Skip to content
Post Views: 4,844
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 14
Advertisement
மைக்கிலின் குரலில் தொனித்த அவசரம் கண்டு ராகா முதலில் கொஞ்சம் பதற்றப்பட்டாலும், சற்றே நிதானித்து யோசித்தாள். “மிருது டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ், சோ, சின்ன சின்ன விஷயமா இருந்தாலும் இப்படி ஓவரா தான் ரியாக்ட் பண்ணுவாளா இருக்கும். இவங்க அகராதில “நோ”, “உனக்கு கிடையாது”ங்கற வார்த்தையெல்லாம் இல்லை.”
“ஏதாவது உப்பு சப்பில்லாத காரணமா இருக்கும். அதுக்கு “கல்யாணம் வேண்டாம்னு” ரூம்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டிருப்பாளா இருக்கும். இதுவே நம்ம வீடா இருந்தா, முதுல ரெண்டு கன்னத்துல ரெண்டு வச்சு, இப்படி பேசுவியான்னு நாக்குல சூடு போட்டிருப்பாங்க, இல்ல, வாசல்ல கிடக்கற செருப்பை எடுத்து பேசற வாயிலையே விளாசி தள்ளியிருக்கும் முத்துலட்சுமி. இங்க அடி உதைன்னு எந்த பயமும் இல்லாம வளர்ந்திருக்கும்ல. அப்போ அப்படி தான் இருக்கும்.”
Advertisement
Advertisement
“என்ன பண்ணறது, நம்ம தலையெழுத்து, இதை சமாளிச்சு தான் ஆகணும்” என்று நினைத்துக் கொண்டே ஆட்டோ பிடித்து, மைக்கில் அனுப்பியிருந்த விலாசம் நோக்கி விரைந்தாள்.
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சமயம் நடாஷாவிடமிருந்து அழைப்பு வந்தது. மைக்கில் அங்கேயும் செய்தி சொல்லியிருப்பானாயிருக்கும்.
Advertisement
“வாட் ஹேப்பண்ட் டு திஸ் கேர்ள் மிருது? கல்யாணம் வேணாம்னு சொல்லி கதவை சாத்திகிட்சாம்? வாட் நான்சென்ஸ்” என்று நடாஷா கேட்க,
“நான் அங்க தான் போயிட்டு இருக்கேன் நட்ஸ். ஏதாவது சின்ன விஷயமா தான் இருக்கும். யு நோஅபவுட் திஸ் ரிச் கேர்ல்ஸ் ரைட்? ஏதாவது வேணும்னு கேட்டிருப்பாங்க, அதுக்கு ஆப்போசிட்டா எதாச்சும் சொல்லியிருப்பாங்க. உடனே கோவம் வந்திருக்கும். நான் சால்வ் பண்ணிக்கறேன். யு டோண்ட் வர்ரி.” என்று நடாஷாவை சமாதானம் செய்தாள்.
“டு யூ வாண்ட் மீ டு கம் ராகா? எனக்கு நைட் ௧௦ ஒ க்ளாக் ஃப்ளைட்.” என்று நடாஷா வினவினாள். நடாஷாவின் தங்கைக்கு மும்பையில் மருத்துவ சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதனால் நடாஷா அன்றைய இரவு மும்பை செல்கிறாள் என்று ராகாவிற்குத் தெரியும். இந்த நேரத்தில் நடாஷாவை ஏன் தொந்தவரவு செய்ய வேண்டும்?
“நோ நட்ஸ். யு கேரி ஆன். நான் சமாளிச்சுக்கறேன். ஐ வில் அப்டேட் ஒன்ஸ் ஐ ரீச் தேர்” என்று சொல்லி மிருதுவைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள்.
மைக்கில் சொன்ன அடையாளத்தில் ஆட்டோ நின்ற போது, மைக்கில் அந்த பெரிய வீட்டின் வெளியே கேட்டின் அருகே தான் நின்றிருந்தான். ஆட்டோவிலிருந்து இறங்கிய ராகாவைக் கண்டதும் கையில் பிடித்திருந்த சிகரெட்டை தூர ஏறிந்துவிட்டு அருகே வந்தான்.
“என்னாச்சு மைக்? என்ன பிரச்சனை மிருதுளாக்கு? கல்யாணம் வேணாம்னு சொல்லற அளவுக்கு என்னவாம்?”
