மறப்பதில்லை மதிமுகம்-35
அத்தியாயம்-35
“சிதைஞ்சு போயிருக்கற என்னோட இந்த வாழ்க்கைக்குள்ள உன்னையும் இழுக்க எனக்கு இஷ்டமில்லை மதி.. நீ என்னை விட்டுத் தள்ளி இருக்கிறதுதான் உனக்கு நல்லதுன்னு நான் நினைச்சேன் அதான் நான் அப்படி உன்னை அவாய்ட் பண்ணேன், உன்ன ஹர்ட் பண்ற மாதிரி பேசினேன்..”
அவனது இந்த வாக்குமூலத்தைக் கேட்டதும், அவள் முழுமையாக அவன் பக்கம் திரும்பி, அனல் பறக்கும் பார்வையோடு அவனை நேருக்கு நேர் எதிர்கொண்டாள்.
Advertisement
“ஒருவேளை இந்த விஷயத்தைச் சொல்லி என்னைச் சமாதானப்படுத்தலாம்னு நீங்க நினைச்சிருந்தா, நீங்க தப்பா கணக்கு போட்டுட்டீங்க! இது உங்களை இன்னும் அதிகமா வெறுக்கத்தான் வைக்குது!”
“நீங்க என்ன பெரிய தியாகச் செம்மலா? எனக்கு எது நல்லதுன்னு முடிவு பண்ண நீங்க யாரு? என் சார்பா முடிவெடுக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா? என் வாழ்க்கையைத் தனியா வழிநடத்த எனக்குத் தெரியாதா? உங்களுக்கு ஹெல்த் இஷ்யூஸ் இருக்குன்னா.. அதை என்கிட்ட சொல்லியிருக்கணும், அதைப்பத்தி முடிவெடுக்கிற உரிமையை என்கிட்ட விட்டிருக்கணும். ஆனா அதுக்கு பதிலா நீங்க என்ன பண்ணீங்க? என்னையும் என்னோட உணர்வுகளையும் ரொம்ப அலட்சியமா அசிங்கப்படுத்தினீங்க! இப்ப நீங்க சொல்ற இந்த விளக்கமெல்லாம் நீங்க எனக்குக் கொடுத்த அத்தனை வலிகளையும் சரி செஞ்சிடுமா? நல்லா கேட்டுக்கோங்க… உங்க மேல பைத்தியமா இருந்த அந்த பழைய தண்மதி எப்பவோ செத்துட்டா! உங்களை நான் என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்!”
“நீ என்னை மன்னிக்கவே வேண்டாம் மதி… ஆனா உன்னோட பக்கத்துல இருக்க மட்டும் எனக்கு அனுமதிகொடு. ப்ளீஸ், என்கூடத் திரும்ப வந்துடு. நீ என்னை என்ன வேணா பண்ணு, என் மேல கோபப்படு, என்னை தண்டி, என்கூட சண்டை போடு..ஆனா என்னை விட்டு மட்டும் தூரப் போகாத.. ப்ளீஸ் என்கூட வந்துடு,” அவன் அத்தனை தவிப்போடு அவளிடம் கெஞ்சினான்.
Advertisement
“நான் வரமாட்டேன்.. உங்களைத் தண்டிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை, அதுல எந்த அர்த்தமும் இல்லை. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனிமேல் உங்க பக்கத்துல இருக்க எனக்கு எந்தக் காரணமும் இல்லை,” அவள் உறுதியாகச் சொன்னாள்.
Advertisement
“ஆனா எனக்கு காரணம் இருக்கே..!”
