுசீலா சொல்ல, நிரஞ்சன் முகம் மாற தொடங்கியது.
Advertisement
“ஏறின காரு, வைர தோடு, ஏசி வீடுன்னு அம்புட்டு பாக்குறான் என் மகன். அவங்களுக்கு செய்றதுக்கு என்னைக்காவது கணக்கு பாக்குறானா?… காச சிந்தி வாங்கி கொடுக்குறான். ஆனாலும், அவளுக்கு அவங்க அம்மா வீடு தான் உசத்தி…”
Advertisement
“ இதுல என்ன பெருமை. அவன் தான் பாக்கணும். அவன் பொண்டாட்டி, அவன் பிள்ளை. அவங்களுக்கு தான் சம்பாதிக்கிறான். அவங்களுக்கு செய்றது அவன் கடமை, இதுல என்ன இருக்கு சுசீ… அந்த பிள்ளை என்ன அடிக்கடியா அம்மா வீட்டிக்கு போகுது. எப்பவோ தான சுசீ. உன் மூத்த மருமகளை கொஞ்சம் நினைச்சு பாரு…” என்று கணவர் ஒரு குட்டு வைக்க,
“ஆமா, உங்களுக்கு சின்ன மருமக தான் உசத்தி. வக்கணையா செஞ்சு குடுக்குறா, அதான் கையை அந்த பக்கம் தட்டுறீங்க… நான் என்னத்த குறையா சொன்னேன். வீட்டுக்குள்ள நுழையும் போதே எம் மகன் கண்ணு பொண்டாட்டிய தான் தேடும். இந்த பத்து நாளுக்கு அவன் தனியா கெடக்கணுமே… சாப்பாட்டை கூட விடுங்க, நான் எம் உடம்பை பார்க்காம செஞ்சு குடுப்பேன். அவன் துணி துவைக்கணும், தேவையானதை எடுத்து கொடுக்கணும், காரை துடைக்கணும், அவன் ரூம் சுத்தம் பண்ணனும். அவன் எல்லாத்துக்கும் நர்மதாவ தான் தேடுவான். அவனுக்காக தான் சொன்னேன்…” என்று சுசீலா முடித்து கொள்ள,
மெளனமாக காபியை கொண்டு வந்து வைத்தாள் நர்மதா. லேசாக ஓர பார்வை கணவனை பார்க்க, மனம் பக்கென்று இருந்தது. என்ன பேசி வச்சாங்க தெரியலையே!…
Advertisement
மெதுவாக உள்ளே வந்த நர்மதா, தன் வேலையை தொடர, அடுத்த கால் மணி நேரம் சென்று நிரஞ்சன் கிட்சன் வந்தான்.
என்னவோ என்று மனைவி பார்க்க, தண்ணியை எடுத்து குடித்தான்.
நர்மதா வாட்டர் என்று கத்துபவன், அவனே வந்து தண்ணியை எடுத்து குடிப்பது என்றால், நர்மதா யோசிக்கும் போதே,
“எனக்கு என் பொண்டாட்டி பிள்ளைக தான் உலகமே தெரியுமா?…” என்று தொடங்க,
ஒன்னுமே புரியாமல் முழித்தாள் நர்மதா.
“உங்களுக்காக தான், உங்களை வசதியா வாழ வைக்க தான் நான் ஓடி ஓடி சம்பாதிக்கிறேன். ஆனா எம் மேல உனக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லை. நான் எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லை. உனக்கு உங்க அம்மா வீடு தான் முக்கியம். அப்புறம் பிள்ளைக, அதுக்கு அப்புறம் தான் புருசன். ஆனா, நான்… மொத வாங்குன டைமன் ரிங் எனக்கோ, எங்க அம்மாக்கு கூட வாங்கல. உனக்கு தான் வாங்கினேன். அதுவும் நிச்சயத்துக்கு முன்னாடியே…”
அதையும் நர்மதா அறிவாள். அப்போது பேசி முடித்து இருந்தார்கள் பெண், மாப்பிள்ளை இது தான் என்று… நிச்சயம் கூட செய்ய வில்லை. நர்மதாவின் இருவத்தி மூணாவது பிறந்தநாள் தொடங்க, அவளை பார்க்க நேரிலே வந்து விட்டான் நிரஞ்சன்.
