Skip to content
Post Views: 99

அத்தியாயம்-19
கடந்த காலம்..
பெங்களூரு
Advertisement
மதியின் வீட்டு வரவேற்பறையில் ஆதியும் மதியும் தங்கள் மாலை நேர டியூஷன் வகுப்பில் இருந்தனர்.
“மதி, உன்னோட எக்சாம்க்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்லை.. நான் எல்லா சாப்ட்டரையும் கவர் பண்ணிட்டேன. அடுத்த வாரம் உனக்கு ஒரு ஃபுல் போஷன் டெஸ்ட் வைப்பேன்.. ஒரு மாடல் டெஸ்ட் மாதிரி.. சோ, அதுக்கு ரெடியா இரு. உனக்கு ஏதாவது டவுட் இருந்தா முன்னாடியே கேட்டுடு,” என்று அவன் அவளுக்குத் தீவிரமாக அறிவுறுத்திக் கொண்டிருக்க,
மதியோ அரைகவனமாக சரி என்று தலையாட்டிக்கொண்டிருந்தாள். திடீரென்று தெருவில் கார் ஹார்ன் சத்தம் கேட்டதும், சட்டென்று முகம் பிரகாசமுற வாசலை நோக்கி வேகமாக ஓடியவள், ஆவலோடு வெளியே எட்டிப் பார்க்க, அவன் வியப்புடன் அவளைப் பார்த்தான்.
Advertisement
“என்ன செய்றா இவ..?”
Advertisement
சற்று நேரத்தில் வாடிய முகத்துடன் திரும்பி வந்தவளை முறைத்தான்.
“நான் இங்க எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னமோ உனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி எழுந்து ஓடுற?”
“சாரி சார்.. நான் என் கஸின் வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. அதான் கார் சத்தம் கேட்டதும் ஓடிப் போய் பார்த்தேன்..” என்றாள் இரங்கிய குரலில் ஏமாற்றத்துடன்,
Advertisement
‘அப்படி என்ன அந்த கஸின் அவ்வளவு முக்கியம்..’ என்று யோசனை ஓடும் போதே
“கஸின்னா பையனா? இல்ல பொண்ணா?” அவன் மூளை உச்சபட்ச விழிப்பு நிலைக்குச் சென்றது. ஒரு அளவிடும் பார்வையுடன்
“கஸின்னா.. உங்களுக்குள்ள என்ன ரிலேஷன்?”
“அது என்னோட மாமா பொண்ணு.. பேரு நிஷா.. பேரு நல்லா இருக்குல்ல?பேரு மட்டுமில்ல அவளும் ரொம்ப அழகா இருப்பா.. எங்க குடும்பத்துலேயே.. ஏன் எங்க ஊர்லேயே அவதான் அழகு. ஸ்டைலான நடை, ட்ரெண்டியான டிரெஸ்ஸிங் சென்ஸ், மேட்சிங் அக்சஸரீஸ்.. சான்ஸே இல்லை.. ஒரு ட்ரெண்ட் செட்டர் அவ. B.E ஃபைனல் இயர் படிக்கிறா. இங்க பெங்களூர்ல ஏதோ செமினார் இருக்காம், அதை அட்டெண்ட் பண்ண வர்றா.. மூணு நாள் இங்கதான் ஸ்டே பண்ணப் போறா.”
அவள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் உற்சாகமாகச் சொல்லி முடிக்க,
ஆனால் ஆதி அவளது அந்த ‘அழகான கஸின்’ பற்றிய வர்ணனையில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. தான் அறிய விரும்பிய கேள்விக்கு முதல் வாக்கியத்திலேயே பதில் கிடைத்துவிட்டதால், அவளது மற்ற பேச்சுகளை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை.
“இப்ப எதுக்கு இதையெல்லாம் என்கிட்ட சொல்ற?” என்றான் எரிச்சலாக.
“நீங்க வேணா பாருங்க, நிஷாக்காவைப் பார்த்தாதான் உங்களுக்குத் தெரியும், அவ எவ்ளோ அழகுன்னு..” என்றாள் கண்கள் மின்ன.
“இவளே பேரழகு, இதுல இவ இன்னொரு பொண்ண அழகுன்னு சர்டிஃபிகேட் தர்றா.. பைத்தியகாரி…”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்டான் ஆதி.
“மதி.. நிஷா வந்துட்டா பாரு…” என்ற அவளது அம்மாவின் குரலைக்கேட்டதும் முயலைப் போல துள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி ஓடினாள்.
