Skip to content
Post Views: 12,960
பொழியும் மேகம்!
அத்தியாயம் 8
நிரஞ்சன் சர்ப்ரைஸ் என்று ஹனி மூன் பிளானை வெளிப்படுத்த, முன்பே தெரியும் என்பது காட்டி கொள்ளாமல் நிறைவாக அவன் சந்தோசத்தில் பங்கெடுத்து கொண்டாள் நர்மதா.
உண்மையில் அவளுக்கு ஒரு நிறைவு. சும்மா சும்மா குறையை மட்டுமே மனம் விவாதிக்க கூடாது. தற்போது வந்துள்ள சிறு இடைவெளியை குறைக்க கணவனும் நினைக்கிறான் என்பதே நிறைவாக இருந்தது.
Advertisement
நான் எடுக்கும் முடிவு தான் நமக்கு நல்லது என்று இருக்கும் நிரஞ்சன். மனைவி கொஞ்சம் காயப்படுகிறாளோ என்று யோசித்து அவளுக்கு மட்டுமே நேரம் செலவிட திட்டம் போட்டது நர்மதாக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆடம்பர செலவு, கை நிறைய பணம், வசதியான வாழ்க்கை என்பதில் நிரஞ்சன் தன் மனைவி, மக்களுக்கு குறை வைத்தது கிடையாது. ஆனால், உணர்வு ரீதியான மனைவிக்கான யோசனை எல்லாம் குறைவு தான். அப்படி இருக்க நிரஞ்சனின் இந்த பயணம் ஒரு மாறுதல் என்று தான் நர்மதா உணர்ந்தாள்.
பிருந்தாவின் பேச்சுக்கு தக்க சுசீலா கூட பிள்ளைகளை பிருந்தா வீட்டில் விடுவதற்கு ஒன்றும் சொல்ல வில்லை. நல்ல முறையில் தொடங்கியது பயணம். பிள்ளைகளுக்கு பிரிவு என்றெல்லாம் இல்லை. எப்போதாவது கிடைக்கும் பெரியம்மா வீட்டு விடுமுறையை கொண்டாடினார்கள்.
Advertisement
மாலத் தீவு, ஃபுல் ஹனி மூன் பேக்கேஜ். ஏதேதோ பேச வேண்டும், மனம் திறக்க வேண்டும், சமீப காலங்களில் விட பட்ட இடைவெளியை புரிதலோடு அனுசரிக்க வேண்டும், காலம் ஓடுகிறது, பிள்ளைகள் வளர்கிறார்கள் என்று எதிர்கால முடிவு என்ன?, இதுவரை இருந்த ஆரம்ப கட்ட தம்பதிகள் போய் நடுத்தர வயது தம்பதிகளாக முன்னேறி இருக்கும் தங்களில் வாழ்க்கை முன்னேற்றம் என்ன? நாட்டில் போடும் ஐந்தாண்டு திட்டம் மாதிரி நாமும் பல திட்டங்களை போட்டு நம் வீட்டை எவ்வாறு மேம்படுத்தலாம்? வாழ்வின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு? குடும்பத்தை வேற ஒரு பக்கம் நகர்ந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதை புரிய வைக்க வேண்டும் என்று பலவித யோசனை கலவையாக வந்து இறங்கினாள் நர்மதா.
Advertisement
எப்பவும் போல நிரஞ்சன், அவன் வேற மாதிரி என்று தான் நிருபித்தான். ஹனி மூன் என்று கேலியாக சொல்லி கொண்டாலும், உண்மையாகவே ஹனி மூன் கொண்டாடும் தம்பதியா தாங்கள் என்று நர்மதா நினைக்க… உண்மையில் ஹனி மூன் தான் கொண்டாடினான் நிரஞ்சன்.
அவர்கள் தங்கும் அறையே ஹனி மூன் ஷூட்டில் சர்வ அலங்காரங்களுடன், நர்மதாக்கு பிடித்த ஒயின் நிற அலங்காரத்தில், மனம் வீசும் கெண்டில் லைட் , மை ஸ்வீட் ஹார்ட் என்று வாசகத்தோடு, சிரிக்கும் சிவப்பு ரோஜாக்களை கையில் கொண்டு குனிந்து மனைவியை வரவேற்க…
திகைத்து போய் நின்றாள் நர்மதா.