நர்மதாக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம் திகைத்து போய் தான் பார்த்தாள் அவனை… நிச்சயம் முடிந்த பின் தான் போன் கூட பேச வேண்டும் என்று தாய் விஜயா கட்டு படுத்தி வைத்து இருக்க, இவன் என்னவென்றால் நேரிலே வந்து குதித்து விட்டான்.
அழகான வைர மோதிரம் பரிசளிக்க, பூரித்து போனாள் நர்மதா. இப்போதே தன்னை இவ்வளவு தாங்குகிறான் என்று… நிச்சயம் பண்ணும் போது நிரஞ்சன் தான் அவளுக்கு போன் வாங்கி கொடுத்தது. அதற்கு முன் படிக்கும் பெண் என்று போன் அவளிடம் கிடையாது.
நிச்சயம் முடித்து மூணு மாதம் இருந்தது கல்யாணத்துக்கு… அப்போதெல்லாம் இடைவிடாமல் கிப்ட் கிடைக்கும். சேரி, சுடிதார், குட்டி கம்மல், ஹேன்ட் பேக், காஸ்மெட்டிக் என்று ஏதாவது ஒன்று வந்து விழும்… நிரஞ்சன் என்றால் இப்படி தான், வாழ்க்கை இவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று நிறைய நிறைய கற்பனை நர்மதாக்கு…
இப்போதும் இதற்கெல்லாம் குறைவில்லை. ஆனாலும் தன் கணவன் நிரஞ்சன் யார்? பாம்பா அல்லது பழுதா என்று கணிக்க முடியாமல் ஏழு வருடத்தை கடந்து விட்டாள். தன் முகத்தையே பார்த்து நிற்கும் கணவனை மறந்து ஏதோ ஒரு யோசனையில் இருந்தவள், அடுப்பில் வரும் சத்தத்தில் அவசரமாக திரும்பி பார்த்தாள்.
முருங்கை கீரை நீர் வற்றி போய் இருந்தது. அச்சோ என்று அவசரமாக தண்ணீர் ஊற்றி, நன்றாக கிண்டி விட்டு மூடி வைத்து மூடி விட,
அவள் பதிலை எதிர்பார்த்து நின்ற நிரஞ்சன். அவளை செயலை கவனித்து,
“இப்போ என்ன பண்ண?…”
“என்ன பண்ணேன்?…”
“கீரைக்கு என்ன பண்ண?…” என்றான் காட்டமாக.
“கீரை அடி பிடிக்கிற மாதிரி இருந்துச்சு. அதான் கொஞ்சம் தண்ணி ஊத்தி விட்டேன்…” என்றாள் யோசனையாக.
இதில் என்ன குறை என்று முகம் சுருங்குது…
“ம்… கீரைக்கு தண்ணி ஊத்த கூடாது. அப்படியே தெளிச்சு விட்டு கிண்டி மூடி வைக்கணும். அப்புறம் பத்து நிமிசத்துக்கு பின்னாடி திரும்பவும் தண்ணி தெளிச்சு கிண்டி விட்டு மூடனும். அப்ப தான் கீரையில சத்து இருக்கும்…” என்று பெரிய விளக்கம் கொடுக்க,
“ஏங்க, முருங்கை கீரை வேக லேட் ஆகும். நான் அடுப்புகிட்டே நிக்க முடியுமா… மத்த வேலை பார்க்க வேணாம். கொஞ்சம் தண்ணி தான் கூட ஊத்திட்டேன்…” என்று சுணங்கி கொண்டு தான் சொன்னாள். இதெல்லாம் ஒரு காரணமா…
“சமைக்கிற முறைன்னு ஒன்னு இருக்கு அது மாற கூடாது. உன்னை நம்பி தான நாங்க எல்லாம் சாப்பிட உட்காருறோம். இங்க பாரு நர்மதா, செய்றது முக்கியமில்லை. நல்லதை செய்யணும்….”
