Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 8

அத்தியாயம் 8:

மது அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தாள் . மதியம் சாப்பாடு எடுத்து வராததால் வெளியில் சாப்பிட்டுவிட்டு ஒரு வாக் சென்று வரலாம் என்ற யோசனையோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இன்று வெள்ளிக்கிழமை நான் வெஜ் சாப்பிட்டால் மீனாட்சிக்கு பிடிக்காது. அதனால் பக்கத்தில் இருந்த சப் வெ ஷாப்பில் நுழைந்தாள்.

ஆர்டர் கொடுக்கும் கவுண்டர் அருகில் போனால், அங்கு மிகவும் வயதான தாத்தா ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு மறு கையில் உணவு தட்டை வாங்கி கொண்டு பாலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார்.



Advertisement

அவரிடம் இருந்து தட்டை வாங்கி கொண்டு அவரோடு வந்து அவரின் டேபிளில் உணவை வைத்தாள். அவரின் நன்றியை வாங்கி கொண்டு திரும்பவும் அவளுக்கு உணவு ஆர்டர் கொடுத்து வாங்கி கொண்டு உட்கார இடம் தேடினாள்.

அவள் ஸ்கர்ட்டை தூக்கி பிடித்து கொண்டு கடையில் நுழைந்தது முதல் அவளின் ஒவ்வொரு செய்கையையும் இரு கண்கள் பார்த்து கொண்டிருந்தது.

மது சரியாக அந்த கண்களுக்கு சொந்தக்காரனின் எதிரில் மட்டுமே இடம் காலியாக இருந்ததால் அங்கு அவனிடம் ஹாய் சொல்லிவிட்டு அமர்ந்து அவள் உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

Advertisement

சிறிது நேரம் போயிருக்கும், மதுவுக்கு எதிரில் சாப்பிட்டு கொண்டிருந்தவன் “ஹாய் கியூட்டி பை, தொந்திரவு பண்றதுக்கு சாரி, உன் பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா” என்றான்.

Advertisement

மது நிமிர்ந்து தன்னிடம்தான் பேசினானா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவன் தன்னையே பார்ப்பதை பார்த்து, ஓ நம்மட்டதான் கேக்கிறானா, இவனுங்களுக்கு எல்லாம் என்னாச்சு. முந்தாநாள் வரையும் நல்லாதான இருந்தானுங்க.

இப்ப என்ன சொல்லிவச்ச மாதிரி எல்லாரும் எனக்குனே பிரச்ன குடுக்க வரானுங்க. இப்ப இவன எப்படி சமாளிக்கிறது. இதுல கியூட்டி பை வேறயா, என்று மனதில் யோசித்து கொண்டே அவனை பார்த்து, “ஹாய் ஐயம் சங்கி மங்கி” என்றாள்.

“என்ன இப்படி ஒரு பேரா. நீ இந்திய பொண்ணுதான”

Advertisement

“ஆமா, நா இந்திய பொண்ணுதான். எங்க அம்மா பேரு மங்கி சங்கி , அதனால் என் பேரு சங்கி மங்கி. உன் பேர் என்ன”

மது உண்மையை சொல்கிறாளா என்று குழம்பி போய் உட்கார்ந்திருந்தவன் “ஐயம் ஜான்” என்றான்.

அதற்கு மது தமிழில் “வெறும் ஜானா, இல்ல ஜாக்கி  ஜானா” என்றாள்.

அவன் புரியாமல் பார்த்ததால் அதே கேள்வியை ஆங்கிலத்தில் கேட்டாள்.

நம்ம ஹேரியே ஒரு இந்திய பொண்ணுட்ட மயங்கிட்டானே, இந்த பொண்ணுட்ட பேசித்தான் பார்ப்போமே என்று பேச ஆரம்பித்த ஜான் புரிந்து கொண்டான் இவள் நம்மை கிண்டல் செய்கிறாள் என்று.

அவளிடம் “நா ஜாக்கி சான்லாம் இல்ல கியூட்டி பை . ஐயம் ஜான் ஹென்றி” என்றான்.

அப்பொழுது மதுவின் மொபைல் இசைத்தது. மீனாட்சிதான் அழைத்திருந்தார்.

மது போனை எடுத்து மீனாட்சியிடம் பிறகு பேசுவதாக கூறி வைத்து விட்டாள்.

ஜான் அவளிடம் “இது என்ன ரிங் டோன் , யாரோட டோன்” என்றான்.

