Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!மாறனவனின் கணையில் பிழையோ

மான்விழி – 10

நேத்ரநயனிக்கு ஜமுனா கொடுக்கும் பெரும்பாலான வேலைகள் குறைந்து போனதால் நர்ஸ் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கூர்மையாக கவனிக்க தொடங்கினாள்.

 

நயனியை பார்த்த வசந்தி “என்னக்கா போற‌ போக்கை பார்த்தால் கத்துக்குவா போலிருக்கே?” என்றாள் வசந்தி. 

 



Advertisement

“அவ என்னதான் கத்துக்கிட்டாலும் டாக்டர் சித்தார்த் என்னை கூப்பிட்டு தான் அவளோட பெர்பாமன்ஸ் எப்படி இருக்குனு ரிப்போர்ட் கேப்பாரு, எப்படி ரிப்போர்ட் கொடுத்தால் வெளியே போவாளோ அந்த மாதிரி கொடுக்க போறேன். எவ்வளவு திமிர் இருந்தால் என்னை பார்த்து விரல் நீட்டி எச்சரிக்கை செய்வா? இதுல என்கிட்டே வாய் மேல கை வச்சு வாயை மூடுனு சைகை காட்றா. எனக்கு ஆறவே இல்லை வசந்தி” என்றாள் ஜமுனா பகையுடன்.

 

“எனக்கென்னவோ அவ்வளவு சீக்கிரம் டாக்டர் அவளை வெளியே அனுப்ப மாட்டார்னு தோணுதுக்கா” என்றாள் வசந்தி யோசனையாக.

Advertisement

 

Advertisement

“பார்க்கலாம் என்ன பண்றாருனு, நான் ரிப்போர்ட் கொடுத்தும் அவளை அவர் வெளியே அனுப்பலைனா இரண்டு பேருக்கு நடுவில் ஏதோ இருக்குனு அர்த்தம். அதை எப்படி கொளுத்தி போட்டு அவளை அசிங்கப்படுத்தறேனு மட்டும் பாரு” என்று கறுவினாள் ஜமுனா.

 

இரண்டு பேரும் தனக்கெதிராக திட்டம் போடுவதைப் பற்றி எல்லாம் தெரியாமல் நேத்ரா தன் வேலையில் கவனமாக இருந்தாள். தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை சுதாவிடம் கேட்டு தெளிவு பெற்றதும் இல்லாமல் விடுமுறை தினங்களில் சுதா பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று பகுதி நேர பணியாற்றினாள். சுதா பணிபுரியும் மருத்துவமனை அளவில் சிறியது என்பதால் அவர்கள் நேத்ராவிற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

Advertisement

 

அன்று சித்தார்த் கொடுத்திருந்த கால அவகாசம் முடிவடைவதற்கான கடைசி நாள். நேத்ரா அன்று காலை சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு சென்று விட்டாள். சித்தார்த் அபிமன்யு அவசரமாக மருத்துவமனைக்குள் வந்தவன் தன் அறைக்குள் சென்று கொண்டே நேத்ராவிற்கு போன் செய்தான்.

 

என்ன வந்ததும் வராததுமாக போன் செய்கிறான்? இப்பவே கேள்வியா கேட்டு நான் பதில் சொல்லலைனா வெளியே அனுப்பிடுவானோ? ஒரு வித பதட்டத்துடன் போனை எடுத்தாள்.

 

“நயனி சீக்கிரமா என் அறைக்கு வா” என்று சொல்லி அவள் பதிலுக்காக கூட காத்திருக்காமல் போனை வைத்து விட்டான்.

