மான்விழி – 08
சித்தார்த் அபிமன்யு நேத்ராவையே அழுத்தமாக பார்த்து கொண்டு இருந்தவன், “நான் புரியுதானு கேட்டேன்! ஒன்னு புரியுதுனு சொல்லு, இல்லை புரியலைனு சொல்லு. இப்படி அமைதியா நின்னுட்டு இருந்தால் எப்போ உன் வாயிலிருந்து வார்த்தைகள் வரும்னு நான் காத்திட்டு இருக்கணுமா? மருத்துவ தொழில்ல ஒவ்வொரு விநாடியும் ரொம்ப முக்கியமானது. உன் மெளனத்துக்கு என்ன அர்த்தம் என்று என்னால் யோசிச்சுட்டு இருக்க முடியாது” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் பேச்சில் ஆடிப்போனாள் நேத்ரநயனி. அவசரமாக “புரியுது சார், நல்லா புரியுது” என்றாள்.
Advertisement
“என்ன புரிஞ்சது?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி
அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண்மணி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் அவசரமாக நடந்து வந்தார்.
Advertisement
Advertisement
சித்தார்த்திடம் திரும்பி, “சார் கூப்பிட்டிங்களாமே!” என்று கேட்டார்.
“ஜமுனா! இந்த பெண் இன்னைக்கு தான் வேலையில் சேர்ந்து இருக்காங்க. ஜெனரல் வெளி நோயாளிகள் பிரிவுல இவங்களுக்கு டிரைனிங் கொடுங்க” என்றவன் நேத்ராவிடம் திரும்பி
Advertisement
“மிஸ். நயனி இவங்க நம்ம மருத்துவமனையில் ரொம்ப வருஷமா வேலை செய்து கொண்டிருக்கும் டாப் நர்ஸ். இவங்களோட இருந்து வேலை கத்துக்கோங்க. ஒரு மாதம் தான் உங்களுக்கு டிரைனிங். அதுக்குள்ள வேலை கத்துக்கிட்டு தனியாக வேலை செய்யணும் புரியுதா?” என்றான்
“புரியுது சார் புரியுது” என்றாள் அவசரமாக.
அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் தனக்குள் அடக்கியபடி “ஓகே நீங்க கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு தன் லேப்டாப்பில் கவனத்தை திருப்பினான்.
ஜமுனா நேத்ராவை ஏற இறங்க ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்னோட வா” என்று அழைத்துச் சென்றாள்.
அவர்கள் வெளியே வந்ததும், “என்ன படிச்சிருக்க? இதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சுட்டு இருந்தே?” என்று கேட்டாள்.
“டிப்ளமா நர்சிங். இதுக்கு முன்னாடி எங்கேயும் வேலை செய்யலை, இங்கே தான் முதல் அனுபவம்” என்றாள் நேத்ரா.
“எப்போ கோர்ஸ் முடிச்சே?” என்றாள் ஜமுனா மீண்டும்.
“மூணு வருஷம் ஆயிடுச்சு” என்றாள் நேத்ரா
“இத்தனை வருஷமா வேலை செய்யாமல் என்ன பண்ணிட்டு இருந்தே? இடையில் இவ்வளவு இடைவெளி என்றால் படிச்சதே மறந்திருப்பியே” என்றாள் ஒரு ஏளன பார்வையுடன்
“அது வந்து படிப்பை முடிக்கும் போது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போச்சு, போன வருஷம் தான் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் அப்பாவுக்கு துணையாக இருந்தேன்” என்றாள்.
“சரி இப்போ மட்டும் எதுக்கு வேலைக்கு வந்தே?” என்றாள் ஜமுனா ஏளனமாக
இதற்கு என்னவென்று பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் நேத்ரா.
“வேறெதுக்கு நம்ம உயிரை எடுக்க தான்” என்று சிரித்தபடி அவர்களருகே வந்தாள் மற்றொரு நர்ஸ்.
“பாரு வசந்தி, படிச்சது டிப்ளமா! அதுவும் மூணு வருஷத்துக்கு முன்னாடி, அனுபவமும் இல்ல. ஒரு மாசத்துக்குள்ள இந்தம்மா வேலைய கத்துக்கணுமாம். இவங்களுக்காக நமக்கிருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு இவங்களுக்கு நாம கத்து தரணுமாம், கேட்டியா கதைய?”என்று அலுத்துக் கொண்டாள் ஜமுனா.
