Skip to content
Post Views: 17,393
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 28
நிரஞ்சன் கடை திறப்புக்கு என்ன வாங்குவது, எப்படி செல்வது என்று பெற்றோரோடு கலந்து பேச முகுந்தன் குடும்பம் சென்றது. வித்யா உடன் வரும் போது கூட முகுந்தன் எதையும் தவறாக நினைக்க வில்லை.
என்ன வாங்கலாம் என்று பேச ஆரம்பிக்க… எதையும் பட்டென்று கேட்டு விடும் வித்யா. இப்போதும் அப்படியே பேசி விட்டாள்.
Advertisement
“என்ன வாங்க போறீங்க. அதான் அவ்வளவு பணம் கொடுத்து இருக்கீங்க தான…” என்று வித்யா சொல்ல,
“என்ன பணம்?.. முகுந்தா நீ எதுவும் பணம் கொடுத்தீயா?…” என்று தாமோதரன் மகனிடம் கேட்க.
“நிரஞ்சன் என் கிட்ட கேட்கவே இல்லை. கடை ஆரம்பிக்க போறேன்னு கூட சொல்ல.. கடை திறப்பு மட்டும் தான் சொன்னான்..” என்று வருத்தமாக சொன்னவன்,
Advertisement
“நீ ஏதாவது சொல்லாத வித்யா…” என்றான் கடுமையாக.
Advertisement
“நான் சும்மா எதையும் சொல்லல.. உங்க அப்பா கிட்ட கேளுங்க. நம்ம கிட்ட பணம் வாங்கி, உங்க தம்பிக்கு தான் கொடுத்து இருக்கார்…”
“வாய மூடு வித்யா. நிரஞ்சனுக்கு நாங்க எதுவும் பணம் தரல.. கடை திறப்பு பத்தி தான் எங்க கிட்டவும் சொன்னான்..” என்று சுசீலா சொல்ல,
“நீ அமைதியா இரு சுசீலா…” என்ற தாமோதரன்,
Advertisement
“அப்படி என் சின்ன மகனுக்கு பணம் கொடுத்தா தான் என்ன வித்யா?.. அவனும் எங்க மகன் தான். முகுந்தன் எப்படியோ அப்படி தான் நிரஞ்சனும்… இவனுக்கு கஷ்டம்ன்னு போது குடுத்த மாதிரி நிரஞ்சனுக்கு கொடுத்த என்னவாம்…” அமைதியாக தாமோதரன் கேட்டார்.
“இவருக்கு ரொம்ப கஷ்டம் மாமா. வீட்டு செலவு எங்க எதிர்பார்ப்பை மீறி அதிகம் தான். என் நகை எல்லாம் வச்சாச்சு. இதுல உங்களுக்கு பணம் கொடுக்க லோன் போட்டு தான் கொடுத்தார். அவ்வளவு பணம்… திடீர்னு கேட்டதும் என்ன பண்ண? இப்போ எங்களுக்கு அது கடன் தான்…”
“எல்லாம் யோசிச்சு தான் வீடு கட்ட இறங்கி இருக்கணும். வீட்டு செலவு நாம நினைச்சதை விட எப்பவும் ஒரு படி கூட தான் வரும். அதையும் யோசிச்சு தான் பிளான் போட்டு இருக்கணும்…” கண்டிப்பாக தாமோதரன் சொல்ல,
“கொடுத்த பணத்தை நீங்க கேட்பீங்கன்னு நாங்க நினைக்கலையே…” என்றாள் வித்யா.
“அதுக்கு நாங்க என்னம்மா பண்ண முடியும். நாங்களும் நினைக்கல… சின்ன மகன் நம்ம கூடவே தான் இருக்கான். பெரிய மகன் தள்ளி நிக்குறான். அவனை செட்டில் பண்ணனும்ன்னு தான் பணம் கொடுத்தோம். அப்போ எங்க பார்வையிலே முகுந்தன் கஷ்ட படுற மாதிரி இருந்துச்சு. இப்போ நாங்களே கஷ்ட படுரோம். தனியா இருக்கோம். எங்க பாதுகாப்புக்கு பணம் அவசியம். நாளைக்கு எனக்கோ, என் மனைவிக்கோ ஒன்னுன்னா எங்க கையில பணம் இருந்தா.. எந்த மகனையும் எதிர் பார்க்காம நாங்களே பார்த்துப்போம். அதுக்காக தான் பணம் கேட்டேன். நீ நினைக்கிற மாதிரி நிரஞ்சனுக்கு கொடுக்க இல்லை. உண்மையா நிரஞ்சன் எங்களை எதிர்பார்க்கல…”
“அப்புறம் ஏன் அவ்வளவு அவசரமா பணம் கேட்கணும். அதுவும் பெத்த மகன்கிட்ட.. நாங்க என்ன உங்களை ஏமாத்தவா போறோம் மாமா. ஒரு கோடி லோன் கட்ட எத்தனை வருசம் ஆகும். சம்பள பணத்தை லோனுக்கு போட்டாச்சு. வாடகை பணம் மட்டும் தான் எங்களுக்கு…”
“நான் ஒன்னும் செய்ய முடியாது வித்யா. எங்களுக்கே வாழ்க்கையை பத்திய பயம் வந்துருச்சு. அதை கொடுத்தது நீங்க தான்…” என்று கணவன் சொல்லியதும், என்ன சொல்கிறார் என்று பார்த்தார் சுசீலா.
