Skip to content
Post Views: 4,693
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 13
Advertisement
சத்யாவிடமிருந்து குறுஞ்செய்தி என்றதுமே, ஹைவேசில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த தூக்கம், அபவுட் டர்ன் எடுத்து எதிர்த் திசையில் செல்லத் துவங்கிவிட, ஆர்வமாகக் கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்ட ராகா, சற்றே படபடக்கும் மனதுடன் செய்தியினை வாசித்தாள்.
“ஆல் ஒ.கே?” என்று வினவியிருந்தான். ராகாவிற்கு புரியவில்லை, இதென்ன “ஆல் ஒ.கே என்றால்? என்ன கேட்கிறான்? திருமண நிகழ்வு சம்பந்தமாக எல்லாமே சரியாக உள்ளதா என்றா? இல்லை புகைப்படங்கள் பற்றியா? அல்லது என்னைப் பற்றியா? திடுமென ஆல் ஒ.கே? என்று கேட்டால் என்ன நினைத்து கொள்வது? என்று மனதில் குழப்பமாய் சிந்தனைகள் எழுந்தன. அதனால், மறுமொழியாக.
Advertisement
Advertisement
“????” நான்கு கேள்விக் குறிகளைப் பதிலாக அனுப்பினாள். ப்ளூடிக் காட்டியது வாட்ஸ்ஸப். “—-typing” என்ற எழுத்துக்களை பார்க்கவும் இதயம் வேகமாகத் துடித்தது. “சே, இந்த typing ங்கிற்கு இவளோ மகிமையா?” என்று உச் கொட்டிவிட்டு கைப்பேசியில் கவனம் குவித்தாள்.
“நான் செல்லும் சமயம், உன் நண்பர்கள் உன்னை சூழ்ந்து கொண்டு ஏதோ வினவினர். அதனால் கேட்டேன்” என்று ஆங்கிலத்தில் கூறியிருந்தான். “என்ன ஒரு கரிசனம்?” என்று தோன்றினாலும், அதனை முந்திக் கொண்டு,
Advertisement
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று பதில் கேள்வியைக் கேட்டிருந்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும்! உன்னைப் பற்றி என்று சினிமாத்தனமாக ஏதேனும் உளறுவான் என்றே பெரிதும் எதிர்பார்த்தாள். ஏனென்றால் முடிந்த மட்டிலும் கடலை போடும் ஆண்கள் இப்படி வண்ண வண்ணமான வார்த்தை ஜாலங்கள் கொண்டு பேசுவர் என்று தெரியும் அவளுக்கு, ஆனால் சத்யாவின் மறுமொழியோ,
“ரியர் வியூமிரர் வழியாகப் பார்த்த போது தெரிந்தது” என்று சொல்லியது. உண்மையாகப் போலி ஒப்பனைகள் இல்லாமல் மனதில் நினைத்ததை பகிர்ந்து கொண்ட சத்யாவின் பாங்கு சட்டென அவன் மீது ஏற்கனவே இருந்து மதிப்பை கொஞ்சம் கூட்டியிருந்தது. அவன் நேர் கொண்ட பதில் பிடித்திருந்தது.
பொதுவாகக் கடலை போடுபவர்கள், பேச்சை நீட்டிப்பதற்காக நேராக உண்மை பேசாமல், சுற்றி வளைத்து ஏதேனும் கேட்பது தான் வழமை. ஆனால் அப்படியெல்லாம் சுற்றிக் கொண்டிருக்காமல், நேரே முட்டுச் சந்தில் வந்து முட்டு நின்றான் சத்யா. அதற்கு மேல் கேட்க ஒன்றுமே இல்லை என்பது புலனாக, ராகாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
காலையில் ஹோட்டலில் இருந்து கிளம்பும் சமயம், சத்யாவிற்கு ராகாவிடம் பேச, கேள்வி கேட்கவென நிறைய விஷயங்கள் தோன்றியது. அதிலும் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய சமயம், ரியர் வியூ வழியாக அவள் நின்றிருந்த இடத்திலேயே கவனம் பதிக்க, இவன் கார் நகர்ந்ததும் வனிஷாவும் மைக்கிலும் ஓடி வந்து அவள் அருகே நின்று ஏதோ கேட்பதும், அதற்கு அவள் சிரிப்புடன் மறுப்பு சொல்வதும் தெரிந்தது.
