Skip to content
Post Views: 98

அத்தியாயம்-11
நிகழ்காலம்
நெக்சஸ் சிஸ்டம்ஸ்
Advertisement
ஆதித்யா தனது வழக்கமான வேக நடையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். சக ஊழியர்களின் காலை வணக்கத்திற்கு லேசாக தலை அசைத்தும், இதழ்களில் ஒரு சிறிய புன்னகையை ஏந்தியும் பதில் அளித்தபடி தனது கேபினை நோக்கி நடந்தான்.
அவன் உள்ளே நுழையும்போதே பலரது தலைகளும் அவன் பக்கம் திரும்பும், அதில் பெரும்பாலானோர் பெண்கள், ஆதித்யாவை அப்படி யாரும் எளிதில் கடந்துபோய்விட முடியாது.
அவனுடைய ஆறடிக்கும் மேலான உயரமும்,உடற்பயிற்சியில் இறுகிய உடலும், கிரேக்க சிற்பம் போன்ற செதுக்கிய முகமும்,மாடல் போன்ற உணர்ச்சி துடைத்த தோரணையான நடையையும் கண்டு பல பெண்கள் மூச்சடைத்துப் போவர். இது இங்கு தினமும் அரங்கேறும் காட்சிதான்.
Advertisement
அவர்கள் அலுவலகம் மட்டுமல்லாது அக்கம் பக்கம் உள்ள அலுவலகங்களிலும் கூட பல பெண்களின் கனவு நாயகன் (Heartthrob) அவன்.
Advertisement
ஆனால், அவனின் எளிதில் யாரிடமும் பழகாத தனிமையும், முன்கோப சுபாவமும் எந்தப் பெண்ணையும் அவனிடத்தில் நெருங்கவிடாமல் அரணாகத் தடுத்தது. தூரத்திலிருந்தே அவனைப்பார்த்து பெருமூச்சுவிடுவதுடன் நிறுத்திக்கொண்டனர் பலரும்.
தன் மீது பாயும் இந்த பார்வை அம்புகளையெல்லாம் சற்றும் சட்டைசெய்யாமல் ஒரு அலட்சிய பாவனையுடன் அவன் நேராகத் தனது அறைக்குச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் ஏதோ ஒரு மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. அவனது அறை எப்போதும் சுத்தமாகத்தான் இருக்கும், ஆனால் இன்று ‘அதி-சுத்தமாக’ இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மேஜையில் இருந்த ஒரு பூச்சாடி அவனது கவனத்தை ஈர்த்தது. அதில் இளம் சிவப்பு மற்றும் வெண்ணிற ரோஜாக்கள் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து ஒரு இனிமையான நறுமணம் வீசியது.
Advertisement
அவன் புருவங்களைச் சுருக்கி யோசித்தான்.
“இது ஹவுஸ் கீப்பிங் வேலை இல்லையே… புதுசா சேர்த்திருக்காங்களா?”
அவன் அந்தப் பூக்களை உற்று நோக்கினான். அது மிகுந்த ரசனையுடனும், அழகாகவும் அடுக்கப்பட்டிருந்தது. பூக்கள் அனைத்தும் புத்தம் புதியதாகவும், விலை உயர்ந்ததாகவும் தெரிந்தன.
“வாய்ப்பே இல்லை… ஒரு மேனேஜரின் மனநிலையை மேம்படுத்த நிறுவனம் இவ்வளவு செலவு செய்யாது. இதற்குப் பதில் செயற்கைப் பூக்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். நிஜமான பூக்களை வைக்க மாட்டார்கள்.
அப்படியென்றால் இது யாருடைய வேலை?” அவன் குழம்பினான்.
உடனடியாக இண்டர்காம் மூலம் ஹவுஸ் கீப்பிங்கை அழைத்து விசாரித்தான். ஆனால் அவர்கள் அப்படி எந்தப் பூக்களையும் வைக்கவில்லை என்று கூறிவிட்டனர்.
“யார் இந்தப் பூக்களை வைத்தது?” என்ற கேள்வி அவனைக் குடையத் தொடங்கியது.
முதலில் அவன் அதை அலட்சியப்படுத்திவிட்டு வேலையை பார்க்க தொடங்கினான். ஆனால், மீண்டும் மீண்டும் அந்தப் பூக்களைப் பார்க்கும்போது அவனது கவனம் சிதறியது.