அவள் தன் புருவங்களைச் சுருக்கி அவனைப் பார்க்க,
“ஐ லவ் யூ பேபி.. நான் உன்னை அவ்வளவு உயிரா காதலிக்கிறேன். உயிர் வாழ்றதுக்கு ஆக்சிஜன் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நீ எனக்கு முக்கியம்! ஆஃபீஸ்ல உன்னை மீட் பண்ணதுக்கு அப்புறம்தான் இந்தக் காதல் வந்ததுன்னு எனக்குத் தோணல.. நான் பல யுகங்களா உன்னைத்தான் காதலிச்சிட்டு இருக்கேன்னு தோணுது. இத்தனை வருஷமா உனக்காகத்தான் என் இதயம் காத்துகிட்டு இருக்கு மதி, உன்னைத் தவிர வேற யாரையும் என்னால காதலிச்சிருக்க முடியும்னு எனக்குத் தோணல..!”
Advertisement
அவனது உள்ளார்ந்த காதல் பிரகடனத்தில் அவளது காதல்கொண்ட மனம் ஒருகணம் நின்று பின் துள்ளலுடன் வேகமெடுத்தது.. இந்த வார்த்தைகளைக் கேட்கத்தானே அவளது மனம் இத்தனை வருடங்களாக ஏங்கித்தவித்தது! ஆனால், காயம்பட்ட அவளது இதயம், அவனிடம் அத்தனை சீக்கிரம் சரணடைய மறுத்துப் போராடியது.
“நான் உன்னை ரொம்பவே ஹர்ட் பண்ணியிருக்கேன்னு எனக்குத் தெரியும்.. அதனால உன்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கிற உரிமை எனக்கு இல்லை. ஆனா உன்னோட இதயம் என்னை ஏத்துக்குற வரைக்கும் என்னால காத்திருக்க முடியும். நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன், அதே சமயம் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். உன்னோட அத்தனை கோபத் தடைகளும் உடைகிற வரைக்கும் நான் உன்னை சமாதானப்படுத்திக்கிட்டேதான் இருப்பேன். முன்னாடி நீ எனக்காக போராடின மாதிரி, இப்போ உனக்காக நான் போராடப்போறேன்..!”
“நான் கிளம்புறேன்.. உங்களோட இந்த உளறல்களைக் கேக்குறதுக்கு எனக்கு நேரமில்லை..!” அவனது காதலை அலட்சியப்படுத்துவது போலப் பேசிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்ப,
“தண்மி…” காந்தத்தின் ஈர்ப்போடு ஒலித்த அந்தக்குரலில் அவள் இதயம் மீண்டும் படபடத்தது..
“ஐ லவ் யூ சோ மச்..” ஆழ்ந்த குரலில் சொல்லியபடி தன் முகத்தின் முழு வசீகரத்தையும் காட்டி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவள் ஒரு கணம் அவனது கொல்லும் அழகில் சொக்கிப்போனாள்..
அவளது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது; வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, தலை சுற்றிப்போனாள், அவன் கட்டிய அந்த மந்திர வலைக்குள் அவள் மூழ்கிப் போவது போல உணர்ந்தவள்.. அடுத்த கணமே அந்த மயக்கத்திலிருந்து சட்டென்று வெளிவந்தாள், துப்பட்டாவைத் தன் இதயத்தின் மேல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பலத்த மூச்சு வாங்கியபடி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
‘கடவுள் இந்த ஹிட்லருக்கு இவ்வளவு அழகான முகத்தையும், வசிய சிரிப்பையும் குடுத்தது போதாதுன்னு கூடவே கன்னத்துல ஒரு அழகான குழியையும் வேற கொடுத்திருக்காரு.. இதெல்லாம் ரொம்ப அன்ஃபேர்(unfair).இல்லை.. நான் இவனோட வலையில விழக்கூடாது. இது நடக்கவே கூடாது.. கடவுளே என்னைக் காப்பாத்து!’
இவள் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது,
“தண்மி.. ப்ளீஸ் இவ்வளவு சீக்கிரம் என்கிட்ட விழுந்துடாத.. என்னை இன்னும் கொஞ்சம் கெஞ்ச விடு” என்றான் அவன் குறுஞ்சிரிப்புடன்..