“ராகா என்னன்னு தெரியலை. இன்னும் ரெண்டு நாள்ல மேகஜீன் இண்டர்வியூ இருக்குல, அதனால நீ சொன்ன மாதிரி அதைப் பத்தி வென்னியூ, இண்டர்வியூ கொஸ்டீன்ஸ்னு டிஸ்கஸ் பண்ண மிருது மேம்மை மீட் பண்ண வந்தேன். அவங்க வீட்டுக்கு வர சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா இந்த ரெண்டு தீயசக்திகளும் அவங்க ரூமை தட்டிட்டு நிக்குது!”
“என்ன பிரச்சனைன்னு தெரியலையா? நீ தீப்தி இல்ல மின்னிகிட்ட கேட்டியா?”
“கேட்டேன் ராகா! அவங்களுக்கும் தெரியலை. அவங்களும் நான் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்திருக்காங்க. ஆஃப்டர் நூன் லன்சுக்கு மிருது மேம் சத்யா சார் கூட வெளிய போயிருங்காங்க போல. தீப்தி அதை மட்டும் தான் சொன்னா” என்றான் மைக்கில் கவலையுடன்.
சத்யாவின் பெயரைக் கேட்டதும் சில நொடி ராகாவின் மனம் நின்று துடித்தது. “ஒருவேளை சத்யா இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்ல. எனக்கு உன்னை பிடிக்கல மிருது. வேற ஒரு பொண்ணைப் பிடிக்குதுன்னு சொல்லியிருப்பானோ! அதனால சண்டை போட்டுட்டு மிருது வந்திருக்கலாமோ” என்று தறி கெட்ட மனது ஒரு நொடியில் ஓராயிரம் மைல் அளவிற்கான எண்ணங்களை மனதிற்குள் புகுத்தியிருந்தது.
தான் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்திருந்தும், “ஒரு வேளை அப்படியிருந்தால்” என்ற எண்ணத்தை அவள் மனதிலிருந்து நீக்க இயலவில்லை. நமது வார்த்தைகளும் செயல்களும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே சிரமம். இதில் எண்ணங்களை எப்படி தோன்றாமல் இருக்கச் செய்ய? அப்படி உருவாகும் கற்பனைகளை நினைத்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ந்து போகும் மனதை எப்படி கட்டுப்படுத்த?
தன் மனதில் உருவான கற்பனையை வெகுவாக முயன்று பின்னுக்குத் தள்ளிய ராகா, “சோ, மிஸ்டர். சத்யா கூட மிருது லன்ச் போயிருக்காங்க. அங்க அவர் ஏதோ சொல்லப் போயி இவங்க ரியாக்ட் பண்ணறாங்க.”
“ஆமா, இப்போ தான் மிருதுளா மேமோட அப்பா ராஜமாணிக்கம் வெளிய எங்கையோ போயிட்டு வீட்டுக்கு வந்தார்.”
“மிருதுவோட அம்மா? அவங்க வீட்டில இல்லையா”
“அவங்க ஏதோ லன்ச் மீட்டிங்க்னு வெளிய போயிருக்கறதா வீட்டு வேலைக்காரம்மா சொன்னாங்க. மேமோட அம்மா இன்னும் வீட்டுக்கு வரலை. அவங்க அப்பா கார் இப்போ தான் உள்ள போச்சு” என்று தகவல் சொல்லி முடித்தான் மைக்கில்.
ராகாவும், மைக்கிலும் மிருதுவின் வீட்டிற்குச் செல்ல, ஃபுட்பால்கோர்டில் பாதி அளவு இருந்த அந்த பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த ஆள் விழுங்கும் சோஃபாவில் ராஜமாணிக்கம் அமர்ந்திருக்க, அவர் தோளில் சாய்ந்து கொண்டு மிருது தேம்பிக் கொண்டிருந்தாள்.
மிருதுவின் பக்கவாட்டு இருக்கையில் தீப்தியும் மின்னியும் அமர்ந்திருந்தனர். இவர்கள் உள்ளே சென்ற சமயம் ராஜமாணிக்கம் தன் கைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.
