Skip to content
Post Views: 2,204
அத்தியாயம் – 6
பொன் மலை பொழுது என்பார்களே அது இது தான் போலும்.கதிரவன் தனது பணியை முடித்துக் கொள்ள.குளுமை வெள்ளி நிலவோ வெளியில் வர அவசரம் காட்டி நின்றது.
Advertisement
அத்தைகைய பொழுதில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தான் லட்சுமணன்.ஒவ்வொரு நோயாளியின் குறையையும் கேட்டு அதற்கு மென்மையாகப் பதிலயளித்து.அவர்களுக்குத் தக்கன போல் மருத்துவம் செய்தவனைக் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் மீனாள்.
இந்த மருத்துவத்துறைக்கு வந்தாலே இந்த மென்மை வந்துவிடுமா என்ன? பெரும் கேள்வி அவளுக்கு.உச்சி முடி தொடங்கிக் கட்டை விரல் நகம் வரை நேர்த்தியாக வைத்து இருந்த மகனின் குணம் அவரை கட்டி தான் இழுத்தது. அவனை பார்க்க,பார்க்க எதோ இனம் புரியாத உணர்வு அவளுக்கு.
Advertisement
Advertisement
பிள்ளை மட்டுமே சதம் என்று வாழ்பவள் அல்லவா.அவள் இத்தனை வெறியாக முன்னேறி நிற்க காரணமே மகன் தானே.மகன் இல்லையென்றால் அவளுக்கு இந்த வேகம் வந்திருக்குமா என்பது கேள்வி குறி தான்.அவள் மட்டும் தனித்திருந்தால் வாழ்க்கையை அலட்சியம் கொண்டு வெறுத்து போயி நின்று இருந்திருப்பாள்.
இந்த பிடிப்பு,பிடித்தம் எல்லாம் அவனைக் கொண்டே!.. மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மீனாளை கலைத்தது விசாலாட்சியின் குரல்.
Advertisement
“என்ன மீனா ஆச்சி? மகனை இந்தப் பார்வை பார்த்து வைக்கிறீக தாய் கண்ணுத்தேன் ரொம்ப உரசி நிக்கும்” என்றதும் பதறி.
“இல்ல! இல்ல! அப்படி சொல்லாதீக ஆச்சி எதோ யோசனை வேற ஒன்னுமில்லை”
“எதுக்கு ஆச்சி இத்தினி பதட்டம் இப்போதேன் உடம்பு தேறி இரண்டு எட்டு எடுத்து வைக்கிறீக இப்படி எதையோ எண்ணி வச்சு திரும்ப உடம்பை கெடுத்து வைக்காதீக”
“எல்லாம் சரித்தேன் விசாலாட்சி உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? என்றவள் ஒரு பெருமூச்சுடன் நான் இப்போ கழுத்து முட்ட நிறைஞ்சு கிடக்கேன். என் கதைதேன் தெரியுமே பணத்துக்குப் பதறி நின்ன காலம் போயி,
இப்போ தேவைக்குக் கொஞ்சம் கூடியே இருக்கு. கண்ணுக்கு நிறைவான பிள்ளை குணம் தொடங்கி மனம் வரை சீரா. அது மட்டுமா என்னை, பெத்தவளை தாங்காம தாங்குறான்.கணவன் என்ற துரோகத்தைத் தவிர எல்லாமே எனக்குக் கடவுள் கொடுத்திருக்கார்,இத்தனை இருந்தும் இப்போ சில நாளா என்னால நிம்மதியா இருக்க முடியல விசாலாட்சி. கண்ணுக்கு முன்ன உள்ள நிறைவை என்னால அனுபவிக்க முடியல.பயமா? என்னான்னு தெரியல” என்றவளை புரியாமல் பார்த்த விசாலாட்சி.
“உடம்பை எண்ணி பயந்து வைக்கிறீகளா”
“இல்ல விசலாட்சி இது வேற எதுவோ” என்றவள் நல்ல குழப்பத்தில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
“மீனா ஆச்சி நீக குழம்பி போயி இருக்கீக இப்போதேன் நடக்கிறீகளே தம்பிய கூட்டிட்டு பைய்ய வண்டி எடுத்துட்டு கோவிலுக்குப் போயிட்டு வாகக் கொஞ்சம் அமைதியா இருக்கும்” என்றதும் மறுப்பாகத் தலையை அசைத்த மீனாள்.
“நான் அண்ணே வூட்டுக்கு போயி ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன் விசலாட்சி சின்னப்ப அண்ணன் அவுக அண்ணே மண்டி வூட்டுக்கு போயி இருக்காக அவுக வந்த பிற்பாடு போகலாம்னு எண்ணிருக்கேன்”
“சரித்தேன் நல்ல யோசனை அங்கன போனா கூடக் கண்ணாத்தாள் ஆச்சி பார்த்துக்கிடுவாக முதல தம்பிகிட்ட பேசி போயிட்டு வாக நாங்க இங்கன பார்த்துக்கிடுறோம்”
“ஹ்ம்ம்!” என்றவள் மீண்டும் தனது மகனை பார்த்தவாறு இருக்க.