Advertisement
“என்னங்க இது?… நம்ம என்ன புதுசா கல்யாணம் ஆனவங்களா?…” கொஞ்சம் தயக்கம், வெட்கம் கலந்து கேட்க.
ரோஜா கொத்தை மனைவி கையில் கொடுத்து, அவளை பின் பக்கமாக அணைத்து கொண்டவன்,
“சோ வாட்?… யூ ஆர் மை ஒய்ஃப் அண்ட் லாட் ஆப் லவ். அதை நான் எக்ஸ்போஸ் பண்றேன்…” அவள் கன்னத்தில் லேசாக முத்தம் வைக்க,
அசட்டையாக, எனக்கு ஒன்னும் பாதிப்பில்லை என்று காட்ட நினைத்தாலும், நர்மதா முகம் சிவந்து விட…
“ஹேய் நம்மு, இந்த ரோஸ் பட் கன்னத்தை எல்லாம் கல்யாணம் ஆன மூணு மாசம் தான் பார்த்தேன். முதல் குழந்தை பிறந்துச்சு,வெட்கம் போய் உன் முட்டை கண்ணை உருட்டி என்னை பயமுறுத்த ஆரம்பிச்சுட்ட…” என்று கேலியாக நிரஞ்சன் சொல்ல,
இப்போதும் அதே பார்வையுடன் கண்ணை உருட்டி முறைக்க, கலகலத்து சிரித்தான் நிரஞ்சன்.
“என் சக்கரைகட்டி…” என்று கணவன் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுக்க,
மலர்ந்த நர்மதா, “நீங்க மட்டும் எப்படி தான் எப்படி இருக்கீங்களோ…”
“எப்படி இருக்கேன் மேடம்?”
“எந்த கவலையும் இல்லாமல், என்றும் பதினாறுன்னு…” லேசாக சலித்து கொண்டாள் மனைவி.
“அதான் அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்து யோசிக்க நீ இருக்கையே…” கிண்டலாக நிரஞ்சன் சொல்ல,
“அப்படி யோசிச்சு என்ன பண்ண, பத்து பைசாவுக்கு பிரோஜனம் இல்லை. என் பேச்சை கேட்கவா போறீங்க…” போட்டு பார்த்தாள் நர்மதா.
“உன் பேச்சை எதுக்கு கேட்கணும்.. ஏதாவது பாஸிட்டிவ்வா பேசுறையா? அப்படி ஆகும், இப்படி நடக்கும், செலவு பண்ண கூடாது, காசா சேர்க்கணும், நகை எடுக்கணும்… சரியான லொடலொட கேஸ்…” அலுத்து கொண்டான்.
“நல்லது தான் நான் சொல்றேன். அது அபசகுணம் இல்லை. வரும் முன் காப்பது…” முறுக்கி கொண்டு பதில் சொன்னாள் நர்மதா.
“எது மேடம் பிரிகேஜி போற குழந்தைக்கு கல்யாணத்துக்கு நகை எடுக்கிறதா…”
“அது அப்படி இல்லீங்க… தங்கம் ஒரு இன்வெஸ்ட்மென்ட். எப்பவும் மதிப்பு இருக்கும்…” என்று ஆரம்பிக்கும் போதே,
“போதும் போதும்… நான் என் பொண்டாட்டி கூட ஹேப்பியா இருக்க தான் நாடு விட்டு நாடு வந்தேன். இங்கேயும் நியா? நானான்னு? ஆரம்பிக்காத…” என்றவன், மனைவியை டின்னருக்கு தள்ளி கொண்டு வந்தான்.
ஆச்சர்யம்!… கேண்டில் லைட் டின்னர். பின் பக்கம் மெலோடி பாடல் ஓட, ஒயிட் ஷிர்ட்டில் முன் பக்க ரெண்டு பட்டன் கழட்டி விட்டு படு ரொமான்டிக்காக இருந்தான் நிரஞ்சன்.
நர்மதாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. ஆனால் காட்டி கொள்ள வில்லை. பிறகு சிங்கத்தை சீண்டி விட்டது போல ஆகிவிடும். என்ன தான் ஹனி மூன் என்று சொல்லி கொண்டாலும், அது எப்படி ஹனி மூன் ஆகும். திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது.
