Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-23

அத்தியாயம்-23

ரங்கநாதன் தெருவின் நுழைவாயிலில் நின்றிருந்த ஆதித்யா, கண்களுக்கு எட்டிய தூரம் வரை அலைமோதிய மக்கள் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போனான். ஷாப்பிங் செய்வதை விடுங்கள், அந்தத் தெருவில் நடப்பதற்குக்கூட இடம் இருப்பதாகத் தெரியவில்லை.



Advertisement

திகைப்புடன் தன் அருகில் நின்றிருந்த அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்தான். நிஜமாகவே இவள் இந்த இடத்தில் தான் ஷாப்பிங் செய்ய விரும்புகிறாளா?

அந்தத் தெருவுக்குள் அடியெடுத்து வைக்கவே அவன் தயங்கினான்.

அவன் அவளை வேண்டாம் என்று தடுப்பதற்குள், அவள் அந்தப் பெருங்கூட்டத்திற்குள் லாவகமாக புகுந்து மறைந்துவிட “மதி நில்லு…” என்று பதற்றத்துடன் அழைத்தபடி அவளைப் பின்தொடர்ந்தான் ஆதி.

Advertisement

அதற்குள் அவள் ஒரு துணிக்கடையின் முன் நின்றிருந்தாள். அது பெரிய ஷோ ரூம் எல்லாம் கிடையாது நடைபாதையில் விற்பனைக்கு குவித்து வைத்திருந்த ஆடைகள் தான்.

Advertisement

சில டாப்களை சும்மா எடுத்துப்பார்த்தவள் எதையும் வாங்காமல் அடுத்த கடைக்கு நகர்ந்தாள்.

வேறு வழியின்றி, தான் அவள் பின்னால் ஒரு ‘ஹட்ச்’ நாய் குட்டியைப் போல செல்வதை நினைத்து  தனக்குள் சிரித்துக்கொண்டான் ஆதி. அந்தப் பிரமையிலிருந்து வெளிவரத் தலையை உலுக்கிக் கொண்டான்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. அவன் அவளுக்கு மிக அருகிலேயே நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Advertisement

 அப்போது கூட்டத்தில் யாரோ அவள் மீது இடிக்க வந்தபோது, சட்டென்று அவளைத் தன் பக்கம் இழுத்து, அவளது விரல்களைத் தன் விரல்களால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். மதி ஆச்சரியத்துடன் தங்களின் இணைந்த கைகளைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை அரும்பியது. அதன் பிறகு, அதுதான் இயல்புபோல இருவரும் கைகோர்த்தபடியே நடக்கத் தொடங்கினர்.

ஆதி அவளது உள்ளங்கையின் மென்மையை உணர்ந்தான் பஞ்சுபோல் மெத்தென்று இருந்தது.

“அவள் கைபிடித்து இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல” என்ற உணர்வு  ஏன் தோன்றுகிறது? விடை தெரியாத அந்தக் கேள்வியால் அவன் குழம்பினாலும், அவள் கையைப் பிடித்திருக்கும் போது அவனது மனம் அலைபாயாமல் அமைதியாக இருந்தது. அந்தப் பிடியை எப்போதும் விடக்கூடாது என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டது.

திடீரென்று ஒரு டிஸ்ப்ளேவில் தொங்கவிடப்பட்டிருந்த உடை மதியின் கண்ணில் பட்டது.

“அந்த குர்தி நல்லா இருக்குல்ல?”

அந்த ‘புளோரசன்ட்’ பின்க் நிறத் துணியைப் பார்த்ததும் ஆதிக்கு கண்கள் கூசியது. “என்ன  ரசனையோ இவளுக்கு!” என்று மனதிற்குள் நினைத்தாலும், அவள் கண்கள் உற்சாகத்தில் மின்னுவதைப் பார்த்து, ஆமாம் என்பது போலத் தலையசைத்தான்.

“அந்த பின்க் டிரஸ் எவ்ளோ?” என்று கடைக்காரரிடம் கேட்டாள்.

“1200 க்கா” அந்த நடுத்தர வயது ஆள் அவளை ‘அக்கா’ என்று கூப்பிட்டது ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம், மதி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இயல்பாக இருந்ததுதான்.

“500-க்கு தருவீங்களா?”

