Skip to content
Post Views: 385
அத்தியாயம் – 29 (இறுதி)
பல வருடங்கள் சென்று இன்று…
Advertisement
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றுக்கு ஏற்ப.லட்சுமணன் – சாலா வாழ்க்கையில் அவர்கள் கடந்து சென்ற ஆண்டுகளில் பல மாற்றங்கள்.லட்சுமணன் இப்போது முதுமகன் பருவத்தில் நின்றான்.சாலா பேரிளம் பருவத்தை எட்டி இருந்தாள்.வள்ளியப்பனும் கண்ணாத்தாளும் முதுமையில்.
லட்சுமணன் – சாலா தம்பதியினருக்கு தற்போது இரு பிள்ளைகள்.இவர்கள் தான் வீட்டின் உயரிப்பு போலும். மூத்த பிள்ளை பெண் பிள்ளை பல வருட இடைவேளைக்குப் பிறகு இப்போது ஒரு மகன்.பெண் பிள்ளை பருவத்தில் நிற்க,குட்டி காளைக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது.
Advertisement
Advertisement
லட்சுமணன் மேற்படிப்பை முடித்து விட்டு இப்போது சிறப்பு நுரையீரல் மருத்துவனாக இருக்கிறான்.முறையாக தேர்வு பெற்று அரசாங்க மருத்துவமனையில் மருத்துவ பணி. தொழில் முழுதாக சாலாவின் வசம் இருந்து மக்களால் அறியப்படும் சுவை கொண்ட பொருட்களாக பெயர் பெற்று விளங்குகிறது. உணவகத்தை மற்றும் கை மாற்றி விட்டனர் போலும்.
வள்ளியப்பன் கண்ணாத்தாளின் மூப்பை முன் வைத்து உணவகத்தைக் கை மாற்றி விட்டான் லட்சுமணன்.சாலாவுக்கு மனமில்லை என்றாலும் அவளாலும் ஒற்றை ஆளாக தனித்துச் செயல் பட முடியவில்லை என்பதால் லட்சு செயலுக்கு மறுப்பு சொல்லவில்லை.
Advertisement
ஆம் இப்போது பெரியவர்கள் என்றால் வள்ளியப்பனும், கண்ணாத்தாள் மட்டுமே.ஒரு வருடத்திற்கு முன்பு தான் மீனாள் உடல்நிலை குறைவால் காலனுடன் கை கோர்த்து கொண்டாள்.
இன்று மீனாள் இறந்து முதல் வருட படைப்பு.வீட்டில் உள்ள சொந்தங்கள், கடை ஊழியர்கள் கூடி நிற்க மீனாளின் புகை படத்தை வைத்து பூஜை செய்தனர்.
அழகு பதுமையாகத் தந்தையைக் கொண்டு இருந்தாள் லட்சுமணன் மகள் அழகிய மீனாள்.வைர மூக்குத்தி ஜொலிக்கத் தந்தையின் நிறம், அல்லாது குணமும் அவனைக் கொண்டே பிறந்திருந்தாள் மீனாள்.அவள் இடுப்பில் சாலாவை அச்சில் வார்த்தது போல் குட்டி வள்ளியப்பன்.
இவர்கள் வழக்கப்படி தாத்தா பாட்டி பெயர்கள் தான் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள்.அந்த வகையில் லட்சுமணன் பிள்ளைகளுக்குத் தனது தாயின் பெயரையும், தனது மாமன் பெயரையும் வைத்திருந்தான்.அதில் வள்ளியப்பனுக்கு அத்தனை பெருமை சும்மாவே மருமகன் மேல் மயக்கம் கொண்டவருக்கு இந்த செயல் சொல்லவா வேண்டும் இன்னும் சொக்கி நின்றார் மனிதர்.