இந்த ஏழு வருடத்தில் எத்தனையோ தாம்பத்திய இரவுகளை கடந்தாச்சு. கணவனின் ஆளுமை அவள் முழுதாக அறிந்த ஒன்று. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்க போகுது. புதுமண தம்பதிகள் போல எப்படி இருக்க முடியும். திருமணம் ஆன புதிதில் இருந்த படபடப்பு, தயக்கம், பூரிப்பு எல்லாம் இப்போது எப்படி வரும். என் கணவன் என்ற உரிமை உணர்வு தான் தூக்கி நிக்கும்.
சாதரணமாக தான் நிரஞ்சனை எதிர் கொண்டாள். ஆனால், நிரஞ்சன் அவ்வாறு இருக்க வில்லை.அவனின் ரசனை, தோரணை, பேச்சு, பார்வை, நெருக்கம், அணைப்பு, கவனிப்பு, சிரிப்பு என்று முழுதாக அவளை இழுத்து கொண்டான்.
ரெண்டு பிள்ளை பெற்று, நடுத்தர வயதில் கணவனிடம் அப்படி என்ன வெட்கம் என்று நினைக்கும் அளவுக்கு நிரஞ்சன் மனைவியை தாங்கினான். அப்படி என்ன ஸ்பெஷல் என்று நினைத்தாலும், ஸ்பெஷல் தான் என்று உணரும் அளவிற்கு மனைவியை போற்றினான்.
நர்மதாக்கு முகமெல்லாம் ஒரே பூரிப்பு. இந்த மத்திய வயது என்பது ஓட்ட போட்டியில் கலந்து ஓடுவது போல… பல விசயங்கள் மண்டைக்குள் ஓடும். நிதர்சனமான வாழ்க்கை என்றால் என்னவென்று உணரும் பருவம். நின்று, நிதானமாக வாழ்க்கையை அனுபவிக்க, திரும்பி பார்க்க, கை கோர்த்து நடக்க எல்லாம் நேரம் இருக்காது. ஓட தான் வேண்டும். பிள்ளைகள், படிப்பு, சொத்து, எதிர்கால சேமிப்பு, சமூக அந்தஸ்து, பொருளாதார உயர்வு, குடும்ப பொறுப்பு, கடமை, பெற்றோர்கள் என்ற பெரிய தகுதி என்று பரபரப்பான சூழல் தான் இருக்கும்.
அதற்கு நிகராக தான் நர்மதாவும் அடுத்து என்ன என்று திட்டமிட… ஆனால், நிரஞ்சன் என்ன அவசரம் கொஞ்சம் அமர்ந்து இளைப்பாறி அடுத்து ஓடலாம் என்று கை பிடித்தது ஆச்சர்யம் தான். நர்மதா ஒரு நாளும் தனக்கு என்று நேரம் ஒதுக்கும் ஆள் கிடையாது.
போட்டி நிறைந்த உலகம். அதற்கு தக்க தாங்களும் ஓட வேண்டும். தங்களது பெற்றோர் தங்களை ஒரு படி முன் தள்ளி விட்டால். தாங்கள் இரண்டு படியாவது தம் பிள்ளைகளை முன் தள்ள வேண்டுமே. சக சொந்தங்கள் மத்தியில் பின் தங்கி விட கூடாது என்று முனைப்பாக இருக்க… எந்த அவசரமும், எதிர்கால திட்டமும் இல்லாத கணவனின் அணுகுமுறை அவளுக்கு ஆச்சர்யம் தான்.
கணவன் சொல்லுவது போல கொஞ்சம் அமர்ந்தாள் என்ன… பரபரப்பான சூழலை ஒரு பத்து நாளுக்கு தள்ளி வைத்து, நிதானமாக உலகத்தை பார்த்தால் என்ன என்று தோன்ற… அமைதியாக ரசிக்க தொடங்கினாள்.
அவசரம் ஏதுமின்றி நிதானமாக எழுவது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்து கொண்டே அவசர காப்பி என்றில்லாமல் மெல்ல மெதுவாக காப்பி, ரசனையான குளியல், ரசித்து சாப்பிடும் காலை உணவு, தலைக்கு குளித்து, வயிறு நிறைய உண்ட பின் வரும் தூக்கம், கை பிடிக்க, கதை பேச, தோல் சாய கணவன் என்று முழு ஓய்வில் இருந்தாள் நர்மதா. என்னவோ முகம் கூட பளிச்சென்று இருந்தது.