தன் முகச்சிவப்பை மறைக்கப்போராடித் தோற்று, அங்கிருந்து வெளியே ஓடிப்போனவளை அவன் சிரிப்பொலி துரத்தியது.
மறுநாள் காலை, தண்மதி தன் கையின் பின்புறத்தால் தூக்கம் சொக்கும் கண்களைத் துடைத்துக் கொண்டே தன் அறையை விட்டு வெளியே வந்தாள். அப்படியே சமையலறையை நோக்கி நடந்தபடியே, “அம்மா… காஃபி …” என்றவள்
வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதித்யாவை பார்த்து திகைத்து நின்றுவிட்டாள்.
அவளை மேலும் கீழும் பார்த்தவனின் முகத்தில் மந்தகாச புன்னகை தவழ்ந்தது,
தான் கலைந்த தலைமுடி, சொக்கும் கண்கள், கசங்கிப் போன நைட்டி, என்று அவன் முன் நிற்பதை எண்ணி கூசி சட்டென்று சமையலறைக்குள் புகுந்து மறந்தாள்.
சமையலறைக்குள் வந்து நின்ற மதியிடம், அவளது அம்மா ஒரு காஃபி கப்பை நீட்டினாள்.
“தேங்க்ஸ் மா.. என்னோட தேவை அறிஞ்சு காஃபி கொடுக்குற பாரு, அம்மான்னா அம்மாதான்..!” என்று உருகியபடியே முன்னோக்கிக் குனிந்து, அந்த காபியின் நறுமணத்தை ஆழமாக இழுத்துத் தன் நுரையீரலை நிரப்பினாள்.
“ம்ம்ம்…”
அம்மா அவளது தலையில் நறுக்கென்று ஒரு கொட்டுவைத்து,
“ஹேய், உனக்கு யாருடி காஃபி கொடுத்தா? இதை முதல்ல ஆதி தம்பிகிட்ட கொண்டு போய் குடு…”
“அம்மா! இது டூ டூ மச் மா.. நான் உன்னோட சொந்தப் பொண்ணு, எனக்குக் காஃபி கொடுக்க மாட்டியா?” அவள் உதட்டைப்பிதுக்கினாள்.
“காபி வேணும்னா முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வாடி… ஆறு கழுதை வயசாகுது, இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம இருக்கா! உன்னைக் கட்டிக்கப் போறவனை நினைச்சா எனக்கு ரத்தக் கண்ணீரே வருது.. பாவம், அவன் யாரு பெத்த புள்ளையோ..!”
“போதும் மா நீங்க புலம்பினது.. கொடுங்க அதை..!” எரிச்சலோடு அம்மாவின் கையிலிருந்த கப்பை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, முணுமுணுத்தபடியே விறுவிறுவென்று அங்கிருந்து நடந்தாள்.
வரவேற்பறையில் இருந்த சிறிய டீப்பாயின் மீது “டங்” என்ற சத்தத்துடன் அந்த கப்பை வைத்தாள். அந்தச் சத்தத்தில் நிமிர்ந்தவனிடம்,
“காஃபி…” என்றாள் எங்கோ பார்த்தபடி,
அவன் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்போடு காபியை லேசாக ஒரு மடக்கு குடித்துவிட்டு,
“மதி, எனக்குப் பல ஹெல்த் பிராப்ளம்ஸ் இருக்கலாம்.. ஆனா டயாபடிஸ் கண்டிப்பா இல்லை. சோ, ப்ளீஸ் கொஞ்சம் காஃபியில சர்க்கரை போட்டு எடுத்துட்டு வா..”என்றான்.
“காஃபி அம்மா போட்டது.. அவங்க போடுற காஃபி எப்பவுமே பர்ஃபெக்ட்டா இருக்கும்,”
“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றியா?”
“யாருக்குத் தெரியும்..?” அலட்சியமாக தோளைக்குலுக்கினாள்.