அவள் பேரம் பேசத் தொடங்கிய விதத்தைக் கண்டு ஆதி பயந்தே போனான். விற்பனையாளர் அவளைத் திட்டி விரட்டிவிடுவார் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் அந்த ஆள் இது போன்ற பேரங்களுக்குப் பழகியவர் போல விலையை ஓரளவுக்குக் குறைத்தார்.

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விற்பனையாளர் 800 ரூபாய் தான் கடைசி விலை என்றார். ஆனால் மதி 500-லிருந்து ஒரு அடி கூட நகரத் தயாராக இல்லை.

ஆதி மெதுவாக அவள் காதில் முணுமுணுத்தான், “மதி.. இது நல்ல டீல் மாதிரிதான் தெரியுது.. அவரே இவ்வளவு குறைச்சிட்டாருல்ல, வாங்கிட வேண்டியதுதானே?”

“ஷ்ஷூ.. சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. நான் பார்த்துக்கிறேன்..” என்று அவனை அதிகாரத்தோடு அடக்கினாள். அவள் தன்னை அடக்கிய விதம் முதலில் அவனுக்குத் திகைப்பாக இருந்தாலும், அவளுக்கு அடங்கிப் போவது அவனுக்குப் பிடித்திருந்தது.

“இன்னைக்கு எனக்கு உண்மையிலேயே பைத்தியம் புடிச்சிருச்சி…” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

இறுதியில் அந்த உடை 600 ரூபாய்க்கு முடிவானது. ஒரு போரில் வென்ற திருப்தியோடு அந்த உடையை கையில் வாங்கினாள் தண்மதி.

அவளது பேர உத்தியைக் கண்டு ஆதி வியந்து போனான். இவள் HR மாணவர்களுக்குப் நெகோஷியேஷன் டாக்டிக்ஸ் பற்றி வகுப்பே எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்து ஒரு பேன்சி கடையின் முன் நின்றாள். கூட்டத்திற்குள் கையை விட்டு எதையோ தேடி எடுத்தாள். ஆதித்யா வெயிலில் வியர்த்துப்போய் பொறுமையின்றி காத்திருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு உலோகக் காப்புடன் (Kada) வெளியே வந்தாள்.

“சார், இதைப் பாருங்க..” என்று அந்தக் காப்பை அவனிடம் காட்டினாள்.

“ஓ, இப்ப பொண்ணுங்களும் காப்பு போட ஆரம்பிச்சுட்டாங்களா? இது புது பேஷனா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“வெரி ஃபன்னி ஆனா சிரிப்புதான் வரலை… இத உங்களுக்காக வாங்கினேன்.”

“எனக்கா? எனக்கு இதெல்லாம் பிடிக்காது, நான் இப்படி சீப்பானதெல்லாம் போடமாட்டேன்..”

அவள் கோபத்தில் உதட்டைப் பிதுக்கினாள். “பெரிய லார்ட் லபக்குனு நெனைப்பு.. சீப்பானதெல்லாம் போடமாட்டாராம்” என்று மனதிற்குள் வசைபாடினாள்.

“இது ஒரு தாங்க் யூ கிஃப்ட் தான்..”

“தாங்க்யூகிஃப்ட்டா? எதுக்கு?”

“என்னை ஷாப்பிங் கூட்டிட்டு வந்ததுக்கும், உங்க வீட்ல தங்க அனுமதிச்சதுக்கும்.. ப்ளீஸ்..போட்டுக்கோங்க..” என்று கெஞ்சலாக கேட்டாள்.

“சரி.. நீ இவ்வளவு சொல்றதுனால..” என்று  அதை வாங்க கையை நீட்ட, அவன் கையைப் பிடித்து அவளே போட்டுவிட்டவள்

 “நல்லா இருக்குல்ல?” என்று மின்னும் கண்களுடன் கேட்டாள்.

“இய்யூ..இது ஒரு மாதிரி வியர்ட்டா(weird) இருக்கு..” என்றான் உள்ளூற சிரிப்பை அடக்கிக் கொண்டு,

அவள் முகத்தைச் சுளித்துக்கொண்டு அவனை மனதிற்குள் திட்டினாள். அவள் கோபத்தில் காட்டும் இந்த விசித்திரமான முகபாவனைகளை கண்டு ரசிக்கவே இப்போதெல்லாம் அவளை காண்டேற்றிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

இருவரும் தெருவில் நிதானமாக நடந்தனர்.வாங்குவதை விட வேடிக்கை பார்ப்பதுதான் மதிக்கு அதிகம் பிடித்திருந்தது. இடையில் தென்பட்ட மாங்காய் பத்தை, ப்ரூட் சாலட், ஜூஸ், சாட் என எதையும் அவள் விட்டுவைக்கவில்லை.