அப்பப்போ பிள்ளைகளுக்கு போன் செய்து பேசி கொள்வாள். வீட்டில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன கிஃப்ட் வாங்கி வைக்க கடை பகுதிக்கு செல்ல, நிரஞ்சனை கவர்ந்தது ஒரு உடை. நல்ல மெருன் நிற சாப்ட்டான கவுன் அமைப்பு கொண்டது. முட்டிக்கு ஒரு அடி கீழ வரும். கை இல்லாத சிலிவ்லெஸ் அமைப்பு கொண்டது.
நர்மதா நைட்டி மட்டும் தான். இந்த மாதிரி உடைகள் அணிய மாட்டாள் என்று தெரிந்தும், அந்த உடையை விட மனமில்லை. தனியே வாங்கி கொண்டான்.
“ரொம்ப அழகா இருக்குங்க. நான் நம்ம ஊர் டெய்லர் கிட்ட கொடுத்து கை வச்சு, கொஞ்சம் ஆரி வொர்க் பண்ண சொன்னா, சூப்பரா இருக்கும். சுடி மாதிரி போட்டுப்பேன்…”
“எது? சுடிதார் தைக்க போறயா?… அடியே பட்டிகாடு. இந்த டிரஸ்ச அப்படியே போட்டா தான் அழகு. ஆல்ட்டர் பண்ணாத…” என்று நிரஞ்சன் சொல்ல,
“என்னது? அப்படியே போடவா!… ஆளை பாரு… நான் ரெண்டு பிள்ளைக்கு அம்மா, அத்தோடு எம்பது பிள்ளைகளுக்கு ஆசிரியர். எனக்குன்னு பிரின்சிபில் இருக்க, அதை நான் மீற மாட்டேன்…” உறுதியாக மனைவி சொல்ல,
“உன்னை யாரு வெளியே போட சொன்னது. நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா தான இருக்கோம். இங்க போட்டுகோ… இங்க வித்தியாசமா இருக்காது…” என்று நிரஞ்சன் சொல்லியும் நர்மதாக்கு தயக்கம் தான்.
“அதில்லைங்க நான் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போட்டதே இல்லை. சௌகரியமாவும் இருக்காது. ஒரு மாதிரி பாதுகாப்பா நான் உணர மாட்டேன். அத்தோடு எனக்குன்னு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கு… நான் எப்பவும் புடவையை தான் கம்ஃப்ர்ட்டா நினைப்பேன்…” கணவன் கோபித்து விட கூடாதென்று தயங்கியே சொல்லி விட்டாள்.
“அது வெளிய போனா ஓகே. இங்க நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். பிளீஸ் நீ போட்டுக்கோ நம்மு. உனக்கு ஃப்ரீயா ஃபீல் பண்ணுவ…”
“நான் ஃபுல்லா கவர் பண்ணி ட்ரெஸ் பண்ணான தான் ஃப்ரீயா ஃபீல் பண்ணுவேன்…”
நர்மதாக்கு சங்கடமாக இருந்தது. இதுவரை உடை விசயத்தில் நிரஞ்சன் எந்த கட்டுப்பாடும் விதித்தது இல்லை. ரொம்ப மாடர்ன் தான் நிரஞ்சன். ஆனாலும், நர்மதா எப்படி இருந்தாலும் ரசிப்பான். அவள் அவளுக்கு பிடித்த விதத்தில் தான் உடை அணிவாள்.
பெரும்பாலும் கண்ணை உறுத்தாத லைட் கலர் காட்டன் வகைகளை தான் தேர்வு செய்வாள். ஆசிரியர் என்பதாலோ என்னவோ ஒரு ஒழுங்கு இருக்கும். அவளிடம் அதிகம் இருப்பதும் புடவை தான். எதுவுமே சொல்லாத கணவன் இன்று வற்புறுத்தும் போது, பட்டென்று முடியாது என்று சொல்ல தெரிய வில்லை.
அதுவேறு கோபமாகி, சண்டை வந்து விட்டால். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து புரிந்து கொள்ள தான் இந்த ட்ரிப், அதை கெடுக்க விருப்பமும் இல்லை. ஒரு மாதிரி தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள். தங்களது அறைக்குள் மட்டும் தான், தன் கணவன் முன்பு தானே என்று தன்னையே சமாதானமும் செய்து கொண்டாள்.
நிரஞ்சன், அதன் பின் வற்புறுத்த வில்லை. உன் விருப்பம். ஆனால், என் ஆசை இது தான் என்று காட்ட… மிகுந்த தயக்கத்தோடு தான் அணிந்து கொண்டாள். உண்மையில் அவளுக்கு அழகாக இருந்தது.
