Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 14

‘கவின் தான் வந்து விட்டான்’ என்று கவி ஆவலோடு வாசலைப் பார்க்க,  கூட இருந்த அனைவரின் பார்வையுமே வாசலுக்கு சென்று, அங்கு காரில் இருந்து இறங்கிய வடிவேலையும் அஸ்வினியையும் கண்டு அதிர்ந்து நின்றது!

பரமசிவம் ஆத்திரத்தில் பல்லைக் கடிப்பதைக் கண்ட அஸ்வினிக்கு பயம் வந்து அவள் முகம் வெளிறினாள்.

வடிவேல் அவள் கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டு “பயப்படாதே” என்றான் அவள் காதில் மெல்ல.

“அது வடிவேல் தானே?” என்று கவி நந்தினியிடம், அவனை போட்டோவில் பார்த்த நினைவில் கேட்க, ஆமாம் என்று தலையசைத்த, நந்தினி, வேகமாக அவன் அருகில் ஓடினாள்.



Advertisement

“ஏய்..வடிவேல்.. இத்தனை நாளா எங்க போய் இருந்த? உன்னால இங்க என்னவெல்லாம் பிரச்சினை ஆகியிருக்கு தெரியுமா?” சத்தமாக கத்தி, அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

அதற்குள் அங்கு ஓடி வந்து விட்ட ரகுவும்,

“ஏய்.. வடிவேல்.. என் மஞ்சு எங்கடா? உங்க கூட அவளும் வந்தாளா? நீ காணாம போன நாளில் இருந்து அவளையும் காணோம்! சொல்லுடா.. மஞ்சு எங்க?”

Advertisement

இருவர் சொன்னதையும் கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள் வடிவேலும் அஸ்வினியும்!

Advertisement

“என்ன சொல்றீங்க மாமா? நாங்க இங்க இருந்து போனதில் இருந்து மஞ்சுவையும் காணோமா?

அப்படி எங்க போனா? உங்களையும் பிள்ளையையும் விட்டுட்டு?” அவன் திருப்பிக் கேட்க அதிர்ந்தார்கள் ரகுவும் நந்தினியும்!

“டேய்.. டேய்.. அப்போ உனக்கும் தெரியாதா மஞ்சு எங்கன்னு? அவ காணாம போனப்புறம் அவ கையெழுத்தில் ஒரு சின்ன துண்டு சீட்டு பட்டும் தான் கிடைச்சுது. மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்னு! அதனால.. நாங்க” எல்லோரும் ரகு அதற்கு மேல் பேச முடியாமல் திணற,

Advertisement

வடிவேலுக்கு கடுங்கோபம் வந்தது!

“அதனால..?” என்று கேட்டு பல்லைக் கடித்தான்.

“ஹும்.. மஞ்சுவும் நீயும் எங்கோ ஓடிப் போய்ட்டீங்க அப்படின்னு இவரோட உடன்பிறவா சகோதரி பாசமலர் ரஞ்சிதா சொல்லிடுச்சு!

 இவரும் அதை நம்பிட்டு, என் மஞ்சு எங்கியோ சந்தோசமா இருந்தா சரின்னு சொல்லி, இவர் பாட்டுக்கு தண்ணியைப் போட்டுக்கிட்டு வெளியூரில் இருந்துட்டு ஊருக்கே வராம இருந்துட்டார்.

இங்க மீனு பாப்பா தான் அம்மாவும் இல்லாம அப்பாவும் கூட இல்லாம அந்த ரஞ்சிதா கிட்டயும் அவ புருசன் கிட்டயும் கிடந்து சீரழியுது!”

“போதும்!” என்று சொல்லி நந்தினியை தடுத்தவன், “இதுக்கு மேல எதுவும் சொல்லாத! கேக்குற சக்தி எனக்கு இல்ல!

ஏன். மாமா அப்படி நினைச்சீங்க? நானும் மஞ்சுவும் அப்படியா பழகினோம்? மஞ்சு எனக்கு அம்மா மாதிரி மாமா!

அது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு தானே நினைச்சேன்.

