Skip to content
Post Views: 109
அந்த மாலை நேரத்தில், உப்பு நீர் காற்றைச் சுவாசித்தபடி மணலில் அமர்ந்திருந்தவளுக்குள் உணர்ச்சிக் கலவைகள் நிரம்பி இருந்தன.
ஆர்வம் ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம், வெட்கம் எனப் பலவாறான உணர்வுகள் வண்ண விளக்குகளைப் போல மாறி மாறி அவள் முகத்தில் தோன்றின.
அவனிடம் தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்டிக் காதலைச் சொல்லிவிட்டாள். அவனிடம் ‘யோசித்துச் சொல்லுமாறு’ சொன்னவளுக்கு அதற்குமேல் நிலை கொள்ளவில்லை. அவனது பதிலுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க, மதியூரனிடமிருந்து அழைப்பு வந்தது.
“துரா ! உ… உ… உன்கிட்ட கொ… கொ… கொஞ்சம் பே… பே… பேசணும்… பீச்சிற்கு வ… வ… வர முடியுமா?” எனக் கேட்டிருந்தான்.
Advertisement
இவளும் தன் காதலுக்குப் பதிலளிக்கத்தான் வரச் சொல்கிறான் என்று நம்பி, தன்னை அழகாக அலங்கரித்துக்கொண்டு கிளம்பினாள்.
மகளின் முகத்தில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சியைக் கண்டு மரகதத்தின் முகத்திலும் புன்னகை அரும்பியது. இதே சந்தோஷம் மகளின் வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டார். பாவம், அவர் அறிந்திருக்கவில்லை… மகளின் சந்தோஷத்தை முற்றிலுமாகப் பறிக்க ஒருவன் காத்திருக்கிறான் என்று!
“பாப்பா ! என்னமா ரொம்ப சந்தோஷமா இருக்க? என்ன விஷயம்?”
Advertisement
“நல்ல விஷயம்தான் மா ! பதில் வந்ததும் உங்ககிட்ட முதல்ல வந்து சொல்வேன்… நான் போயிட்டு வர்றேன்” என்று அன்னையைக் கட்டியணைத்துவிட்டுச் சென்றாள்.
Advertisement
மதியூரன் வந்து காதல் சொல்வதற்கு முன்பே அவள், மணலில் கோட்டை கட்டுவது போலக் கற்பனைக் கோட்டை கட்ட ஆரம்பித்தாள். அவன் காதலைச் சொன்னதும் அவனைத் தன் தாயிடம் அழைத்து வந்து நிறுத்த வேண்டும்.
‘இவர்தான் மா உன்னோட மாப்பிள்ளை’ என்று சொல்ல வேண்டும். எளிமையாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தன் நிறத்தில் வேண்டாம்… யூரனின் நிறத்தில் ஆணொன்று பெண்ணொன்று பெற்றுக் கொள்ள வேண்டும். மூவரின் இம்சையிலும் அன்பிலும் காலம் முழுவதும் கடக்க வேண்டும்.
பேரன், பேத்தியைக் கண்ட சந்தோஷத்தில், கடைசி காலத்தில் யூரனின் கைபிடித்து ஊர் ஊராகச் சுற்றி வர வேண்டும். முன்னே பின்னே யார் சென்றாலும் காதலோடு வழியனுப்பி வைக்க வேண்டும்… எனப் பெரிதாக ஒரு கோட்டை மனதில் கட்டிக்கொண்டிருந்தவளின் கவனத்தை ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் ஈர்த்தது. காரணம், அவன் கட்டிய மணல் வீட்டை அலைகள் அடித்துச் சென்றதால் அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தான்.
Advertisement
அதுதான் தனக்கும் நடக்கப்போகிறது என்று அறியாமல் பெரிதாக மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள் மதுரா.
“துரா” என அழைத்தபடி அவன் நிற்பதைக் கூட அறியாது, மனக்கோட்டை கட்டுவதில் மும்முரமாக இருந்தாள். அவன் அவளது கையில் தட்டினான்.
சட்டென்று அவள் அந்த உலகத்திலிருந்து நிஜ உலகிற்கு இழுத்து வரப்பட்டது போல இருந்தது. தனது கனவுலகத்திலிருந்து அவளை அழைத்து வந்தது யாரென்று கடுப்புடன் திரும்பிப் பார்க்க, மயக்கும் புன்னகையுடன் மதியூரன் அமர்ந்திருந்தான்.