“தன்னைப் பற்றித்தான் ஏதோ கேட்கிறார்கள்!” என்ற இயல்பான ஊந்துதல் ஏற்பட, சத்யா இதை ஒரு சாக்காக வைத்து ராகாவிடம் பேச்சு வளர்க்கவே விரும்பினான்.
அவன் இயல்பான பதிலைக் கேட்ட ராகாவிற்கும் நடந்தவற்றை அவனிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆனால் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற சிறிய தயக்கம் காரணமாக, செய்தி எழுதுவதும், அழிப்பதுமாக இருக்க, சத்யா அவளுக்கு வாட்ட்ஸப்பில் அழைப்பு விடுத்தான்.
“அய்ய்யோ !கால் பண்ணறானே! ஆன்லைன்ல இருந்துட்டு கால் எடுக்காம இருக்க முடியாதே” என்று சற்றே தயக்கத்துடன், “ஹலோ” என பேச்சைத் துவங்கினாள். அவனோ, “என்ன ரொம்ப நேரமா ஏதோ டைப் பண்ணறீங்க, அப்பறம் டெலீட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் திரும்பவும் அதே கலப்படமில்லா உண்மை தொனியில்.
“இவளோ ஏண்டா அப்சர்வ் பண்ணற? அப்சர்வஷன் நோட்ஸை கொஞ்சம் கம்மி பண்ணிக்க மேன்.” என்று நினைத்துக் கொண்டாலும், வாய் என்னவோ “அது, அது வந்து” என்று திக்கித் திணறியது.
முதலில் வனியும், மைக்கிலும் பேசியவற்றை சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால், இவன் என்ன நினைத்துக் கொள்வானோ? அவனிடம் நான் விழுந்து விழுந்து பழக நினைக்கிறேன் என்று நினைத்தால்? இல்லை, இவள் பெரிய பேரழகி, கொஞ்சம் சிரித்துப் பேசினாலே மற்றவர்கள் விழுந்துவிடுவார்களா? இதைக் கிண்டல் செய்ய இரு நண்பர்கள் வேறு, என்று தற்பெருமை பேசுவதாய் எண்ணிக் கொண்டால்? இந்த யோசனையெல்லாம் ஒருமித்து எழுந்த காரணத்தினால் என்ன பதில் சொல்வது என்று குழப்பமாகவே இருந்தது.
“ஹலோ மிஸ்.ராகா! லைன்ல இருக்கீங்களா?” என்று அவன் கேட்கும் வரையிலும் திரும்ப இந்தக் குழப்பமான கேள்விகளையே மனதில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதுவந்து சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்று சமாளிப்பாகக் கூற, “பார்த்தா அப்படி தெரியலையே! என்ஃப்ரெண்ட் ரிஷி என்னைக் கிண்டல் பண்ண மாதிரி, உங்க ஃப்ரெண்ட்ஸும் கிண்டல் பண்ணாங்கன்னு நினைச்சேன்” என்று அவனாகவே அவள் பேசச் செய்தி எடுத்துக் கொடுத்தான். ராகா அவன் பதிலில் இருந்தே தன் பேச்சைத் துவங்கிக் கொண்டாள்.
“உங்க ஃப்ரெண்ட் ரிஷி உங்களை கிண்டல் பண்ணாறா? எதுக்காக?” என்று வினவினாள்.
“அந்த பக்கம் மிருதுவை கார் ஏத்தி அனுப்பிட்டு, இந்தப் பக்கம் நான் உங்க கிட்ட கடலை போட ஆரம்பிச்சுடேனாம் அப்படின்னு ஓட்டிட்டு இருந்தான்” என்று கூறி சன்னமாகச் சிரித்தான். வெகு இயல்பாகச் சாதாரண வானிலை விஷயம் சொல்வது போல இதைப் பகிர்ந்து கொண்டான் சத்யா.
