Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-9

அத்தியாயம்-9

கடந்த காலம் – பெங்களூரில்…

தண்மதி மீண்டும் ஒருமுறை  கடைக்கண்ணால் அவனைப் பார்த்துவிட்டு  இதற்கு முன்பு செய்ததைப்போலவே இப்போதும் தன்   உதடுகளைக் சுழித்துக்கொண்டாள்.



Advertisement

வழக்கம் போல் அன்றும் ஆதி மதிக்கு மொட்டை மாடியில் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தான், இடையில் திடீரென  ஃபோன் வரவும்,

‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று முணுமுணுத்துவிட்டு, தள்ளிச் சென்று அவன் ஃபோன் பேசத்தொடங்கியது முதல் இதுதான் நடந்து கொண்டிருந்தது.

கடந்த அரை மணி நேரமாக  மிகுந்த மகிழ்ச்சியுடனும், கண்களில் ஒரு மின்னலுடனும் அங்குமிங்கும் நடந்தபடி ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். அடிக்கடி சிரிப்பதும் புன்னகைப்பதுமாக இருந்தான்.. அதுதான் அவளுக்கு இன்னும் எரிச்சலூட்டியது.

Advertisement

அவன் கொடுத்ததில் ஒரு கணக்கைக்கூட அவள் முயற்சி செய்து பார்க்கவில்லை.. அவனை உளவு பார்ப்பதைத்தான் முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தாள்.

Advertisement

‘யாரா இருக்கும்.. இப்படி வாய் கிழிய சிரிக்கிறாரு.. என்கிட்ட மட்டும் சிரிக்கிறதுக்கு காசு கேட்பாரு..’ என்று அவனைத் திட்டினாள்.

‘ஒருவேளை கேர்ள் ஃபிரண்டா இருக்குமோ…?’  இந்த எண்ணமே அவள் இதயத் துடிப்பை ஒருகணம் நிறுத்தியது.

‘ச்ச..ச்ச…அப்படிலாம் இருக்காது…’ குழம்பிப் போயிருந்த தன் மனதை அவளே தேற்றிக்கொள்ள முயன்றாள்.

Advertisement

‘ஒருவேளை  இருந்தா?’  அடுத்த சந்தேக அலை அவளைத்தாக்கியது.

‘ஐயோ இத யோசிக்காம போயிட்டோமே.. இந்தக் காலத்துல லவ் பண்ணாம யாரு இருக்கா..? காலேஜ் படிக்கும்போது கூடப் படிக்கிற யாரையாவது லவ் பண்ணி இருப்பாரோ?‘ பதற்றத்தில் தன் நகத்தைக் கடித்தாள்.

‘இப்போ ஃபோன்ல பேசுறது யாருன்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது?‘ ஏதாவது ஐடியா கிடைக்குமா எனத் தலையை உடைத்துக்கொண்டாள். ஆனால் உருப்படியாக எதுவும் தோன்றவில்லை.

கடைசியில் அவன் ஃபோன் பேசி முடித்ததும் நேரடியாகவே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தவள், இங்கு பொறுமையின்றி காத்திருக்கையில், அவனோ ஃபோனை வைப்பதாகத் தெரியவில்லை.

பொறுமை முற்றிலும் இழந்தவளாக, அவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள். தூரத்திலிருந்தே அவளைக் கவனித்துவிட்டவன்,

‘என்ன?’ என்பது போலப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அவள் தன் நோட்டுப் புத்தகத்தைக் காட்டினாள்.

“சம்ஸ் முடிச்சிட்டியா…”  ஃபோனைத் தன் வாயிலிருந்து தள்ளி வைத்துவிட்டு கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

“இல்லை… டவுட்டு..”

“இரு வரேன்..”

“சரி… நான் அப்புறமா கூப்பிடுறேன் டியர்.. பை!” என்று ஃபோனை இணைப்பைத் துண்டித்தான்.

அவனின் இந்த செல்ல அழைப்பைக்கேட்டு

அதிர்ச்சியில் மதியின் கண்கள் விரிந்தன. பெங்களூருவின் அந்த இதமான மாலை நேரக் குளிரிலும் அவளுக்குள் பொறாமை தீயாய் பற்றி எரிந்தது.

