அந்த வெறிச்சோடிய சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த காரினுள் இருந்து தெளிவற்ற உரத்த குரல்களும், சிரிப்புச் சத்தங்களும் காற்றில் கரைந்து கேட்டன. காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதியின் முகம் வெட்கம் பூசிய புன்னகையில் சிவந்திருந்தது.
“ஹே சாரதா, உனக்கு போட்டியா ஒரு ஆளு வந்துட்டாங்க போல இருக்கு.. உன் பையன் யாரோ ஒரு பொண்ணைப்பத்தி இப்படி புகழ்ந்து தள்ளுறான்..” ஆதித்யாவின் அப்பா, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தபடி, பின் சீட்டில் இருந்த அம்மாவிடம் கேலியாக கூறினார்.
Advertisement
“என்ன ஆதி, அப்படியாடா?” ஆதியின் அம்மா கேலிபோல கேட்டாலும் உள்ளுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு பாதுகாப்பற்ற உணர்வும் அந்த குரலில் எட்டிப்பார்த்தது.
“அம்மா.. யாரு வந்தாலும் எனக்கு நீங்கதான் எப்பவுமே ஸ்பெஷல்..” ஆதி அம்மாவுக்கு ஐஸ் வைத்தான்.
சட்டென்று முகம் மலர்ந்தவராக “பாருங்க, இவன் எப்பவுமே என்னோட செல்லப் பிள்ளைதான்..” என்றார்.
“அதானே.. டேய் ஆதி.. இது என்னடா புது கதை? அந்தப் பொண்ணை லவ் பண்றியா?”
“ம்மா..அந்த அளவுக்கெல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை.. ஆனா எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு அவ்வளவுதான்..” என்று வெட்கத்துடன் புன்னகைத்தான் அவன்.
மகனின் கன்னங்கள் சிவந்து போவதை கவனித்த அவன் அம்மா ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள். அவன் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசி இப்படி வெட்கப்படுவதை அவள் பார்த்ததே இல்லை.
Advertisement
“உனக்கு மட்டும் பிடிச்சா போதுமா… எனக்கெல்லாம் பிடிக்க வேண்டாமா?”
“அவளைப் பார்த்தா உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும் மா..” என்றான் மகன் உறுதியாக
“அது எப்படி அவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற?”
“ஏன்னா எனக்கு பிடிச்ச எல்லாமே உங்களுக்கும் பிடிக்கும் தானே?” என்று தன் அம்மாவை சாமர்த்தியமாக மடக்க,
“நல்லா பேசக் கத்துக்கிட்டடா தம்பி நீ.. எல்லாம் சரி.. ஆனா இது லவ் பண்ற வயசு இல்லை மறந்துடாத…” என்று ஒரு கண்டிப்பான தாயாகச் சொன்னாள்.
“அது எனக்கும் தெரியும் மா…ஆனா எதிர்காலத்துல நான் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது அவளா மட்டும்தான் இருக்கும்.. அவ இல்லன்னா வேற யாரும் இல்லை…’ என்று மிகவும் ஆழமான குரலில் அத்தனை தீர்க்கத்துடன் சொன்னான்.
அவன் குரலில் இருந்த தீவிரத்தைக் கேட்டு அவன் பெற்றோர் ஒருகணம் திகைத்துப் போனார்கள். மகனறியாமல் அர்த்தம் பொதிந்த பார்வையொன்றை பரிமாறிக்கொண்டனர்.
ஜாலியாக பேசிக்கொண்டிருந்த உரையாடலில் தான் கொஞ்சம் அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என்று நாக்கைக் கடித்துக்கொண்டான் ஆதி.
“இத வச்சே ரெண்டு பேரும் என்னை ஓட்டித் தள்ளிடுவாங்களே..” என்று ஒரு பெருமூச்சுடன் அவர்களைத் திரும்பிப் பார்த்தான்.
