Skip to content
Post Views: 444
அத்தியாயம் – 28
அண்ணாமலை வீட்டில் காலை வேளை உணவுக்குக் கூடி இருந்த வீட்டினர் அனைவரும்.உண்ணாமலையின் செய்யலை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.முகத்தில் வாடா சிரிப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு வித கனவில் மிதப்பவர் போல,
Advertisement
எதிரில் இருப்பர்வர்களைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரிந்து கொண்டிருந்தார் உண்ணாமலை.இன்று மகள், மருமகன், பேத்தி நாகம்மை என்று காலை உணவுக்கு அனைவரும் அமர்ந்திருந்தனர். மனைவியின் செயலை பொறுத்து, பொறுத்து பார்த்த அண்ணாமலை ஒரு கட்டதிற்கு மேல் பொறுமையற்று.
“உண்ணா!” என்றழைக்க,
Advertisement
Advertisement
ஹ்ம்ம்! என்றாரே தவிர நிமிர்ந்து அவரை பார்க்கவில்லை. உண்ணாமலைக்கு கணவன் அழைப்பு காதில் கேட்டாலும் கருத்தில் பதியவில்லை முழுக்க பேரன் மயக்கம் போலும்.இருக்காதா பின்னே அவரது கருத்தை மட்டும் அல்ல அவரையும் முழுவதுமாக லட்சுமணன் கவர்ந்து விட்டானே.
தாயின் செயலில் மகளும், மருமகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். நாகம்மை சிறு கேலி புன்னகையுடன் உண்ணாமலையை பார்த்து கொண்டிருந்தாள்.எதற்கும் அசைவு கொடுக்காத மனைவியை இம்முறை கொஞ்சம் கூடுதல் குரல் குடுத்து அழைக்க. அந்த சத்தத்தில் திடுக்கிட்டு கணவனைப் பார்த்துத் திருத் திருவென முழித்து வைத்தார் உண்ணாமலை.
Advertisement
“கவனத்தை எங்கன வச்சு கிடகீக? காத்துல கதை பேசி சிரிச்சிகிட்டு இருக்கீக? என்னத்தேன் ஆச்சு உங்களுக்கு?” அண்ணாமலை படப் படவெனப் பொரிய.அவரது கோபத்தைச் சிறுதும் கருத்தில் கொள்ளாமல் அதே புன்னகையுடன்.
“நேத்து காலையில அப்புவை போயி பார்த்துட்டு வந்தேன்” என்றதும் சிறு அதிர்வு கண்டவர்.
“சிவன் கோவிலுக்குப் போறேன்னு சொன்னீக?”
“அவுகள பார்க்க போறதை சொன்ன விட போறீகளா? மல்லு கட்டுவீக அதேன் “
“பொய் சொல்ல தொடங்கிடீக நல்லது. எதுக்கு அங்கன போனீக? என்ன சொன்னாக உங்க பேரன்? நல்லா மூக்கறு பட்டிகளா?” அடுக்காக கேள்விகளை அடுக்கிய கணவனைத் தீர்க்கமாகப் பார்த்த அண்ணாமலை.
“உங்களுக்கு இன்னும் அவுகள பத்தி புரியல. அதேன் அவுகள நல்ல மாதிரி எண்ணி வைக்க மாட்டேங்கிறீக, நம்ப தவற விட்ட வளர்ப்பை நம்ப மருமக பொண்ணு ஈடு கட்டி நிக்கிறாக. அதுக்கே அந்த புள்ளைக்கு கோவில் கட்டி நிக்கனும். என் கிட்ட அப்பு என்ன சொன்னாகத் தெரியுமா?” என்ற உண்ணாமலை நேற்றைய தினம் அங்குச் சென்றது முதல் லட்சு பேசியது என்று அனைத்தையும் சொல்லி முடிக்க அங்கே அசாத்திய மௌனம்.