‘டியரா..? அப்போ நிஜமாவே ஆதி சார் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட் கிட்டதான் பேசிட்டு இருந்தாரா? முதல்லயே எனக்கு ஜி.எஃப் (GF) இருக்குன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே.. நான் இப்படி ஏமாந்து போயிருக்க மாட்டேன்ல..’  அழுகையின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள் மதி. முகம் அப்படியே வாடிப்போனது.

“என்ன டவுட்டு..?” அவளுடைய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தபடி எரிச்சலோடு கேட்டான் ஆதித்யா.

‘ஆமா.. எரிச்சலாதான் இருக்கும் இவருக்கு.. அவரோட ஜி.எஃப் கூட பேசும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன்ல..’  மனதுக்குள் புகைந்தாள்.

அவளிடமிருந்து பதில் வராததால், ஆதி தன் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.

“மதி, என்ன டவுட்னு கேட்டேன்..”

“கேட்டா சொல்லுவீங்களா?”

“இது என்ன கேள்வி? அதுதானே என்னோட வேலை.. என்ன டவுட்னு முதல்ல சொல்லு..”

“இப்போ நீங்க ஃபோன்ல யாரு கூட பேசிட்டு இருந்தீங்க?”

“வாட்..? இதுதான் உன்னோட டவுட்டா?”

“ம்ம்ம்..”

“உனக்கு என்ன பைத்தியமா? அது என்னோட பர்சனல் விஷயம்..”

“ஃபோன்ல பேசினது பொண்ணு தானே..?”

“மதி.. உன் வேலையை மட்டும் பாரு.. நான் யாரு கூட ஃபோன்ல பேசுறேங்கிறது உனக்குத் தேவையில்லாத விஷயம்..”

“அப்போ அது பொண்ணுதான்..”

“ஆமா.. நான் ஒரு பொண்ணு கூடத்தான் பேசிட்டு இருந்தேன்.. அதுல உனக்கு என்ன பிரச்சனை..?” என்று சலித்துப் போன குரலில் கேட்டான்.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீங்க யாரு கூட வேணா பேசுங்க.. எவ்வளவு நேரம் வேணா பேசுங்க.. அதைக் கேட்க நான் யாரு? நான் உங்களுக்கு யாரு? குடுங்க..” என்று அவனிடமிருந்து நோட்டுப் புத்தகத்தைப் வெடுக்கென்று பிடுங்கினாள். ஏதோ முணுமுணுத்தபடியே அதில் எதையோ கிறுக்கத் தொடங்கினாள்.

அவளுடைய இந்த விசித்திரமான நடத்தையின் நதி மூலம் ரிஷிமூலம் தெரியாமல் விழித்தான். ஆனால் கோபத்தில் அவள் முகம் சிவந்து, உள்ளுக்குள் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது, அவனுக்குள் சிறு புன்னகை அரும்பியது.

“ஹே.. மதி.. நீ சாபம் எதுவும் கொடுத்துடாத.. நான் எங்க அம்மா கிட்டதான் போன்ல பேசிட்டு இருந்தேன்…” என்று அவசரமாகச் சொன்னான்.

அடுத்த கணமே அவள் முகம் லைட் போட்டதுபோல் பளிச்சிட்டது.. ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டாள்.

“அம்மாவா? ஆனா ‘டியர்’னு சொன்னீங்களே?”

“எங்க அம்மா எனக்கு ‘டியர்’ தான்..” என்று மென்மையான குரலில் சொன்னான்.

அவள் குழப்பத்துடன் தன் கண்களைச் சுருக்கினாள்.

“ஆமா.. எனக்கு எங்க அம்மாவை ரொம்பப் பிடிக்கும்.. இந்த உலகத்துலயே நான் அதிகமா நேசிக்கிறது எங்க அம்மாவைத்தான்..”  அவன் கண்கள் ஒரு இனம் புரியாத ஒளியுடன் மின்னின.