அவனும் அப்போதான் வேலைகளை முடித்துக் கொண்டு அவனுக்குத் துணை செய்யும் தங்கப்பனை அழைத்து,”தங்கப்பா யாரும் ஆளு இருக்காகளா?”
“இல்லங்க ஐயா!”
“சரி எட்டு மணி வரை கதவு திறந்து இருக்கட்டும் நேத்து போல ஏழு மணிக்கே பூட்டி வைக்காத” சிறு கண்டிப்புடன் சொன்னவன் தாயை நோக்கி சென்றான்.
வீடும்,கடையும்,மருத்துவமும் ஒரே கூட்டத்துக்குள் பிளவு பட்டிருக்க மீனாவை பார்த்துக் கொள்ள வசதியாக இருந்தது “ஆத்தா! என்ன பண்ணுறீக?” கேட்டவாறு தனது மேல் உடையைக் கழட்டியவன் தாயின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“லட்சு?”
“சொல்லுக ஆத்தா!”
“அரியகுடி போலாமா? சொல்ல தெரியல எதோ மாதிரி பயமா இருக்கு” என்ற தாய்யை புரியாது பார்த்தவன்.
“எதுக்குப் பயம் உடம்புக்கு எதுவும் செய்யிதா? என்ன யோசிக்கிறீக?”
“அதெல்லாம் இல்ல முன்னுக்கு இப்போ எத்தினியோ உடம்பு தேவலாம் லட்சு”
“அப்புறம் என்ன ஆத்தா!”
“சொல்ல தெரியல லட்சு நீ மாமா வூட்டுக்கு போயி பேசி வந்து, கிட்டத்தட்ட ஒரு மாசம் போச்சு இன்னும் அண்ணே பேச்சுக்கு வரல. நீகளும் என்ன பேசுனீகன்னு கேட்டா கல்யாணம் முடிவு சுபம்னு ஒரு வரி சொல்றீக எனக்கு எதுவுமே பிடிபடல” என்றவரை பார்த்து வழமை ஒரு புன்னகை செய்ய.
“லட்சு! எது கேட்டாலும் இப்படிச் சிரிச்சா நான் என்ன செய்ய?” மகனது அமைதியில் நொந்து போனார் போலும்.
“ஆத்தா! என்றவன் இன்னும் சிரித்து மனசுக்குள்ள என்ன இத்தினி வெசனம் உங்களுக்கு?” என்றதும் அமைதியாகி போனார் மீனாள்.
தாயின் மனமறிந்து,”ஆத்தா! மாப்பிள்ளை வூடு தானே முதல தொடங்கி வைக்கனும்.அதை கொண்டு நீக அறியக்குடி போயி மாமா கிட்ட பேசுக.நேருக்கு நேர் நின்னு என்ன கேட்கணுமா,சொல்லனுமோ செய்க” என்றதும் கொஞ்சமாக முகம் மலர்ந்தவர்.
“சின்னப்பன் அண்ணே வந்த ஜோருள நம்ப ஒரு வாரம் போயிட்டு வரலாம் என்ன?”
“இல்ல ஆத்தா நான் இங்கன இருக்கேன், இரண்டு நாள் போகட்டும் உங்களைக் கொண்டு போயி நாளைக்கு விட்டுட்டு வரேன். பின்னுக்கு உங்களை கூட்டிட்டு வரும் போது நானும் இரண்டு ராவு தங்கிட்டு உங்களையும் அழைச்சிட்டு வரேன் ” என்றதும் அவனது வேலையின் இறுக்கம் உணர்ந்து சரியென்று தலையை ஆட்டி கொண்டாள் மீனாள்.அதன் பின் தாயும் மகனும் பல கதைகள் பேசி உண்டு உறங்க நடு நாசி பிடித்தது.
இதோ சொன்னது போல இரு தினங்களுக்கு பின் தாய்யை அரியக்குடிக்கு அழைத்து வந்தான் லட்சுமணன்.மீனாளை கண்ட நொடி அத்தனை களிப்பு வள்ளியப்பனுக்கு.
“அண்ணே!”
“மீனா! வாக! வாக!” என்று வள்ளி அழைக்கக் குரல் கேட்டு கண்ணாத்தாளும் கூடத்துக்கு விரைந்து வந்தால்.
“மீனா!”
“மதனி! என்றவள் கையைப் பற்றி மெதுவாக அழைத்து வந்தான் லட்சுமணன்.மீனாவின் உடல் நிலை மனதுக்குள் கவலையைக் கொடுத்தாலும் அவளது வரவு அத்தனை களிப்பை கொடுத்தது.