 

எதற்கு காலையிலேயே அவளை கூப்பிடுகிறான் என்ற குழப்பத்தோடு அவன் அறைக்குள் சென்றாள். சித்தார்த் தன் லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்கவும், அவனாக பேசும் வரை அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

அவன் எழுந்து மெல்ல தன் போனை பார்த்துக் கொண்டே அவளருகே மிகவும் நெருக்கமாக வந்து நின்றான். அதிர்ச்சியுடன் திகைத்த விழிகளோடு நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனோ அப்போதும் போனை தான் பார்த்து கொண்டு இருந்தான். ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள் சற்று பின்னோக்கி செல்லவும் அவன் அவள் தோளில் கை போடவும் சரியாக இருந்தது.

 

நேத்ரநயனி அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள். எதற்கு அழைத்தான்? எதற்கு இப்போது தோள் மேல் கை போடுகிறான்? இது அவளுக்கு கணவனின் முதல் தொடுகை மட்டுமல்ல இதுவரை அனுபவமில்லாத ஆணின் தொடுகை. உடம்பு தன்னிச்சையாக உதற தொடங்கியது.

 

அவன் மேலும் தன்னை நோக்கி அவளை இறுக்கியபடி காதருகே குனிந்து “ஷாக்க குறை”என்றான் அடிக்குரலில்.

 

தாலி கட்டும்போது கூட அவன் விரல் அவள் மேல் பட்டதாக அவளுக்கு நினைவில்லை. இத்தனை நாள் இல்லாமல் எதற்கு இப்போது தனியாக அவளை அழைத்து தோள் மேல் கை போடுகிறான் என்று அவள் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

 

தன் கைவளைவிற்குள் நடுங்கும் அவள் மேனியை உணர்ந்தவன் இப்போ எதற்கு இவ்வளவு பதட்டபடுகிறாள் என்று அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை இத்தனை நெருக்கத்தில் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறான். அவளின் அகன்ற கண்கள் ஆச்சரியத்தில் மேலும் பெரியதாக விரிந்திருக்க, அவள் அணிந்திருந்த கண்ணாடி அவளின் பார்வை வீச்சை பலமடங்காக அதிகரித்து காட்டியது. என்ன இப்படி பார்க்கிறா? விட்டால் பார்வையிலே முழுங்கிடுவா போல என்று நினைத்தபடி ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன? என்பது போல கேட்டான்.

 

அதற்கும் அவள் ஆவென்று வாயை பிளக்க, அவன் அவளை கவனிக்காமல், “வாங்க மாமா எப்படி இருக்கீங்க?” என்றான்.

 

நேத்ராவிற்கு அவன் பிடியில் இருப்பதால் உலகமே ஸ்தம்பித்தது போல இருக்க, அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை. 

 

புன்னகையுடன் உள்ளே நுழைந்த சிவக்குமார், தன் மகள் மருமகன் பிடியில் நின்றிருந்த கோலத்தை பார்த்து பூரித்துப் போனார். கூடவே அவர்கள் அந்நியோன்யமாக இருக்கும் சமயத்தில் தான் நந்தியாக வந்து விட்டோமோ என்று வெட்கத்துடன் திரும்பி கொண்டு, “நான் கொஞ்ச நேரம் வெளியில் இருக்கேன் மாப்பிள்ளை” என்றார்.

 

“ஐயோ மாமா அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீங்க இங்கேயே நில்லுங்க” என்றவன் இப்போது நேத்ராவை பார்த்து “நயனி வந்தவங்களை வாங்கனு கூட கூப்பிடாமல் என்ன அப்படி பார்க்கிறே? தினமும் பார்க்கிறது போதலையா?” என்றான் செல்லமாக சிரித்துக் கொண்டே 

 

அவன் அவளிடம் சிரித்து பேசுகிறானா? அவளால் நம்பவே முடியவில்லை! என்னவோ சொல்கிறான் அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

 

அப்பப்பா… இவளோடது கண்ணா? இல்லை காந்தமா? இப்படி பார்க்கிறாளே? என்று மனதிற்குள் நொந்தவனாய் “நயனி” என்றான் இந்த முறை சத்தமாக.