வெகு நேர்த்தியாக பூஜை நடந்து கொண்டிருக்க லட்சுமணன் இறுகி போயிருந்தான். தனக்கு எதிரில் இருந்த தாயின் புகை படத்தை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்.இன்னும் மீனாளை நன்றாகப் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
தாயின் தாயகத்தில் சேர்ந்த பெயரும் புகழும் அவனை இன்னும் ஒரு ஓரத்தில் உறுத்தி கொண்டு தான் இருந்தது.அவன் மனபோக்கு அப்படி, ஆனால் வெளியில் உள்ளவர்கள் எண்ணம் அவர்களை பொறுத்தவரை ‘தங்கமாகத் தாய்யை தாங்கி நின்றான்’ என்று தான் சொல்வார்கள்.
மீனாள் நோய் வாய்ப்பட்டு இருந்த போதிலும்.அவரது கடைசிக் காலம் அண்ணன், அண்ணி, மகன், மருமகள்,பேரன் பேத்தி என்று அத்தனை நிறைவாகத் தான் இருந்தது. அவளும் படுக்கையாகி எல்லாம் உயிர் துறக்கவில்லை. இறப்பதற்கு கடைசி ஒரு வாரம் மட்டுமே படுக்கையில் இருந்தாள்.கடைசி நேரம் வரை தனது மக்களைப் பக்கத்தில் இருத்தி பார்த்து, எடுத்து இறுதியில் தனது பேரனை உச்சி முகர்ந்து தனது இறுதி மூச்சை விட்டு காற்றோடு காற்றாக கலந்து விட்டாள்.
தனது தாயின் நினைவுகளோடு பயணம் செய்தவனைத் தடுத்தது நாகம்மையின் குரல்,”மாமா!” என்றழைக்க.
தாயின் நினைவில் இருந்தவன் அவளது அழைப்பு ஒரு வித தடுமாற்றத்தை கொடுக்க அதில் கலைந்தவன்,” ஹான்! சொல்லுக நாகு”
“அம்மாயி கிளம்புறாக மாமா சொல்ல சொன்னாக, அப்புச்சி வேற தனியா கிடப்பாக, நாங்க வரவா?”
“இருக தனியா போக வேண்டாம் நான் வந்து விடுறேன்”
“தனியா இல்ல மாமா அவுக வந்திருக்காக பிள்ளைகளை எங்க அயித்த கிட்ட விட்டுருக்கேன்”
“பிள்ளைகளுக்கு பலகாரம் எடுத்துக்கோக அவுகளை கூட்டிட்டு வரலாம் தானே”
“சின்னதுக்கு மேலுக்கு முடியல மாமா அதேன்”
“சரி நீக கிளம்புக எத்தினி தூரம் போகனும். அப்பத்தாவை விட்டுட்டு போனா இன்னும் நேரம் புடிக்கும்.அவுகள நான் கொண்டு விடுறேன்” என்றதும் நாகம்மை தடுமாறி நிற்க.
” இன்னும் என்ன? கிளம்புக நான் உங்க ஆச்சிய பத்திரம் பண்ணிடுவேன்” என்றதும் பதறிய நாகம்மை.
“மாமா நான் அதுக்கு வேண்டி தயங்கி நிக்கல. அப்புச்சிக்கு நடக்க மட்டுந்தேன் வரல மத்தபடி அவுக மாறவே இல்லை மாமா உங்க தலை கண்டா கண்டதையும் பேசி வலிக்க வைப்பாக அது இன்னும் சங்கடமா போகும் அதேன் சொல்லுதேன் வேற ஒன்னுமில்லை.இதையெல்லாம் எண்ணித்தேன் ஆத்தா என்னைச் சுருக்கா வர சொன்னாக” என்றதும் சிறு புன்னகையைக் கொடுத்தவன்.
“அவுக பேசாத பேச்சா என்ன?”
“மாமா” அப்பொழுதும் தயக்கமாக அழைத்தவளை சிரிப்புடன் பார்த்தவன்.
“கிளம்புக நான் சமாளிச்சுக்கிடுவேன் அதுவும் போக அவுக இனி புதுசா பேச எதுவுமே இல்லை” என்றதும் இதற்கு மெல்ல என்ன செய்ய என்று எண்ணி முயன்று ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு கிளம்பி விட்டாள் நாகம்மை.
