மறப்பதில்லை மதிமுகம்-32
அத்தியாயம்-32
ஆதி தன் படுக்கையில் அங்கும் இங்குமாகப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். தூக்கம் என்பது அவனுக்கு எட்டாக்கனியாகிப் போனது. ஒவ்வொரு முறை அவன் கண்களை மூடும்போதும், மதியின் வேதனை நிறைந்த முகம் அவனது இதயத்தைத் துண்டு துண்டாக சிதைத்தது.
அன்றைக்குப் பிறகு, அவன் அவளின் கடைசி துளி நம்பிக்கையையும் சிதைத்த கொடுமையான நாளுக்குப் பிறகு மதி ஆபீஸுக்கே வரவில்லை. அதற்குள் ஒரு வாரம் முழுமையாகக் கடந்திருந்தது. அவளைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மதி தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டதாக ஶ்ரீநிதி நவீனிடம் சொல்லியதை ஆதித்யா தற்செயலாகக் கேட்டான்.
Advertisement
இந்த நேரத்தில் அவள் தன் பெற்றோருடன் இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்று அவன் நினைத்துக் கொண்டான்.
இந்த உலகத்திலேயே தாயின் மடியை விட பாதுகாப்பான, நிம்மதியான இடம் இருக்க முடியுமா?
வேறு எப்போதையும் விட இப்போது அவன் மனம் தன் அன்னையை அதிகமாக தேடியது.. அவளது மடியில் படுத்துக்கொண்டு, தன் மனதில் இருக்கும் அத்தனை காயங்களையும், வலியையும், தன் காதலைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போன தன் கையாலாகாத்தனத்தையும், தன்னவளை காயப்படுத்திய தன் பாவச்செயலையும் கொட்டி அழ வேண்டும் போல இருந்தது. அவனுக்குத் தேவையெல்லாம் சாய்வதற்கு ஒரு மடியும், தன் வலியைப் பகிர்ந்துகொள்வதற்குக் கொஞ்சம் அன்பான இதயமும் மட்டும்தான்… ஆனால், அவனுக்கு அதற்கும் கொடுத்துவைக்கவில்லை.
Advertisement
அவனது அம்மா அவனுடன் இல்லை… இப்போது தண்மதியும் இல்லை,தான் இப்போது உண்மையிலேயே ஒரு அநாதை என்பதை அவன் முழுமையாக உணர்ந்தான்.
Advertisement
தன் சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், கதவு திறக்கப்பட்டதையும், ஒரு மெலிந்த உருவம் அறைக்குள் நுழைவதையும் அவன் கவனிக்கவில்லை. ஒரு மென்மையான கை அவனது நெற்றியைத் தொட்டு, அங்கிருந்த சுருக்கங்களை நீக்குவது போல மெதுவாக வருடியது.
அவன் சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தபோது, மாலா அம்மாவின் கவலை தோய்ந்த கண்கள் அவனை எதிர்கொண்டன.
“என்னப்பா… இன்னும் தூங்கலையா நீ?”
Advertisement
“தூக்கம் வரல மா.. நீங்க ஏன்மா இன்னும் தூங்கலை?”
“நீ தூங்காம இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படிப்பா தூக்கம் வரும்?”
“சரி மா, நான் தூங்குறேன்..நீங்க போங்க.”
“இல்லை, நீ தூங்குறதை பார்த்துட்டுதான் நான் போவேன். கொஞ்ச நாளா நீ சரியாவே தூங்குறது இல்லைன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நீ தூங்காம இருக்குறதால எதுவும் சரியாகப் போறது இல்லை… சோ, கண்ணை மூடி ஒழுங்காத் தூங்கு. அட்லீஸ்ட் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்றதுக்கான தெம்பையாவது அது உனக்குக் கொடுக்கும்.”
அவரது அந்த அதிகாரமும் அன்பும் கலந்த வார்த்தைகளால் அவனது தொண்டை அடைத்தது. அதை மிகக் சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டு கேட்டான்…
“அம்மா… கொஞ்ச நேரம் நான் உங்க மடியில படுத்துக்கட்டுமா?”
அவர் புன்னகையோடு தலையசைத்து, அவனைத் தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டு அவனது தலைமுடியைப் பாசத்தோடு கோதிவிட்டார்.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது; அவனது சத்தமில்லாத அழுகையால் அவனது உடலே நடுங்கியது.