 

அந்த சத்தத்தில் சுய உணர்வு பெற்றவள் அதிர்ச்சியுடன், என்ன? என்பது போல பார்த்தாள். அவன் கண்களாலே சிவக்குமார் நின்றிருந்த திசையை காட்டினான். மெல்ல ரோபோ போல திரும்பி பார்த்தாள். 

 

அங்கே சிவக்குமாரை கண்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். “அப்பா” என்று கூறியபடி அவன் கை வளைவில் இருந்து விடுபட்டு ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்து கொண்டாள்.

 

“எப்படிப்பா இருக்கீங்க? நீங்க வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்றாள் நேத்ரா.

 

“திடீர்னு பார்க்கணும்னு தோணுச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன். சென்னை வந்ததும் மாப்பிள்ளைக்கு போன் செய்தேன். அவர் தான் மருத்துவமனைக்கு நீங்க ரெண்டு பேரும் அவசரமாக போயிட்டு இருக்கிறதாகவும் அங்கேயே பார்க்கலாமானு கேட்டார். எங்கே பார்த்தால் என்ன? இரண்டு பேரையும் ஒன்னா பார்த்து பேசிட்டு போனால் அதுவே போதும்னு சொன்னேன். அவரும் என்னை அழைச்சிட்டு வர காரையும் அனுப்பி வச்சாரு. ஏன் நீ அவர்கூட தானே கார்ல வந்தே? உனக்கு தெரியாதா?” என்று கேட்டார் சிவக்குமார்.

 

இப்போது மீண்டும் கணவனை திரும்பி பார்த்தாள். ஓ அதற்காக தான் போனில் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து கொண்டு அவள் தந்தை வரும் சமயம் சரியான நேரத்தில் அவள் தோள் மேல் கை போட்டு இருக்கிறான். அவன் செயலுக்கான காரணம் புரிந்துவிட ஏனோ மனதில் இனம்புரியாத ஒரு ஏமாற்றம் தோன்றியது. 

 

அவள் பார்வை கதிர்கள் விழி லென்ஸ் மற்றும் கண்ணாடி லென்ஸ் வழியாக ஊடுருவி மீண்டும் பல மடங்கு பெருகி அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த, “சித்தார்த் இவ கண்ணை பார்க்காதே! அது ரொம்ப டேஞ்சர்!” என்று தனக்கு தானே எச்சரித்துக் கொண்டான்.

 

தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மீண்டும் இருவரும் தங்களுக்குள் காதல் பாஷை பேசிக் கொள்கிறார்கள் என்று நினைத்து கொண்ட சிவக்குமார் அவர்களுக்கு தொல்லையாக இருக்க விரும்பாமல், “சரிங்க மாப்பிள்ளை நான் கிளம்பறேன். நேத்ரா நல்லா சாப்பிடு, மாப்பிள்ளையையும் பத்திரமா பார்த்துகோம்மா” என்றார்.

 

அதற்குள் தந்தை கிளம்புகிறேன் என்கிறாரே. அவரை இரண்டு நாளைக்கு தங்கி விட்டு செல்லுமாறு சொல்லலாம் என்றால் தந்தையை எங்கே தங்க வைப்பது? அவள் தனியாக விடுதியில் தங்கி இருக்கிறாள் என்று தந்தைக்கு தெரிந்து விட்டால் உடைந்து போவாரே! என்ன செய்வது? என்று புரியாமல் விழித்தாள் நேத்ரா.

 

சித்தார்த் தான், “என்ன மாமா எங்களுக்கு கல்யாணம் ஆகி முதல் முறையாக வந்திருக்கீங்க. வீட்டிற்கு வராமல் போனால் எப்படி? வீட்டுக்கு வந்து இரண்டு நாளைக்கு இருந்துட்டு தான் போகணும்” என்றான் உரிமையாக

 

சிவக்குமார் மகளை திரும்பி பார்த்தார். அவள் அமைதியாகவே. நின்றிருந்தாள். “நயனி என்ன அமைதியாகவே இருக்க? உங்க அப்பாவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடு” என்றான் சித்தார்த் நேத்ராவை பார்த்து.