“அயித்த வாக” என்ற சாலா ஓடி வந்து மீனாவின் கைகளைப் பற்றிக் கொள்ள. ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவர் அவள் கன்னம் தீண்டி உதட்டில் முத்தி கொள்ளச் சாலாவின் சிரிப்பு அப்படியே நின்று போனது.மனதுக்குள் எதோ ஒரு கலக்கம் சூழ லட்சுமணனை ஒரு பார்வை பார்த்தவள்.மீனாவை நாற்காலியில் அமர உதவி விட்டு தள்ளி நின்று கொண்டாள்.இளையவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை.
ஒன்றாக வளர்ந்ததாலோ என்னவோ இருவரும் இயல்பாக இருந்தனர்.அதீத சீண்டல்,வெறிக்கும் பார்வை,கள்ளம் கொண்ட ஸ்பரிசங்கள் என்று எதுவும் இல்லை.பெரும் கோபம் சில கலக்கம் இருந்தாலும் கூடச் சத்தமில்லாமல் கடந்து நின்றார்கள் இருவரும்.கண்ணாத்தாள் தண்ணீர் கொடுக்க அதனை வாங்கிக் குடித்த இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.
பின் மெதுவாக, “மாமா!”
“லட்சு?”
“ஆத்தா இங்கன இருந்துட்டு போக வந்திருக்காக”
“அதுக்கு என்ன அவுக அண்ணன் மண்டி வூடு எத்தினி நாள் வேணா இருக்கட்டும்”வள்ளியப்பன் மகிழ்ச்சி பொங்க சொல்ல கண்ணாத்தாளும் ஆமோதிப்பாக தாலியை ஆட்டினாள்
“தம்புடு நாகப் பார்த்துக்கிடுறோம்”
“சரிங்க அயித்த அப்போ நான் கிளம்புறேன்”
“என்ன வந்து ஜோருள போறேன்னு சொல்றீக”
“வேலை கிடக்கே அயித்த இப்போ போனாதேன் சரியா இருக்கும். ஆத்தாவ கூட்டிட்டு போக வருவேன் அப்போ இரண்டு நாள் தங்கிட்டுதேன் போவேன்” என்றவன் வேலை பளுவை கொண்டு அதற்கு மேல யாரும் வற்புறுத்தவில்லை.
“சாலா!” முதல் முறை அனைவர் முன் அழைக்கிறான் அதுவும் இத்தனை உரிமையாக.சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அத்தனை வருடங்கள் ஒன்றாக வளர்ந்த பிள்ளைகள் இருவரும்.சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது லட்சுவை சுற்றி சுற்றி விளையாட்டுக்கு அழைத்து அவனைச் சீண்டி கொண்டு இருந்த சாலா.விவரம் தெரிந்த நொடி லட்சுவிடம் விலகி நின்று கொண்டாள்.
லட்சு சொல்லவே வேண்டாம் அமைதி,ஆனால் இன்று அவன் அத்தனை உரிமையாக அழைக்கத் திருத் திருவென விழித்து வைத்தாள் சாலா.அவளது மௌனத்தைக் கருத்தில் கொள்ளாத மருத்துவன்.
“ஆத்தாக்கு கொடுக்க வேண்டிய மருந்து எப்படிக் கொடுக்கனும் சொல்லி கொடுக்கிறேன் அது படி கொடுத்திருக விடியலுக்குக் கொஞ்சம் நடந்து கொடுக்க வைக, பொழுது போயி கொஞ்சம் நடந்து கொடுக்க வைக” என்றவன் பேசி கொண்டே அறைக்குச் செல்ல.
“சரி” என்றவளும் தயங்கி கொண்டே அவள் பின்னே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து அங்கே உள்ள நாற்காலியில் பையை வைத்தவன்,” இந்த எண்ணெய்யை பூசி சூடு பொறுக்க ஒத்தி கொடுக”
“எப்போ செய்யனும்?”
“குளியல் முன்னுக்குப் பண்ணிடுக”
“ஹ்ம்ம்!”
“இது மூணு நேரம் கொடுக்க வேண்டிய மருந்து”
“சரி”
“மறக்காம நடக்க வச்சுடுக”
“ஹ்ம்ம்! பண்ணிடுறேன்” என்றவளை நிமிர்ந்து பார்க்க சிறு பதட்டம் கொண்டு தடுமாறி கொண்டிருந்தாள் சாலா. பக்கம் பார்த்து பழகியவன் என்றாலும் இப்போது இருக்கும் சூழல் அவளைச் சங்கடம் கொள்ள வைத்தது போலும்.அவளைச் சிறு நொடிகள் கண்களால் அளந்தவன் பின்பு உடலை வளைத்து தலையை மட்டும் எட்டி வெளியில் பார்க்க பெரியவர்கள் பேச்சில் மூழ்கி நிற்பதை அறிந்து சாலாவிடம் நெருங்கினான்.
