Skip to content
Post Views: 14,862
பொழியும் மேகம்!
அத்தியாயம் 3
நர்மதா, தினமும் அக்காவுடன் பேசினாலும், நேரில் பார்த்த பின் அடுத்து பேசவும் பலதும் இருந்தது. நிறைய பேசி, சிரித்து கொண்டே வந்தார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் மதுரை வந்து இறங்கி இருந்தார்கள்.
பிருந்தாக்கு இரண்டு பையன் மித்ரன், மிதுன்… அவள் கணவன் செல்வ விநாயகம். பிருந்தா கொஞ்சம் அடாவடி ஆள். நல்லா வாய் பேசுவாள். நர்மதாக்கு எதிர்பதம் பிருந்தா தான்.
Advertisement
கிட்டத்தட்ட எட்டு மாதம் சென்று வரும் மகள்களை அழைத்து செல்ல இருவரும் வர வில்லை. நர்மதா எதையும் கணக்கில் எடுக்காமல் ஆட்டோ தேட, பிருந்தா தான் முனங்கி கொண்டாள்.
“அந்த வளந்து கெட்ட எருமமாடு வரல பார்த்தியா நம்மு. இவ்வளவு நாள் கழிச்சு அக்காங்க வாராங்க. அதுவும் நாலு பிள்ளைகளை இழுத்துகிட்டு தனியா வேற வரணும். வீட்டுல கார் இருக்கு தான, எடுத்து வந்தா குறைஞ்ச போயிடுவான்…”
நர்மதா லேசாக சிரித்தாள். அவளுக்கு ஒன்றும் குறையாக தெரியவில்லை.
Advertisement
“பிருந்தா… இங்க இருந்து வீடு பக்கம் தான, தூரம் கிடையாது. அவங்களே வரட்டும்ன்னு நினைச்சு இருப்பாங்க…” என்று சமாதானம் சொல்ல,
Advertisement
“பக்கம், தூரம் விசயம் கிடையாது நம்மு. இவ்வளவு நாள் அப்புறம் பொறந்த வீடு வாறோம். கூட பொறந்தவன்… நமக்காக வந்து நின்னா ஒரு சந்தோசம் தான். நீ சொல்ற மாதிரி பக்கம் தானே வீடு. அப்படி ஒன்னும் நேரம் ஆகாது. டீ குடிக்கிற நேரம் தான் ஆகும். அக்காங்க, அக்கா பிள்ளைகன்னு தேடி வரும் போது… அவனுக்காக அவ்வளவு தூரம் இருந்து வந்த நமக்கும் ஒரு சந்தோசம் தான்…” பிருந்தா தெளிவாக தான் சொன்னாள்.
“உனக்காவது ரெண்டு பிள்ளைகளை கூட்டி வர அலைச்சல் மட்டும் தான். நான் எங்க வீட்டுல ஒரு குட்டி போரே நடத்தி முடிச்சு வாரேன். நான் என்னத்த சொல்ல, விட்டு தள்ளு. நம்ம தம்பி மகனுக்காக நாம வந்தோம். பெத்தவங்களை பார்த்திட்டு போவோம்…” என்று நர்மதா சொல்ல,
“எல்லாம் அந்த தாய் கிழவி குடுக்குற இடம்…” என்றபடி பிருந்தா லக்கேஜ் எடுக்க, நர்மதா பிள்ளைகளை கைபிடித்து அழைத்து வந்து ஆட்டோ ஏறினார்கள்.
Advertisement
வீட்டில் தாய் விஜயா மட்டும் தான் இருந்தார். வேற யாரும் கண்ணுக்கு பட வில்லை. ஆசையாக பேரன், பேத்திகளை தூக்கி கொஞ்சியவரை பார்த்த பிருந்தா,
“தம்பி எங்கம்மா?… அவன் பொண்டாட்டி சுபா கூட காணம்?…”
“அதுவா… சுபாவோட அண்ணன் வெளிநாட்டுல இருந்து வாராங்களாம். அவங்களை கூப்பிட தான் கார் எடுத்துட்டு மூணு பேரும் போய் இருக்காங்க…” என்று பெருமையாக சொன்னார் விஜயா.
“இதுல உனக்கு என்ன சந்தோசம்?…” கடுப்பாக பிருந்தா கேட்க.