“நீங்க இதை பெரியவங்ககிட்ட கலந்து பேசிட்டு தான் ஒரு முடிவெடுத்திருக்கணும். நீங்களா எப்படி இந்த முடிவுக்கு வரலாம்? மிருது கோவப்படறதில தப்பில்ல” என்று சொல்லியது ராகாவிற்குக் கேட்டது. அவர் பேச்சில் இருந்தே, அவர் சத்யாவுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
ராஜமாணிக்கத்தின் தொனி சற்றே ஓங்கியிருப்பது பார்த்தால், சத்யா தான் ஏதோ பிரச்சனை செய்திருக்க வேண்டும். இத்தனை கோபம் கொண்டு மிருது இத்திருமணம் வேண்டாம் என்று எண்ணும் அளவிற்கு என்னவாக இருக்கும்? என்று யோசிக்க யோசிக்க ராகாவின் மனதோ,”நிச்சயமாக அவன் உன்னை விரும்புகிறேன், அதனால் மிருதுவை திருமணம் செய்ய மாட்டேன்” என்று சொல்லியிருக்கக் கூடுமோ என்றே சொல்லியது.
“இல்ல, அப்படியிருந்தா, இந்த மிருது என்னைப் பார்த்ததும் அமைதியா இருந்திருப்பாளா? பேய் படத்தில வர்ற க்ளைமேக்ஸ் சீன் மாதிரி, சூலாயுதத்தை வச்சு ஆடு ஆடுன்னு ஆடி, கடைசில பேயான என் நெஞ்சில குத்தியிருக்க மாட்டா! சே, என்ன நான் என்னை கற்பனையில கூட நல்ல கேரக்டரா யோசிக்க மாட்டேங்கறேன். நான் என்னை பேய் பிசாசுன்னே உசத்தியா நினைச்சுக்கறேன்” என்று எண்ணியவள், அங்கே நடப்பவற்றை மீண்டும் கவனித்தாள்.
ராஜமாணிக்கம், தன் மகளின் தலையை வருடிக் கொண்டே பேசினார். “மிருதும்மா, சத்யா தம்பி இங்க தான் வந்துட்டு இருக்கறாம். இன்னும் பத்து நிமிஷத்தில வந்துடுவாரு. அவர் கிட்ட பக்குவமா அப்பா பேசிக்கறேன் சரியா.”
“ப்பா, நீங்களே சொல்லுங்க! நான் ஆசைப்பட்டது ரொம்ப ரொம்ப பேசிக் விஷயம் தானே! அதுக்கு அவளோ பேசறார்ப்பா. எனக்கு அவங்க பேசினதில பயம் வந்துருச்சு. இப்போவே இவளோ டாமினேட் பண்ணறாங்க என்னைன்னு.”
“அப்படி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதம்மா. சத்யா நீ சொல்லற அளவுக்கு மோசமானவர் இல்ல. அதான் இங்க வராங்கல்ல, நான் பேசற விதமா பேசிக்கறேன். சரியா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ராஜமாணிக்கம் பேசிய இவ்வளவு விஷயத்தில், “சத்யா தம்பி இன்னும் பத்து நிமிஷத்தில இங்க வருவார்” என்ற சொற்களே திரும்பத் திரும்ப ராகாவின் காதுகளில் எதிரொலித்தது. “தலைமுடியை கலைஞ்சிருக்கான்னு தெரியலையே! பர்ஸ்ல லிப்க்ளாஸ் இருக்கு. வாஷ்ரூம் போய் போட்டுக்கணும்” என்று தோன்றியது.
மறுகணமே, “அடச்சீ! நீ திருந்தவே மாட்டியா? அந்த பொண்ணு கல்யாணம் வேணாம்னு ஒப்பாரி வச்சுட்டு இருக்கு. இவளுக்கு இவ பிரச்சனை. நீ வாஷ்ரூம்லாம் போய் மேக்கப் போட வேண்டாம். இப்படி எண்ணை வடிஞ்சுட்டே நில்லு. அப்போ தான் அவனுக்கு உன்னை பிடிக்காம போகும். உன்கூட பேசறது நிக்கும்” என்று பலவந்தமாய் சொல்லிக் கொண்டாள்.
இதற்குள் தீப்தி, ராகாவை ஏறிட, கண்களாலேயே தீப்தியை வெளியே அழைத்துச் சென்ற ராகா, “தீப்தி மேம் என்ன பிராப்ளம்? ஏன் மிருது மேம் அப்செட்டா இருக்காங்க?” என்று வினவினாள்.