ஆம், சத்யாவின் மனம் அப்படி ஒரு மன நிலையை எட்டியிருந்தது. “இந்த ராகா மேல இருக்க அட்ராக்ஷன் அவ தூரத்தில இருக்கற காரணத்தினால தான். தினமும் பேசி, ஈஸியா பழகிட்ட, அவ மேல இருக்க இண்டிரெஸ்ட் போயிரும். “ட்ராகன் ஃப்ரூட், கிவின்னு” எக்ஸாட்டிக்கான பழமா இருக்கறதுனால தானே அதெல்லாம் காஸ்டலியா பேசப்படுது. இதுவே கிவி விளையற நாட்ல அது ரொம்ப சீப் தானே! சோ, கைக்கு கிடைக்காது, தூரத்தில இருந்து மட்டும் தான் பார்க்க முடியும்னு இருக்கறதுனால தான அவளை மனசு தேடுது. அதுவே தினமும் பேசி பழகி ஃப்ரெண்ட் ஆகிட்டா, அந்த வியப்பும், ஆர்வமும் கண்டிப்பா குறைஞ்சிடும்.” என்று தீவிரமாக நம்பிய சத்யா, இந்த முடிவை எட்டிய பின்னரே ராகாவிடம் இயல்பாக பேசிப் பழக வேண்டும், ஃப்ரெண்ட் என்ற எல்லையில் நிறுத்த அது தான் இலகுவாக இருக்கும் என்று நினைத்தான்.
சத்யா ரிஷி குறித்துச் சொன்னது கேட்டு ராகா சிரித்துக் கொண்டாள். அவனே இவ்வளவு இயல்பாகப் பகிர்ந்து கொள்ளும் போதும் நான் சொல்வதில் என்ன வந்தது என்று தோன்றியது.
“இங்கையும் அதே தான் சொல்லி கிண்டல் பண்ணாங்க. அதுலையும் உங்க வாஷ் ரூமை நான் யூஸ் பண்ணிட்டு வெளிய வந்தப்போ வனிஷா வேற என்னை பார்த்துட்டாளா, அதை மைக்கில்ட்ட சொல்லிட்டா. அதனால நீங்க வந்து பேசவும், ஏ , என்ன என்னன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க”
“பார்த்தீங்களா, அவங்களும் அதே தான் கேட்டிருக்காங்க. ஆனா நீங்க என் கிட்ட, ஒண்ணுமில்ல, சும்மா தான்னு சமாளிப்பா பதில் டைப் பண்ணிட்டு இருக்கீங்க!” என்று குற்றம் சாட்டுவதைப் போலக் கூற,
“யோவ் எதுக்குய்யா இவளோ அப்சர்வேஷன் ஸ்கில்ஸ் உனக்கு?” என்று மனது நினைத்ததை மறந்துபோய் வெளியே சொல்லிவிட்டிருந்தாள்.
“என்னது யோவ் வா?” என்று சத்யா திரும்ப வினவிய பின்னரே, “ஐய்யோ சாரி சாரி, யோசிக்காம மனசில இருக்கறதை பேசிட்டேன். சாரிங்க மிஸ்டர்.சத்யா. ரியலி” என்று பதட்டத்துடன் மன்னிப்பு கோரினாள்.
மறுமுனையில் அவனுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவள் “யோவ்” என்று மிகவும் உரிமையாக அழைத்தது பிடித்திருந்தது. ஆனால் அதை ஒப்புக் கொள்ளவும் பெரும் தயக்கம் வேறு ஆட்கொண்டது. அப்போதைக்கு நிலைமையை சமாளிக்க, “அதுக்காக மனசில யோவ்னா நினைப்பீங்க?” என்று தான் பதிலளிக்காமல் கேள்வியை அவளிடம் திருப்பிவிட்டு மெளனமானான்.
“ஏங்க நிஜம்மாவே சாரிங்க.. யோசிக்காம பேசிட்டேன். நீங்க வேணும்னா உங்க மனத் திருப்திக்கு என்னை ரெண்டு தடவை அடியேய்னு சொல்லிக்கோங்க.”
“அட சும்மா சொன்னேங்க! எதுக்கு டென்ஷன் ஆகறீங்க. விடுங்க.”
“இல்லை, கொஞ்சம் மரியாதையில்லாம வயசில பெரியவங்களை போய், யோவ்னு சொல்லிட்டனே” என்றாள் குரலில் கொஞ்சம் நக்கலை பூசி கொண்டு.
“ஒ, இதான் சாக்குன்னு என்னை வயசானவன்னு சொல்லறீங்களாக்கும். எனக்கு வெறும் 27 தாங்க. அவளோ மரியாதையெல்லாம் வேண்டாம். கொஞ்சம் குறைச்சுக்கலாம்.”