“லூசு..இவள திருத்தவே முடியாது..” ஆதி ஆயாசத்துடன் கண்களை உருட்டினான்.
“ஹாய் அக்கா…”
மதி மிகுந்த உற்சாகத்துடன் நிஷாவைக் கட்டியணைக்க, ஆனால் நிஷா முகத்தைச் சுளித்து அவளைத் தள்ளி நிறுத்தினாள்.
“ஹேய் மதி.. என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி இப்படி மேல வந்து விழுந்தா என்னோட டிரஸ் ஸ்பாயில் ஆகுது பாரு..” என்றால் எரிச்சலாக,
ஆனால் மதிக்கு எதுவும் தப்பாகத் தோன்றவில்லை.
“ஓ சாரி கா..” என்று அசட்டு சிரிப்புடன்,
“நிஷாக்கா உன் டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு..” சிறுபிள்ளைப்போல் கண்களை விரித்தாள்.
நிஷா வெள்ளை டேன்க் டாப் மேலே ஓவர் சைஸ் ஷிம்மர் கொரியன் ஷர்ட், ரிப்ப்டு டெனீம் ஜீன்ஸ்,தலையில் மேலே உயர்த்தி போட்ட மெஸ்ஸி போனி டெயில் மற்றும் தோளில் குறுக்கே தொங்கிய ஸ்லிங்பேக் என்று தலை முதல் கால்வரை பிராண்டட் ஆக இருந்தாள்.
“நல்லா இல்லாம விடுவேனா? எவ்ளோ அலைஞ்சி வாங்கின டிரெஸ் தெரியுமா? ஆமா நீ ஏன் இன்னும் அப்படியே இருக்க.. ஸ்கூல் கிட்ஸ் மாதிரி பிக்கி டி-ஷர்ட்.. லூஸ் ஃபிட்டிங் டிராக் பேண்ட்னு.. குரோ அப் மதி.. இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் வேற போகப்போற..” நிஷா ஏமாற்றத்துடன் சொல்ல,
“அதான் இப்போ நீ வந்துட்டே இல்ல.. எனக்கு எல்லாம் சொல்லிக் கொடு..” என்று மதி மகிழ்ச்சியில் துள்ளினாள்.
இதற்கிடையில் ஆதி அவர்களை நோக்கி வர “ஐயோ சார்-ஐ மறந்துட்டு இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டோமே..”என்று ஒரு திடுக்கிடலுன் உணர்ந்தாள்.
“மதி.. நீ ரொம்ப பிஸியா இருக்கிற மாதிரி தெரியுது.. அதனால நம்ம டியூஷனை நாளைக்கு வச்சிக்கலாம்..”என்று கிளம்ப எத்தனித்தவனை அவசரமாக தடுத்து,
“ஆதி சார்.. நான் சொன்னேன்ல என்னோட கசின் நிஷா அக்கான்னு, அது இவங்க தான். அக்கா, இது என்னோட மேத்ஸ் டியூஷன் மாஸ்டர் ஆதி சார்..” மிகவும் பெருமிதத்துடன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
ஆதி “மதியின் நிஷா அக்காவை” அலட்சியமாகப் பார்த்தான். ஒரே பார்வையில் அவளது அந்த ஜொலிஜொலிப்பான தோற்றம் அனைத்தும் பியூட்டி பார்லர்களின் கைவரிசை என்பதை கண்டுகொண்டான்.
ஆதித்யாவைப் பார்த்ததும் நிஷாவின் கண்கள் படபடத்தன. “இப்படி ஒரு அழகனா..!” என்று அவள் மனதிற்குள் வியந்தாள்.
தன் வழக்கமான ‘வசீகர சிரிப்பை’ அவன் பக்கம் வீசியவள், ஒரு கவர்ச்சியான பார்வையுடன் தன் கையை நளினமாக அவனிடம் நீட்டி
“ஹாய்..” என்றாள் ஸ்டைலாக..
ஆதித்யா அவளது நீட்டிய கையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அசுவாரஸ்யமான முகத்துடன் பேருக்கு ஒரு “ஹாய்” மட்டும் சொல்லிவிட்டுத் தனது வழக்கமான வேக நடையுடன் வெளியேறினான்.