“உனக்கு வைகை புயல் வடிவேலு தெரியுமா. நம்ம தலைவர் அவர். அவரோட டோன் தான் நம்ம ரிங் டோன்”

“யாரு அவர். உங்க ஊர்ல பெரிய லீடரா இல்ல புரட்சியாளரா”

“ஸ்ஸ்ஸ் அப்ப்பா , என்ன ஜாக்கி நீ , வடிவேலு தெரியாதா. யு டியூப்  எடு. வைகை புயல் வடிவேலு காமெடினு டைப் பண்ணி பாரு. வரட்டுமா” என்று சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்ப பார்த்தாள் மது.

ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டிருந்த ஜான் அவளை அவசரமாக நிறுத்தி “ஹே கியூட்டி எங்க போற, உன்னட்ட எப்ப வந்து பேசுறது, நீ எங்க ஒர்க் பண்ற” என்றான்.

அதற்கு மது அவனிடம் “தோ, அங்க தெரியுது பாரு 10 மாடி கட்டிடம், அதுல ஹை டெக் கம்பெனினு ஒரு வீணா போன கம்பனி இருக்கு. ஒரு கேன்டீன் கூட கிடையாது தெரியுமா. எங்க சென்னை ஆபீஸ்ல எல்லாம் நா முக்கால்வாசி நேரம் கேன்டீன்லதான் இருப்பேன். கால்வாசி நேரம் தான் ஆபீஸ் வேல பாப்பேன். எல்லாம் என் நேரம் , இங்க வந்து இந்த காஞ்சி போன ரொட்டியை தின்னுட்டு போறேன்” என்று புலம்பிக்கொண்டே அவள் ஆபீசை நோக்கி சென்றாள் .

அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் ஜான்.

அப்பொழுது சரியாக ஹேரி வீடியோ கால் செய்தான். தன்னிச்சையாக  காலை அட்டென்ட் செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ஜான்.

ஸ்க்ரீனில் வந்த ஹேரி ஜானை பார்த்து “என்ன ஜான், அமெலியா என்ன சொன்னா. ஏன் இவ்ளோ ஷாக்க்கா உக்காந்திருக்க” என்றான்.

ஜான் திரு திருவென்று முழித்து கொண்டே “அமெலியாவா” என்றான்.

ஜானும் ஹேரியும் மெல்பர்னில் இருந்தால் அதிகமாக அவர்கள் பாக்டரியில் தான் இருப்பார்கள். மாதத்திற்கு ஒரு முறை ஜானோ,ஹேரியோ, இல்லை  இருவருமோ இங்கு IT ஆஃபீஸிற்கு வந்து போவார்கள். அதனால்தான் மதுவால் அவர்களை பார்க்க முடிவதில்லை.

இன்று ஆஃபீஸிற்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்த ஜான், இன்று காலை ஹேரியை ஏர்போர்ட்டில் ட்ரோப் பண்ணிவிட்டு அமெலியா உடனடியாக பார்க்க வருமாறு அழைத்ததால் அவளை பார்க்க சென்றுவிட்டு வந்தவன் , பசித்ததால் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்லலாம் என்று சப் வெ வந்தான்.

இப்பொழுது ஹேரி கேட்டவுடன் தான் சுய நினைவுக்கு வந்தவன் “அமெலியா பிரேக்கப் பண்ணிட்டா மேட். என் வீட்டை  விட்டு போய்ட்டா” என்றான்.

“ஓ சாரிடா. அதான் இவ்ளோ அதிர்ச்சியா இருக்கியா”

“அட நீ வேறப்பா , அவ எப்ப வேணாலும் போவானுதான் நா எதிர் பாத்துட்டு இருந்தனே , இது வேற ஒரு ஷாக்”

“என்னது அது”

ஜான் மதுவை பார்த்தது முதல் நடந்ததை கூறினான்.

கேட்டுவிட்டு ஹேரி , நேற்று ஜான் சிரித்தது மாதிரி அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஜான் கடுப்பானவன் “டேய், அவ உன் கம்பெனியதான் வீணா போன கம்பெனின்னு சொல்லிட்டு போனா. நீ என்னன்னா இப்படி சிரிச்சிட்ருக்க” என்றான்.

“அத விடு ஜே. உன்ன என்ன சொல்லி கூப்பிட்டா ஜாக்கி ஜானா, ஹா ஹா. உன்ன பாத்தா அவளுக்கு ஜாக்கி சான் மாதிரியா தெரியுது”

ஏனென்றால் ஜான் ஒல்லியான தேகம் உடையவன். எக்சசைஸ் பாடியெல்லாம் கிடையாது.