“சோமு செஞ்ச செயலுக்கும், நீக பண்ண வம்புக்கும் எந்த வித குத்தல் பேச்சும் இல்லாம உங்க உரிமை, ஆசை எல்லாம் என்கிட்ட எதிர்பார்க்கலாம், நான் செய்யக் கடமை பட்டு இருக்கேன்னு சொல்லுறாக, யாருக்கு வரும் இந்த மனசு. இதே அவுக இடத்துல வேற யாருமிருந்தா நீக கட்டுன கூத்துக்கு என்ன நடக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அவுக தடத்தை எண்ணி வச்சா கூட அவுக மனசு போல வர முடியாது.அதே போலதேன் வள்ளியப்பன் லட்சுக்கு ஒன்னுனா கூப்பிடாம வந்து தோள் கொடுக்குறாக.நாகம்மைய கட்டலன்னு வள்ளியப்பன் மேல எனக்கும் வருந்ததேன்,
ஆனா நியாயம்னு ஒன்னு இருக்கே.நம்பத் தவற விட்டத வள்ளியப்பன் மாணிக்காம எண்ணி பத்திரம் பண்ணிடாக.இன்னொன்னும் சொல்லனும் மாணிக்கத்தை தாங்குற தங்கம் சாலா. லட்சு நிழல் பார்த்தே காரியம் பண்ணுறாக.அவுக மனசுக்கு ஏத்த மஹாலக்ஷ்மி கணக்கா அப்படி ஒரு புரிதல்”நீளமாகப் பேசிய மனைவியை ஆழ்ந்து பார்த்த அண்ணாமலை வெடுக்கென பாதி உணவில் எழுந்து செல்ல.
“ஆத்தா! ஏன்?” எதற்கு இந்த பேச்சு என்பது போல் மகள் கேட்க.
“நீக சும்மா இருக உங்க ஐயா புடிச்ச முயலுக்குக் காலே இல்லன்னு பிடியா நிக்கிறாக இத்தினி பேசியும் என்னை நேத்து தனியா விடாம வூடு வரைக்கும் வந்து பத்திரம் பண்ணிட்டு போறாக, வயசுல சிறுசா இருந்தாலும் இத்தினி இறங்கி வர மனசு வேணும்” என்றதும் மகளும், மருமகனும் அதை ஆமோதித்தனர்.
நாகம்மை, “மாமா வேற மாதிரி, நல்ல குணம் மரியாதையான மனுசன்.இப்பவும் பார்த்தா அயித்த மகளைத் தாண்டி ஒரு தோழனா தோள் கொடுப்பாக நல்ல மாதிரி அம்மாயி”
“உனக்குப் புரியுது உங்க ஐய்யனுக்குப் புரியனுமே” என்றவர் மீண்டும் லட்சுவை பற்றியே பேசி கொண்டிருந்தார்.
சிலரது குணம் சுடுகாடு வரை மாறாது அந்த வகையில் நின்றார் அண்ணாமலை.உண்ணாமலை சொன்ன உண்மைகள் அனைத்தும் அவரை சுட்டாலும்.அதனை ஏற்கும் அளவிற்கு அவருக்கு மனமில்லை என்பதே உண்மை.இதனை அறிந்ததால் தான் அவரிடம் லட்சுமணன் கொஞ்சம் இறுக்கமாக இருந்தான் போலும்.அவர் குணம் கண்டு அவர் போக்கிலே விலகி கொண்டான்.
இங்கு மீனாள் இல்லத்தில் மீனாளும், விசலாட்சியும் எதோ சமையல் பக்குவத்தைப் பற்றித் தீவிரமாகப் பேசி கொண்டிருக்க.வெளியில் செல்ல வேண்டி கிளம்பி வந்தார்கள் லட்சுமணன் – சாலா தம்பதியினர்.இருவரும் வருவதைப் பார்த்து சிறு புன்னகை கொண்ட மீனாள்,”லட்சு!” என்றழைக்க,
“ஆத்தா கோவிலுக்குப் போயிட்டுக் கடை வீதி போயிட்டு வரோம் அவுகளுக்கு வர வெள்ளி கிழமை பிறந்த நாள்”
“தெரியும் லட்சு என்ற மீனா சாலாவை பார்த்து உங்களுக்கு என்ன வேணும்”
“எதுவும் வேணாம் அயித்த”
“வேணாம் சொல்ல கூடாது வாங்கிக்கோக” இடையில் புகுந்து கொண்ட விசாலாட்சியைப் பார்த்து சிரிப்புடன்.