அதுவரை அவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்த மீனாள் நாகம்மை சென்றதும் தகப்பன் அருகில் வந்து,”அப்பா!”
“சொல்லுக மீனு குட்டி” தாய்யை அதிகம் நினைவு படுத்தும் மகள் மீது கணிக்கிட முடியாத அன்பு லட்சுமணனுக்கு.
” பெரிய ஆச்சிய சாப்பிட வச்சுட்டேன் அவுக வூட்டுக்கு போக வேண்டி துடிக்கிறாக நாகு சித்தியை அழைச்சிட்டு வர சொன்னாக”
“நாகு சித்தி கிளம்பிட்டாக நான் கொண்டு போயி விடுறேன் நீக அம்மாகிட்டயும், விசாலாட்சி ஆச்சி கிட்டையும் செய்தி சொல்லிடுக என்ன?”
“சரிப்பா” என்றவள் பாவாடையைத் தூக்கி கொண்டு செல்ல. செல்லும் மகளில் தாயின் ஜாடை கண்டு மெல்லிய புன்னகை கொண்டான் லட்சுமணன். பிள்ளைகள் வரம் என்பது உண்மை தான் போலும். இழந்த முன்னோர்களின் வார்ப்பை வரமாகப் பெறவே பிள்ளைகளோ?
மகளிடம் பேசிவிட்டு தனது மாமனை காண சென்றவன்.அங்கே பந்தியை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியப்பனை நெருங்கி “மாமா!”
“சொல்லுக லட்சு”
“அப்பத்தாவ கொண்டு வூட்டுல விட்டுட்டு வரேன்” என்றதும் சிறு நொடி மௌனம் கொண்டு.
“நீக இங்கன பந்தி பாருங்களேன் நான் போறேன்”
“இல்ல வெயில் உச்சிக்கு நிக்குது மாமா, அது சரிவராது நான் போயிட்டு உடனே திரும்பிடுவேன் மாமா” என்றதும் அரைமனதாகத் தலையை அசைக்க விடைபெற்றான் லட்சுமணன். அதுவரையில் அவர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு லட்சுமணன் சென்றதும் அருகில் வந்த கண்ணாத்தாள்.
“அவுக பேசும் போது குறுக்குல பேச கூடாதுன்னு கிடந்தேன் என்ன சாலாப்பா இது? வயசு நூறு தொட்டு நிக்குது இன்னும் அவுக பேச்சுல நியாயம் வரல.இப்போ இவுக தலை கண்டா இன்னும் பேசி வைப்பாக.அவுக நாகு கூடத்தானே வந்தாக அவுகளே கூட்டிட்டு போக வேண்டியது தானே” ஏற்கனவே தாயின் நினைவில் இறுக்கமாக இருப்பவனை அண்ணாமலை வேறு வார்த்தையால் வஞ்சம் செய்து விடுவாரோ என்ற பயம் கண்ணாத்தாளுக்கு.
“அவுகளுக்குத் எல்லாம் தெரியும் கண்ணு நம்ப சொல்ல தேவையில்ல.ஆயிரம் இணக்கம் கண்டிருந்தாலும் சில விஷயங்களை நம்ப பார்க்க மட்டுந்தேன் செய்யனும் அதுதேன் நமக்கு மரியாதை” என்றதும் கணவனை ஒரு நொடி பார்த்தவள் எதுவும் பேசாமல் விலகி சென்றாள்.
வள்ளியப்பன் – கண்ணாத்தாள் இருவரை பொறுத்தமட்டில் எந்தக் குறையும் இல்லை.ஆண் பிள்ளை இருந்து என்ன செய்வனோ அதனைப் பார்த்து, பார்த்து இவர்களுக்குச் செய்தான் லட்சுமணன்.அவனைப் பொறுத்தவரையில் வள்ளியப்பன் தான் தகப்பன்.