ஸ்கூல் டேய்ஸ் கூட எனக்காக ரெண்டு டப்பால சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தவ அவ!

அனாதையான எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவ தான்!

என் மேல முதல் முதலா பாசம் வச்ச ஜீவனும் அவ மட்டும் தான்!

அவ மூலம் தான் எனக்கு மாமா நீங்களும் மீனுக் குட்டின்னு  ஒரு தேவதையும் உறவா கிடைச்சீங்க.

என்னை அஸ்வினி லவ் பண்றான்னு தெரிஞ்சப்ப, எனக்கும் அவ மேல லவ் இருந்தும் கூட நான் அவ மாமாவுக்கு  பயந்து விலகித் தான் போனேன்.

அப்ப கூட மஞ்சு தான் எனக்கு தைரியம் சொல்லி எங்கள சேர்த்து வச்சா.

கூடவே அவளோட நர்சரி சப்ளையர் ஒரு கேரளா பொண்ணு மூலமா, எனக்கு கேரளாவில் இருக்கும் ஒரு பின்கார்ப்(Fin- Corp) கம்பெனியில் வேலைக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தா.

அதோட மட்டும் இல்ல. எங்களை ட்ரைன் ஏத்தி விட்டு, போகும் போது கையில் கொஞ்சம் கேஷும், அப்புறமும் மனசு கேக்காம அவளோட ஏடிஎம் கார்டையே என் கையில் கொடுத்துட்டா. நீ போய் செட்டில் ஆனப் பின்னே கொரியர் பண்ணிடு அப்படின்னு சொல்லி!”

“ஆனா அந்த லெட்டர்? அது எப்படி?”

“அது லெட்டரே இல்லை! எனக்கு தமிழில் அவ்வளவா எழுதப் படிக்க வராது. இப்ப தான் கொஞ்ச நாளா கத்துக்கிட்டு இருக்கேன்.

எங்க மாமாவுக்கு நான் ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டுப் போகணும் அப்படின்னு நான் தான் சொன்னேன். அதுக்கு மஞ்சு ஒரு பேப்பரில் மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன் அப்படின்னு எழுதி கொடுத்தாங்க. நான் அதை அப்படியே பார்த்து எழுத முயற்சி பண்ணினேன். ஆனா முடியல. நேரமும் இல்ல கிளம்புற அவசரத்தில்! அதை அங்கேயே போட்டுட்டு, நாங்க ஸ்டேசன் கிளம்பிட்டோம்.

மஞ்சு தான் வந்து ட்ரெயின் ஏத்தி விட்டு போனாங்க” என்று அஸ்வினி சொல்ல,

அதைக் கேட்ட ரகுவின் மண்டை வெடிக்காமல் இருந்தது தான் ஆச்சர்யம்!

“அய்யோ  மஞ்சு”  என்று தலையில் மட்டு மட்டேன்று  அடித்துக் கொண்டு சரிந்தான் ரகு.

அவனைத் தடுத்துக் கொண்டே நந்தினி கேட்டாள். “ஆனா அஸ்வினியோட போன் எப்படி மஞ்சு கிட்ட வந்துச்சு? மஞ்சுவோட போன் எங்க?”

“ரயில்வே ஸ்டேசன்ல ஸ்டோன் பெஞ்சில் உக்கார்ந்து பேசிக் கிட்டு இருக்கும் போது ஒரே மாதிரி கவர் போட்டிருக்கும் ரெண்டு பேரோட போனையும் மாத்தி எடுத்துக்கிட்டாங்க மஞ்சுவும் அஸ்வினியும்.

முதலில் அஸ்வினி தான் அந்த பிங்க் கலர் கவரை வாங்கிப் போட்டிருந்தாள். அது நல்லா இருக்குன்னு சொல்லி மஞ்சுவும் அதே மாதிரி வாங்கிப் போட்டிருந்தா அவ போனுக்கும்.

ட்ரெயின் கிளம்பின பின்னாடி தான் போன் மாறினதையே பார்த்தோம்.” என்று வடிவேல் சொல்ல, அஸ்வினி இடையிட்டாள்.

