Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை – 4

குளித்து வந்ததும் மிகவும் புத்துணர்வாக இருந்தது ஈரக்கூந்தலை துவட்டிக்கொண்டே ஜன்னலின் அருகில் வந்து நின்றாள், பின்பக்கம் தோட்டத்தில் நின்றிருந்தான் சேனாபதி, குளித்து வீட்டில் அணியும் ஷாட்ஸ் டி ஷர்ட் மாற்றியிருந்தான்.

 அவனின் அருகில் அவனுடைய செல்லப்பிராணிகள், அவற்றின் தாடையை பிடித்துக் கொஞ்சிக்கொண்டிருந்தான் “அய்யா சேனா சாப்பிட வா” என்ற அன்னையின் குரலில் திரும்பியவன் விழிகள் மேலே ஜன்னலின் அருகில் நின்றவள் மீது படிந்தது.

 அவள் பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் வீட்டிற்குள் நடந்தான், எப்படியாவது நேரத்தோடு இவளை வீட்டில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று தனக்கு தானே கட்டளை இட்டுக்கொண்டான்.

 வண்டியைச் சரிசெய்து காலை உணவையும் முடித்துத் திரும்பி வருகையில் ஆங்காங்கே பரிசோதனைகள் நடக்க ஊர்ந்து ஊர்ந்து நத்தம் வந்து சேரவே மணி மூன்றை கடந்திருந்தது.



Advertisement

 அப்பொழுதுதான் அவனுக்குத் தோன்றியது எப்படியும் நத்தம் கடந்துதான் காரைக்குடி செல்ல வேண்டும் முன்பானால் அப்படியே அவளை வீட்டில் விட்டு அவர்கள் குன்னூர் போயிருப்பார்கள், இப்பொழுது அனைவருமே சோர்ந்திருக்க வீட்டிற்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்து சென்றால் என்ன என்று தோன்றியது.

 ‘அவளுக்கு அதில் சம்மதமா’ என்பதை கேட்கவேண்டுமே என்று எண்ணியவன் “உங்க வீட்டுக்கு எங்க ஊரைத் தாண்டித்தான் போகணும், எங்க வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமா இல்ல நேரா உங்க வீட்டுக்குப் போகணுமா” என்க.

 ‘தன்னிடமா கேட்க்கிறான்’ அன்று அதிசயமாக அவனைப் பார்த்தாள் திலோத்தமா, அவனுடைய வீட்டிற்கு அழைக்கிறான் இதைவிட பெரிய சந்தோசம் என்ன உள்ளது மனதின் ஆர்பரிப்பை வெளியே காட்டாமல் “உங்க வீட்டுக்கே போகலாம்” என்றாள்.

Advertisement

 “உங்க வீட்ல சொல்லிடு மறுபடியும் என்னால எல்லார்க்கும் விளக்கம் சொல்ல முடியாது” என்றான்.

Advertisement

 அவனை நிமிர்ந்து பார்த்தவள் “உங்கள கேள்வி கேட்ட யாருமே எனக்காக அங்க காத்திருக்க மாட்டாங்க, அந்த வீட்டுலயும் நான் ஒரு விருந்தாளிதான்” என்றவள் குரலில் இருந்த வலியை அவனால் உணரமுடிந்தது.

 அமைதியாக வந்துகொண்டிருந்த கதிரவன் அவள் மூடை மாற்றும் விதமாக “ஆமா மாப்பிள்ளை என்ன பண்றார், பாக்க எப்படி இருப்பார்” என்று கேட்க.

 “யாருக்கு தெரியும்?” என்றாள் அவள்.

Advertisement

 “யாருக்கு தெரியுமா! உன்னைதான பொண்ணு பாக்க வராங்க” என்றான் அவளைத் திரும்பிப் பார்த்து, அவள் சாலையில் பார்வையை பதித்தாள் சொல்ல விரும்பவில்லைபோல என்று எண்ணியவன் முன்னில் திரும்பி அமர.

 “தாத்தா சொத்து எல்லாத்தயும் என் பேர்ல எழுதியிருக்கார், நான் கல்யாணம் செஞ்சுகிட்டு நானும் என் கணவனும் ஒண்ணா சேந்து கையெழுத்து போட்டா மட்டும்தான் அவங்களுக்கு சொத்து போகும்”.

 “என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறவங்க சொத்தை ஏன் குடுக்கணும் நாமளே வெச்சுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்ண? அந்தப் பயம் அவங்களுக்கு இருக்கு அதனால அவங்களுக்கு சாதகமா பேசுற நல்லா தெரிஞ்ச குடும்பத்து பசங்கள மட்டுந்தான் எனக்கு மாப்பிள்ளையா பாப்பாங்க”.

 “தாலி கட்டின நிமிஷத்துல இருந்த இரு துருவமா இருந்த என்னைப் பெத்தவங்க இந்த ஒரு விஷயத்துல மட்டும் ஒரே மாதிரி யோசிச்சு ஒண்ணா முடிவெடுக்குறாங்க” என்றாள் ஒரு கசந்த முறுவலுடன்.