“நான் என்ன மாமா பண்ணேன். எனக்கு நியாயமா சேர வேண்டியதை கேட்டேன். கடைசில நான் தான் தப்புன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க…” என்று வித்யா சொல்ல,
“உன் மேல எனக்கு உண்மையா எந்த கோபமும் இல்லை. என் கோபம் எல்லாம் என் பெரிய மகன் மேல மட்டும் தான். உன் நியாயத்தை நான் புரிஞ்சுகிட்டேன். அதனால் தான் வித்யா உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, சொத்தை சமமா பிரிக்க சரின்னு சொன்னேன்…”
“நான் என்னப்பா தப்பு பண்ணேன்…” என்று முகுந்தன் வர,
“உண்மையா என் கோபம் உம் மேல தான் முகுந்தா… உன் திட்டம் தான் என்ன?… நிரஞ்சன் கூட கோபாகாரன் தான். ஆனா நம்பிக்கையானவன். எதுவும் நேருக்கு நேர் தான். ஆனா, நீ…” என்று தந்தை சொன்னதும், பதறி போனான் மகன்.
“அப்பா… நான் என்ன பண்ணேன். வித்யா இப்படி இடையில வந்து பேசுவான்னு நான் நினைக்கல.. எல்லோருக்கும் நல்லதுன்னு தான் முடிவு எடுத்தேன். அது தப்பா பேச்சு. உண்மையா பாதிக்கப்பட்டது நான் தான்..” என்று முகுந்தன் சொல்ல, புரியாமல் பார்த்தாள் வித்யா.
“என்ன பாக்குற வித்யா. உன் குணம் எனக்கு நல்லா தெரியும். உன்னால கூட்டு குடும்பமாக இருக்கவே முடியாது. வெளிநாட்டுல நாம இருந்த மாதிரி எங்க அம்மா கிட்ட உன்னால இருக்க முடியாது. நான் படிச்சது வளர்ந்தது எல்லாம் ஹாஸ்டல் தான். எனக்கு, எங்க அம்மா அப்பா மேல பாசம் இருந்தாலும் கூடவே இருக்கணும் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால், நிரஞ்சன் அப்படி கிடையாது. அவன் எப்பவுமே எங்க அம்மா செல்லம், அப்பா கூடவே தான் இருப்பான். இந்த வீடு கட்டும் போது கூட இருந்தது நிரஞ்சன் தான். அதனால, இந்த வீட்டு மேல நிரஞ்சனுக்கு தனி பிரியம். உன்னால கூட்டு குடும்பத்தில் இருக்க முடியாது. எனக்கும் பெருசா எந்த ஆசையும் கிடையாது. அதனால என் தம்பிக்கு இந்த வீட்டை கொடுக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கல…”
“அதனால அப்பா தான் அந்த வீட்டை நிரஞ்சன் எடுத்துக்கட்டும். நீ மிச்சம் இருக்குற இடம் எல்லாம் நீ எடுத்துக்க அப்படின்னு சொன்னாரு… எனக்கு அது சரின்னு பட்டுச்சு. எனக்கு சென்னையில இடம் இருக்கு, நானும் வீடு கட்றேன். இன்னொரு வீடு எனக்கு வேணும்னு தோணல. அதனால அப்பா எனக்கு பணமும் கொடுத்தார். ஏன்னா இந்த வீட்டை விட ஊர்ல இருக்கிற இடம் தோப்புபோட மதிப்பு கொஞ்சம் கம்மிதான். எல்லாம் சரியாத்தான் போச்சு, நீ தேவையில்லாம பேசுற வரைக்கும்.. அப்பா பணம் கொடுத்தால் அது கடன் கிடையாது. என்னால எப்ப முடியுமோ அப்ப நான் கொடுத்துக்கலாம்.. என் தம்பியும் கேள்வி கேட்க போறது இல்ல…”
“நர்மதா, எங்க அம்மா, அப்பாவ நல்லா பாத்துக்கும். நீ பார்க்க மாட்ட எனக்கு தெரியும். உனக்கு கூட்டு குடும்பம் ஒத்து வராது. அதனால நானே தான் தள்ளி நின்னேன். நீ என்னைக்கு பிரச்சனை ஆரம்பிச்சு சொத்த கேட்டையோ?… அன்னைக்கே எல்லாம் முடிஞ்சுச்சு. நிரஞ்சன் தனியா போயிட்டான், நான் தனியா வந்துட்டேன். எல்லாம் பொதுவில் வைக்கும் போது, அப்பா கொடுத்த பணமும் பொதுவுல தான் நிக்கும். அப்ப அந்த பணத்தை நான் கொடுக்க தான் வேணும். இப்ப ஒரு கோடி ரூபா கடன் நமக்கு தான் வித்யா.. உனக்கு சந்தோஷமா…” வெறுப்பாக கேட்டான் முகுந்தன்.