“ வீட்டுக்கு போன உடனே போன் பண்ணின மஞ்சு, பரவாயில்ல. அது உன் கிட்டயே இருக்கட்டும். உன்னோட போன் பாஸ்வேர்ட் மட்டும் சொல்லு. பயப்படாத. நான் உள்ள எல்லாம் எதையும் போய் பார்க்க மாட்டேன். வீடு போகுற வரைக்கும் கால் பண்ண மட்டும் தான் கேக்குறேன் அப்படின்னு மஞ்சு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.

வீட்டுக்குப் போய் போன் பண்ணினாங்க.  நான் உன் போனை ஆன்ல வச்சுருந்தா உன் மாமா போன் பண்ணிட்டே இருப்பார். அதனால ஆப் பண்ணி உள்ளே போட்டுட போறேன். எதுவா இருந்தாலும் இப்போதைக்கு நந்தினி போனுக்கு அடி. அவ போன் சர்வீஸ் பண்ண சொல்லி என்கிட்ட கொடுத்திருக்கா. என் கிட்ட தான் இருக்கு. என் போனில் அவ நம்பர் இருக்கும். பண்ணி பேசுங்க. நான் வேற சிம் வாங்கின பிறகு நம்பர் ஷேர் பண்றேன்னு சொன்னாங்க.

ஆனா அன்னிக்கு மட்டும் தான் நாங்க நந்தினி நம்பருக்கு போன் பண்ணி பேசினோம்.

அதுக்கப்புறம் அந்த போன் நம்பருக்கு எத்தன வாட்டி ட்ரை பண்ணினாலும் லைன் கிடைக்கவே இல்லை. அஸ்வினி போனும் ஸ்விட்ச் ஆப் ஆகவே இருந்தது!

வேற யாரையும் காண்டாக்ட் பண்ண பயம். இதில் போன இடத்தில் எங்க ரெண்டு பேத்துக்கும் மாறி மாறி உடம்பு சரியில்லாம போச்சு. வடிவேல் போனும் திருட்டுப் போய்டுச்சு. இப்ப தான் புது போன் வாங்கவென்று போன மாசம் கூட ஒரு அவசரத்துக்கு மஞ்சுவோட கார்டில் இருந்து பணம் எடுத்தோம்.

முதலில் பாலக்காட்டில் தான் இருந்தோம். அப்புறம் அவர் பாஸோட இன்னொரு கம்பெனி கேலிகட்டில் இருக்குன்னு அதைப் பார்த்துக்க எங்கள அங்க அனுப்பிட்டாங்க.

இதுக்கு இடையில் எனக்கு என்னோட அப்பா என் பேர்ல போட்டிருந்த எல்.ஐ.ஸி பணம் ஒண்ணு நாங்க எதிர்பார்க்காத நேரத்துல வந்துச்சு.

அதான்  மஞ்சுவைப் பார்த்து அவங்க கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துட்டு நன்றி சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்.

இப்ப நான் கன்சீவா இருக்கேன். அதான் தைரியமா இந்த ஊர்க்கு இப்ப வந்து நிற்கிறோம்.

இங்க போன அப்புறம் ஒரு நாள் நான் வடிவேல் நம்பரில் இருந்து என் மாமாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டேன். இந்த மாதிரி நான் வடிவேல் கூட வாழ்க்கையை ஆரம்பிக்க  போறேன்னு”  என்றாள் அஸ்வினி.

 இதைக் கேட்ட நந்தினி அங்கிருந்த பரமசிவத்திடம் போய்,

“அப்ப உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்! வடிவேல் கூட போனது அஸ்வினி தான் மஞ்சு இல்லைன்னு!

தெரிஞ்சிருந்தும் பேச்சுக்கு பேச்சு மஞ்சு வடிவேல் கூட ஓடிப்போய்ட்டா ஓடிப் போய்ட்டா அப்படின்னு சொல்லிட்டே இருந்திருக்கீங்க?

அப்படின்னா.. உங்களுக்கு வடிவேல் கூட அஸ்வினியை அனுப்பி வச்சது மஞ்சு தான்னு தெரிஞ்சு, நீங்க அவளை என்னமோ பண்ணி இருக்கீங்க? என்ன பண்ணினீங்க அவள?” அவர் சட்டையைப் பிடித்து அடிக்கவே போய் விட்டாள் நந்தினி.