“6 அடி உயரத்துல அர்னால்டு மாதிரி இருக்க திமிரா மேட் உனக்கு. பாக்க ஏஞ்சல் மாதிரி இருக்காளே. பேசி பாப்போம்னு பார்த்தா என்ன ஒரு சேட்டை.  இரு நேரா நம்ம ஆபீஸ் போய்  இருக்கு அவளுக்கு”

“எதோ பண்ணு . எனக்கு ஈவினிங் பார்ட்டி இருக்கு கிளைண்ட்ஸோட. நா போய் கொஞ்சம நேரம் ரெஸ்ட் எடுக்க போறேன்”

ஹேரியிடம் கால் பேசி முடித்துவிட்டு அலுவலகத்திற்கு சென்றான் ஜான்.

மது ஆபீஸ் சென்றவள் ஊர்வசியிடம் “என்ன ஊர் , வேலை பெருசா ஒன்னும் இல்லையே, இன்னைக்கு சீக்கிரமே கிளம்பலாமா” என்றாள்.

“இல்ல மது. இப்பதான் சத்யன் வந்துட்டு போனாரு. நம்ம கம்பனி பாஸோட பிஏ வாம் . இப்ப வரறாராம் . நம்ம டீமை மீட் பண்ணுனாலும் பண்ணுவார். ரெடியா இருங்கனு சொல்லிட்டு போனார்”

“என்ன திடிர்னு. இதுவரை யாரும் பெரிய ஆளுங்களாம் நம்ம மீட் பண்ணது இல்லையே”

“நம்ம ரீசண்டா தான இங்க வந்தோம். நம்ம டீம் மெம்பெர்ஸ் எல்லோருக்கும் அவரை தெரிஞ்சிருக்கு. அவர் கம்பனி எம்.டியோட பிரண்டாம். அப்பப்ப வந்து இத மாதிரி மீட் பண்ணுவாராம். நம்ம ஒர்க்க அப்ரிஸியேட் பண்ண. நிறை குறைகள் கேக்க அப்படின்னு. ரொம்ப நல்ல மாதிரி, பிரண்ட்லி டைப்னு சொன்னாங்க”

அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே மீட்டிங்கிற்கு  மது டீமை  அழைத்து விட்டார்கள்.

மதுவோடு அவள் டீம் கான்பிரென்ஸ் ஹால் சென்றனர்.

சிறிது நேரத்தில் ஆபீஸ் ஹெட் , ஜான் , சத்யன் மூவரும் ஒன்றாக உள்ளே வந்தனர்.

அனைவரும் மரியாதைக்காக எழுந்து நின்றனர்.

ஜான் அனைவரையும்  பார்த்து “உக்காருங்க பிரெண்ட்ஸ்” என்றுவிட்டு அவனும் சத்யனும் அமர்ந்தார்கள்.

மதுவை தவிர அனைவரும் அமர்ந்திருந்தனர்.

மது ஜானை பார்த்து கொண்டே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள்.

ஊர்வசிதான் மதுவின் கையை பிடித்து இழுத்து அமர வைத்தாள்.

சுயநினைவுக்கு வந்த மது, அடப்பாவிங்களா பிரெண்டுனானுங்க , பிஏ ன்னானுங்க. ஜானுனு ஒரு வார்த்தை சொன்னானுங்களா. சொல்லியிருந்தா அப்பவே கொஞ்சம் சுதாரிச்சிருப்பேனே.

மது யோசித்து கொண்டிருக்கும் போதே சத்யன் ஊர்வசியையும், மதுவையும் அறிமுகபடுத்தினான்.

“மிஸ்டர் ஜான்.இவங்க லாஸ்ட்டா இந்த ப்ரொஜெக்ட்க்காக சென்னைல இருந்து வந்தவங்க. ரொம்ப எபிசியன்ட் ஒர்க்கர்ஸ். இவங்க ஊர்வசி” என்று சொல்ல வந்தவனை,

அவர்களாகவே சொல்லட்டும் என்றான் ஜான்.

ஊர்வசி அறிமுகம் முடிந்தவுடன் மது எழுந்து “ஐயம் மதுமிதா செல்லதுரை” என்று அறிமுக படுத்தி கொண்டாள்.