வித்யா திகைத்து போய் கணவனை பார்த்தாள். ஆக, முகுந்தன் சரியாக யோசித்து தான் எல்லாம் செய்து இருக்கிறான். இவள் தான் தேவையில்லாமல் நர்மதா மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியில் சிக்கலாகி கொண்டாள் போல…
தாமோதரன் சொன்னார், “நிரஞ்சன் இதுவரைக்கும் கணக்கு பார்க்கல. அவன் தான் எங்களுக்கு எல்லாம் பார்த்தான். நிரஞ்சன் நர்மதா மேல உனக்கு என்ன வன்மம் வித்யா? எவ்வளவு பேசுற நீ… உனக்கும் கல்யாணம் ஆகி பத்து வருஷத்துக்கு மேல் ஆச்சு. இதுவரைக்கும் என்னைக்காவது பணம் அப்படின்னு, உங்க வீட்டுக்கு வந்து இருக்கானா நிரஞ்சன்?.. கூடப் பிறந்த ரெண்டு பேர்ல எல்லாரும் ஒரே மாதிரி முன்னேற மாட்டாங்க… ஒருத்தர் முன்ன போவாங்க, ஒருத்தர் பின்ன நிப்பாங்க. அவங்கங்க வளர்ச்சிக்கு தக்க அவங்க முன்னேற்றம் இருக்கும். நீங்க நல்லாவே இருங்க.. நிரஞ்சன் உங்களுக்கு பின்னாடியே இருக்கட்டும். ஒன்னும் பிரச்சனை இல்ல, அவன் அளவில் தானே நிற்கிறான். அவன் கஷ்டப்பட்டாலும், கடன் பட்டாலும் இப்ப சொந்தமா வீடு கூட இல்லாமல் இருந்தாலும்.. என்னைக்கும் அண்ணன் கையை அவன் எதிர்பார்க்கவே மாட்டான்…”
“எங்களுக்கு அவ்வளவு பார்த்து இருக்கான். பொது செலவு எது வந்தாலும் நிரஞ்சன் தான், என்னைக்கும் முகுந்தன் வந்து முன்னாடி நின்றதே கிடையாது. இன்னைக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைகளோட வெளியே நிக்கும் போதும், எங்களை கை காட்டவே இல்லை. உங்களுக்கு நான் செஞ்சேன். எனக்கு செய்யுங்கன்னு உரிமையா கேட்கவும் இல்லை. பெத்தவங்க கிட்டயே உரிமையை எதிர்பார்க்காதவன்.. கூட பிறந்தவங்க கிட்டையா கை நீட்ட போறான். நீங்க எவ்வளவு முன்னேறினாலும் அவன் எவ்வளவு பின்னாடி நின்றாலும் ஒரு நாளும் உங்க கையை எதிர்பார்த்து நிற்கவே மாட்டான்…”
முகுந்தன் மனசுல ஒரு குற்ற உணர்ச்சி வந்தது.
“இவனா தான் வந்து வீட்ட பாக்குறேன். தம்பிக்கு செலவு பண்றேன்னு சொன்னான். நீ கணக்கு பாப்பன்னு எனக்கு தெரியும் தான் வித்யா. ஆனாலும் மில்லி மீட்டர் கணக்கு கூட பார்ப்பன்னு நான் அறியலையே… நிரஞ்சனுக்கு என்னவோ நாளைக்கு அதுதான் எங்களுக்கும்.. அதனால தான் எனக்கும், என் மனைவிக்கும் பாதுகாப்புக்காக நான் கொடுத்த பணத்தை கேட்டேன். நாளைக்கு யார் வீட்டு வாசல்லையும் நாங்க போய் நிற்க கூடாது பாரு.. மகன்கள் கிட்ட நாங்க கை நீட்டல.. எங்க சம்பாத்தியம் நாங்க வைக்கிறோம் அவ்வளவுதான்…”
வித்யாவுக்கு பேச்சே வர வில்லை. எல்லாருக்கும் சரியாக இருக்கும் என்று தான் கணவன் யோசித்து இருக்கிறான். இவள் தான் குழம்பி கொண்டது. இதில் கடன் வேறு…
“எனக்கு உண்மையான கோபம் உன் மேல தான் முகுந்தா… உன் மனைவியோட மனநிலை உனக்கு தெரியாம எப்படி இருக்கும்…” என்று தந்தை சொல்ல,
“நானும் அவளை சத்தம் தான் போடுறேன். அவ என்னை மதிக்கிறதே இல்லை…”