ரகுவும் அவரிடம் வந்து “சொல்லுய்யா.. என் மஞ்சுவ என்ன பண்ணின? அவ எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா? இப்ப சொல்லல.. உன் சாவு என் கையில் தான்” என்று சொல்லி அவர் குரல்வளையை அழுத்தினான்!

“ஏய்..ஏய். விடுப்பா அவரை..” என்று கூட இருந்தவர்கள் அவனை விலக்கினார்கள்.

பரமசிவத்திற்கும் இப்போது பயம் வந்து விட்டது!

குடும்ப மானம் போகக்கூடாது என்று தான் வடிவேல் கூட போனது தனது மருமகள் தான் என்று தெரிந்திருந்தும், ஊர்க்காரர்கள் எல்லோர் மாதிரியும் மஞ்சு வடிவேல் கூட ஓடிப் போய் விட்டதாக பேசிக் கொண்டிருந்ததே!

ஆனால் இப்படி மஞ்சு காணாமல் போனதுக்கு தன்னையே காரணமாக்குவார்கள் என்று அவர் நினைத்திருக்க வில்லை!

‘அய்யோ.. மஞ்சு விவகாரம் இப்போது போலிஸ் கிட்ட போயாச்சு.

நாம வேற போலிஸ் கிட்டயும் அதையே சொல்லியிருக்கோம். அஸ்வினி காதல் பத்தி மூச்சு விடல!

இப்ப நாம தான் மாட்டிக்குவோம் போலயே’ அவருக்குள் பயம் சூழ்ந்தது!

“யப்பா..நான் நடந்தத அப்படியே சொல்லிடறேன்.

நான் ஒண்ணும் மஞ்சுவ முதலில் தப்பா பேசல! அப்படி பேச ஆரம்பிச்சது ரஞ்சிதா தான்!

அஸ்வினி காணாம போன அன்னிக்கு அவள் ரூமில் எனக்கு அந்த லெட்டர் கிடைச்சது!

கூடவே என் கணக்குப் பிள்ளை அவர் மகளை ட்ரெயின் ஏத்தி விட ஸ்டேசன் போய் இருக்கார். அங்க வச்சு கடைசியா ட்ரெயின் கிளம்புறப்போ தான் பார்த்து இவங்கள இருக்கார். வயசானதால் அவருக்கு அது எந்த ஊருக்குப் போற ட்ரெயின் அப்படின்னு தெரியல.

ஆனா அவங்க மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தத மட்டும் பார்த்திட்டு வந்து என் கிட்ட சொல்லி இருந்தார்.

நான் கோபமா போய் வீட்டில் அவ ரூமை ஆராய்ந்து அங்கு கிடைச்ச அந்த லெட்டரை எடுத்துக் கிட்டு ரகுவைப் பார்க்க இந்த வீட்டுக்கு வந்தேன். அவன் ஊரில் இல்லை. ரஞ்சிதா தான் இருந்துச்சு. அது கிட்ட சத்தம் போட்டேன்.

அது உடனே எல்லாம் ஒத்துக்கல. நான் பொய் சொல்றேன்னு சொல்லு என்கிட்ட சண்டைப் போட்டுச்சு.

அப்ப அது மூஞ்சில அந்த லெட்டரை வீசி எறிஞ்சிட்டு நல்லா திட்டி விட்டு வந்திட்டேன்.

இவ்வளவு தான் நான் செஞ்சது!” என்று விளக்கம் கொடுத்தார் அவர்!

‘அப்ப இவருக்கும் தெரியாதா?’ நந்தினி சோர்ந்து போய் தரையில் அப்படியே ஒடிந்து அமர்ந்தாள்.

‘அப்ப.. யாருக்கு தான் தெரியும் மஞ்சுவின் நிலை?’ ரகு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி வாங்கி அப்படியே உறைந்து போய் இருந்தான்.

மீனு இன்னமும் கவியின் அணைப்பில்.