“நிஜமாவே இதுல சர்க்கரை இல்லை மதி..” அவன் சலித்துப்போன குரலில் சொன்னான்.
‘இப்படிச் சொன்னா.. உடனே நான் அதை குடுச்சுப் பார்த்துட்டு, சர்க்கரை சரியாத்தான் இருக்குன்னு சொல்லுவேன்.. அப்புறம் உன்னோட உதடு பட்டதால காபி ரொம்ப ஸ்வீட்டா இருக்குன்னு வழிவான்! இதெல்லாம் நான் எத்தனை மூவில பார்த்திருக்கேன்.. என்கிட்டயேவா உன் வேலையைக் காட்டுற..?’
மதி தனக்குள்ளேயே ஒரு நக்கலான புன்னகையோடு
“என்னை இந்த காஃபியை ருசி பார்க்க வைக்கிறதுக்காகத்தானே நீங்க இப்படிப் பண்றீங்க? ஆனா அது கண்டிப்பா நடக்காது!” அவனது கண்களை நேராகப் பார்த்து ஒரு சவாலான பார்வையோடு சொன்னாள்.
அவனும் அவளது பார்வையை ஒரு நொடி கூட விலகாமல் நேருக்கு நேர் எதிர்கொண்டான்.
“நான் உன்னை அதை ருசி பார்க்கச் சொன்னேனா மதி..? சும்மா ஒரு டீஸ்பூன் சர்க்கரையைப் போட்டுத் திரும்பக் கொண்டு வரச் சொன்னேன்.. அவ்வளவுதான்,” அவன் மிகவும் சாதாரணமாக, சொல்லிவிட்டு மீண்டும் நாளிதழைப் படிக்க ஆரம்பித்துவிட்டான்.
இப்போது மதிக்குத்தான் குழப்பமாகப் போய்விட்டது. அவள் அந்த காஃபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு, அவனைச் சந்தேகமாகப் பார்த்தபடியே சற்றே தள்ளிப்போய்,
இவன் நிஜமாத்தான் சொல்றானா இல்ல பொய் சொல்றானா..?என்று குழம்பினாள்,
ஆர்வம் தாளாமல் நாசூக்காக அந்த காபியில் இருந்து ஒரு மிடறு குடித்துப் பார்த்தாள்.
சர்க்கரை, டிக்ஷான், சுவை எல்லாமே கச்சிதமாக இருந்தது!
அவள் ஆவேசத்தோடு அவன் முன்னால் வந்து
“என்ன விளையாடுறீங்களா? இதுல சர்க்கரை கரெக்டாத்தான் இருக்கு!”
“அப்போ நீ காஃபியை டேஸ்ட் பண்ணிப் பார்த்துட்ட… இப்போ இது கரெக்ட்டாதான் இருக்கும்…” என்று சொன்னவன், அவளது கையில் இருந்த கப்பை சடாரென்று பிடுங்கி, ரசித்து பருகத் தொடங்கினான்.
இவன் தந்திரத்தில் ஏமாந்துவிட்டோமே என்ற ஆத்திரத்தில் தரையைத் காலால் உதைத்துவிட்டு, விறுவிறுவென்று உள்ளேபோனாள் தண்மதி.
ஆதியை மனசுக்குள் விதவிதமாகத் திட்டித் தீர்த்தபடியே, மதி தன் ஷூ லேஸைக் கட்டிக்கொண்டு மார்னிங் வாக்கிங்கிற்கு தயாரானாள்.
அப்போது அவளருகே வந்த அப்பா “மதி… ஆதி தம்பியையும் அப்படியே வாக்கிங்கிற்கு கூட்டிட்டுப் போம்மா.”