‘அம்மா மேல இவ்வளவு அன்பா?’ – அவனது குணத்தைக் கண்டு வியந்தாள். அவனது இறுக்கமாக பூட்டிய இதயத்திற்குள், இந்தச் சிறு ரகசியத்தின் வழியாக தான் சற்று நெருங்கிச் சென்றுவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.

“இவ்வளவு நேரமா சம் போடாம இந்த ஆராய்ச்சியைத்தான் பண்ணிட்டு இருந்தியா?” என்று கண்டிப்புடன் கேட்டான்.

வெட்கி அவள் தன் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள,

“அடுத்தவங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கிறதை விட்டுட்டு, ஒழுங்கா சம் போடு..” என்று கறாராகச் சொன்னான்.

“அய்யோடா.. ஹிட்லர் பழைய ஃபார்முக்கு வந்துட்டாரு..” என்று  முணுமுணுத்தாள்.

“என்ன சொன்ன…?” அவன் கூர்மையான பார்வையுடன் கேட்க,

“ஃபார்முலா சொல்லிப் பார்த்தேன் சார்..” என்று சமாளித்தாள்.

நிகழ்காலம்

“ஆக்சிடெண்ட்டா?” என்று மதி அதிர்ச்சியடைய.

“ஆமா ஆக்சிடெண்ட்… அதுதான் அந்த குழந்தையோட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு..” என்று சொல்லத்தொடங்கினார் மாலா.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. சரியா சொல்லணும்னா, ஆதி பெங்களூர்ல இருந்து சென்னைக்கு வந்து ஒரு மாசத்துல.. அவனோட அப்பாம்மா கல்யாண நாளுக்குக்காக திருப்பதி போயிட்டு திரும்பி கார்ல வரும்போது, திருவள்ளூர் ரோட்ல ஒரு லாரி மோதி ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு.. இவங்க போன கார் சுத்தமா நொறுங்கிப் போச்சு.

ஆதியோட அப்பா அங்கேயே இறந்துட்டாரு.. அம்மாவுக்கு உயிர் இருந்திருக்கு.. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு, அந்த ஹாஸ்பிடல் நர்ஸ் சொன்னாங்க.. ஆதி உடம்பு பூரா ரத்தம் வழிய, அம்மாவைத் தூக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அந்த இடத்துலயே மயக்கம் போட்டு விழுந்திருக்கான்…

எங்களுக்கு விஷயம் தெரிஞ்சதும் பதறி அடிச்சு ஓடி வந்து பார்த்தப்போ, அவனோட அம்மா உயிரும் பிரிஞ்சிடுச்சு.. ஆதி மட்டும் உடம்பு முழுக்கக் கட்டோட உயிருக்கு போராடிட்டு இருந்தான்.

எங்களுக்கு அழக்கூட நேரமில்லை.. போலீஸ் கேஸ் அது இதுன்னு அலையடிச்சாங்க.. அதுக்கு மேல ஆதி பிழைப்பானா மாட்டானாங்குற நிலைமை..

அப்பப்பா.. இப்ப நினைச்சாலும் நெஞ்சு பதறுது.. எல்லாம் ஒரு பயங்கர கனவு மாதிரி இருக்கு…

எப்படியோ ஒரு வாரம் போராடி டாக்டர்கள் ஆதி உயிரைக் காப்பாத்தினாங்க..

அவன் ரொம்ப வீக்கா இருந்ததுனால, நாங்க அவன் அம்மா இறந்த விஷயத்தை அவன்கிட்ட சொல்லலை.. ஏன்னா, அம்மா மேல அவன் உயிரையே வச்சிருந்தான்.

ஆனா, அவன் விடாம கேட்டுக்கிட்டே இருந்தான்.. எப்படியோ பொய் சொல்லி ஒரு மாசம் அவன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சோம்.”

“அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனது மட்டும் தான் ஞாபகம் இருந்தது.. ஆனா அது எப்படி நடந்தது, அதுக்கு முன்னாடி பின்னாடி நடந்த எதுவுமே அவனுக்கு ஞாபகம் இல்லை.