 

எது? நம்ம வீடா? அது எங்கே இருக்கு? நானே பார்த்தது இல்லையே! அவரை எப்படி கூப்பிடுவேன்? என்று மனதிற்குள் நினைத்தவாறு மீண்டும் அவனையே அவள் பார்க்க, இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாமல் இப்படி வெறிச்சு பார்க்கிறாளே என்று தலையை கோதியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.

 

சிவக்குமாருக்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது. அவர் அங்கே தங்கும் எண்ணத்தில் வரவில்லை தான். ஆனால் மகளின் கையால் ஒரு வேளை உணவாவது சாப்பிட்டு விட்டு போகலாம் என்று நினைத்திருந்தார். ஒரு பேச்சுக்காக கூட மகள் தன்னை வீட்டிற்கு அழைக்க வில்லையே என்று அவர் மனம் வாடியது.

 

ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல், “சரி மாப்பிள்ளை நான் கிளம்பறேன்” என்றார் கம்மிய குரலில்.

 

“இருங்க மாமா, இங்கேயே சாப்பாடு வரவழைக்கிறேன். சாப்பிட்டாவது போங்க” என்று சொல்லி யாருக்கோ  போன் செய்தான்.

 

நேத்ரா தந்தையின் தோளில் ஆதுரமாக சாய்ந்து கொண்டாள். மகளின் இந்த ஒற்றை செய்கையிலேயே சிவக்குமாரின் மனபாரம் எல்லாம் நீங்கிவிட அவளின் தலையை ஆதரவாக தடவி கொடுத்தார்.

 

அதற்குள் உணவு வந்து விட நேத்ரா தன் தந்தையை அமரச் சொல்லி சாப்பாடு பறிமாறினாள். அவள் அருகில் நின்று கொண்டு சித்தார்த்தும் தன் மாமனாரை உபசரித்துக் கொண்டிருந்தான்.

 

சரியாக இதே நேரத்தில் ஜமுனாவும் வசந்தியும் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

“ஏன்டி வசந்தி, இன்னமும் அந்த நேத்ரா வேலைக்கே வரக்காணோம். வழக்கமாக நாம வர்றதுக்கு முன்னாடியே வந்திடுவாளே?  நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்” என்றாள் ஜமுனா.

 

“எப்படியும் வேலையை விட்டு துரத்திடுவாங்கனு அவளுக்கே புரிஞ்சு இருக்கும். அதான் வரலை போல இருக்கு. தொலைஞ்சது சனினு விட்டு தள்ளுங்க அக்கா” என்றாள் வசந்தி.

 

“இரு வசந்தி அவ இன்னைக்கு சொல்லாமல் விடுமுறை எடுத்து இருக்கா. இதையும் இந்த ரிப்போர்டில் சேர்த்து டாக்டர் சித்தார்த் கிட்ட கொடுத்துட்டு வர்றேன். ஒருவேளை நாளைக்கு அவ வந்து நின்னா என்ன செய்யறது? இப்பவே அவர்கிட்ட இதை கொடுத்திட்டால் அவ வந்தா கூட சேர்த்துக்க மாட்டார்” என்றாள் ஜமுனா குரூரத்துடன்.

 

“நீ சொல்றதும் சரிதான். டாக்டர் அவர் அறையில் தான் இருக்கார் போல இருக்கு. போய் பாரு” என்றாள் வசந்தி.

 

ஜமுனா நேத்ராவிற்காக தயார் செய்திருந்த புகார் பட்டியலை எடுத்துக் கொண்டு சித்தார்த் அறை நோக்கி சென்றாள். அந்த பக்கமாக சென்ற ஜனனி ஜமுனா சித்தார்த் அறையை நோக்கி செல்வதை பார்த்தாள். அவளை சித்தார்த் அறைக்கு போக விடாமல் தடுக்க எண்ணினாள். காரணம் சித்தார்த் ஏற்கனவே அவளிடம் தன் அறைக்கு அவன் மாமா வரப்போவதால் அவன் கூறும்வரை அறைக்குள் யாரையும் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.