“எனக்கு என்னடி சந்தோசம். சுபா அண்ணன் ரொம்ப நல்ல மாதிரி. தங்கச்சிக்கு அவ்வளவு செய்வான். உங்க தம்பிக்கு நல்ல சப்போர்ட் வேற… அவன் வந்தே பத்து மாசத்துக்கு மேல ஆச்சாம். வருண் பிறந்தநாளுக்கு தான் வாராங்க. அதான் கூட்டிட்டு வர போய் இருக்காங்க உன் தம்பியும், அவன் பொண்டாட்டியும். எப்படியும் மாமியார் வீடு போய் வர ரொம்ப லேட் ஆகும் போல…” என்ற தாயை அமைதியாக பார்த்தவள்,
“நாங்களும் தம்பி மகன் பிறந்தநாளுக்கு தான் ஊர்ல கெடக்குற வேலையை எல்லாம் விட்டுபுட்டு, பத்து நாளைக்கு எம் புருசனை ஓட்டல்ல வாங்கி சாப்பிடுங்கன்னு ஓடி வந்தோம்…” நக்கலாக சொல்லி கொண்டு நகர்ந்தாள் பிருந்தா.
“அடி சின்னவளே, என்னடி சொல்லிட்டு போற உங்க அக்கான்றவ… இவ என்ன விருந்தாளியா.. நீங்க பொறந்த வீட்டுக்கு வாரத்துக்கு உங்களுக்கு ஃப்ளைட் பிடிச்சு விடனுமாக்கும்…” அவரும் பெரிய மகள் போலவே பேச, கண்டுகொள்ளாமல் நகர்ந்து விட்டாள் நர்மதா.
அவளுக்கு தன் அக்கா போல வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேச வராது. நாம எதுவாது சொல்லி எதிரில் இருப்பவர்கள் காய படுவார்களோ என்று யோசிக்கும் ரகம் தான் நர்மதா. அப்படியும் எங்காவது அடக்க முடியாமல் பேசி விட்டு, அவர்களை விட இவள் தான் மன நிம்மதி இல்லாமல் வருத்த படுவாள்.
நமக்கு பயிண்ட் பயிண்ட்டாக பேச வராது. எதற்கு பேசி கொண்டு என்று அவள் அமைதியாக கடந்து தான் விடுவாள். அந்த ஒரு குணம் தான் நிரஞ்சன் உடன் இவள் குடும்ப வண்டி ஓடி கொண்டு இருக்கிறது. அதிகமாக பேசி, நான் செய்வது தான் சரி என்று எகிறி கொண்டு வரும் நிரஞ்சனுக்கு, எதிர்த்து பேசாமல் தலையாட்டி நகர்ந்து விடும் நர்மதா குணம், பெரும்பாலும் சண்டையை குறைத்து விடும்.
நர்மதா எப்போதும் நினைப்பது குடும்ப வாழ்க்கை என்பது ஒத்தயடி பாதையில் இருவரும் சேர்ந்து நடக்கும் கோட்பாடு. ஒருவர் நடக்க கூடிய பாதையில் இருவர் எவ்வாறு சேர்ந்து கை கோர்த்து நடக்க முடியும். யாரோ ஒருவர் முன்னே செல்ல, ஒருவர் பின் வர வேண்டும். ஒருவர் வழிகாட்ட ஒருவர் பின் தொடர வேண்டும்.
பிருந்தா வாழ்க்கையை பொறுத்த வரை முதல் அடி எடுத்து வைத்து நடப்பது அவள் தான். நர்மதாவை பொறுத்த வரை கணவனின் அச்சில் பின் தொடர்ந்து வருபவள். யார் முன் வந்தால் என்ன? யார் பின் வந்தால் என்ன?யாரோ ஒருவர் தடுக்கி விழலாம், கரை சேர்ந்தால் போதும், மற்ற ஒருவரும் வெற்றி பெறுவார்கள் அல்லவா…
கணவன் தடுக்கி விழுந்து மனைவி நிமிர்ந்து நிற்பது என்ன பெருமை, அல்லது மனைவி துணை இன்றி கணவன் மட்டும் எல்லையை தொடுவது என்ன சிறப்பு. இவரும் சேர்ந்து கரை தொடுவதே இல்வாழ்க்கை. அந்த இல்வாழ்க்கை சிறக்க நிச்சயம் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். இன்று நர்மதா முன்னெடுத்து நிற்கிறாள். என்றாவது ஒரு நாள் கணவன் முன்னெடுத்து போவான் என்று நம்பிக்கை.