அவளின் நிறத்தை கொஞ்சம் தூக்கி கொடுத்து, பொருந்தி போனது. நிரஞ்சனுக்கு ஒரே ஹேப்பி.
“நிஜமாவே அழகா இருக்க நம்மு… உனக்கு சூப்பரா செட் ஆகுது…” என்று கொஞ்சவும் செய்தான்.
கணவன் முகத்தில் இருந்த புன்னகை அவளுக்கு நிம்மதியாக இருந்தது. நிறைய அசௌகரியம் தான். நேரம் செல்ல செல்ல ஒரு மாதிரி பழகி கொண்டாள். அங்கு இருந்த பலரும் நர்மதாவை விட மாடர்ன்னாக உடை அணிந்து இருக்க, அவளுக்கு பெரிதாக வித்தியாசம் இல்லை.
மற்றவர்கள் எப்படி பார்ப்பார்களோ என்ற தயக்கமும் விடை பெற்றது. அதே போல வேற கலரில் இன்னும் ரெண்டு உடைகள் வர, தலையில் அடித்து கொண்டாள். நிரஞ்சனுக்கு ஒரே குஷி தான்.
மாலையில் கை கோர்த்து கடற்கரையில் நடக்க, மணலில் கொஞ்சம் விளையாட என்று சுற்றமும் மறந்து தான் சுத்தி கொண்டு இருந்தார்கள். நர்மதா மனதில் கணவனிடம் பேச வேண்டும் என்று நினைத்த எதுவும் அவளுக்கு நினைவு கூட இல்லை. மனமெல்லாம் பூரிப்பும், சந்தோசமும் தான். தன்னையே வித்தியாசமாக, பூரிப்பாக உணர்ந்தாள்.
இன்று மாலை கிளம்ப வேண்டும். பத்து நாள் போனதே தெரிய வில்லை. எல்லாவற்றையும் அடுக்கி வைக்க, நிரஞ்சன் வெளியில் சென்று இருந்தான். வீட்டுக்கு ஒரு முறை அழைத்து சொல்லி விடுவோம் என்று போனை எடுக்க, அவளின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் காட்டியது.
நான் எதுவும் ஸ்டேட்டஸ் போடலையே… போனை தொட்டு நாலு நாள் இருக்கும். நிரஞ்சனா ஸ்டேட்டஸ் வச்சது… யோசனையோடு திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள்.
எந்த உடை அணிய அவள் அவ்வளவு தயங்கினாளோ, அதே உடையில் எடுத்த போட்டோக்களை நிரஞ்சன் ஸ்டேட்டஸ் வைத்து இருந்தான். அதுவும் அவள் போனில்… அரண்டு தான் போனாள்.
நிரஞ்சன் தான் விதவிதமாக போட்டோ எடுத்தான். அவளுக்கு முத்தம் கொடுத்தது போல, ரெண்டு பேர் கன்னமும் ஒட்டி வைத்திருப்பது போல, போனை அவள் பிடித்து பிடித்து இருக்க பின் பக்கம் இருந்து நிரஞ்சன் அணைத்து இருப்பது போல… அத்தோடு அவளை தனித்தனியாக எடுத்த படங்களையும் பதிவிட்டு இருந்தான்.
என்ன காரியம் பண்ணி விட்டான். அவசரமாக யார் யார் ஸ்டேட்டஸ் பார்த்தது என்று பார்க்க. அவளின் லிஸ்ட்டில் இருந்த எல்லோரும் தான் பார்த்து இருந்தார்கள். அவளின் பள்ளி மாணவர்கள், அக்கா, மாமா, தன் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அவள் உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்கள்.
மனம் படபடக்க பெயரை பார்த்தாள். அவர்கள் பள்ளியில் பதினைந்து ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன நினைத்த இருப்பார்கள்.
நேர்த்தியாக, இடுப்பில் சிறு பகுதி கூட வெளி தெரியா வண்ணம் காட்டன் புடவையும், கண்களில் கண்டிப்புமாக இருக்கும் ஆசிரியர், குட்டி கவுன் போட்டு போட்டோ ஸ்டேட்டஸ் வைத்தால், என்னை பற்றி என்ன நினைப்பார்கள்.