“அப்படிப் பார்த்தாலும் எனக்கு 26 தான். சோ, எனக்கு நீங்க வயசில பெரியவர் தான்.” என்று பெரியவர் என்ற வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள். அவளின் ரசனையான பேச்சு கேட்டு அவனுக்கு மனமும் முகமும் விகசித்தது.
“சரிங்க. அப்போ நான் வச்சிடவா?” என்றான் “அப்பறம்,அப்பறம்” என்று வழக்கமாக “கடலை விதிகளில்” இருந்து விலகி.
“ம்ம் சரிங்க. மிஸ்டர்.சத்யா. சாரி ஜஸ்ட் சத்யா” என்று அவன் திருத்துவதற்கு முன்பாக அவளே சொல்லிவிட, அதற்கும் கலகலவென நகைத்தவன், “சரிங்க, நான் வைக்கறேன். பை” என்று கூறி கைப்பேசியை அணைத்தான்.
ராகாவிடம் இயல்பாக பேசிப் பழகி விட்டால், அவள் மீது மனதில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு நீர்த்துப் போய்விடும் என்று முடிவெடுத்திருந்தான் சத்யா. “சும்மா அவ எங்க நிக்கறா? என்ன செய்யறா? எப்படி சிரிக்கறா? எதுக்காக இப்படி சிரிச்சிருப்பா?”ன்னு அவளைச் சுத்தி சுத்தி யோசிச்சுட்டு இருக்கறதுக்கு, இப்படி பழக்கப்படுத்திகிட்டா,இந்த எண்ணமெல்லாம் இல்லாம போயிடும்” என்று முடிவெடுத்திருந்தான்.
ஏனென்றால் அன்றைய புகைப்படப் பிடிப்பு தினம் முழுவதுமே அவன் கண்கள், ராகா எங்கே என்றும், அவள் என்ன செய்கிறாள் என்றும் நோட்டம் விடுவதிலேயே கழிந்து போனது. அதிலும் அவளாக அவனைத் தேடி அறைக்கு வந்து அவன் டென்ஷனைக் குறைக்க எண்ணியிருக்கிறாள் என்று புரிபடவும், மனம் குதூகலிக்க துவங்கியது.
பத்தா குறைக்கு காரில் ஏறியதுமே ரிஷி வேறு பிடித்துக் கொண்டான். “என்னடா மச்சான், புது ட்ராக்கா? உன் அக்கா கல்யாணத்துல, உன் மச்சான் ஒண்ணுவிட்ட தங்கச்சிய சைட் அடிச்சுட்டு திரிஞ்ச! அப்போ கூட உன் முகத்தில் இவளோ டின் டின்னா அசடு வழியலையேடா. இது உன் கல்யாணம். நியாபகம் இருக்குல”
“டேய் ஏண்டா நீ வேற! அடுத்து என்ன வேலையிருக்குன்னு கேட்டுட்டு இருந்தேண்டா. வேற எதும் பேசலை”
“டேய் நீ என்ன பேசினன்னு நான் கேட்கவேயில்ல. நீ ராமாயணம் மகாபாரதம் பத்தி கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம். ஆனா அதை பேசறப்போ உன் முகத்தைப் பார்க்கணுமே! அவளோ ஒரு சிரிப்பு, கொஞ்சம் வெட்கம், தரையைப் பார்க்கற, மேல பார்க்கற, ஷர்ட் கையை மடிச்சு விடற, கழுத்து வேர்வையை துடைச்சுக்கற”
“டேய் சைனீஸ் எரும! கண்ணாடிய கழட்டினா, உனக்கு பச்ச கலர் எது, மஞ்சள் எதுன்னு கூட வித்யாசம் தெரியாது. உன் கண்ணுல நான் வெட்கப்படறது அப்படியே விழுந்துட்டாலும். போடா”
“அதான் நான் கண்ணாடிய கழட்டலையே! நல்லா தெள்ளத் தெளிவா தானே பார்த்துட்டு, உன்னை வம்பிழுக்க ஹார்ன் அடிச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க தான் மதிக்கவேயில்லையே! உன் காதில ஹார்ன் சத்தம் கேட்டிருக்காதுல. கேட்டிருக்காது! ஏன்னா சைட் அடிச்சு கடலை போடறப்போ வேற எந்த விஷயமும் கவனத்தில வராது.” என்று காரினை ஓட்டிக் கொண்டே ரிஷி சிரிப்புடன் கூறினான்.