“அப்பா… அவரு என்ன சின்ன பாப்பாவா, கூட கூட்டிட்டுப் போக? எல்லாம் அவரே போய்க்குவாரு..” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, அப்பா மீண்டும் எதாவது சொல்வதற்குள் வீட்டை விட்டு விறுவிறுவென்று வெளியே ஓடினாள்.
ஆனால், கேட் அருகே வந்தவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அங்கே ஆதி, வாக்கிங் செல்வதற்கான டிராக் சூட் மற்றும் ஸ்நீக்கர்ஸ் சகிதமாக, தயாராக நின்று கொண்டிருந்தான்!
அவனை சற்றும் கண்டுகொள்ளாமல், அவளால் எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நடக்கத் தொடங்கினாள். ஆனால், அவன் தன் நீண்ட கால்களால் சில எட்டுகளிலேயே அவளது வேகத்திற்கு இணையாக வந்து சேர்ந்து கொண்டான்.
இந்த மனுஷனுக்கு கடவுள் ஏன் இவ்வளவு நீளமான காலைக் கொடுத்திருக்காரோ..?’
இப்போது அவளுக்கு அவனது உடலமைப்பைப் பார்த்துக் கூட எரிச்சலாக வந்தது.
அவளின் நிழல் போல அவன் அமைதியாக கூட நடந்து வர, என்ன முயன்றும் ஆதித்யாவுடன் சேர்ந்து நடக்கும் போது தன் இதயம் பெருமிதத்தில் பூரித்து படபடப்பதை அவளால் தடுக்கமுடியவில்லை.
வழியில் சில தெரிந்த முகங்கள் தண்மதியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அவளுடன் வந்த அழகிய இளைஞனை ஒருவித குறுகுறுப்போடு உற்றுப் பார்த்துவிட்டு செல்ல அந்தப் பார்வைகள் மதியை சற்றே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கின.
ஊர்ப்பக்கமெல்லாம் சென்னையைப்போல நாசூக்கு பார்க்கமாட்டார்கள், இரண்டு தெரு தள்ளி வாசல் தெளித்துக்கொண்டிருந்த ஒரு ஆன்ட்டி,
“மதி, யாரும்மா இது சொந்தகாரங்களா?” என்று ஆதியைக்காட்டி விசாரிக்க,
அவளை முந்திக்கொண்டு,
“ஐயோ இல்ல ஆன்ட்டி, நான் தண்மி கூட வேலை பார்க்குறேன்.. என் பேர் ஆதித்யா..” என்று தன் பளிச்சென்ற கோல்கேட் பல்வரிசையைக் காட்டி அதிகபடியாக சிரித்தான் ஆதி.
அவர் எதோ புரிந்தவர் போல பூடகமாக தலையை ஆட்ட,
“இப்ப உங்கள யாராவது கேட்டாங்களா?” என்று அடிக்குரலில் சீறினாள்.
“அவங்கதானே கேட்டாங்க மதி.?” என்றான் அப்பாவியாக,
“அவங்க நமக்குள்ள எதாவது இருக்குன்னு நினைச்சிப்பாங்க..”
“என்ன இருக்குன்னு நினைச்சிப்பாங்க..” அவன் சிரிப்பை அடக்கியபடி கேட்க,
அவனை முறைத்துவிட்டு வேகவேகமாக மூச்சுவாங்க நடந்தாள்.
ஆவேசம் சற்று குறைந்ததும்தான் ஆதி தன்னுடன் நடக்கவில்லை என்பதை கவனித்தாள்.
தன் நடையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்து, அவன் வந்து இணைந்துகொள்ள காத்திருந்தாள். ஆனால் அவன் வருவதாகத் தெரியவில்லை. பின்னால் திரும்பிப் பார்க்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது. ஒருவேளை தன்னைத் தேட வைப்பதற்காக அவன் செய்யும் ப்ராங்க்காக (Prank) இருந்தால்?
இல்லை.. இந்தத் தடவை அவனோட தந்திரத்துல ஏமாறக்கூடாது.