அவனது சில நொடி மௌனமும் அவனது நெருக்கமும் அப்போது தான் உரைத்தது போலும் அரிவைக்கு.கொஞ்சமாகப் பயந்து அவனை நிமிர்ந்து பார்க்க அதற்குள் அத்தனை நெருக்கம் காட்டி விட்டான்.
“என்ன?”
“என்னக சாலா ஆச்சி கல்யாணம் பண்ணிக்கிடலாமா?” அதே அக்மார்க் புன்னகையுடன் கேட்டவன் இயல்பு அவளுக்குத் தான் பெரும் பதப்பை கொடுத்தது.. சொல்லு!க”
“லட்சு! என்று சொல்ல வந்தவள் நீக என்று அழைத்து என்ன இது? இப்படி வந்து திடீர்னு விருப்பம் சொன்னா நான் என்ன செய்றது.முன்னுக்குப் பின்னுக்குனு நிறையா முரண்டி நிக்குது விளையாட்டு பண்ணி வைக்காதீக, இதை கொண்டு பெரியவுகத்தேன் சங்கடப்பட்டுப் போராக”
“என்னத்த முரண்டி நிக்குது என்னைத் தெரியாதா சாலா?” என்றவனை இப்போது நன்றாக முறைத்தாள்.அவளது பார்வையில் புன்னகை செய்தவன் புருவம் வளைத்து என்னவென்று கேட்க முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டாள்.
“சாலா ஆச்சி! என்றவன் அவளது கன்னம் பற்றித் தன்னைப் பார்க்க செய்தவன். நான் சாதகம் பாதகம் சொல்றேன் அதை வச்சி தீர்மானம் பண்ணி இந்தக் கல்யாணம் முடிவு சொல்லுக.
கூடவே வளர்ந்தவன், தெரிஞ்ச அயித்தமாரு, இரண்டு பக்கமும் ஒரே பிள்ளை கணக்கு. அதைக் கொண்டு பெரியவுகள ஒரே பக்கம் வச்சுப் பக்குவம் எடுத்துக்கலாம்.நீகளும் உங்க அயித்த கிட்ட சலுகை எடுத்துக் குடும்பம் பண்ணலாம்.உடம்பு நோவு கொடுத்தா கூட அடுத்தவுக நிழல் பார்த்து நிற்க வேணாம்.
இது எல்லாம் விட உங்களுக்குத் தோது கொடுத்து தலை ஆட்ட சமத்தான செட்டியார் நான் இருக்கேன்.வாழ்க்கையில இதெல்லாம் தானே முக்கியம் இப்போ சொல்லுக இந்தக் கல்யாணம் வேணுமா? வேணாமா? வேணுன்னு சொன்னா வர முஹூர்த்தம் பார்த்து வேலை செஞ்சுடலாம்.
வேணான்னு சொன்னா இரண்டு மாசம் போக விட்டு முஹூர்த்தம் பார்க்கலாம்” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் சாலா.திருமணத்திற்கு முடிவு சொல்ல அவன் அடக்கிய காரணத்தையே ஜீரணம் செய்யாமல் அதிர்ந்து பார்த்தவள்.அவனது இந்தச் சாமர்த்தியத்தால் இன்னும் அசந்து தான் நின்றாள்.
அவளது எண்ணத்தை அறிந்தவன் போல் இன்னும் நெருக்கம் கொடுத்து,”சாலா ஆச்சி சோதிக்காதீக அங்கன, இங்கன பக்கம் பார்த்து பேசி, பக்குவம் எடுத்து நிற்க எல்லாம் நேரமில்லை வயசு போகுதுல.
நேரத்துக்கே எல்லாமே நடத்தாதேன் சரியா இருக்கும்.அப்புறம் நமக்குத் தோது கொடுக்க முடியாம பெரியவுகளுக்கு மூப்பு தட்டி போகும்” என்றவன் பேசி கொண்டே தனது பெருவிரல் கொண்டு மென்மையாக சாலாவின் கன்னம் வருடி கொடுக்க.
தன்னை மறந்து கண்களை மூடி கொண்டாள் சாலா. அவளது செயலில் சிறு புன்னகை கொண்டு வெகு இயலபாக,”வாரேன் பார்த்துக்கிடுங்க” என்று விருட்டென வெளியில் சென்று விட, அப்படியே அசையாமல் நின்றாள் சாலா.சற்று முன் நடந்த அத்தனையும் எண்ணங்களாக மீண்டும், மீண்டும் ஒலித்து வண்ணம் பூச முயற்சிக்க.வெகுவாக முயன்று புத்தி கொண்டு அதனை தடுத்து நிறுத்தினாள் சாலா.
error: Content is protected !!