அவன் வந்து பக்கத்தில் அமர்ந்தது கூடத் தெரியாமல் கற்பனையில் இருந்ததை எண்ணி நாக்கைக் கடித்து அவனிடம் மன்னிப்புக் கோர, அவனோ புன்னகையுடன், “அ… அ… அப்படி என்ன யோ… யோ… யோசனை துரா?” என்றான்.
அவனது புன்னகையில் ஒரு நிமிடம் மெய்மறந்து அமர்ந்திருந்தவள், பின் வெட்கத்தை மறைத்தபடி, “ஒன்றுமில்லை யூரன்” என்றாள்.
‘ஓவராகத்தான் கற்பனைக் கோட்டை கட்டிக்கிட்டு இருக்கோம்.. போதும், இதுக்குமேல தாங்காது. வந்தவன் நம்மளை என்ன நினைப்பான்? கொஞ்சம் கற்பனையை ஓரங்கட்டி வை மதுரா’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“சொல்லுங்க யூரன், எதுக்கு வரச் சொல்லியிருந்தீங்க?”
“இ… இ… இதைக் கொ… கொ… கொடுக்கத்தான் துரா!” எனக் கையில் கொண்டு வந்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினான்.
“என்ன இது?” என்று கேட்டாள்.
“பி… பிரிச்சுப் பா… பா… பார் துரா” என்றான்.
அவளும் ஆவலுடன் வேகமாகப் பிரித்தாள். உள்ளே ஒரு புடவை இருந்தது.
“புடவை இருக்கு! யாருக்கு யூரன், எனக்கா?”
“இ… இ… இல்லை எனக்கு” என்று கேலி செய்ய, அவனைச் செல்லமாக முறைத்துவிட்டுப் புடவையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.
“உங்க செலக்ஷன் அருமையா இருக்கு” என்றாள்.
“உ… உ… உனக்கு பி… பி… பிடிச்சிருக்கா துரா?”
“ரொம்ப!!! ஆனா எதுக்கு யூரன் இது?” என வெட்கத்துடனே கேட்டாள்.
“உ… உ… னக்கு வா… வா… வாங்கிக்கொ… கொடுக்கணும்னு தோ… தோணுச்சு துரா ! எ… எ… எனக்காக எவ்வளவோ செ… செ… செஞ்சிருக்க, அ… அ… அதுக்காக எ… எ… என்னால மு… மு… முடிஞ்ச சி… சி… சின்ன கிஃப்ட்! எ…எ.. என் சம்பளத்துல உ… உ.. உனக்கு ஏ… ஏ… ஏதாவது வா… வா…வாங்கிக் கொ… கொடுக்கணும்னு நி… நி… நினைச்சேன், அதான்” என்றான்.
அவள் முகம் லேசாக வாடிப்போனது. ‘காதல் பரிசு’ என்பான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள். புன்னகையூடே அவளது ஏமாற்றத்தை மறைத்து, “தேங்க்ஸ் யூரன். ரொம்ப நல்லா இருக்கு!” என்றாள்.
“அப்பாடா! உ… உ.. உ னக்கு பி… பி… பிடிக்கணுமேன்னு தே.. தே… தேடித் தேடி அ… அலைஞ்சு வா… வாங்கினேன்” என்றான்.
“ம்ம்… யூரன், ஒன்று கேட்கணும்னு நினைச்சேன். அன்னைக்கு அவசர அவசரமா போனீங்களே, என்னாச்சு? அம்மாவுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?”
“அ… அ… அவங்களுக்கு எ… என்ன பி… பிரச்சனை? அ… அவங்களாலதான் எ… எனக்கு பி… பிரச்சனையே!” என்றான்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“நா… நான்… நான் தான் ஏ… ஏற்கனவே சொ… சொ… சொல்லியிருக்கேனே! எ… என் மா… மா… மாமா பொண்ணைக் க… க… கல்யாணம் ப… ப… பண்ணிக்கச் சொல்லி எ… எங்க அம்மா க… க… கட்டாயப்படுத்திட்டு இ… இ… இருக்காங்கன்னு!