“என்ன ஆச்சுப்பா…?” அவரது குரலில் பதற்றம் தெரிந்தது.
“அம்மா… இந்த உலகத்துலயே நான்தான் ரொம்ப மோசமான மகனா இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். அதான் கடவுள் எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரையுமே இல்லாம பண்ணிட்டாரு. அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் இருந்திருந்தாகூட நான் இப்படி அநாதையாகி இருக்க மாட்டேன்ல மா…? நான் அவ்வளவு மோசமான பையனா? கடவுள் ஏன் மா எனக்கு இப்படி பண்ணாரு?” அவன் மிகுந்த வேதனையோடும் வலியோடும் கேட்டான்.
அவனது தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்த கை அப்படியே நின்றது. அவர் மெதுவாக அவனைத் தன் மடியிலிருந்து விலக்கினார். அவன் புரியாமல் பார்க்க, அவரின் வேதனையில் கசங்கிய முகத்தைக் கண்டு அவன் பேச்சற்றுப் போனான்.
“லைஃப்ல சில விஷயம் இப்படித்தான்னு முடிவாகியிருக்கும். அதை நாம எவ்வளவு ட்ரை பண்ணினாலும் மாத்த முடியாது. இப்போ நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் உன்னோட மனசுல என்னை அம்மாவா ஏத்துக்க முடியலை இல்ல… அதுமாதிரி தான். நான்தான் பைத்தியக்காரி, நீ அம்மானு கூப்பிடுறதை உண்மைனு நம்பி சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். என்ன பண்ணினாலும் நான் ‘மலடி’ தான் என்ற உண்மை மாறப்போறது இல்லைனு இப்போ புரிஞ்சுக்கிட்டேன்…”
அவரது வார்த்தைகளைக் கேட்டு அவன் முற்றிலும் அதிர்ந்து போனான்; தான் தற்செயலாகத் தன்னை ‘அநாதை’ என்று குறிப்பிட்டது, மாலா அம்மாவை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
“இப்படிச் சொல்றதால மாலா ஆன்ட்டிக்கு நீங்க எவ்வளவு பெரிய அநியாயம் பண்றீங்க தெரியுமா? உங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்க…” தண்மதி அன்று கூறிய வார்த்தைகள் அவனது மனதில் இடியைப் போல இறங்கியது.
“அம்மா… நான் அந்த அர்த்தத்துல சொல்லல மா…” அவன் பதற்றத்துடன் அவசரமாக மறுத்தான், ஆனால் அதற்குள் நடக்க வேண்டிய சேதாரம் நடந்துவிட்டது.
“பரவாயில்லைப்பா… எனக்குப் புரியுது.. நீ தூங்கு…” அவர் எழுந்து நின்று, மெதுவான, பலவீனமான அடிகளோடு அறையை விட்டு வெளியேறினார்.
அவரது சரிந்த தோள்களையும் தளர்ந்த நடையையும் பார்த்தபோது, அவனுக்குள் ஒரு கூர்மையான வலி ஊடுருவியது.
‘இன்னைக்கு என் வாழ்க்கையிலேயே மிக புனிதமான ஒரு ஆன்மாவை, என் வார்த்தைகளின் உச்சக்கட்ட கொடூரத்தால் காயப்படுத்திட்டேன்.. என் கார்டியன் ஏஞ்சலோட (மதியின்) வார்த்தைகளை நான் அலட்சியப்படுத்தாம இருந்திருந்தா இன்னைக்கு இது நடந்திருக்காது…’
“என்னோட கஷ்டம் என்னோட வலின்னு எனக்குள்ளயே மூழ்கிப்போய் நான் மத்தவங்களுக்கு தர்ற வலியை கணக்குல எடுத்துக்காம போய்ட்டேன்..”
‘இப்படி வாழ்க்கை முழுக்க ஒரு அசுரனா வாழ்ந்திருக்கேன்… எல்லார்கிட்டயும் இருந்து அன்பை உறிஞ்சிக்கிட்டு., அவங்களுக்குப் பதிலுக்கு வலியை மட்டும்தான் கொடுத்திருக்கேன்.தன்னிரக்கதிலேயே மூழ்கிப்போய், தன்னை சுற்றியிருந்த அன்பு நிறைந்த உள்ளங்களை அலட்சியப்படுத்தியிருக்கேன்.’
இழந்த புதையலை எண்ணி வருந்தி கையிலிருக்கும் பொக்கிஷத்தை தவறவிட்டிருக்கேன்.