ஆனால் இன்னும் சில நிமிடங்கள் கடந்தும் அவன் வராமல் போக, ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், தயக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் அங்கு இல்லை,நாலாபுறமும் தன் கண்களைச் சுழற்றி தேடினாள், ஆனால் அவனது நடமாட்ட எங்குமில்லை.
“எங்க போனாரு இவரு?” ஒருவேளை வழி மாறிப் போயிட்டாரோ..? சீச்சீ.. புது இடத்துல வழி தவறிப் போக அவரு என்ன சின்னக் குழந்தையா? வாய்ப்பே இல்லை..”
மனதின் ஒரு ஓரத்தில் கவலை எட்டிப் பார்த்தாலும்,
“எங்க போனா எனக்கென்ன..? இப்படியே கண்காணாம போயிட்டா கூட நல்லதுதான்!” என்று பிடிவாதத்துடன் மீண்டும் நடக்கத் தொடங்கினாள். இருந்தாலும் பின்னால் ஏதேனும் காலடி சத்தம் கேட்கிறதா என்று அவளது காதுகள் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேதான் இருந்தன.
அடுத்த சில நிமிடங்களில், எங்கிருந்தோ ஓடிவந்து அவன் அவளோடு இணைந்து கொண்டான்.
அவன் எங்கே போயிருந்தான் என்று கேட்க அவளுக்கு அத்தனை ஆவலாக இருந்தது. ஆனால் மிக சிரமப்பட்டுத் தன் துறுதுறுத்த வாயை மூடிவைத்துக் கொண்டாள்.
அவர்கள் வீட்டை அடைந்ததும்,
“தண்மி…” என்று மென்மையாக அழைத்து அவளை நிறுத்தினான்.
அவன் தன் முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய ரோஜாச் செடியை அவள் முன்பு நீட்டினான்.எங்கோ நர்சரியில் வாங்கியிருப்பான் போல, கையில் அடங்கிவிடும் அளவிலான ஒரு சிறிய மண் தொட்டியில் ஓர் ஒற்றை இளஞ்சிவப்பு மொட்டு அழகாக காற்றில் அசைந்துகொண்டிருந்தது.
“இது உனக்காக…”
“எதுக்கு?” .
“நான் கொடுத்த வாக்கை நிறைவேத்துறேன் மதி.. சேலத்துக்கு வரும்போது உனக்கு வாங்கித் தரேன்னு சொன்னேன்ல, மறந்துட்டியா? இது ‘ த்ரிஷா வெர்ஷன் த்ரீ’!”
‘வாக்கை நிறைவேத்துற ஆளைப்பாரு.. எனக்கு ஞாபக மறதியாம். இவரே ஒரு சஞ்சய் ராமசாமி..’ என்று மனதில் கசப்புடன் நினைத்தவள்,
“எனக்கு வேண்டாம்,” என்று முகம் திரும்பும் போதே ஒற்றைக்காம்பில் பூத்துக்குழுங்கிய அந்த அழகான பேபி பிங்க் நிற ரோஜாவை ஏக்கத்துடன் பார்த்தாள்.
இவ்வளவு அழகான ரோஜாச் செடியை இந்த ஹிட்லரால வேண்டாம்னு சொல்ல வேண்டியதா இருக்கே…’
“பரவாயில்லை மதி.. இதுல எந்த உள்நோக்கமும் இல்லை. சோ, நீ எந்தத் தயக்கமும் இல்லாம இதை வாங்கிக்கலாம்.”
சற்று யோசித்துவிட்டு அந்த ரோஜாச்செடியை ஒரு குழந்தையை வாங்குவதுபோல அலுங்காமல் தன் கைகளில் ஏந்தினாள்.