‘யார் வேலையாக இருக்கும்..?’ என்ற யோசனையே அவனது வேலையைக் கெடுத்தது.
உண்மையில், பூக்களை ரசிப்பதெல்லாம் அவனது பழக்கம் இல்லை.ஆனால், இப்போது அந்த ரோஜாக்களைப் பார்க்கும்போது, அவை அவனுக்கு எதையோ.. குறிப்பாக யாரையோ நினைவூட்டுவது போல் இருந்தது.
என்னதான் முயன்றாலும் அவனால் எதையும் நினைவுகூர முடியவில்லை. அது அவனுக்கு இன்னும் அதிக எரிச்சலைத் தந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தப் பூக்கள் அவனை ஒருவித அமைதியற்ற நிலைக்குத் தள்ளின.
இறுதியாக பொறுமை இழந்தவன், அந்தப் பூக்களைத் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தான். அதன் பிறகுதான் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது.
மறுநாளும் ஒரு அழகான பூங்கொத்து அவனை வரவேற்றது. இந்த முறை அதன் நிறமும், அலங்காரமும் வித்தியாசமாக இருந்தது. அது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது என்பதை அவன் மனதிற்குள்ளாவது ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அது தனது மனநிலையையும் வேலையையும் பாதிக்க அவன் அனுமதிக்க விரும்பவில்லை. எனவே அதையும் குப்பையில் எறிந்தான்.அந்த வாரம் முழுவதும் இது தொடர்ந்தது.
இந்த நாடகத்திற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்ற முடிவுக்கு ஆதி எப்போதோ வந்திருந்தான். அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே.
“அந்த அவசர குடுக்கையைத் தவிர வேறு யார் இந்த அதிகப்பிரசங்கி வேலையைச் செய்வார்கள்?”
இருந்தாலும், அவளை கையும் களவுமாகப் பிடிக்க விரும்பினான். அதனால் மறுநாள் அலுவலகத்திற்குச் சற்று முன்னதாகவே வந்து அவளைக் கண்காணிக்க முடிவு செய்தான்.
மறுநாள் அரை மணிநேரம் முன்னதாகவே அவன் வந்தபோது, அவனது அறையிலிருந்து ஒரு மெல்லிய முணுமுணுப்புச் சத்தம் கேட்டது. உள்ளே இருப்பது யார் என்று பார்க்கத் தேவையில்லை, அது மதிதான் என்று அவனுக்குத் தெரியும்.
கதவின் கண்ணாடி வழியாகப் பார்த்தபோது.. முகத்தில் ஒரு இனிமையான புன்னகையுடன் பூக்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் மதி. அவளது கைகள் பூக்களைக்கையாண்ட விதம் ஏதோ மாய வித்தைப்போல் இருந்தது. அந்த இளம் மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களை விதவிதமாக மாற்றி அடுக்கியதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அலங்காரத்தில் கண்ணையும் மனதையும் கொள்ளையடிப்பதாக இருந்தது.. பூக்களை அலங்கரிப்பதில் அவள் ஒரு கைதேர்ந்த வித்தகியாக இருப்பாள் போல என்று எண்ணிக்கொண்டான்.
தன்னுடைய உலகத்தில் மூழ்கி, பூக்களுடன் பேசிக்கொண்டே, அவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவளைக்ஃ கண்டு ஒரு நிமிடம் அவன் மெய்மறந்து நின்றான்.
பூக்களை அடுக்கிவிட்டு சற்று தள்ளி நின்று பார்த்தவள் அந்த அலங்காரம் பிடிக்காமல் போனதோ என்னவோ சிலதை மீண்டும் இடம் மாற்றி வைத்தாள். பூக்களைக் கையாளும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு முள் அவளது விரலில் குத்திவிட, அவள் வலியால் “ஸ்ஸ்…” என்று முனகினாள்.
அவ்வளவுதான்! ஆதித்யாவின் தியானம் சட்டென்று கலைந்தது. அவளது விரலில் ரத்தம் கசிவதைக் கண்டதும் அவனது கோபம் உச்சத்திற்குச் சென்றது.
ஆவேசமாக அறைக்குள் நுழைந்தான்.
“என் ரூம்ல நீ என்ன பண்ணிட்டு இருக்க..?”
திடீரென அவனது குரலைக் கேட்ட மதி திடுக்கிட்டு துள்ளி குதித்தாள்.