 ‘அறிவுகெட்டவனே எதுக்குடா கேட்ட பாவம் அந்தப் புள்ளய கஷ்டப்படுத்திட்ட’ என்று தன்னையே திட்டுக்கொண்டான் கதிரவன்.

 “சாரி மா நான் சும்மா கேக்கப்போய் உன்ன கஷ்டப்படுத்திட்டேன்” என்றான் உண்மையான வருத்தத்தோடு.

 “அப்படிலாம் இல்லன்னா எனக்குப் பழகிடுச்சு” என்றாள் மீண்டும் வெளியில் பார்வை பதித்து.       

‘மகளுக்கு இத்தனை வேகத்தில் திருமணம் முடிக்க நினைப்பது இதற்க்காகத்தானா’  என்ற யோசனையோடு அவளைப் பார்த்திருந்தான் சேனாபதி.

 வீட்டிற்கு அழைத்துத் தாயிடம் தாங்கள் வருவதை கூறியிருந்தான் சேனாபதி,   மதியம் போல் வீட்டிற்கு சென்றுவிடுவர் அப்பழுதே  மதிய  உணவுக்கான வேலையைத் தொடங்கிவிட்டார்  வனின் தாய் வெண்மதி.

 ஊருக்குள் நுழைந்து அவர்களின் வீடுநோக்கி சென்றது வண்டி, பிரதான சாலையின் வலது பக்கம் வரும் கிளைச்சாலையில் நுழைந்தால் இந்த வீடு மாத்திரம் தனியாக இருந்தது,  நல்ல பெரிய வீடு வயலை ஒட்டி ஒரு பண்ணை  வீட்டின் அணைத்து  அம்சங்களோடு இருந்தது, வண்டி உள்ளே நுழைந்தவுடன் கேட்ட குறைப்பு சத்தத்தில் திலோத்தமாவிற்கு ஈரக்குலையே நடுங்கி விட்டது.

நான்கு கால் பாய்ச்சலில் ஓடிவந்து வண்டியை வட்டமிட்டது அந்த வீட்டின் காவல் வீரர்கள்! “டேய் சரி சரி வந்துட்டேன் போங்க போங்க பின்னாடி போ அப்புறம் வரேன்” என்று அவன் அவைகளின் தலையில் தடவி பேசிக்கொண்டிருக்க, கண்ணாடி வழியே தெரிந்த திலோத்தமாவில் கூர்விழிகளை பதித்து ‘இறங்கித்தான் பாரேன்’ என்ற மிரட்டலோடு நின்றது அனைத்தும்.

 “போங்கடா உள்ளே போங்க அவங்க நம்ம விருந்தாளி பயமுறுத்தக் கூடாது போங்க” என்றதும் சாதுவாக அனைத்தும் திரும்பிச் சென்றது.

 என்றாலும் பயந்து கீழிறங்காமல் அவள் அமர்ந்திருக்க, சத்தம் கேட்டு வெளியில் வந்த வெண்மதி வண்டியின் அருகில் வந்து “வாம்மா அவனுங்க ஒன்னும் பண்ண மாட்டானுங்க, இவன் ஒருதடவை சொல்லிட்டா அப்புறம் மீர மாட்டானுங்க வா” என்று கதவைத் திறந்துகொடுத்தார்.

 தயங்கி தயங்கி இறங்கியவள் வெண்மதியின் கையைப் பற்றிக்கொண்டாள் “ப்ளீஸ் ஆண்ட்டி பயமா இருக்கு” என்க.

 “தைரியமா வா ஒன்னும் ஆகாது” என்றவர் அவள் கைப்பிடித்து அழைத்துச்சென்றார், உள்ளே நுழைந்த பிறகே அவளுக்கு மூச்சு சீரானது.

“வா மா ஒக்காரு” என்று அவளை அங்கிருந்த சோபாவில் அமரவைத்தார் வெண்மதி, கைகால் முகம் கழுவிக்கோ சாப்பிடலாம் என்ற வெண்மதியை பார்த்தவள் “ஆண்ட்டி நான் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா” என்க, அவருக்குச் சங்கடமாகப் போய்விட்டது.

 “மா நானும் குளிச்சுட்டுவந்து சாப்பிடுறேன் ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு” என்றவன் மேலேறி சென்றான், கதிரவன் பிரதான சாலையில் இறங்கிக்கொண்டான், அவன் வீடு சாலையின் எதிர்பக்கம் உள்ளது

 “வாடா வா” என்று மரப்படிகள் ஏறித் திலோத்தமாவை மேலே அழைத்துச்சென்றார், படி ஏறும்போதுதான் கவனித்தாள் வீட்டிற்கு நிறம் அடிக்கப்படவில்லை, சிகப்பு நிற கற்களால் கட்டப்பட்டிருந்தது எங்கும் மரவேலைப்பாடுகள், வீடு நல்ல குளுமையாக இருந்தது.