இ… இப்பொ அ… அந்தப் பொண்ணுக்கு வே… வே… வேற மாப்பிள்ளை பார்த்துப் பேசி, கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். அ… அந்தக் கோ… கோ… கோபத்தைத்தான் எ… என்கிட்ட காமிச்சாங்க… வழக்கம் போ… போல எ… என்னைத் தி… திட்டி, என் மனசை நோகடிச்சாங்க! அமைதியா போய் ரூம்ல உட்கார்ந்துட்டேன்… இதுதான் நடந்தது” என்றான் பெருமூச்சுடன்.
அவளும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“உங்க அம்மா உங்களைப் புரிஞ்சுக்க மாட்டாங்களா யூரன்?”
இதழ்களை வளைத்து வலியோடு சிரித்தான்.
இருவரும் அமைதியாகக் கடலை வெறிக்க, இவளுக்குத்தான் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
‘எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… ஆனால் அவனிடமிருந்து காதலுக்கான பதில் வேண்டுமே, என்ன செய்வது?’ என்று கைவிரல்களை மடக்கி, யோசனையுடனும் பதற்றத்துடனும் இருந்தாள்.
அதை கவனித்த மதியூரன், விஷயம் புரிந்தாலும் தன்னைக் காட்டிக்கொள்ளாது அவளிடம், “கி… கி… கிளம்பலாமா துரா?” என அவளைத் தவிர்க்கும் பொருட்டுக் கேட்டான்.
“யூரன்…” என அழைக்க,
“ம்ம்… சொ… சொல்லு துரா” என்றவனின் குரலில் லேசான கடுமை இருந்தது.
“நான் அன்னைக்கு என்னோட காதலைச் சொன்னேனே, அதுக்கு பதிலேதும் சொல்லலையே நீங்க!”
“ப… ப… பதில் சொ… சொ… சொல்லாதபோதே தெ… தெ.. தெரிஞ்சுக்க வேண்டாமா துரா… எ… எ… எனக்கு வி… வி… விருப்பம் இல்லைன்னு” என்றான். அவன் சொன்ன அடுத்த கணமே அவள் மனமுடைந்து போனாள்.
“என்னை உங்களுக்குப் பிடிக்கலையா யூரன்?”
“தோ… தோழியா பி.. பி… பிடிக்கும் துரா! ஆ… ஆனா காதலியா?…” என்று தயங்கினான்.
“காதலியா? என்ன சொல்ல வர்றீங்க யூரன்?”
“எ… எனக்குன்னு சி… சில ஆ… ஆசைகளும் க… கற்பனைகளும் இருக்கு துரா! எ… எஎ எனக்கு வ வ வரப்போற பொ பொ பொண்ணு ரொ ரொ ரொம்ப அ அ அழகா இ… இ.. இருக்கணும்… எ… எ… என்னை விடக் க… கலரா இருக்கணும்…” என்னும்போது, இவள் கண்களில் கண்ணீர் வழிய, அவன் கடலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அதைத் துடைத்துக்கொண்டாள்.
அதை அவன் கவனித்தாலும் எதுவும் காணாதது போல இருந்து கொண்டான். “அழகாகத் தரமா மட்டும் இல்லாம, தாயாகவும் இருக்கணும்” என்றவன் அவளைப் பார்க்க, கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு சிரித்தபடி அவன் முகம் பார்த்தாள்.
“நா… நா… நான் உ… உ.. உன்னை ஹ… ஹர்ட் பண்ணியிருந்தா ஐ ஐ ஐ ஆம் சாரி துரா! எ… எ… எனக்கு உ… உ… உன் மேல கா…கா… காதல் இல்லை. உ… உ…உனக்குள்ள எ… எ… என் மேல கா… கா… காதல் வரக் கா…கா.. காரணமா இ… இருந்த எ… என்னை மன்னிச்சிடு துரா! உ… உனக்கு ஒ… ஒரு ந… நல்ல பை… பையன் கிடைப்பான்” என்றான்.
சிரித்துக்கொண்டே தலை அசைத்தவள், “அப்போ கிளம்பலாம் யூரன்” என்று எழுந்து கொண்டாள்.
அவன் முன்னே நடக்க, இவளோ கண்ணீரைத் துடைத்தபடி பின்னே நடந்தாள். அவன் ‘சென்று வருகிறேன்’ என்று சொல்லிக் கிளம்பிட, இவளும் கண்ணீரை மறைத்துப் புன்னகையுடன் வழியனுப்பி வைத்தாள்.