இருவரும் உறைந்து போனது போல முகத்தில் மிகையான அதிர்ச்சியைக் காட்ட,
“டாட்… மாம்… ப்ளீஸ்.. என்னை எம்பாரஸ்(embarrass) பண்ணாதீங்க” அவன் கன்னங்கள் வெட்கத்தில் செந்நிறம் கொண்டன.
தன் மகன் வெட்கப்படுவதைப் பார்த்து ரசித்த பெற்றோர், அவன் முகபாவனையைக் கண்டு பலமாகச் சிரித்தார்கள். பின்னே அது காணக்கிடைக்காத அதிசயக் காட்சியல்லவா..
திடீரென்று அவன் தந்தை
“ஆதி.. லாரி.. பார்த்து…” என்று அலறினார்.
“ஆதி…” டயர்கள் தேயும் கொடூரமான சத்தம்..
தன் பெற்றோரின் மரண ஓலம்…
“ஆதி…”
“அம்மா…”
“அப்பா..”
ஆதி ஒர் அலறலுடன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான். இதயம் பலமாக அடித்துக்கொண்டது. முகம் வியர்வையில் நனைந்து வெளிறிப் போயிருந்தது,இருண்ட அந்த அறை அவனை மேலும் போட்டு அழுத்துவது போல் இருக்க மூச்சு முட்டியது.
அந்த கோரவிபத்து நடந்த நாளிலிருந்து இந்த பயங்கரமான கனவு மீண்டும் மீண்டும் வந்து அவன் உடலின் ஒவ்வொரு அணுவையும் சிதைத்துகொண்டிருந்தது. நெஞ்சின் மேல் கை வைத்து இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த முயன்றான். எண்களைப் பின்னோக்கி எண்ணினான். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை..நேரம் பார்த்தான், மணி இரண்டு என்று காட்டியது..
பால்கனிக்குச் சென்று கதவைத் திறந்தான். குளிர்ந்த காற்று முகத்தில் மோதி, அவன் கண்ணீரோடு கலந்திருந்த வியர்வைத் துளிகளை உலர்த்தியது.
‘இந்த கொல்லும் நினைவுகளிலிருந்து தப்ப அவனும் எவ்வளவோ முயல்கிறேன்.. ஆனால் இந்த சாபத்திலிருந்து மீள்வே இல்லாதது போல மீண்டும் மீண்டும் தொடங்கிய அதே இடத்திற்கே இழுத்து வரப்படுகிறான்.”
அவனால் எதையுமே முழுமையாக நினைவுகூர முடியவில்லை. பாதியளவு மட்டுமே இருக்கும் அந்த நினைவுகள் அவனை இன்னும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளின.
இறுதியில், தன் பெற்றோரின் மரணத்திற்குக் காரணம் தான் தான் என்ற குற்ற உணர்வு மட்டும்தான் அவனிடம் எஞ்சியிருந்தது.புதிய கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்தோடியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் மறந்துபோன கடந்த காலத்தில் அவன் நேசித்த ஒரு பெண் இருந்தாள் என்பது, தண்மதி உடனான அவனது கனவு உலகத்திலிருந்து அவனைத் தட்டி எழுப்பியது.
தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு, தான் காதலித்த அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுகூர முயன்றான்.
என்ன முயன்றாலும் அவளது முகமோ அல்லது பெயரோ எதுவுமே நினைவு வரவில்லை. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக அந்த மர்மமான பெண் எங்கிருந்தாவது வருவாள் என்று காத்துக் கொண்டிருக்கிறான். அப்படி யாராவது வந்து அவள் தான் அவன் காதலி என்று சொன்னால் கூட, அவனால் அவளை ஏற்றுக் கொள்ள முடியுமா? தெரியவில்லை.
“என் சபிக்கபட்ட வாழ்க்கைக்குள் நான் எப்படி மதியை இழுத்துவிட முடியும்? தங்கம் மாதிரி பொண்ணு அவ, இந்த நரக வாழ்க்கையில் அவளைத் தள்ள என்னால் ஒரு காலமும் முடியாது..ஷி டிசர்வ்ஸ் பெட்டர்.”
