ஒவ்வொரு முறை அவன் போன் பண்ணும் போதும் இது போல எதாவது சொல்லி சமாளித்துக் கொண்டு இருக்கிறாள் நான்கு நாட்களாக.
ஒரு முறை லேசாக கடுப்படித்துக் கூட விட்டாள்.
Advertisement
“ஆமாண்டா. நீ இப்படி வேலை வேலைன்னு பொண்டாட்டி பிள்ளைய பார்க்க வராம வட இந்தியாவுல டேரா போட்டுக்கிட்டு இருந்தா மஞ்சுவுக்கு கோபம் வர தானே செய்யும்.
அவளும் ஒரு பொம்பள தானே! அவளுக்கும் ஆசாபாசம் இருக்கும் தானே!
போன வாரம் கூட அவளுக்கு சிறந்த சமூக சேவகின்னு ஏதோ பாராட்டு விழா நடந்துச்சு.
நீ அதுக்கு வரணும்னு அவ ரொம்ப எதிர்பார்த்தா!
நீ வரவே இல்லை.
கடைசியில வடிவேல் தான் துணைக்குப் போனான்.
நீ இப்படி பண்ணிட்டே இருந்தா அவ கோபப்படாம என்ன பண்ணுவா?’ ரஞ்சிதாவின் பேச்சைக் கேட்டு
சூப்பர் என்று சைகை செய்தான் ரத்தினம்!
“அடேயப்பா.. பரவாயில்லடி. நீ பயங்கரமா தேறிட்ட!
இப்படியே பேசு. அவன் நேரில் வந்து என் பொண்டாட்டி எங்கன்னு கேட்டா, நீ இப்படி வேலை வேலைன்னு ஊரை சுத்திட்டு இருந்த. அதான் உன் பொண்டாட்டி அந்த வடிவேல் கூட ஓடிப் போயிட்டான்னு சொல்லிடுவோம்”.
“என்ன சொல்றீங்க நீங்க? அத எல்லாம் ரகு நம்பவே மாட்டான். வடிவேலும் மஞ்சுவும் அண்ணன் தங்கச்சி மாதிரி பழகினாங்க”.
“இருக்கட்டுமே. இப்ப தான் ரெண்டு பேருமே இங்க இல்லையே!
மஞ்சு எங்கன்னு கேட்டா வேற என்ன சொல்ல முடியும்!
நம்ம நல்ல நேரம் அந்த வடிவேல் அந்த பண்ணை வீட்டுப் பெண்ணைக் கூட்டிட்டு ஓடிப் போய்ட்டான்.
எப்படியும் இந்த ஊருக்கு திரும்பி வர்ற தைரியம் அவனுக்கு வரவே வராது!
அப்ப நாம இதையே சொல்லி எல்லாத்தையும் நம்ப வச்சுடுவோம்.
பண்ணை ஒருத்தருக்கு தான் தெரியும். வடிவேல் அவங்க வீட்டுப் பெண்ணோட ஓடிப் போனது! நிச்சயம் அவர் வெளில இத சொல்ல மாட்டார். அப்புறம் என்ன தயக்கம்?
ஆனா உன் தம்பி கண்டிப்பா இத நம்பவே மாட்டான் தான்!
அதுக்கும் நான் ஒரு ஐடியா பண்ணிட்டேன்.
இதோ.. இந்த லெட்டர். அன்னிக்கு அந்த பரமசிவம் கொடுத்துட்டுப் போனது.
இதுல இருக்கிறது மஞ்சுவோட கையெழுத்து தானே?”
“ஆமா!”
“அப்ப இத வச்சே தான் ரகுவை நம்ப வைக்கணும். அப்படி நம்பினா தான் நமக்கும் நல்லது.
ரஞ்சிதாவுக்கு ரத்தினம் சொல்வதற்கு எல்லாம் ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை!
செய்தாள்.
அவன் சொல்லித் தந்த படியே ரகு வந்து மஞ்சுவைக் கேட்ட போது, இதே கதையை சொல்லி அழுதாள்.