தற்செயலாகச் சொன்ன வார்த்தைகளே மாலா அம்மாவை இந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறது என்றால், தான் வேண்டுமென்றே மதிக்கு வலிக்க செய்த செயல்களும், கொட்டிய தேள் வார்த்தைகளும் அவளை எவ்வளவு தூரம் சிதைத்திருக்கும்?
அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது மதியின் இதயம் எவ்வளவு தூரம் நொறுங்கியிருக்கும்…?’
ஒருமுறை கூட நான் என் இதயத்தோட குரலைக் கேட்காததால்தானே இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு… கடவுளே, நான் என்ன பண்ணி வச்சிருக்கேன்? நான் செஞ்ச இந்தச் சேதாரங்களையெல்லாம் எப்படிச் சரி செய்யப் போறேன்..? அவளோட முகத்தைப் பார்க்கக்கூட எனக்கு தகுதி இருக்கா…?’
குற்ற உணர்ச்சி அவனைக் கூர்மையாகக் குத்தி, முன்னெப்போதையும் விட ஆழமாகக் காயப்படுத்தியது. அவனது ஒட்டுமொத்த உடலும் வலியால் சுருண்டது.
“ஐ அம் சாரி மா.. ஐ அம் சாரி மதி…” அவனது இதயம் வலியால் துடித்தது.
அவனது இதயத்திற்கும் மூளைக்கும் இடையே போர் தொடங்கின பிறகு, முதல் முறையாக அவன் தன் இதயத்தின் பக்கம் செல்ல முடிவு செய்தான்.
‘இனிமேல் நான் என் இதயத்தோட குரலை மட்டும்தான் கேட்பேன், எப்பவுமே என்னை தப்பான வழியில நடத்தி என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கெடுத்த அந்தப் பாழாப்போன மூளையோட பேச்சைக் கேட்க மாட்டேன்…’
அவளோட சார்பா முடிவு எடுக்க நான் யாரு..? அவளோட சந்தோஷம் எதுல இருக்குன்னு தீர்மானிக்க நான் யாரு..? அவளை இந்த அளவுக்குக் கொடூரமான முறையில காயப்படுத்த நான் என்ன பெரிய இவனா? மத்தவங்களோட சுதந்திரத்துல தலையிட்டு நான் பண்ணின சர்வாதிகாரத்துக்கு இதோட முற்றுப்புள்ளி வைக்கிறேன். இனிமேல் நான் எந்த ஒரு முடிவும் எடுக்கப் போறது இல்லை…’ என்னை அவகிட்ட முழுசா ஒப்படைச்சிடபோறேன்… அவளே என்னோட எதிர்காலத்த தீர்மானிக்கட்டும். நான் கொடூரமா நசுக்கின அவளோட புன்னகையை அவ முகத்துல திரும்பக் கொண்டு வருவேன், என் அலட்சியத்தால நான் பாழாக்கின எல்லாத்தையும் சரி செய்வேன்.’
வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்கான அந்த உறுதியும் ஞானமும் அவனுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது. உலகத்தின் இருளை மட்டுமல்லாமல், அவனது இதயத்தில் படிந்திருந்த எதிர்மறை எண்ணங்களின் அந்தகாரத்தையும் விரட்டியடித்தபடி அதிகாலை விடிந்தது.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ஆதி, தன்னையே ஏதோ புதிய மனிதன் போல் பார்த்தான். வெகு நாட்கள் கழித்து தன் பிம்பத்தை பார்த்து மனதாரப் புன்னகைத்தான்.
வீடு முழுவதும் ஒரு சுவையான வாசனை பரவிக் கிடக்க, மாலா அம்மா சமையலறையில் எதையோ வறுப்பதில் பிஸியாக இருந்தாள்.
“அம்மா.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..?” அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்துக் கொண்டு கேட்டான்.
அவள் ஒரு கணம் திடுக்கிட்டு, ஆச்சரியத்துடன் அவனது முகத்தைப் பார்க்கத் திரும்பினாள்.