அவனது கடுகடுப்பான முகத்தைப் பார்த்ததும் அவளது இதயம் ஒருகணம் நின்றது.
அவன் கோபமான பார்வையுடன் முன்னே வர, அவள் பயத்தில் பின்வாங்கினாள்.
“அப்ப நீதானா… இந்த தேவையில்லாத வேலைய பாக்கறது..?”
தற்காத்துக் கொள்ளப் பதில்கள் ஏதும் இல்லாததால், அவள் தலை குனிந்து மௌனமாக நின்றாள்.
“நமக்குள்ள இருக்கறது வெறும் ப்ரொஃபஷனல் ரிலேஷண்ட்ஷிப் மட்டும்தான்னு நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனா இல்லையா..?”அவள் மெல்ல ஆம் என்று தலையசைத்தாள்.
“அப்ப இதெல்லாம் என்ன?” என்று பூக்களை நோக்கிக் கத்தினான்.
“அது… சும்மா ஃபிளவர்ஸ் தானே சார்… இந்த இடம் அழகாக இருக்கனும்னு வெச்சேன் வேற ஒன்னும் இல்லை..” என்று தட்டுத்தடுமாறி பேசினாள்.
“உன்னோட இந்த மொக்கையான காரணத்த நம்ப நான் என்ன முட்டாளா?”
“நோ சார்…” என்று அவசரமாக மறுத்தவள், டைமிங் தவறியதை எண்ணி நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“உனக்குப் ஃபிளவர்ஸ் பிடிக்கும்னா உன் இடத்துல வெச்சிக்கோ, இங்க கொண்டு வராத, புரியுதா?” என்றான் கடுமையாக..
‘சிடுமூஞ்சி.. ஹிட்லர்…’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாக தலை கவிழ்ந்து நின்றாள்.
“அப்புறம், என்னோட பர்மிஷன் இல்லாம என் ரூமுக்குள்ள வந்து உன் இஷ்டத்துக்கு நடந்துக்க உனக்கு யாரு அதிகாரத்தக் கொடுத்தது..? நான் இல்லாத டைம்ல என் ரூமுக்குள்ள யாரும் வர்றது எனக்குபிடிக்காது.. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். டோண்ட் ரிபீட் திஸ் மிஸ்டேக்.. புரியுதா..?”
“சாரி சார்…” என்றாள் கம்மியக் குரலில்.
“நவ் கெட் அவுட் ஆஃப் மை ரூம்,” என்று அதிகாரமாக ஆணையிட்டான்.
அவள் தொங்கிய முகத்துடன் கிளம்ப,
“ஒரு நிமிஷம்…” என்று அவளைத் தடுத்து
“நான் தூக்கி போடுறதுக்கு முன்னாடி இந்த குப்பைய எல்லாம் என் கண்ணுலபடாம எடுத்துட்டுப் போ.” என்றான் இரக்கமே இல்லாமல்.
அவளது கண்கள் சட்டென்று கலங்கி குளமாகின. கனத்த இதயத்துடன் அந்தப் பூக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் மனம் மிகவும் காயப்பட்டுபோயிருந்தது. அவன் நிராகரித்தது அந்தப் பூக்களை மட்டுமல்ல, அன்பால் நிறைந்த அவளது இதயத்தையும்தான்.
சோகமான முகத்துடன் அவள் போவதைப் பார்த்த ஆதித்யாவுக்கு, நிம்மதிக்குப் பதிலாக மனதில் பெரும் பாரம் ஏற்றியது போல கனத்தது,
“இவள் ஏன் என் கடந்த காலத்தை எனக்கு நினைவூட்டுவதிலேயே குறியாக இருக்கிறாள்? அவளுக்கு ஏன் அது அவ்வளவு முக்கியமாக இருக்கிறது..?” என்று அவன் குழம்பிப்போனான்.
மறுநாள் ஆதித்யா தனது வழக்கமான நேரத்தில் அலுவலகத்திற்கு வந்தான். அறைக்குச் செல்லும்போது முந்தைய நாள் நடந்த சம்பவங்கள் அவனது நினைவுக்கு வந்தன.
இன்று பூக்கள் இருக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரியும். அவனிடம் வாங்கிய வசவுக்குப் பிறகு, ஒரு மாதத்திற்கு அவள் அவனுடைய அறைப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டாள் என்று நினைத்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டான்.