“சரி சரி நீ டென்சன் ஆகாத. இந்தாம்மா பொண்ணு! அந்த கேண்டீன்ல சூடா பஜ்ஜி போட்டு இருப்பான், அதை வாங்கிட்டு அப்படியே பிளாஸ்கில் டீ வாங்கிட்டு வா” என்று அதட்டினாள் வசந்தி.
நேத்ராவிற்கு கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது, அதை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து பிளாஸ்க்கை வாங்கி கொண்டு சென்றாள்.
அவள் வாங்கி வந்த பின்பும் ஏதாவது வேலை கொடுத்து ஏவிக் கொண்டே இருந்தனர். “அந்த டேபிளை நகர்த்து, இந்த சேரை நகர்த்து இந்த பைலை அட்மின்ல கொடுத்துட்டு வா” இது போன்ற அட்டென்டர் வேலையையே கொடுத்தனர்.
சரி அடுத்த நாள் சொல்லி தருவார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்கள் கொடுத்த வேலை எல்லாம் முகம் கோணாமல் செய்து முடித்து அன்று மாலை அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றாள்.
அறையில் அவளுடன் தங்கியிருந்த சுதா முதல் நாள் வேலை அனுபவத்தை பற்றி கேட்கவும் நேத்ராவுக்கும் இன்றைய தன் நிலையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் காலை செக்யூரிட்டி முதல் சித்தார்த் வரை அவள் ஆடையை கேலி செய்தது, ஜமுனாவும் வசந்தியும் அவளிடம் நடந்து கொண்டது வரை கூறினாள்.
“ஆமா நேத்ரா இந்த டிரசையும் கண்ணாடியும் மாத்துனு நானே சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் அந்த ஜமுனா உனக்கு வேலை சரியாக சொல்லிக் கொடுக்கலைன்னா டாக்டர் சித்தார்த்திடம் சொல்லிடு. அப்புறம் ஒரு மாசத்தில் வேலை கத்துக்கலைனா அவர் தானே உன்னை கேள்வி கேப்பாரு?” என்றாள் சுதா.
“இப்போ தானே சேர்ந்தேன், உடனே குறை சொன்னால் நல்லா இருக்காது. ஒருவேளை அவங்க நாளைக்கு சொல்லி கொடுக்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் நேத்ரா.
அதன்பின் சுதாவுடன் சென்று அத்தியாவசியத்திற்கு இரண்டு செட் சுடிதாரும், வெளியில் சென்றால் அணிவதற்கு இலகுவான இரண்டு புடவையும் எடுத்துக் கொண்டாள். பட்டுப்புடவையை தவிர அவளிடம் இருந்தது எல்லாம் அவளின் அம்மாவின் புடவைகள். அனைத்துமே பழைய மாடல் வகையை சார்ந்தவை.
அடுத்த நாள் புதிதாக வாங்கிய சுடிதாரை அணிந்து கொண்டு வேலைக்கு சென்றாள். கண்கள் தானாக சித்தார்த் அறையில் சென்று மீண்டது. இப்போது அணிந்திருந்த உடை அவளுக்காக அளவெடுத்து தைத்தது போல இருந்தது. இப்போது அவளைப் பார்த்தால் அவன் என்ன சொல்வானோ? என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் சித்தார்த் தொடர்ந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்ததால் அவன் அலுவலக அறை பக்கமாகவே இரண்டு நாட்களாக வரவில்லை.
ஜமுனாவும் வசந்தியும் எப்போதும் பிசியாகவே இருந்தனர். அவளையும் ஒரு இடத்தில் நிற்கவிடாமல் வேறு வேலை சொல்லிக் கொண்டே இருந்தனர். இப்படியே பதினைந்து நாட்கள் கடந்திருக்க நேத்ரா ஊசியை செலுத்த கூட கத்து கொள்ளவில்லை. இன்னும் பதினைந்து நாட்களே இருக்கிறது. சித்தார்த் வேலையை பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது? அப்போது தெரியாமல் விழிப்பதை விட இப்போதே இந்த ஜமுனா அவளுக்கு எதுவுமே கற்று தரவில்லை என்று சொல்லி விட்டால் குறைந்த பட்சம் சொல்லி தர வேறு ஆளையாவது மாற்றிவிடுவான் என்று யோசித்தவள் சித்தார்த்தை எதிர்பார்த்து தினமும் அவன் அறைப்பக்கம் செல்வதும் பக்கவாட்டில் திரும்பி யாருக்கும் தெரியாமல் அவன் அறையின் கதவின் மேல் புறம் இருக்கும் கண்ணாடி வழியே எட்டி பார்ப்பதுவுமாக இருந்தாள்.