“அம்மா.. என்னை அப்படிப் பார்க்காதீங்க மா.. நான் எவ்வளவு மோசமா இருந்திருக்கேன்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…”
“ஐ அம் ரியலி சாரி மா..நான் என்னைப்பத்தி மட்டுமே யோசிச்சு.. ரொம்ப செல்ஃபிஷா நடந்துக்கிட்டேன்.. உங்களைக் காயப்படுத்துறேன்னு தெரியாமலேயே நிறைய காயப்படுத்தியிருக்கேன்.. ஆனா நீங்க நான் பண்ணின எல்லா டார்ச்சரையும் தாங்கிக்கிட்டு என் மேல இவ்வளவு அன்பா இருக்கீங்க.. இதைவிட எனக்குப் பெரிய கிஃப்ட் என்னமா இருக்க முடியும்..? இனிமேல் உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நான் எதுவும் பேச மாட்டேன்.. நான் ஒரு லூசுன்னு உங்களுக்குத் தெரியும் தானே.. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க மா…” ஒரு அப்பாவிக் குழந்தையைப் போன்ற முகபாவனையோடு அவன் உருக்கமாகக் கேட்டான்.
மாலா அம்மா அப்படியே திகைத்துப் போனார்… ஆதி இவ்வளவு நீளமாகப் பேசுவதை தன் காதுகளாலேயே நம்ப முடியவில்லை.எப்பொழுதும் மணிரத்னம் சினிமாக்களில் வருவது போல சில வார்த்தைகள் மட்டுமே அவனிடமிருந்து வரும்.அவனுக்குக் காய்ச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவனது நெற்றியை பதற்றத்தோடு தொட்டுப் பார்த்தாள்.
“அம்மா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..”
“ஆதி.. நீ இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கப்பா.. இதுவரைக்கும் உன்னை நான் இப்படிப் பார்த்ததே இல்லை.. என்ன ஆச்சு உனக்கு?” அவளது குரலில் ஒரு பயம் தெரிந்தது.
“நீங்க சொல்றது கரெக்ட்தான் மா.. நான் இன்னைக்குத்தான் புதுசா பிறந்த மாதிரி ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கேன்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்.. நீங்க நேத்து சொன்னது என் கண்ணைத் திறந்து வச்சிடுச்சு மா.. இனிமே என் மனசுல இருந்த நெகட்டிவிட்டி எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு.. பாசிட்டிவா இருக்கப் போறேன்.. ஐ அம் கோயிங் டு லிவ் மை லைஃப் டு தி ஃபுல்லஸ்ட் மா..” அவன் உற்சாகமாகப் பிரகடனம் செய்தான்.
“நேத்து ஏதோ ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன்.. அதை மனசுல வச்சுக்கிட்டு.. உனக்குப் பிடிக்காத எதையும் ஃபோர்ஸ் பண்ணி பண்ண வேண்டாம் ஆதி.. நீ இப்ப எப்படி இருக்கியோ, அதுவே எனக்கு ஓகே தான்…” தன்னைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவன் ஏதோ நடிக்கிறானோ என்று எண்ணினார்.
“இல்லை மா.. இதுதான் நான்.. முதல்ல இருந்தது வேற யாரோ.. இனிமேல் நான் நானா இருக்கப் போறேன் மா, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…” அவன் கீழே குனிந்து அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினான்.
“நல்லா இருப்பப்பா.. உன்னை இப்படிப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ இப்படி இருக்கணும்னுதான் நானும் உங்க அப்பாவும் ஆசைப்பட்டோம்…” தன் புடவையின் முனையால் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
அப்போதுதான் அவனது கேஷுவல் உடையையும், தோளில் இருந்த பேக்கையும் கவனித்தவர்…
“எங்க கிளம்பிட்ட ஆதி.. ஆபீஸ் போலையா…?”
“இல்லை மா.. நான் வேறொரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு..”
“எங்க?”
“சேலம்.”
“சேலமா..? அங்க எதுக்கு?”
“நீங்க ரொம்ப நாளா வீட்டுக்கு ஒரு மருமகள் வேணும்னு சொல்லிட்டு இருக்கீங்கள்ல.. அதான் உங்க மருமகளைக் கூட்டிட்டு வரப் போறேன்…”
அவன் தன் கண்களில் குறும்பு மின்னச் சொல்லிவிட்டு, பளிச்சிடும் புன்னகையோடு வெளியே நடந்தான்.
அவன் செல்வதையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென்று விஷயம் புரிந்ததும் முகம் அப்படியே பிரகாசமடைந்தது.
“சேலம்… மருமகள்… மதி…” அவரது உதடுகள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தங்களுக்குள் அடக்க முடியாமல் காதுவரை விரிந்து சிரித்தன.
தொடரும்..