“எனக்கு சரியா தெரியலை ராகா! மிருது அப்பா வந்ததும் ரூமை தட்டினாரு. அவர் வாய்ஸ் கேட்டு மிருது ரூமைத் திறந்தா, அவர் உள்ள போயிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு மிருதுவை கூட்டிட்டு ஹாலுக்கு வந்துட்டாரு. அவளோ தான் எனக்கும் தெரியும்” என்றாள். அவள் முகமும் கொஞ்சம் கருத்துதான் போயிருந்தது.
வெளியே தீப்தியுடன் நின்றிருந்த வேளையில் சத்யாவின் ஆடி கார் மிருதுவின் வீட்டினுள் நுழைந்தது. வாயிலின் அருகே வளர்ந்திருந்த போகன்விலா கொடிகளின் கீழே நின்றிருந்த ராகாவையும், தீப்தியையும் ஒரு கண் பார்த்துவிட்டு விடுவிடுவென வீட்டினுள் நுழைந்தான் சத்யா.
சத்யாவும் மிருதுவும் சேர்ந்து தங்கள் சொந்த பிரச்சனையைப் பற்றி பேசப் போகிறார்கள். அவர்கள் திருமணம் குறித்து விவாதிக்கப் போகும் தம்பதிகள் என்ற எண்ணம் வரவும் ராகாவினால் அங்கே நிற்க இயலவில்லை. சத்யா மிருதுவுக்கானவன், அவளுடன் பேச, அவளைச் சமாதானம் செய்ய அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான். இங்கே நானானால் கல்யாணம் நின்று போய் விடுமோ என்ற நப்பாசை கொண்டு ஆவலுடன் நிற்கிறேன். சே! என்ன மாதிரி பெண் நான். இன்னொரு பெண்ணின் திருமணம் நின்று போய்விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு நான் கெட்டவளா? பிறகு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? என்று பதைபதைத்தது அவள் இதயம்.
“மைக், நாம கிளம்பலாமா! அவங்க ஃபேமிலியா, பர்சனலா ஏதாச்சும் பேசுவாங்க. நாம எதுக்கு இங்க வெயிட் பண்ணிகிட்டு. நாம போலாம். அப்பறமா என்ன ஏதுன்னு நாளைக்கு மிருது மேமை மீட் பண்ணி பேசிக்கலாம்” என்று அங்கிருந்து சென்று விடும் ஆர்வம் மேலோங்க ராகா மைக்கிலிடம் கூறினாள்.
மைக்கில் பதில் சொல்லும் முன்னர், முந்திக் கொண்ட தீப்தி, “இல்ல, இல்ல, ராகா, நீங்க இருங்க. மிருது அம்மா வேற வீட்டில இல்ல. மிருதுவை என்னால சமாதனாம் செய்ய முடியாது. நானோ மின்னியோ எது சொன்னாலும் அவ காது குடுத்து கேட்க மாட்டா.”
“அப்படியில்ல தீப்தி! நீங்க மிருது மேமோட ஃப்ரெண்ட்ஸ். அவங்க பர்சனல் விஷயம் எல்லாமே தெரிஞ்சவங்க. நாங்க இப்போ இங்க இருக்கணும்னு அவசியமில்லையே தீப்தி!”
“அப்படியில்ல ராகா. மிருதுவுக்கு உங்க ஷ்ருஷ்டீஸ் மேல ரொம்ப மரியாதை. உங்களை மிருதுவுக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி சொல்லிட்டே இருப்பா, உங்க ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு! நீ உங்களை அழகா கேரி பண்ணறீங்கன்னு. சோ! நீங்க சொன்னா ஈஸியா கேட்பா. ப்ளீஸ் இருங்க ராகா. போகாதீங்க. எப்படியும் என்ன பிரச்சனையா இருந்தாலும் அது உங்களுக்கும் தெரியத்தானே போகுது!” என்று தன் மன நிம்மதிக்காக அங்கிருந்து நழுவி விடலாம் என்று எண்ணியிருந்த ராகாவை தீப்தி தடுத்துவிட்டாள்.
வேறு வழியின்றி சத்யாவைப் பின் தொடர்ந்து ராகாவும் தீப்தியும் அதிகம் சப்திக்காமல் உள்ளே மீண்டும் வந்துவிட்டனர். சத்யாவைக் கண்ட ராஜமாணிக்கம், “வாங்க தம்பி” என்று சம்பிரதாயமாக வரவேற்றார். ஆனால் சோஃபாவில் இருந்து எழுந்துகொள்ளவில்லை.