எனவே அவர்களுக்கு செய்வதை அவன் வெறும் கடமையாக அல்லாமல் அன்பாகவே செய்தான்.மகள், மகன், பேர குழந்தைகள் என்று அமோகமாகச் சென்றது வள்ளியப்பன் கண்ணாத்தாளின் கடைசிக் காலம்.
இங்கு வயதின் மூப்பு தள்ளாடி நிற்க குழந்தை போல் உண்ணாமலையை அழைத்துச் சென்றான் லட்சுமணன்.வீட்டுக்குள் அழைத்துச் சென்று அண்ணாமலை படுத்திருக்கும் அறையில் அவரை அமர வைக்க. அதுவரை விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த அண்ணாமலை அரவம் கேட்டு திரும்பி பார்த்தார்.
லட்சுமணனை கண்டதும் கண்களை உருட்டி சக்தியை ஒன்று திரட்டி பெருங்குரலில்,” என்ன? ஏன் வந்த? போ! ” என்று கத்தியவரை கண்டு லட்சுமணன் அசையாமல் நிற்க
அவரது செயலில் பதறி போன உண்ணாமலை,”என்னக!” என்று அவரை அடக்க போக அதற்குள் லட்சுமணன் முந்தி கொண்டான்.
“அப்பத்தாவ விட வந்தேன் ஐயா தாத்தா உடம்பு சுகமா?”
“என் சுகத்துக்கு என்ன நூறு தொட்டு நிக்கிறேன் மத்தவக மாதிரி அல்பாயிசுல போகல” கணவனின் பேச்சில் அதிர்ந்து, பதறி.
“என்னக என்ன பேச்சு இது? வயசுக்கு தக்கன பேச்ச கொடுக இறப்புல பழிச்சு வச்சா அந்த ஈசன் கூட மன்னிக்க மாட்டான் பார்த்து வார்த்தைய விடுக” என்றவள் லட்சுவிடம் திரும்பி.
“அப்பு நீக கிளம்புக சில கட்டை வெந்து வைக்கிற வரை மாத்த முடியாது. இல்ல, இல்ல வெந்த பின்னம் மாறாது.இன்னைக்கு நீக நிக்கிற நினைப்புல இந்தப் பேச்சும் வாங்க வேணாம் அதுக்குத்தேன் நாகு கூடப் போறேன்னு சொன்னேன் கிளப்புக அப்பு” மீனாளை எண்ணி லட்சுமணன் கலங்கியதை பார்த்தவர் இன்னும் நோக செய்ய வேண்டுமா என்று அவனைப் போகச் சொன்னார் போலும்.
“விடுக அப்பத்தா இயலாமை சிலரை வக்கரமா மாத்தி வைக்கும். அதை காட்ட தெரியாம பேச்சா வெளிப்படுது வேற ஒன்னுமில்லை.நீக எதையும் கண்டு வெசன படாதீக நான் இருக்கேன்” லட்சுவின் கடைசி வார்த்தையில் வழமை போல் அவனிடம் உருகியவர் அவனது கைகளைப் பற்றித் தனது கண்ணில் ஒத்தி கொண்டவர்,
இந்த மனசுதேன் நித்தமும் எங்களை குத்தி கிழிக்குது.இந்த மனசுக்கே அந்த கடவுள் அள்ளி தரனும். வேணா பாருக பதினாறு செல்வத்தையும் நிறைச்சு கொடுத்து பெயரும், புகழும் நிலைக்க ராசா கணக்கா வாழ்வீக அப்பு” என்றதும் அண்ணாமலையை ஒருமுறை ஆழ்ந்து பார்த்து விட்டு, பின்பு உண்ணாமலையிடம் திரும்பியவன் தலை அசைத்து மெல்லிய சிரிப்பை கொடுத்து விடைபெற்றுச் சென்றான் லட்சுமணன்.
அவன் தலை மறைந்ததும் கோபமாகக் கணவனிடம் திரும்பியவர்,”எத்தினி வயசு ஆகுது? இன்னும் என்ன வீம்பு
? நீக பேசுனத்துக்கு அவுக திருப்பி பதில் கொடுத்தா தாங்குவீகளா?