போலீஸ்க்கு போனால் நம்ம குடும்ப மானம் போய்டும் என்று அவனைப் போலீஸ்க்கு போகாமல் பார்த்துக் கொண்டாள்.
ரகு உடைந்து போனான்.
மஞ்சுவால் எப்படி இது முடிந்தது என்ற கேள்வியே அவன் மண்டையைக் குடைந்தது!
இருக்கவே இருக்காது என்று 99 சதவீதம் அவன் மனம் நம்பினாலும், மீதம் இருந்த ஒரு சதவீதமாக கையில் இருந்த மஞ்சுவின் அந்த லெட்டரும், எந்த தொடர்புமில்லாமல் காணாமல் போய் விட்ட வடிவேலும் அவனை மஞ்சுவை தீவிரமாக தேட விடாமல் செய்து விட்டன!
எங்கிருந்தாலும் என் மஞ்சு சந்தோசமா இருந்தா சரி. என்று முட்டாள் தனமான பெருந்தன்மையும் கூடவே ரஞ்சிதாவின் தூபமும் அவனை மஞ்சுவைத் தேடாமல் மதுவின் போதையில் முக்கி எடுத்துக் கொண்டிருந்தன.
அதற்கு மூலக் காரணமாக இருந்தவனும் ரத்தினம் தான்.
எப்போதாவது குடிக்கும் ரகுவை மொடா குடிகாரன் ஆக்கியதில் அவன் பங்கு அதிகம்!
மீனுவின் முன்பு குடித்து விட்டு வர முடியாமல் இருக்க, அவனால் குடிக்காமலும் இருக்க முடியவில்லை!
எனவே வீட்டிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டான்.
மீனுவை ரஞ்சிதா நன்கு பார்த்துக் கொள்வாள் என்ற அதீத நம்பிக்கையில்.
ரகுவை மூளை சலவை செய்து அமைதியாக்கி விட்டாலும், ரஞ்சிதாவின் மனம் சதா பயத்தில் தான் இருந்தது.
வீட்டில் மஞ்சு நடமாடுவது போல அடிக்கடி அவளுக்கு பயம் வந்தது!
அடுப்படியில் சமைத்துக் கொண்டிருக்கும் போது வெளியே யாரோ தோட்டத்து பக்கம் நின்று கொண்டிருப்பது போல உள்ளுக்குள் தோன்றும்.
ஜன்னலைத் திறந்துப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஹாலில் இருக்கும் ஊஞ்சல் திடீர் என்று தானாக ஆடிக் கொண்டிருக்கும் சில சமயங்களில்!
மாடியில் யாரோ நடமாடுவது போல காலடி சத்தம் கேட்கும்.
மேலே போய் பார்த்தால் மஞ்சு வழக்கமாக உட்காரும் அந்த கல்லால் ஆன திவான் பெஞ்சில் அவள் அமர்ந்து இருப்பது போல இருக்கும்!
கிட்டே போய் பார்த்தால் காலியாக இருக்கும்!
மீனுக் குட்டி வியர்த்து வழிய தூங்கிக் கொண்டிருந்த போது, தானாக ஏசி ஆன் ஆனது ஒரு முறை!
அதே போல மஞ்சுவை புதைத்த இடத்தில் போய் அடிக்கடி நின்று பார்ப்பாள்.
ஏனோ அங்கு போய் நிற்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது அவளுக்கு.
அப்போது எல்லாம் ரத்தினம் பார்த்து விட்டால் அங்கிருந்து போக சொல்லி விரட்டுவான்!
ரொம்பவும் பயந்து போய் யாரோ மந்திரிப்பவரிடம் சென்று கயிறு கயிறாக வாங்கி வந்து வீட்டில் அங்கங்கே கட்டி வைக்கத் தொடங்கினாள்.
இதைக் கவனித்து விட்டாள் அன்னம்!
அவளுக்கும் சந்தேகம் வந்து விட்டது!
அந்த வீட்டில் ஏதோ சரியில்லை என்று அவளுக்கும் புரிந்தது!