சத்யாவைக் கண்டதும் மிருது வேகமாக எழுந்து உள்ளே செல்ல எத்தனிக்க, “மிருது நீ எங்கம்மா போற! நீயும் உட்காரு! பேசலாம்! சத்யா தம்பிகிட்ட என்னன்னு கேட்கலாம்” என்று ராஜமாணிக்கம் சொல்ல, ராஜமாணிக்கத்தின் சொற்களை மிருது மதிக்காமல் உள்ளே சென்றுவிடுவாள் என்றே ராகா பெருதும் எதிர்பார்க்க, மிருது தந்தையின் பேச்சிற்கு உடன் பட்டு அங்கேயே அமர்ந்தாள்.
“சே, இந்த டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் பரவாயில்லையே, அப்பா சொன்னதும் அமைதியா உட்கார்ந்துட்டாளே! கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருந்திருந்தா குற்றம் குறை சொல்ல நல்லா இருந்திருக்கும். இப்போ இவளைத் திட்டறது என்ன, தப்பா நினைக்கக் கூட முடியாதே! இதுல வேற இவளுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம். கடவுளே!” என்று நினைத்த ராகா, ராஜமாணிக்கம் பேசுவதை கவனிக்கலானாள்.
“சத்யா தம்பி! நீங்க நிச்சயதார்த்தம் வேணாம்னு சொல்லறதா மிருது சொல்லறா? என்ன தம்பி இதெல்லாம்? நீங்க அப்படித்தான் அபிப்பிராயப்படறீங்களா?” என்று நேரடியாக சத்யாவிடம் வினவினார்.
“என்னது? சத்யா நிச்சயதார்த்தம் வேணாம்னு சொல்லறானா? அப்போ நான் நினைச்சது சரிதானா” என்ற நப்பாசையுடன் ராகாவின் மனது நினைக்க,
“ஐய்யோ, அப்போ நமக்கு வெறும் வெட்டிங் காஸ்ட் மட்டும் தான் கிடைக்குமா? எங்கேஜ்மெண்ட் அமவுண்ட் வராதா” என்று மைக்கிலின் வாய் உளற, அவனைச் சுட்டெரிப்பது போல உருத்து விழித்தாள் ராகா.
ராகாவின் முறைப்பைக் கண்டு மைக்கில் அமைதியாக மேலே கவனித்தான். ராஜமாணிக்கத்தின் பால் சற்றே குனிந்து அமர்ந்திருந்த சத்யா, மிருதுவை ஒரு கண் பார்த்துவிட்டு அதன் பிறகே பேசினான்.
“அங்கிள், மிருது உங்ககிட்ட என்ன கண்வே பண்ணான்னு எனக்கு தெரியலை. பட், நான் நிச்சயதார்த்தம் வேணாம்னு சொல்லலை” என்று சத்யா சொல்லி முடிப்பதற்குள், “இல்லை நீங்க, நெக்ஸ்ட் மந்த எண்கேஜ்மெண்ட் வேண்டாம்னு தான் சொன்னீங்க” என்று கீச்சிட்டுப் பேசினாள் மிருதுளா கொஞ்சமும் குரலைத் தழைத்துக் கொள்ளாமல்.
“மெதுவா பேசும்மா” என்று கூட ராஜமாணிக்கம் தன் மகளிடம் சொல்லவில்லை. மிருதுவின் பேச்சைக் கேட்ட சத்யா, கண்களை சற்றே உருட்டினான். ஆனாலும் கொஞ்சமும் தன் குரலில் திடத்தை குறைக்காமல் ராஜமாணிக்கத்திடம் பேசினான்.