 

“ஜமுனா சிஸ்டர்…டாக்டர் சித்தார்த் சார் ரூமுக்கா போறீங்க?” என்றாள் ஜனனி.

 

“ஆமா. ஏன் கேட்கிறே ஜனனி?” என்றாள் ஜமுனா.

 

“டாக்டருக்கு முக்கியமான நபரோட பர்சனல் மீட்டிங் இருக்கு. யாரையும் அவர் அறைக்கு வராமல் பார்த்துக்க சொன்னார்” என்றாள் ஜனனி.

 

“ஓ அப்படியா? சரி ஜனனி” என்று சொல்லி ஜமுனா திரும்பி நடக்கவும் ஜனனியும் தன் கேபினை நோக்கி சென்றாள்‌.

 

ஜமுனாவுக்கு ஏனோ டாக்டர் யாருடன் பர்சனல் மீட்டிங்கில் இருக்கிறார் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டு விட ஜனனி போய் விட்டாளா என்று எட்டி பார்த்தாள். அவள் சென்று விட்டதை உறுதி செய்துக் கொண்டு சித்தார்த் அபிமன்யுவின் அறை நோக்கி சென்றாள்.

 

நாற்காலியில் சிவக்குமார் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, அவர் அருகில் நேத்ராவும் அவளருகில் சித்தார்த்தும் நின்று கொண்டு இருந்ததால் வெளியில் இருந்து கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த ஜமுனாவின் கண்களில் தெரிந்தது எல்லாம் நேத்ராவும் அவளுக்கு மிக நெருக்கத்தில் நின்று கொண்டு இருந்த சித்தார்த்தும் தான்.

 

ஜமுனா அதிர்ச்சியில் வாயில் கை வைத்து கொண்டாள். என்னதான் சித்தார்த்தையும் நேத்ராவையும் அவள் சேர்த்து வைத்து பேசினாலும், உள்ளுக்குள் டாக்டர் படிப்பென்ன? அவர் அழகென்ன? அவராவது இந்த நேத்ராவை நெருங்குவதாவது என்று தான் நினைத்தாள்.

 

ஆனால் இப்போது இரண்டு பேரும் நெருக்கமாக நின்று கொண்டு இருக்கிறார்கள். ஜனனியிடம் வேறு பர்சனல் மீட்டிங் யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாரே? ஓ இது தான் அந்த பர்சனல் மீட்டிங்கா?

 

நான் வரும் முன்பே இந்த நேத்ரா மருத்துவமனைக்கு வந்து விட்டு இருக்கிறாள். அப்போ வந்ததிலிருந்து டாக்டரோட அறையில் தான் தனியாக அவருடன் இருந்து இருக்கிறாள். அடச்சே என்ன மாதிரி பொண்ணு இவ?

 

எங்கே அவளை டாக்டர் வேலையை விட்டு அனுப்பிடுவாரோனு பயந்துபோய் கடைசி நாளான இன்று கடைசி முயற்சியாக அவரை தன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறாள். என்ன மாதிரி பெண் இவள்? என்று முகத்தை அசூசையாக சுழித்து, தானே ஒரு கதையை உருவாக்கி அதுதான் உண்மை என்று நம்பி தன் சகாக்களுடன் இந்த விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள ஓடினாள் ஜமுனா.

 

சற்று நேரத்தில் அவள் பற்ற வைத்த வதந்தீ காட்டு தீயாக அந்த மருத்துவமனை எங்கும் பரவியது.

 

சிவக்குமார் சாப்பிட்டு முடித்ததும் கிளம்ப தயாரானார். அதற்குள் சித்தார்த் ஆபரேஷன் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால், “மாமா எதுவும் நினைச்சுக்காதீங்க, நான் ஓடி க்கு அவசரமா போகணும். ஏற்கனவே நேரமாயிடுச்சு” என்றான்.