“ஒரு கீரைக்கு இவ்வளவு பெரிய வாக்குவாதமா?…”
“கீரை மட்டும் இல்லை. நீ எல்லா காயும் அப்படி தான் செய்யிற… அன்னைக்கு என்ன வச்ச?… ஆம், பீட்ரூட் பொரியல். அதுக்கும் இப்படி தான் வேக வச்சு, தாளிச்சு எடுத்த… கீரையோ, காயோ கலர் மாற கூடாது. சத்தும் போக கூடாது. ஆனா, உனக்கு வேலைக்கு போற அவசரம். நேரத்துக்கு போகணும்ன்னு எங்களுக்கு என்னத்தவோன்னு செஞ்சு வைக்கிற…” என்று விடாமல் பேசினான் நிரஞ்சன்.
“ சரிங்க, இனி அப்படி செய்யல…” விட்டு கொடுத்தாள் நர்மதா.
“இது மட்டும் இல்லை நர்மதா. அப்புறம் ஒரு நாள் முட்டை கோஸ் பொரியல் வைக்க, குக்கர்ல ஒரு விசில் விட்டு எடுக்குற…”
“அது கோஸ் கூட பாசி பருப்பு வேக லேட் ஆகும். லேசா ஒரு விசில் விட்ட…” என்று நர்மதா இழுக்க,
“அதுதான் ஏன்னு கேக்குறேன். எல்லாத்தையும் பொறுமையா, அவசரமில்லாம செஞ்சா என்னவாம். உனக்கு வேலைக்கு போகணும். அது தான் காரணம்.அப்படி என்ன குடும்பத்தை விட என் அடையாளம் எனக்கு முக்கியம்ன்னு இருக்குறது. ஒரு பொண்ணுக்கு அடையாளம், அவ குடும்பம் மட்டும் தான், புரிஞ்சுக்க…” என்று அடுத்தடுத்து ரயில் பெட்டியாக வார்த்தையை வாரி வழங்க,
ஒரு பக்கம் கீரையை கிளறி கொண்டே அனைத்தையும் கேட்டு முடித்தாள் நர்மதா. போதும் என்று தோன்றும் அளவுக்கு பேசிய பின் தான் நகர்ந்தான்.
அடுப்படி தாண்டி ஒரு அடி தான் எடுத்து வைத்து இருப்பான். அடுத்து என்ன தோன்றியதோ, வேகமாக வந்தவன், மனைவி மூடி வைத்து இருந்த கீரையை ஒரு போட்டோ எடுத்தான்.
“என்ன?…” என்று அதிர்ந்து போய் நர்மதா கேட்க.
“பின்னாடி ஒரு நாள் நீ மாத்தி பேசுவ… அதுக்கு தான் ஆதாரம் எடுக்கிறேன்…” என்று அசால்ட்டாக நகர்ந்து விட,
நர்மதா முகம் தான் சுண்டி போனது. அதற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. அன்று ஒரு நாள் உடை எடுக்க குடும்பமாக போகும் போது, லெமன் எல்லோ கலர் சட்டை நர்மதாக்கு ரொம்பவும் பிடித்து போக, கணவனை வற்புறுத்தி எடுக்க வைத்து விட்டாள்.
நர்மதா நேரமோ என்னமோ அந்த சட்டை ஒரு தடவை போட்ட பின் பழைய துணி மாதிரி போக, விடுவானா நிரஞ்சன். ஒரு நாள் ரெண்டு நாள் அல்ல. ஒரு மாதமும் வைத்து செய்தான்.