“அங்கிள் நான் சொல்லறதை ஒரு ரெண்டு நிமிஷம் கேட்டுட்டு நீங்க டிசைட் பண்ணிக்கோங்க. என் அக்கா ஹரிணி யு.எஸ்ல இருக்கால, இப்போ மூணு மாசம் முழுகாம இருக்கா! கொஞ்சம் வீக்கா வேற இருக்கா! அடுத்த மாசம் எண்கேஜ்மெண்ட் வச்சா அவளால டிராவல் பண்ணி வர முடியாது. அட்வைசபிள் இல்லன்னு டாக்டர்ஸ் சொல்லறாங்க” என்று சத்யா பேசி முடிக்கும் முன்னரே,
“அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்? அவங்களுக்காக என் நிச்சயதார்த்தத்தை கேன்சல் பண்ணறது எப்படிப்பா நியாயம்?” என்று திரும்ப கிரீச்சிட்டாள் மிருது. ராஜமாணிக்கம் ஏதேனும் சொல்வார் என்று சத்யா அவரை ஏறிட, அவரோ தன் பெண்ணைக் கண்டிப்பது போலவோ, “பொறுமையா பேசும்மா” என்று அறிவுரை சொல்வது போல அறிகுறிகள் எதுவும் காட்டாது போக, சத்யா ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“அங்கிள் மிருது சொல்லற மாதிரி, நான் எண்கேஜ்மெண்ட் வேணாம் சொல்லலை. அடுத்த மாசமே வேண்டாம். கல்யாணத்துக்கு எப்படியும் எட்டு மாசம் இருக்கு. நாம எண்கேஜ்மெண்ட்டை கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி வச்சுக்கலாம்னு சொன்னேன். அதுக்குள்ள அக்காவும் இந்தியா வந்திடுவா” என்று சத்யா பேசிக் கொண்டிருக்கும் போதே!
“அப்பா, நான் சொல்லறதையும் கொஞ்சம் கேளுங்க. நான் மும்பை சப்யசாட்சி ஷோரூம்ல எண்கேஜ்மெண்ட் பர்சேஸுக்கு என்னோட ஃப்ரெண்ட் மூலமா நெக்ஸ்ட் வீக் அப்பாயீண்ட்மெண்ட் வாங்கி வச்சுட்டேன். அங்க கேன்சல் பண்ணிட்டா நெக்ஸ்ட் ஸ்லாட் கிடைக்க ஆறு மாசம் ஆகும். அப்பறம் அவங்க நான் சூஸ் பண்ண டிரஸ்ஸை ஆல்டர் பண்ணி நம்ம கையில குடுக்க லேட் ஆக்கிடுவாங்க.” என்று மிருது பேசியது சம்பந்தமில்லாமல் பேசியது போலவே சத்யாவிற்குத் தோன்றியது.
“எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறாள்?” என்று நினைத்தவன், தன் குரலைக் கொஞ்சம் கூட்டி, “உன்னை டிரஸ் பர்ச்சேஸ் பண்ண வேண்டாம்னு நான் எப்போ மிருது சொன்னேன். நீ ப்ளான் பண்ண மாதிரி, அப்பாயிண்மெண்ட் வாங்கின டேட்ல தாராளமா பர்சேஸ் பண்ணு மிருது! உன்னை யார் தடுத்தா இப்போ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஐய்யோ! உங்களுக்கு கொஞ்சம் கூட நான் சொல்லற வர்றதே புரியலை. சப்யசாட்சில சீசனுக்கு சீசன் கலர்ஸ், பேட்டர்ன் மாறும். ஆறு மாசத்துக்கு முன்னாடி எடுக்கற டிரஸ் அவுட் ஆஃப் ஃபேஷனா ஆகிடும். அதை எப்படி நான் எண்கேஜ்மெண்டுக்கு யூஸ் பண்ணறது?” என்று மிருது கத்தலாய் கீச்சிட, இம்முறை கொஞ்சம் போல ராஜமாணிக்கம் தன் மகளைத் திரும்பி மட்டும் பார்த்தார். மகளை அடக்குகிறாராம்.
ஆனால் அந்த இலேசான பார்வைக்கே மிருது எகிறத் துவங்கினாள்.
“ப்பா, என்னை எதுக்கு பார்க்கறீங்க! சத்யாவுக்கு புரியவைங்க. திஸ் இஸ் இம்பார்டெண்ட் டு மீ! ஆறு மாசத்துக்கு முன்னாடி எடுத்த அவுட் ஆஃப் ஃபேஷன் டிரெஸ்ஸை எப்படி நான் எண்கேஜ்மெண்டுக்கு போட முடியும்? அதனால எண்கேஜ்மெண்ட் நாம ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ண நாள்ல தான் நடக்கணும். இதுகூட அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்காத சத்யா கூட என்னால எப்படி வாழ முடியும்? எனக்கு இந்த கல்யாணம் வேணாம்” என்று திரும்ப கிளியாய் மாறி பேசியதையே பேச,
சத்யாவிற்கு தலை விண்ணென்று தெறித்தது. “அம்மாடி! இதுகிட்ட எப்படிறா காலம் தள்ளறது! என் அக்கா எண்கேஜ்மெண்டுக்கு வர்றது முக்கியமா தெரியலை. ஆனா, ஆறு மாசம் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடுமாம் அந்த டிரஸ்ஸு. அது அவளோ முக்கியமாம்?” என்ற குற்றம் சாட்டும் பார்வையுடன் தன் வருங்கால மாமனாரை ஏறிட்டான்.