 

“அதுக்கென்ன மாப்பிள்ளை நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றார் சிவக்குமார்.

“நயனி, ஜனனிகிட்ட சொல்லி மாமாவை காரில் அனுப்பிவை” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் சித்தார்த்.

 

நேத்ரா பதில் ஏதும் சொல்லாமல், “அப்பா நீங்க எதுக்குப்பா வீணா அலையறீங்க. சொல்லியிருந்தா நானே உங்களை வந்து பார்த்திருப்பேனே” என்றாள்.

 

“ஏன்டா உன்னை பார்க்க நான் வரக்கூடாதா?” என்றார் சிவக்குமார் மகளை கூர்மையாக பார்த்தபடி.

 

“அதுக்கு சொல்லலைப்பா, எதுக்கு வீண் அலைச்சல்னு தான்” என்று தடுமாறியபடி பேசியவள் நேராக தந்தையை பார்க்கமுடியாமல் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

 

தந்தையிடம் அவர்கள் ஒன்றாக வாழ்வதை போல பொய்யாக நடிக்க வேண்டியதாக இருக்கிறதே என்ற குற்ற உணர்வில் தலையை தாழ்த்திக் கொண்டாள். ஆனால் சிவக்குமாருக்கு மகளின் செயல் மனவருத்தத்தையே கொடுத்தது.

 

“சரிம்மா நான் கிளம்பறேன்” என்றார் சிவக்குமார்.

 

“இருங்க அப்பா, நானும் கூடவே வரேன். வெளியே ஆட்டோ, டாக்சி இருக்கானு பார்க்கிறேன்” என்ற நேத்ராவை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவக்குமார்.

 

சித்தார்த் அவரை காரில் அனுப்பி வைக்கும்படி தன் எதிரிலேயே தன் மகளிடம் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் மகள், அவரை ஆட்டோ டாக்சியில் செல்லும்படி கூறுகிறாளே!

 

கசந்த முறுவலுடன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா, நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்” என்று சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கிவிட அதை மறைப்பதற்காக அவசரமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

 

நேத்ரா சித்தார்த்தின் அறையை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு தந்தையின் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றாள். அதற்குள் அவர் மருத்துவமனையின் வெளிவராந்தாவை நோக்கி செல்லவும், அவளும் அவர் பின்னால் சென்றாள்.

 

நேத்ரா தந்தையை அடைவதற்குள் அவர் அந்த மருத்துவமனையின் கேட்டை அடைந்துவிட்டார். ஓடிச்சென்று அவர் கைகளை பற்றியபடி, “அப்பா என் மேலே எதுவும் கோபமா இருக்கீங்களா? எதுவா இருந்தாலும் சாரிப்பா” என்றாள் நேத்ரா.

 

மகளை திரும்பி பார்த்தவர், “நான் ஏன்டா உன்மேல கோப பட போறேன். நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும். நீ நல்லா தானே இருக்கே?” என்றார்.

 

அவள் ஆமாம் என்பது போல தலையாட்ட, “அது போதும் எனக்கு, எப்பவாவது உனக்கு என்னை பார்க்கணும்னு தோணிச்சுனா நம்ம வீட்டுக்கு வா. இனி நானா இங்கே வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று சென்று விட்டார். கண்கள் கலங்க தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரநயனி.

 

அங்கே ஒரு நோயாளியை இறக்கிவிட வந்த ஒரு டாக்சி, காரில் இருந்து தன் வாடிக்கையாளர் இறங்கிய பின்பும் அங்கிருந்து கிளம்பாமல் இருந்தது. தந்தையும் மகளும் பேசிக் கொண்டிருந்ததை வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன அந்த காரில் இருந்த ஒரு ஜோடி கண்கள். யார் அது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!

 

(தொடரும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!