அன்னிக்கு ஆதிதான் கார் ஓட்டியிருக்கான்.. ஆனா அவன் மேல எந்தத் தப்பும் இல்லை. ராங் சைடுல வந்த லாரி அவங்க மேல மோதியிருக்கு.. அதுவும் அந்த டிரைவர் கடன்காரன் நல்லா குடிச்சிருந்திருக்கான்…

ஆனா ஆதி, ‘நான்தான் ஆக்சிடெண்ட் பண்ணிட்டேன்’னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஒருநாள் அவன் ரொம்ப கட்டாயப்படுத்தி கேட்டதால, அவனோட பேரண்ட்ஸ் இறந்த உண்மையைச் சொன்னோம்… உண்மை தெரிஞ்சதும் அவன் அப்படியே உறைஞ்சு போயிட்டான்.

அவன் அழுவான்னு எதிர்பார்த்தோம்.. ஆனா அவன் அழவே இல்லை, அப்படியே கல்லு மாதிரி ஆயிட்டான்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பின்னாடியும் அவன் யார்கிட்டயும் பேசாம ஒதுங்கியே இருந்தான். முதல்ல டயர்ட்னஸ்தான் காரணம்னு நினைச்சோம்.. ஆனா முழுசா குணமடைஞ்ச பின்னாடியும், அவன் முகம் ரொம்ப வெறுமையா இருந்தது.

கேட்ட கேள்விக்குக் கூட பதில் சொல்லாம.. ஒரு நத்தை கூட்டுக்குள்ள சுருங்கிக்கிற மாதிரி ரூம்க்குள்ளேயே முடங்கிப் போயிருந்தான்.

நாங்க ரொம்ப பயந்துட்டோம்.. அங்கிள் வி.ஆர்.எஸ் (VRS) வாங்கிட்டு  அவன் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாரு. அவன் உடம்பு மட்டும்தான் தேறி வந்தது, மனசு தேறவே இல்லை.

நாங்க திரும்ப டாக்டர்கிட்ட போய் கேட்டோம். அவரு, ‘பிசிக்கலா அவன் ஓகே.. ஆனா நீங்க ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை (Psychiatrist) கன்சல்ட் பண்ணுங்க’ன்னு சொன்னாரு.

நாங்க அந்த டாக்டரை கன்சல்ட் பண்ணோம்.. அப்பதான் தெரிஞ்சது, அவன் மெல்ல மெல்ல டிப்ரஷனுக்குள்ள (Depression) போயிட்டு இருக்கான்னு. அவன் அப்பா, அம்மாவோட சாவுக்குத் தான் தான் காரணம்னு நினைச்சுட்டு அவனை அவனே வெறுத்துட்டு இருந்திருக்கான். இப்படியே போனா.. அவன் தற்கொலை  கூட பண்ணிக்க வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாரு.”

“எங்களுக்கு எப்படி இருக்கும்னு சொல்லு… அவனோட அப்பா அம்மாவையும் இழந்துட்டு, இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே சொந்தத்தையும் இழந்துடுவோமோன்னு நாங்க நடுங்கிப் போயிட்டோம்.

எப்படியாவது  இந்த டிப்ரஷன்ல இருந்து அவனை மீட்கணும்னு ரொம்பப் போராடினோம். நாங்களும் எவ்வளவோ சொல்லி பார்த்தோம்.. அந்த டிரைவர் குடிச்சிருந்ததுதான் ஆக்சிடென்ட்க்கு காரணம்னு, ஆனா அவன் மனசு அதை ஏத்துக்கவே இல்லை.

‘பெரியம்மா, நான்தான் அம்மா அப்பாவைக் கொன்னுட்டேன்’னு சொல்லி அப்படி அழுதான்..”

மாலா ஆன்ட்டி வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். மதி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கும்போதே கன்னத்தில் கண்ணீர் வழிந்துவிட்டது

அவளுக்கும் தெரியும்தானே ஆதி அவன் அம்மாவின்மேல் உயிரையே வைத்திருந்தான் என்று.