பிருந்தா முகமே சரியில்லை. நாங்களும் தான் கூட பொறந்தோம். எங்களை வரவேற்க உடன் பிறந்தவனுக்கு நினைப்பு இல்லையே!… வந்தவர்கள் உடை மாற்றி முகம் கழுவி, மாலை நேர பால், டீயோடு அமர, வந்து விட்டார் பாலமரத்தான்.
“என்னத்தா, எப்ப வந்தீங்க… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?…” சிரித்த முகமாக மகள்கள் அருகில் வர,
பிருந்தா கண்டு கொள்ள வில்லை. நர்மதா மட்டும் தான், “இப்ப தான் ப்பா வந்தோம். எல்லாம் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க. உடம்பு எப்படி இருக்கு, மாத்திரை எல்லாம் போடுறீங்களா. உடம்பு இளச்சு போன மாதிரி இருக்கே ப்பா..” என்று மகளாக விசாரிக்க.
“எப்பவும் போல தான் சின்னாத்தா. சுகர் இருக்குற உடம்பு வேற எப்படி இருக்கும்…” அதே சிரித்த முகத்தோடு சொன்னவர், பெரிய மகள் அமைதியாக இருப்பதை கண்டு,
“பெரியார் வரை போய் இருந்தேன். அங்க இருக்கிற கடையில தான் பொடி போட்ட வெங்காய வடை, உருண்டை கீரை வடை, போண்டா, பருப்பு புட்டு கிடைக்கும். பெரியாத்தாவுக்கு ரொம்ப இஷ்டம், நேரம் செண்டு போனா பஞ்சா பறந்துக்கு போயிரும். சீக்கிரம் வந்துர தான் நினைச்சேன். கொஞ்சம் நேரமாகி போச்சு…” என்று தந்தை விளக்கம் கொடுக்க,
“பத்து நாளும் இங்க தானப்பா. இன்னொரு நாள் தம்பி கிட்ட சொல்லி வாங்கி வந்தா போச்சு. முடியாத உடம்பை வச்சு நீங்க போகணுமா?…” கடிந்து கொண்டது பிருந்தா தான்.
தங்களுக்காக தான் முடியாத உடல் நிலையை வைத்து கொண்டு தந்தை அலைந்தார் என்பதில் நெகிழ்ந்தாலும், உடல் நிலை சரியில்லாத போது அலைய வேண்டுமா என்று மகளாக அக்கறையும் இருந்தது.
இது தான் பிருந்தா. பிறந்த வீடு என்று நாங்கள் ஓடி வந்தால், தங்கமும், வெள்ளியும் கொட்டி கொடுக்க வேண்டாம். அதற்கு தக்க சின்ன வரவேற்பு, அனுசரிப்பு எல்லாம் வேண்டும் என்று நினைப்பாள்.
விஜயா சொன்னது போல பாதி ராத்திரியில் தான் வந்தான் செழியன். நேராக மனைவி மக்களோடு அவன் அறைக்கு உறங்க சென்று விட்டான். பொருப்பில்லாதவன் கிடையாது, கொஞ்ச அசட்டையானவன். அது அவன் தாய் விஜயா கொடுக்கும் இடம்.
அவருக்கு பிள்ளைகள் மூணு பேர் மேளும் பாசம் இருந்தாலும், ஆண் வாரிசு என்று தனிப்பட்ட பாசம், கவனிப்பு உண்டு. இவர்கள் வழியில் ஆண் வாரிசு கொண்ட மக்களுக்கு தான் வீட்டடி நிலம் என்று மாமனார் சொன்ன போது, இரு பெண் பிள்ளைகள் மட்டுமே வைத்து கொண்டு இருந்த விஜயாவை, கேலியாக மச்சான், கொழுந்தன் மனைவிமார்கள் பார்க்க…
கடவுள் கொடுத்தது என்னவோ, இரு பெண் குழந்தைகள் போதும் என்று இருந்த பாலமரத்தானை வற்புறுத்தி, நிறைய வேண்டுதல், பரிகாரம் எல்லாம் செய்து மூன்றாவது ஆண் குழந்தையை பெற்று… தன் ஓரபடிகளுக்கு இணையாக சொத்து பிரித்தார் விஜயா.