“ நம்ம குணமான புருசன் குணம் தெரிஞ்சும் நம்ம வாய் நிக்குதா, கழுதை…” என்று அடுத்த ஒரு மாதமும் நர்மதா தன்னையே, நொந்து கொண்டாள்.
அடுத்த ஒன்றிற்கும் நர்மதா முன் நிற்காமல் கணவனையே தான் நிற்க வைப்பாள். அப்படி இருந்தும் ஒன்றில் மாட்டி கொண்டாள்.
“ஏங்க, ஐநாக்ஸ்ல ஒரு படம் வந்துருக்காம். ரொம்ப நல்ல இருக்குன்னு எங்க டீச்சர் மகதி மேம் சொன்னாங்க.. உங்க நேரம் பார்த்து போலாமா… உங்க பொண்ணுங்களும் வெளிய போகணும்ன்னு கேட்டாங்க…”
“அந்த படம் டீஸர் ஒன்னும் நல்ல இல்லை நம்மு. எனக்கு என்னமோ நல்ல இருக்குன்னு தோணல…” யோசனையாக நிரஞ்சன் சொல்ல,
“ஏங்க, எங்க மேம் சொன்னாங்க. அவங்க அப்படி லேசா எதையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டாங்க…” என்று சொன்னவள்,
எதற்கு நத்தையை தூக்கி நைட்டியில் போடணும், அது முண்டிகிட்டே கிடைக்கணும் என்று நினைத்தவள், “சும்மா தாங்க சொன்னேன். நீங்க சொல்றது தான். எனக்கு அவ்வளவா ஒன்னும் தெரியாது…” என்று உஷாராக பின் வாங்கி விட்டாள்.
அடுத்த கொஞ்ச நாள் அமைதியாக தான் போனது. அப்புறம் நிரஞ்சன், அவனாக குடும்பத்தை அழைத்து கொண்டு அந்த படத்திற்கே செல்ல, நர்மதா சொன்னதை அவளே மறந்து விட்டாள்.
நிரஞ்சன் பொண்டாட்டி சொல் கேட்காதவன் அல்ல. அவள் சொன்னாள் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
நிரஞ்சன் முன்பே சொன்ன மாதிரி படம் படு மொக்கையாக இருக்க, நெற்றி கண்ணை திறந்து விட்டான்.
“நான் அப்பவே சொன்னேன் நர்மதா, நீ தான் கேட்கல. படம் பார்க்க நல்லாவே இல்லை, கொஞ்ச நேரம் கூட உட்கார முடியல. பிள்ளைக ரெண்டு பேரும் தூங்கிட்டாங்க. இந்த வீக் உன்னால போச்சு. வாரம் முழுக்க வேலை இருக்கு, ஒரு நாள் குடும்பத்தோடு ஜாலியா போக முடியுது. இந்த நாளை எப்படி கெடுக்கன்னு நினைப்போடு இருந்தையா…” விடாமல் எகிறி கொண்டு இருந்தான் நிரஞ்சன்.
“ஏங்க, நீங்க தான் விடாப்பிடியா சினிமாக்கு கூட்டி வந்தீங்க. கடைசில என்னை சொல்றீங்க…” என்று கடுப்பாக நர்மதாவும் சொல்ல,
மனைவி பேச்சில் அதிர்ந்து போனவன், “ஏய் நர்மதா, நீ தான இந்த படம் நல்ல இருக்கு, போகலாம்னு சொன்ன…”
“ நானா… நான் எப்பங்க அப்படி சொன்னேன்…” என்று நர்மதா கேட்க. நெஞ்சை பிடித்தான் நிரஞ்சன்.