பம்பாய் சாட் கடையின் முன் நின்று மதி தனது 12-வது பானி பூரியை வாய்க்குள் திணிப்பதைப் பார்த்த ஆதி, “வயிறு ஒரு எலாஸ்டிக் பை” என்று தன் அறிவியல் ஆசிரியை சொன்னது எவ்வளவு உண்மை என்று நினைத்துக்கொண்டான்.

“ஹலோ.. இப்படி டசன் கணக்குல உள்ள தள்றயே ஒரு பேச்சுக்காவது சாப்பிடுறீங்களான்னு கேட்டியா..?”

வாயில் போட்ட பானிபூரியை விழுங்கிவிட்டு,

“எப்படி கேக்குறது..? உங்களுக்குதான் காரம் ஒத்துக்காதே..” என்றாள்

அவனுக்கு காரம் ஒத்துக்கொள்ளாது என்பது அவனது பெற்றோர் அன்றி யாரும் அறியாதது. இவளுக்கு எப்படி தெரிந்தது..?

யோசிக்கவும் அவனுக்கு தோன்றவில்லை.. எப்படியோ அவளுக்கு தன்னைப்பற்றி எல்லாம் தெரியும் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு ஒரு சமாதானத்திற்கு வந்திருந்தான் ஆதித்யா.

யோசித்து குழப்பிக்கொள்ள அவன் தயாராயில்லை. இந்த நொடி சந்தோஷத்தை அனுபவிக்க முடிவு செய்திருந்தான்.

திடீரென்று ஒரு ஆணின் குரல் கேட்டது. “எக்ஸ்க்யூஸ் மீ மேம்..”

திரும்பிப் பார்த்தபோது, அந்த வெயிலிலும் சட்டை காலர் வரை பட்டன் போட்டு, டை கட்டியிருந்த சேல்ஸ் மேன் போல் ஒருவன் நின்றிருந்தான். அவன் மதியிடம் ஒரு துண்டுப் பிரசுரத்தை (Pamphlet) நீட்டியிருக்க,

அதை வாங்கி  அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்தாள்.  படித்த மாத்திரத்தில் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, முகம் கோபத்தில் சிவந்தது.

“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இதை கொடுப்ப? இவ்வளவு பெரிய கூட்டத்துல உனக்கு நான் தான் கிடைச்சேனா இதை கொடுக்க?” என்றாள் கோபமாக.

ஆதித்யா ஆர்வத்தை அடக்கமுடியாமல் முடியாமல் அப்படி அதில் என்ன இருக்கிறது என்று அந்தப் பிரசுரத்தை எட்டிப்பார்த்தான். அதைப் பார்த்ததும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 “4 வாரங்களில் உங்கள் தொப்பையை குறையுங்கள் – ஃபிட்னஸ் சேலஞ்ச்.” என்று போட்டிருந்தது. அது ஒரு ஜிம் விளம்பரம்.

“என்னை பார்த்தா குண்டம்மா மாதிரி தெரியுதா? எனக்கு எப்படி இந்த நோட்டீஸ தரலாம்..?” என்று  அந்த ஆளை அடிக்கப் பாய்ந்தவளை ஆதி தடுத்து நிறுத்தினான்.

ஆனால் அந்த விற்பனையாளர் விடவில்லை. “சாரி மேடம், நீங்க பானி பூரிய முழுங்குற ஸ்பீட பார்த்தா சீக்கிரமே உங்களுக்கு எங்க உதவி தேவைப்படும்னு நினைச்சேன்.. இதுக்கு பேரு தான் பிசினஸ் ஃபோர்காஸ்டிங் (Business Forecasting)..” என்று பெருமையாகச் சொன்னான்.

“யோவ் ஓடிப்போயிடு.. இல்லாட்டி உன்னை..” என்று அவள் தன் கைப்பையைத் தூக்கி அடிக்கப் போனாள். அவன் பயந்து ஓடிவிட்டான்.