அவன் சென்றதும் வண்டியில் அமர்ந்தது மட்டுமே நினைவில் இருந்தது. அதன்பின் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பதே தெரியவில்லை. வீட்டிற்குள் வந்ததுமே குளியலறைக்குள் புகுந்து தண்ணீர்க் குழாயின் அடியில் நின்றாள்.
கொட்டும் நீரில் தன்னை நனைத்துக்கொண்டவள், நீரின் சத்தத்தில் வாய்விட்டுத் கதறி அழுதாள். நிராகரிப்புப் புதிதல்ல அவளுக்கு. ஐந்து நிமிடம் பார்த்துச் சென்ற மாப்பிள்ளை ‘பிடிக்கவில்லை’ என்று சொல்வதில் பெரிதாக அவளுக்கு வலிகள் இருந்ததில்லை… ஆனால், இந்தக் காதல் நிராகரிப்புப் புதிதாக வலித்தது.
சிறு இதயத்தில் பெரிய பாறையைத் தூக்கி வைத்தது போன்ற கனம்… அந்த வலி உயிரைக் குடித்தது. தாங்க முடியவில்லை.
நிறத்தைக் காட்டி நிதர்சனத்தைச் சொல்லாமல், தனது ஆசையென்று அவள் மனம் கோணாதபடி அவன் சொன்னாலும் வலித்தது. அவனும் எல்லாரையும் போல நிறத்தைப் பார்ப்பது கசப்பாகத்தான் இருந்தது. இந்த நிராகரிப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்… ஆனால் முடியவில்லை, அதிகம் வலித்தது.
மரகதம் அறையிலிருந்து வெளியே மெல்ல நடந்து வந்தவர், வாசல் பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டுவிட்டு மகளின் அறையை எட்டிப் பார்த்தார். குளியலறையில் நீர் கொட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டவர், “மதுரா?” என்று அழைத்தார். அம்மாவின் குரல் கேட்டதும் நினைவு வந்தவள், “ஆங்… என்னம்மா?” என்றாள் உள்ளிருந்து.
“என்னம்மா, இந்த நேரத்துல வந்து குளிக்கிற?” என்று சந்தேகமாகக் கேட்க, தண்ணீரை மூடிவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு, தலையைத் துண்டால் கட்டியபடி வெளியே வந்தாள்.
“இந்த நேரத்துல என்னம்மா தலைக்குளிச்சுட்டு வந்திருக்க? என்ன ஆச்சு மா?”
“வெளிய போயிட்டு வீட்டுக்கு வரும்போது ஃபிரண்டோட அப்பா இறந்துட்டாங்கன்னு நியூஸ் வந்தது மா. அங்க போய் முகத்தைக் காமிச்சுட்டு வந்தேன். இளவு வீட்டுக்கு போயிட்டு வந்ததால குளிச்சேன் மா!”
“பசிக்குதா! இரு, பத்து நிமிஷத்துல ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வர்றேன்” என்று அவரது கேள்விகளிலிருந்து தப்பிக்க முயன்றாள்.
“எனக்கு பசிக்கலை மது! நீ இப்படி வந்து உட்காரு” என்று மரகதம் சோபாவில் சென்று அமர, ‘என்ன கேட்கப் போறாரோ?!’ என்ற பயத்தில் அவர் பின்னே சென்று அவர் அருகே அமர்ந்தாள்.
“நீ போன காரியம் என்னாச்சு? ஏதோ நல்ல விஷயம்னு சொன்னியே… நீ நினைச்சபடி நடந்ததா?” என்று கேட்டதுமே அவளுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதை அவரிடம் மறைத்தபடி,
“ப்ச்… நடக்கல மா! நாம எதிர்பார்க்கிறது என்னைக்கு நடந்திருக்கு, இன்னைக்கு நடக்குறதுக்கு?” என விரக்தியில் சொல்ல, மகளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் மரகதம்.
“என்ன விஷயம் அது மதுமா?”
“வேலை விஷயம் தான் மா அது…” என்று அவரைப் பாராமல் பொய் சொன்னாள்.
“மது, பொய் சொல்ற நீ! அம்மா மேல சத்தியமா சொல்லு… வேலை விஷயம்தான் நீ எதிர்பார்த்தது போல நடக்கலையா?” எனக் கேட்க, அடுத்த நொடியே தாயைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் மதுரா!
error: Content is protected !!