“டாக்டர் சொன்னாரு.. அவன் அழுறது ஒரு நல்ல அறிகுறிதான், அட்லீஸ்ட் அவன் மனசுல இருக்குற துக்கத்தை வெளிய காட்றான்னு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மருந்துகள், கவுன்சிலிங் மூலமா அவனை நாங்க டிப்ரஷன்குள்ள போகாம காப்பாத்தினோம்.

மெல்ல மெல்ல எங்களையே அவனோட உண்மையான பெத்தவங்களா ஏத்துக்கப் பழகிட்டான்.. என்னை ‘அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சான்.

சரி ஆகிடுவான்னு பார்த்தா.. அப்பவும் அவன் முகத்துல சிரிப்பையே பார்க்க முடியல. எப்பவும் எதையோ பறிகொடுத்த பார்வையோடவே இருந்தான்.

வீட்லயே இருந்தா இப்படித்தான் கண்டதையும் நினைச்சு கஷ்டப்படுவான்னு, அவனை வேலைக்குப் போகச் சொன்னோம். அது ஒரு நல்ல மருந்தா அமைஞ்சது. அவனும் தன்னை வாட்டி வதைக்கிற வேதனையை மறைக்க, தன்னோட முழு கவனத்தையும் வேலையில திருப்பினான். ரெண்டே வருஷத்துல டீம் லீடர் ஆகிட்டான்.. அப்புறம் பி.எம் (PM)…

வாழ்க்கை இப்படியே நல்லபடியா போயிட்டா போதும்னு நாங்க வேண்டிக்கிட்டு இருந்தப்போ, அடுத்த இடி ஒன்னு விழுந்துச்சு..”

“ஒரு நாள் பெங்களூரப் பத்திப் பேசும்போது.. ‘நான் எப்ப அங்க வந்தேன்?’னு கேட்டான். கம்பெனி சர்டிபிகேட்டைப் பார்த்துட்டு, ‘இங்க எப்ப நான் ஒர்க் பண்ணினேன்?’னு குழம்பிப் போயிட்டான்.

நாங்க அவன் பெங்களூர் வந்தது, அங்க எங்க வீட்ல தங்கி இருந்தது எல்லாத்தைப் பத்தியும் அவன்கிட்ட சொன்னோம்.. ஆனா அவனுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. அதுமட்டும் இல்லாம.. அதைப்பத்தி அவன் ரொம்ப யோசிக்க யோசிக்க, தாங்க முடியாத அளவுக்கு தலைவலி வர ஆரம்பிச்சது.

டாக்டர் இது ‘செலக்டிவ் அம்னீஷியானு சொல்லிட்டாரு. ஆக்சிடெண்ட்ல தலையில அடிபட்டதுல, அவனுக்கு அந்த விபத்துக்கு சமீபத்துல நடந்த எதுவுமே ஞாபகம் இல்லாம போயிட்டது. ஆனா விபத்து ஆன நினைவு மட்டும் அப்படியே அழுத்தமா பதிஞ்சு போச்சு.

டிப்ரஷன்ல இருந்து அவன் மெதுவா வெளிய வந்த மாதிரி, இந்த விஷயமும் மெதுவாதான் சரியாகும்கறாங்க. தானா நினைவு வரலாம்.. வராமலே கூடப் போகலாம்.. ஆனா அதை நினைவுபடுத்த முயற்சி பண்ணாலோ, கட்டாயப்படுத்தி அதைப் பத்தி யோசிச்சாலோ… நரம்புகள் பாதிக்கப்பட்டு திரும்பவும் அவனுக்கு ஸ்ட்ரெஸ் வர சான்ஸ் இருக்குன்னு சொல்லிட்டாரு.

நாங்க ரொம்ப பயந்துட்டோம். போனாப் போகுது ஒரு வருஷம் தானே.. அவன் இந்த அளவுக்கு தேறி வந்ததே பெருசு. இந்த சின்ன விஷயம் தெரியாம போனாலும் பரவாயில்லைன்னு விட்டுட்டோம்.” என்று மாலா ஆன்ட்டி சாதாரணம் போல் சொல்ல,

“சின்ன விஷயமா.. என்னோட வாழ்க்கையே அதுல தானே அடங்கி இருக்கு..” மதியின் இதயம் அலறியது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!