“இதோ இங்கன இருக்கே என்று கணவன் கையைக் கோர்த்துக் கொண்ட சாலா அயித்த குடுத்த பரிசு இதுவே காலத்துக்கும் பெருசு” என்றதும் விசாலாட்சி புருவம் உயர்த்தி மீனாளிடம் ‘பார்த்தியா’ என்பது போல் சாடை சொல்ல.
சிறு சிரிப்புடன்,”நெசந்தேன் சாலா என் பொக்கிஷத்தை உங்களுக்கே கொடுத்துட்டேன்.எனக்கு பிறகு உங்களுக்குதேன் முழுக்க” பெரும் நெகிழ்வாக சாலா நெருங்கி மீனாளின் கைகளைப் பிடித்துக் கொள்ள.லட்சு அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்னகையுடன்,”வரேன் ஆத்தா!” என்று முன்னே நடக்க.மீனாளிடம் சொல்லி கொண்டு சாலாவும் அவன் பின்னே ஓடினாள்.
மீனாள் போகும் அவர்களை நிறைவாக பார்த்து கொண்ட “விசாலாட்சி!”
“சொல்லுக ஆச்சி?”
“பிள்ளைகளுக்கு உப்பு மிளகா சுத்தி வைக”
“ராவுக்குப் பண்ணிடலாம் ஆச்சி என்றவள் சொக்கன் மீனாட்சி கணக்கா அழகு பிள்ளைக, காலத்துக்கும் எந்தக் குறையும் இல்லாம வைக்கனும்” பொதுவாக வேண்டி கொள்ள. அவள் வாய் விட்டு சொன்னதை மனதுக்குள் நித்தம் நித்தம் வேண்டி நின்றாள் மீனாள்.வாழ்வின் ஆதாரமே மகன் என்ற நிலையில் உள்ள தாயின் வேண்டுதல் நிச்சயம் பழித்து நிற்கும்.
“என் வாழ்க்கையே அவுகதேன் ஆச்சி என் வேண்டுதலும் அதேன். உங்க வாக்கு பலிச்சு நிக்கட்டும் ‘நாய் கிட்ட நல்ல சொல்லு பேய் கிட்ட பெரிய சொல்லன்னு’ அத்தினி பேச்சை வாங்கி நின்னு வளர்த்த வலியெல்லாம். இப்போ காத்தை கண்ட கற்பூரமா கரைஞ்சு நிக்குது ஆச்சி”
“உங்க உழைப்புக்கு கடவுள் கொடுத்த பரிசு மீனா ஆச்சி” என்றதும் அழகாகப் புன்னகை செய்தாள் மீனா.
முன் திண்ணையில் அமர்ந்திருந்த வள்ளியப்பன் மற்றும் கண்ணாத்தாளிடம் சொல்லி கொண்டு லட்சு, சாலா இருவரும் விடைபெற. போகும் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்த கண்ணாத்தாள்.
“சாலாப்பா!”
“ஹ்ம்ம்!”
“நடக்கிற அத்தனையும் நான் கனவுல கூட எண்ணி வச்சதில்லை” என்றவளை பார்த்து சிறு புன்னகையை கொடுத்த வள்ளியப்பன்.
“எனக்கு லட்சு விடலை பருவத்தைத் தொட்டு நின்ன நாளுல இருந்து இதே கனாதேன். நல்ல திறமையா, கன்னியாம, பொறுப்பானவனா வருவாகன்னு தெரியும், ஆனா இத்தனை பெரிய மருத்துவனா கம்பீரமா,கருத்தா எல்லாத்தையும் விடப் பொறுமைசாலியா இருப்பாகன்னு எண்ணி வைக்கல”
“அவுக சிறுசுலயே பொறுப்புதேன் சாலாப்பா. என்ன அத்தினி சுளுவா வாய் திறந்து பேச மாட்டாக”
“அது மட்டும் இல்ல கண்ணு சாமர்த்தியம், சமத்து, சாதுர்யும் இது மூணும் அவுக கிட்ட சரி விகிதம் இருக்கப் போயித்தேன் இத்தினி தூரம் கடந்து வந்திருக்காக. இவுக ஐயா தாத்தா பண்ண கூத்துக்கு எனக்கே சில இடங்கள் கோபம் வந்தது, ஆனா அவுக நிதானம் தவறாம அதே நேரம் அவுகளுக்கு மண்டையில ஏறி நிக்கிற மாதிரி பேசி வச்சாக.அதேன், அந்த இடந்தேன் அவுக குணம் பேசி நிக்குது.