அதுவரை அவளை குறு குறுவென்று பார்த்து கொண்டிருந்தவன் அவள் பெயர் சொன்னவுடன் ஏதோ யோசனையானான்.

அவசரமாக போனை எடுத்து ஏதோ செய்து கொண்டே மதுவிடம் , “இங்கு எங்கு தங்கியிருக்கிறாய்” என்று கேட்டான்.

மதுவிற்கு குழப்பமாகிவிட்டது. மதியம் அவனை கலாட்டா செய்ததற்கு ஏதாவாது சொல்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் கேள்வி வித்தியாசமாக இருந்தது. இருந்தாலும் பதில் சொல்ல வேண்டுமே என்று கிளேட்டனில் தங்கியிருப்பதாக கூறினாள்.

அவள் சொல்வதை கேட்டு கொண்டு மொபைலை பார்த்து கொண்டிருந்த ஜான் எதையோ உறுதி படுத்தி கொண்டவனாக மதுவை குறும்பாக நோக்கி “உங்க பேர் என்ன சொன்னிங்க” என்று கேட்டான்.

மது திரும்பவும் “ஐயம்  மதுமிதா” என்றாள் .

“இல்லையே வேறு எதோ கேள்விப்பட்டேனே, கோலா பியரா”

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். மது கோபமாக “இல்லை மிஸ்டர் ஜாக்கி, சாரி ஜான். உங்களுக்கு எதோ மூளையில் கோளாறு இருக்கிறது போல, அதுதான் எதையோ போட்டு குழப்பி கொள்கிறீர்கள்” என்றாள்.

மது சொன்னதை கேட்டு ஜான் சிரித்து கொண்டே “ஓ அப்படியா இருக்கட்டும், இந்த கம்பெனியை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன” என்று கேட்டான் .

மதுவும் அசராமல் “மிகவும் அருமையான கம்பெனி . எங்கள் சென்னை அலுவலகத்தில் கூட நாங்கள் இவ்வளவு சுதந்திரமாகவும், அமைதியாகவும் வேலை செய்ததில்லை” என்று புகழ்ந்து கொண்டிருந்தாள்.

சத்யனும், ஊர்வசியும் நெஞ்சில் கைவைத்து கொண்டார்கள். ஜானே அசந்து விட்டான். மதியம் அவனிடமே அவ்வளவு பேசிவிட்டு இப்பொழுது ஒன்றுமே நடவாது போல பேசி கொண்டிருந்தவளை வெகு சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்தான்.

இங்கு சத்யனுக்கு தான் அவன் பார்வையை பார்த்து வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.

மது பேசி முடித்து விட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள். ஜானும் மேற்கொண்டு எதுவும் அவளிடம் பேசாமல் அனைவரிடமும் ப்ராஜெக்ட் பற்றியும், வேறு ஏதேனும் கம்பளைண்ட் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு மீட்டிங்கை நிறைவு செய்தான்.

அனைவரும் வெளியே செல்ல ஆயத்தமானார்கள். எல்லோருக்கும் முன் மது வாயிலுக்கு சென்று விட்டாள்.

ஜான் “மிஸ் கோலா எங்க போறீங்க. நீங்க வெயிட் பண்ணுங்க. உங்கட்ட கொஞ்சம் சந்தேகம் கேட்கணும்” என்றான்.

மதுவும் வேறு வழியில்லாமல் நின்று விட்டாள். அனைவரும் அவளை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டே சென்றார்கள். சத்யனும் மதுவோடு நின்று கொண்டான்.

ஜான் சத்யனை கிண்டலாக பார்த்து கொண்டே “என்ன சத்யன். டீம் மெம்பர்ன்ற பாசமா, இல்ல உங்க ஊர்ன்ற பாசமா” என்று கேட்டான்.

“இரண்டும்தான் ஜான்”

“ஓ இருக்கட்டும். கியூட்டி பை உங்கட்ட ஒரு கேள்வி கேக்கணும். அதான் உங்களை நிறுத்தினேன்”

“என்ன மிஸ்டர் ஜாக்கி”

ஜான் வாய்விட்டு சிரித்தவன் மதுவிடம் “உனக்கு ரொம்ப தைரியம் தான். அது இருக்கட்டும். இந்த டேட்டிங் பத்தி நீ என்ன நினைக்கிற” என்று கேட்டான்.

அந்த கேள்வியில் இதுவரை அசராமல் இருந்த மது அவனை அதிர்ச்சியாக  பார்த்தாள்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!