‘நான் அவளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.. அதுதான் அவளுக்கு நல்லது.’
மதியைப் பிரியும் எண்ணமே அவன் மூச்சை நிறுத்தியது. இதயம் ஆயிரம் துண்டுகளாகச் சிதறுவது போல இருந்தது. ஆனால் மதிக்காக இந்த வலியைத் தாங்கத்தான் வேண்டும்.
“ஆம்.. இதுதான் சரி.. நான் அவளை என்னிடமிருந்து தள்ளி வைக்க வேண்டும்..” என்று உறுதியாக முடிவெடுத்தவன்,இரவு முழுவதும் தூங்காமல் சூனியத்தை வெறித்தபடி பால்கனியின் நின்றிருந்தான்.
காலையில் மாமரத்துக்குயில் இனிமையாக கூவும் சத்தத்தைக் கேட்டு புன்னகையுடன் எழுந்தாள் மதி. அவளுடைய கனவுகள் எல்லாம் ஆதி சாரைப் பற்றியதாகவே இருந்தன. அவள் கற்பனை கூட செய்யாத பல காட்சிகள் அவளது கனவில் வர,அதை எண்ணி முகம் சிவந்தவள்,
‘ஷேம்லெஸ்டி நீ..’ என்று தன்னைத்தானே திட்டுக்கொண்டாள்.
நேற்றைய சம்பவங்கள் அவளுக்குள் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருந்தது. தான் அவன் மனதை நெருங்கிவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.
குளித்துமுடித்து அன்றலர்ந்த மலரைப் போல புத்துணர்ச்சியுடன் அறையைவிட்டு வெளியே வந்தவள், தன் கண்கள் பார்க்க ஏங்கித் தவிக்கும் அந்த ஒற்றை பிம்பத்தைத் தேடி வீடு முழுவதும் தன் பார்வையைச் சுழல விட்டாள்.
திடீரென்று மாடியிலிருந்து ஆதி இறங்கி வரும் காலடிச் சத்தம் கேட்கவும் அவளது இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.
‘கடவுளே,இப்ப அவரை எப்படி ஃபேஸ் பண்றது?’ வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன தலைகுனிந்து கொண்டாள்.
அவனது நீண்ட கால்கள் அவளை நெருங்குவது கடைக்கண்ணில் தெரிந்தது. ஆனால் அவன் நிற்காமல் அவளைக் கடந்து விறுவிறுவென்று சென்றுவிட மதி புரியாமல் விழி உயர்த்தி விலகி நடக்கும் அவன் முதுகைப் பார்த்தாள். வாயில் கதவருகே சென்று வீட்டுச் சாவியை கையில் எடுத்தவன் லேசாகத்திரும்பி அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை, புருவங்களுக்கு இடையில் ஒரு சுருக்கம் மட்டுமே இருந்தது.
“தண்மதி.. நீ சீக்கிரம் கிளம்பு.. அம்மாவும் அப்பாவும் இப்ப வந்துடுவாங்க…”
‘ஏன் திடீரென்று போகச் சொல்கிறான்? ஏன் என்னை தவிர்க்கிறான்?’ மதி குழம்பினாள். ஏதோ சரியாக இல்லை என்று அவள் உள்ளுணர்வு சொல்ல, வயிற்றில் பயப்பந்து உருண்டது..
“நீ இங்க இருக்கறத பார்த்து அவங்க எதுவும் தப்பா நினைச்சிடப்போறாங்க..”
‘ஓ, என்னோட பேர் கெட்டுப்போய்டும்ன்னு பயப்படுறாரா?சோ ஸ்வீட்..” என்று மனதிற்குள் அவனை கொஞ்சியபடி,ஒரு நிம்மதிப்பெருமூச்சுடன்,
“மாலா ஆன்ட்டியும், குமார் அங்கிளும் தப்பா எதுவும் நினைக்க மாட்டாங்க.. நாம நல்ல ஃப்ரண்ட்ஸ்ன்னு தான் நினைப்பாங்க..” என்றாள்.