“உண்மைத்தேன் ஆனாலும் இத்தினி பொறுமை ஆகாது சாலாப்பா”
“விடுக கண்ணு எல்லா பழகிட்டாக எத்தினி சூழ்நிலை வந்தாலும் யார் பிடிப்பும் இல்லாம தாண்டி வந்துடுவாக” கணவன் சொல்வதும் உண்மையே என்ற நிலையில் அமைதியாகி விட்டாள் கண்ணாத்தாள்.சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு வள்ளியப்பன்
“கண்ணு?”
“சொல்லுக சாலாப்பா?”
“சாலா எதுவும் சொன்னாகளா?” என்றதும் புருவம் சுருக்கி தனது கணவனைப் பார்க்க.
“இல்ல லட்சுவ மட்டுமே பார்த்து வச்சாச்சு. இத்தினி சண்டை சச்சரவு வந்தும் புள்ள என்கிட்ட ஏன்? எதுக்குன்னு? ஒரு வார்த்தை கேட்கல.அவுக போக்குல வேலை வீடுன்னு இருக்காக அதேன்”
“அப்பா எத்தினி சீக்கிரம் கேக்குறீக? அவுக கல்யாணம் முடிஞ்சு நாள் கணக்கு என்ன?” என்று கணவனை கண்டு சிறு புன்னகையுடன் கேட்க.
“அவுக கூடத் தனிச்சு பேச எங்க நேரம் மூச்சு விட நேரமில்லாம எதாவது ஒரு வம்பு வந்துருது கல்யாணம் முன்னுக்கு மனசு விட்டு பேசுனது அதுக்குப் பிறகு பொதுவா பேச்சு போகுது தவிர லட்சுவை பத்தி பேச முடியல, அவுக எண்ணம் படிக்க முடியல” லட்சு கொண்டே தான் செயல் பட மகள் தன்னை என்ன எண்ணுகிறாள் என்ற எண்ணம் தான்.
“பயந்துக்க வேணாம் சாலாப்பா அவுக நல்ல புரிதல் வெளில தெரியல, ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் பிரியமாதேன் கிடக்காகச் சாலாப்பா” என்றதும் முகம் கொள்ளா புன்னகையுடன்.
“அது போதும், அது போதும் அதுவே போதும், தங்கம் இரண்டும் நல்லா இருக்கனும் இருப்பாக ” என்றவர் அடுத்த வேலையைப் பார்க்க எழுந்து செல்ல. சிரித்த முகத்துடன் போகும் கணவனைக் கண்டு கண்ணாத்தாளும் அகம் மகிழ்ந்து போனாள். பிள்ளையை சரியான இடத்தில் சேர்த்த நிம்மதி போலும்.
இங்குக் கோவிலுக்கு வந்த தம்பதிகள் நிதானமாகச் சாமி தரிசனம் செய்து விட்டு.அங்குள்ள மண்டபத்தில் வாகாக அமர்ந்து கொண்டனர்.
தன் அருகில் இருக்கும் கணவனை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள் சாலா.அவளது பார்வையை உணர்ந்தார் போல “என்ன சாலா ஆச்சி?”
“ஒன்னுமில்லை”
“அப்போ நிறையா இருக்கு சொல்லுக ஏன் இந்தப் பார்வை பாக்குறீக”
“அழகா இருக்கீகன்னுதேன்”
“ஹ்ம்ம்!” என்றவன் சிரித்த சிரிப்பில் வழமை போல் மயக்கம் கொண்டாள் சாலா.