 கண்ணிற்கு நிறைவாக, அழகான வேலைப்பாடு கொண்ட கலைப்பொருட்கள் நிறைந்து ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது,  படிகள் கடந்து மேலே சென்றதும் மூன்று அறைகள் இருந்தது.

 “இது கீர்த்தியோடது” என்றவர் அதற்க்கு அருகில் இருந்த அறையைத் திறந்து “இந்த ரூம் எடுத்துக்கோடா, குளிக்கிறியா” என்க.

 “ஆம்” என்றாள் அவள்,  சோப்பு டவல் அனைத்தும் எடுத்துக்கொடுத்தார் வெண்மதி “குளிச்சுட்டு வாமா நான் கீழே இருக்கேன்” என்று கதவை அடைத்துவிட்டு சென்றார்.

 கதவைத் தாழிட்டவள் அந்த அறையைச் சுற்றி பார்த்தாள் பொருட்கள் பெரிதாக இல்லை,  மரக்கட்டில் ஒன்று மெத்தையோடு கிடந்தது, சுத்தமாகக் காற்றோட்டமாக இருந்தது.

 சத்தம் கேட்க மெல்ல தாழ் விளக்கிக் கொஞ்சமாகக் கதவைத் திறந்து பார்த்தாள் திலோத்தமா, அவள் எதிர்பார்த்தபடியே எதிர் புறத்தில் ஒரு பக்கத்தை முழுதாக எடுத்துக் கட்டப்பட்டிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்றான் சேனாபதி.

 ‘ரூம்கூட அவர் சைஸுக்கே கட்டியிருக்கார் பாரு’ என்று மனதில் நினைத்தவள் அவன் பார்ப்பதை கவனியாமல் அவனை  ரசித்துக்கொண்டிருக்க கதவை அறைந்து சாற்றினான் சேனாபதி.

 அந்தச் சத்தத்தில் உணர்வு வந்தவள் அவமானமாக உணர்ந்தாள், தன்னை பற்றிக் கீழாக எண்ணியிருப்பான என்ற எண்ணமே விழிகளை நிறைத்தது, இப்பொழுது எதையும் ரசிக்கும் மனநிலை போய்விட்டது ஷவரின் கீழே நின்று உச்சியில் குளிர் நீரை வாங்கிக்கொண்டாள்.

 அவள் கீழே இறங்கிவந்தபோது தாத்தாவும் அப்பாவும் பேரனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இவளைப் பார்த்த பூபதி பாண்டியனும் முத்துப்பாண்டியனும் ஸ்நேகமாய் புன்னகைத்து “வாம்மா நல்லா இருக்கியா” என்றனர்.

 “ஹ்ம்ம்” என்று அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவள் விழிகள் அவனில் பதிந்தது அலைபேசியில் ஏதோ குடைந்துகொண்டிருந்தான், அனைவரையும் உணவுண்ண அழைத்த வெண்மதி அவளைப் பிடித்துத் தன் அருகில் அமர்த்திக்கொண்டார்.

அவர் கொடுத்த எந்த உணவும் அவள் தொண்டையில் இறங்கவில்லை, நகர்ந்துகொண்டிருக்கும் கடிகார முள்ளில் விழிகள் நிலைத்தது, நகராதே என்று கெஞ்சும் அவளின் மனதின் குரல் அதற்க்கு எப்படி கேட்க்கும்.

 அவளைப் பற்றிய தனிப்பட்ட எந்த விஷயங்களையும் கேட்க்காமல் பொதுவாகப் பேசினர், அதுவே அவளுக்கு நிம்மதியை தந்தது அவர்களைப் பார்க்கையில் மனதில் எழுந்த ஏக்கத்தைத் தடுக்கமுடியவில்லை.

 ‘என்னைப் புரியவில்லையா உனக்கு’ என்றவள் உள்ளம் அழும் குரல் கேட்டதோ என்னவோ நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சேனாபதி, தளும்பி நிற்கும் அந்த விழிகளும் தன்னிடம் எதையோ சொல்லத் துடிக்கும் இதழ்களும் அவனைத் தடுமாற வைத்தது.

 “மா நாங்க கெளம்புறோம் இங்கேயிருந்து எப்படியும் ஒருமணி நேரம் மேல ஆகும்” என்றான் அவளைப் பார்ப்பதை தவிர்த்து.

 “சரிப்பா” என்ற வெண்மதி அவளுக்கு வீட்டில் செய்த பலகாரங்களை அழகாகப் பேக் செய்து எடுத்துவந்தார், அதோடு அவளுக்குத் தளர்வாகப் பின்னலிட்டு தலைநிறைய மல்லிப்பூவை சூடிவிட்டார்.

 “பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமையட்டும் எல்லாம் நல்லதா நடக்கும்” என்று வாழ்த்தினார்.

 “உங்க புள்ளைய தான் பிடிச்சுருக்கு, எனக்கு அவரைக் குடுப்பீங்களா” என்ற இதயத்தின் குரலைத் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று அவனுடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தாள் திலோத்தமா. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!