“என்னவோ உளறிட்டு கெட” என்று அப்போதைக்கு சத்யா ரிஷியின் பேச்சைச் சட்டை செய்யாதது போலக் காட்டிக் கொண்டாலும், ரிஷி சொல்வது உண்மை என அவன் மனதிற்குத் தெரியும் தானே!
“டேய் சத்யா! இப்படி அப்பட்டமா வெளிய தெரியற அளவுக்காடா சைட் அடிச்சு தொலைப்ப? ஏண்டா மானத்தை வாங்கற? இது உன் கல்யாண ஈவெண்ட். இப்போ போய் காலேஜ் பையன் மாதிரி பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்காத” என்று மூளை கண்டித்தது.
அவனுக்குமே தான் செய்யும் தவறு புரிந்து போக, ராகாவிடம் தோன்றும் ஈர்ப்பைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக் கொண்ட ஒரு வழி தான் அவளுடன் சகஜமாய் பேசி பழகி தோழியாக்கிக் கொள்வது. “பருகப் பருக பாலும் புளிக்கும்னு” சும்மாவா சொன்னாங்க. நாள்பட பேசி சிரிச்சுட்டு ஃப்ரெண்டாக்கிட்டா, இந்த ஈர்ப்பு கண்டிப்பா குறைஞ்சிரும்” என்ற எண்ணம் கொண்ட பின்னர் தான் தானாக ராகாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
சத்யாவின் இந்த நினைப்பு பற்றியெல்லாம் தெரிந்திராத ராகா, அவன் பேசிய வார்த்தைகளை எல்லாம் சில தடவை மனதினுள் படம் போல் ஓட்டிப் பார்த்துக் கொண்டே உறங்கினாள்.
அன்றைய மதியம் நான்கு மணி போலத் தான் விழிப்பு வந்தது. பிஜியில் இந்த நேரம் உணவு எதுவும் இருக்காது என்பதால் டீயும் வடா பாவும் சாப்பிட பிஜியில் இருந்து வெளியே வந்தாள். ராகமாலிகா என்ற பெயருக்குப் பதிலாக தேநீர்மாலிகா என்று பெயர்சூட்டியிருக்கலாம். அப்படி ஒரு தேநீர் பிரியை அவள்.
தேநீர் பருக நேரம் காலம் என்றெல்லாம் ஒன்று இல்லவேயில்லை அவளுக்கு. எப்போது கொடுத்தாலும் குடிப்பாள்.
தன் பிரியத்திற்குரிய தேநீரை பருகி கொண்டிருக்கும் போது ரேணுவிடமிருந்து அழைப்பு வந்தது. “வாட்ஸ்ஸப் ஆன்லைன் காட்டிச்சேன்னு தான் கால் பண்ணேன். எந்திரிச்சுட்டியா?” என்று வினவிய தோழி/அண்ணியிடம் அளவளாவினாள்.
“ம்ம் யா யா, டீ குடிக்க வந்தேன்”
“நீ மட்டுமா?”
“இல்லை கடையில கொஞ்சபேர் இருக்காங்க”
“எரும! மொக்க போடாத”
“மொக்கையா கேள்வி கேட்டா, பின்ன ஐன்ஸ்டெயின் மாதிரியா பதில் சொல்ல முடியும். மொக்க கேள்விக்கு மொக்க பதில் தான் வரும்”
“சரி,சரி, சொல்லு ஷூட் எப்படி போச்சு?”
“ம்ம் அதுக்கென்ன ஆடம்பரமா அசத்தலா போச்சு.”
“அதான! எங்கிருந்து தான் காசு சேர்த்து வச்சிருப்பாங்களோ? நாமளும் தானேடீ ராப்பகலா உண்டியல் குலுக்கறோம்..” என்றாள் ரேணு சிரிப்புடன்.
“ம்ம்ம்கும். நீ இப்போ தானே குலுக்க ஆரம்பிச்சிருக்க. இவங்களாம் அந்த காலத்தில, பெங்களூர்ங்கறது ஒரு சின்ன நாலு சந்து ஊரா இருந்த காலத்திலையே ஊர சுத்தி நிலம், நீச்சுன்னு வளைச்சு போட்டு, அங்கங்க கம்பெனி, காம்பிளக்ஸ்னு கட்டி வாடகைக்கு விட்டு கோடிகள்ல புரள்கிறவர்கள் மன்னா! இவங்க கூடலாம் நம்மளை கம்பேர் பண்ணாத”
“ம்ம்ம்ம்கும். புரளட்டும், புரளட்டும். சரி, அந்த ஒரு ஆள் ஆபீஸ்ல சைட் அடிச்சான்னு சொன்னியே அவன் வந்திருந்தானா? என்று முதல் தினம் சத்யா பற்றி தான் கூறியதை நினைவில் வைத்துக் கேட்டாள்.