நிஷாவின் முகம் கன்றி சிவந்தது. அவள் சந்தித்த எந்த ஒரு ஆணும் அவளை இப்படி அலட்சியப்படுத்தியதே இல்லை. ஆண்களிடம் தனக்கு இருக்கும் ஈர்ப்பு சக்தியை அவள் நன்றாக அறிவாள்.ஆனால் இவன் அவளது கர்வத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்துவிட்டான். அவளது வாழ்க்கையில் யாருமே அவளிடம் இவ்வளவு ‘ஆட்டிட்யூட்’ காட்டியதும் இல்லை, அவளை துச்சமாக நடத்தியதும் இல்லை.அவளது ஈகோ பலத்த அடி வாங்கியது.
தண்மதிக்கு நிஷா அக்காவின் அழகின் மேல் சிறுவயது முதலே ஓர் ஈர்ப்பு. அவளது நடை,உடை,அணிகலன்கள் என அனைத்தும் சின்னப்பெண்ணான அவளுக்கு ஆதர்சமாக தெரிந்தது.அந்த வியப்பு இன்னும் குறைந்தபாடில்லை.
நிஷா பேரழகி இல்லை என்றாலும் தன்னுடைய இயற்கையான அழகை செயற்கை வழிகளைக்கொண்டு எப்படி பன்மடங்கு அதிகரித்து காட்டவேண்டும் என்ற வித்தை அறிந்தவள்.
மதிக்கு இதெல்லாம் தெரியாது அவளை ஒரு ரோல் மாடல் என்றே நினைத்திருந்தாள்.
“மதி, உன்னோட மாஸ்டர் ரொம்ப திமிர்பிடிச்சவனா இருக்கான்..”
தன் சாரைப் பற்றித் தவறாகக் கேட்டதும் மதிக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..அவரு கொஞ்சம் ரிசர்வ்டு டைப் அவ்வளவுதான்..” என்று அவனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.
“இவ்வளவு அழகான பொண்ணு இங்க நிக்கிறேன்.. கண்டுக்காம போறான்..”
“அவரு பொண்ணுங்ககிட்ட பேச மாட்டாரு..” என்று பெருமையாக அறிவித்தாள் மதி.
“பொண்ணுங்ககிட்ட பேச மாட்டாரா? அவன் என்ன ‘கே’ (gay) ஆ..?” என்று நக்கலாகக் கேட்டுக்கொண்டே தன் அறைக்குள் சென்றாள் நிஷா.
மதி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டாள்,
“அது எப்படி அவள் என் ஆதி சாரைப் பார்த்து இப்படிச் சொல்லலாம்?”
“சீச்சீ.. எனக்கு இந்த நிஷா அக்காவைப் பிடிக்கவே இல்லை.. இவ ரொம்ப மோசம்..” முதல் முறையாக நிஷாவின் கருத்தோடு முரண்பட்டாள் தண்மதி.
நிகழ்காலம்
நெக்சஸ் சிஸ்டம்ஸ்
ஆதி கான்பரன்ஸ் ஹாலில் தனியாக அமர்ந்து தன் நடத்தையைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். ‘ஏன் என் மனம் இப்படி அலைபாய்கிறது, ஏன் எப்போதும் அது தண்மதியின் பின்னாலேயே ஓடுகிறது? அவளைப்பற்றி நான் உணர்வது எல்லாம் சீரியஸான ஒன்றா.. அல்லது என் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? இந்தச் குழப்பத்தை என்னால் இன்னும் எவ்வளவு காலம் தாங்கமுடியும்?’
அவனுக்குள் ஓராயிரம் கேள்விகள் சுற்றி சுழன்றன, எதற்கும் அவனிடம் பதில் இல்லை.அவன் இவ்வாறு குழம்பித்தவிக்கையில்,
நவீனிடமிருந்து ஃபோன் வந்தது, மதிய உணவிற்கு வருமாறு அழைத்தான்.
நவீனுடன் இருந்தால் அவனது கலகலப்பான பேச்சால் ஒருவேளை மனதிற்கு சற்று நிம்மதி கிடைக்கலாம் என்று நினைத்து அவனுடன் சென்றான்.
ஆனால் கேண்டீனில் ஶ்ரீநிதியும் மதியும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் நவீன் உற்சாகமாக அவர்களை நோக்கிச் சென்று,
“ஹாய் ஶ்ரீ, ஹாய் மதி…” என்று சிரித்தபடி அவர்களுடன் அமர்ந்துவிட அவனது அன்றைய பொழுது இன்னும் மோசமானது.
வேறு வழியில்லாமல், தன் விருப்பமில்லாமல் அங்கே போய் அமர்ந்தான் ஆதி.
அவனைப் பார்த்ததும் மதி பளிச்சென்று பிரகாசமாகச் சிரித்தாள்.