வேற யார் பார்த்தது… அவளின் தம்பி. ஐயோ! என்ன நினைத்து இருப்பான். அடுத்து யார் பார்த்தது? அவளின் அப்பா… நர்மதாக்கு நெஞ்சு அடைத்தது. உடை விசயத்தில் அம்மா அவ்வளவு கண்டிப்பு. வீட்டை விட்டு சும்மா வெளியே வந்தால் கூட நைட்டிக்கு மேல் துப்பட்டா போட்டு இருக்க வேண்டும்.
அரண்டு போய் நிற்கும் மனைவியை பார்த்த நிரஞ்சன்,
“என்ன நம்மு?…” வார்த்தை ஒன்றும் பேசாமல் போனை எடுத்து காட்ட,
“ஓ… நல்லா இருக்குல்ல. உனக்கு வயசு குறைஞ்ச மாதிரி, சின்ன பொண்ணா தெரியுற…”
“ஏன் இப்படி பண்ணீங்க?…” கண் கலங்க நர்மதா கேட்க.
“என்ன பண்ணேன். உனக்கு இந்த மாதிரி போட்டோ போடுவது பிடிக்காது. அதான் உனக்கு சொல்லாம போட்டேன். என்ன சொன்னாங்க உன் பிரெண்ட்ஸ்…” சின்ன சிரிப்போடு தான் நிரஞ்சன் கேட்டான்.
“என்ன சொல்லுவாங்க? என்ன சொல்லணும்? என்னை இப்படி கேவலப்படுத்திடீங்க… ஒரு புருசன் செய்யிற வேலையா இது?…” ஆக்ரோஷம் வந்தது.
“என்னடி பேசுற? என்ன கேவலம்? நம்ம சந்தோசத்தை ஷேர் பண்ணேன். நீ எப்பவுமே போட்டோ வைக்க மாட்ட, உனக்கு ஒரு சின்ன ஷாக் கொடுத்தேன். அது தப்பா…”
“தப்பு தான். என்கிட்ட கேட்காம ஒரு வார்த்தை சொல்லாம என் போட்டோவ, அதுவும் இந்த மாதிரி அசிங்கமா…”
“என்ன அசிங்கம். கடுப்பை கிளப்பாத சொல்லிட்டேன். நீ ரொம்ப ஷை டைப், ஓபன் அப் ஆக மாட்ட, ஃப்ரீயா இருக்க மாட்ட. ரொம்ப ரூட் நீ… அதான் சாதாரண போட்டோவுக்கு கத்துற. இதுல என்னடி தப்பு கண்ட?…” எகிறினான் நிரஞ்சன்.
“நீங்க போட்டோ போடுங்க. தப்பில்லை, உங்க குடும்ப போட்டோ, பிள்ளைக போட்டோ வைங்க. அது என்ன இந்த மாதிரி ட்ரெஸ்… கட்டுன புருசன் உங்க முன்னாடி போடுறதே அசிங்கமா நினைச்சேன். என்னை ஊர் முன்னாடி அசிங்க படுத்தி வச்சு இருக்கீங்க…” அழுகை பொங்கியது.
“ம்ச், நர்மதா கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு… இதை விட மாடர்ன்னா ட்ரெஸ் பண்ணி ஆபீஸ் போற பொண்ணுங்க கூட இருக்காங்க. யாருக்குமே தப்பா தெரியல. உனக்கு மட்டும் அசிங்கமா தெரியுதா… குறை உன்கிட்ட தான் இருக்கு…”
“உங்களுக்கு தாங்க எதுவும் புரிய மாட்டாது. நம்ம ரெண்டு பேரும் புருசன், பொண்டாட்டியா இருந்தாலும், ரெண்டு பேர் புரோபஷன் வேற… நான் ஒரு ஆசிரியை. எனைக்குன்னு கட்டுப்பாடு இருக்கு. நாங்க போடுற ட்ரெஸ்ல இருந்து பேசுற வார்த்தை வரைக்கும் எங்களுக்கு ரூல்ஸ் இருக்கு. நாலு பேருக்கு நல்லதா எடுத்து சொல்ற எடத்துல இருந்துட்டு, எப்படி ஒரு ஸ்டேட்டஸ் வச்சா, நாளைக்கு என் கிட்ட படிக்கிற பிள்ளைகளுக்கு என்ன ஒழுக்கம் சொல்லி கொடுப்பேன். இது தப்புன்னு நான் சொன்னா, அந்த தப்பை நானும் செய்யாம இருக்கணும் தான…”