பிருந்தா, நர்மதா இருவரும் தமிழ் வழியில் தான் கல்வி கற்றார்கள். செழியன் மட்டும் ஆங்கில வழி கல்வியில் பயின்றான். அப்போது தொடங்கியது பிள்ளைகளிடம் வேறுபாடு… பெண் பிள்ளைகள் என்று எதிலும் கட்டு திட்டமும், கண்டிப்பும் காட்ட. செழியன் சுதந்திரமாக தான் வளர்ந்தான்.
பிள்ளைகள் மூன்று நிரந்து தான் கொடுக்க வேண்டும் என்று பாலமரத்தான் சொன்னால். அவன் குட்டி தம்பி, உங்களுக்கு இளையவன், நீங்கள் தான் அவனுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லியே தான் பிள்ளைகளை வளர்த்தார் விஜயா. வீட்டில் செழியன் வைப்பது தான் சட்டம். அவனுக்கு தான் நிறைய செல்லம், கேட்டது எல்லாம் கிடைக்கும்.
படிப்பு கூட தற்போதைய காலத்தில் எல்லோரும் படிப்பதால் ஒரு டிகிரியோடு மாப்பிள்ளை பார்த்து விடுவார் விஜயா. பிருந்தா அக்கோன்டன்சி முடித்த உடன் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதே போல தான் நர்மதாவும்…
படித்து முடிக்கும் போதே வரன் பார்த்து, அமையும் போது சட்டென்று முடித்து விட்டார்கள். நகை, உடை, படிப்பு, திருமணம் வரை எல்லாம் பெற்றோர் விருப்பம் தான். அவர்களின் சொல்லுக்கு உடன் பட்டு நிற்பார்கள் பிருந்தா, நர்மதா. எதிர்த்து பேசுவது எல்லாம் என்றும் கிடையாது. பிருந்தா மட்டுமே கொஞ்சம் வாய் துடுக்கு… அப்படி என்ன அவன் மட்டும் உசத்தி என்று மல்லுக்கு நிற்பது பிருந்தா மட்டும் தான்.
மூத்தவனாக செழியன் பிறந்து இருந்தால் வீட்டில் இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று பொறுப்பும், கடமையும், பாசமும் இருக்குமோ என்னவோ… வீட்டின் கடைசி மகனாக பிறந்து, தலையெடுத்து நிமிரும் போது அக்காக்கள் இருவரும் திருமணம் முடித்து வேற வீடு சென்று விட்டார்கள். அதனால், உடன் பிறந்தவர்கள் என்ற பொறுப்பு, அக்கறை எல்லாம் இருக்காது. எப்போதும் போல அவர்கள் தான் தனக்கு விட்டு கொடுத்து, அனுசரித்து செல்ல வேண்டும் என்ற நினைப்போடு தான் இருக்கிறான்.அதனால் தான் என்னவோ அவர்கள் வருகையை பெரிதாக எடுத்தது கொள்ள வில்லை.
காலையில் பார்க்கும் போது வந்தாச்சா என்று சிரிப்போடு நகர்ந்து விட்டான். எப்போது வந்தீர்கள், என்ன வேண்டும், எதுவும் வாங்கி வரவா, லீவு போட்டு ஒரு நாள் வெளியே போகலாம், பிள்ளைகளுக்கு என்ன வேண்டும், மாமா ஏன் வரவில்லை என்று அக்கறையாக கவனிப்பு, வார்த்தையை எதிர்பார்த்தார்களுக்கு, மேம்போக்கான செழியன் நடத்தை ஏமாற்றத்தை கொடுத்தது.
செழியன் மனைவி சுபா ஶ்ரீயும் கணவனை பின் தொடற்பவள் தான். கணவனே உடன் பிறந்தவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் போது தனக்கென்ன வந்தது. விஜயாவும் மகனை ஒன்றும் சொல்ல மாட்டார். வீட்டில் சின்னவன், அவனுக்கு என்ன தெரியும் என்று மகன் பக்கம் தான் நிப்பார்.