சித்தார்த்திற்கு ஓய்வு கூட எடுக்க முடியாமல் அதிகப்படியான நிர்வாக பொறுப்புகள் இருந்தன. அதற்கிடையே அறுவை சிகிச்சைகள் வேறு. அவன் அறைக்கோ அல்லது வெளி நோயாளிகளுக்கான பகுதிக்கோ அவனுக்கு செல்ல நேரமில்லை. அந்த பகுதிக்கு ஏற்கனவே மற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தி இருந்ததால் மற்ற வேலைகளில் பிசியாக இருந்தான்.
ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு சென்றவன், தன் கைப்பேசியில் இணைக்கப்பட்டிருந்த அவன் அறைக்கான சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்க தொடங்கினான். அவன் அறைக்கு செல்ல முடியாத நாட்களில் இப்படி தன் அறைக்கு யாராவது அத்துமீறி சென்றார்களா என்று பார்ப்பதுண்டு. ஏனென்றால் அனைத்து முக்கிய கோப்புகளும் அங்கு தான் இருக்கும்.
அப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக வீடியோ பதிவை நகர்த்தி பார்க்கும் போது அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. தினமும் நேத்ரா அவன் அறை பக்கமாக காலை மதியம் மாலை என்று மூன்று வேளையும் சென்று வந்தாள். போகும் போது எல்லாம் யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்து பின் தயங்கியபடி அவன் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் அங்கே இல்லை என்றதும் அவள் முகம் வாடி சிறிது ஏமாற்றத்தோடு செல்வதை பார்த்தான். பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னையறியாமல் உடலில் ஒரு கிளர்ச்சியும் வார்த்தையால் சொல்ல முடியாத ஒரு வித பரவசமும் மனமெங்கும் பரவியது.
ஆனாலும் மருத்துவமனையின் நிர்வாகியாக யோசித்தது அவன் மூளை. தினமும் மூன்று வேளை என்னை பார்க்க வந்து விட்டால் இவள் எங்ஙனம் வேலை செய்வது? எப்படி வேலையை கற்றுக் கொள்வாள்? என்று எண்ணியபடி உறங்கி போனான்.
மறுநாள் காலை அவன் நேராக வெளி நோயாளிகளை கவனிக்கும் பிரிவுக்குச் சென்று தனக்கான அறையில் நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். அவன் அங்கே இருப்பது தெரியாமல் நேத்ரா எப்போதும் போல ஜமுனாவிற்கும் வசந்திக்கும் செய்யும் அனைத்து பணிவிடைகளையும் செய்து முடித்தாள்.
சித்தார்த் இரண்டு முறை எதேச்சையாக வருவது போல வந்து நேத்ரா எங்காவது கண்ணில் தென்படுகிறாளா? என்று பார்த்தான். ஆனால் அவள் அவன் கண்களில் படவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய நோயாளிகளை பரிசோதிக்கும் அறைக்கு மீண்டும் சென்று தன் கைப்பேசியில் இருந்த சிசிடிவி கேமராவை ஓடவிட்டான்.
அப்போது சரியாக நேத்ரா அவனுடைய அறையின் முன்பு தான் நின்றுக் கொண்டு சித்தார்த் இருக்கிறானா? என்று எட்டி பார்த்து கொண்டிருந்தாள்.
ஒரு புறம் மென் புன்னகை அவன் இதழில் தோன்றி மறைந்தது. மறுபுறம் பல்லை கடித்து கொண்டு “ஜமுனா” என்று கத்தினான்.
ஜமுனா என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வர, “நேத்ரநயனி என்ன பண்றாங்க? வேலை எல்லாம் கத்துகிட்டாங்களா? அவங்களை அனுப்புங்க!” என்று ஆணையிட்டான்.
அவசரமாக ஜமுனா ஓடிச்சென்று நேத்ராவை பல இடங்களில் தேடி பிறகு சித்தார்த்தின் அலுவலக அறைக்கு எதிரே அவளை கண்டுபிடித்து, “ஏய் எங்கே போய் தொலைஞ்சே? உன்னை டாக்டர் கூப்பிடுறாரு பாரு. சீக்கிரம் போ” என்று சீறினாள்.
சித்தார்த் தான் அறையில் இல்லையே இவள் எந்த டாக்டரை கூறுகிறாள்? என்று யோசித்தபடி, “யாரு கூப்பிடறது?” என்றாள் நேத்ரா.