“எப்படி மதிப்பா?… நீ எப்ப கண்டிச்ச? வித்யாவால பிரச்சனை வரும் போது?… நாங்க எல்லாரும் உம் பொண்டாட்டி சரியில்லைன்னு சொல்லி சத்தம் போட்டா… நீ கண்டிச்சு வைப்ப. மத்த படி நீ அமைதியா தான் இருந்திருக்க. நாங்க சொல்லாமலே தப்புன்னு நீ சொல்லி இருக்கணும் முகுந்தா. நாங்க ஒவ்வொன்னா சொல்லி, சொல்லி நீ உன் பொண்டாட்டிய கண்டித்து வச்சனா.. அந்த கோபம் எங்க மேல தான திரும்பும். நாங்க தான் மகனுக்கு சொல்லி கொடுக்குற மாதிரி தோணும். அதனால தானே குடும்பத்தில் சண்டையே..” என்றவர்,
“இங்க பாரும்மா வித்யா.. உனக்கு நர்மதா மேல என்ன கோபம். ஒரே வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தா.. ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியா தான் இருக்கணுமா? அன்பா அனுசரணையாலாம் இருக்க மாட்டீங்களா?… உங்க அம்மா வீட்டை நீ ஆதரிக்கிற தானே? அப்படி உன் புருஷன் வீட்டையும் நீ ஆதரிச்சா என்ன?.. இன்னைக்கு சொல்றேன் வித்யா, என்னைக்கும் நாங்களோ இல்ல நிரஞ்சன் குடும்பமோ, பணத்தை எதிர்பார்த்து உங்ககிட்ட வந்து நிக்கவே மாட்டோம். ஒரு வீடு கட்டிட்டா நீங்க தான் எல்லாருக்கும் மேலையா?…”
“இன்னைக்கு நிரஞ்சன் கிட்ட சொத்து இல்லாம இருக்கலாம், வேலை இல்லாம இருக்கலாம். ஆனா கடன்னு பத்து பைசா கிடையாது. எதுவுமே இல்லாதப்பவும் உங்களை எதிர்பார்க்கல, இனியும் எதிர்பார்க்க மாட்டான். அப்படி இருந்தும் முகுந்தன் கூட சேர்ந்து இருந்ததுக்கு.. கூட பிறந்த பாசம் மட்டும் தான் காரணம். அண்ணனுக்காக நாம கொஞ்சம் பாக்கணும்னு நினைச்சா அவன் நினைப்பவே நீ மாத்தி விட்டுட்ட… ஒரு நாளும் நர்மதா, உன் வீட்டுக்கு பாக்காத, உங்க அண்ணனுக்கு பாக்காதன்னு சொன்னதே கிடையாது. நர்மதாவை வச்சு வீட்ல ஒரு பிரச்சனை வந்தது கிடையாது. ஏன்னா, அந்த அளவுக்கு நிரஞ்சன் விட்டதில்லை. நர்மதா மேல தப்புன்னு பெரியவங்க சொல்றதுக்கு முன்னால நிரஞ்சனே கண்டுச்சு வச்சுருவான்…”
வித்யா வாயவே திறக்க வில்லை. மாமனார் இவ்வளவு பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. முன்பு அவள் வாதம் தான் வென்றது. அந்த நினைப்பில் வந்தாள் போல…
“முகுந்தா, காலத்துக்கும் நமக்கு கட்டின பொண்டாட்டி தான். ஆனா அதுக்காக கூட பொறந்த உறவு இல்லன்னு ஆகாது. சட்டி நிறைய பால் இருந்தாலும் கையளவு உர மோர் வேணும். நாங்க இருக்க வரைக்கும் அண்ணன், தம்பி உங்க ரெண்டு பேரையும் இழுத்து பிடிப்போம். நாங்களும் இல்லாத காலத்துல உனக்கு உறவு என்று சொல்ல அவன் தானடா இருக்கான். உண்மையா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு முகுந்தா… நீ ஒன்னு செஞ்சா நிரஞ்சன் இரண்டா செய்வான். இதுல எதுக்குடா மில்லிமீட்டர் அளவு கூட கணக்கு பாக்குறீங்க. உன் கூட பிறந்தவன் தானே ஆயிரம், நூறு கூட போயிட்டு போகுது.. உன் மனைவிக்கு உன்னால புரிய வைக்க முடியலையே, சாப்பாட்டுல கூட கணக்கு பார்த்து என்ன ஆச்சு?.. உன் சொந்த தம்பியோட நம்பிக்கையை நீ இழந்துட்ட முகுந்தன். நாங்களும் தான்..” என்று வருத்தமாக தாமோதரன் சொல்ல,
“என்னங்க…” என்று எழுந்து வந்தார் சுசீலா.