பெத்தவர்கள் இருக்கும் வரை மட்டுமே பெண்களுக்கு பிறந்த வீடு என்று மனதை தேற்றி கொண்டார்கள். செழியன் மாமியார் வீட்டோடு பிஸியாக இருக்க, இவர்கள் பெத்தவர்களோடு ஒட்டி கொண்டார்கள்.
நர்மதா, தன் மாமியாரிடம் சொன்னது போல சின்னாளபட்டி சென்று சுசீலா சொன்ன புடவையை தேடி எடுத்து கொண்டாள். அடுத்து ஒரு வாடகை கார் பிடித்து மேக மலை, கும்பகரை அருவி, வைகை அணை என்று ஒரு வாரமும் சுற்றி பார்த்து தங்களது விடுமுறையை கொண்டாடினார்கள்.
என்ன ஒரு குறை உடன் பிறந்தவன் உடன் வர வில்லை. என்ன, ஏது என்று கேட்டு கொள்ளவும் இல்லை. ஏதோ வந்தார்கள், போனார்கள் என்பது போல தான் நடந்து கொண்டான். அதில் பாலமரத்தானுக்கு அதிக வருத்தம். வீட்டில் சின்னவன் என்று கண்டு கொள்ளாமல் விட்டது தவறோ என்று நினைத்தார்.
ஏனெனில், அவ்வளவு நாள் சென்று வந்த அக்காகளை கூட விடு… அவர்களின் பிள்ளைகள், சொந்த தாய் மாமன் இவன்… ஆசையாக கூட தூக்கி கொஞ்ச வில்லை. இந்த பத்து நாளில் ஒரு நாளை இவர்களுக்காக செலவு செய்து இருக்கலாம். எப்படி மகன் இப்படி மாறி போனான். கவலையாக இருந்தது.
முன்பும் இப்படி தான் இருந்தான். ரெண்டு அக்கா என்று பாசமாக, கலகலப்பாக எல்லாம் இருக்க மாட்டான். நான் தான் இந்த வீட்டின் செல்லம், இது என் வீடு, நீங்கள் அடுத்த வீட்டுக்கு போற பெண்கள் என்று தான் நடந்து கொள்வான். அப்போதெல்லாம் பாலமரத்தான் கண்டித்தால், விவரம் புரிந்தால் சரியாகி விடுவான் என்று விஜயா தான் மகனை தூக்கி பிடிப்பார்.
இன்று அவனுக்கே ஒரு குடும்பம் வந்த பின்னும், உடன் பிறந்தவர்களின் பழக்கத்தில் கொஞ்சமும் மாற்றி கொள்ள வில்லை. மனைவியை தாங்குகிறான், நல்ல குடும்பஸ்த்தனாக நடந்து கொள்கிறான், எல்லா விசேசத்திர்க்கும் முன் போய் நிற்கிறான். தன் மச்சானை அழைத்து வர அவனே சென்றான். அப்போது ஏன் தன் அக்கா ரெண்டு பேரையும் தள்ளி வைக்கிறான் என்று மனதில் யோசனை ஓட, அறையில் ஏதோ சத்தம். சண்டை மாதிரி தெரிய, வந்து விட்டார் பாலமரத்தான்.