‘நான் இங்க பைத்தியம் மாதிரி மண்டையை பிச்சிகிட்டு இருக்கேன்.. மேடம் எந்த கவலையும் இல்லாம ஈன்னு இளிச்சிட்டு இருக்கா..என் நிலைமைய பார்த்தா அவளுக்கு உள்ளுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமோ..?’
யாரைப்பிடித்து பிராண்டலாம் என்று காத்திருந்தவனின் கோபத்திற்கு , துரதிர்ஷ்டவசமாக மதி இரையானாள்.
“தண்மதி, நான் அனுப்புன மெயிலுக்கு இன்னும் உன்கிட்ட இருந்து எந்தப் பதிலும் வரல. நிஜமாவே நீ வேலை செய்யதான் வர்றியா இல்ல டைம் பாஸ் பண்ணவர்றியா..? ஒருமுறை கூட கொடுத்த வேலையைக் கொடுத்த நேரத்துல முடிக்கமாட்டியா?” என்று சிடுசிடுத்தான்..
அடுத்தவர் முன்னிலையில் அவமானப்பட்டதில் மதியின் முகம் வாடிசுருங்கிப்போனது.
“சிடுமூஞ்சி..ஹிட்லர்.. நாக்கா இல்லை தேள் கொடுக்கா..? இப்படி கொட்டுறாரு..என்னமோ இவருதான் ஆஃபீசையே தூக்கி சுமக்குறவர் மாதிரி,எப்பவும் வேலையைத் தவிர வேற எதுவும் கண்ணுக்குத் தெரியாது..” என்று மனதிற்குள் சபித்தாள்.
“டேய்.. என்னடா சாப்பிடுற நேரத்துல கூட வேலையைப் பத்திப் பேசிக்கிட்டு.. டூ மச் டா..” நவீன் அவனைக் கடிந்தான்.
“இவன் கிடக்கிறான்.. நீங்க சொல்லுங்க கேர்ள்ஸ், என்ன சாப்பிடறீங்க? சீக்கிரம் ஆர்டர்.. ஆர்டர்..” நவீன் வேடிக்கையாகப் பேசி சூழலை சகஜமாக்க முயன்றான்.
“எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று ஆதியை முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னாள் மதி.
“ஏன்? நீ காலையில கூட சாப்பிடலைன்னு சொன்னியே மதி?” ஶ்ரீநிதி அக்கறையாக கேட்க
“நான் போய் இவருக்கு மெயில் அனுப்பிட்டு வந்து சாப்பிடறேன்..” தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கோபத்தில் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.
“இப்போ உனக்கு சந்தோஷமா?” நவீன் ஆதித்யாவை முறைத்து தன் அதிருப்தியைத் தெரிவித்தான்.
ஶ்ரீநிதி அவள் பின்னால் செல்ல எழுந்த போது ஆதி தடுத்தான்.
“ஶ்ரீநிதி, நான் அவளைக் கூட்டிட்டு வர்றேன்.. நீ இரு.”
“மதி.. நில்லு!” என்று உரக்க அழைத்தபடி அவளைப் பிடிக்க வேகமாக நடந்தான்.
அவள் வேகத்தைக் குறைக்கவில்லை, மாறாக இன்னும் வேகத்தைக் அதிகரித்தாள். அவன் நான்கு நீண்ட எட்டுகளில் அவளை நெருங்கி, அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தினான். அந்தத் திடீர் இழுப்பை எதிர்பாராதவள், அவன் மேல் லேசாகச் சாய்ந்தாள்.. பின் உடனே நிலை குலைந்துவிடாமல் தன்னைச் சரிசெய்து கொண்டாள்.
“வந்து சாப்பிடு மதி..” என்றான் அதிகாரத் தொனியில்.
அவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்து, உதடுகளை இறுக மூடிக்கொண்டு தன் பிடிவாதத்தைக் காட்டியபடி நின்றாள்.
“வா.. மதி..” இந்த முறை அவனது குரல் சற்று இறங்கி வந்தது.
“நீங்கதானே சொன்னீங்க.. வேலை செய்ய வக்கில்லை, உனக்கு சாப்பாடு ஒரு கேடான்னு..” என்று கனல் தெறிக்கும் கண்களுடன் கேட்டாள்.
“ஏய் நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”
“நீங்க சொன்னதுக்கு அர்த்தம் அதானே?”
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. அடம் பிடிக்காம வா..?”