“ஒரு பேச்சுக்கு சொல்றேன் ‘நீக பேசுனத்துக்கு அப்புக்கு கோபம் வந்து எங்க ஆத்தா படுக்காம கொள்ளாமா போயிட்டாக, ஆனா உங்க நிலை திங்க கழுவ கூட மத்தவுக தயவு வேண்டி நிக்க வேண்டியதா கிடக்கு இதுல ஆருக்கு ஆயுசு? ஆரு பாவம் செஞ்சவுகன்னு கேட்டா என்னத்த சொல்வீக? சொல்லுக?’
மனைவியின் கூற்று செவிப்பறையை அதிர செய்தாலும் தான் என்ற அகம் அண்ணாமலைக்கு அழிய தான் மறுத்தது.பதில் சொல்லாமல் அத்தனை வீம்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டவரை பார்த்த உண்ணாமலை.
“ஈசன் கிட்ட வேண்டிக்கிடுக கடைசிக் காலம் காயம் காட்டாம கடந்து போகணும்னு.மருமக பொண்ணு பிள்ளைக்கு நியாயம் செய்யாத நமக்குக் கடைசிக் காலம் கஷ்டந்தேன்.வினையை அறுக்கதேன் இந்த ஆயுள்” என்றவர் தள்ளாடியவாறு எழுந்து சென்றார்.
அண்ணாமலையை போல் உள்ள சில பெரியவர்களை என்ன தான் செய்வது? இனி காலம் கனிந்தாலும் பாடம் கற்பித்தாலும் அண்ணாமலைக்கு எந்த பயனும் அது கொடுக்க போவதில்லை.இறுதி வரை அவர் குணம் கொண்டே அவர் இருந்துவிட்டு சென்று விடுவார். இவ்வுலகில் சிலரின் குணமும் பயணமும் இப்படித்தான் போலும்.
லட்சுமணன் வீட்டில்…
மாலை வேளை காற்று மேனியை இதமாகத் தழுவி செல்ல.முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவாறே பூ தொடுத்து கொண்டிருந்தாள் அழகிய மீனாள்.ஓங்குதாங்கான உடல் வாகு, சிவந்த நிறம்,மீனாட்சி அம்மனை நினைவு கொள்ள வைக்கும் வைர மூக்குத்தி என்று பாவாடை சட்டையில் ஜொலித்த பேத்தியை கண்களால் நிறைத்துக் கொண்டிருந்தார் வள்ளியப்பன்.
மீனாளின் ஜாடை ஆயிரம் முறையாவது இந்த எண்ணம் வரும் அவருக்கு.இந்த எண்ணம் எழும்போதெல்லாம் மீனாளை எண்ணி கலங்கி போவார்.இன்றும் அந்த எண்ணம் வர தனது அருகில் இருக்கும் மனைவியைப் பார்த்தார்.அவர் எண்ணம் கொண்டே வாழ்ந்தவள் அல்லவா கண்களை மூடி தலை அசைத்துக் கொண்டாள்.
“அம்மாடி அழகி என்ன செய்யிறீக?”
“ஐயா! பூ அம்மைக்கும், எனக்கும்”
“ஹ்ம்ம்! இங்கன வாகச் சாமி” என்றதும் எழுந்து கண்ணாத்தாள் மற்றும் வள்ளியப்பனுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“சொல்லுக ஐயா!” என்றதும் அவளது கைகளைப் பற்றி நெற்றியில் வைத்து கொண்டவர்.
“விடியலுக்கு எழுந்து அத்தினி வேலை செஞ்சீக இப்போ என்னத்துக்கு இந்த வேளை அம்மாயி கிட்ட கொடுக அவுக பார்ப்பாக”
” அதெல்லாம் வேணாம் ஐயா அம்மாக்கு மேல் வேலை மட்டுந்தேன் செஞ்சேன் மத்த வேலை எல்லாம் அவுகத்தேன்”
“ஹ்ம்ம்! உங்க ஐயா என்ன செய்றாக?”