“ஆங் உன் புருஷன் கூப்பிடுறாரு போய் பாரு” என்று நக்கல் செய்தாள் ஜமுனா.
நீ சொன்னாலும் சொல்லலைனாலும் அவர் என் புருஷன் தான் என்று மனதில் எண்ணி கொண்டு ஓபியை நோக்கி அவசரமாக ஓடினாள் நேத்ரா.
அவள் சித்தார்த் இருந்த அறைக்குள் செல்லும் போது அவன் நோயாளியை பரிசோதித்துக் கொண்டு இருந்தான். இவளை கண்டதும், “நயனி இவங்களுக்கு இங்கேயே டிடி இஞ்செக்சன் போடுங்க. நடக்க கஷ்டப்படுறாரு” என்றான்.
நயனியோ திருதிருவென்று விழித்தாள். “என்ன சிலையாகிட்டிங்களா?” என்றான் எரிச்சலாக.
வெளியே ஓடிச் சென்று ஜமுனாவிடம் கேட்டதற்கு அவளே கொண்டு வருவதாக கூறினாள். நேத்ரா ஜமுனாவுடன் அவள் பின்னாலேயே சென்றாள்.
ஜமுனாவை கண்ட சித்தார்த் “நீங்க ஏன் கொண்டு வர்றீங்க? அதை நயனிகிட்ட கொடுத்துட்டு போங்க” என்றான் அழுத்தமாக.
ஜமுனா அந்த ஊசியை நயனியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். நயனிக்கு கைகள் நடுங்கியது. சித்தார்த் கோபமாக அவளை பார்த்து முறைத்துக் கொண்டே “ம் அவருக்கு ஊசி போடுங்க. வெளியே நிறைய பேர் காத்திட்டு இருக்காங்க” என்றான் கோபத்தை அடக்கியபடி.
நேத்ரநயனி கைகளில் அந்த ஊசியை நடுக்கத்தோடு நோயாளியின் அருகில் கொண்டு சென்றாள். அவசரமாக எழுந்து அவளருகில் வந்தவன் அவள் கைகளில் இருந்த ஊசியை வாங்கி அவனே அந்த நபருக்கு போட்டு விட்டு மருந்து குறிப்பை எழுதி அனுப்பினான்.
அந்த நபர் செல்லும் வரை பொறுமையாக இருந்தவன் கத்த ஆரம்பித்து விட்டான். “வந்து இருபது நாள் ஆகுது இன்னும் எதுவும் கத்துக்காமல் என்ன செய்துட்டு இருக்கே” என்றான் கோபமாக.
“அது வந்து அவங்க எனக்கு சொல்லி தரமாட்டேங்கிறாங்க. அட்டன்டர் வேலை தான் செய்ய சொல்றாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ இங்கே இருந்தால் தானே அவங்க உனக்கு சொல்லித் தரமுடியும்? நீ தான் தினமும் என்னோட அறையே கதினு அங்கேயே பழியாக கிடக்கிறாயே. அவ்வளவு ஆசையா இருந்தால் என் கூடவே வந்து தொலைக்க வேண்டியது தானே” என்றான் எரிச்சலாக.
“நான் ஒன்னும் உங்களை ஆசையா பார்க்க வரல” என்றாள் ரோஷமாக.
இந்த பதிலில் அவன் கோபம் இன்னும் எகிறியது. “அப்போ என் அறைக்கு எதுக்கு தினமும் மூணு வேளை பார்த்துட்டு போறே?” என்றான் அவளை கூர்மையாக பார்த்து.
தான் பார்க்க வந்ததை அவன் தவறாக எடுத்துக் கொண்டதோடு கோபமாக பேசவும் நயனியின் கண்களில் நீர் துளிர்த்தது. “ஜமுனா சிஸ் எனக்கு எந்த வேலையும் சொல்லி தரவில்லை. எதாவது அட்டென்டர் வேலை கொடுத்துட்டே இருக்காங்க. அதைப்பற்றி உங்க கிட்ட சொல்லி வேற யார்கிட்டயாவது டிரைனிங்கிற்கு அனுப்ப சொல்லி கேக்கலாம்னு தான் உங்களை தினமும் தேடி வந்தேன்” என்றாள் அழுகையை கட்டுப்படுத்திய குரலில்.