“ஏய் நர்மதா, நீ தான் இந்த படம் நல்லா இருக்காம். போகலாம்ன்னு சொன்ன, உனக்காக தான் வந்தோம்…”
“நான் ஏங்க சொல்ல போறேன். நான் அப்படியெல்லாம் சொல்லல…” நர்மதாக்கு சொன்ன நியாபகமே இல்லை.
“ஏய் என்னடி, நீ தான மகதி மேம் சொன்னாங்க சொல்லி என்னை கூட்டிட்டு போக சொன்ன…” என்று நிரஞ்சன் எடுத்து கொடுக்க,
“மகதி மேம்மா… நாம தான் சொல்லி இருப்போமோ, தெரியலையே.. இவ்வளவு தூரம் சொல்கிறான் என்றால் நீதான் நர்மதா…” என்று நினைத்த போதும் வெளியே வார்த்தை விட வில்லை.
ஒற்றை சாரி, மறந்துவிட்டேன் என்று சொல்லலாம் தான். அத்தோடு விடுபவன் இல்லையே கணவன். அதனால் அவள் அமைதியாக நிற்க,
நிரஞ்சனுக்கு, “பேச்சை மாற்றி சொல்கிறாள். மாத்தி மாத்தி பேசுற…” என்று பதிந்து போனது. அதை யோசித்த படியே தன் சமையல் வேலைகளை எல்லாம் முடித்தவள், ஊருக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
அவள் வரும் வரை வீட்டிற்க்கு தேவையான மளிகை, சோப்பு, சாம்பு,அயன் செய்த உடைகள், ரூம் ஸ்பிரே வரை எடுத்து தயாராக வைத்து பின் தான் பிள்ளைகள் உடன் கிளம்பினாள்.
ஹாலில் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து இருந்த மாமியாரிடம்,
“அத்தை, நாங்க கிளம்புறோம். பருப்பு பொடி, வத்த குழம்பு தொக்கு வரை ரெடியா இருக்கு. கரண்ட் பில் கட்டியாச்சு, வேலைக்கு வாரவங்க, குப்பை கொண்டு போறவங்க வரை எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நானும் ஒரு வாரத்தில் வந்துடுவேன்…” நயந்தே பதில் சொல்ல,
“ம்ம்ம்…”
“எங்க ஊர் பக்கம் சின்னாள பட்டி பட்டு சேலை, சக்கம் பட்டி சுங்கடி சேலை ரொம்ப பேமஸ். உங்களுக்கு கூட ஒரு தடவை வாங்கி வந்தேன் தான. இந்த தடவை போற பிளான் இருக்கு. உங்களுக்கு எடுத்து வரவா அத்தை… உங்களுக்கு என்ன கலர் வேணும். ஆனா, நீங்க தான் எல்லா கலர்லையும் சேலை வச்சு இருக்கீங்களே…” என்று குரல் தாழ்ந்து சொல்ல,
“ம்ம்… வெங்காய கலர்ல ஆரஞ்சு பார்டர் போட்டது என் கிட்ட இல்லை. அது மாதிரி வித்தியாசமா இருந்தா எடுத்து வா… அப்புறம் நம்ம வித்யாக்கும் சேர்த்து எடுத்து வா… காசு வச்சு இருக்க தான, வேணும்ன்னு கேளு…” என்றவர்,
“ வேற ஒன்னுமில்லை. பிள்ளைகளை பார்த்துக்க, சின்ன பாப்பாக்கு சளி இருக்கு. சுடு தண்ணி மட்டும் கொடு. வேற நான் என்னத்த சொல்ல, உம் புருசனை உனக்கே தெரியும். உச்சாணி கொம்பு ஏறி உட்கார முன்ன வீடு வந்து சேரு…” என்றவருக்கு, அவருக்கு ஏற்ப பதில் சொல்லி, மாமனாரிடம் பேசி விடை பெற்ற பின் கணவனை தேடி சென்றாள்.
பிள்ளைகள், அம்மாச்சி வீடு செல்லும் உற்சாகத்தில் இருந்தார்கள்.