“உனக்கும் தான் சொல்றேன் சுசீலா. உன் வயசுக்கு உறவுக்கு மரியாதை கொடுத்து நர்மதா அடங்கி போனா.. அது அவங்க பெருந்தன்மை… உங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல, நீங்க யாரு எனக்கு அப்படின்னு சொல்லி ஒதுங்கிக்கிட்டாலும் உன்னால என்ன பண்ண முடியும். உன்னோட மூத்த மருமககிட்ட உன்னால என்ன சண்டை பிடிக்கும் முடிஞ்சுச்சு. எதுவும் இல்ல தானே உன் மூத்த மருமக கிட்ட உன் வாய் செல்லல தானே. அப்ப உன்னை அனுசரிச்சு போற ரெண்டாவது மருமகளை நீயும் அனுசரிச்சு போ.. நம்ம புருஷனுடைய அம்மா, நமக்கு மாமியார் அப்படின்ற மரியாதையாவது உனக்கு காலத்துக்கு நிற்கும். வயசான காலத்துல பணம், காசுக்கு நமக்கு குறைச்சல் இல்லாமல் இருந்தாலும், நம்ம பசங்க நமக்கு தேவைப்படுறாங்க தானே. அவங்களோட ஆறுதல் அரவணைப்பு நம்ம தேவையா நினைக்கிறோம் தானே சுசிலா. அப்ப நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து தான் போகணும். உண்மையா நிரஞ்சன் எல்லாம் யாருக்கும் அடங்க மாட்டான் அப்படின்னு நான் நினைச்சு இருக்கேன். ஆனா இன்னைக்கு அவன் விட்டுக் கொடுத்து போறான் ஆச்சரியமா இருக்கு.. அவன் மனைவி வீட்டு சொந்தத்தை ஆதரிக்கிறான். உலகத்தை புரிஞ்சுகிட்டான், மனுஷங்களை தெரிஞ்சுக்கிட்டான். பெருமையா இருக்கு என் மகனை நினைத்து…” என்றவர்,
“முகுந்தா நீ என்ன நிரஞ்சனை விடவா அதிகமாக சம்பாதிச்சுட்ட… அவன் செலவழிச்சு வாழ்ந்த வாழ்க்கை விடுவா நீ அதிகமா வாழ்ந்துட்ட. ஆனால் அவனும் ஒரு நாள் கீழே விழுந்தான். நிரஞ்சன் தலைக்கனம் உள்ளவன். யாரையும் மதிக்க மாட்டான். எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கும் போய் நிக்க மாட்டான். யார் வீட்டிலும் சாப்பிட மாட்டான். பெரிய கௌரவம் பார்ப்பான். அவனே உடைஞ்சு போய் நின்னான். காலம் எப்படி மாறும்ன்னு யாருக்கு தெரியும். உனக்காக நிக்க உன் தம்பி வர வேணாமா?” தந்தை கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை.
“என்னங்க, இப்ப என்ன நிரஞ்சனும், முகுந்தனும் தான சண்டையா போட்டு இருக்காங்.க எதுக்கு இவ்வளவு பேசுறீங்க.. விடுங்க பையன் முகமே ஒரு மாதிரியா போச்சு…” சுசீலா வர,
“எனக்கு முகுந்தன் மேல அக்கறை இருக்கு சுசிலா. அதான் இவ்வளவு பேசுறேன். நிரஞ்சன் எல்லாம் யாரையும் மதிச்சது கிடையாது. ஆனால், அவனுக்கு ஒன்று என்றால் எவ்வளவு பேர் வந்து நின்னாங்க. யார் அவங்க எல்லாம்? யாருக்காக வந்தாங்க? நிரஞ்சன் யார் அனுசரிச்சு போனான்?…”
“நான் நிறைய தடவை யோசிச்சு இருக்கேன். நர்மதா ஏன் இவ்வளவு அமைதி, இவ்வளவு பொறுமை அப்படின்னு… ஆனா, நர்மதவோட அந்த குணத்துக்காக தான் இன்னைக்கு பத்து பேர் அந்த வீட்ல இருக்காங்க… ஏதாவது ஒன்னுனா வந்து நிக்கிறாங்க. என்னைக்காவது நர்மதா, பிருந்தா ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுத்து பார்த்திருக்கியா… நர்மதாவை விட பிருந்தா கம்மிதான். ஆனால் அவங்களுக்குள்ள ஒரு சின்ன சத்தம் கூட வந்தது கிடையாது. அன்னைக்கு நிரஞ்சன் ஹாஸ்பிடலில் இருந்தபோதும் சரி, இன்னைக்கு சொந்தமா தொழில் தொடங்குவதற்கும் சரி, எல்லாத்துக்கும் கூட நிக்கிறது யாரு நர்மதா வீட்டு ஆளுங்க தான். யாருக்காக நிரஞ்சன் குணத்துக்காகவா இல்ல நர்மதாக்காக… ஆனா நம்ம வீட்ல கூட பொறந்தவன் சாப்பிடுவது கூட கணக்கு பார்க்கிறோம். காலம் இப்படியே இருக்காது. நாளைக்கு முகுந்தனுக்கு ஒண்ணுன்னா நிரஞ்சன் வந்து நிக்க யோசிப்பான்?…”
“உனக்கு நேராவே தான் சொல்றேன் முகுந்தன். உன் மனைவிக்கு சொந்தத்தை இழுத்து கட்ட தெரியல… நிரஞ்சனும் அப்படித்தான். ஆனால், நர்மதாவுக்கு குடும்பத்தை இழுத்துப் பிடிக்க நல்லாவே தெரியும். நாளைக்கு கடைதிறப்புல உன் தம்பிய போய் பாரு… எல்லா உறவும் காசு, பணத்துக்காக வர்றது கிடையாது. முகுந்தன் உனக்கு இருக்கிறது ஒரே ஒரு தம்பி தான் அவனை விட்றாத…” என்றவர் உள்ளே சென்று விட்டார்.