ராஜமாணிக்கமும் தன் இருக்கையில் அமர்ந்தவாறே சற்றே நெழிந்தார். அது தான் அவர் காட்டிய ஆகப்பெரிய எதிர்ப்பு. மிருதுவைக் கடிந்து திட்டுங்கள் என்று சத்யா எதிர்பார்க்கவில்லை. கோபமாகக் கூட பேச வேண்டாம். அமைதியாக வேணும் மகளுக்கு புரியவைக்க எத்தனித்திருக்கலாம்.
அமைதியாக கையைப் பிசைந்து கொண்டு அமர்ந்திருந்த ராஜமாணிக்கத்தின் பின்னால், ரொம்பவும் தள்ளி ஓரமாக நின்றிருந்த ராகாவின் பால் சத்யாவின் கண்கள் சென்று மீண்டன.
“நீயாவது ஏதாவது சொல்லேன். ஏதாவது சொல்லி, இந்தப் பெண்ணிற்குப் புரியவையேன். உனக்கேனும் என் வலி புரிகிறதா? என் அன்னை உயிருடன் இல்லை. என் அன்னையின் ஸ்தானத்தில் இருப்பவள் என் அக்கா. அவள் என் நிச்சயதார்த்தத்திற்கு வர வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? இவர்களுக்கு இது புரியவில்லையா? இல்லை நான் தான் அதிகமாக ஆசைப்படுகிறேனா? உனக்கு புரிகிறதல்லவா?”
“நான் சொல்லாமலே உனக்கு நான் சொல்ல வருவது புரியும் தானே! எனக்கு ஒரு சிக்கல் என்றால் அதை தீர்த்து வைக்க நீ முயற்சிப்பாய் தானே! என்னை இலகுவாக்க அன்று என்னைத் தேடி ஓடி வந்தாயே! ஏதாவது சொல்லேன் ராகா!” என்ற ஏக்கம் அந்தக் கண்களில் தொக்கி நிக்க, ராகா தன்னையும் அறியாமல் மிருதுவின் அருகே சென்றிருந்தாள்.
ராகாவை தன் அருகாமையில் உணர்ந்த மிருது, கொஞ்சம் போல் உற்சாகமானாள். “ப்ளீஸ் ராகா! நீங்க இதே ஃபீல்டில இருக்கீங்க! உங்களுக்கு நான் சொல்லறது புரியுது தானே! ப்ளீஸ் நீங்க சத்யாகிட்ட பேசுங்க. அவங்களுக்குப் புரிய வைங்க. ஆறு மாசம் அஃபுட் ஆஃப் ஃபேஷன் ஆன டிரஸ்ஸை எப்படி நான் போட்டுக்க முடியும்?” என்று பாட்டாய் பாடத் துவங்க, ராகா மிருதுவின் தோள்களில் கைவைத்துச் சாந்தப்படுத்தினாள்.
“மிருது! ஐ அண்டர் ஸ்டேண்ட். சரியா! உங்க ப்ராப்ளம் என்ன? இப்போ ஸ்லாட் கேன்சல் பண்ணா, அடுத்த ஸ்லாட் ஆறு மாசத்துக்கு அப்பறம் தான் ஓபன் ஆகும். அதானே! நீங்க கவலைபடாதீங்க. உங்களுக்கு எப்போ எண்கேஜ்மெண்டோ அதுக்கு ஒன் மந்த் முன்னாடி சப்யசாட்சில அப்பாயிண்மெண்ட் வாங்கி குடுக்கறது எங்க ஷ்ருஷ்டீஸ்ஸோட பொறுப்பு.” என்று கூற, மிருதுவின் முகம் வாடிப் போயிற்று.
ராகாவும் தன் எண்கேஜ்மெண்ட்டை தள்ளிப் போடவே பார்க்கிறாள் என்ற எண்ணம் வரவும் மிருது பதற்றம் கொண்டாள். அவள் படபடப்பை உணர்ந்தாற் போல ராகா, தன் கைப்பேசியில் உடனே நடாஷாவின் இண்ஸ்டா ஐடியினை திறந்து அந்தப் புகைப்படத்தைக் காட்டினாள்.