அவள் முகத்தைப் பார்த்த ஆதி விழுந்து விழுந்து சிரித்தான்.கோபத்தில் அவள் சாப்பிட்ட பூரியைப் போலவே அவள் கன்னங்கள் உப்பிப்போயிருந்தது.

“உங்களுக்கு சிரிப்பா இருக்கா.. இப்ப வயிறு அப்படியே குளு குளுன்னு இருக்குமே.. நான் போறேன் போங்க..” என்று கோபமாகச் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

ஆதி பானி பூரிக்கு பணம் கொடுத்துவிட்டுத் திரும்பியபோது, அவனது இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.

சாலையைக் கடக்க முயன்ற மதியின் மீது ஒரு கார் வேகமாக மோத வந்தது. கடைசி நேரத்தில் அதைக் கவனித்த மதி செய்வதறியாமல் திகைத்து நிற்க, ஆதி மின்னல் வேகத்தில் அவளை இழுத்துத் தன் அணைப்பிற்குள் சிறைப்படுத்தினான்.

மதி அதிர்ச்சி நீங்காமல் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவனது இதயத்துடிப்பு வெடித்துவிடுவது போல வேகமாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. கடந்த காலத்தில் இதே போன்ற ஒரு விபத்திலிருந்து அவன் அவளைக் காப்பாற்றியது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவனது இதயம் இப்போதும் அதே வேகத்தில் துடிக்கிறது. அவன் பழையவற்றை மறந்திருக்கலாம், ஆனால் அவனது உள்மனம் மாறவில்லை.

அவளுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணமே ஆதித்யாவின் இரத்ததை உறையசெய்தது. விபத்தில் இன்னொரு உயிரைப் பறி கொடுக்க அவனால் முடியாது.. அதுவும் மதி என்றால் கற்பனை செய்யக்கூட முடியாது.

அவளை இழந்திருப்போம் என்ற பயம் அவள் மேலேயே கோபமாக வெடித்தது.

“பார்த்து நடக்கமாட்டியா..?என்ன அவ்ளோ அலட்சியம் உனக்கு? ரோட்டுல எப்படி நடக்கணும்னு கூட தெரியாதா? ஐ குட் ஹேவ் லாஸ்ட் யூ.. யூ இடியட்..” என்று கத்தினான்.

அவன் கோபத்தைக்கண்டு  திகைத்துப்போய் நின்றவளை விறு விறுவென காரை நோக்கி இழுத்துச் சென்றான். அவளை காருக்குள் ஏற்றிவிட்டு, கோபமாக காரை ஓட்டினான்.

இறுகிப்போயிருந்த அவன் முகத்தைப்பார்த்து அவளுக்கு பேச்சே எழவில்லை.சற்று பொறுத்து,

“சாரி..” என்றாள் மெதுவாக.

“எனக்கு ஏன் சாரி சொல்ற? நீதான் போய் சேர்ந்திருப்ப..” என்று எரிந்து விழுந்தான்.

“இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன்..”

அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

“அதான் சாரி சொல்றேன்ல?” அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“இப்ப என்ன பண்ணனும் அதுக்கு?”

“ஏன் இன்னும் கோபமா இருக்கீங்க?”

“நான் கோபமா இருக்கேன்னு யாரு சொன்னா?”

“அதான் உங்க மூஞ்சி சிடுசிடுன்னு இருக்கே..”

“என் மூஞ்சியே அப்படித்தான்..!”

“இல்ல.. நீங்க கோபமாதான் இருக்கீங்க..”

“இல்லை..”

“ஆமா..”

“இல்லைன்னு சொல்றேன்ல..”

“நான் நம்ப மாட்டேன்..”

“என்ன பண்ணா நம்புவ?”

“என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போங்க.”

“முடியாது..”

“பாத்தீங்களா நீங்க கோபமா இருக்கீங்க?”

“இல்லைனு சொன்னா விடமாட்டியா..”

“அப்போ பீச்சுக்கு?”

“போலாம்..” அவனது விருப்பத்திற்கு மாறாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

அவள் முகம் சட்டென்று மலர்ந்து விகசித்தது. அவன் இறுக்கமும் சற்று தளர்ந்தது.

அடுத்து பீச் டேட் போலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!