“இந்த சிரிப்புதேன் இதைக் கொண்டுதேன் அத்தினி பேரையும் கட்டி இழுத்து வைக்கிறீக”
“உங்களை?”
“நானுந்தேன்”
“உங்களை வளைக்கத் தேன் அத்தினி சிரிப்பும்” என்றவனைப் பார்த்து கலக் கலவெனச் சிரித்தவள்.
“இன்னும் சந்தேகந்தேன் ஆள் என்னத்தைக் கண்டு, எந்த எண்ணத்தைக் கொண்டு, என்னைக் கல்யாணம் பண்ணீகன்னு”
“ப்ச்! நித்தமும் அதுக்குக் காரணம், காரியம் சொல்லியும் இதையே பேசுவீகளா?” கொஞ்சம் எரிச்சலாகத் தான் கேட்டு வைத்தான்.சாலாவை பொறுத்தவரையில் அவனது உயரம், அழகு, படிப்பு அத்தனையும் நேர்த்தி என்ற வகையில்.அதற்குப் பல படிகள் கீழே கொண்ட என்னை எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்? என்ற கேள்வி இன்னும் உண்டு போலும்.
“உங்களை ரொம்ப புடிக்கும் இதை நம்பித்தேன் ஆகணும்”
“ஒரு நாளும் கண்ணுல கூட ஆசை காட்டி பார்க்கல, பேசல அதை நானும் பார்த்ததில்லை”
“யார் சொன்னா விவரம் தெரிஞ்ச நாள் கணக்கா கண்ணுல கதை பேச முயற்சி பண்ணிக்கிட்டுதேன் கிடந்தேன் நீகதேன் ஒதுக்கம் கண்டிக” என்றவனைச் செல்லமாக முறைத்து.
“என்ன மயக்க மாத்திரை கொடுக்கத் தொடங்கிடிகளா?”
“உங்களுக்கு இருக்க நக்கல் இருக்கே சாலா ஆச்சி?” என்றவன் அவளது தலையில் வலிக்காமல் தட்ட இன்னும் அழகாகச் சிரித்தாள் அரிவை.
“அத்தினி வேலைக்கும் பொறுப்புக்கும் இடையில உங்கள காண வேண்டிதேன் ஊருக்கே வருவேன்” என்றவனை பார்த்து அதிர்ந்தாலும் அதனை அழகாக மறைத்து கொண்டு.
“பொய் எங்க ஐயாவை கண்டுக்க வந்துட்டு கதை பேசாதீக”
“இது என்ன வம்பு வாரத்துல மூணு நாள் அவுக என்ன பார்க்க காரைக்குடி வரும் போது, நான் ஏன் மாமாவ பார்க்க இங்கன வரணும்?” உண்மை தானே தனது தந்தை வாரத்தில் மூன்று நாள் வேலை இருந்தாலும் இல்லா விட்டாலும் தனது தாயுடன் காரைக்குடிக்கு இவர்களைப் பார்க்க சென்று விடுவார்.
“என்ன அமைதியா கிடகீக? உண்மை அதுதேன் பேசத்தேன் மாட்டேன் மத்தபடி உங்களைப் படிச்ச வண்ணமாத்தேன் கிடந்தேன்” என்று கண் அடிக்க பெரிதாக அதிர்ந்து.
லட்சு சொல்லி இருக்கலாம் எத்தனை வருடங்கள். அவன் குணம் தெரியாமல், அவன் அன்பை அறியாமல் இருந்துவிட்டேன் என்ற மனத்தாங்கலை சாலா வெளிப்படுத்த.அதனை சரியாக இனம் கொண்டு கொண்டவன்.
“அப்படியெல்லாம் பேச முடியுதுக சாலா, அதுக்குன்னு ஒரு நேரம் வரும் போதுதேன் பேச முடியும்.அதுவும் போக எனக்கும் சில கடமைகள் இருந்துச்சு.சில வருத்தங்கள் இருந்துச்சு அதுனால நான் கொஞ்சம் விலகி இருந்தேன்” கடமை சரி, அது என்ன வருத்தம்? என்று புரியாமல் பார்த்தாள் சாலா.