“நீ என்ன சின்ன குழந்தையா? ஒருத்தர் கையை பிடிச்சு சொல்லி தர? கண் பார்த்தால் கை வேலை செய்ய வேணாமா? அதை விட்டுட்டு புகார் சொல்ல என் அறை வாசலில் காத்திட்டு இருந்தியா? அந்த நேரத்தில் உருப்படியா ஒரு வேலை கற்றிருக்கலாமே? வேறு யாரையும் மாற்றி விட முடியாது. ஜமுனா கிட்ட தான் நீ கத்துக்கணும். இன்னும் பத்து நாள் தான் டைம் உனக்கு. அதுக்குள்ள அடிப்படை விஷயங்களையாவது கற்றுக் கொள்ளணும். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கிடுவேன்” என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சொல்லி விட்டு செல்பவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் நேத்ரநயனி.
இந்த வேலையை நம்பி தானே மகளிர் விடுதியில் தங்கி இருக்கிறாள். இவன் இங்கிருந்து அனுப்பி விட்டால் எந்த முன் அனுபவமும் இல்லாமல் எங்கு சென்று வேலை தேடுவாள்? அவளுக்கு யாரை தெரியும்? இவனுக்கு கொஞ்சம் கூட என் மேல் கரிசனமே இல்லையா? கண்ணை கரித்தது நயனிக்கு.
சித்தார்த் தன் அறைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் நேத்ராவை கூப்பிட்டு அனுப்பி இருந்தான். அவள் உள்ளே வந்து தவறு செய்துவிட்ட மாணவியை போல தலை கவிழ்ந்து நின்றாள்.
சித்தார்த் எதுவும் பேசாமல் தன் கைப்பேசியை அவளிடம் நீட்டினான். அவள் புரியாமல் நிமிர்ந்து அவனை பார்க்க, போனை காதில் வைக்க சொல்லி சைகை செய்தான். அவளும் யோசனையோடு அதை தன் காதில் வைக்க மறுமுனையில் மகேந்திரன் தான் பேசினார்.
“என்னம்மா மருமகளே ஒரு போன் கூட பண்ணல? எப்படி இருக்க? சித்து கூடவே மருத்துவமனைக்கு போய் அவனுக்கு உதவி செய்வதாக சொன்னான். ரொம்ப நல்ல முடிவு தான் எடுத்திருக்கம்மா. சித்துக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். நீ வந்ததில் இருந்து விதவிதமா சமைச்சு போடறியாமே? இன்னைக்கு என்னம்மா சமைச்சு கொடுத்தே?” என்று அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் பேசிக்கொண்டே போக என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து விழித்தாள்.
போன் ஸ்பீக்கரில் இருந்ததால், “ம் முருங்கைக்காய் சாம்பார் முருங்கைக்காய் பொரியல்” என்றான் சித்தார்த் நேத்ராவை நக்கலாக பார்த்துக் கொண்டே.
“மருமகளே நான் போனை வைக்கிறேன்மா உன் புருஷனுக்கு இங்கிதமே இல்லை. பவிஷ்கா உன்னோடு பேசணும்னு சொன்னாள், ஞாயிற்றுக்கிழமையில அவளுக்கு போன் செய்து பேசும்மா” என்றார் மகேந்திரன்.
“சரி மாமா, உடம்பை பார்த்துக்கோங்க* என்று சொல்லி போனை சித்தார்த்திடம் நீட்டினாள்.
அவளை பார்த்து கொண்டே அதை அவளிடமிருந்து வாங்கியவன், “என் அறைக்கு வந்து எட்டிப் பார்த்த உனக்கு எனக்கு போன் செஞ்சு பேசணும்னு தோணலையா?” என்றான்.
திகைப்புடன் விழி விரித்து அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அதுக்கெல்லாம் இது இருக்கணுமே என்று ஒற்றை விரலால் நெற்றியின் பக்கவாட்டில் தட்டி காண்பித்தான்.
தனக்கு அறிவில்லை என்கிறான் என்பதை உணர்ந்தவள் மனம் வாட, “நான் கிளம்பட்டுமா டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்.
“சரி சரி யாரையும் குறை சொல்லிட்டு இருக்காமல் தன் கையே தனக்கு உதவினு வேலை கத்துக்கணும் புரியுதா?” என்றான்.
“புரியுது டாக்டர்” என்றாள் அவள் அவசரமாக
தன் கட்டளையால் அவளுடைய பிரச்சனைகள் அவனுக்கு தெரியாமல் போய்விடப்போகிறது என்பதை சித்தார்த் அபிமன்யூ அறிந்திருக்கவில்லை.
(தொடரும்)