விஜயா தான் மகள்களை சத்தம் போட்டு கொண்டு இருந்தார். நடந்தது இது தான்… கடந்த வருடம் சித்திரை கோவிலுக்கு சொந்தத்தில் நிறைய சேலை விஜயாவுக்கு வந்தது. நாத்தனார், மதினி, சித்தி என்று வரிசையாக எடுத்து கொடுத்தார்கள். அதில் நல்லதாக இருந்த நாலு பட்டு சேலையை தனியே எடுத்து வைத்தவர்,
“இந்தாங்க இந்த நாலு சேலையில உங்களுக்கு புடிச்சத எடுத்துட்டு, மீதிய உங்க தம்பி பொண்டாட்டிக்கு குடுங்க…” என்று தாய் கொடுக்க,
பார்த்தவர்களுக்கு நாலும் நன்றாக இருந்தது. நர்மதா தனக்கு பிடித்த வானம் நீல கலர் ஒன்றை தேர்வு செய்ய, பிருந்தா பிங்க் கலர் ஒன்றை எடுத்து கொண்டாள். மீதம் ரெண்டு சேலையை தனியே எடுத்து வைக்க போன நார்மதாவை தடுத்த பிருந்தா,
“நம்மு, அந்த இலை பச்சை கலர் நல்லா இருக்கு, இந்த ஆரஞ்ச் கலரும் சூப்பர் தான். பேசாம ரெண்டையும் எடுத்து நீயே வச்சுக்க… பிள்ளைகளுக்கு பட்டு பாவாடை சட்டை தைக்கலாம். அவளுக்கு குடுக்கணும்ன்னு எதுவும் சட்டமா என்ன?… நம்ம அம்மா சேலை, நமக்கு தான் முதல் உரிமை…” என்று பிருந்தா சொல்ல,
“வேணாம் பிருந்தா. அம்மாவே ஒப்பு கொள்ளாது. அப்புறம் அவ, தம்பி பொண்டாட்டி சாமியாடுவா… இன்னும் ரெண்டு நாள் தான் இருப்போம். அவ கிட்ட எதுக்கு வச்சு கிட்டு… அப்புறம் மூஞ்சிய தூக்கிட்டு திரிவா…” என்று பயந்து போய் நர்மதா சொல்ல,
“ஆமா, மேடம் முகம் சுருங்குன எனக்கு ஒரு கரண்டி சோறு தொண்டையில் இறங்காது பாரு. போடி இவளே… எனக்கு அவளை அப்படியே வச்சு வாங்கணும்ன்னு இருக்கு. நம்மளை பெத்த தாய் கிழவி சரியில்லைன்னு அமைதியா போறேன்…”
“நாம வந்து எட்டு நாளாச்சு ஒரு வார்த்தை நம்ம கூட இருந்து பேசி இருப்பாளா?… நம்ம பிள்ளைகளை கூட கிட்ட சேர்க்கல. என்னைகோ வார நம்மளை, வேண்டாத விருந்தாளி மாதிரி பாக்குறா. அப்படி என்ன நாம குறைஞ்ச போயிட்டோம். நாத்தனார்ன்னு பயப்பட வேண்டாம். கொஞ்சம் அனுசரணையா இருக்கலாம் தானா. அவளுக்கு பங்கு பிரிச்சோம், நம்மளை இன்னும் இளப்பமா தான் பார்ப்பா…” என்று ஓரெடியாக மறுத்து சேலையை நர்மதா பைக்குள் திணித்தாள் பிருந்தா.
விஜயா வந்தவர், “எந்த சேலையை எடுத்து இருக்கீங்க…” என்று கேட்க.
“நான் ஒரு சேலை எடுத்தேன். நர்மதா ஒன்னு, அப்புறம் பட்டு பாவாடை தைக்க பிள்ளைக ரெண்டு பேருக்கும் ரெண்டு எடுத்துகிட்டோம்…” சர்வ சாதரணமாக பிருந்தா சொல்ல,
“எதே! பிள்ளைகளுக்கா… அப்ப சுபாக்கு?…”
“அவளுக்கு என்ன? கோவிலுக்கு அவளுக்கும் தான் சேலை எடுத்து கொடுத்து இருப்பாங்க. அப்புறம் என்னம்மா?…”
“இருக்கட்டும். உங்களுக்கு நான் கொடுத்தேன்ல, அப்ப அவளுக்கும் நான் கொடுக்கணும் தான…” என்று தாய் கேட்க.
“அப்படி அவளுக்கு கொடுத்தே ஆகணும்ன்னு என்ன இருக்கு… பார்த்தோம் ஆசையா இருந்துச்சு, அம்மா சேலைன்னு நாங்க வச்சுக்க கூடாதா?…” விடாமல் வாதாடினாள் பிருந்தா.