“டீச்சர் எல்லாருக்கும் குடும்பம் கிடையாதா… அவங்களும் ஃபேமிலி கூட சந்தோசமா வெக்கேஷன் போக மாட்டாங்களா நர்மதா?… இப்ப இருக்குற பசங்க எல்லாம் ரொம்ப அட்வான்ஸ், நீங்க பூமர் வேலை பார்க்காதீங்க… ஒரு ஹேப்பியான மெமரிய கெடுக்குற…”
“நமக்கு ஹேப்பியான விசயத்தை நம்மோடு தான் வச்சுகணும். இப்படி அம்பலப்படுத்த கூடாது. என் மரியாதை, எனக்குன்னு இருக்குற தனித்தன்மையை கேள்விக்குறி ஆக்குறீங்க…”
“முட்டாள், பட்டிக்காடு, விடுதலை வாரத்துக்கு முன்னாடி பிறக்க வேண்டிய ஆள் நீ… படிச்சவ தான நீ, உன் முட்டை கண்ணை விரிச்சு பாரு இந்த உலகம் எவ்வளவு அட்வான்ஸ்ஸா போகுதுன்னு தெரியும். எப்படி எல்லாம் போட்டோ, ஸ்டேட்டஸ் வைக்கிறாங்க தெரியுமா… நான் என் பொண்டாட்டி கூட ஹனி மூன் வந்த மாதிரி போட்டோ போட்டேன். அது என்னவோ ஒரு கொலை குத்தம் பண்ண மாதிரி கத்துற.. என்ன உன் மரியாதை. உன் புருசன் கூட தான போட்டோ எடுத்த, அதுல என்ன மரியாதை குறைச்சல்.”
“குத்தம் தான். உங்களுக்கு என் ஃபீலிங் புரியல. நர்மதா டீச்சர் அப்படீன்ற வார்த்தைக்கு நான் ஒரு மதிப்பை உருவாக்கி வச்சு இருக்கேன். நிமிர்ந்த நடை, நேர்த்தியான உடை, தெளிவான பேச்சு, கண்டிப்பு, சின்ன சிரிப்புன்னு என் மாணவர்கள், சக ஊழியர்கள் மத்தியில எனக்கு மரியாதை இருக்கு… குட் மார்னிங் டீச்சர்ன்னு ஒரு ஜென்ஸ் ஸ்டாப் சொல்றாங்கன்னா அந்த பார்வையில மரியாதை தெரியும். இனி எப்படி பார்ப்பாங்க. இந்த கால ஃபேஷன் அப்படியா நினைப்பாங்க…”
“எது ஒழுக்கம், சோசியல் எப்படிப்பட்டது, எப்படி வாழனும், எந்த மாதிரி சொசைட்டிய பார்க்கணும்ன்னு போதிக்கிறது ஒரு ஆசிரியர் நான்… இதை பார்த்த யாரும் என்ன சொல்லுவாங்க… அடுத்து எப்படி என் மாணவர்களுக்கு கிளாஸ் எடுப்பேன்…”
“அப்புறம் எங்க அப்பா…” சொல்லும் போதே அழுகை வந்தது.
“நீங்க என் புருசன் தான். அதுக்காக உங்க கூட நெருக்கமா இருக்குற போட்டோவ என் குடும்பம் பாக்குற மாதிரி, ஊர் பாக்குற மாதிரி வைக்கிறது எனக்கு ஒழுக்க கேடா தான் தெரியுது. என் அந்தரங்கம் வெளிப்படுவது, என் ஒழுக்கத்தை கேள்வி கேட்கிற மாதிரி தான்…” உறுதியாக நர்மதா சொல்ல,
“வில்லேஜ் டாங்கி… நாகரிகம்ன்ன என்னன்னு தெரியலை. உனக்கு தப்பா தெரிஞ்சா, உன் சேர்க்கை சரியில்லை. என் பிரெண்ட்ஸ் யாருக்கும் தப்பா தெரியல” கடுப்பாக திட்டினான் நிரஞ்சன்.
அதிர்ந்து போனவள். “என்ன சொல்றீங்க. நீங்களும் ஸ்டேட்டஸ் போட்டு இருக்கீங்களா?…” அவசரமாக அவன் போனை வாங்கி பார்க்க,
ஃபேஸ் புக், இன்ஸ்டகிராம் எல்லாம் நர்மதா சிரித்த முகம் தான் கொட்டி கிடந்தது.
error: Content is protected !!