“மெத்தையில அம்மா கூட இருக்காகக் குட்டி தம்பியும் அங்கனதேன் கிடக்கான்”
“அப்போ நீகளும் செத்த போயி காத்து வாங்குக”
“இல்லங்க ஐயா நான் இங்கன இருக்கேன் நீங்க இருக்கீக தானே நீங்க இரண்டு பேரும் இருக்கும் போது நான் அம்மா யாராவது ஒருத்தர் இருக்கனும்னு அப்பா சொல்லி இருக்காக” என்றதும் மருமகன் அன்பில் வழமை போல் மயங்கி தான் போனார் வள்ளியப்பன்.
“என்ன புண்ணியம் கண்டோமோ, கை கொண்டு செஞ்சோமோ தெரியல உங்க ஐயா எங்களுக்குக் கிடைச்ச வரம்” என்றதும் லட்சுவை போல் சிறு புன்னகையைக் கொடுத்தாள் அழகிய மீனாள்.
“அப்பாவும், அம்மாகிட்ட உங்களை இப்படித்தேன் சொல்லுவாக ஐயா” என்றதும் இன்னும் பூரித்துப் போனார்கள் பெரியவர்கள். வள்ளியப்பன் கனவில் கண்டது, கண்ணாத்தாள் கனவிலும் காணாத ஒன்று லட்சுமணன் மருமகன் என்ற உறவில் இணைந்தது.
இன்னும் உறவில், உறுத்தில், ஊரில் என்று வள்ளியப்பன் மருமகனை அண்டி என்ற பேச்சுக்கள் வராமல் இல்லை. பிள்ளைகளுக்காக முக்கியமாக லட்சுவின் அன்புக்காக விட்டு கொடுத்து நின்று பெரியவர்கள் என்றும் பெரியவர்கள் என்று காட்டி விட்டனர் வள்ளியப்பனும் கண்ணாத்தாளும்.
இவர்கள் எண்ணம் போல் வாழ்க்கை இன்னும் நீண்டு நின்று ஆசி வழங்க வேண்டும் என்று வேண்டி நிற்போம்.
மொட்டை மாடியில் முல்லை பந்தல் இருக்க. அதன் நிழலில் சாலாவும், லட்சுமணனும் அமர்ந்திருந்தனர்.மகனை மடியில் ஏந்தி இருந்தவன் அவனது கழுத்தில் முகர்ந்து, அவனது பால் மனத்தை நாசியில் நிரப்பிக் கொண்டிருந்தான்.
அவனது செயலை பார்த்து கொண்டிருந்தவள்,”லட்சு?” கேள்வியாக அழைக்க.
“சொல்லுக சாலா ஆச்சி”
“உங்க முகமே சரியில்ல” என்றதும் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவள் கண்களை திரும்பி பார்த்தவன்.
“உங்க கிட்ட மட்டும் நல்ல மாட்டிக்கிறேன். இப்படி என் முகத்தைப் பார்த்தே எண்ணம் படிக்கிறீக பாருங்க இதுக்குதேன் உங்களைக் கட்டிகிட்டேன்” என்றவன் அவள் கன்னம் வருட.
வருடும் அவனது கையை பிடித்து கொண்டவள் “ப்ச்! நான் என்ன கேக்குறேன்? நீக என்ன சொல்றீக? உங்க ஐயா தாத்தா வூட்டுல என்ன நடந்துச்சு.அங்கன போயிட்டு வந்த பிற்பாடு இன்னும் முகம் வாடி கிடக்கு?”சரியாக நாடி பிடித்த மனைவியிடம் ஒரு பெருமூச்சுடன் உண்மையைச் சொல்ல அமைதியாகக் கேட்டு கொண்டாலே தவிர எதுவும் பேசவில்லை.
“சாலா ஆச்சி?”
“ஹ்ம்ம்!”