முகுந்தன் கிட்ட ஏன் அப்படி பேசினீங்க என்று சுசிலா கேட்க
“சில விஷயங்கள் உனக்கு இன்னும் புரியல சுசீலா. புரியும் போது உனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். வேணாம்…” என்றவர் அமைதியாக கண் மூடிக்கொண்டார்.
அடுத்த நாள் குடும்பமாக நிரஞ்சன் கடை திறப்பு விழாவுக்கு சென்றார்கள். உண்மையில் நிரஞ்சன், நர்மதா இருவரும் நல்ல முறையில் தான் வரவேற்றார்கள். நர்மதா எந்த விரோதமும் பாராட்டவில்லை வித்யாவுடன்… தன் வீடு தேடி வந்தவரோடு தனக்கு என்ன விரோதம்.
முதல் முறை ஒரு சொத்து வாங்கி வியாபாரம் தொடங்குகிறார்கள். பெரிய அளவில் நர்மதா கழுத்தில் நகை கிடையாது. ஆனால், பெற்றவர்கள் பூரிப்பாக தான் மகளை பார்த்தார்கள். முன்னேற்றத்தை அடித்தளமாக கொண்டு மக்கள் முன் நிற்கிறார்கள் என்ற பெருமை பெற்றவர்களுக்கு…
பூஜையில் அமரும் போது நர்மதா கண் லேசாக கலங்கியது. எவ்வளவோ கஷ்ட நஸ்டத்தின் பின் ஒரு நாள் காரியம். பத்து வருடம் கடந்து தான், தங்களுக்கு e என்று ஒன்றை செய்கிறார்கள். உண்மையில் அத்தனை நிறைவாக இருந்தது.
முகுந்தன் பார்வை முழுக்க தன் தம்பியிடம் தான். சந்தோஷமாக இருக்கிறார் என்று நிரஞ்சன் முகத்தில் தெரிந்தது. ஆனாலும், இத்தனை சொந்த பந்தங்களை அவன் எதிர்பார்க்கவில்லை. முன் நின்று ஓடியாடி வேலை செய்தது விநாயகம் முகர்ந்துனைப் பொறுத்தவரை விநாயகம் என்ற ஒருத்தனை நர்மதாவின் மாமா என்ற அளவில் தெரியும் அவ்வளவுதான்.
பூஜை வழிபாடு என்று நிரஞ்சன், நர்மதா இருவர் முன்னிற்க.. வந்தவர்களை பார்த்தது, கவனித்தது, ஓடியாடி வேலை செய்வது எல்லாம் பிருந்தாவும், விநாயகமும் தான். அவ்வளவு உரிமையாக முன் நின்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் உரிமையாகவும் நிற்கிறார்கள்.
உண்மையில் இந்த இடத்தில் நிரஞ்சன் உறவாக உரிமையாக நிற்க வேண்டியது முகுந்தன் தான். இன்று அவன் தள்ளி நிற்க, பிருந்தாவின் கணவன் முன்னிருக்கிறான். அவனோடு சகஜமாக உறவாகவும் நிரஞ்சன் பேசி சிரிக்கிறான்.
நிறைய உறவுகள் வந்து நின்றார்கள் எல்லாம் நர்மதா வழி தான். நிச்சயம் நிரஞ்சன் உறவுகளை எல்லாம் கட்டி சேர்த்து இருக்க மாட்டான். வந்தது நர்மதாவுக்காக மட்டும்தான். நாளை வித்யா உறவுகளை இப்படி சேர்ப்பாளா என்றால் அது ஒரு பெரிய கேள்வி குறிதான்?… ஆக தன் பக்க உறவாக நிற்கும் ஒருத்தன் நிரஞ்சன் மட்டும் தான், அவனை விட்டு விடக்கூடாது என்ற எண்ணம் முகுந்தன் மனதில் மேலோங்கி நின்றது.
தாமோதரன் சொன்னதன் அர்த்தம் முகுந்தனுக்கு நன்றாக புரிந்தது. நம் குடும்பம் என்ற வட்டத்தில் மனைவி பிள்ளைகள் இருந்தாலும், நமக்கான உறவுகள் என்ற வட்டத்தில் உடன்பிறப்புகள் வந்து விடுவார்கள். அந்த உறவுகளை தக்க வைத்து கொள்வதும், தள்ளி வைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
முகுந்தன் திரும்பி தன் தந்தையை பார்த்தான். நான் புரிந்து கொண்டேன் என்பது போல ஒரு பார்வை… தாமோதரன் பார்வையும் நிரஞ்சன் மேல் இருந்தது.