இன்னும் தன் பிடியில் இருந்த அவளது கையைப் பிடித்து கேண்டீனை நோக்கி இழுத்தான். தன் கையை விடுவித்துக் கொண்டு
“நான் வரமாட்டேன்,” குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பிடிவாதமாகத் தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
“உன்னைச் சமாதானப்படுத்த நான் உன் பின்னாடியே வருவேன்னு நினைக்காத..”
“ஓ.. இப்போ நான் என்ன உங்களை என் பின்னாடி வரச் சொன்னேனா?”
அவளது பிடிவாதத்தைப் பார்த்து அவனது பொறுமையும் காற்றோடு போனது. ஒரு பெருமூச்சுடன்,
“ஸாரி… போதுமா? இப்போ சாப்பிட வா..” என்றான் பற்களைக் கடித்தபடி,
இப்படி யாரையும் கெஞ்சி சமாதானப்படுத்துவது என்பதெல்லாம் அவனது இயல்பே கிடையாதே.
” நீங்க ஸாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லையே சார்.. எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்தணும்னு நினைச்சீங்க, அதுல நீங்க ஜெயிச்சிட்டீங்க.. போய் அதைக் கொண்டாடுங்க.. போங்க..”என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி குரல் உடைந்தது.
அவன் கழிவிரக்கத்தில் கண்களை மூடிக்கொண்டான். அவளது கண்ணீர் அவனை ஊசியாகக் குத்தியது. அவளைக் காயப்படுத்தக் கூடாது என்று அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒவ்வொரு முறையும் அவளை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தியே முடிக்கிறான்.
உடனடியாக அவளைச் சமாதானப்படுத்த வழி யோசித்தான். தயக்கத்துடன் கைகளைத் தன் காதுகளுக்குக் கொண்டு சென்றான். ஒரு குட்டி ‘ஸாரி’ முகத்தை வைத்துக் கொண்டு, காதுகளைப் பிடித்துக் கொண்டு ,
“ஐ ஆம் ரியலி ஸாரி தண்மி..ஐ மீன் இட்..” என்றான் அவளையே பார்த்தபடி,
எதிர்பாராத அவன் செயலைக்கண்டு அவளது கண்கள் வியப்பில் விரிந்தன. அவளால் நம்பவே முடியவில்லை. ‘நிஜமாகவே மிஸ்டர் சூப்பர் ஈகோவிடம் இருந்து ஒரு ஸாரியை வாங்கிட்டேனா?’
அவளது முகம் இன்னும் முழுமையாக மாறாததைக் கண்டு “ப்ளீஸ்..” என்று கண்களை சுருக்கி மீண்டும் கெஞ்சினான்.
அவளுக்குள் மகிழ்ச்சி பீறிட்டுப் பொங்கியது. வீராப்பை இழுத்துபிடித்து , தன் சிரிப்பை வெளிகாட்டாமல் மறைக்க எவ்வளவு முயன்றாலும், கட்டுப்படுத்த முடியாமல் அவளது முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.
அந்தச் சிரிப்பு அவனது அன்றைய பொழுதை அழகாக்க, நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஆதித்யா.
‘அவள் முகத்தில் இந்த சிரிப்பைக் கொண்டு வர இந்த உலகையே வெல்ல சொன்னாலும் செய்யலாம்…’ என்று திடீரெனத் தோன்றிய எண்ணம் அவனையே திடுக்கிட வைத்தது.
‘என்னடா சினிமா வசனம்லாம் பேசுற,உனக்குக் கண்டிப்பா பைத்தியம் பிடிச்சிருச்சு ஆதி..’ என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
“நான் பண்ணத்தப்புக்கு ஈடா உனக்கு லஞ்ச் வாங்கித் தர்றேன்.. வா?” என்று கெஞ்சும் கண்களுடன் குழைவுடன் அழைத்தான்.
மதிக்கு ‘தான் கனவு காண்கிறோமா?’ என்று சந்தேகம்கூட எழுந்தது. அவன் இவ்வளவு தூரம் தனக்காக இறங்கி வந்தது அவளுக்கு சொல்லவொண்ணா ஆனந்தத்தை தர, உதட்டில் ஒரு வெட்கச் சிரிப்புடன் அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
அப்போது எங்கிருந்தோ சூறாவளி போல வந்த ஒரு பெண், ஆதி மீது மோதி ‘ஃபெவிகால்” போட்டது போல அவனை கட்டிக்கொண்டாள். அதைப் பார்த்த மதியின் நடை அப்படியே ஸ்தம்பித்தது.