“இதே நான் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சு. இப்போ மாதிரி அவுக பேசி வச்சா என்ன செய்வாகத் தெரியுமா?” என்றதும் சிறிதாக முறைத்து முகத்தைத் திருப்ப.அவளது மோவாயை இறுக்க பிடித்துத் தன்னை நோக்கி திரும்பியவன்.
“இந்நேரம் எதுக்கு அங்கன போனீக? இந்தப் பேச்சு தேவையா? ஏன் அவுக சகவாசம்னு அத்தினி சண்டை கட்டி இருப்பாக”
“அப்போ நான் ஏமாளி சொல்றீகளா? இல்ல சண்டை கட்ட சொல்றீகளா? ” கொஞ்சம் குறும்பாகக் கேட்டவளை மென் புன்னகையுடன் பார்த்தவன்.
“நான் சுயநலவாதின்னு சொல்ல வரேன் நீங்க அடிக்கடி கேக்குற கேள்விக்கு நானும் அடிக்கடி ஆதாரம் காட்டி வைக்கணுமே அதுக்குத்தேன்” அவன் எதை கொண்டு எதில் சேர்கிறான் என்பதை அறிந்தவள்.
“பொல்லா மருத்துவன்” முனகி கொள்ள சத்தமாகச் சிரித்தான் லட்சுமணன் அவன் சிரிப்பை ஆசையாகப் பார்த்தவள்.
“என்ன லட்சு செட்டிக்கு அப்படி ஒரு சிரிப்பு?” ஆழ்ந்த குரலில் கேட்க.
“வருத்தமா இருக்கு இன்னும் ஆத்தாளை நல்லா பார்த்து இருக்கலாமோ?”
“ஹ்ம்ம்! நம்மைக் கொண்டு அவுக மனசு நிறைஞ்சு தேன் கிடந்தாக லட்சு.ஒரு பொண்ணா அவுக இளமை வாழ்க்கையில சறுக்கி வச்சாலும் ஒரு அம்மாவா, பொண்ணா ஒசந்து போயிட்டாக.இன்னும் அவுக கடைசிச் சிரிப்பு கண்ணுக்குள்ளயே நிக்குது.
தம்பி பையல முத்தி வச்சு அப்படி ஒரு சிரிப்பு” என்றவள் அன்றைய நினைவில் கண் கலங்கி போனாள்.கூடவே வளர்த்த பாசம் என்பார்களே அதனைக் கொண்டு இவர்கள் உறவு இறுக்கமாகப் பிணைக்கப்பட.மீனாளின் இறப்பு சாலாவையும் பதம் பார்த்து தான் வைத்தது.
“நீக வாழ்ற ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் பார்த்து இன்னும் அயித்த மனசு நிறைஞ்சு நிப்பாக”
“உண்மைத்தேன் என்றவன் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து எப்படி இத்தினி அழகா என்னைச் சமாளிச்சு வைக்கிறீக”
“ப்ச்! சும்மா பேச்சு பேசி ஏமாத்தி வைக்கிறது திருட்டு செட்டி” என்றவள் லட்சுமணன் கன்னம் கிள்ள.கிள்ளும் அவளது கையை வளைத்து பிடித்து.
“உண்மை சாலா ஆச்சி உங்களைத் தவிர யார் வந்தாலும் என்னைச் சமாளிக்க முடியாது”
“அத்தினி கொடுமை செய்யிற ஆளா நீக?”
“நான் வேற ரகம் சாலா ஆச்சி பேசாம கொடுமை செய்வேன்” என்றவனை இமைக்காமல் பார்த்தாள் சாலா. லட்சு சொல்வதும் உண்மை தான் தேவையைக் கூட வாய் விட்டு சொல்லமாட்டான் லட்சுமணன்.அவனது உணர்வுகளை ஆழ்ந்து படித்தால் மட்டுமே புலப்படும்.அன்பை கொண்டு அந்த வித்தையை தன் வச படுத்திக் கொண்டாள் சாலா.