மஞ்சுவும் நந்தினியும் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த துளசிச் செடி வேறு முற்றிலும் காய்ந்தே போய் விட்டது!
அதனால் கறிவேப்பிலை முருங்கைக் கீரை பறிக்க கூட அவள் அந்த வீட்டுக்குள் போவதே இல்லை!
தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது ரஞ்சிதாவுக்கு.
எனவே முன்பு குடியிருந்த பூர்வீக வீட்டிற்கே திரும்பவும் குடித்தனத்தை மாற்றிக் கொண்டாள்.
ரகுவிடம், அந்த வீட்டில் இருந்தால் மஞ்சு நினைவாகவே இருக்கிறது என்று சொல்லி சமாதானம் செய்து விட்டாள்!
இந்த வீட்டை வாடகைக்கு விடலாம் என்ற போது ரத்தினம் முதலில் வேண்டாம் என்று தான் சொன்னான்.
ஆனால் வீட்டை அப்படியே போட்டு விட்டால் வீடு வீணாக போய் விடும் என்று ரஞ்சிதா உறுதியாக இருக்க, அவளுக்கு தகுந்த மாதிரி பிக்கல் பிடுங்கல் இல்லாத கவி டீச்சர் வரவே ரத்தினமும் சம்மதித்தான்.
எல்லாம் நல்லபடியாக தான் போய்க் கொண்டிருந்தது இது வரை!
ஆனால் இந்த ரகு குடித்து விட்டு டீச்சர் வீட்டுக்குள் போய், அதைப் பார்த்து அன்னம் ஊரைக் கூட்டி, சரியாக அப்போது பார்த்து ஓடிப் போன வடிவேல் அஸ்வினியும் திரும்பி வர, இப்போது மஞ்சு எங்கே என்ற விஷயம் போலீஸ் விசாரணையில்!
அதுவும் ரத்தினத்துக்கு ஆதரவாக இருந்த குரு மூர்த்தியின் ஆளான பழைய எஸ்.ஐக் கு பதில் வேறு ஒரு திறமையான நேர்மையான எஸ்.ஐ !
கட்டாயம் தோண்டி துருவி எடுத்து எந்த உண்மையையும் கண்டுபிடித்து விடுவாராம்!
“நான் எல்லாம் மாட்ட மாட்டேன். மாட்டினால் கூட நீ தான் மாட்டுவ!” என்று சொல்லி விட்டு போயே போய் விட்டான் அவள் அருமைக் கணவன்!
‘நானெல்லாம் என்ன ஜன்மம்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த, என்னை முழுசாக நம்பிய மஞ்சுவை ரகுவை ஏமாற்றிய, என் மேல் சின்ன வயதில் இருந்தே பாசமாக இருந்த, என்னை மூத்த சகோதரியாக, ஒரு தாயின் இடத்தில் வைத்து இருந்தவளை கொன்னு புதைச்ச நானெல்லாம் என்ன ஜன்மம்?
நான் யாருக்காக வாழனும்?
எதுக்கு இன்னமும் செஞ்ச தப்பை ஒத்துக்காம இருந்து உயிர் வாழணும்?
போதும்.
போலீஸ் வந்து என்னை அரஸ்ட் பண்றதை எல்லாம் என்னால தாங்கிக்கவே முடியாது!
அப்படி அவமானப்படுத்துக்கு பேசாம உயிரையே விட்டுடலாம்!’ என்று தீர்ம்மானாக முடிவெடுத்தவள் பேனில் புடவையை மாட்டி தொங்க முயன்றாள்!
ஆனால் பேன் மாட்டியிருந்த கொக்கியோடு மேற்புற சுவரில் இருந்து சிமென்ட்டை பெயர்த்துக் கொண்டு அதன் கொக்கி கழன்று கொள்ள கீழே விழுந்து விட்டாள்!
அடுத்த முயற்சியாக வயலுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடிக்க போன போதும் அது யாரோ கையை தட்டி விட்டது போல அவள் கையில் இருந்து தூரமாக போய் விழுந்து தரையில் கொட்டியது!