எல்லோரும் சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, ரமேஷ் ஆரம்பித்தான்.

“மஞ்சு காணாம போன விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னிக்கு நடந்த விசயத்துக்கு வாங்க. டீச்சர் வீட்டுக்குள்ள அத்து மீறி நுழைஞ்ச ரகுவுக்கு என்ன சொல்ல போறீங்க?”

“ஏம்பா.. அவனே பொண்டாட்டிய காணோம்னு மனசு உடைஞ்சு போய் இருக்கான். இப்ப போய் கண்டதையும் பேசிக்கிட்டு!” பஞ்சாயத்தில் ஒருவர் கருத்து சொல்ல,

“என்னய்யா சோகம்?  பொண்டாட்டி இனி வர மாட்டான்னு தெரிஞ்சு தானே ரகு, டீச்சரை தேடி வந்திருக்கான்.

இதே காரியத்த நான் செஞ்சுருந்தா சும்மாவா விட்டுருப்பீங்க?” என்றான் கிண்டலாக.

“ஏய்.. ச்சீ சும்மா இரு..நீயும் ரகு அண்ணனும் ஒண்ணா? ஒரு குச்சிக்கு புடவையை சுத்தி வச்சுருந்தா கூட பின்னாடியே போற ஆள் நீ!”

“ஓ.. அப்படியா… நான் அப்படின்னே வச்சுக்க. ஆனா உன்னோட உத்தம புத்திர அண்ணன் எதுக்கு இப்படி டீச்சரோட பெட்ரூம் வரை வந்தான்? அதுக்கு பதில் சொல்லு. முதல்ல”.

“அது.. வந்து.. அவர் பொண்ணு இங்க இருந்ததால வந்தார்”. என்றாள் நந்தினி தயங்கியபடி.

“அப்படியே அவர் பொண்ணு உள்ள இருந்தா கூட என்ன பண்ணியிருக்கணும்? பாப்பாவை வெளியே கொண்டு வர சொல்லில பார்த்திருக்கணும்! நேரா பெட்ரூம் வரைக்குமே போய், அவ பக்கத்தில படுத்துக்கலாமா?

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” கிண்டலாக சொன்னான் ரமேஷ்.

“இப்ப என்ன பண்ணனும்கிற?” வடிவேல் சீறினான்.

“ஒண்ணு பஞ்சாயத்துல அவனுக்கு எதாச்சும் தண்டனை கொடுக்கணும்.

இல்ல அவங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்”. எப்படியும் கவி அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள் என்ற தைரியம் அவனுக்கு!

“யார் கல்யாணத்த யார் முடிவு பண்றது?” வேறு ஒரு ஆண் குரல் கேட்டு அனைவரும் திரும்பினார்கள்.

“கவின்” என்று கூவியபடி அவன் அருகில் ஓடினாள் கவி.

“அக்கா இருக்கா, இந்த மாதிரி எல்லாம் கிராமங்களில் நடக்கும்னு கேள்விப் பட்டு இருக்கேன். நான் வந்துட்டேன் இல்ல. நீ பயப்படாதே!” என்று ஆறுதல் சொன்னவனிடம் அனைத்தையும் சொன்னாள் கவி.

பொறுமையாகவே கவனத்துடன் கேட்டுக் கொண்டான் கவின்.

கவிக்கே ஆச்சர்யம் ஆகி விட்டது, அவனின் இந்த விவேகமான அணுகுமுறை கண்டு! படித்துக் கொண்டிருப்பது சட்டம் அல்லவா!

“அப்ப.. மஞ்சுன்றவங்களுக்கு என்ன ஆச்சுன்னு இன்னமும் சரியா தெரியல! போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கீங்க இல்ல? வாங்க அங்க  போய்  விசாரிப்போம்”. என்றான் கவின்.

“அப்ப.. இந்த பரமசிவம்..” நந்தினி இழுத்தாள்.

“அவர் சொன்னத வச்சுப் பார்த்தா, அவருக்கும் மேல வேற யாரோ இதில் இன்வால்வ் ஆகி இருக்கிற மாதிரி இருக்கு பார்ப்போம்”. என்றான்.