“அது இன்னும் மோசம்.. அவங்க அப்படி எதுவும் தப்பா நினைச்சிடக்கூடாதுன்னு தான் கிளம்ப சொல்றேன்..”அவனது வார்த்தைகள் ஊசி போல அவள் காதுகளில் தைத்தன.
‘ஏன் இவன் இப்படிப் பேசுகிறான்? வெறும் சில மணி நேரங்களுக்குள் மொத்தமாக மாறிவிட்டானே!’
அவனது அந்த கடுமையான வார்த்தைகள் அவளைக் கனவு உலகிலிருந்து பூமிக்கு இழுத்துவந்தது.
அப்போதுதான் அவன் அவளது பார்வையைத் தவிர்ப்பதையும், அவனது பேச்சில் இருக்கும் அலட்சியத்தையும் கவனித்தாள். “என்னிடம் இருந்து தள்ளி இரு” என்று அவனது உடல்மொழி கூவியது.
நேற்றைய தினம் என்ற ஒன்று நிகழாதது போல அவன் நடந்து கொண்டான்.
‘மீண்டும் முதலிலிருந்தா? நேற்றைக்குப் பிறகு அது எப்படி சாத்தியம்..?’ என்று அவள் இதயம் கதறியது.
அவளால் அதை அப்படி விட்டுவிட முடியாது. இவ்வளவு தூரம் வந்த பிறகு, அவன் இப்போது பின்வாங்குவதை அவளால் அனுமதிக்க முடியாது..
“கிளம்பு மதி?” அவன் மீண்டும் வற்புறுத்தினான்.
“இல்லை.. நான் மாலா ஆன்ட்டிய பாக்கணும்..” அவள் வெளியேற மறுத்தாள்.
“அம்மாவ பார்க்கனும்னா இன்னொரு நாள் வா.. இன்னிக்கு வேணாம்..”
“இப்ப என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்கறீங்க..? நேத்து நைட் நீங்கதானே..” என்று ஆதங்கத்துடன் தொடங்கியவளை இடையிட்டு,
“நேத்து நைட் நடந்தது ஒரு மிஸ்டேக்.. அத பத்தி நாம பேசவேணாம்..”
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் நெஞ்சில் பாய்ந்து அவள் இதயத்தைகிழிக்க,
‘இல்லை இது நடக்க வாய்ப்பில்லை..’என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டாள் மதி.
“மிஸ்டேக்கா..?எப்படி உங்களால இப்படி சொல்லமுடியுது..?”
அவளது வேதனை நிறைந்த முகத்தைப் பார்த்து அவன் ஒருகணம் தடுமாறினான். ஆனால் உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு,
“நீ என்னை ஒரு கொடுமைக்காரன், அராஜகவாதி, முரட்டுப் பிடிவாதக்கார அரக்கன்னு கூட நினைச்சுக்கோ.. ஆனா நான் இப்படித்தான்.. அதனால நீ என்கிட்ட இருந்து தூரமா இருக்கிறதுதான் உனக்கு நல்லது. ஜாக்கிங் போறேன்.நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்கக் கூடாது.”
என்று சற்றும் இரக்கமில்லாமல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
மதி ஒரு சிலையைப் போல அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள். அந்த வீடு முழுவதும் தன்னைச் சுற்றி சுழல்வது போல இருந்தது. அவள் கால்கள் தளர்ந்தன. தரையில் சரிந்து தொப்பென்று விழுந்தாள்.
“நேத்து நடந்தது ஒரு மிஸ்டேக்…” உதடுகள் முணுமுணுக்க..அவளது கண்களில் கண்ணீர் பெருகி வெடித்துச்சிதறியது.