“ஹே.. ஆதி… உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமாடா..”
ஆதியும் புன்னகையோடு அந்தப் பெண்ணின் முதுகைத் தட்டிக் கொடுத்ததைப் பார்த்த மதியின் வாய் ஆச்சரியத்தில் ‘ஆஆ”வென்று பிளந்தது.
“ஹே தர்ஷா.. ஈஸி.. ரிலாக்ஸ்..” என்றான்.
ஒரு வழியாக சில நொடிகள் கழித்து அவர்கள் பிரிந்தனர். ஆனால் மதிக்கு அது பல யுகங்களாகத் தோன்றியது.
‘பெங்களூரில் நான் பார்த்த அதே ஆதி சார் தானா இவர்? பெண்களைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டாரே? பொது இடத்தில் இப்படி ஒரு பெண்ணைக் கட்டியணைப்பதெல்லாம் அவரது அகராதியிலேயே இல்லாத ஒன்றாயிற்றே.. இந்த ஐந்து வருடங்களில் அவர் மாறிவிட்டாரா?
அவள் உடல் முழுவதும் எரிவது போல இருந்தது.
‘யார் இவள் உரிமை உள்ளவள் போல என் ஆதி சாரை கட்டிப்பிடிக்கிறாள்?’ எரிச்சலுடன் அவர்களை முறைத்துப் பார்த்தாள்.
“ஹே தர்ஷா, வாட் ய சர்ப்ரைஸ்.. இங்க என்ன பண்ற..?” ஆதி உற்சாகத்துடன் கேட்டான்.
“ஏன் கேட்க மாட்டே.. சொல்லாம கொள்ளாம ஆளு எஸ்கேப் ஆகிட்டு.. உன்னைத் தேடி கண்டுபிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நம்ம ஸ்ரீராம் தான் சொன்னான் நீ இங்க ஒர்க் பண்றன்னு.. உடனே இங்க ஜாப்க்கு ட்ரை பண்ணி.. இன்டர்வியூ எல்லாம் முடிச்சு.. இன்னைக்கு தான் வேலை கன்ஃபார்ம் ஆச்சு. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லல. எப்படி இருந்தது என்னோட சர்ப்ரைஸ்..?” அவனது தோள் மீது கை போட்டுச் சாய்ந்தபடி கேட்டாள்.
“நிஜமாவே சர்ப்ரைஸ்தான், நம்பவே முடியல..” அவன் பற்கள் தெரிய பெரிதாக சிரிக்க,
மதியின் இரு காதுகளிலிருந்தும் புகை வராத குறைதான்.. அவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.
‘என்கிட்ட மட்டும் எப்பவும் சிடுமூஞ்சி ரூபம்.. இந்த அட்டைப்பூச்சி கிட்ட மட்டும் பல்லு சுளுக்கிக்கிற அளவுக்குச் சிரிக்கிற விஸ்வரூபமா? எல்லாத்துக்கும் மேல அந்த ஏர்-டைட் ஹக் வேற..’ என உள்ளுக்குள் புகைந்தாள்.
“ஆஹ்…” தர்ஷா திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் முகம் சுளித்தாள்.
“என்ன ஆச்சு தர்ஷா?”
“ரொம்ப பசிக்குது.. சாப்பிட ஏதாவது வாங்கித் தா ஆதி,” என்று சிறுபிள்ளைப்போலக் கேட்டாள்.
ஆதி விளையாட்டாக அவளது தலையில் தட்டிவிட்டு “நீ திருந்தவே மாட்ட..” என்றான்.
“யெஸ்..யெஸ்.. சரி வா போகலாம்..” தர்ஷா ஆதியை அங்கிருந்து இழுத்துச் சென்றாள். அந்த உரையாடல் முழுவதிலும் தர்ஷா மதியை ஒருமுறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. அங்கே ஒருத்தி இருப்பதையே அவள் மதிக்கவில்லை.
‘நான் என்ன திடீரென்று யாருக்கும் தெரியாத ‘இன்விசிபிள்’ மோடுக்கு மாறிட்டேனா? நிஜமாவே அவ கண்ணுக்கு நான் தெரியலையா?’
அவர்கள் இருவரும் கேண்டீனுக்குள் சென்று மறையும் வரை யோசனையோடு பார்த்தபடி நின்றிருந்தவளின் அடிவயிற்றில் ஒரு கலக்கம் தோன்றியது.
தொடரும்..
error: Content is protected !!