“என்னங்க…” என்ற சத்தத்திற்கு நிமிர்ந்து மட்டும் பார்த்தான்.
“நாங்க கிளம்பிட்டோம். பார்த்து இருங்க, நல்லா சாப்பிடுங்க, நேரத்துக்கு வீட்டுக்கு வாங்க…” என்று நர்மதா சொல்லும் போதே,
“இவ்வளவு அக்கறை இருந்தா இங்கேயே இருக்க வேண்டி தான. நான் ஒன்னும் பொறுப்பில்லாதவன் கிடையாது. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்…” சூடாக தான் பதில் வந்தது.
ஆனாலும் நர்மதாக்கு லேசாக சிரிப்பு வந்தது. நிரஞ்சனுக்கு எப்படியும் பொண்டாட்டி, பிள்ளைகள் வேணும். அதுவும் நர்மதா இல்லாமல் வேலையே ஓடாது. பாசமெல்லாம் இருக்கு தான். ஆனாலும்?…
மெல்ல நர்மதா நகர, உடன் வந்தான் நிரஞ்சன். ஆச்சர்யமாக மனைவி பார்க்க, தன் கையில் இருந்த ஒரு சிறு பெட்டியை அவளிடம் கொடுத்தான்.
திகைத்தவள் திறந்து பார்க்க, ஒரு குட்டி கை ஜெயின் இருந்தது. அவளின் தம்பி செழியன் மகனுக்கு… அவன் முதல் பிறந்தநாளை முன்னிட்டு தான் சொந்த ஊர் பயணமே. பிறந்த நாள் பரிசை மதுரை சென்று தான் வாங்க வேண்டும் என்று நினைத்து இருக்க, கணவன் முன்பே எல்லாம் செய்து விட்டான்.
இது தான் நிரஞ்சன். இப்படியும் இருப்பான், அப்படியும் இருப்பான். எந்த வகையிலும் கணக்கீடு செய்ய முடியாது.
தன்னையே நோக்கும் மனைவியை கண்டு கொள்ளாமல்,
“வாங்க நானே கொண்டு போய் விடுறேன்…” என்று கூட்டி சென்றான்.
இரயிலில் தான் செல்கிறார்கள். தனியாக இல்லை, உடன் அவள் அக்கா பிருந்தா. அவளின் இரு மகன்கள் வருகிறார்கள். பிருந்தாவின் குடியிருப்பும் சென்னை தான்.அவள் கணவன் போலீஸ், அவள் பேங்கில் வேலை பார்க்கிறாள்.
முதலில் பிருந்தாவுக்கு தான் சென்னையில் வரன் வந்தது. பெரிதாக யோசித்து, விசாரித்து என்று பல கட்டத்துக்கு பின் தான் அவ்வளவு தொலைவில் மகளை கொடுத்தார் பாலமராத்தான்.
நர்மதாக்கும் சென்னையில் இருந்தே முதல் வரன் வர, அவ்வளவு யோசிக்க வில்லை. அதான் அருகில் அக்கா இருக்கிறாளே… ஒருவருக்கொருவர் துணை இருந்து கொள்வார்கள் என்று பெரிய மகளுக்கு பார்த்த ஊரிலே சின்ன மகளை கட்டி கொடுத்து விட்டார்.
முக்கால் மணி நேரத்தில் பிருந்தா வீடு செல்லும் தொலைவு தான் என்ற போதும் அப்படி ஒன்றும் அக்கா, தங்கை செல்ல மாட்டார்கள். அடிக்கடி கூட பிறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும் படி நிலமை இல்லையென்றும் சொல்லலாம்.
இப்படி ஊர் செல்லும் போது மட்டும் தான் பார்த்து கொள்வார்கள். மத்த படி போனில் மட்டும் தான் பேச்சு வார்த்தை…
நிரஞ்சன், மனைவி, பிள்ளைகளை இரயில் ஏற்றி விட்டவன், சம்பிரதாயமாக பிருந்தாவிடம் நலன் விசாரித்து ஒதுங்கி கொண்டான். பிருந்தா, நிரஞ்சனுக்கு மேல் பேசும் ரகம். அதனால் தள்ளியே நிற்பான்.