திருமணம் முடிந்த புதிதில் அவன் முகம் பார்த்து அவனைப் படிக்க சில நாட்களே ஆனது.சிறு வயது பழக்கம் என்றாலும் இருவரிடமும் அத்தனையாக நெருக்கம் இல்லையே.லட்சு சாலாவை பிடித்தம் கண்ட பருவத்தைக் கூடக் கண்ணியமாகக் கடந்தான் அல்லவா.அப்படி இருந்தும் இவர்கள் இணைந்து இப்போது பிணைந்து கிடப்பது இன்னும் அழகான ஆச்சிரியம் தான் சாலாவுக்கு.
“பார்க்காதீக தானே” செல்லமாகக் கடிந்தவனைச் சிறு புன்னகையுடன் பார்த்தவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சில நொடிகள் இருவருமே மௌனம் கொண்டு ரசித்துக் கடந்தனர்.அடித்த காற்றுக்குச் சின்னக் காளை குட்டிக்கு சொக்கி கொண்டு வர.தகப்பன் மடியில் வாய் பிளந்து கொண்டு தூங்க தொடங்கி விட்டது.
“தூங்கிட்டான் சாலா”
“நேரத்துக்கே முழிப்பு கண்டாச்சு அதுவும் போக ஜனத்தைக் கண்டதும் அத்தனை ஆட்டம் அதேன் சீக்கிரமா தூங்கிட்டான்” அவனது கால்களை வருடியவாறே சொன்னாள் சாலா.
“சாலா ஆச்சி?”
“ஹ்ம்ம்!”
“சந்தோசமா இருக்கீக தானே?”
மீண்டுமா என்பது போல,”இப்போ என்ன?”
“நீங்க மட்டும் புடிச்சா கல்யாணம் பண்ணீங்கன்னு ஆயிரம் முறை கேக்குறீக தானே? நான் இந்த ஒரு முறை கேக்குறேன் சொல்லுக” என்றதும் வார்த்தை பேசாமல் சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவள்.
தாயிக்கு நல்ல மகனா நின்னு, கை தூக்கி விட்டவுகளுக்கு நன்றி செஞ்சு, பருவத்துல நின்னாலும் பக்குவமா அன்பை சொல்லி, பெரியவுக மனசு கோணம, இப்போவாரை பாதகம் செஞ்சவுகளைக் கூடக் கடிஞ்சு நிற்காம,
விட்டு கொடுத்து, சூழ்நிலையை அனுசரிச்சு போயி முக்கியமா பெண்ணை மதிச்சு நல்ல அப்பாவா இருக்குற உங்க கிட்ட நான் ரொம்ப, ரொம்ப, ரொம்பச் சந்தோசமா இருக்கேன்” என்றவள் சிறிதும் அவன் எதிர்பாரா நேரம் அவனது முகத்தைத் திருப்பி ஆழ்ந்து முத்தி வைத்தாள்.
இருவருமே உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்தும் ரகமில்லை.இத்தனை அன்பு செய்யும் அவனைக் கண்டு இன்று உணர்வுகளை கட்டி வைக்க முடியவில்லை போலும்.முடிந்த முட்டும் தனது அன்பை சொல்லியவளை பார்த்து அழகாக சிரித்தான் லட்சுமணன்.
தனித்து வாழும் மீனாளின் கண்ணியமும், உழைப்பும், தாயின் தாயகத்தைக் கொண்டு வளரும் லட்சுமணன் குணமும்,உதவி என்று வந்தவர்களைக் கரை சேர்த்து நின்ற வள்ளியப்பன் கண்ணாத்தாள் மனமும்,பெரியவர்கள் சொல் படி நடந்து லட்சுமணனை புரிந்து கொண்டு அல்லவை நல்லவையில் கை கோர்த்து மழை சாரலாக இதமான காதலை காட்டி நிற்கும் சாலாவும் இம்மண் கொடுத்த மாணிக்கங்கள் தான்.
இன்னும் இதே போல் கண்ணியம் காத்து, குணம் கொண்டு, அன்பு செய்து பெருங்காதலோடு வாழ நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
சுபம்,
error: Content is protected !!