“அதனால் தான் எனக்கு எடுக்காம உங்களுக்கு வச்சு இருந்தேன். அதே மாதிரி என் மருமகளுக்கும் கொடுக்கணும்…”
“அப்ப நீங்க எடுத்து கொடுங்க. எங்க கைல வந்தத நாங்க தர மாட்டோம்…”
“ம்ச், பிருந்தா என்ன பிடிவாதம் இது… நீங்க எடுத்துகிட்டீங்க தான, அவளுக்கும் ஒன்னு குடுங்க…”
கடுப்பான பிருந்தா, “அட என்னம்மா நீ… ஒரு சேலைக்கு இம்புட்டு பேச்சா? என்னைக்கோ ஒரு நாள் தான வாறோம். பெத்த பிள்ளைக தான்னு விட வேண்டிய தான. அப்படி என்ன ஊர்ல இல்லாத மருமகள். கொஞ்சம் கூட எங்களை மதிக்க மாட்ற. எங்களுக்கோ, எங்க பிள்ளைகளுக்கோ ஏதாவது ஒன்னு செஞ்சு இருப்பாளா?… ஒரு நாள் இங்க இருந்து எங்களை கவனிச்சு, பேசி சிரிச்சு நடந்து இருப்பாளா?… எங்களுக்கும் உரிமை இருக்கு. யாரோ வேண்டாத ஆள் வந்த மாதிரி கண்டுக்க மாட்றா, அவ புருசன் அதுக்கும் மேல… நாங்க என்ன சொத்துலையா பங்கு கேட்டோம்…” ஆதங்கமாக பிருந்தா கேட்க.
“ஓ… உங்களுக்கு சொத்து ஆசை வேற இருக்கா, இருக்குற சொத்தை அழிச்சது பத்தாது. பொட்டச்சிக ரெண்டு பேரையும் வாரவங்களுக்கு தள்ளி விடாம படிக்க வச்சு, அறுபது பவன் நகை போட்டு கட்டி கொடுத்ததோடு நிக்காம, ஒரு வருசம் சீர் செஞ்சோம்…” தாய் சொல்லும் போதே நர்மதா, தன் பையில் இருந்த சேலையை வெளியே எடுத்து வைத்து விட்டாள்.
“நீ ரெண்டு, உன் தங்கச்சி ரெண்டுன்னு நாலு பிரசவம் பார்த்து… இன்னைக்கும் காது குத்து, கெடாவெட்டு, கோவிலுக்கு செய்யணும். அப்புறம் மாமனார், மாமியார், மச்சான், கொழுந்தன், சின்ன மாமனார், மாமியார், பெரிய மாமனார், மாமியார் வரைக்கும் விசேஷம் நல்லது, கெட்டதுக்கு பொறந்த வீட்டு சீர் வரணும். தை பொங்கல், தீபாவளின்னு சீர் காசு அனுப்புரோம். அப்புறம் பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைக பிறந்த நாள்னு இன்னமும் கொட்டி தான் இருக்கோம். இதுல சொத்துல பங்கு வேணுமாம். விளக்குமாறு எடுத்தேன் ரெண்டு பேரையும் துவட்டிருவேன்…”
“உங்க கூட தான பிறந்தான். ஒத்த தம்பி. அவன் நல்லா இருக்கனும்ன்னு நினைங்க. அவன் சொத்துக்கு பங்குக்கு வராதீங்க. இன்னைக்கு சொல்றது தான் ரெண்டு பெருக்கும், நாங்க இருக்குற வரைக்கும் தான் இந்த வீட்டு படி மிதிக்கணும். நாங்க இல்லாத காலத்துல நீங்க யாரும் எம் மகனை தொந்தரவு பண்ண கூடாது. எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்து அவன் ஒருத்தனை ரோட்டுல விடுறதா… எம்புட்டு செய்யுரோம், அட்டை மாதிரி உறிஞ்சு தான் இருக்கீங்க. அப்புறமும் பத்தல…”
விஜயா என்று சத்தம் போட்டார் பாலமரத்தான். பிருந்தாக்கு கண் கலங்கி விட்டது. அத்தனையும் சொல்லி காட்டி விட்டார்.
“என்னை எதுக்கு சத்தம் போடுறீங்க. இவளுக போக்கு சரி இல்லை. பத்தாவது முடிச்ச உடனே வரவனுக்கு கட்டி கொடுக்காம படிக்க வச்சதுக்கு தான், நம்ம தலை மேல கை வைக்கிறாங்க…”
“இப்படி ஆம்பிளை பிள்ளை, பொம்பளை பிள்ளைன்னு பிரிச்சு பேசி பேசியே ஒருத்தன் ஒட்டாம போயிட்டான். என்ன செஞ்சுட்டான் அக்கான்னு ஒரு பாசம் இல்ல உம் மகனுக்கு…” என்று தந்தையும் கத்த,
பதட்டமானாள் நர்மதா, “இது என்ன வாக்குவாதம்?”