பிள்ளைகள் நீண்ட நாள் சென்று பார்க்கும் அண்ணங்களுடன் சேர்ந்து விளையாட, அவர்களின் கோட்ச் பார்த்து மனைவியை முறைத்தான் நிரஞ்சன்.
அவன் பொதுவாக ஃப்ளைட் தான் தேர்வு செய்வான். அப்படி இல்லாத பட்சத்தில் ஏசி கோட்ச் இரயில் தான். நர்மதா பார்த்து இருந்தது காற்றோட்டமான கம்பி வைத்து கோட்ச். அதற்கு தான் முறைப்பு…
பிருந்தா, நர்மதா இருவரும் சிறுவயதில் இரயிலில் செல்லும் போது சன்னல் இருக்கைக்கு பெரிய போராட்டமே நடக்கும். காற்றோட்டமாக வெளியில் தெரியும் மரம், ஊர், கடை என்று எல்லாவற்றையும் எண்ணி கொண்டு வருவார்கள். மதுரை டூ திருச்சி பிருந்தா சன்னல் ஓரம் இருந்தால், திருச்சி டூ விழுப்புரம் நர்மதா என்று உடன்படிக்கை செய்து அமர்வார்கள். அதெல்லாம் ஒரு பொற்காலம்.
மீண்டும் ஒரு முறை அந்த காலம் வராது. ஆனால், அந்த நினைவுகளை மீட்டெடுக்கலாம் அல்லவா… கணவன் உடன் செல்லும் போது வாய்ப்பில்லை. தனியாக செல்லும் போது தேர்வு செய்து கொள்வார்கள். காலை ஒன்பது மணிக்கு ஏறினால், மாலை ஐந்து மணிக்கு மதுரை போய் விடும்.
பிள்ளைகள் விளையாட, அக்கா, தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் பேச… அதற்கு தான் பிளான் செய்து, டிக்கெட் பற்றி கணவன் கேட்கும் பொது கூட, “என் அக்கா பார்த்து கொள்வாள்…” என்று விட்டாள். கடைசியில் கணவனிடம் நன்றாக மண்டகப்படி நடந்தது.
பிள்ளைகளை கொஞ்சி விட்டு நிரஞ்சன் இறங்கி கொள்ள, பின்னொடு வந்தவள்,
“என்னங்க…” என்று அழைத்து,
“குறை இல்லாத மனுசங்க இந்த உலகத்துலே இல்லை. எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும். அது நமக்கு தெரியாது. நம்ம கூட இருக்ககவங்களுக்கு கண்டிப்பா நம்ம குறை என்னன்னு தெரியும்…” என்றவள்,
“அப்படித்தான் நானும்… சின்ன சின்ன தப்பு, ஞாபக மறதி எல்லாம் சகஜம். எல்லாருக்கும் இயல்பா இருக்கும். முழுக்க முழுக்க நிறைவான ஒரு ஆளை இந்த உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்காது. சின்ன சின்ன தப்பு, சண்டை, மீறுதல்களை சரிகட்டடி போறது தான் குடும்பம்…”
“குறை, நிறைகளோடு இருக்குறது தான் மனுசங்க, குடும்பம், சமுதாயம், உலகம், வாழ்க்கை. அதை தாண்டி வேற ஒன்னு கிடையாது…” என்றவள் வேகமாக நகர்ந்து விட்டாள்.
அடுத்து அவன் பேச்சை எல்லாம் கேட்க முடியாது. இப்படி அவசரத்தில் பேசி விட்டு, எஸ்கேப் ஆனால் தான் உண்டு…
error: Content is protected !!