அதற்குள் அஸ்வினி வந்து விட்ட விசயம் கேள்விப்பட்டு பரமசிவத்தின் மனைவியும் கனியும் அங்கு வந்து அஸ்வினியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

பரமசிவத்தால் முறைக்க மட்டுமே செய்ய முடிந்தது!

கவினுடன் ரகு, வடிவேல் நந்தினி இணைந்து கொண்டார்கள்.

கவி, மீனுவோடு வீட்டிலேயே இருந்து கொண்டாள்.

—-

போலிஸ் ஸ்டேசன்.

வழக்கம் போல கவினுடனும் அதே தொனியில் தான் பேசினார் அந்த எஸ்.ஐ.

அந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்ன படியால்.

“இப்ப என்ன? அந்த பொம்பள இந்த வடிவேல் கூட ஓடிப் போகல அவ்வளவு தானே! அப்ப யாராச்சும் வைரவேல் கூட ஓடிப் போய் இருப்பா!

இன்னிக்கு தேதிக்கு எத்தனை கள்ளக்காதல் கேஸ்களை நாங்க பார்த்திட்டு இருக்கோம். போங்க எதாச்சும் தகவல் வந்தா சொல்லி அனுப்புறோம்” என்றார் விட்டேத்தியாக!

இந்த கேசை எடுத்தால், வீணாக அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி பேர் அடி படும். அதில் பணம் போட்டு இருக்கிற அரசியல்வாதிகள் பேரும் அடிபடும்.

ஏற்கனவே அவர்கள் பேரில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் ஒரு புள்ளியை வைத்து இருக்கின்றன.

ஒரு சொன்ன பாயின்ட் கிடைத்தால் கூட அதை வைத்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு என்ட் கார்ட் போட காத்திருக்கின்றன, அவர்கள் இதற்கு முன்பு செய்திருந்த தில்லுமுல்லுகளால்!

எனவே பலரையும் காப்பாற்ற வேண்டியே, அந்த எஸ்.ஐ மஞ்சு கேசை எடுக்காமல் இருந்தது!

இப்போது கவின் தன்னை ஒரு லா ஸ்டுடென்ட் என்று அறிமுகப்படுத்தியும் கூட கண்டு கொள்ள வில்லை.

கவினுக்கு கோபம் வந்தது.

உடனே தன் சீனியருக்கு போன் பண்ணி விசயத்தை சொல்ல, அவர் அவனை தஞ்சையில் இருக்கும் திறமையான வக்கீலான தன் சகலைக்கு விசயத்தை சொல்லி கவினை அவரை போய் பார்க்க சொன்னார்.

அவரும் நடந்தவற்றை ஆழ்ந்து ரகு, வடிவேல் நந்தினி உள்ளிட்டவரோடு கேட்டுக் கொண்டவர், மஞ்சுவுக்கு ஆட்கொணர்வு மனு (Habeas Corpus Petition) போட்டார்.

மஞ்சுவுக்கு இருந்த உள்ளூர் பகைவர்கள், அவளின் போன் வடிவேல் வசமே இருப்பது. வடிவேல் அஸ்வினி ட்ரைனில் கேரளா சென்றதுக்கான ஆதாரங்கள் உள்ளிட்ட பலவற்றை இணைத்து தான் அந்த மனுவை போட முடிந்தது.

மஞ்சுவும் மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட் மோசடி இவற்றை எல்லாம்

எதிர்த்து போராடியதற்கான சாட்சிகள் இருந்ததால், பல்வேறு விசாரணைக்குப் பிறகே அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

போலீஸ்க்கும் மஞ்சுவைத் தேடிக் கொண்டு வந்து நிறுத்த கட்டளை இடப்பட்டது!

இவ்வளவு நடந்தும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ஒரு ஆள் உண்டு!

அது ரஞ்சிதா!

பயத்தில் அவளுக்கு உடல் நடுங்கி கொண்டிருந்தது.

பத்தாததுக்கு அவள் கணவன் இரத்தினம் கொடுத்து விட்டுப் போய் இருந்த பெல்ட் அடிகளால் உடல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது அவளுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!