மிகுந்த கோபக்காரன், சத்தம் போட்டால் அடுத்து ஒரு வார்த்தை யாரும் பேச முடியாது, நிதானம் என்பதே அவனுக்கு கிடையாது. தன் எண்ணத்தை தயங்காமல் முகத்திற்கு நேர சொல்லி விடுவான்.
ஆனால் நர்மதா அவனுக்கு எதிர்ப்பதம்… மிகுந்த அழுத்தம், கோபம் கூட பார்வையில், அழுத்தமான வார்த்தையில் தான் வரும். என் நியாயம் இது என்று எந்த இடத்திலும் நிருபிக்கவே மாட்டாள். என்னை புரிந்து கொள்ளாத, தள்ளி வைக்கும் உறவு எனக்கு தேவையே இல்லை என்று மிக பெரிய முடிவை கூட எடுக்கும் துணிச்சல் மிக்க பெண். பார்வையில் மிகுந்த அமைதி.
வித்யா அப்படி கடின வார்த்தைகளை விடும் போதும், முகுந்தன் பெரிய அளவில் மனைவியை கண்டிக்காத போதும், தாமோதரன் பட்டென்று வீட்டை விட்டு வெளியேற சொன்ன போதும் நர்மதா வெளிப்படுத்திய முகபாவம் முழு அமைதி தான்.
ஆனால், அந்த அமைதிக்கு பின் இருக்கும் அழுத்தம், வைராக்கியம் யாருக்கும் தெரிய வில்லை. எந்த இடத்தில் என் உறவுகள் என்னை ஒதுக்கி தள்ளியதோ… அந்த இடத்தில் நான் நிற்பேன். அதை நானும் தாண்ட மாட்டேன். நீங்கள் யாரும் நெருங்கவும் முடியாது என்று வேலி போட்டு கொண்டாள். யாவரும் அறியாமல்.
நர்மதா எப்பவும் எதிர்த்து பேசாத, அமைதியான பெண் என்பதால் அவள் அழுத்தம் யாரும் அறியவில்லை. கத்தி பேசி, விவாதம் செய்தால் தான் நியாயம் வெளிப்படுமா என்ன?… எங்கே என்னை நெருங்கி பாருங்கள் என்று அழுத்தமாக நிற்கிறாள்.
நர்மதா சுபாவமே இது தான் என்று எதார்த்தமாக எடுத்து கொண்டு நெருங்கி நின்றாள். நெருங்க முடிய வில்லை. சண்டை கிடையாது, கோபமில்லை, வாதம் இல்லை, வெறுப்பு கிடையாது. ஆனாலும், உறவில் விரிசல். பழைய மாதிரி மாற்ற முடியவில்லை.
அவரவருக்கான எல்லையில் வட்டம் போட்டு நின்று கொண்டார்கள். கோபத்தில் பேசிய வார்த்தைக்கு வலிமை இருக்குமா?… நிச்சயம் இருக்கும். யார் சொன்னது வார்த்தைக்கு வலிமை இல்லையென்று…
யார் வாயிலும் விழுகாதே… யாரிடமும் சாபம் வாங்காத… என்று பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள். வார்த்தைக்கு வலிமை உண்டு. வலியும் உண்டு.
அந்த வலியை அனுபவித்தவர்கள் எவ்வாறு கடந்து வருவார்கள். புராணத்தை கேளுங்கள்… இந்த உலகத்தையே கடவுள் வாயின் வார்த்தையில் தான் படைத்தாராம். பேசும் வார்த்தைக்கு வலிமை உண்டு தானே… வாயின் வார்த்தையில் கவனம் வேண்டும்.