“இதைப் பாருங்க!இவங்க யாருன்னு தெரியுதா?” என ராகா காட்டிய புகைப்படத்தில் நடாஷாவுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் மற்றொரு நவநாகரீகக் குட்டை முடி மங்கையை.
“திஸ் இஸ். அவந்திகா! நடாஷாவோட சொந்த கசின். இவங்க சப்யசாட்சியோட மும்பை ஷோரூம் மேனேஜர். சோ, நீங்க எப்போ எண்கேஜ்மெண்ட் வச்சாலும், உங்களுக்கு அவந்தி மூலமா நடாஷா அப்பாயிண்மெண்ட் வாங்கிடுவாங்க. இட்ஸ் சோ ஈஸி யு நோ!”
“நிஜம்மாவா சொல்லறீங்க? எண்கேஜ்மெண்ட் தள்ளிப் போட்டறதுனால எந்த பிராப்ளமும் வராதா”
“நீங்க நம்பலைன்னா நாளைக்கு நடாஷாவை விட்டு, அவந்தி மேமை பேச வைக்கறேன் போதுமா! இட்ஸ் எ ப்ராமிஸ். அதுவுமில்லாம, அவந்தி மூலமா நாம இந்த சீசன் பேட்டர்ன் மட்டும் இல்ல, நெக்ஸ்ட் சீசன் பேட்டர்ன் கூட வியூ பண்ணி பார்க்கலாம். இது நார்மல் கஸ்டமர்ஸ்க்கு காட்ட மாட்டாங்க. ஒன்லி ப்ரிவிலெட்ஜ்ட். ஆலியா பட், அனுஷ்கா ஷர்மா இவங்க போட்டிருந்த பேட்டர்ன் எல்லாமே அந்த மாதிரி க்ளாஸிஃபைட் தான். வேற பீஸ் எங்கையும் இருக்காது. யூனிக் டிசைன்ஸா இருக்கும்” என்று ராகா பேசப் பேச மிருதுவின் முகம் தெளிவானது.
“தேங்கியூ ராகா! ஐ டிரஸ்ட் யூ! ப்ளீஸ் மேக் இட் வர்க்!” என்று உடனே சிறுபிள்ளையாய் மாறி ராகாவை ஒரு கணம் கட்டிக் கொண்டு விடுவித்தாள் மிருது. ராகா பேசியதும், மனம் மாறிவிட்ட மகளை ஆதுரமாகத் தலையில் தட்டிவிட்டு, “என் வேலை முடிந்தது” என்பது போல சத்யாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டார் ராஜமாணிக்கம்.
“டிட் யூ ஹியர் திஸ்! நடாஷா மேமோட கசினாம் அவந்திகா! அப்போ இது வரைக்கும் யாருமே போடாத புது பேட்டர்ன்ல என் எண்கேஜ்மெண்ட் டிரஸ் இருக்கப்போகுது!”என்று துள்ளிய மிருது, தீப்தியையும் மின்னியையும் கட்டிக் கொண்டே, “அப்படித் தானே ராகா!” என்று ராகாவிடம் வினவினாள்.
“எஸ். கண்டிப்பா மிருது மேம்” என்று ராகாவும் ஆமோதிக்க, மிருது அழகாய் தலை சாய்த்துப் புன்னகைத்தாள். மிருதுவுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே, சத்யா எங்கே என்று நோட்டம் விட்ட ராகாவிற்கு, ராஜமாணிக்கம் வெளியேறிய போதே சத்யாவும் அவருடன் சென்று விட்டது புரிந்தது. அன்றைக்குச் சத்தம் வராமல், “தேங்கியூ” என்று சொன்னது எவ்வளவு அழகாய் மனத்திருப்தியாய் இருந்தது.
இன்றானால் தன் காரியம் முடிந்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு நன்றி கூடச் சொல்லாமல் சென்றுவிட்டானே என்று மனம் விம்ம, “சரி! இது தானே என் வேலை.! இதற்குத் தானே அத்தனை லகரங்கள் செலவு செய்கின்றனர். இதற்கு நன்றி வேறு எதிர்பார்ப்பானேன்” என மனதை தேற்றிக் கொண்டாள்.
error: Content is protected !!