“என்ன வருத்தம்?”
“உங்களைப் படிக்க வைக்க மாமா கிட்ட கேட்டேன் விடல. நீங்களும் ஒத்துழைப்பு கொடுக்கல, இல்லனா என்னைப் போல் கல்லூரி போயி படிச்சிருக்கலாம் இது ஒன்னு.இன்னொன்னு மாமா நான் செய்ய முன் வந்த எந்த உதவியையும் ஏற்கல ரொம்பப் பிடிவாதம் பண்ணிட்டாக அந்தக் கோபந்தேன்.
நன்றிக்கு வேண்டி இதெல்லாம்னு எண்ணம் இருக்கலாம், ஆனா இதெல்லாம் நான் செய்ய முன் வந்தது அன்புக்கு வேண்டி. கலப்படம் இல்லாம பாகுபாடு பார்க்காம, என்னையும் பிள்ளையா எண்ணி வச்சவுகளுக்கு நான் கொடுக்குற மரியாதை” என்றவனைச் சிறு புன்னகையுடன் பார்த்தவள் கண்ணில் மெல்லிய நீர் படலம்.
“அவுக சுயம் தொலைக்க விரும்ப மாட்டாக லட்சு”
“ஹ்ம்ம் புரியுது”
“ஆனா அதையும் உங்களுக்கு வேண்டி இப்போ தொலைச்சு நிக்கிறாக.ஏன்னா அவுக பொண்ணை காட்டிலும் லட்சு புடிக்கும்” என்றதும் சிரித்தவன்.
“அவுக இங்கன வந்து இருக்கிறத வச்சு சொல்றீகளா?” என்றவனை பார்த்து ஆம் என்பது போல் சாலா தலையை ஆட்ட.
“அது வேணா உண்மைத்தேன்” அவர்களது பிடிவாதம் தகர்த்து நின்றது தனக்காகவும், சாலாவுக்காகவும் தான் என்பதை நன்கு அறிவானே.அவன் தனது மாமனை எண்ணி நிற்கும் வேளையில்.
சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்த சாலா மின்னல் வேகத்தில் லட்சுவின் உதட்டை கை கொண்டு கொஞ்சம் வலிக்கவே தீண்டி அந்த கைகளை தனது உதட்டில் முத்தி வைத்து “இந்த லட்சுக்காக எதை வேணாலும் தொலைக்காலம்”
ஒரு நொடி சாலா செயலில் இன்பமாக அதிர்ந்தவன் பெரும் மகிழ்வோடு “சாலா ஆச்சி!” என்று நெருங்கியவனை நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு சிரித்தாள் சாலா.
“கோவில்”
“நீக என்ன செஞ்சீக?” என்று லட்சு நெற்றி முட்ட வர வெட்கமாக அவனை தடுத்தவள்.
“போகலாம்” என்றதும் துள்ளி இறங்கியவன் சாலாவின் கதையை கோர்த்து கொண்டு நடக்க அந்தி மாலை குளுமையை அள்ளி வீசியது.
பெற்றவர்கள் சொல்படி கேட்கும் பிள்ளைகள் வாழ்க்கை என்றும் சிறக்கும் என்பதற்கு இவர்களும், இவர்களது அன்பும் அன்பும் தான் சான்று.மீனா, லட்சு பட்ட துன்பமெல்லாம் இப்படி ஒரு வாழ்க்கைக்காக என்று தான் எண்ணி கொள்ள வேண்டும்.என்னதான் மகனை கொண்டு வெற்றி கொண்டாலும்.மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய பள்ளம் தான்.அதனை யாரை கொண்டும் சரி செய்ய முடியாது.
பெற்றவர்கள் எண்ணமே தன்னைப் போல் இல்லாமல் பிள்ளைகள் ஒருபடி மேல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான். அந்த வகையில் தான் மீனாவின் எண்ணமும். ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கணக்கில் அவளது மகன் குணம் பேணி, நேர்மை காட்டி, காதல் காத்து, அன்பு கொண்டு சிறக்க வாழ்வான்.
error: Content is protected !!