இருந்தாலும், அவனது மனதின் ஒரு மூலையில் சிறு ஏமாற்றமும், வெறுமையும் படர்வதையும் அவனால் தடுக்கமுடியவில்லை. அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. உண்மையில் அவன் இப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லவா..?
தனது முன்னுக்குப்பின் முரணான எண்ணங்களே அவனைக் குழம்பியடிக்க, ஒருபெருமூச்சுடன் கதவைத்திறந்தான்.
கதவைத் திறந்ததும் இதமான நறுமணமும், கண்ணைக் கவரும் வண்ணமயமான பூங்கொத்தும் அவனை வரவேற்றன.
ஒருகணம் ஸ்தம்பித்துப்போய் நின்றுவிட்டான் ஆதித்யா.
“அவ்ளோ தூரம் சொன்னதுக்கப்புறமும் அவளுக்கு என்ன ஒரு திண்ணக்கம்..?” என்று மனம் கோபமாக நினைக்கும்போதே.
அதற்கு நேர் மாறாக, அவனது இதழ்கள் ஒரு அழகான புன்னகையை உதிர்த்தது. நம்பமுடியாத தலையசைப்புடன்,
“அய்யோ.. இந்தப் பைத்தியத்த வச்சிகிட்டு நான் என்ன தான் பண்றது..?” என்று அலுத்துக்கொண்டான்.
அதே சமயம் ஒரு இனம் புரியாத திருப்தி அவனது இதயத்தை இதமாக நிரப்பியது. அவன் அவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொண்டும் அவள் அவனை விட்டுக்கொடுக்கவில்லை, என்பது அவனுக்கு விவரிக்க முடியாத நிம்மதியையும், மிதப்பையும் தந்தது.
ஆதித்யாவின் அறைக்கு வெளியே தண்மதி பதைக்கும் மனதுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பொறுத்தவரை, இன்றுதான் அந்த அலுவலகத்தில் அவளது கடைசிநாள் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
காலையிலிருந்தே அவன் எப்போது அழைப்பான் என்று படபடப்புடன் காத்திருந்தாள். அவன் தன்னைத் திட்டித் தீர்ப்பது போலவும், கையில் பணிநீக்க உத்தரவைத் தருவது போலவும் கனவு கூடக் கண்டிருந்தாள்.
ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே தன்னுடைய ஆசை நாயகனும், அழகு ரோஜாக்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்க வந்திருந்தாள்.
அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தாள். ஆதி தனது மடிக்கணினியில் (Laptop) தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தான். அவள் மேஜையின் மூலையைப் பார்த்தாள்.
என்ன ஆச்சரியம்! அந்தப் பூக்கள் இன்னும் குப்பைத் தொட்டிக்குச் செல்லவில்லை. காலையில் அவள் வைத்த அதே இடத்திலேயே இருந்தன.
அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
திடீரென ஆதி, வேலையை நிறுத்திவிட்டு அந்தப் பூக்களைப் பார்த்தான். அவனது கண்களில் எரிச்சல் தெரிந்தது. அவன் பூக்களை நோக்கித் வேகமாகத் தன் கையை உயர்த்தினான்.
மதியின் மூச்சு உறைந்தது, அவ்வளவுதான்,இதோ பூக்கள் தூக்கி எறியப்படும் தருணம் வந்துவிட்டது..
ஆனால், அவன் பூக்களைத் தூக்கி எறியவில்லை,வேகமாக உயர்ந்த கை சற்று நிதானித்து அந்த அடர் பின்க் நிற ரோஜாக்களை அன்பாகத் தடவிக்கொடுத்தது. இதழோரம் ஒரு வசியப்புன்னகையுடன் அவன் மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தான்.
இமைக்கவும் மறந்து அந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி..
மகிழ்ச்சியில் அவளது கண்கள் நனைந்தன, இதயம் பெருமிதத்தால் நிறைந்தது. இதற்கு மேல் அவளுக்கு வேறு என்ன வேண்டும்?
“யெஸ்…” என்று கத்தியபடி காற்றில் ஒருமுறை குதித்து சுழன்றாள்.
“போதும்… இது போதும் சார்… உங்களை நான் கண்டிப்பாக மீட்டுக் கொண்டு வருவேன்,” என்று முன்பை விட அதிக உறுதியுடன் மனதிற்குள் சபதம் செய்தாள்.
error: Content is protected !!