“இந்த உலகத்துலயே எனக்கு ரொம்பப் பிடிச்சது ரோஜா ஒன்னுதான், அதனால மட்டும்தான் இதை நான் வாங்கிக்கிறேன். இதனால நமக்குள்ள எல்லாம் சரியாயிடுச்சுன்னு நீங்க பகல் கனவு காணாதீங்க!” என்றாள் கராராக..
அவன் தன் தலையைச் சற்றே தாழ்த்தி, “யெஸ் மேம்..” என்று பணிவாகச் சொன்னான்; ஆனால் அவனது கண்களில் குறும்பு மின்னியது.
“ஆனா மதி.. இந்த உலகத்துலயே உனக்கு பிடிச்சது ரோஜா ஒன்னுதான்னு சொன்னது பொய்.உனக்கு பிடிச்ச இன்னொரு விஷயமும் இருக்கு!” என்றான் சீண்டும் குரலில் .
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“அந்த இன்னொன்னு என்னன்னு கேட்க மாட்டியா?” அவன் அவளை மேலும் வம்புக்கு இழுத்தான்.
“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்…” அவள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் தன்னை ஏதோ ஒரு வலையில் வீழ்த்தத் திட்டம் போடுகிறான் என்பது அவளுக்குத் தெரியும்.
ஒருவேளை அந்த இன்னொரு விஷயம் ‘நான் தான்’னு சொல்லிட்டா என்ன பண்றது..?’
“நீ கேட்காட்டியும் நான் சொல்லுவேன்.. இந்த உலகத்துலயே உனக்கு ரொம்பப் பிடிச்ச இன்னொரு விஷயம்… என்று இழுக்க அவள் மூச்சுவிட மறந்து அவனைப்பார்க்க..
“சாப்பாடு! கரெக்டா..”
அவனை அப்படியே தலையைப்பிடித்து உலுக்க வேண்டும் என்ற ஆத்திரத்தை, தன் கைகளை இறுக்கமாக மூடி கட்டுப்படுத்தினாள்.
அவனை ஒரு முறை உக்கிரமாகப் பார்த்துவிட்டு அவள் வீட்டிற்குள் நடக்கத் தொடங்கினாள்.
ஆனால் அவன் அவள் கையைப்பற்றி சடாரென்று தன் பக்கமாக இழுத்தான், அவள் அவனது மார்பில் பலமாக மோதுவது போல வந்து நின்றாள்.
அவனை ஆத்திரத்துடன் முறைத்து அவனது பிடியிலிருந்து தன் கையை விடுவிப்பதற்காக கையை உதறினாள். ஆனால், அவனது மென்மையான தோற்றத்திற்கு நேர் மாறாக, அவனது பிடி இரும்பாக இருக்க, தன் முயற்சி தோல்வியுற்றதால் ஆத்திரமடைந்தவள், அவனை இன்னும் அதிக வெறுப்போடு பார்த்தாள்.
அவன் அவளருகே இன்னும் நெருங்கி குனிந்து, அவளது காதோரம் மெதுவாக கிசுகிசுத்தான்,
“இந்த உலகத்துல உனக்கு நிறைய விஷயங்கள் பிடிச்சிருக்கலாம் மதி.. ஆனா, உன்னை விட உனக்கு அதிகமா பிடிச்ச ஒரே விஷயம்… ‘நான்தான்!’அதை உன்னால மறுக்கவே முடியாது..”
அவனது குரலும் காதோரம் உரசாமல் உரசிய அவன் இதழும் அவளது உடல் முழுக்க ஒரு மின்சார அதிர்வை கடத்த… அவள் சட்டென்று பின்வாங்கி, அவனைத் தூரத் தள்ளினாள். அவனது பிடியிலிருந்து விடுபட்டு மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் ஓடியவள் அங்கே கதவோரம் நின்று கொண்டிருந்தவன் மீது பலமாகப் போய் மோதினாள்! மோதிய வேகத்தில் அவன் “டொம்மென்ற” என்ற சத்தத்துடன் தரையில் போய் விழுந்தான்.
தொடரும்