“ம்ம்கும் அவன் கல்யாண ஷூட்டுக்கு அவனே வராம இருப்பானா. வந்தான் வந்தான்” என்று சற்றும் ஆர்வம் இல்லாதவள் போலவே பேசினாள்.
“ம்ம்ம் இன்னைக்குமா சைட் அடிச்சான். அவன் ஃபியான்சி கண்டுக்காதா?”
“ஏ ஏண்டி ரேணு நீ வேற! அவன் நான் முன்னாடி சொன்ன மாதிரி வழிசல்லாம் இல்லடீ, டீசண்ட் தான். இன்னைக்கு காலையில என்ன நடந்துச்சுன்னா..” என்று காலையில் சத்யா அனுப்பிய குறுஞ்செய்தி விஷயத்தை ரேணுவிடம் கூறினாள்.
ரேணுவிடம் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். உடனே அவர்கள் மீது தப்பான அபிப்பிராயம் கொண்டுவிட மாட்டாள். அவர்கள் பக்கக் கதை என்ன என்று யோசிக்கத் தூண்டுவாள். அதனாலேயே ரேணுவிடம் தைரியமாக சத்யாவின் குறுஞ்செய்தி பற்றியும், அவன் கைப்பேசியில் அழைத்துப் பேசியது பற்றியும் சொல்லிவிட்டிருந்தாள்.
ராகா சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரேணு, “நல்லவனோ கெட்டவனோ, அவங்க எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். நீ அவங்க கூட பேசாதன்னுலாம் சொல்ல மாட்டேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் பேசி பழகறது யார் கண்ணுக்கும் உருத்தலா இல்லாம பார்த்துக்கோ, உன்னால எதும் பிராப்ளம்ஸ் வராம இருக்கணும்” என்று அறிவுரை கூறினாள்.
“ம்ம்ம்”
“வெறும் ம்ம்ம் மட்டும் சொல்லாத!”
“பின்ன, காட் பிராமிஸ், மதர் பிராமிஸ் பண்ணட்டுமா? என் மதர் மேல ப்ராமிஸ் பண்ணா உனக்கு சந்தோஷம் தானே ரேணு”
“ஐய்யோ அம்மா! ரொம்பத்தான் நீ மதர் பிராமிஸ்க்கு பயந்தவ! சரி, சொன்னது நியாபகம் இருக்கட்டும். உன்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம பார்த்துக்கோ! யாரும் பேசற மாதிரி வச்சுக்காத” என்று சொல்லிவிட்டு ரேணு கைப்பேசியை அணைத்தாள்.
“ம்ம்ம்கும், எங்க பேசாம பார்த்துக்கறது! அதான் ஏற்கனவே பேசுதுகளே வனியும், மைக்கும். மைக் கூட ஒ.கே சென்சிபிள் பையன் தான். இந்த வனி தான் டேஞ்சர். எதுக்கும் பத்தரமா இருந்துக்கணும்” என்று எண்ணிக் கொண்டே தன் தேநீரைக் குடித்து முடிக்க முடிக்க, மைக்கிலிடம் இருந்து அடுத்த அழைப்பு வந்தது.
“ராகா, இங்க கொஞ்சம் பிரச்சனை! இந்த மிருதுளா மேம் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு, அவங்க ரூம்குள்ள போய் கதவை சாத்திகிட்டாங்க. கொஞ்சம் அவங்க வீடு வரைக்கும் இப்போவே வர்றியா? நான் லொகேஷன் செண்ட் பண்ணறேன்” என படபடப்பாகக் கூறினான்.
அவன் பின்னால், தீப்தியும், மின்னியும், “மிருது, மிருது பேபி. ப்ளீஸ் வெளிய வா! ஓபன் த டோர்” என்று கத்திக் கொண்டிருந்தது கேட்டு, அந்த பெங்களூர் மாலை நேர இதமான சீதோசனத்திலும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க முத்து முத்தாய் வியர்த்து கொட்டியது ராகாவிற்கு.
error: Content is protected !!