நர்மதாவின் கலங்கிய கண்களை கண்ட நிரஞ்சன்,
“என்ன நம்மு?… எதுக்கு அழுகுற…”
கண்ணை துடைத்தவள்,
“நம்ம சண்டை போட்டு பிரிஞ்சு இருந்தப்ப… நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கும் போது… ராத்திரி நேரம் ரெண்டு பிள்ளையோடு வீட்டை விட்டு வெளிய வந்த போது எல்லாம் நான் நிறைய அழுது இருக்கேன். என்ன வாழ்க்கை இது?.. எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் ன்னு ரொம்ப மனசுக்குள்ளே போராடுவேன். எங்க சாமிய பார்த்தாலும் சண்டை போடுவேன்…”
“ஏன்னா நிரஞ்சன் என் எதிர்பார்ப்பு ரொம்ப கொஞ்சம் தான். நான் உருவாக்க நினைச்ச உலகமே வேற… சொந்த வீடு, நிரந்தரமான வேலை, அன்பான கணவன், ரெண்டு அழகான குழந்தைகள், அமைதியான வாழ்க்கை, ஆடம்பரமில்லாத வருமானம், நம்பிக்கையான எதிர்காலம்… அவ்வளவு தான். வேற எதுவும் நான் பெருசா சாதிக்க நினைச்சது இல்லை. ஆனா, அப்படியொரு வாழ்க்கைக்கு எவ்வளவு வலி, கண்ணீர்… நீங்க மாறனும்ன்னு நினைச்சேன். அப்படி மாறியும் நம்பிக்கையான எதிர்காலத்தை எதிர் நோக்க முடியல…” என்றவள்,
“இன்னைக்கு நாம பெருசா சாதிக்கல. நமக்கு எல்லாம் நிறைவாகவும் இல்லை. ஆனாலும் நிறைய கஷ்டத்துக்கு அப்புறம் வந்த ஒரு நிறைவு. பெருசா, சின்னதா விசயம் இல்லை. நிம்மதியா இருக்கு… நான் ரொம்ப நம்பிக்கையா என் எதிர்காலத்தை பார்க்குறேன். அடுத்து என்னவோ? ஆனா, நல்லதா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு…”
“எங்க அப்பா எப்பவும் சொல்லுவார். ஒரு விஷயத்துக்காக நாம கண்ணிரோட போராடி வரும் போது, நிச்சயம் ஒரு நாள் சிரித்த முகமாக வெற்றியை அனுபவிப்போம்ன்னு… வாழ்க்கையில நிறைய சாதிச்சு, பெருமையா முன்ன நிக்கிற ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் ஒரு கண்ணிரோட போராட்டம் இருக்கும். நம்மளை மாதிரி…”
“ஆனா, நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நர்மதா. என்னை நம்பி, என் கை பிடிச்சு தான் இந்த வாழ்க்கைக்குள்ள வந்த… உனக்கான நம்பிக்கையை கொடுக்க எனக்கு பத்து வருசம் ஆச்சு. நிஜமா நான் மன்னிப்பு கேக்குறேன்…” என்று நிரஞ்சன் சொன்னதும்…
“இல்லை நமக்கான புரிதலுக்கு தான் பத்து வருசம் ஆச்சு. நம்ம வாழ்க்கையில தள்ளி நின்னு ஒருத்தரை பார்க்கும் போது பயங்கர டெரரா இருப்பவங்க கூட கிட்ட வந்து பார்க்கும் போது குழந்தை மாதிரி இருப்பாங்க… சேர்ந்து வாழும் போது தான் ஆழமான புரிதல் வரும். இவங்களை தவிர வேற யார் நமக்கு வாழ்க்கை துணையாக வந்தாலும் செட் ஆகியிருக்காதுன்ற அளவுக்கு வாழ்க்கை அழ மானதா மாறும். அதுக்கு ஒரு நல்ல புரிதல் வேண்டும். தம்பதிகள் ரெண்டு பேருக்கும் இடையில… காலம் போக தான் புரிதல் வரும் நிரஞ்சன். நமக்கும் அப்படி தான்…”
“நிஜமாவா நர்மதா…” என்று நிரஞ்சன் மனைவியை லேசாக அணைக்க,
“உண்மை நிரஞ்சன். கரும்புல மேல் பக்கம் உரிக்க எளிதா இருக்கும். ஆனா, சுவை இருக்காது. அடிகரும்பு மொங்கும், மொழியுமா இருக்கும். கடிக்க கஷ்டம். ஆனா, தித்திக்கும். வாழ்க்கை கூட அப்படி தான். ஆரம்பம் ரொம்ப ஈசியா, வேகமா தெரியும். அதுக்கப்புறம் கஷ்டம், கவலை, பிரச்சனை, பஞ்சாயத்து பார்த்து நிறைய கடந்த தான் அடி கரும்பு கைக்கு கிடைக்கும். வாழ்க்கையும் தித்திக்கும்…”
“அப்படியா…”
“ஆமா நிரஞ்சன். அதுனால தான் கல்யாணம் ஆன புதுசுல எந்த சண்டை வந்தாலும் நீ நேத்து வந்தவன்னு ஒதுக்கி வைக்கிற உங்களை மாதிரி ஆம்பிளைக கூட நாப்பது, அம்பது வயச கடந்த பின்னாடி பொண்டாட்டிய இழந்தா.. சகலத்தையும் இழந்த மாதிரின்னு தத்துவம் பேசுவாங்க…” என்று லேசாக கணவன் வயிற்றில் குத்த..
“எனக்கு முப்பத்து மூணு வயசு தான். நான் இப்பவே சொல்றேன். எனக்குலாம் எம் பொண்டாட்டி இல்லன்னா, வாழவே தெரியாது. என் ஓட்டம் எல்லாம் பொண்டாட்டிய வச்சு தான்…” என்றதும், கண் நிறைய கணவனை பார்த்தாள் நர்மதா. வேற என்ன வார்த்தை வேண்டும் அவளுக்கு…
error: Content is protected !!