“ஆமா, ஆம்பிளை பிள்ளை தான். நம்ம கூட இருந்து பாக்குறது அவன் தான். நாளைக்கு ஒரு கடன், கஷ்டம்ன்னா கூட இருக்க போறதும் அவன் ஒருத்தன் தான். உங்க மகள்க வாங்க மட்டும் தான் வருவாங்க… ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க தான, சம்பாதிச்சு நமக்கா கொடுக்குறாங்க…” என்று விஜயாவும் கத்த,
“உம் மகன் மட்டும் உனக்கா கொடுக்குறான். அவன் குடும்பத்தை தான பாக்குறான். பிள்ளைக செய்வாங்கன்னு நினைச்சு நான் பிள்ளைகளை வளர்க்கல. நம்ம கடமை நாம செய்யணும். பிறந்த நாள், கல்யாண நாள்ன்னா பொம்பளை மக்களுக்கு குடுக்குற இரண்டாயிரம் காசை கணக்கு சொல்லுற… உம் மகன் இடம் வாங்க நாம இருவது லட்சம் கொடுத்தோம். அப்ப பொம்பளை பிள்ளைக்கு பங்கு கொடுத்தோமா?… அவனுக்கு தான் அதிகமா பாக்குறோம், செய்யுறோம். பெத்த பிள்ளைக கிட்ட வார்த்தையை விடாத…” என்று கணவர் எச்சரிக்க,
வெளியே சென்று இருந்த செழியன், அவன் மனைவியும் வந்து விட்டார்கள்.
“என்னம்மா சத்தம்?…” என்று மகன் கேட்க.
கிழிந்தது என்று நினைத்தாள் நர்மதா. பின்னே விஜயா ஒன்று விடாமல் ஒப்பித்தார். மருமகளுக்காக மகளோடு மல்லு கட்டியதை, மகளுக்கு செய்த சீர் வரை சொல்லி நியாயம் கேட்க. பிருந்தா நினைத்தாள், இனி எப்படி நாத்தனார் என்று மரியாதை கிடைக்கும்.
அவளின் கோபமே எங்களை கண்டு கொள்ள வில்லை, குடும்பமாக நிற்க வில்லை என்பது தான். இப்போ மொத்தமாக உடைச்சாச்சு…
“லீவுக்கு வந்தமா, பத்து நாள் பேசாம இருந்துட்டு போனமான்னு இருக்க மாட்டீங்க. இது என்ன குடும்பத்துகுள்ள சண்டை இழுத்து விடுறது…” என்று வீட்டு ஆளாக செழியன் சத்தம் போட,
பிருந்தா முகமே கருத்து போனது. இது அவர்கள் குடும்பம். தாங்கள் விருந்தாளி. வந்தோம், போனோம் அவ்வளவு தான் கட்டி கொடுத்த பொண்ணுக்கான பிறந்த வீட்டு உரிமை.
பிருந்தா, நர்மதா இருவரும் சேலையை எடுத்து மேசை மேல் வைத்து விட்டார்கள். தங்களுக்கு தேவையே இல்லை என்று…
“ஒழுங்கா எடுத்து உள்ள வைங்க. வெட்டி ரோசதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” சத்தம் போட்டார் விஜயா.
நாளைக்கே கிளம்பி விடும் முடிவுக்கு வந்து விட்டார்கள் அக்கா, தங்கை இருவரும்…
தனக்கு செய்ய கூடாது என்று சண்டை போட்ட நாத்தனார் மேல் அவ்வளவு வெறுப்பு சுபாக்கு. அவளின் ஒன்று விட்ட பெரியம்மா தான் சுசீலா. அதை கொண்டு அமைந்த சம்மந்தம் தான் செழியன்.
தன் பெரியம்மாவுக்கு போன் செய்து மகன் பிறந்த நாளுக்கு அண்ணனை அழைப்பது போல பேசியவள்,
“அண்ணன் சேலையே வாங்கி குடுக்காத மாதிரி எங்க சின்ன அண்ணி, எனக்கு எடுத்த சேலை வேணும்ன்னு எங்க மாமியார் கூட ஒரே சண்டை பெரியம்மா…” என்று சொல்லியே விட்டாள்.
error: Content is protected !!